Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 20

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 20

சரத்தின் குரலை கேட்டதும் சற்று அதிர்ந்த பரத்தின் கவனம் சிறிதே சிதறியதால் அவனின் கையில் இருந்த காரும் சிறிதே தடுமாறியது. பரத்தின் தோளில் தனது கையை அழுந்த பதித்து “பரத்” என்று அலறினாள் நளினா. நளினாவின் அலறலை கேட்டதும் சற்று நிதானத்திற்கு வந்தான் பரத். உடனடியாக ஸ்டியரிங்வீலை ஒழுங்கேப்பிடித்து காரையும் நிதானத்திற்கு கொண்டுவந்தான்.
நளினாவை பார்த்து, ”பயப்படாதே” என்று கண் ஜாடை செய்துக்கொண்டே “ ம்ம் சொல்லு என்ன விஷயம்?” என்றான் பரத், “அண்ணா” ,“சரத்” போன்றவற்றை தவிர்த்தபடி.

“என்ன ஆச்சு, இப்போ யார் சத்தமா உன்னை கூப்பிட்டது?” என்றான் சரத்.

“ஒண்ணுமில்லை, அது நளினா.. அவ என்னோட ... என்னோட” என்று சிறிது தடுமாறினான் பரத்.

“ஓ! நளினாவா, உன்னோட பியான்சிதான, உங்களைப்பத்தி அப்பா நேத்தே சொன்னார், இன்னிக்கு அவங்களுக்கு பர்த்டே தான, போனை அவங்கக்கிட்ட கொடு விஷ் பண்றேன்.”

“போன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு பேசு”.

“மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் நளினா.” என்று சரத் கூறியதும், “தேங்க்ஸ் அண்ணா” என்றுவிட்டு “இப்போ பரத் டிரைவ் பண்ணிட்டு இருக்காங்க, கொஞ்சம் நேரம் கழிச்சு கால் செய்யறீங்களா? தயவுசெஞ்சு தப்பா நினைச்சுக்காதிங்க.... நீங்க கால் செஞ்சதும் பரத் கொஞ்சம் தடுமாறிட்டான்.. அதான் நான் கத்திட்டேன்.. ப்ளீஸ்” என்றாள்.

“ஓ! பரத்துக்கு நான் ரொம்ப கால் செய்யமாட்டேன்மா, அதான் அவனுக்கு அதிர்ச்சின்னு நினைக்கிறேன், ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லைமா” என்று அவளிடம் சொல்லிவிட்டு “பரத், நாங்க நாளைக்கு இந்தியாக்கு கிளம்பறோம்.. உங்க டைம் டே ஆப்டர் டுமாரோ ஏர்லி மார்னிங் அங்கே ரீச் ஆகிடுவோம்.. எங்களை ரிசீவ் பண்ண ஏர்போர்ட் வரியா?.. ப்ளீஸ் நீ வந்தா நல்லாயிருக்கும்... அதுமட்டுமில்லை உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..நான் இப்படியெல்லாம் பேசறது இப்போ உனக்கு ஆச்சர்யமா தான் இருக்கும்.. எல்லாமே நான் நேர்ல சொல்றேன்.. இப்போ நான் போனை வைக்கிறேன்...ஏர்போர்ட்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். பை பரத்,பை நளினா.” ஒன் செகண்ட் பரத், நீ ஏர்போர்ட்க்கு வரும்போது அவ்யுக்தையும் கூட்டிக்கிட்டு வா ப்ளீஸ். இப்போ பை” என்று காலை கட் செய்தான் சரத்.

போனை சரத் கட் செய்ததும் போனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் நளினா. பரத் ஒரு நொடி அவளையும் போனையும் உற்று நோக்கி விட்டு டிரைவ் செய்வதில் கவனம் செலுத்தினான்.

மௌனத்தை கலைத்த பரத், “நளின், இப்போ எதுக்கு வராங்க? என்னை வர சொல்றது கூட ஒத்துக்கிறேன் .. பட் இப்போ எதுக்கு அவ்யுக்தை வர சொல்றாங்க? என்ன சர்ப்ரைஸ்? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.நேத்து நைட் தான் கால் செஞ்சு நம்ம விஷயத்தை சொன்னேன்.. இன்னும் உன்னோட அப்பா அவங்கக்கிட்ட பேசிட்டாங்களான்னே தெரியல.. இதுல எதுக்கு அவங்க உடனே கிளம்பி வராங்க?” என்றான்.

