Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 2

Advertisement

தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 2

பரமேஷ்வரன் தன் அறையில் தூங்காமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே படுக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பரணியை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார். அவரால் அதை மட்டும் தானே செய்ய முடியும். பரணியால் மகளை கண்டிக்க முடியும் போது தன்னால் மட்டும் முடியவில்லையே என்ற ஆதங்கம் கூட அவ்வப்போது சிறிது தலைதூக்கி பார்க்கும். மகள் எப்போது வருவாளோ அப்போதுதான் அவருக்கு தூக்கமே வரும்.

தப்பி தவறி மகள் வரும் நேரத்தில் பரணி முழித்துக்கொண்டால், மகளுக்கும் மனைவிக்கும் இடையே தான் சிக்கிக்கொண்டால் தன் பாடு திண்டாட்டமாகிவிடுமே. அவர் கவலை அவருக்கு. அதை நினைத்தால் பொட்டு தூக்கம் கூட கண்களை அண்டவில்லை. மகளையும் கண்டிக்க முடியாமல் மனைவியையும் சமாளிக்க முடியாமல் அவர் அவஸ்தையை மனதிற்குள்ளே சொல்லி சொல்லி மாய்ந்துபோனார்.

வாசலில் கேட் திறக்கும் சத்தம் மிக மிக குறைவாகவே கேட்டது. பின்னே மகள் வந்ததும் கேட்டை முக மெதுவாக திறந்துவிடுமாறு வாட்ச்மேனிடம் உத்தரவிட்டது சாட்சாத் பரமேஷ்வரனே. அந்த சத்தத்திலும் பரணியிடம் தென்பட்ட அசைவு தான் பரமேஷ்வரனை பதட்டத்திற்குள்ளாக்கியது.

“அய்யயோ!!! இந்நேரம் பார்த்து இவ வேற முழிச்சுக்குவாளோ?...” என்ற பரிதவிப்போடு கைகளை பிசைந்துகொண்டே அறையை விட்டு வெளியே வந்தவர் கதவை சாற்றிவிட்டு மகளை நோக்கி வேகவேகமாக நடைபோட்டார்.

அங்கே அவர் பார்த்த காட்சி ஏற்கனவே பயத்தில் இருந்தவருக்கு மேலும் அழுத்தத்தை கூட்டியது.

“ஒழுங்கா உள்ள வரப்போறையா?... இல்லை அம்மாவை கூப்பிடட்டுமா?...” என நிஷாந்த்தோடு ரகளையில் ஈடுபட்டிருந்தாள் ஹர்ஷிவ்தா. அதை பார்த்த பரமேஷ்வரன், “இவளே பரணியை எழுப்பிவிட்டு என்னை வச்சு ஆடுபுலி ஆட்டம் ஆடிருவா போலையே. என் நிலைமை இப்படியா ஆவனும் கடவுளே?...” என நொந்துகொண்டே,

“ஹர்ஷூம்மா என்னடா இது இந்த நேரத்துல வாசல்ல வச்சு வம்பு பண்ணிட்டு இருக்க. நிஷாந்த் காலையில வருவான் அவனை விடு...” என்றவரது முகத்தில் கெஞ்சலும் குரலில் பதட்டமும் குடியிருக்க பரிதாபமாக கேட்டவர்,

“நிஷாந்த் நீ கிளம்புடா. நேரமாகுது பாரு. மணி இப்போவே மூணாகிடுச்சு. போ, போய் தூங்கு. காலையில ஹர்ஷூவை பொண்ணு பார்க்க வராங்கன்னு தெரியும் தானே?... இங்க நேரத்துக்கு நீ வரனுமே...”என கண்களால் சைகை காட்டி அவனை கிளம்பி விடுவதில் குறியாக இருந்தார்.

ஹர்ஷூ செய்த அலப்பறையில் இன்றும் எங்கே பரணி முழித்துகொள்வாரோ என்ற கவலை தான் அவருக்கு. அவரது பெண்ணரசி தான் அவரது நிலையை புரிந்துகொள்ளவே இல்லையே? ஆனால் அவரின் கண்ணசைவிலேயே அதை புரிந்துகொண்டு நிஷாந்த் கிளம்ப முற்படும் போது அவனை மறித்துக்கொண்டு வந்து நின்றாள் ஹர்ஷூ. இடுப்பில் கைகளை ஊன்றி அவனை முறைத்தவள்,

“இப்போ நீ மட்டும் உள்ள வரலை...” என சுட்டுவிரலை நீட்டி எச்சரித்துக்கொண்டிருக்கும் போதே நிஷாந்தின் மொபைல் சிணுங்கியது. யாராக இருக்குமென எடுத்து பார்த்தவனது முகம் பேயறைந்தது போல் ஆனது. அழைத்தது பரணியாகிற்றே.

