Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu - 4 ( Re-run )

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
தடையில்லை நதியே பாய்ந்தோடு

நதியோட்டம் – 4

கௌரவ் ஷக்திவேல் அறையை விட்டு சென்றதும் கால்கள் தள்ளாட அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் தலையை பிடித்துக்கொண்டாள். இந்த கல்யாணத்திலிருந்து எப்படி தப்பிப்பதென்று ஒன்றுமே விளங்கவில்லை.

“இப்போதைக்கு அமைதியாக இருப்போம், நிச்சயம் முடிந்ததும் கல்யாணம் வரை எப்படியும் மூன்று நான்கு மாதங்கள் நேரம் இருக்கும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். எந்த காரணத்தை கொண்டும் ஷக்தியிடம் தான் தோற்று விட கூடாது...” என சூளுரைத்து கொண்டவள் அதன் பின்னே தெளிந்தாள்.

இப்படியாக இவள் யோசனையில் இருக்கும் போதே சகுந்தலாவும் சரஸ்வதியும் ஹர்ஷிவ்தாவை அழைத்துச்செல்ல வந்தனர். அவர்களோடு எந்தவிதமான முகத்திருப்பலும் இல்லாமல் உடன் சென்று சபையில் கொடுத்த நிச்சயதார்த்த புடவையை வாங்கி அணிந்து கொண்டு வந்து அனைவரின் முன்னாலும் நமஸ்கரித்துவிட்டு ஷக்தியின் அருகில் அமரவைக்கப்பட்டாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க கூட விரும்பாமல் தன் உள்ளத்தின் கொதிப்புகள், பிடித்தமில்லாமை, இயலாமை, ஏதோ ஒரு சஞ்சலம் என மொத்த உணர்வுகளும் வெடித்து வெளியேறத்துடித்து பேயாட்டம் போட அனைத்தையும் மனத்தினுள் அடக்கிவைத்தாள். அதனால் அவளின் இதயம் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியது.

இந்த போராட்டம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் அமைதியாக நடப்பவை அனைத்திற்கும் உடன்பட்டாள். அனைவருக்கும் இவளது அமைதியும், எதிர்ப்பின்மையும் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தாலும் பயத்தையும் சேர்ந்தே தந்தது. “எப்போது என்ன செய்வாளோ?...” என தவித்துக்கொண்டே தான் இருந்தனர்.

“மாப்பிள்ளை பொண்ணுக்கு மோதிரத்தை போடுங்கோ...” என ஐயர் கூறியதும் ஷக்தி நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து ஹர்ஷிவ்தாவின் விரலில் அணிவிக்க அவளும் அதையே இயந்திரம் போல திருப்பி செய்தாள்.

“எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. கல்யாணத்தேதியை இன்னொரு முறை சொல்லிடுங்க ஐயரே...” என ஹர்ஷூவை பார்த்துக்கொண்டே அவளது கவனத்தை காவரவென்றே திருவேங்கடம் சொல்ல அவர் எதிர்பார்த்தது போல எந்தவிதமான மறுப்பும் ஹர்ஷிவ்தாவிடம் இருந்து எழவில்லை.

“அதுக்கென்ன பேஷா சொல்லிடலாமே. இன்னில இருந்து பதினைந்தாவது நாள் முகூர்த்த நாள். ஆகவேண்டிய வேலையெல்லாம் சுருக்குன்னு பாருங்கோ. நான் கிளம்பறேன். நாழியாகிடுத்து...” என கூறிவிட்டு எழுந்துகொள்ளவும் அவரை அனுப்பிவைக்க செல்வம் உடன் சென்றார்.

வந்தவர்கள் அனைவரையும் சாப்பிடவைத்து கவனித்து அனுப்பும் வரை பம்பரமென சுழன்றுகொண்டுதான் இருந்தனர் ஹர்ஷிவ்தாவின் குடும்பத்தினர். ஷக்தியிடம் மாற்றி மாற்றி யாராவது வந்து பேசிகொண்டுதான் இருந்தனர். அதனால் சிலையாக அமர்ந்து தான் போட்டுவிட்ட மோதிரத்தையே வெறித்துக்கொண்டிருந்த ஹர்ஷிவ்தாவை பார்வையாளனாக மட்டுமே பார்த்துகொண்டிருந்தான்.

அவனுக்கோ எங்கே மோதிரத்தை கழட்டி எறிந்துவிடுவாளோ என்று மனதில் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் வெளியே காண்பித்து கொள்ளாமல் அப்போதும் கெத்தாய் அமர்ந்திருந்தான். வந்திருந்த விருந்தினர்கள் சென்றதும் வீட்டினர் மட்டுமே மிஞ்சினர்.

