Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 21

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அன்பு வாசக தோழமைகளுக்கு,
"நள(ன்)தமயந்தி" கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்துக்கொண்டதிற்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் தனி தனியே என்னுடைய நன்றியை தெரிவிக்க இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
"பூக்கள் பூக்கும் தருணம்" மற்றும் "மலரே மௌனமா?" கதைகளுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கதைகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் மற்றும் ஆதரவையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் வாசக தோழமைகளே!!
அடுத்த அடுத்த அத்தியாயங்களில் இருந்து உங்கள் கருத்துக்களுக்கு தனி தனியே நன்றிகளையும், பதில்களையும் தருகிறேன். என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தருகிறேன். நன்றி!! நன்றி!! நன்றி!! அனைவருக்கும் மிக்க நன்றி!!.அத்தியாயம் 21

பரத்தும் அவ்யுக்தும் அதிர்ந்து நின்றதை பார்த்த ஜான்வி, “என்ன எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போற ஐடியா இருக்கா? இல்லை இங்கேயே எல்லா விஷயத்தையும் சொன்னாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கப்போறீங்களா?” என்றாள்.
“ஆமாம் நாம அடம் பிடிச்சா மட்டும் சொல்லப்போறது மாதிரி எப்படி பில்டப் பண்றா பாரு?” என்று அவ்யுக்தின் காதை கடித்தான் பரத்,
“டேய், எதுக்கு அவன் காதை கடிக்கற? உனக்கு தைரியம் இருந்தா என் கிட்ட பேசு?” என்ற ஜான்வியை பார்த்து முறைத்தான் பரத்.
இவர்கள் இருவரையும் பார்த்த அவ்யுக்திற்கு இருக்கும் இடம், நிலைமை எல்லாம் மறந்து சிரிக்க தொடங்கினான். அவன் சிரிப்பதை பார்த்த ஜான்வியின் முகத்திலும் புன்னகை அரும்பியது. இதை பார்த்த பரத் அவ்யுக்தின் முதுகில் ஒன்று போட்டு, “ஏண்டா, எப்பவும் அவ கூட சேர்ந்துக்கிட்டு என்னை கிண்டல் பண்றதே உன் பொழப்பா வச்சிருக்கியா?” என்றாலும் பரத்தின் முகத்தில் கோபம் மருந்துக்கும் இல்லை, மாறாக அவன் முகத்திலும் புன்னகையே இருந்தது.
ஜான்வி இவர்களின் கல்லூரி தோழி. கல்லூரி காலத்தில் பரத்திற்கும் ஜான்விக்கும் தினம் ஒரு சண்டையாவது நடக்கும்.. இவர்களை சமாளிக்க அவ்யுக்த் ஒருவனால் மட்டுமே முடியும். சண்டை போடுவார்களே தவிர இருவரும் ஒருவரையொருவர் மற்றவர்களிடம் விட்டே கொடுக்கமாட்டார்கள். இவர்கள் சண்டையில் குளிர்காய நினைப்பவர்களை இருவரும் சேர்ந்து ஒருவழி பண்ணிவிடுவார்கள்.
இவ்வளவு நாட்கள் கழித்து சந்தித்தாலும் இப்பவும் கல்லூரி காலத்தில் சண்டையிட்டுக்கொண்டதை போன்றே முறைத்துக்கொள்ளவும் அவ்யுக்த் தன்னை மறந்து சிரித்தான். அவ்யுக்த்தை பார்த்த ஜான்விக்கும் பரத்திற்கும் சில நொடிகள் கல்லூரி நினைவு வந்ததால் அவர்கள் முகத்திலும் புன்னகை பூத்தது.
இதெல்லாம் அவர்களருகே சரத்தும் அவனுடைய அப்பாவும் அம்மாவும் வரும் வரை தான். அவர்கள் கிட்டே வந்ததும் பரத்தின் முகத்திலிருந்த புன்னகை மறைந்து, அங்கே வெறுமையும் கோபமும் குடிக்கொண்டது.
