Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 1 ( Re-run )

Advertisement

தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 1

அந்திமாலை வேளையில் கோவை மாநகரின் முக்கியஸ்தர்கள் வசிக்கும் அந்த பெரிய வீதியில் பரமேஷ்வரனின் வீட்டின் முன்னால் ஹோண்டா கார் ஆவேசத்தோடு கீரிச்சிட்டு நின்றது. அதிலிருந்து இறங்கிய திருவேங்கடத்தின் முகத்தில் அக்கினியின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிந்தது.

வாட்ச்மேன் வைத்த வணக்கத்தை கூட பெரும் முறைப்போடு உதாசினப்படுத்திவிட்டு விடுவிடுவென அந்த பெரிய வீட்டை நோக்கி உள்ளே நடந்தார்.

அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி சகுந்தலா முகத்திலும் அதே கோவம் தாண்டாமாடியது. அதையும் மீறி அவரது முகத்தில் எதுவும் எல்லைமீறி கலவரமாகிவிடுமோ என்ற அச்சமும் சிறிதளவு ஒட்டியிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும், “டேய் பரமு. டேய் வெளில வாடா. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்காம போகமாட்டேண்டா...” என காட்டுத்தனமான கத்தலில் பூஜை அறையிலிருந்து சற்று பதட்டமாக வெளியே வந்தார் பரமேஷ்வரன்.

பரமேஷ்வரன் கோவை மாநகரின் டெக்ஸ்டைல் மில், மற்றும் ஒரு பெரிய டெக்ஸ்டைல் ஷாப் ஒன்றையும் நிறுவி அதை திறம்பட நடத்தி வரும் தொழிலதிபர். அவரின் மனைவி சுந்தரபரணி. வெளியில் இவரது ராஜ்ஜியம் என்றால் வீட்டினுள் சுந்தரபரணியின் ஆட்சி மட்டுமே. மனைவியின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாதவர்.

சுந்தரபரணியே பலமுறை கண்டித்தும் பரமேஷ்வரன் கேட்காத அலட்சியப்படுத்திய ஒரே விஷயம் தன் செல்ல மகளின் சுதந்திரத்தில் மட்டுமே. அவளின் கண்ணசைவில் கட்டுண்டு நிற்பவர். இப்போது அதுவே அவருக்கு வினையாக நிற்கிறது மகளின் உருவில்.

அதற்குள் சமையலறையிலிருந்து வெளியே வந்த பரமேஸ்வரின் மனைவி சுந்தரபரணி, “அடடே!...” வாங்க அண்ணே. வா சகு. எப்டி இருக்கீங்க?... கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?...” என்று கேட்டதுதான் தாமதம் படபடவேட பொரிந்து தள்ளிவிட்டார் திருவேங்கடம்.

“இங்க பாரும்மா. இந்த அண்ணே தங்கச்சி எல்லாம் இனிமே ஒத்துவராதும்மா. அப்டி கூப்பிடவும் கூப்பிடாத. இனிமே இவனை என்னோட உயிர் நண்பன்னு சொல்லிக்கவே மாட்டேன். பொண்ணா பெத்து வச்சிருக்கீங்க?...” என ஆக்ரோஷமாக பேசியவரின் முகத்திலும் பேச்சிலும் இருந்த பேதத்தை உணர்ந்த பரமேஸ்வரன் மேலும் பதட்டமானார்.

“டேய் திரு. என்னடா? எதுக்குடா இவ்வளோ கோவமா இருக்க? என்ன நடந்துச்சுடா?...”

“இன்னும் ஒன்னும் நடக்க போறதில்லை. கல்யாணம் நின்னு போச்சு. அதுவும் உன் பொண்ணால. எங்க உன் பொண்ணு?...” என கேட்டதும்,

முதலில் தடுமாறிய பரமேஷ்வரன் பின் நொடியில் சுதாரித்து, “அவ வெளில போய்ருக்கா. இப்போ வர நேரம் தான். என்கிட்டே சொல்லுடா...” என்றவரை இகழ்ச்சியாக பார்த்தவர்,