“தெரியலையே பரத், பார்க்கலாம் அவங்க என்ன தான் சொல்றாங்கன்னு.. பட் எனக்குமே அது என்ன சர்ப்ரைஸ்ன்னு ரொம்ப குழப்பமா இருக்கு. இப்படியெல்லாம் அவங்க உன் கூட பேசறது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.”

“கரெக்ட் நளின், எனக்குமே சரத் பேசினத கேட்கும்போது இப்போ இப்படி பேசறவன், என் சின்ன வயசுல எப்படி என்னை ஒதுக்கினான்?ன்னு தோணுது. ஒருவேளை என்னால அவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டியிருக்குமோ?” என்று நிறுத்தி “பாரு கூட பிறந்த பிறப்ப எப்படி கேவலமா நினைக்கிறேன் பட் எனக்கு வேற ஓண்ணும் தோண மாட்டேங்குது, நான் என்ன செய்ய?”

“பரத் ப்ளீஸ் விடுங்க, எதையும் யோசிக்காதீங்க.. அவ்யுக்த் கிட்ட பேசுங்க ரெண்டு பேரும் ஏர்போர்ட் போயிட்டு வாங்க.”

“என்ன நீ முடிவே பண்ணிட்டியா? நான் ஏர்போர்ட் போறத பத்தி இன்னும் முடிவு பண்ணலை.”

“இதுல என்ன இருக்கு பரத், போய் தான் பாருங்களேன்.. என்ன சர்ப்ரைஸ்ன்னு உடனே எனக்கு சொல்லிடுங்க.”

“இதுக்கு தான் என்னை போக சொல்றியா? என்ன பெரிசா இருக்க போகுது..? என்னால இன்னும் ஒரு முடிவுக்கும் வர முடியலை” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நளினாவின் வீடு வந்தது. “நீ இறங்கிக்கோ நளின், நான் உள்ள வரலை.. “

பரத்தின் மனநிலையை அறிந்த நளினா, “பரத் நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்தா தப்பில்லை, இவ்வளவு நாள் அவங்க கொஞ்சம் கூட இறங்கி வரலை, இப்போ தான் பேச ஆரம்பிச்சு இருக்காங்க.. அது நல்லதா, கெட்டதா?ன்னு கேட்டா அதுக்கு என் கிட்ட பதில் இல்லை, பட் நாம நல்லதே நினைப்போமே.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ன்னு எங்க பாட்டி சொல்லிட்டே இருப்பாங்க.. இந்த சுற்றம் நம் குழந்தைகளுக்கும் வேணும்.. கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கினாள் நளினா. வீட்டின் வாசல் கதவை திறந்ததும் பரத்தை பார்த்து திரும்பி வலது கையின் கட்டை விரலை தூக்கி காண்பித்துவிட்டு “பை பரத்” என்று உதடசைத்து வீட்டின் உள்ளே சென்றாள்.

அவளை போலவே செய்துவிட்டு காரை கிளப்பினான் பரத்.சிறிது தூரம் சென்றதும் காரை ஒரு ஓரமாக நிறுத்தி இருகையையும் தலைமுடியில் வைத்து அழுந்த தேய்த்து கோதிக்கொண்டான். சீட்டின் பின்னே சாய்ந்து காலை நீட்டி கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தான். “இப்போ எதுக்கு வராங்க.. நளின் சொல்ற மாதிரி போய்தான் ஆகணுமா? ஒண்ணும் புரியலை, இப்போ இப்படி என் கிட்ட உரிமையாய் பேசறவன் சின்ன வயசுல என்னை கண்டுக்க கூட மாட்டான்.. இப்போ என்ன செய்வது?” என்று தீவிரமாக யோசித்தான். “முதல்ல வீட்டுக்கு போலாம்.. அவ்யுக்த் கிட்ட பேசிட்டு முடிவுக்கு வரலாம்” என்று முடிவெடுத்ததை அவ்யுக்திடம் சொல்லிமுடித்தான் பரத்.

“சொல்லுடா இப்போ நான் என்ன செய்யட்டும்?”

“பரத் உனக்கே தெரியும் என்னை பத்தி, இல்லையா? நான் நளினா சொல்றதை உனக்கு வேற விதமா சொல்லியிருக்கேன். உனக்கு இந்த வயசுல தான் உன் குடும்பம் கிடைக்கணும்ன்னு இருக்கோ, என்னமோ.. எதையுமே பர்ஸ்ட் பாசிடிவா திங் பண்ணி பாரு.. ஏர்போர்ட் போறது எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.. எப்ப வேணும்னாலும் நான் ரெடி” என்றான் அவ்யுக்த்.