பரத்தின் முக மாற்றத்தை கவனித்த ஜான்வி பின்னால் திரும்பி பார்த்தாள். அவர்கள் கிட்டே வருவது தெரிந்தது.. அதனால் ஜான்வி பரத்தின் அருகே சென்று நின்று கொண்டாள். அவ்யுக்தும் அவனருகே சென்று தோளில் கை போட்டு வந்தவர்களை பார்த்து லேசாக சிரித்தான். அவ்யுத்தை பார்த்த ஜான்வி, “அவ்யுக்த் நான் உங்கிட்ட பேசணும்டா ஈவ்னிங் பேசலாமா?
அவ்யுக்த்,”சரி ஜானு” எனும்போது ஜான்வியின் அருகே சரத் வந்தான். வந்தவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக பரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். சரத்திற்கு போனில் சாதரணமாக பேசமுடிந்த அளவிற்கு நேரில் பேசமுடியவில்லை. அவனை பெற்றவர்களுக்கும் அதே நிலைமையே… இவர்களை கவனித்த ஜான்வி, முகத்தில் கடுப்புடன் சரத்தின் விலாவில் யாரும் அறியாமல் குத்தினாள். அவளின் செய்கையில் சற்று சுதாரித்த சரத், “ஹாய் பரத், ஹாய் அவ்யுக்த்” என்றான் சம்பிரதாயமாக. இவனின் செய்கையில் கடுப்படைந்த ஜான்வி, “இதுக்கு இவன் வாயை மூடிட்டே இருந்திருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டாள்.
இதையெல்லாம் பாராமல் பார்த்துக்கொண்டிருந்த அவ்யுக்த், “ ஹாய் சரத், வாங்க அங்கிள், ஆன்ட்டி நாம கிளம்பலாமா?” என்று எல்லோரிடமும் சகஜமாக உரையாட முயன்றான். பரத்தின் பெற்றோர்கள் அவ்யுக்தின் செய்கையில் தங்களையே நொந்துக்கொண்டனர்.. அவர்களின் முகம் கன்றி சிவக்காமலிருக்க பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது.. ஆனாலும் அவர்களின் முயற்சி தோல்வியையே தழுவியது.
தன் பெற்றோர்களின் முகத்தை பார்த்து சிறிது சமாளிக்க எண்ணி அவ்யுக்திடம் பேச முயன்றான் சரத். “அவ்யுக்த், நாங்க ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்கோம்.. எங்களை அங்க ட்ராப் பண்ணினா போதும்.. கொஞ்சம் ரிப்ரஷ் பண்ணிக்கிட்டதுக்கு அப்றமா கொஞ்சம் பேசணும்.. திருப்பி உங்களால வரமுடியுமா? இல்லை நீங்க எங்க கூட வந்து ரூம்லேயே இருக்கிறதுனாலும் சரி.. “ என்று இவ்வளவு நேரம் பேசாமல் இருந்ததற்கும் சேர்த்து கேள்விகளை அடுக்கினான் சரத்.
சரத் கேட்டதற்கு பதிலே பேசாமல் பரத்தை பார்த்தான் அவ்யுக்த். பரத்தும் “நீயே பேசிமுடி” என்பதுபோல் அவனை திரும்ப பார்த்தான்.
“சரி வாங்க உங்களை ட்ராப் பண்றேன், நீங்க கொஞ்சநேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க.. நாங்க ஈவ்னிங் வரோம்.” என்று சொன்னான் அவ்யுக்த்.
“தேங்க்ஸ் அவ்யுக்த், அப்போ கிளம்பலாமா?” என்று தன் மனைவி மற்றும் பெற்றோரை பார்த்துக்கேட்டான் சரத். அவர்கள் “சரி” என்பது போல் தலையசைக்க, எல்லோரும் ஏர்போர்ட்டை விட்டு கிளம்பி ஹோட்டல் நோக்கி சென்றார்கள்.
ஹோட்டல் வந்ததும் இறங்கி செக்கின் செய்து முடிக்கும் வரைக்கும் கூடவே இருந்து உதவி செய்த அவ்யுக்த்தையும் பரத்தையும் ரூமிற்குள் அழைத்தான் சரத். அவனின் அழைப்பை புன்முறுவலுடன் மறுத்த அவ்யுக்த் பரத்தை பார்த்தான். அவனின் பார்வையில் எங்கே தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்று பயந்தவன், சிறுபிள்ளையை போல் அவ்யுக்தின் அருகில் சென்று அவனின் கையை பிடித்துக்கொண்டு, ”வர மாட்டேன்” என்பதுபோல் தலையை வேகமாக ஆட்டினான் பரத். இருவரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும் போது பரத்தை அழைத்தாள் ஜான்வி.
