Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 3 ( Re-run )

Advertisement

தடையில்லை நதியே பாய்ந்தோடு



நதியோட்டம் – 3


கௌரவ் ஷக்திவேலுக்கும் ஹர்ஷிவ்தாவர்ஷினிக்கும் நிச்சயதார்த்தம் மிக எளிமையாக முறையில் எந்தவிதமான இடையூறுமின்றி நல்லபடியாக நடந்தது.

அனைத்தும் ஒரு கனவு போல நடந்து முடிந்து விட்டது. பரமேஷ்வரனால் இப்போதும் நடந்ததை நம்பவே முடியில்லை. எது நடக்கவே நடக்காது என நம்பிக்கையில்லாமல் இருந்தார்களோ? அந்த அவநம்பிக்கையை உடைத்தெறிந்து தன் மகளை கைப்பற்ற ஒப்பற்ற ஒருவன் வருவான் என நினைத்தும் பார்க்கவில்லை.

பரமேஷ்வரனுக்கு மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருக்குமே இந்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மீள வழி ஏதும் புலப்படாமல் திளைத்து கொண்டிருக்கின்றார்கள். காலையில் நடந்த சம்பவத்தால் மகளின் திருமண விஷயத்தில் பரமேஷ்வரனிடமிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அடியோடு அழிந்துவிட்டது. தன் மகள் அழித்துவிட்டாள் என மனம் குமைந்தவரால் அவளை கண்டிக்க வேண்டுமென்று அப்போது கூட தோன்றவில்லை.

அவினாஷின் குடும்பத்தினர் வெளியேறி விட்ட சிறிது நேரத்திலேயே பரமேஷ்வரனின் போனுக்கு அவினாஷின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அதை காதுக்கு கொடுத்த அடுத்த நொடி பரமேஷ்வரனுக்கு பேச இடம் கொடுக்காமல் அவினாஷின் தந்தை பொரிய ஆரம்பித்தார்.

“என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க சார்? அவளுக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்காக என் பையனை மிரட்டனும்? பொண்ணா சார் அது? பாவம் என் பிள்ளை இன்னும் அந்த ஷாக்ல இருந்து வெளில வரலை. கல்யாண பேச்சை எடுத்தா கூட பயப்படுவான் போல. நீங்க தானே சார் விரும்பி வந்து சம்பந்தம் பேசினீங்க. ஓரளவுக்கு உங்க பொண்ணை பத்தியும் சொல்லத்தான் செய்தீங்க. ஆனாலும் இப்படி ஒரு பொண்ணா இருக்கும்னு நாங்க எதிர்பார்க்கலையே?...”

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் பரவாயில்லை மிஸ்டர் பரமேஷ்வரன். உங்க பொண்ணு நார்மலா இல்லை. அப்நார்மலா இருக்கும் போல. அதனால பொண்ணை ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் எடுங்க. நல்ல வேலை நாங்க பிழைச்சோம். இல்லைனா அந்த பைத்தியத்தை எங்க தலையில தானே கட்டியிருப்பீங்க?...”

“டேய் போதும் நிறுத்துடா. நானும் போனா போகுது தப்பு என் பொண்ணு பக்கம்ன்றதால அமைதியா நீ பேசறதுக்கெல்லாம் காது கொடுத்தேன். அதுக்குன்னு என் பொண்ணையே நீ பைத்தியம்னு சொல்லுவியா?... இன்னொரு வார்த்தை எதாச்சும் பேசின நான் மனுஷனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்...”

“நானா வழிய வந்து சம்பந்தம் பேசினதால நீ என்ன பேசினாலும் பொறுத்துபோவேன்னு நினச்சியா? அதுக்கு வேற ஆளை பாரு. நான் பரமேஷ்வரன்டா. என் கோவத்தை பத்தி நீ தெரிஞ்சுக்காம இருக்கிறது தான் உனக்கு நல்லது...”

“என் பொண்ணு மிரட்டினான்னு பயந்து நடுங்குற உன் பையன் முதல்ல ஆம்பளையான்னு பாரு. என் பொண்ணு சிங்கம்டா. சரியான தொடை நடுங்கிய பெத்து வச்சிருக்கிற உனக்கே இவ்வளோ ஆணவம்னா எந்த சூழ்நிலையையும் தைரியமா எதித்து நிக்கிற என் பொண்ணை நினச்சு நான் பெருமைப்படத்தான்டா செய்வேன். இன்னொரு முறை என் கண்ணுல பட்டுடாத. தொலைச்சிடுவேன், ஜாக்கிரதை...” என்று கர்ஜித்தவரை கண்டு அவரின் அருகிலிருந்தவர்கள் ஒரு அடி பின்னால நகந்துதான் நின்றார்கள்.

பக்கத்தில் இருந்து பரமேஷ்வரன் போனில் பேசியதை கேட்டதுக்கே இப்படி என்றால் அவினாஷின் அப்பாவை பற்றி சொல்லவா வேண்டும்? ட்ரைவரிடம் ஹோட்டலில் உள்ள லக்கேஜை ஆள் அனுப்பி எடுத்துக்கொள்ளலாம் என்றும், வேறெங்கும் வண்டியை நிறுத்தாமல் ஊரைப்பார்த்து விடமாறும் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டாலும் அவரது உடலில் உதறல் மிச்சமிருக்கத்தான் செய்தது.

இங்கே பரமேஷ்வரனோ கொதித்துப்போய் அமர்ந்திருந்தார். “தன் பெண்ணை, தான் செல்லமாக சீராட்டி, அவளது மனம் நோக கூடாதென்று சிறு கண்டிப்பை கூட காட்டாமல் தன் உயிராய் வளர்த்தவளை பைத்தியம் என்று சொல்லிவிட்டானே...” என்று நினைக்க நினைக்க முகத்தின் சினம் கூடிக்கொண்டே சென்றது.

