Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Chathriya Vendhan - 47

Yazhvenba

Well-known member
Member
சத்ரிய வேந்தன் – 47 - ஆயுதக் கிடங்கு

நெருக்கத்தில் இருந்தும்
பிரிவின் துயர்…
முரண் கவிதையாய்
நம் வாழ்வு…


சந்திர நாட்டின் ஆயுத கிடங்கில் சமுத்திர தேவிகை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடன் சந்திர நாட்டின் படைத்தளபதி கதிரவனும் வந்து கொண்டிருந்தான்.

“பார்த்தீரா தளபதியாரே, உம் அரசர் ஆய்தக் கிடங்கை காண்பதற்கு கூட அழைத்து வர மாட்டேன் என்கிறார்?” சமுத்திரா சொல்ல, அந்த குரலில் கிஞ்சித்தும் கோபம் இல்லை.

“என்ன அரசியாரே இவ்வாறு கூறிவிட்டீர்கள்! நீங்கள் நேற்று கேட்டுக் கொண்டீர்கள் என்பதற்காக, இன்றைய முதல் பணியே எனக்கு உங்களுடன் ஆயுதக் கிடங்கு வருவது தான்” என்ற கதிரவனின் மனதில், ரூபனர் தம்மை எந்த வேலைகளையும் கவனிக்க விடாமல் உடனே அனுப்பி வைத்த நிகழ்வு எழ, உடனடியாக பதில் கூறி இருந்தான்.

“அவர் வராமல் உன்னையல்லவா அனுப்பியிருக்கிறார். மருத தேசத்திலும், வேங்கை நாட்டிலும், விஜயபுரி நகரிலும் ஆயுதக் கிடங்கை பார்வையிடுவதும், படைபலத்தை அறிவதும், படைகளுக்கு தரும் பயிற்சியைப் பற்றி அறிவதும்… இவற்றையெல்லாம் அன்றைய நாளின் இறுதியில் என்னிடம் சிலாகித்து பேசுவதுமாக கழித்தார் தெரியுமா?”, ‘மற்ற நாடுகளில் சுற்றிப் பார்த்தவர், சொந்த நாட்டில் உடன் வர மறுக்கிறாரே’ என்ற எண்ணத்தில் சமுத்திரா கேட்க,

“அப்படியா அரசியாரே! அதெல்லாம் மன்னர் தெரிந்து கொண்டாரா? எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போயிற்றே! நம் அரசரே மலைக்கள்ளர்களை எவ்வளவு திறமையாக விரட்டினார் தெரியுமல்லவா அரசி? இதற்கும் அப்பொழுது விஜயபுரி நகரத்தில் சிறப்பான படைகள் கூட இல்லை.

விஜயபுரி வீரர்களுக்கு எவ்வளவு சிறப்பாக பயிற்சியளித்து, மலைகள்ளர்களிடம் வெற்றி வாகை சூடினார். அவரிடம் இன்று வரை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் பயிற்சி பெற்று, நம் படையை வலுப்படுத்த முயற்சிக்கிறேன். இவ்வளவு திறமையும், வீரமும் நிறைந்த அரசர் பெருமானே இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார் என்றால், அவரின் ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது” என்று பதிலுரைத்த கதிரவனின் மனதிலும், பேச்சிலும், முழுக்க முழுக்க ஒரு வீரனின் கண்ணோட்டம் மட்டுமே இருக்க, சமுத்திரா சிரித்தே விட்டாள்.

திடீரென சிரிப்பொலி கேட்கவும், “ஏன் அரசியாரே? என்னவாயிற்று?” என்று கதிரவன் புரியாமல் கேட்க,

“பின்னே என்ன தளபதியாரே! நான் அங்கு வந்த பொழுது எல்லாம் என்னுடன் பொழுதை கழிக்காமல் அந்த நாட்டின் வளர்ச்சிகளை அறிந்து கொண்டவர், இங்கு வந்தும் இவ்வாறு செய்கிறார் எனும் பொருளில் கூறினால், நீங்கள் என்னவென்றால் அவர் கண்ணோட்டத்திலேயே பேசுகிறீரே. ஆண்கள் இனமே இப்படித்தான் போலும். கடமை! கடமை! கடமை! என்று…” என்றவாறு மேலும் நகைத்தாள்.