மொபைலில் வந்த அழைப்பை கட் செய்தவன் ஹர்ஷூவை முறைத்துக்கொண்டே உள்ளே நடக்க ஆரம்பித்தான். அவனை தொடர்ந்த ஹர்ஷூ, “ம்ம்!!! அந்த பயம் இருக்கட்டும்...” என்று தன்னையே மெச்சிக்கொண்டு அசால்ட்டாக சென்றாள். பரமேஷ்வரனின் நிலைதான் பரிதாபமாக போயிற்று.

“இன்னைக்கும் ஒரு பஞ்சாயத்தா? ஒரு நாளைக்கு எத்தனை பஞ்சாயத்தை தான் சமாளிக்கிறது?...” என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே முகத்தை முறைப்பாகவும் உடலை விறைப்பாகவும் வைத்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து நிஷாந்த்தை பார்த்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பிக்கும் முன்னே பரணி கைகளில் காபி கோப்பைகளோடு வந்து சேர்ந்தார்.

பரணியை குற்றஉணர்ச்சியோடு நிஷாந்த் பார்த்தால் ஹர்ஷூ அதற்கு நேர்மாறாக குதூகலத்தோடு பார்த்து,

“வாவ்!!! சு-னா பா-னா சூப்பர் போங்க. இந்நேரம் காபியோட ஒரு என்ட்ரி. மகளின் மனம் புரிந்த மகாலட்சுமி மாம் நீங்க. கலக்கிட்டீங்க...” என்றவள் பரணியின் கைகளில் இருந்த கோப்பைகளில் ஒன்றை தான் எடுத்துக்கொண்டு மற்றொன்றை நிஷாந்த் புறம் நீட்டி,

“நிஷூ இந்தா உன் காபி. இதை போய் மிஸ் பண்ணிட்டு போறேன்னுதான் உன்னை கூப்பிட்டேன். பார்த்தியா மாம் ரெடியா காபியோட காத்திட்டு இருக்காங்க. நீ வராம போனா அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும் தானே?...” என்று வியாக்கியானம் பேசியவளை முறைத்த நிஷாந்த்,

“ஹரி, கொஞ்சம் அமைதியா இரு. லொடலொடன்னு பேசாதன்னு எத்தனை தடவை தான் சொல்றது. அதுவுமில்லாம எப்போ பாரு அதென்ன சு-னா ப-னா? ராஸ்கல், ஒழுங்கா அம்மான்னு கூப்பிடு. புரியுதா?...” என அதட்டல் போட பரமேஷ்வரனின் கண்கள் மின்னியது.

“ஆஹா நாம என்ட்ரி கொடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...” என நினைத்துக்கொண்டே நிஷாந்தின் முன்னால் வந்து நின்றவர்,

“டேய், எத்தனை தடவை தான் சொல்றது அவளை ஹரின்னு கூப்பிடாதேன்னு. ஒருதடவை சொன்னா நீயும் தான் புரிஞ்சுக்கனும். ஆம்பள புள்ளையை கூப்பிடறது போல எப்போ பாரு ஹரி ஹரின்னுட்டு. இன்னொருக்க அப்டி கூப்பிட்ட தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை...” என்று ஆவேசமாக பேச,

“ஏன் பெரியப்பா உங்க பொண்ணு கூடதான் என்னை நிஷூன்னு பொம்பளை புள்ளையை கூப்பிடறது போல கூப்பிடறா. அவளையும் இதே போல என்னை அப்டி கூப்பிட கூடாதுன்னு கண்டிச்சு சொல்லுங்களேன்?...” என அவரை கார்னர் செய்தான்.

“பயபுள்ள நேரம் பார்த்து எப்டி நேக்கா கோர்த்து விடுத்து பாரு?... அதுவும் என் பொண்டாட்டி முன்னாடியே...” என எண்ணிக்கொண்டே பரணியை பார்க்க அவரோ இவரை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்.