அவரது இந்த ஆவேசம் நல்லதற்கல்ல என்று பரணி அவரை அமைதிபடுத்த நெருங்க பரமேஷ்வரனோ, “பரணி ப்ளீஸ். எதுவும் சொல்லாதே. கொஞ்சம் குடிக்க தண்ணி தாயேன்...” என கேட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்துகொண்டவர் நெஞ்சை நீவிவிட்டுகொண்டார்.

அதை பார்த்த நிஷாந்த், “பெரியப்பா, என்னாச்சு?... என்ன பண்ணுது?... ஹாஸ்பிட்டல் போகலாமா?...” என பயந்து போய் கேட்கவும்,

“இல்லடாப்பா. எனக்கொண்ணுமில்ல. அந்த பரதேசி என் பொண்ணை சைக்யாட்ரிஸ்ட் கிட்ட காட்ட சொல்றான்டா. என் பொண்ணுக்கு பைத்தியமாம். அவ அப்நார்மலா இருக்காலாம். எவ்வளவு தைரியமிருந்தா அவன் அப்படி சொல்லுவான்?. என் பொண்ணு எனக்கு தாய்டா. எங்கம்மாவை போய்...”என்று உடைந்து போய் பேச பேச, அவினாஷின் தந்தையை இப்போதே புரட்டி எடுக்கவேண்டுமென்ற ஆவேசத்தில் நிஷாந்தின் கை முஷ்டி இறுகியது. என்னதான் ஹர்ஷூ செய்தது தவறென்றாலும் பைத்தியமென்று அவன் எப்படி சொல்லலாம் என்ற எண்ணம் தான் நிஷாந்திற்கு.

தண்ணீருடன் வந்த பரணி, “அவங்களை சொல்லி என்னங்க பிரயோஜனம்? நம்ம பொண்ணு மேலையும் தப்பு இருக்கத்தானே செய்யுது...” என பட்டென்று சொல்ல,

“அதுக்கு என்ன வேணும்னாலும் பேசுவாங்களா?... என் பொண்ணை பேச அவனுக்கு என்ன உரிமை இருக்கு?...” என்று மீண்டும் எகிறியவர், “பரணி, கொஞ்சம் என்னை அமைதியா இருக்க விட்டேன்...”என கெஞ்சும் குரலில் சொல்லி தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு கண்களை மூடி பின்னால் சாய்ந்துகொண்டார்.

அரைமணி நேரத்தில் களையிழந்து போயிருந்த வீட்டை சுற்றி பார்வையிட்ட பரணியும் சோர்ந்து போய் அமர்ந்தார். அவருக்கு ஆதரவாக சரஸ்வதியும். சிறிது நேரத்தில் பரமேஷ்வரனின் மொபைலில் மீண்டும் அழைப்பு வர ஒருவித அலுப்போடு அதை எடுத்து பார்த்தவரின் புருவம் முடிச்சிட்டது.

அதற்கு காதுகொடுத்தவரின் முகத்தில் அதுவரை இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் மறைந்து நொடிக்கு நொடி பரவசம் கூடிக்கொண்டே போனது. அதை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

பேசி முடித்தவர், “நான் ஒரு முக்கியமான விஷயமா வெளில போறேன். உங்க உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் கிட்ட வந்து சொல்றேன். நிஷாந்த் நீ என்னோட கூட வா. போய் என்னோட காரை எடு. இப்போ வந்திடறேன்...” என்றவர் தன்னுடைய அறைக்கு சென்றவர் ஒரு கவரோடு வெளியில் வந்து பரணியிடமும், சரஸ்வதியிடமும் ஒரு தலையசைப்போடு வெளியேறிவிட்டார்.

அவரது முகத்தை பார்த்தால் சந்தோஷமான விஷயமாகத்தான் தெரிகிறது. போகும் காரியம் செவ்வனே கைகூட ஆண்டவனை பிராத்தித்தபடி அமர்ந்துவிட்டனர் சரஸ்வதியும், பரணியும்.

நிஷாந்த் வழியில் என்னவென கேட்டும் பரமேஷ்வரனால் பதில் கூட சொல்லமுடியவில்லை. கார் நேராக அந்த ஹோட்டல் வளாகத்திற்குள் சென்று நின்றதும் அவசரமாக இறங்கியவர் நிஷாந்த்தோடு வேகமாக உள்ளே சென்று சுற்றுமுற்றும் யாரையோ தேடினார்.

“டேய் ஈஷ்வரா, எப்டிடா இருக்க?...” என்ற சந்தோஷ கூக்குரலோடு புருஷோத்தமன் பின்னால் இருந்து கட்டிக்கொள்ள அவரோடு தன் தந்தை செல்வமும் இருப்பதை கேள்வியோடு பார்த்தான் நிஷாந்த்.

“சோமா, நான் நல்லா இருக்கேண்டா. என்னால இப்பவும் நம்பமுடியலை நீ போன்ல சொன்னது நிஜமான்னு. அப்டியே ஓடிவந்துட்டேன். அண்ணா நீ முன்னாடியே வந்துட்டியா?...” என்றதும் அதற்கு புன்னகையை பதிலாக தந்த செல்வத்தினை கண்டுவிட்டு,

“இது என் அண்ணன் பையன் நிஷாந்த்...” என அவனையும் அறிமுகப்படுத்திவிட்டு தன் நண்பனின் பின்னால் அலைப்புறும் கண்களோடு துழாவினார்.

“நிஷாந்த் நல்லா வளர்ந்துட்டான். ஈஷ்வரா, நீ தேடுற ஆள் உள்ள தான் இருக்கான். வா. நீயும் வாப்பா...” என சிரிப்போடு அந்த ஹோட்டலின் பின்னால் உள்ள கார்டன் ரெஸ்டாரென்ட் பக்கமாக நடையை கூட்டினார் புருஷோத்தமன்.

நிஷாந்திற்கு புருஷோத்தமன் யாரென்று ஓரளவிற்கு தெரியும். பரமேஷ்வரனின் பால்ய சிநேகிதநென்றும் தெரியும். ஆனால் இப்போதைய திடீர் வரவும், தன் தந்தையின் வருகையும், தன் பெரியப்பாவின் அபரிமிதமான மகிழ்வும் எதற்கென்று தான் புரிந்தும் புரியாமல் குழப்பியது.