“டேய் அது என்னடா சர்ப்ரைஸ்? என்னால யூகிக்கவே முடியல.. ஒருவேளை நீ தான் இனிமே அப்பா அம்மாவ வச்சிக்கணும்னு சொல்வானோ?, அதை பத்தி நான் இன்னும் முடிவே பண்ணலை டா.. இதை எப்படிடா ஏர்போர்ட்லேயே பேசி முடிக்கமுடியும்?”

“டேய் கொஞ்சம் நிறுத்துடா.. என்ன நீ இன்னும் சின்னபிள்ளைன்னு நினைப்பா? நீ எல்லாம் ஒரு கம்பெனி ஓனர்.. ஆளைப்பாரு, டேய் இப்படி புலம்புறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை.. பேசாம ஒண்ணு பண்ணு, நீயே அவங்களுக்கு கால் பண்ணி என்ன விஷயம்?ன்னு கேளு, இல்லைன்னா நீ வெயிட் பண்ணி தான் ஆகணும்.. அதை விட்டுட்டு இதோவோ அதுவோன்னு புலம்பறதுல என்ன கிடைக்க போகுது? நீயும் குழம்பி என்னையும் குழப்பாதே” என்று பொரிந்தான.

அவ்யுக்திற்கு தெரியும் தான் இப்படி குரலை ஒசத்தாவிட்டால் பரத் இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்பானென்று. படிக்கும்போது எத்தனைநாள் பரத் அவனிடம் வந்து புலம்பியிருப்பான். “ஏன்டா என்னை ஒதுக்கறாங்க? ஒருவேளை நான் நிஜமாலுமே ராசியில்லாதவனா? என்னால முடியலை டா.. என்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு சரத்தை மட்டும் கூடவே வச்சிருக்காங்க.. லீவ் விட்டா கூட வந்து கூட்டி போறது இல்லை.. நீயும் கௌசிமாவும் இல்லைன்னா நான் எங்கேடா போவேன்? “ என்று பரத் புலம்பும்போதெல்லாம்

“டேய் நிறுத்துடா, நீ இந்த மாதிரி பேசிக்கிட்டே இருந்தா.. உன் கூட நானும் பேசமாட்டேன்.. உன்னோட கௌசிம்மாவையும் பேசவிட மாட்டேன்” என்று அந்த “உன்னோட” என்ற வார்த்தைக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து சொல்லுவான். அவ்யுக்தின் இந்த வார்த்தைகளுக்கு சில வாரங்கள் மதிப்பிருக்கும், மறுபடியும் பரத் புலம்பும்போது வேறு மாதிரி திட்டி பரத்தை வழிக்கு கொண்டுவருவான் அவ்யுக்த். அதைதான் இப்பொழுதும் செய்துக்கொண்டிருந்தான்.

அவ்யுக்த் அதட்டியதில் சிறிது தெம்படைந்தான் பரத். அவ்யுக்த் கூடவே இருக்கும்போது அங்கே சென்று தான் பார்த்தாலென்ன? என்று தோன்றி அவனின் முகத்தில் பூத்த புன்னகையுடனே “ என்னடா காலேஜ் டேஸ்ல திட்டற மாதிரியே திட்டற?” என்று கேட்கவும் வைத்தது.

பரத்தின் குரலில் மாற்றத்தை ரசித்துக்கொண்டே, “ ஆமாம் நீ இப்படி சின்னபையன் மாதிரியே பீகேவ் பண்ணினா, நான் என்ன பண்றது?” என்றான் அவ்யுக்த்.

“டேய் நான் சின்னப்பையனா? எனக்கு கல்யாணம் பண்ணிவச்சிருந்தா எனக்கே ஒரு சின்னபையன் இருக்கிற வயசு டா.”

அவ்யுக்த் சிரித்துக்கொண்டே, “டேய் ஆள் வளர்ந்தா மட்டும் போதாதுடா, அறிவும் வளரனும்ன்னு நம்ம புரட்சி தலைவர் சொல்லியிருக்கிறார் இல்ல..இல்லை பாடியிருக்கிறார்டா” என்றான்.

“டேய் இப்போ எனக்கு இது எல்லாம் தேவையாடா? நாம நம்ம ஆளுங்களோட ரொமான்ஸ் பண்ணினாலாவது பின்னாடி யூஸ் ஆகும்.. இப்போ போய் புரட்சி அது இதுன்னு சொன்னா என்ன யூஸ் டா?”