“தேவையில்லாம பேசி தானா போய் சிக்கிட்டியே ஈஷ்வரா. கம்முனு கிடைச்ச இடத்துல உட்கார்ந்திருக்க வேண்டியது தானே. இப்போ இவ என்ன நினைக்கிறா அப்டின்னு ஒண்ணுமே தெரியலையே...” என்று பரணியின் முகத்தை கூர்ந்து நோக்க அப்போதும் அப்படியே அமர்ந்தவரே அவரும் ஈஷ்வரனை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ம்ஹூம், ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை. என்னமோ நமக்கு இன்னைக்கும் இப்படித்தான் விதிச்சிருக்கு போல...” என்று நினைத்துக்கொண்டே மகளை பார்க்க அவளோ கருமமே கண்ணாக காபியை குடித்துக்கொண்டே மொபைலை நோண்டிக்கொண்டிருந்தாள். வெறுத்துப்போனார் பரமேஷ்வரன். அவரின் நிலை பார்த்து எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே மென்றுகொண்டு கிளம்ப ஆயத்தமானான் நிஷாந்த்.

“ஓகே பரணிம்மா. நான் கிளம்பறேன்...” என்று சொல்லியவனை ஒரு கண்டனப்பார்வை பார்த்த பரணியிடம், “சாரி பரணிம்மா. ஆனாலும் இதை என்னால தவிர்க்கமுடியாது...” என்று ஒரு தீவிர பாவத்தோடு கூறியவனை இயலாமையோடு பார்த்த பரணி,

“ம்ம். சரி நிஷாந்த். போனதும் போன் பண்ணு. நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமே அம்மாவை கூட்டிட்டு வா...” என்றவர் பரமேஷ்வரனை பார்த்துக்கொண்டே,

“நாளைக்கு வீட்டுக்கு வரவங்க காலையிலேயே பார்க்க வராங்களாம். உன் பெரியப்பா சொன்னார். புரியுதா?...” என்றதும் நிஷாந்த் மனதுக்குள் கொஞ்சம் அமிழ்ந்திருந்த குற்றஉணர்வு மீண்டும் மேலெழும்ப ஆரம்பித்தது.

அவன் ஹர்ஷூவை பார்க்க அவளோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கொட்டாவியை விட்டுக்கொண்டு அப்பாவியாக அமர்ந்திருந்தாள். அவளை முறைத்தும் பிரயோஜனமில்லை என எண்ணியவன் பரணியிடம் தலையாட்டிவிட்டு பரமேஷ்வரனை ஒரு பார்வை தயக்கமாக பார்த்துவிட்டே சென்றான்.

அவன் சென்ற மறுநொடியே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஹர்ஷூவும் தன் அறை நோக்கி ஓட்டமெடுத்தாள். அங்கேயே நின்றுகொண்டிருந்தால் தன் மனம் பெற்றோருக்காக இளகிவிடுமோ என்று எண்ணி பயந்தவள் அதை தவிர்க்கவே அவ்வாறு சென்றுவிட்டாள்.

அவள் சென்ற வேகத்திலிருந்தே பரணிக்கு தெரிந்துவிட்டது. இத்திருமண ஏற்பாட்டை நிறுத்த தன் மகள் ஏதோ திருகுதாளம் செய்துவிட்டாள் என்பது அவருக்கு நிச்சயம் ஆகிற்று.

அவள் சென்ற திசையை பார்த்துகொண்டிருந்தவர் தூக்கத்தை தொலைத்தவராக பூஜையறைக்குள் சென்று மறைந்தார். இதையனைத்தையும் தடுக்கமுடியாமல் கையாலாகாதனத்தோடு சோகமே உருவாக அமர்ந்துவிட்டார் பரமேஷ்வரன்.

நிஷாந்த் அங்கிருந்து புறப்பட்டாலும் அவனின் மனம் ஹர்ஷூவின் வீட்டையே சுற்றிக்கொண்டிருந்தது. பரமேஷ்வரன் எல்லா நாட்களும் இப்படி அமைதியாக இருப்பவர் அல்ல. சிலநாள் அவனுக்கு பெரிய மண்டகப்படியும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் பேசி பேசியே கதறடித்து தான் விடுவார். அவருக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது. ஆனால் அவரை போல யாராலும் கோபப்படவும் முடியாது என்பதை எத்தனையோ முறை கண்கூடாக பார்த்தவனாகிற்றே.

மகள் விஷயத்தில் மட்டும் அவரால் சட்டென்று எதையும் செய்யமுடியாத சூழ்நிலை கைதி போல ஆகிவிட்டார். அதற்கு தானும் ஒருவகையில் காரணமாகிவிட்டோம் என்று நிஷாந்த் பலநாள் வருந்தியதுண்டு.