அங்கே ஒரு டேபிளில் மெனுகார்டில் விழிகளை மேயவிட்டிருந்தவனை நெருங்கிய புருஷோத்தமன், “ஷக்தி...” என அழைக்கவும் நிமிர்ந்தான் கௌரவ் ஷக்திவேல்.

அவர்களை பார்த்து பளீர் என புன்னகைத்தவன், “வாங்க மாமா, எப்டி இருக்கீங்க?... பார்த்து ரெண்டு வருஷம் இருக்கும்ல?...” என உரிமையாக கேட்டவனை வியந்து பார்த்த நிஷாந்தை பார்த்து,

“வா நிஷாந்த். எப்டி இருக்க?...” என அவனை கட்டித்தழுவி விசாரித்துவிட்டு அவனின் காதில், “எப்டி இருக்கா என் சண்டிராணி?...” என்று முணுமுணுக்க அவனை அதிர்ச்சியோடு பார்த்தான் நிஷாந்த்.

அவனை பார்த்து கண்ணடித்தவன், “அப்பறம் மாமா, அப்பா எல்லாம் சொன்னாங்களா? இருந்தாலும் நானும் சொல்றேன். எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் செய்துக்க பரிபூரண சம்மதம்...” என சொல்லவும் பரமேஷ்வரனின் அகமும், முகமும் சந்தோஷத்தில் பொங்கியது.

அந்த சிரிப்பிலேயே நிஷாந்திற்கு புரிந்து போனது. பரமேஷ்வரனுக்கு இதில் முழுசம்மதம் என்று. அதனால் அவசரமாக இடைபுகுந்த நிஷாந்த், “பெரியப்பா அவசரப்படாதீங்க. நம்ம ஹர்ஷூக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க...” என்று ஹர்ஷிவ்தாவின் குணத்தையும் மனதில் வைத்துகொண்டு தான் கேட்டான்.

“நிஷாந்த், நீ அமைதியா இரு. இது நம்ம ஹர்ஷூவோட வாழ்க்கை. பெரியவங்க நாங்க பேசி முடிவெடுப்போம்...” என அதட்டினார் செல்வம்.

ஒரு கணம் யோசனைக்குள்ளான பரமேஷ்வரனின் முகத்தை பார்த்த ஷக்தி, “மாமா, நீங்க அப்பாகூட கிளம்புங்க. அப்பா மத்த விஷயங்களை விவரமா உங்ககிட்ட சொல்லுவாங்க. உங்க திருப்திக்காக உங்க குடும்ப ஜோசியர்க்கிட்ட முதல்ல போய் ஜாதகபொருத்தம் பாருங்க. நானும் நிஷாந்தும் ஷாப்பிங் போய்ட்டு மாமா வீட்டுக்கு போய்டறோம். ஈவ்னிங் வீட்ல மீட் பண்ணலாம்...” என்று அவரை தன் தந்தையோடு அனுப்பி வைத்த ஷக்தி நிஷாந்தின் புறம் திரும்பி புன்னகைத்தான்.

நிஷாந்த்தோ அவனுக்கு புன்னகையை பதிலளிக்காமல் இன்னும் தன் ஆராயும் பார்வையையே தொடர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஷக்தியின் இந்த நடவடிக்கைக்கான காரணம் அவசியம் தெரியவேண்டி இருந்தது. அவனின் எண்ணவோட்டம் புரிந்தது போல ஷக்தி,

“என்ன நிஷாந்த்,கல்யாணம் நடக்கனும்னா பொண்ணுக்கிட்ட சம்மதம் கேட்கனும்னு உங்க பெரியப்பாகிட்ட சொன்னது போல, கல்யாணத்தை நிறுத்தனும்னா உங்க பெரியப்பாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னும் அந்த சண்டிராணிக்கிட்ட சொல்லமாட்டீங்களோ? அவ சொன்னானு உடனே கத்தியோட ஹோட்டலுக்கு கிளம்பி வந்திடறதா?...”என கூர்மையான பார்வையோடு முகத்தில் எந்தவிதமான உணர்வையும் வெளிக்காட்டாமல் அதே சமயம் அழுத்தமாக கேட்டான்.

நிஷாந்திற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. தங்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும் என யோசிக்கவும் மறந்தவனாக கொஞ்சம் பயத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் ஷக்தியை பார்த்தான்.

அவனோ உதட்டில் உறைந்த புன்னகையோடு நிஷாந்தின் பயத்தை உணர்ந்தவன் போல, “பயப்படாதே. நான் யார்க்கிட்டயுமே சொல்லலை. சொல்லவும் மாட்டேன். எனக்கு உங்க வீட்டு பெண்ணை பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டு பெண் கேட்கிறதுல என்ன தப்பு? சொல்லு. அவளோட விருப்பத்தைன்னு பார்த்தா இந்த ஜென்மத்துல கல்யாணம் செய்துப்பான்னு எனக்கு தோணலை. அதுக்கு காரணம் என்னனும் எனக்கு தேவையில்லை. எனக்கு பிடிச்சிருக்கு. தட்ஸ் ஆல். நான் அவளை நல்லா பார்த்துப்பேன்...”என்று அத்தோடு முடித்துக்கொண்டான்.

நிஷாந்தின் மனமோ அங்குமிங்கும் அலைபாய்ந்து சிறிது யோசித்து குழம்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து ஹர்ஷிவ்தாவின் வாழ்க்கைக்கு இது சரியான தீர்வு என்று உணர்ந்து கொண்டவன் ஷக்தியை பார்த்து நட்பாக புன்னகை பூத்து தன் சம்மதத்தை தெரிவித்தான். அதோடு மறக்காமல் பரமேஷ்வரனுக்கு ஹர்ஷிவ்தா செய்துகொடுத்த சத்தியத்தை பற்றியும் ஷக்திக்கு உதவுமென்று கூறி வைத்தான்.