“நீங்கள் மட்டும் என்ன அரசியாரே, இங்கே வந்த மறுதினமே அரச அலுவலில் மூழ்கி விட்டீர்கள். உங்கள் இருவரைப் போன்றவர்கள் எங்கள் நாட்டிற்கு கிடைக்க சந்திர நாடு தவம் புரிந்திருக்க வேண்டும் அரசி” என்றான் மனமார.

“அவ்வாறெல்லாம் இல்லை கதிரவா. எங்கள் கடமையைத் தான் செய்கிறோம்” என்றாள் சிறு புன்னகையுடன்.

அதன்பிறகே கதிரவனுக்கு எதுவோ விளங்கியதைப் போல, “அரசி! அவ்வாறெனில்… நீங்கள் விருந்துக்கு என்று சென்ற பொழுதும் அரசர் ஓய்வில் இல்லையா? உங்களோடும் பொழுதை கழிக்கவில்லையா? அங்கு சென்றும் சந்திர நாட்டு மன்னராய் தான் செயல் பட்டாரா?” சிறு வியப்பும், அதிர்வும், வருத்தமுமாக கதிரவன் கேட்க, சமுத்திரா புன்னகைத்தாள்.

புன்னகை முகமாகவே, “என் கணவர் அவ்வாறு இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் தளபதியாரே! நீங்கள் வருந்த வேண்டாம்” என்றாள்.

‘என்ன மாதிரியான குணம் கொண்டவர்கள் இவர்கள். இதற்கும் இவர்கள் இருவருக்கும் இது தாய் நாடு கூட இல்லை. இங்கு அரச பொறுப்பை ஏற்றதில் இருந்து மன்னர் ரூபன சத்ரியர் ஓய்வெடுத்ததாக நினைவு இல்லை. காதல் திருமணம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், அந்த ஆருயிர் காதலியைக் காணவோ, இல்லை உயிர் நண்பனைப் பார்க்கவோ மருத தேசம் செல்வதற்கு கூட நேரம் ஒதுக்கியதில்லை.

பிறந்து வளர்ந்த விஜயபுரி நகரத்திற்கு கூட சென்று வந்ததில்லை. இதையெல்லாம் எண்ணித்தானே திருமணத்தை காரணம் காட்டி கட்டாய ஓய்வினை எல்லாரும் சேர்ந்து அளித்தோம். அதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை குறித்து அல்லவா தெரிந்து வந்திருக்கிறார்.

மன்னர் ரூபன சத்ரியர் மட்டுமா? அரசியாரும் இதற்கு விதிவிலக்கல்லவே! எந்த கணவரும் தனக்காகவே அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்றல்லவா பெண்கள் எண்ணுவர்.

ஏன் என் வீட்டில் கூட, அப்படி இருந்ததனால் தானே... இன்று எனக்கு திருமணம் என்னும் பேச்சே வேம்பாய் கசக்கிறது. என்னுடைய மூர்க்கத்தனத்திற்கும், முரட்டு குணத்திற்கும் அந்த சம்பவங்கள் தானே காரணம்.

ஆனால், அரசியாரோ எத்தனை பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்கிறார். அதோடு கணவனின் பாரத்தையும் குறைக்கிறாரே! உண்மையில் சந்திர நாடு பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். எம் நாட்டு மக்கள் பல புண்ணியங்கள் புரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நரகத்தின் வாயில் சென்ற சந்திர நாட்டு மக்களை காப்பாற்றியதோடு அல்லாமல், தேவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவ தூதுவர்களாய் இவர்கள் கிடைப்பார்களா?’ மனதில் எண்ணங்கள் விரியவிரிய முகம் கனிந்தது கதிரவனுக்கு,

ஆனால், கதிரவனுக்கு பதில் தந்ததோடு அவனின் முகம் ஆராயாமல் அங்கிருந்த ஆயுதங்களை ஆராய்ந்து கொண்டிருந்த சமுத்திராவிற்கு கதிரவனின் முகபாவங்கள் தெரிய வாய்ப்பில்லை.