“விளக்கு வைக்கிற நேரமாகிடுச்சு. இன்னும் வீட்டுக்கு வரலை. என்ன லட்சணத்துல வளர்த்து வச்சிருக்க பாரு உன் பொண்ணை?...” என தானும் அவளை சொந்த மகளாக பாவித்து வளர்த்ததை அப்போதைய நேரத்தில் தனக்கு வசதியாக மறந்துவிட்டு தன் நண்பனின் இதயத்தை வார்த்தைகளை கொண்டு குத்திட்டீயாக கிழித்தவர் அத்தோடு நிறுத்தாமல்,

“நான் சொல்லவா அவ எங்க இருப்பான்னு?... இந்நேரம் ஏதாவது ஒரு வீட்டோட சுவரேறி குதிச்சு அங்க நடக்கிறத விஷயங்களை நோட்டம் விட்டு அவளோட கேமராலையும், செல்போன்லையும் ரெக்கார்ட் பண்ணிட்டு இருப்பா. அந்த வீட்டுக்கும் ஒரு நாள் குண்டு வைக்கிறதுக்கு. எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணித்தொலைச்சியோ?... உனக்குன்னு வந்து பொறந்திருக்கா பாரேன்!!!...”என தன்னால் முடிந்தளவு பரமேஷ்வரனை காயப்படுத்தி தன் மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றார் திருவேங்கடம்.

அவரது எகத்தாளமான பேச்சில் கலவரமாகி, “என்னாச்சு சகு?... எப்படி கல்யாணம் நின்னு போச்சு. இன்னும் பத்துநாள் தானே இருக்கு கல்யாணத்துக்கு?.இதுல என் பொண்ணு என்ன பண்ணினா?...” என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்ட சுந்தரபரணியை முறைத்த சகுந்தலா,

“என்ன பண்ணினாளா?... போனமுறை என்ன செஞ்சாளோ அதைத்தான் இந்த முறையும் செஞ்சிருக்கா உன் பொண்ணு. என்ன ஒரு வித்யாசம் போனமுறை யாருக்கு தெரியிறதுக்கு முன்னால வாய் வார்த்தையா பேசி முடிச்ச கல்யாணத்தை நிறுத்தினாள். இந்த முறை நிச்சயம் பண்ணி ஊருக்கே பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைச்சதுக்கு பின்னால நிப்பாட்டி எங்களோட மானம், மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் மொத்தமா அழிச்சுட்டா. அவளுக்கு நாங்க என்ன பாவம் செஞ்சோம்?...” என திருவேங்கடத்திற்கு சற்றும் குறையாத கோவத்தோடும் வேகத்தோடும் சுந்தரியை பார்த்து கேட்டார் சகுந்தலா.

“பார்க்கிற சம்பந்தத்தை எல்லாம் தட்டிவிட்டுட்டே இருந்தா என் பிள்ளைக்கு எப்போ கல்யாணம் நடக்கிறது?... அப்படி என் பிள்ளை மேல என்னதான் கோவம் உன் பொண்ணுக்கு?... அவனோட கல்யாணத்தை நிறுத்துறதுல இவளோ ஆர்வமா இருக்கா?...” என கண்ணீரோடு கேட்ட சகுந்தலாவின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தலைகவிழ்ந்து நின்றிருந்தார் சுந்தரபரணி.

அவருக்கு தெரியும் தன் மகளின் செயலுக்கான காரணம் என்னவென்று. அதை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையே!!!

பரமேஸ்வரனும், சுந்தரபரணியும் தம்பதி சகிதமாக அமைதியாக நிற்பதை பார்த்த திருவேங்கடம், “இவங்ககிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு தெரியுமே சகுந்தலா. அந்த அதிகபிரசங்கி மட்டும் என் கண்ணுல சிக்கட்டும். அடுத்து என்ன நடக்குதுன்னு பாரு. இதுதான் என்னோட கடைசி எச்சரிக்கை. இதுக்கு மேலயும் உன் பொண்ணு என் பையன் விஷயத்துல தலையிட்டா அடுத்து நடக்கிற கதையே வேற. நியாபகம் இருக்கட்டும்...” என சுட்டுவிரலை நீட்டி எச்சரித்தவர் வாயிலை நோக்கி சென்றார்.