அதாகப்பட்டது, தன் பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்வேனென்றும், அதே நேரம் மாப்பிள்ளை தன்னை வேண்டாமென்று சொன்னாலே தவிர தானாக ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் தான் திருமணம் வேண்டாமென்று சொல்லமாட்டேன் என்றும் பரமேஷ்வரனுக்கு வாக்களித்திருக்கிறாள் ஹர்ஷிவ்தாவர்ஷினி.

“இந்த வாக்கை வச்சு வர மாப்பிள்ளைங்களை எல்லாம் மிரட்டி விரட்டிட்டு இருக்கா. பெரியப்பா கூட எதுக்காக பொண்ணு கேட்டு வரவங்களை பத்தி விசாரிக்கிறதும்? மாப்பிள்ளைக்கிட்ட மிரட்டலா கேள்வி கேட்கிறதும் சரியில்லைன்னு அவ கிட்ட சொன்னதுக்கு எனக்கு பொருத்தமானவரா இல்லையான்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? கேள்விக்கு பயந்துக்கிட்டு பொண்ணு வேண்டாம்னு போனா நானா பொறுப்புன்னு சொல்லி உங்க வாக்கை நான் என்னைக்கு மீறமாட்டேன்னு ஒரு மேல் பூச்சு வேற போடறா...” என நொந்துகொண்டான்.

“ஹா...ஹா..ஹா.. உன்னோட ப்ரெண்ட் சரியான ஆள்தான். உங்க பெரியப்பாவை சரியா லாக் பண்ணிருக்கா. அதனாலதான் மாப்பிள்ளையை இவளே அட்டாக் செய்யறா. ஆனா அவளோட இந்த சத்தியமே அவளுக்கு இந்த விஷயத்துல எதிரா நிற்கபோகுது பாரு...” என்று சிரிக்க அப்போதும் நிஷாந்த்,

“இல்லை அத்தான். எனக்கென்னமோ பயமாதான் இருக்கு. அவ எப்போ எப்படி ரியாக்ட் செய்வான்னே தெரியாது...” என யோசனையோடே கூறவும் தான் பார்த்துகொள்வதாக அவனுக்கு நம்பிக்கையூட்டிய ஷக்தி நிஷாந்தின் அத்தான் என்ற உரிமையான அழைப்பில் நெகிழ்ந்திருந்தான்.

“சரி வா, போய் நிச்சயதார்த்தத்துக்கு புடவை நகையெல்லாம் வாங்கலாம்....” என ஷக்தி எழவும் அவனின் நம்பிக்கையை பார்த்து வாயை பிளந்தான் நிஷாந்த்.

“ஆனாலும் உங்களுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் அத்தான். கொஞ்சம் தைரியத்தையும் மிச்சம் வைங்க. நிச்சயதார்த்தம்னு முடிவே பண்ணிட்டீங்களா? கொஞ்சம் யோசிங்களேன்...”

“எங்கப்பாவுக்காகதான் இன்னைக்கு நிச்சயதார்த்தம். இல்லைனா இன்னைக்கே கல்யாணத்தை முடிச்சிடுவேன். ஓவர் ஸ்பீடு அவரோட உடம்புக்கு ஆகாதுன்னு சொன்னதால கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். அதுமில்லாம அந்த சண்டிராணிக்கு யோசிக்க டைமே குடுக்க கூடாது. சரியான கிரிமினல்...” என ரசனையாக கூறியவனை பிரமிப்பாக பார்த்தான் நிஷாந்த்.
Nice
 
நிச்சயதார்த்தத்திற்கான அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடந்தன. புருஷோத்தமனும், பரமேஷ்வரனும் ஜோசியரிடம் ஜாதகபொருத்தம் பார்த்து அனைத்தும் திருப்தியாக இருக்க வீட்டிற்கு அழைத்து புருஷோத்தமன் கூறியது போல மாலை நிச்சயதார்த்தம், யார் மாப்பிள்ளை, எப்போது வருவார்கள் என்பது பற்றி பரணிக்கும், சரஸ்வதிக்கும் அழைத்து சொன்னவர் மகளுக்கு இதை பற்றி கூறவேண்டாம் என்றும் மறக்காமல் சொல்லிவிட்டார்.

பரணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. காலையில் தான் அவ்வளவு களேபரம் நிகழ்ந்திருக்கிறது. அப்படி இருந்தும் இவரால் எவ்வாறு இவ்வளவு நம்பிக்கயோடு அதுவும் நிச்சயதார்த்தம் வரை செல்ல முடிகிறது என்று யோசித்து யோசித்து தலைதான் வலித்தது. சரஸ்வதியிடம் மெல்ல வீட்டை கொஞ்சம் மகளில் கண்ணை உறுத்தாமல் அலங்காரம் செய்ய ஆலோசனை நடத்தியவர் அதன் படி வேலையாட்களை கொண்டு வேலையில் ஆழ்ந்தார்.

ஹர்ஷிவ்தாவோ நிஷாந்திற்கு மொபைலில் அழைத்து அழைத்து சோர்ந்துபோனவள் அவனை மனதிற்குள் தாளித்தவரே தன் தாயின் மீது கொண்ட கொஞ்சம் பயத்தின் காரணமாக இன்டர்காமில் சாப்பாட்டை மாடிக்கு அனுப்பும் படி பணித்துவிட்டு தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். அதனால் கீழே நடக்கும் விஷயங்கள் எதுவும் அவளை எட்டவில்லை.

மாலை தனக்கு தெரிந்த முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்புவிடுத்துவிட்டு அலுப்புடன் வீடு திரும்பினர் பரமேஷ்வரன், அவரின் கூடவே அவரது அண்ணன் செல்வமும். பரணியையும், சரஸ்வதியையும் தனியாக அழைத்து நடந்த விபரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினார்கள்.