அவளின் குரலில் திரும்பி நின்ற அவ்யுக்த்தையும் பரத்தையும் பார்த்த ஜான்வி, “பரத், நீ எப்படியும் ஈவ்னிங் இவங்க கூட தனியா பேசித்தான் ஆகணும்.. சின்னப்பையன் மாதிரி நடந்துக்கறதை விட்டுட்டு கொஞ்சம் மெச்சுர்டா பீகேவ் பண்ணு..” என்று பரத்திடம் சொல்லிவிட்டு அவ்யுக்த்தை பார்த்து, “அவ்யுக்த், ஈவ்னிங் எங்க மீட் பண்ணலாம்?” என்று கேட்டாள் ஜான்வி.
பரத் இருவரையும் ஒருமுறை பார்த்து விட்டு கைகள் இரண்டையும் விரித்து தோளை குலுக்கியபடியே சென்றுவிட்டான். பரத் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அவ்யுக்த் “என்ன ஜானு கேட்ட?” என்று கேட்டபடியே கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்..
அவனுடன் கூட சேர்ந்து நடந்துக்கொண்டே, “ஈவ்னிங் எங்க மீட் பண்ணலாம்னு கேட்டேன்?” என்றாள் ஜான்வி.
“நீ ரெடியா இரு.. எங்க வீட்டுக்கே போலாம்.. அம்மா உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான் அவ்யுக்த்.
“சரி அவ்யுக்த்... அம்மாக்கிட்ட சொல்லிடு” எனும்போதே பார்க்கிங் லாட் வந்தது. பரத் அவ்யுக்த்திடமிருந்த சாவியை பெற்றுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து விட்டு அவ்யுக்த் அமர காரின் முன்பக்க கதவை திறந்து வைத்தான்.
அதைப்பார்த்த ஜான்வி, “சரி அவ்யுக்த், ஈவினிங் பார்க்கலாம் பை, பை பரத்” என்றாள்.
அவ்யுக்தும், பரத்தும் அவளுக்கு கை காட்டியபடியே கிளம்பினார்கள். சிறிது தூரம் சென்றதும் அவ்யுக்திடம், “இந்த ஜான்வி எப்படிடா சரத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டா?” என்று கேட்டான்.
“நானும் உன் கூட தான இருக்கேன்.. எனக்கு மட்டும் எப்படி தெரியும்? ஈவ்னிங் என்ன சொல்றான்னு பார்க்கலாம்” என்று பதிலளித்தான் அவ்யுக்த்.
“அது சரிடா, பட் இதெல்லாம் சரிப்பட்டு வரும்ன்னு நினைக்கிறியா அவ்யுக்த்?”
“எதுடா?”
“உனக்கு புரியாதமாதிரி இது என்ன கேள்வி?”
“டேய் பரத், கேட்கறதை ஒழுங்கா கேட்கணும்.. அதைவிட்டுட்டு திருப்பி என்னையே கேள்வி கேளு.. என்னடா இப்போ சரிப்பட்டு வரணும் உனக்கு?”
“அது..” என்று இழுத்தபடியே சிறிது யோசித்துவிட்டு பின் தொடர்ந்தான் பரத். “இத்தனை வருஷம் கழிச்சு என்னால அவங்க கிட்ட நெருங்கி பேசமுடியும்ன்னு தோணலை டா.. அவங்களுக்குமே அப்படி தான் இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. விசு படத்துல சொல்றமாதிரி இது உடைஞ்ச ஜாடிடா திருப்பியும் ஒட்ட வைக்கமுடியுமா? எனக்கு தெரிஞ்சு, அது முடியாது டா..” எனும்போது பரத்தின் அலைப்பேசி அழைத்தது.
நளினா தான் அழைத்திருந்தாள்.. அவளுக்கு என்ன சர்ப்ரைஸ்? என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆசை..அதான் அன்று காலையிலேயே கால் செய்து விட்டாள்.
“சொல்லு நளினா” என்றான் பரத்.
“பரத் எல்லாரும் வந்தாச்சா, என்ன சர்ப்ரைஸ்?”