நிஷாந்த் பரமேஷ்வரனின் அண்ணன் செல்வத்தின் மகன். செல்வம் தன் தம்பி போல் இல்லாமல் அவரளவில் சூப்பர் மார்கெட் வைத்து நடத்திக்கொண்டிருப்பவர். ஆனாலும் அண்ணன் தம்பி இருவரிடையேயும் அப்படி ஒரு ஒட்டுதல்.

நிஷாந்த் ஹர்ஷூவோடு ஒன்றாக வளர்ந்தவன். அவளோடே பள்ளி கல்லூரி என ஒன்றாக படித்தவனும் கூட. அவனை விட ஹர்ஷூவின் மனதினை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. அதனாலேயே அவன் ஹர்ஷூவின் அடாவடிக்கு தடைபோட முடியவில்லை. இப்போது அதை தவறென்று உணர்கிறான். பரணியின் கவலை தேங்கிய முகமே நிஷாந்தின் கண்முன் நிழலாடியது.

நாளை நடக்கவிருக்கும் விசேஷத்தில் பரணிக்கு எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை என்றாலும் அவரது இதயத்தின் மூலையில் ஒரு ஆவல் இருக்கத்தான் செய்தது. நாளை நடப்பவை நல்லவையாக அமைந்து தன் மகளை மணக்கோலத்தில் பார்த்துவிடமாட்டோமா என்ற எண்ணவோட்டத்தினை அவரது கண்ணோரத்தில் சிறு துடிப்பு பிரதிபலிக்கத்தான் செய்தது.

ஆனால் ஹர்ஷூ செய்துவிட்டு வந்திருக்கும் காரியம்?... அது தெரிந்தால் நாளை மாப்பிள்ளை வீட்டார் வரவே மாட்டார்கள் என்னும் விஷயத்தை பரணிம்மா தாங்குவார்களா என்ற வருத்தம் அதிகரிக்க கனமான மனதோடு இரண்டு தெரு தள்ளி இருக்கும் தன் இல்லம் நோக்கி சென்றான் நிஷாந்த்.

காலையில் அம்மாவிடம் சொல்லிக்கொள்ளலாமென நினைத்துக்கொண்டே தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறக்க அங்கே இவனது பைக் சத்தத்தில் கண் விழித்த சரஸ்வதி தன் அறையை விட்டு வெளியே வந்தவரிடம்,

“நீங்க ஏன்மா இந்நேரம் உங்க தூக்கத்தை கெடுத்துட்டு எழுந்து வந்தீங்க? போய் தூங்குங்க...” என்றவனை கனிவாக பார்த்தவர்,

“ஹர்ஷூவை வீட்ல விட்டாச்சா? நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டீங்களா?...” என்று அதிமுக்கியமான கேள்வியை கேட்டார்.

“அவரை கேலியாக பார்த்தவன், “நல்லா கேட்டீங்கம்மா. இவ்வளோ நேரம் சாப்பிடாம இருக்கமாட்டோம்னு உங்களுக்கும் தான் தெரியுமே? அதை விடுங்க எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பரணிம்மா உங்களை சீக்கிரமே வர சொன்னாங்க. நானும் ரெடியாகிடறேன். ரெண்டுபேருமா போவோம். சரியா?...” என கூறிவிட்டு பரணிக்கும் அழைத்து வீடு வந்துவிட்டதை சொல்லிவிட்டு மாடி ஏறிவிட்டான்.

சரஸ்வதியோ அப்போதிருந்தே நாளை நடக்கும் பெண் பார்க்கும் படலம் நல்லவிதமாக முடியவேண்டும் என்று கடவுளுக்கு வேண்டுதல் வைத்துவிட்டு உறங்க சென்றார்.

---------------------------------------------------

தினம் தினம் விடியும் விடியலில் ஒவ்வொருவருக்குமான கனவுகள் நனவாக வேண்டுமென்ற எதிர்பார்பார்ப்புகளுடனே விடிகிறது.

பரணி மட்டுமல்லாது ஹர்ஷூவை தவிர அக்குடும்பத்தினர் அனைவருக்கும் அவளது வாழ்க்கை பிரகாசிக்கக்கூடிய விடியலாக இந்த விடியல் அமைந்துவிடாதா என்ற பேராசை தான் அவ்வீட்டினரை நொடிக்கு நொடி ஆட்கொண்டிருக்கிறது. இன்றைய விடியல் அத்தகையதுதான் என்பது ஹர்ஷிவ்தாவையும் சேர்த்து ஒருவரும் அறியாத ஒன்று.
Nice
 
Top