ஷக்தியையும், புருஷோத்தமனையும் பற்றி நன்றாக தெரியும் என்றாலும் அவர்களுக்கு இது எந்தளவிற்கு சரியாக வரும் என்பதை விட திடீரென்று நிச்சயதார்த்தம் என்று சொன்னால் மகளின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போதே அடிவயிறு கலங்கியது. பரமேஷ்வரன் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தார். மனம் முழுவதும் எப்படியாவது இந்த திருமணம் கைகூடிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் வியாப்பித்திருந்தது. ஆனாலும் இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டனர். அந்தளவிற்கு விரக்தி சூழ்ந்திருந்தது அவர்களின் நெஞ்சங்களில்.

இங்கே ஷக்தியோ நேராக நிஷாந்தை அழைத்துகொண்டு பரமேஷ்வரனின் டெக்ஸ்டைல்ஸ்க்கு சென்றவன் நிஷாந்தின் உதவியோடு ஹர்ஷிவ்தாவிற்கு பொருத்தமான அவளுக்கு பிடித்தமான கலரில் நிச்சயதார்த்த புடவையை எடுத்தவன் அதை பில் போட்டுவிட்டு அங்கேயே அதற்கான மேட்சிங் ப்ளவுசையும் தைக்க சொல்ல ஹர்ஷிவ்தாவின் அளவுகள் அங்கிருந்த டெயிலருக்கு தெரியுமென்பதால் அது சுலபமான ஒன்றாகிவிட்டது.

பரமேஷ்வரனின் உத்தரவின் பேரில் துரிதகதியில் சட்டை தைத்து வரப்பட அதற்குள் நகைக்கடை ஒன்றிற்கு சென்று நிச்சயத்திற்கான மோதிரமும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க ஒரு ஆரமும் வாங்கிகொண்டு புடவையையும், ப்ளவுசையும் வாங்கிக்கொண்டு நேராக திருவேங்கடத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டான் நிஷாந்தையும் அழைத்துகொண்டு. தன்னை விட்டு எங்கும் செல்லகூடாது என்ற கட்டளைக்கு உடன்பட்டு நிஷாந்தும் அவனை விட்டு எங்கும் நகரவில்லை.

திருவேங்கடத்தின் வீட்டில் ஷக்தியின் சித்தியும் சித்தப்பாவும் மட்டுமே இருந்தனர். சீர்வரிசை தட்டுகளை எல்லாம் சரிபார்த்துகொண்டிருந்தனர் சகுந்தலாவும் திருவேங்கடமும். அவர்களுக்கு உதவியாக ஷக்தியின் சித்தி வேதவள்ளி, சித்தப்பா குமரன் இருவரும். மாலை நெருங்கவும் புருஷோத்தமனும் வந்துவிட அனைவரும் புறப்பட தயாராக திருவேங்கடமும் சகுந்தலாவும் தயாராகாமல் இருந்தனர்.

காரணம் தெரிந்தும் ஷக்தி அவர்களிடம், “என்னாச்சு மாமா, நீங்க கிளம்பலையா?...” என கேட்டதும்,

“இல்லைப்பா நான் வரமுடியாது. நேத்துதான் கோவத்துல பரமு வீட்டுக்கு போய்அவன்கிட்ட கண்டபடி பேசிட்டு வந்துட்டேன். நாங்க இல்லைனா என்ன? அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல...” நல்லபடியா நிச்சயதார்த்தத்தை முடிச்சிட்டு வாப்பா. உங்க கல்யாணம் நல்லபடியா நடந்தா மருதமலை முருகனுக்கு வேல் செஞ்சு வைக்கிறதா நேத்திக்கடன் போட்டிருக்கேன். எங்க ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போவும் இருக்கும்...” என்று கலங்கிய கண்களை கட்டுப்படுத்திகொண்டே பேச,

“ஏன் மாமா, காதல் கல்யாணம் செய்யவிடமாட்டோம்னு சொந்தபந்தம் எல்லோரும் எதிர்த்து நின்னப்போ அம்மாவுக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருந்து எங்கப்பாக்கு கல்யாணம் செய்து கொடுத்தீங்க. அதிலிருந்து எனக்கொரு தாய்மாமாவா நீங்கதானே முறை எல்லாம் செய்துட்டு வறீங்க. அம்மா இறந்தப்போ கூட அண்ணன்ன்ற உரிமையை விட்டுகொடுக்காம உங்க கடமையை சரியா செய்துட்டு வந்த நீங்க இப்போ என் வாழ்க்கையில முக்கியமான நேரத்துல நீங்க இல்லைனா அம்மாவோட ஆத்மா சாந்தியடையுமா?...” என உடைந்துபோய் கேட்டவனை கட்டிகொண்டு அழுதவரை அதட்டினார் சகுந்தலா.

“ப்ச். என்னங்க இது. நல்லநாள் அதுவுமா நீங்களும் அழுதுட்டு நம்ம புள்ளையையும் அழவைக்கிறீங்க?... போங்க போய் வேற ட்ரெஸ் மாத்துங்க. நான்லாம் கிளம்பிதான் இருக்கேனாக்கும். இது நம்ம வீட்டு கல்யாணம். ஹர்ஷூவும் நம்ம பொண்ணுதானே. நாமே தள்ளி நிக்கலாமா?...” என அந்த சூழ்நிலையை அழகாக கையாண்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு பரமேஷ்வரனின் வீட்டை நோக்கி சென்றார் சகுந்தலா.

இங்கே ஹர்ஷிவ்தாவோ மாலை வரை நன்றாக தூங்கி எழுந்து கீழே வந்தவளுக்கு ஒரே ஆச்சர்யம். “காலையில் மாடிக்கு செல்லும் போது வீடு இருந்த இருப்பென்ன? இப்போது இருக்கும் இருப்பென்ன?, எதற்காக இந்த அலங்காரம். இவங்கலாம் நம்மோட சொந்தக்காரங்களாச்சே? எதுக்காக வந்திருக்காங்க?...” என யோசனையோடே கீழே இறங்கி வந்தாள்.