“நளின் எல்லாரும் வந்தாச்சு.. எங்க பிரண்டு தான் எனக்கு அண்ணியா வந்து இருக்கா.. அது தான் சர்ப்ரைஸ் நளின்.. அதைப்பத்தி அப்புறமா பேசலாமா?”
“சரி பரத், பை” என்று போனை வைத்தாள் நளினா.
நளினா போனை வைத்ததும், “அவ்யுக்த் நான் சொல்றது தானே நிஜம்.. இதுல யாரையும் குத்தம் சொல்லி ப்ரயஜோனம் இல்லை.. இந்த சந்திப்பே தேவையில்லாதது ன்னு எனக்கு படுது, இதுல இந்த ஜானு வேற எனக்கு நல்லது செய்யறதா நினைச்சு அவங்களைப் போட்டு படுத்தி எடுத்திருக்கா.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ?ன்னு பயமாயிருக்கு.”
“டேய் பரத், நீ சொல்ற மாதிரியே இது உடைஞ்ச ஜாடியாவே இருக்கட்டுமே டா.. நான் ஒண்ணும் உன்னை அதை பெவிஸ்டிக் வச்சு ஒட்ட சொல்லலியே.. உன்னை பேசத்தான சொல்றேன்.. அதுவும் எதுக்கு சொல்றேன்னா அவங்க மனம் திருந்தி வரும்போது ஒரு சந்தர்ப்பம் கொடுக்கத்தான் டா.. எனக்கும் புரியுது அவங்க திருந்தறத்துக்கு முழுக்காரணம் ஜானு தான்னு.. அதுக்காக அவ செஞ்சத நான் நியாயப்படுத்த விரும்பலை.. “ என்று நிறுத்தி “அதைவிடுடா அது வேற விஷயம் கண்டிப்பா ஜானு ஏன் செஞ்சான்னு விளக்கம் கொடுப்பா.. அதை அப்போதைக்கு பார்த்துக்கலாம்.. இப்போ உன்னோடத பார்க்கலாம், இதுல நீ பயப்பட என்ன இருக்கு சொல்லு பார்க்கலாம்? இது உடைஞ்ச ஜாடி திருப்ப ஒட்டவைக்க முடியாதுங்கறதையாவது நீ கண்டிப்பா நேர்ல சொல்லித்தான் ஆகணும் பரத், அதுக்காகவாது ஈவ்னிங் ரெடி ஆகிக்கோ.. நானே கூட்டிக்கிட்டு போறேன் அப்புறம் ஒரு டூ ஹவர்ஸ் கழிச்சு வந்து பிக் அப் பண்ணிக்கிறேன் “ என்று முடிக்கும்போது அவ்யுக்தின் வீடு வந்திருந்தது. இருவரும் இறங்கி அன்றைய வேலைகளை தொடர்ந்தார்கள்.

சாஹித்யா அன்று காலையில் எழுந்ததும் முதல் நாள் ராத்திரி அவ்யுக்த் அனுப்பிய மெசெஜை மறுபடியும் படித்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டே அன்றைய வேலைகளை தொடர்ந்தாள். குளித்து முடித்து கிட்சனுக்குள் நுழையும்போது வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியபடியே கதவிலிருந்த லென்ஸ் மூலமாக பார்த்தாள். அங்கே ராகவனும் பங்கஜமும் நின்றுக்கொண்டிருப்பதை பார்த்ததும் தான் நேற்று இரவு கிளம்பி இன்று காலையில் வந்துவிடுவதாக அப்பா போன் செய்திருந்தது நியாபகம் வந்தது.. தலையில் லேசாக தட்டிக்கொண்டே “ஸ்..ஸ்.. ஐயோ! “ என்று லேசாக முனுமுனுத்துக்கொண்டே கதவை திறந்தாள்.
“என்னடி இவ்ளோ நேரம் கதவ திறக்க? ஓ! பாத்ரூம்ல இருந்தியா அதான்..” என்று கேள்வியையும் தானே கேட்டு பதிலையும் தானே சொல்லிக்கொண்டாள் பங்கஜம்.
“வாங்கப்பா, அம்மா மாமா எப்படி இருக்காங்க?’