“ஹப்பாடா!!! நல்லவேளை கிளம்பிட்டாரு...” என்ற பாவனையை சுந்தரபரணி தன் முகத்தில் கொண்டுவர முயன்ற போது பாதி வழியில் திடுதிப்பென்று திரும்பிய திருவேங்கடத்தை பார்த்து விழி பிதுங்கி நின்றார். எங்கே தான் நினைத்தது அவருக்கு தெரிந்துவிட்டதோ என்ற படபடப்பே அவரின் முகத்தை அவருக்கு சாதகமாக பதட்டமாக வைத்துக்கொண்டு அவரை காப்பாற்றியும் விட்டது.

வேகமாக திரும்பியவர், “பரமேஷ்வரா இத்தோட நம்மோட நட்பு முறிஞ்சு போச்சு. என் பிள்ளையை விட எனக்கு வேற யாரும் பெருசில்லை. அவனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டேன். அது யாராக இருந்தாலும். இனி நீ யாரோ, நான் யாரோ. நமக்குள்ள எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இனி நண்பன்னு சொல்லிக்கிட்டு என்னை தேடி வந்திடாதே...” என கறாராக சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே கிளம்பியும் விட்டார்.

திருவேங்கடத்திற்கும், பரமேஷ்வரனுக்கும் பால்ய காலத்திலிருந்து தொடர்ந்த நட்பு இப்படி வேரோடு சாய்க்கப்படுமென்று கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் அதற்கு தான் பெற்ற செல்லமகளே காரணமாக இருப்பாள் என்று எண்ணிப்பார்க்கவுமில்லை. இனி அதை எண்ணி வருத்துவது பிரயோஜனமற்றது என நினைத்துக்கொண்டார்.

அதுவரை மௌனம் காத்த பரமேஷ்வரன் தன் மனைவி தன்னையே நோக்குவதை புரிந்து திருவேங்கடத்தின் கார் கிளம்பியதை உறுதிபடுத்திக்கொண்டு தாம்தூம் என குதிக்க ஆரம்பித்தார்.

"பரணி, எங்க போய் தொலைஞ்சா உன் பொண்ணு?... இன்னைக்கு வரட்டும் வச்சிக்கறேன். செல்லம் குடுத்து குடுத்து கெடுத்து வச்சிருக்கிற அவளை..." என்றவர் சுந்தரபரணியின் முறைப்பை பார்த்து அடங்கியவராய்,

"உன்னை சொல்லியும் தப்பில்லை பரணி. அவளோட சேர்க்கை சரியில்லை. எப்போப்பாரு அந்த தடியனோடையே சுத்திட்டு இருக்கா. இன்னைக்கு அவனுக்கும் சேர்த்து கச்சேரி நடத்துறேன். அப்போதான் ரெண்டும் அடங்கும்..." என உள்ளடங்கிய குரலில் பரணிக்கு பவ்யமாக பதில் கூறினார் பரமேஷ்வரன்.

பரணியோ அவரது பேச்சில் சற்றும் கவனமில்லதவராக டைனிங் டேபிளை நோக்கி சாவாகாசமாக சென்று அங்கிருந்த தண்ணீரை அருந்தியவர் அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டார். இதில் கடுப்பான பரமேஷ்வரன்,

“பரணி நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்?... நானே நம்ம பொண்ணை சரியா வளர்க்கலைன்னு அந்த திருவேங்கடம் சொல்லிட்டு போய்ட்டானேன்னு வருத்தத்துல இருக்கேன். நீ பாட்டுக்கு கண்டுக்காம போனா என்ன அர்த்தம்?...” என ஹாலில் இருந்தவாறே சத்தமாக கேட்டார்.

“இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க? அவங்க பேசினது தான் தப்பா?... அப்போ உங்க பொண்ணு செய்யிறதெல்லாம் சரின்னு சொல்றீங்களா?... ப்ச். இதை பேசி எந்த பயனும் இல்லை. அதை விடுங்க. நீங்க கடைக்கு போகலையா?...” என மேலும் அவரின் பொறுமையை சோதிக்கவென எதிர்க்கேள்வி வேறு கேட்டு வைத்தார்.

“என்ன பேச்சு இது பரணி? நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரிஞ்சும் இப்படி கேட்கலாமா நீ?...”