“நான் ரொமான்ஸ் பண்ணிட்டு தான் டா வரேன், அம்மா உன்னை எப்போ ஏர்போர்ட் போக போற?ன்னு கேட்டதும் தான் போனை வாங்கினேன். அம்மா என்ன சொன்னாங்க? “

“கௌசிமா போய் பார்த்துட்டு தான் வாயேன் தான் சொன்னாங்க.. பட் ஏர்போர்ட்லேர்ந்து என்னை உங்க வீட்டுக்கு வர சொன்னாங்க.. அவங்க எதாவது பிரச்சினை பண்ணினா நான் பீல் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறாங்களோ என்னமோ?” என்றான் பரத்.

“என்னடா மறுபடியும் ஆரம்பிக்கற? “ என்று ஆரம்பித்து “நான் முதல்ல சொன்னதை பத்தி கேட்கவே இல்லையேடா?” என்று கேட்டான் பரத்தின் மனதை மாற்றும் பொருட்டு. அவ்யுக்திற்கு பரத்தை தனியே விட மனம் வரவில்லை.. போனை சைலென்ட் மோடில் போட்டு தன் அம்மாவிடம் “அம்மா, நான் பரத்தை கூட்டிக்கிட்டு வரபோறேன்.” என்றான். கௌசியும் “சரிடா” என்பது போல் தலை அசைத்தாள். பின்னர் கண்ணாலேயே “நீ வச்சிருக்கிறது செல்போன் இல்லை, லேன்ட்லைன் மகனே.” என்றார்.

அதைப்பார்த்து சிரித்த அவ்யுக்த் “எனக்கு தெரியும்மா” என்பது போல் கண்களை மூடி திறந்தான். இந்த சம்பாஷனைகள் ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க, காதில் வைத்திருந்த போனில் பரத்திடமிருந்து சத்தமே இல்லாததையும் கவனித்தான். போனிலிருந்த சைலென்ட் மோடை மாற்றி பரத்திடம் பேச ஆரம்பித்தான்.

“டேய் பரத், லைன் கிளியராவே இல்லை.. போனை கட் பண்ணு நான் செல்லிலிருந்து கூப்பிடுகிறேன்” என்று சொல்லி போனை வைத்து செல்லை எடுத்தான் அவ்யுக்த்.
“ம்ம் சரி அவ்யுக்த்” என்று பரத்தும் போனை கட் செய்தான்.

பரத்தின் போனுக்கு உடனே கால் செய்தான் அவ்யுக்த். பரத் போனை எடுத்ததும், “ பரத் நீ என்ன கேட்டடா? தியா என்ன சொன்னான்னா கேட்ட? எனக்கு சரியாவே காதிலே விழலை” என்ற அவ்யுக்த் தன் காரில் ஏறி பரத் வீட்டை நோக்கி கிளம்பினான்.

பரத்தும் ஏதோ யோசனையிலேயே இருந்ததால் கார் சத்தத்தை கவனிக்காமலே அவ்யுக்திற்கு பதிலளித்தான். “ஆ...ஆ...ஆ..ஆமாம் டா, சஹி என்ன சொன்னான்னு தான் கேட்டேன்” என்றான் சிறிது தடுமாறியபடி.

“உன்னை இரு டா வந்து கவனிக்கிறேன்” என்று மனதில் அவனை திட்டியபடியே, “பரத், தியாவை பற்றி வீட்டில் சொல்லிவிட்டேன்.. அம்மா அப்பா ரெண்டுபேருக்குமே ரொம்ப சந்தோஷம்.. சஹி இன்னும் அவ வீட்டுல சொல்லலை..அவ பேரெண்ட்ஸ் ஊருக்கு போயிருக்காங்க.. வந்ததும் தான் சொல்லணும்னு தியா சொன்னா” என்று சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தான் அவ்யுக்த்.

“கவலைபடாதடா சஹி சீக்கிரமே அவ வீட்டுல சொல்லி உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கும், நான் போனை வைக்கட்டுமடா.. அப்றமா பேசறேன்.”

“போனை ஆப் பண்ணிட்டு வாசல் கேட்டை ஓபன் பண்ணி வை.. இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.. பை பரத்.” என்று போனை கட் செய்தான் அவ்யுக்த்.