“மாமா நல்லா இருக்கார் சஹி.. நார்மல் வார்ட்க்கு வந்துட்டார்.. நீ ஏதாவது சமைச்சியா? இரு நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன்.” என்ற அம்மாவை பார்த்து “அம்மா, இரு முதல்ல காபி குடிச்சுட்டு போய் குளி.. நான் டிபன் பண்றேன்.. நீ லஞ்ச் அப்றமா செஞ்சுக்கோ..” என்றபடியே கிட்சனுக்குள் புகுந்தாள் சஹி.
மூவருக்கும் காபி எடுத்துவந்த சஹியை பார்த்து ராகவன், “சஹி நீ எப்போ ஆபீஸ் கிளம்பணும்? உன்னோட நான் கொஞ்சம் பேசணுமே..” என்றார்.
“அப்பா இதோ டிபன் மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்.. எனக்கு ஒன்பது மணிக்கு கிளம்பினா போதும்பா..”
“சரி சஹி வா.. நான் வெங்காயம் நறுக்கித்தறேன்.. நீ உப்புமா பண்ணிடு போதும்.. சரிதானே பங்கஜம்..?”
“ம்ம் சரிங்க” என்ற பங்கஜம் குளிப்பதற்கு சென்றார்.
“அப்பா சொல்லுங்க என்ன விஷயம்?” என்றபடியே சமையல் வேலையை ஆரம்பித்தாள் சஹி.
“சஹி, நானும் மாமாவும் சேர்ந்து பிஸ்னெஸ் பண்ணலாம்னு முடிவு செஞ்சது உனக்கு தெரியும்... அதுக்காகத்தான் நாம் நம்ம வீட்டை கூட வித்தோம்.. “ என்று நிறுத்தினார்.
வீட்டை விற்றதை பற்றி பேசியதும் அவளுக்கு அவ்யுக்தின் ஞாபகம் வந்ததால் அவனை மனதில் ரசித்துக்கொண்டே அப்பாவிடம் “என்னப்பா இது எல்லாம் தெரிஞ்சுது தானே, இப்போ என்ன ஆச்சு?”
“அதும்மா சஹி, மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பிஸ்னெஸ் செய்யறதை பற்றி யோசிக்கணும்னு சொல்றாங்க உன் அத்தை.. உன் மாமா ஒருபடி மேல போய் நான் வேணும்னா இந்த இடத்தை சஹி பேர்ல எழுதி வச்சிடறேன்னு சொல்லி என்னையே பிஸ்னசை கவனிச்சிக்க சொல்றார்..”
“அப்பா, எதுக்கு மாமா என் பேர்ல அந்த இடத்தை எழுதி வைக்கணும் ?” என்று இடையிட்டாள் சஹி.
“மாமாக்கு அவரால் தான் நம்ம வீட்டை வித்தோம் ன்னு ஒரு ஆதங்கம்.. அதை என் கிட்ட நேரடியாவே சொன்னார்... நான் உங்களை பிஸ்னஸ்க்கு கூப்பிட்டதால் தானே உங்க வீட்டை வித்துட்டு ஒரு சின்ன ப்ளாட்க்கு போனீங்கன்னு ஒரே புலம்பல் உன் மாமா...அதுக்கு தான் இந்த இடத்தை சஹிக்கே எழுதி வச்சிடறேன்னு சொல்றார்.. உன் அத்தைக்கும் இதுல சம்மதம் போலிருக்கு.. நான் தான் இதப்பத்தி கொஞ்சநாள் கழிச்சு பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. “ என்று முடித்தார் ராகவன்.
“அப்பா இதுல அம்மாக்கு சம்மதமா?”
“இல்லைம்மா ‘பங்கு’க்கு இதில் இஷ்டமில்லை பட், அவளும் அங்கே எதுவுமே சொல்லலை.. நாங்க வரும்போது தான் இதைப்பத்தி சொல்லிட்டு வந்தா.”