திருவேங்கடம் புறப்படுவதாக சொல்லவும் அவரருகில் வந்த பரமேஷ்வரன், “டேய் திரு, என் பொண்ணுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்டா. இதைத்தவிர என்னால என்ன செய்யமுடியும்னு தெரியலை...” என அதற்குமேல் குற்றவுணர்ச்சியில் பேசமுடியாமல் தவித்தார்.

“விடுடா பரமு, இதுதான் நடக்கனும்னு இருக்கும் போது நாம என்ன செய்ய?. எனக்கு கோவம் இருக்கத்தான் செய்யுது. கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை. நேத்து நானும் கொஞ்சம் அதிகமாத்தான் பேசிட்டேன். ப்ருத்விக்கு இப்போ கல்யாண யோகமில்லைன்னு நினச்சு மனசை தேத்திக்க வேண்டியதுதான். அவன் மேலையும் தப்பு இருக்கத்தானே செய்யுது. ஹர்ஷூவை சொல்லி மட்டும் என்னாகிடும். அவளும் என்னோட பொண்ணுதானே. இப்படி செஞ்சுட்டாளேன்னு நான் அவளை விட்டுக்கொடுத்துட முடியுமா?...” என்றவர்,

“சரி விடு. கல்யாண வேலை தலைக்குமேல இருக்கு. எல்லோரும் சேர்ந்து வேலை பார்த்தாதான் எந்த குறையுமில்லாம பெருசா செய்யமுடியும். அதனால நீ எதுனாலும் என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய். அப்போதான் நமக்கு டென்ஷன் இல்லாம இருக்கும். புரியுதா?...”என பெருந்தன்மையாக பேச அங்கே நண்பர்கள் இருவருக்கும் இருந்த அன்னியோனியம் மீண்டும் தலைதூக்கி குடும்பங்கள் ஒன்றாகியது.

ஹர்ஷிவ்தாவையே வட்டமிடும் ஷக்தியின் பார்வையை உணர்ந்த திருவேங்கடம், “சரி சரி, பேசிக்கிட்டே இருந்தா நேரம் ஆகிடும். நாம கிளம்புவோம். வாங்க வாங்க...” என இருவருக்கும் தனிமையை கொடுத்துவிட்டு அனைவருக்கும் கண்சமிஞ்சை காட்டி வெளியில் அழைத்து வந்துவிட்டார்.

அப்பெரிய வரவேற்பறையில் இருவருமட்டும் இருக்க ஷக்தி அவளை நெருங்கி, “நான் கிளம்பறேன் ஹர்ஷிவ்தா. கல்யாணத்துல மீட் பண்ணலாம்...” என கூறவும் சிலைக்கு உயிர்வந்தது போல நிமிர்ந்து அவள் அவனை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என ஷக்திக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.

புரியாமல் பார்த்தவனிடம், “பெஸ்ட் ஆஃப் லக்...” என்றாள் குரலில் வரவழைத்துகொண்ட திடத்தோடு. அதில், “இந்த கல்யாணத்தை எப்படியும் நிறுத்துவேன். உன்னால் முடிந்ததை பார்...” என்னும் சவால் இருந்தது.

அதுவரை அவளது உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தை கவலையோடு பார்த்தவன் இப்போது நிமிர்வோடு அவள் கூறிய வாழ்த்து எதற்கென்று உணர்ந்து புன்னகைத்தான். “அதானே பார்த்தேன். இவ அடங்கமாட்டாளே?...” என ரசனையோடு நினைத்துக்கொண்டே,

“இன்னும் பதினைந்து நாள் மட்டுமே இருக்கு கல்யாணத்திற்கு. அதுவுமில்லாமல் நான் உனக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லுவேன்னு எதிர்பார்க்காதே, உன்னால முடியும்ன்ற விஷயத்திற்கு நீ கேட்காமலே வாழ்த்துவேன். ஆனா இந்த விஷயத்தில நிச்சயம் நீ நினைக்கிறது நடக்காது. இதுக்காக நான் ஏன் ஒரு விஷ் வேஸ்ட் பண்ணனும்?...”

“இவ்வளவு தன்னம்பிக்கையா உங்களுக்கு? அதையும் தான் பார்ப்போமே?... இன்னும் பதினைந்து நாள் இருக்கே. அது போதும். உங்களை என்ன செய்றேன்னு பாருங்க...” என அவனை தீர்க்கமாக பார்த்து எச்சரிக்க மீண்டும் அவன் வியந்துதான் போனான்.