அந்த ஆயுதக் கிடங்கில் வேல், வில், அம்பு, உடைவாள், குத்துவாள், கைவாள் போன்ற ஆயுதங்கள் நன்கு கூர் தீட்டப்பட்டு, பளபளத்தது இருந்தது. அதனை மெச்சுதலாகப் பார்த்து மனதிற்குள் தன்னவனை, “நீங்கள் ஓர் சிறந்த மாவீரர்” என பாராட்டிக் கொண்டாள்.

ஆம்! ரூபன சத்ரியர் இன்றளவும், சமுத்திராவின் மனதில், மாவீரர் தான்! சத்ரியன் தான்! வேந்தன் என்னும் படியை எட்டவில்லை. ரூபன சத்ரியரின் வீரத்தினைப் பற்றி நன்கு அறிந்தவள் சமுத்திரா. அதை அவள் என்ன, இந்த நாடு, ஏன் அண்டை நாட்டினர் கூட அறிவர்! ஆனால், விவேகத்தில்? சாணக்கியத்தனத்தில்? ரூபனருக்கு இன்னும் திறமை வேண்டும் என்பது சமுத்திராவின் எண்ணம். இந்த வீரனை, முழுத்தகுதிகளோடு… சாணக்கியத்தனத்தை கற்று தந்து வேந்தனாக மாற்ற வேண்டும் என்பதே சமுத்திர தேவிகையின் பிரார்த்தனை, கனவு, ஆசை, இலட்சியம் எல்லாமுமே.

சமுத்திராவும், கதிரவனும் தத்தம் எண்ணங்களில் சுழல, கதிரவனே தம் எண்ணவோட்டத்தை தடை செய்து அடுத்த வினாவை சமுத்திராவிடம் கேட்டான். “அரசி உண்மையை கூறுங்கள் தங்களுக்கு வேந்தரோடு நேரம் செலவழிக்க முடியவில்லை என்று வருத்தம் இருந்ததில்லையா?” என்ன முயன்றும் இந்த வினாவை தவிர்க்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு திருமணத்தால் அவன் பட்ட துயரங்கள், வடுக்கள் அவ்வாறு.

“தளபதியாரே! உண்மையை கூறவேண்டும் எனில்… எனக்கும் அந்த ஆவல் இருக்கிறது தான். நாங்கள் சாதாரண குடிமக்களாக பிறந்திருந்தால், அவருக்கான பதிசேவையை நாள் முழுவதும் செய்திருப்பேன். அவரின் சகதர்மபத்தினியாய், அவர் தேவை அறிந்து நடந்து கொண்டிருப்பேன். எங்கள் இருவருக்கும் ஒன்றாக கழிக்க அதிக நேரம் கிடைத்திருக்கும். இயற்கையை ரசித்திருப்போம். மகிழ்வாய் உண்டு, நிம்மதியாய் உறங்கி….” என்று சொல்லிக் கொண்டே சென்றவள் சட்டென நிறுத்தி கதிரவனைப் பார்த்து, “ஆனால், இப்பொழுதும் அதற்கு வருந்த வேண்டியதில்லை தளபதியாரே. விரைவில் நாட்டின் பிரச்சனைகளை முடித்துவிட்டு ஓய்வெடுத்தால் ஆயிற்று. அவரவர் கடமைகளை, அவரவர் செய்து தானே ஆக வேண்டும்” என்றாள் அவளின் வழக்கமான புன்னகையுடன்.