“கரெக்ட்பா எனக்குமே இதில் உடன்பாடு இல்லைப்பா.. மாமாவோடது கண்டிப்பா ஐஷுக்கு தான். அதுமட்டுமில்லாம இப்போ நானும் அவளும் பிரன்ட் மாதிரி பழகறோம்.. இதுனால எங்களுக்குள்ள விரிசல் வர நிறைய வாய்ப்பிருக்கு.. இப்போ வரலைன்னாலும் பின்னாடி வரலாம்.. அதுனால நீங்க இதை சீக்கிரமே பேசி முடிச்சுடுங்க... ஆற அமர பேசலாம்ன்னு வெயிட் பண்ணிடாதீங்க... வேணும்ன்னா இப்படி சொல்லுங்க இந்த இடத்தை ஐஷு பேர்ல எழுதிக்கொடுக்க சொல்லி அவளுக்கு விருப்பம் இருந்தா உங்க கூட பிஸ்னஸ்க்கு வர சொல்லுங்க..” என்று நிறுத்தி சிறிது யோசித்த பின் “அவளுக்கு இதில் விருப்பம் இல்லைன்னாலும் இந்த இடத்தை நமக்கு கொடுக்கவேண்டாம்னு தெளிவா சொல்லிடுங்க... நீங்க பிஸ்னஸ் செஞ்சே ஆகணும்னு நினைச்சீங்கன்னா நம்ம கிட்ட இருக்கிற பணத்தை வச்சு நல்ல பிஸ்னஸ் ஆரம்பிங்க... இந்த ஷாப்பிங்மால் மட்டுமே பிஸ்னெஸ்ன்னு ஒண்ணும் கிடையாதே... நீங்களே அந்த இடத்தை வாங்குங்கன்னும் என்னால சொல்ல முடியாது.. அதுல நீங்க பணத்தை போட்டீங்கன்னா வேற பிஸ்னஸ் பண்ற அளவுக்கு நம்மக்கிட்ட பணவசதி கிடையாது.. அதுனால நீங்க இருக்கிற பணத்தை வச்சு பிஸ்னஸ் செய்ங்க.. இதையெல்லாம் நாம மெதுவா பேசிக்கலாம்... பட் மாமாக்கிட்ட முடிஞ்சளவு சீக்கீரம் சொல்லிடுங்க.. அது இன்னிக்கே இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. மாமா எவ்வளவு கன்வின்ஸ் பண்ணினாலும் உங்க முடிவு மாறாதுங்கறதை நல்லா புரிய வச்சிடுங்க..” என்ற படியே உப்புமாவை செய்து முடித்தாள் சஹி.
இதையெல்லாம் குளிக்க சென்ற பங்கஜம் தன் சோப்பை மறந்ததால் அதை எடுக்க வந்த போது கேட்டாள். கேட்டதும் தன் பெண்ணை நினைத்து மிகவும் சந்தோஷம் உண்டானது.. மகிழ்ச்சி பொங்க பார்த்துக்கொண்டிருந்த தன் அம்மாவை பார்த்த சஹிக்கு வழக்கம்போல் அம்மாவை சீண்டும் ஆசை வந்தது அதனால், “என்னப்பா, என்ன தான் காக்கா குளியல் போட்டாலும் இப்படி போட்ட ட்ரெசையா போடறது? இதையெல்லாம் உங்க ’பங்கு’ கிட்ட சொல்றது கிடையாதா?” என்று சீண்டினாள் சஹி.
“அடிக்கழுதை , இன்னும் நான் குளிக்கவே போகல சோப் என்னோட பக்ல இருக்கு அதை எடுக்க வரும் போது உன் பேச்சை கேட்டு அப்படியே நான் நின்னுட்டேன் .. இனிமே தான் குளிக்கவே போறேன். நீ உப்புமா செஞ்சுட்ட இல்லை.. நான் வந்து சட்னி அரைக்கிறேன்.” என்று சொல்லிக்கொண்டே ராகவனிடம் திரும்பி “அதான் உங்க பொண்ணுக்கு பண்ணவேண்டிய சேவகம் எல்லாம் முடிஞ்சுருச்சே நீங்களும் போய் குளிங்க.. எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றாள் பங்கஜம்.
இருவரும் குளிக்க சென்றதும் சஹி, அவ்யுக்த்தை பற்றி தன் பெற்றவர்களிடம் இப்பொழுது சொல்லலாமா, வேண்டாமா? என்று யோசித்தாள். “இந்த அப்பா நம்ம கிட்ட எதையுமே மறைக்கிறதில்லை.. இன்னிக்கு அம்மாக்கும் மூட் நல்லா இருக்கு.. சாப்பிடும்போதே சொல்லிடலாம்” என்று முடிவெடுத்தாள் சஹி.