வாசலை திறந்து அவ்யுக்திற்க்காக வெளியேவே நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த அவ்யுக்த், “நீ இப்போ கிளம்பி என் கூட வீட்டுக்கு வர” பரத் ஏதோ சொல்லவந்ததை பார்த்த்ததும் “எதுவும் பேசாதே” என்பதுபோல் வலது கையை தூக்கி காட்டியவாறே, “ நைட் வாட்ச்மன் இனிமே தான வருவார்.. அதுக்குள்ள நீ போய் ரெடி ஆகிடு இன்னும் ஒன் வீக்க்கு நீ அங்க தான் இருக்க போற.. போ போய் கிளம்பு..” பரத் அவனையே பெருமை பொங்க பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், “பரத், நீ மூட்அவுட் ஆகுறதும் நான் காரை எடுத்துட்டு வந்து உன்னை சமாதனம் படுத்த நான் கிளம்பி வருவதும் எப்பவும் நடக்கிறதுதான்.. அதுக்கு இப்படி ஒரு லுக் எல்லாம் கொடுத்து என்னை கடுப்பேத்தாத.. போ போய் கிளம்பற வழியை பாரு.”

பரத்தை அழைத்துக்கொண்டு கிளம்பினான் அவ்யுக்த். கௌசியும் வேணுவும் பரத்திடம் சரத் பற்றி எதுவுமே பேசாமல் ஜென்ரலாக நிறைய பேசி நிறைய அவனை சிரிக்க வைத்து படுக்க அனுப்பினார்கள். பரத் படுத்ததும்,”இவர்கள் என்னை பெற்றவர்களாக இருந்திருக்கலாம்..” என்று நினைத்துக்கொண்டே தூங்கினான் பரத்.

அடுத்தநாள் முழுவதும் எந்த ஒரு மாற்றமில்லாமல் சுமுகமாகவும் நல்லவிதமாகவும் சென்றது. அன்றைய இரவில் படுக்கும்போது பரத்தை அழைத்து அவ்யுக்த், “நாளைக்கு என்ன ப்ளைட், எப்போ வருது? ன்னு சரத் மெயில் பண்ணினானா?” என்றான்.

“ம்ம் பண்ணினான், நாளைக்கு ஐ மீன் இன்னிக்கு அர்த்தராத்திரி 2:30க்கு நாம கிளம்பணும்.”

“சரி படுத்துக்கோ பரத், என் காரிலேயே போகலாம்.. குட்நைட்.” என்று சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்று தியாவிற்கு எஸ் எம் எஸ் அனுப்பிவிட்டு, அப்படியே போனில் அலாரமும் செட் செய்துவிட்டு தூங்கினான் அவ்யுக்த்.

திடீரென்று அறையில் சக்சபோனின் இசையை கேட்டு கண்விழித்தான் பரத். இந்த சத்தம் எங்கிருந்து வருது என்றே முதலில் புரியவில்லை அவனுக்கு. கண்களை நன்றாக விரித்து பார்த்த பரத், அது தன்னுடைய போனில் இருந்து வருவதை அறிந்து அதை எடுத்து மணியை பார்த்தான். டைம் இரண்டு என்றிருக்க லேசாக முறுவலித்துக்கொண்டே “ இது கண்டிப்பாக அவ்யுக்தின் வேலையாகத்தானிருக்கும்.. காலையில் இந்த சத்தம் கேட்டு எழுந்திருப்பது கூட நன்றாகத்தானிருக்கு” என்று நினைத்துக்கொண்டே காலைகடன்களை செய்ய பாத்ரூமிற்குள் நுழைந்தான் பரத்.

அடுத்த இருபது நிமிடங்களில் ரெடியாகி வெளியே வந்த பரத்தின் கையில் கௌசல்யா நுரைபொங்க காபியை வைத்தாள். அங்கேயே கையில் கப்புடன் இருந்த அவ்யுக்தை பார்த்து, “இப்போ எதுக்குடா கௌசிமாவை எழுப்பின?” என்று கேட்டான் பரத்.