கதிரவனின் மனதில் சமுத்திர தேவிகையின் மதிப்பு மென்மேலும் உயர்ந்தது. அந்த தேவியே அவதாரம் எடுத்து, நாட்டை காக்க வந்ததாக எண்ணினான். சமுத்திராவின் மீது மதிப்பு என்பதைக் காட்டிலும், பக்தி கொண்டான் என்பதே தகும்.

** ரூபன சத்ரியரின் அரசபையில், சில வழக்குகள் வந்திருந்தன. அதையெல்லாம் ரூபனர் நன்கு விசாரித்து தீர்ப்பு வழங்கிய முறை, அமைச்சர் பெருமக்களை வெகுவாக கவர்ந்தது. முன்பானால், மற்றவர்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்ப்பு வழங்க மாட்டார்.

அனைத்து தரப்பிலும் அலசி ஆராய்வது, அதற்கு தக்க பொறுமை இதெல்லாம் ரூபன சத்ரியரிடம் இருந்ததே இல்லை. அதை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை. இப்பொழுதும் ரூபனருக்கு முழு பொறுமையும் வந்துவிட்டது என்று அறுதியிட்டு கூற இயலாது.

ஆனால், சமுத்திராவைப் பற்றி தவறாக கருதி, அவளை ஒதுக்கி வருத்தியதன் விளைவாய், எந்த வழக்கு என்றாலும் அதனை நன்கு அலசி ஆராய்ந்து, இரு புறமும் இருக்கும் நியாயங்களையும், உண்மைத்தன்மையும் அறிந்து அதன் பிறகே முடிவெடுக்க வேண்டும் என்கிற திடம் வந்திருந்தது. இந்த திடம் பொறுமையையும் விரைவில் கற்று கொடுத்துவிடும்.

இந்த முழு வீரனை, மன்னராக செதுக்கும் உளியாய் சமுத்திர தேவிகை மட்டுமே. அதை கனவாய் காண்பவள் அவள், அவள் கூறாமலேயே தன்னை திருத்திக் கொள்பவராய் ரூபனர். இது ஒரு கவித்துவமான உறவு.

வழக்குகளை தீர்த்து வைத்த பின்னர், மந்திரிப் பெருமக்களும் அரசபையினரும் வெகுவாகப் பாராட்ட, மனம் முழுவதும் தன்னவளின் பிம்பம் மட்டுமே, அடர்ந்த முறுக்கிய மீசையின் கீழே இருக்கும் அழுத்தமான இதழ்களிலும், மற்றவர்கள் விழிகளுக்கு புலப்படாத ரூபனரின் பிரத்யேக புன்னகை.

அதன்பிறகு, புதிதாய் சேர்க்கப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி முறையை பார்வையிடுவது, கார்முகிலன் இருப்பிடம் தொடர்பாக ஏதேனும் செய்தி கிடைத்ததா என்று விசாரிப்பது, நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என மற்ற வேலைகள் எல்லாம் அந்த நாளினை அழகாய் ஆக்கிரமிக்க, இரவு காவல் பணிக்கு கதிரவனுடன் சேர்ந்து வீரர்களை அனுப்பிய பிறகே அரண்மனை திரும்பினார்.

“வாருங்கள்!” என்று மலர்ந்த முகத்தோடு சமுத்திரா வரவேற்று, ரூபனர் பருக நீரினையும் வழங்கினாள். இது அவளுடைய அன்றாட வாடிக்கை. எத்தனை நேரம் தாமதமாக வந்திருந்தாலும், அதற்கான வருத்தத்தையோ, கோபத்தையோ முகத்தில் பிரதிபலிக்காமல் இன்முகமாய் சமுத்திரா வரவேற்க, அந்த நாளின் மொத்த பாரமும் ரூபனருக்கு குறைந்துவிடும்.

இது போன்ற உறவுகளின் அருகாமைக்கு அவர் எவ்வளவு காலம் ஏங்கியிருப்பார். ஒரு குவளை நீர் கிடைத்தால் போதும் என்றிருந்தவருக்கு, அருவி முழுவதும் சொந்தமென கிடைத்திருந்தது.