முதலில் அப்பா வந்ததும் அவரை அழைத்த சஹி, “அப்பா, நானும் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. பேசிட்டு நான் ஆபீஸ் கிளம்பறேன் ப்பா” என்றாள்.
“சொல்லுமா சஹி, என்ன விஷயம்?”
“இல்லைப்பா அம்மாவும் வந்திடட்டும் சொல்றேன்.” என்றபடியே டேபிளில் உப்புமாவையும் ,சட்னியையும் எடுத்துவைத்தாள்.
சில நிமிடங்களில் வந்த பங்கஜம், “சஹி நான் தான் வந்து சட்னி பண்றேன்னு சொன்னேன் இல்லை? “
“அம்மா விடும்மா, ஒரு நாளாவது அப்பாக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும்ன்னு தான் நானே அறைச்சுட்டேன்” என்று அம்மாவை பார்த்து சிரித்தாள் சஹி.
“ஹா..ஹா..! சஹி ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிட்டே டா” என்றபடியே டைனிங் டேபிள்க்கு வந்தார் ராகவன்.
இதைக்கேட்ட பங்கஜம் பொய் கோபம் கொண்டு, “ரொம்ப சிரிக்காதீங்க பல் சுளுக்கிக்க போகுது.. என்னமோ தினமும் இவ கையால சாப்பாடு கிடைக்கப்போறது மாதிரி பேசறீங்களே.. நாளைக்கே இவளுக்கு கல்யாணம் ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.
“அப்போ கூட நீ நல்லா செஞ்சு தர மாட்டியா கஜு? “
“ஆரம்பிச்சுடீங்களா? ஏங்க இப்படி என் பேரை கொலை செய்யறீங்க?”
“விடு கஜு , இப்போ சஹி ஏதோ விஷயம் சொல்லணும்னு சொன்னா.. அதை கேட்போம்.. நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கலாம்.”
“சரி சண்டையை அப்புறம் வச்சிக்கலாம்.. ஆனா இது என்ன கஜு? அதுக்கு மட்டும் அர்த்தம் சொல்லிடுங்க.”
“அது காஜு வோட சுருக்கம் தான் கஜு, புரிஞ்சுதா கஜு?”
“எவ்வளவு அழகான பேரை இப்படி கொலை செய்யறீங்க?சஹி அவர் கிடக்கிறார் விடு நீ சொல்லு என்ன விஷயம்?” என்று சஹியை பார்த்து பேச ஆரம்பித்தாள் பங்கஜம்.
“அப்பா அவ்யுக்த் பத்தி தான் பேசணும்..” என்று ஆரம்பித்து மற்ற இருவரையும் உற்று நோக்கினாள்.
இருவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டவாறே அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். அதனால் சஹியே மேலே தொடர்ந்தாள். “எனக்கு அவரை பிடிச்சிருக்கு..அவ்யுக்துக்கும் தான்.. “ என்று ஆரம்பித்து அவ்யுக்த்தை விரும்ப ஆரம்பித்ததை சொல்ல ஆரம்பித்தாள். நளினா மூலமாக தான் அவ்யுக்த் பற்றி அறிந்துக்கொண்டதையும் அதனால் வந்த கனவையும் சொன்னாள். நளினாவின் பிறந்தநாள் அன்று தான் தாங்கள் சந்தித்து பேசியதையும் கூறினாள். அவ்யுக்த் தன் வீட்டில் தங்கள் காதலை பற்றி சொல்லியதையும் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததையும் சொன்னாள். அவர்கள் உடனே வந்து சம்பந்தம் பேச ரெடியா இருப்பதை பற்றியும் தெரிவித்தாள். அவள் தான் தன் பேரன்ட்ஸ் கிட்ட பேசிவிட்டு முடிவு சொல்வதாகவும் சொன்னதாக அவர்களிடம் தெரிவித்தாள் சஹி. அன்றே இதைப்பற்றி பேச நினைத்ததாகவும் ஆனால் மாமாவிற்கு உடம்பு சரியில்லாமல் போனதால் தன்னால் சொல்லமுடியாமல் போனதையும் சொல்லிவிட்டு “அப்பா இனி நீங்க தான் சொல்லணும். உடனே பதில் சொல்லணும்னு இல்லை நீங்க ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு ஈவ்னிங் சொல்லுங்க.. நான் இப்போ ஆபீஸ் கிளம்பறேன்.” என்றவாறே சாப்பிட்ட தட்டை கழுவ எழுந்து சென்றாள்.