“டேய் நான் காபி போட்டுட்டு இருக்கும்போதே அவங்க எழுந்துவந்துட்டாங்க.. நான் தான் எல்லார்க்கும் காபி போட்டேன்.. உனக்கு நுரைபொங்க இருந்தா பிடிக்குமேன்னு சும்மா ஆத்தி கொடுத்து சீன் போடறாங்கடா.. அவ்ளோதான்”

இதைக்கேட்டதும் இருவரும் சிரித்துக்கொண்டே அவ்யுக்தின் வயிற்றில் செல்லமாக குத்தினார்கள். இருவரும் கௌசியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
அவர்கள் சென்று முப்பது நிமிடங்கள் கழித்தே அந்த விமானம் தரையிறங்கியது. இமிக்ரேசன் மற்றும் பக்கேஜ் எடுத்துவரும் வரை அந்த அதிகாலையில் அங்கே குழுமியிருந்த கூட்டத்தை வேடிக்கை பாரக்கலானார்கள்.

“அவ்யுக்த், பாருடா இந்த நேரத்துலயும் எவ்ளோ கூட்டம் பாரு, இவங்க எல்லார் முகத்திலேயும் என்ன ஒரு சந்தோஷம்.. இல்லைடா”

“ஆமாம் பரத், எத்தனைநாள் கழிச்சு தங்கள் பெண்ணையோ, பையனையோ பார்க்கிறார்களோ.. அங்க பாரு அந்த பாட்டி முகத்துல எவ்ளவு சந்தோஷம்ன்னு.. “

“பட் அவ்யுக்த், எனக்கு கிடைத்த மாதிரி நெருங்கின சொந்தங்கள் இவங்க யாருக்குமே கிடைச்சிருக்காதில்லை..”

“டேய் அப்போ நாங்க உன்னோட சொந்தங்கள் இல்லையா? இப்போ எதைபத்தியும் பேசாம கொஞ்சநேரம் அமைதியா இரு...”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலபேர் தங்கள் பக்கேஜ்களை எடுத்துக்கொண்டு தங்கள் சொந்தங்களை காண மிகுந்த ஆவலுன் வெளியே வந்தனர். அவர்களுள் ஒரு பெண்ணும் அடக்கம். அவள் கண்களில் வெகு நாளைக்கு பிறகு தன் நண்பர்களை காணும் ஆவல். சுற்றும் முற்றும் தேடினாள். அவள் கண்களில் சில நொடிகளில் அவர்களை கண்ட ஒளி தெரிந்தது.

அவ்யுக்தும், பரத்தும் வருபவர்களை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.. திடீரென்று அவர்கள் கண்களில் வியப்புடன் கூடிய மலர்ச்சி. இருவரும் ஒரே குரலில் “ஜான்வி நீயா?” என்றனர்.

அவர்களருகே வந்த அந்த பெண் “என்னங்கடா முகத்துல இவ்ளோ சந்தோஷம்.. நான் இருக்கேனா, செத்தேனா? ன்னு பார்க்க நாதியில்லை.. சரி உங்களை தேடி நானா வந்தா.. ரொம்ப தான் சீன் விடறீங்க.. பரத், அவ்யுக்தாவது டெய்லி ஒரு மெயில் பண்ணுவான், ஹவ் ஆர் யூ? ன்னு சில பல பெர்சனல் நிகழ்வுகளால் என்னால் அவனுக்கு ரிப்ளை பண்ண முடியலை.. நான் டெய்லி மெயில் செக் பண்ணும்போதெல்லாம் இன்னிக்கு அவ்யுக்த்தோட மெயில் வந்து இருக்காதுன்னு தான் செக் பண்ணுவேன் பட் அவ்யுக்த் எனக்கு நேத்து வரைக்கும் மெயில் பண்ணிட்டு தான் இருந்தான்.. ஆனா நீ?? என்று நிறுத்தி

“அவ்யுக்த் சாரி நான் எல்லாத்துக்கும் ரீசன் அப்றமா சொல்றேன்.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அதோ அங்க வரார் பாருங்க அவர் தான் என் செல்ல ஹப்பி.. கூட வரது என்னோட இன்லாஸ்.

அவள் கைகாட்டிய திசையை பார்த்து அதிர்ந்தனர். ஏனென்றால் அங்கே வந்தது சரத்தும் அவனுடைய அப்பாவும் அம்மாவும்.

பரத்தும் அவ்யுக்தும் அதிர்ந்து நின்றதை பார்த்த ஜான்வி, “என்ன எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போற ஐடியா இருக்கா? இல்லை இங்கேயே எல்லா விஷயத்தையும் சொன்னாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கப்போறீங்களா?” என்றாள்.
“ஆமாம் நாம அடம் பிடிச்சா மட்டும் சொல்லப்போறது மாதிரி எப்படி பில்டப் பண்றா பாரு?” என்று அவ்யுக்தின் காதை கடித்தான் பரத்,
 
Top