“என்ன தேவி ஆயுதக் கிடங்கை பார்த்துவிட்டாயா?” வழக்கமான இதழ் பிரியா புன்னகையோடு ரூபனர் கேட்டார். ரூபனரின் பிரத்யேக புன்னகை இது, அதனை உணர வைப்பது அவருடைய சொற்களில் இருக்கும் உற்சாகம் மட்டுமே. அதை உணரும் கலையை சமுத்திரா அறிந்து வைத்திருந்தாள்.

“ஆயிற்று. நீங்கள் உணவருந்த அமருங்கள். பிறகு பேசிக்கொள்வோம்” சமுத்திராவிற்கு ரூபனர் பசியோடு இருப்பாரோ என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாய். உணவருந்தும் வரை வேறு எந்த பேச்சையும் வளர்க்க விடவில்லை. அதன்பிறகே பேச்சை தொடங்களானாள்.

“மிகவும் சிறப்பான பராமரிப்பு அத்தான். அத்தனை ஆயுதங்களும் நன்கு கூர்மையாக தீட்டப்பட்டிருக்கிறது. அதை தொட்டுப் பார்த்தால் கூட, கரங்களை பதம் பார்த்து விடும் போலும்” என்று சிலாகித்து கூறினாள்.

“மலர் போன்ற கரங்கள் என்றால் அப்படித்தான்…” இதழ் ஓரம் கசியவிட்ட விஷம புன்னகை, சமுத்திராவின் தன்மானத்தை சீண்டியது.

“யார் யார் யார் அவ்வாறு கூறியது? இன்னமும் தங்களுக்கு எனது வாள்வித்தை பற்றி தெரியாதல்லவா? பரிச்சித்து பார்க்கிறீர்களா? பிறகு கூறுங்கள், மலர் கரங்களா இல்லை இரும்பு கரங்களா என்று” ஆவேசமாக சமுத்திரா உரைக்க,

“ஏன் தேவி உன் சொல் வித்தையில் என்னை வசீகரித்தது போதாதா? இனி வாள் கொண்டும், வில் கொண்டும் உனது வித்தைகளை நான் அறிய வேண்டுமா? என்றோ உன்னில் நான் சரணாகதி அல்லவா?”

“ஆம்! என்னிடம் மட்டும் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருங்கள்” முகம் திருப்பி சமுத்திரா கூற,

“என்ன என்ன? அப்படி என்ன மாற்றி செய்து விட்டேன் தேவி”

“சரி போனதை விடுங்கள். நாளை என்னுடன் சிறைச்சாலை வர வேண்டும்?” என்று கூறிய சமுத்திராவிற்கு, இன்று ரூபனர் உடன் வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்கிற எண்ணம் மட்டுமே.

“அங்கு எதற்கு செல்கிறாய் தேவி?”

“செல்கிறாய் அல்ல. செல்கிறோம். இன்று ஆயுத கிடங்கிற்கு வராமல் விட்டது போல, அங்கேயும் வர மறுத்து விடாதீர்கள்”

“ஏன் தேவி? காரணம் தானே கேட்கிறேன். சரி வருகிறேன். யாரைக் காண செல்கிறோம்?”

“கார்முகிலனின் கூட்டத்தினரை…” என்று கூறிவிட்டு அவன் முகம் நோக்க,

ரூபனருக்கு அதிர்ச்சி சிறிதும் குறையவில்லை. ஏனெனில் அங்கு உள்ள நிலைமை தெளிவாக தெரிந்ததாயிற்றே. இதழ் பிரிக்கத்தவர்களிடம் நேரம் செலவிடுவது வீண் என்று எண்ணுபவர். அதனை சமுத்திராவிடமும் விளக்கமாக கூற,

“விளக்கம் வேண்டாம் அத்தான். அழைத்து செல்லுங்கள்” என்றாள் புன்னகை முகமாக.-- to be continued
 
Top