இவ்வளவு நடந்தும் அவளது முகத்தில் தன் மீதான சிறு சலனம் கூட தெரியவில்லையே?... தான் அவளை ஈர்க்கவில்லையோ? கொஞ்சமும் சளைக்காமல் இப்படி ஒரு பார்வை வீச்சு. சத்தியமா நான் உன்னை மிஸ் பண்ணவே மாட்டேன் என்ற தீர்மானத்தோடு,

“ஐ ஆம் வெய்ட்டிங்...” என கேலியாக கூறிவிட்டு கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே விழியகற்றாமல் பார்த்துகொண்டிருந்தவள் அனைவரும் கிளம்பி செல்லும் அரவம் கேட்டதும் உடலும் மனமும் ஒரே சேர களைத்துபோக அமைதியாக மீண்டும் அதே இடத்தில் அமர்ந்துவிட்டாள்.

அவளின் இந்த நிலையை பார்த்த நிஷாந்த் வேகமாக அவளருகே வந்து, “ஹரி டேய், என்னடா? ஹர்ஷூமா. இங்க பாரேன்...” என அவளை பிடித்து உலுக்கினான். அதில் ஏதோ நினைவு வந்தவளாக,

“நிஷூ அவங்களாம் பெயிலுக்கு அப்பீல் செய்திருக்காங்களாம். காலையில லாயர் போன் பண்ணி சொன்னார். அது நடக்ககூடாது. தீட்சண்யாவை சேர்ந்த ஒருத்தரும் எக்காரணத்தை கொண்டும் வெளில வரவே கூடாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவளை சேர்ந்தவங்க வெளி உலகத்தை பார்க்கவே கூடாது. அப்படி எதாச்சும் நடந்தா அவங்க அத்தனை பேரையும் கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போய்டுவேன். அவங்க வரகூடாது. வரவே கூடாது...” என வெறிபிடித்தவள் போல கத்திகொண்டே மயங்கி சரிந்தாள்.

காலையில் லாயர் நரேந்திரன் பேசியது, மாலை நடந்த நிச்சயதார்த்தம் என மொத்தமாக சுழன்றடித்து அவளை நிலைகுலைய செய்து சாய்த்துவிட்டது. நரேந்திரனிடம் பேசியதிலிருந்து தோன்றிய அலைப்புறுதலும், மனதில் அழுத்திய பழைய எண்ணங்களும், இப்போது தன் விருப்பமின்றி நிகழ்ந்த விசேஷமும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமித்து ஆழ்ந்த மயக்கத்திற்கு கொண்டு சென்றது.

ஹர்ஷிவ்தாவின் இந்த கோலம் அனைவரையுமே பதட்டதிற்குள்ளாக்கியது. நொடியும் தாமதிக்காமல் அவளை தூக்கிகொண்டு நிஷாந்த் வாசலை நோக்கி ஓடினான். அதற்குள் செல்வம் காரை தயாராக எடுத்து வரவும் அந்த கார் மருத்துவமனை நோக்கி வேகமாக சீறிப்பாய்ந்தது.

ஹாஸ்பிட்டல் வளாகத்தில் அனைவருமே பிரமை பிடித்தவர்கள் போல அமர்ந்திருந்தனர். அதுவரை இருந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது.

“என்னங்க இது? இப்போதுதான் நம்ம பொண்ணுக்கொரு விடிவுகாலம் பொறந்திருக்குன்னு நினச்சா அதுவே அவளுக்கு தீரா துயரத்தை குடுத்துடும் போலையே?. இந்த கல்யாணம் அவசியமா?...” என கவலையோடு கேட்ட பரணியை கண்டிக்கும் தொனியில் பரமேஷ்வரன் பார்க்க,

“பரணிம்மா, என்ன பேசறீங்க? ஹர்ஷூக்கு இந்த நிச்சயத்தால ஒன்னும் இப்படி ஆகலை. அவ மயங்கி விழறதுக்கு முன்னால என்ன சொன்னான்னு கவனிச்சீங்க தானே?... லாயர் நரேந்திரன் பேசிருக்காரு. அதை பத்தி தான் காலையில இருந்து யோசனை செய்துட்டு இருந்திருப்பா. இதுக்கும் கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவக்கிட்ட இது போல எதுவும் உளறாம இருங்க...” என கொஞ்சம் கடுமையாகவே சொல்லிவிட்டான்.