“எல்லாம் தெரியுது. அதுக்கு இப்போ என்ன செய்யனும்னு சொல்றீங்க? நம்மபொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன?... நீங்க வேற சும்மா எதாச்சும் பேசனுமேன்னு பேசாதீங்க. எனக்கும் திரு அண்ணா பேசினதுல வருத்தம் தான். இதுல நாம என்ன செய்ய முடியும்? பொண்ணை நம்ம பேச்சை கேட்கிறது போலவா வளர்த்திருக்கோம்?...” என்று தன் கணவர் செய்த தவறுக்கு பெருந்தன்மையாக தன்னையும் சேர்த்தே குற்றவாளி ஆக்கிக்கொண்டார் சுந்தரபரணி.

“என்ன பரணி நீ? நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆனா எல்லாம் தானா சரியாகிடும். நீ அதையெல்லாம் நினச்சு கவலைப்படாதே. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வராங்க. அதனால நாம அதுக்கு வேண்டிய வேலையை கவனிப்போம். இன்னும் கொஞ்ச நேரத்துல பட்டுபுடவைங்க வந்திடும். நாளைக்கு என் பொண்ணு சும்மா தேவதை போல ஜொலிக்கணும். அது உன் பொறுப்பு...” எனன்றார்.

சுந்தரபரணியை திசைதிருப்ப எண்ணி அவர் பேசியது மேலும் பரணியை கவலைக்குள் ஆக்கியது. அவரது கவலை என்னவென்று பரமேஷ்வரனுக்கும் தெரியாமலில்லை. ஆனாலும் அவரால் ஒன்றும் செய்யமுடியாதே?

“இன்னும் எத்தனை தடவைதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க? அவங்க வரதும், அதுக்கு ஒவ்வொரு முறையும் நீங்க புது பட்டுப்புடவை எடுக்கிறதும், வந்தவங்க வந்த வேகத்திலேயே பின்னங்கால் பிடறில பட தெறிச்சு ஓடுறதும் தான் வாடிக்கையாகிட்டு இருக்கே?... பட்டுப்புடவையா வீடு முழுக்க நிறையிறது தான் மிச்சம்...” என நொடித்துக்கொண்டார்.

“இல்ல பரணி. இந்த தடவை கண்டிப்பா இந்த சம்பந்தம் செட் ஆகிடும். பையனை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். அது போல நம்ம பொண்ணை பத்தியும் அவங்ககிட்ட தெளிவா எடுத்து சொல்லிட்டேன். அதனால நாளைக்கு கண்டிப்பா நம்ம பொண்ணு கல்யாணம் முடிவாகிடும். எனக்கு அப்படித்தான் தோணுது...” என சிறுகுழந்தை போல பேசியவரை பரிதாபமாக பார்த்த பரணி,

“நீங்க கனவு கண்டுட்டே இருங்க. உங்க பொண்ணு இந்நேரம் அவ வேலையை ஆரம்பிச்சிருப்பா...” என்று கடுப்பாக கூறியதும் கனிவாக சிரித்தார் பரமேஷ்வரன்.

“இல்லை பரணிம்மா. நிச்சயமா நாளைக்கு வரபோற மாப்பிள்ளையை நம்ம குட்டிம்மாக்கு பிடிக்கும் பாரேன். என்மனசு அடிச்சு சொல்லுது...” என அப்போதும் விடாமல் பேச தன் கணவரின் எண்ணமும், பேச்சும் பலிக்கபோவது தெரியாமல் சுந்தரபரணி விட்டேற்றியாக இருந்தார்.

“சரி, அதை விடுங்க. இப்போ உங்க பொண்ணு எங்க போய்ருக்கான்னு தெரியுமா? உங்ககிட்ட எங்க போறேன்னு சொல்லிட்டாச்சும் போனாளா?...” என்று கேட்ட பரணியை பார்த்து திருத்திருத்த பரமேஷ்வரனின் முழியிலேயே தெரிந்துவிட்டது.

அவரை முடிந்தமட்டும் முறைத்த பரணியிடம், “இன்னைக்கு நீ வேணும்னா பாரேன். அவ வரட்டும். நான் கண்டிக்கிறேன். என் பொண்ணு நிச்சயமா என் பேச்சை கேட்ப்பா...” என்று நம்பிக்கையில்லா குரலில் தீர்மானமாக கூறிய பரமேஷ்வரனின் மனம் தன் மகளை எண்ணி குழம்பியது.
Nice
 
Top