திரும்பி வந்த சஹியிடம் “இப்போவாவது சொல்லணும்னு தோணிச்சே.. அதுவே சந்தோஷம் தான் மா” என்று ஒரு கொட்டை வைத்து பேச்சை ஆரம்பித்தார் ராகவன்.
“அப்பா இல்லைப்பா அன்னிக்கு மாமாக்கு” என்று ஆரம்பிக்கும்போதே “நிறுத்து சஹி, உன் மனசுல இந்த எண்ணம் வரும்போதே சொல்லியிருக்கலாம் இல்லையா?”
“எப்படிப்பா சொல்றது? அவ்யுக்த் மனசுல என்ன நினைச்சிருக்கார்ன்னு நான் தெரிஞ்சுக்கிட்டது அப்புறம் தான ப்பா உங்க கிட்ட சொல்லமுடியும்.. என்னோடது பார்க்காமலே வந்த காதலப்பா...அது எனக்கு சரியா, தப்பா?ன்னே எனக்கு தெரியலை.. அதான் என்னால உங்க கிட்ட பேசமுடியல.. அவ்யுக்திற்கும் இந்த காதல் வந்திருக்கும்ன்னு என்ன நிச்சயத்துலப்பா நான் உங்க கிட்ட அவ்யுக்த் பத்தி பேசமுடியும்?” என்று நிறுத்தி “இப்போ உங்க கிட்ட சொல்லும்போது மனசு முழுக்க என் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சந்தோஷத்துடன் சொல்றேன்.. இது என் மனசுக்கு நிறைவா இருக்குப்பா.. உங்க கிட்ட சொல்லாம இருந்ததுக்காக என்னை மன்னிச்சிடுங்கப்பா.. தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கிட்டு முடிவெடுங்க ப்ளீஸ் ப்பா” என்று முடித்தாள் சஹி.
“சஹிமா, நீ முன்னாலேயே சொல்லலையே என்கிற ஆதங்கம் தான் டா, உனக்கு தேவையானதை சொல்லக்கூட உரிமைக் கொடுக்காமலா வளர்த்திருக்கோம்? ன்னும் நினைச்சு தான் நான் கோபப்பட்டேன். சரிவிடு சஹி, நீ நினைச்சதும் கரெக்ட் தான்.. இந்த அவ்யுக்த்தை எனக்கும் பிடிச்சிருக்குமா.. உனக்கும் அவ்யுக்திற்கும் ஆரம்பத்திலேர்ந்தே சந்திக்க வாய்ப்பில்லாமலே போச்சு இல்லை.. எல்லாமே நல்லதுக்கு தான் போல.. பாரு இப்போ வாழ்க்கை முழுவதும் பார்த்துட்டே இருக்கப்போறீங்க.. சந்தோஷம் மா.. நானே வேணுகோபாலிற்கு கால் செஞ்சு பேசறேன்.. நீ சந்தோஷமா ஆபீஸ் கிளம்பு போ சஹி” என்று ராகவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பங்கஜம் பேச ஆரம்பித்தாள்.
“என்னை ஒரு மனுஷியா மதிக்கிறீங்களா? நானே இவ கல்யாணப் பேச்சை மார்கழி மாசத்துலே ஏண்டி எடுத்தே?ன்னு ஊர்ல இருக்கிற பக்கத்துவீட்டு மாமி சொன்னதை வச்சு கவலையா இருக்கேன்... இவளுக்கு அதே கோயில்ல பொண்ணு பார்க்க வச்சுதான் கல்யாணம் பண்ணனும்னு ஊரிலிருந்து வரும் வழியெல்லாம் நினைச்சுட்டே வந்தேன்... நீங்க அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க... அப்ப தான் எனக்கு திருப்தியா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றாள் பங்கஜம்.
சஹிக்கு மனதில் கவலை வந்தது. “தான் பேச்சை எடுத்தநேரம் சரியில்லையோ.. அப்பா மூலமாக அம்மாவிற்கு சொல்லியிருக்க வேண்டுமோ?” என்று காலம் கடந்து தோணியது சஹிக்கு.
 
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
Top