அவளை பார்த்த பரணி என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் ஹர்ஷிவ்தா வேறு யாரிடமும் பேசும் முன்பாக சரஸ்வதியை அனுப்பி சமாளிக்க சொன்னார். அதன்படி சரஸ்வதியும் சிந்தனையோடே அவளை வேகமாக நெருங்க,

“என்னாச்சு சித்தி, நம்ம வீட்ல எதுவும் விசேஷமா?...” என அவள் வாயாலேயே சரஸ்வதிக்கு நல்ல யோசனையை எடுத்துகொடுத்தாள்.

“ஆமாண்டா கண்ணு. உனக்கு கல்யாண யோகம் சீக்கிரமே கூடிவரனும்னு வீட்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம். அதான் எல்லோரும் வந்திருக்காங்க...” என்றவரை ஊன்றி பார்த்தவள் வேறொன்றும் கேட்காமல் மீண்டும் வீட்டை ஆராய அங்கே ஐயரை காணவும் உண்மைதான் போல என எண்ணிகொண்டாள்.

“ரொம்ப நேரமா தூங்கினதால தலைவலிக்குது. சித்தி காபி வேணும்...” என அடுக்களைக்குள் செல்ல முனைய,

“காபி தானே நானே மாடிக்கு கொண்டுவரேன். நீ போய் குளிச்சிட்டு நல்ல புடவையா எடுத்து கட்டிட்டு வாம்மா...”

“என்னது இப்போவும் புடவையா?...” என அதிர்ந்தவளிடம் இனியும் இங்கே வைத்து பேசமுடியாது என்று அவளை மடிக்கு தள்ளிக்கொண்டே,

“ஆமாம்டா. நீதானே சபையில பூஜையில உட்காரனும். அதுக்குதான். அதுவுமில்லாம காலையில நடந்த விஷயத்துல அப்பாம்மா ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. அவுங்களுக்காக இப்போவாச்சும் இதை கேளுடா...” என்று கெஞ்சலுடன் கூறி முடிக்கவும் ஹர்ஷூவின் அறை வரவும் சரியாக இருந்தது.

பலத்த யோசனைகளுக்கு பின் சரி என்று ஒப்புகொண்டாள். அரைமணி நேரத்தில் கிளம்பி இருக்குமாறு கூறிவிட்டு வந்தபின் தான் சரஸ்வதிக்கு மூச்சே விட முடிந்தது. ஆனாலும் இது எவ்வளவு நேரம்? மீண்டும் காபியோடு ஹர்ஷிவ்தா தயாராகிவிட்டாளா என்று நோட்டம் விட்டுவிட்டு அதில் திருப்தி அடைந்தவராக பரணியிடம் அந்த தகவலையும் சேர்ப்பித்து விட்டார்.

கௌரவ் ஷக்திவேல் தன் குடும்பம் சகிதமாக கம்பீரமாக நடந்துவர அவன் கையை பற்றிக்கொண்டு அருகில் கலவரம் கண்களை மீறி வெளியே தெரிய நடுக்கத்தோடே உடன் வந்தான் நிஷாந்த்.

திருவேங்கடம் வந்ததில் அப்படி ஒரு சந்தோஷம் பரமேஷ்வரனுக்கு. சகுந்தலாவை இழுத்து தன்னோடு நிறுத்திகொண்டார் பரணி. திருவேங்கடத்திற்கு கோபமே இருந்தாலும் நேற்று தான் பேசியதை மறந்துவிட்டு வெள்ளை சிரிப்போடு தன்னோடு பேசும் தன் நண்பனிடம் பாராமுகத்தை காட்ட மனம் வரவில்லை. அவரும் இயல்பாகவே இருந்தார்.

அனைவரையும் வரவேற்று அமரவைத்து சிலபல விசாரிப்புகளுக்கு பின் நிச்சயதார்த்தத்தை நடத்த ஹர்ஷிவ்தாவை அழைத்து வர சொன்னார் ஐயர். ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பரணியும் சரஸ்வதியும் அவளை அழைத்துவர சென்றனர். அங்கிருந்தவர்களில் ஹர்ஷிவ்தாவின் குணமறிந்தவர்கள் அனைவருக்குமே, ஏன் புருஷோத்தமனுக்கும் கூட உள்ளூர ஒரு படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே சென்றது. ஆனால் ஷக்தியோ மிக இலகுவாக அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் மாடியிலிருந்து பெண்ணை அழைத்துகொண்டு கீழே வரும் அரவம் கேட்டும் ஷக்தி தன் விழிகளை தன்னவளை நோக்கி திருப்ப முனையவில்லை. அவளுக்கோ இறங்கி வரும் போதே இது எதற்கான ஏற்பாடு என்று தெள்ள தெளிவாகியது. உள்ளுக்குள் கடுகடுத்துகொண்டே வந்தவள் நமஸ்காரம் செய்யாமல் கூட அலட்சியமாக நின்றாள்.

பரணி,”ஹர்ஷூ, எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணு...” என்று மெல்ல காதில் கூறியும் திமிராகவே நின்றாள்.

ஷக்தியோ அதை கண்டுகொள்ளாமல் திருவேங்கடத்தை ஒரு பார்வை பார்க்க, அவர், “ஐயரே நீங்க நிச்சயப்பத்திரிக்கையை வாசிங்க...” என சப்தமாக ஹர்ஷிவ்தாவை முறைத்துக்கொண்டே கூறினார்.

அதில் மேலும் எரிச்சலடைந்தவள் தன் தந்தையின் அருகில் போய் அமர்ந்துகொண்டு, “என்னப்பா இது? என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீங்க சொல்லலை?...” என பரமேஷ்வரனிடம் முணுமுணுக்க அதை கண்டுகொள்ளாமல் அவர் தாம்பூலம் மாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.

அவர் திரும்ப மாட்டார் என தெரிந்துகொண்டவள் பல்லை கடித்தவாறே ஷக்தியை பார்க்க அவனோ இவளின் பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தான். அதை தவறாக கணித்த ஹர்ஷூ, “ஒ சார் வெளில நம்மை பத்தி விசாரிச்சிருப்பார் போல. அதான் புள்ள நம்மளை பார்க்க பயப்புடுது போல...” என கித்தாய்ப்பாக எண்ணிக்கொண்டே அவனருகில் அமர்ந்திருந்த நிஷாந்தை பார்த்து முறைத்தாள். அவனோ கெஞ்சல் பார்வை பார்த்தான்.

இதற்கு மேலும் தாமதித்தால் அனைத்தும் கைமீறிவிடும் என நினைத்தவள் வேகமாக எழுந்து நின்று, “ எனக்கு இந்த மாப்பிள்ளை சாரோட கொஞ்சம் பேசனும். அந்த ரூம்க்கு வர சொல்லுங்க...” என கூறிவிட்டு விடுவிடுவென்று அவளின் ராசியான விருந்தினர் அறைக்குள் சென்று மறைந்தாள். அவனிடம் மன்னிப்பை வேண்டும் பார்வையை விட்ட பரமேஷ்வரனுக்கும், அனைவருக்கும் பார்வையாலே தைரியம் சொல்லிவிட்டு தானும் அந்த அறைக்குள் சென்றான்.

அங்கே இவனை முறைத்தவண்ணம் நின்றிருந்தாள் அவனவள். அதை அசால்ட்டாக எதிர்க்கொண்டவன் அவளை பார்வையாலேயே ஊடுருவ அதிலிருந்த ஏதோ ஒன்று சில நொடிகள் அவளை கட்டிப்போட்டதென்பது தான் உண்மை. சபையில் கண்டுகொள்ளாமல் இருந்தவன், இங்கே வந்ததும் இப்படி ஆழ்ந்த பார்வை பார்த்ததில் கோவமடைந்தவள்,

“ஹலோ மிஸ்டர், எதுக்காக இப்படி பார்க்கறீங்க?...” என அந்த கொந்தளிப்பு குறையாமல் கேட்டதும்,

“என்னோட பேர் மிஸ்டர் இல்லை. கௌரவ் ஷக்திவேல். அதுமட்டுமில்லை நீயும் தான் என்னை பார்த்த. நான் எதுவும் சொல்லலையே?...” என திருப்பிக்கொடுத்தவன் தப்பி தவறி கூட தன் ரசனையை, அவள் மீதான தன் விருப்பத்தை அவளுக்கு துளியளவும் காட்டவில்லை.

“ஹலோ நான் உங்களை பார்க்கிறதும் நீங்க என்னை பார்க்கிறதும் ஒண்ணா? ப்ச், அதை விடுங்க. எனக்கு இந்த நிச்சயத்தில இஷ்டம் இல்லை. என்னை பிடிக்கலைன்னு நீங்களே சொல்லிட்டு உங்க கூட வந்தவங்களை கூட்டிட்டு உடனடியா இந்த வீட்டை விட்டு கிளம்புற வழியை பாருங்க...”

“இன்னும் நிச்சயதார்த்தமே முடியலை. அதுவும் இல்லாம, நான் ஏன் உன்னை பிடிக்கலைன்னு சொல்லனும்? எங்க வீட்ல எல்லாருக்குமே உன்னை பிடிச்சிருக்கு. பொய் சொல்லி எனக்கு பழக்கமில்லை. இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ வேணும்னா போய் சொல்லேன்...” என அவளது தற்போதைய திட்டத்தை தெரிந்துகொள்ள மனதை படிக்க முயன்றான்.

“அது...அதெல்லாம் சொல்லமுடியாது. இந்த நிச்சயமே நடக்காதுன்னு சொல்றேன். ஏன் நீங்க கல்யாணத்தை பத்தியே பேசறீங்க? ப்ளீஸ். நிறுத்திடுங்க...” அவனின் பார்வையை உணர்ந்ததுமே தெரிந்து விட்டது ஹர்ஷூவிற்கு நம் மிரட்டல் இவனிடம் செல்லாது என்பது. அதனால் தணிந்து பேச முயன்றாள்.

“ம்ஹூம். இந்த கல்யாணம் நடந்தே ஆகனும். எங்கப்பாவுக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன். அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. நீதான் அவரோட மருமகள்ன்னு எப்போவோ முடிவு பண்ணிட்டார். அவரோட முடிவுதான் என்னோட முடிவும். அதை மாத்த முடியாது...” என்றவனது வார்த்தையில் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு தனக்கு சாதகமான விஷயத்தை பிடித்துகொண்டாள்.

“அப்போ உங்கப்பாவோட சந்தோஷத்துக்காகத்தான் இந்த சம்பந்தம். அப்டித்தானே?...” என கொஞ்சம் குரலில் உற்சாகம் தெறிக்க கேட்டவளை ஒரு நமுட்டு சிரிப்பை வாயினுள் அசைபோட்டபடி அமைதியாக தலையை மட்டும் ஆட்டினான்.

இப்போது எள்ளலாக அவனை பார்த்தவள், “சீ மிஸ்டர் கௌரவ் ஷக்திவேல், எனக்கு லைப் பாட்னரா வரபோறவர் என்னை விரும்பித்தான் மேரேஜ் செய்துக்கனும். யாரோட ஆசைக்காகவும், நிர்பந்தத்திற்காகவும் இல்லை. இன்னைக்கு உங்கப்பாவுக்காக அவரோட ஆசைக்காக என்னை கல்யாணம் செய்துக்கற நீங்க நாளைக்கே உங்கப்பாவுக்கு பிடிக்காம போனா என்னை கைவிடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம் சார்?...” என அவனை மடக்கிவிட்ட குஷியில் கேட்க,

“ஓஹ் ரியலி!!!.... இதுதான் உன் ப்ராப்ளமா?... நான் உன்னை விரும்பி தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற உன்னோட ஆசையை இவ்வளவு வெளிப்படையா சொன்னதுக்கு தேங்க்ஸ். எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. நானும் உன்னை விரும்பித்தான் மேரேஜ் பண்ணிக்க போறேன். போதுமா?...” என அப்பாவியாக கண்கள் மின்ன கேட்டவனை அடப்பாவி என்பது போல விழி விரித்து திகைத்து போய் பார்த்தாள்.

இதுதான் சமயமென்று அவனுக்கு அவளை பார்த்தவுடன் தோன்றிய அந்த உணர்வை அவளின் விழிகளின் வழியாக அவளின் இதயத்திற்குள் கடத்த முயன்று அதில் வெற்றிபெறும் தருவாயில் அவளது உள்ளுணர்வு விழித்துக்கொண்டதும் அவளிடம் தலைதூக்கிய அலட்சியபாவத்தால் தானும் தன்னிலை அடைந்தான்.

இதற்கு மேல் பேசி பயனில்லை என்றுணர்ந்தவன், “ இந்த கல்யாணம் நடக்கும் நடந்தே தீரும், உன்னை காதலிச்சுதான் கல்யாணம் செய்யனும்னா நான் தயார்...”

“கண்டிப்பா நீங்க நினைக்கிறது நடக்காது. அப்படியே நடந்தாலும் அது உங்களுக்குத்தான் ஆபத்தா முடியும்...” என்று எச்சரிக்கை குரலில் கூறவும் அவளை நெருங்கியவன் தன் மூச்சுக்காற்றை உணரும் வகையில் கொஞ்சமே இடைவெளிவிட்டு நின்று,

“உன்னால முடிஞ்சதை பாரு. ஆனா எதுவா இருந்தாலும் என் மனைவியாகி என் கூடவே இருந்து இதற்கு என்னை பழிவாங்கு. உன்னைத்தான் கல்யாணம் செய்துக்கனும்ன்ற என்னோட முடிவு என்னைக்குமே மாறாது. சரியா?...” என்று சவால் விட்டான்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா...” என கத்தியவளை இன்னும் நெருங்க கொஞ்சமும் பின் வாங்காமல் சீற்றமுடன் நின்றவளை வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனாலும் விட்டுத்தராமல்,

“எதுக்காக கத்துற, நான் என்ன அவ்வளவு தூரமாவா இருக்கேன். வேணும்னா சொல்லு, இன்னும் பக்கத்தில வரேன். இவ்வளவு போதுமா?...” என நெருக்கத்தை கூட்டிக்கொண்டே அவளை அடுத்தடுத்து மண்ணை கவ்வ வைத்தான்.

அவனிடம் தோற்றுப்போன உணர்வு தன்மேல் கழிவிரக்கத்தை உண்டாக்க அந்த உணர்வை அடியோடு வெறுத்தவள் இப்படி தன்னையும் ஒருத்தன் மிரட்டி பணிய வைப்பான் என்று கற்பனையிலும் எண்ணவில்லை. இதற்கு மேலும் பேசினால் மேலும் ஏதாவது விவகாரமாக செய்துவிடுவான் என அவளின் பெண்மனம் எச்சரிக்க மனமே இல்லாமல் இரண்டடி பின்வாங்கினாள்.

அப்பாவிடம் குடுத்த வாக்கை மீறி தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என உணர்ந்து கொண்டவளுக்கு தெரிந்துவிட்டது இவனிடம் தன் பாட்சா பலிக்காது என்றும், ஷக்தி இந்த கல்யாணத்தை நடத்தியே தீருவான் என்றும். திருமணம் என்றதும் அவளுக்கும் சில பயவிதைகள் முளைக்க தொடங்கியது. ஆனாலும் அதையெல்லாம் பெரிதுபண்ணினால் அவளின் கெத்து என்னாவது?

கலங்க இருந்த கண்களை தடுத்து வலுக்கட்டாயமாக மனதை இறுக்கமாக்கி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவளும் முடிவுக்கு வந்துவிட்டாள். இனி நடப்பது நடக்கட்டும் என்று. ஆனால் இவனை சும்மாவா விடுவது? என நினைத்துக்கொண்டே அவனை நிமிர்ந்துபார்க்க சிறு நூலிழையில் அவனும் அவளருகிலேயே தான் நின்றிருந்தான்.

சட்டென்று பின்வாங்கியவள் தடுமாற அவளை தாங்கி பிடிக்க கைகொடுத்தவனை மீண்டும் அலட்சியப்படுத்தியவள் தன்னை சுதாரித்துகொண்டு நிலையாக நின்றாள். அதுவரை அவளது முகபாவங்களை கவனித்தவன் அவளது போராடி களைத்த தோன்றம் அவனை வாவென்று அழைக்க, “ம்ஹூம் இனிமேலும் நின்னா எசகுபிசகா எதாச்சும் செஞ்சு அதுவே கல்யாணத்தை நிறுத்த இந்த சண்டி ராணிக்கு சாதகமா போய்டும்..” என எண்ணிகொண்டவன்,

தொண்டையை செருமிக்கொண்டு, “ ம்ம் கல்யாணத்துக்கு தயாராகிட்டன்னு நினைக்கிறேன். ஓகே. வா போகலாம்...” என்று அழைத்துவிட்டு முன்னால் நடந்தவன், கதவை அடைந்து மீண்டும் அவளை திரும்பி பார்த்து,

“இன்னைக்கும் நான் அதே ஹோட்டல்ல அதே ரூம்ல தான் இருப்பேன். அதுக்குன்னு கத்தியோட பால்கனி வழியா மேல ஏறி வரவேண்டாம். போன் பண்ணு நானே உன்னை கூட்டிட்டு போறேன்...” எனவும் அவனை முறைத்துகொண்டிருந்தவள் ஷக்தி கூறியதில் மொத்த சக்தியும் வடிந்து போய் நின்றாள்.

அதைவிட இன்னும் பதினைந்து நாளில் திருமணம் என்பதுதான் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படியாவது இதை நிறுத்தவேண்டுமே என மூளையை எவ்வளவு கசக்கியும் அவளுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. யோசித்து முடிப்பதற்குள் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் அதை நடத்தி முடிப்பதற்குள் அனைவரையும் தவிக்கவிட்டாள்.

அடாவடியின் மொத்த உருவமான தன் மனைவியானவளை கௌரவ் ஷக்திவேல் எப்படி சமாளிக்க போகிறான்?

நதி பாயும்....
ice
 
Top