“இப்போதான் நிச்சயம் வரைக்கும் சம்மதிச்சு வந்திருக்கா. ஷக்தி அத்தான் போல ஒரு ஜெனியூன் பர்ஸன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். நம்ம ஹர்ஷூக்கு அவர்தான் பொருத்தமாவும் இருப்பாரு. அவளோட வாழ்க்கைக்காக நாம இதெல்லாம் தாங்கித்தான் ஆகனும். பெரியப்பாவே தைரியமா இருக்காரு...” என்றவனது பேச்சில் இந்த திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும், ஹர்ஷூவின் வாழ்க்கை சீராக வேண்டும் என்ற முனைப்பு அதிகமாகவே தெரிந்தது.

தன் மகனின் பேச்சில் பெருமிதம் கொண்டார் செல்வம். அவரை போலவே பரமேஷ்வரனும் நிஷாந்தை அருகில் அழைத்து அவனது சிகையை வருடிகொடுத்தார். பரணிக்கும் சரஸ்வதிக்கும் நிஷாந்தின் பேச்சில் உள்ள நியாயம் புரியத்தான் செய்தது.

அவர்களின் குடும்ப மருத்துவரான டாக்டர் தேவிகா ஹர்ஷிவ்தாவை அனுமதித்திருந்த அறையை விட்டு வெளியே வந்தவர், “என்னாச்சு ஈஷ்வர் சார்? நாலு வருஷம் கழிச்சு மறுபடியும் இப்படி ஒரு மயக்கம்?... என்ன நடந்தது?...” எனவும் பரமேஷ்வரன் தயங்க அதை புரிந்துகொண்டவர் போல,

“உள்ளே வாங்க சார். நீங்களும் வாங்க...” என அனைவரையும் அழைத்துகொண்டு ஹர்ஷிவ்தாவின் அறைக்குள் உள்ள இன்னொரு அறையில் போய் அமர்ந்தார். அனைவரும் வரவும் நர்ஸை வெளியே அனுப்பி விட்டு பரமேஷ்வரன் கூறுவதை மிக கவனமாக கேட்டுக்கொண்டார்.

“ஆஹ, இன்னும் ஹர்ஷிவ்தா பழைய விஷயங்களில் இருந்து மீண்டு வரலை. அப்டிதானே?. ஆனா இதுல ஒரு நல்ல விஷயம் என்னனா நீங்க அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்திருக்கிறதுதான். திருமண வாழ்க்கை அவளுக்கொரு மாற்றத்தை கொடுத்து நம்ம ஹர்ஷூவை நிச்சயம் மாற்றும்னு நம்புங்க...” என ஆறுதலாக கூறினார்.

“எங்க டாக்டர் இவ பன்ற அழிச்சாட்டியம் கொஞ்சமில்லை. வரும் வரன்களை எல்லாம் தட்டிவிட்டு இவளோட வாழ்க்கையை இவளே பாழாக்கிட்டு இருக்கா...” என சிறு தேம்பலோடு பரணி உடைந்து போய் கூற,

“பரணி மேம், நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? தனக்கு ஏற்ற வரன் வரனும்ன்றதுக்காக கூட மத்த வரங்கள் தட்டிபோய்டுச்சுன்னு பாசிட்டிவா நினைங்களேன். இந்த லைப் நிச்சயம் ஹர்ஷூவோட மனசுல எறிஞ்சிட்டு இருக்கிற தீயை அணைக்கும். நீங்க கவலைபடாதீங்க...” என்றவர்,

“இன்னைக்குதான் நிச்சயம் முடிஞ்சிருக்கு. அதனால யாருக்கும் இதை சொல்லவேண்டாம். இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணம் வேற. நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் இங்க இருக்கட்டும். இன்னொருமுறை எல்லா டெஸ்டும் எடுத்த பின்னால டிஸ்சார்ஜ் பண்ணிடறேன். தைரியாமா இருங்க. ஹர்ஷூவை இதிலிருந்து சீக்கிரமே வெளில கொண்டுவந்திடலாம்...” என தைரியம் கொடுத்தார் தேவிகா.

பரணியும், நிஷாந்தும் ஹாஸ்பிடலில் இருந்துகொண்டு பரமேஷ்வரன், செல்வம், சரஸ்வதியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

“வீட்டிற்கு செல்லமாட்டேன்”... என்று பிடிவாதம் பிடித்த பரமேஷ்வரனை செல்வம் தான் அதட்டி காலையிலிருந்து ஏற்பட்ட அலைச்சல் உடம்பிற்கு முடியாமல் போய்விடும் என்று எடுத்துக்கூறி உடன் அழைத்து சென்றார்.

ஹர்ஷிவ்தாவோ இடையில் இரண்டுமுறை சுயநினைவு வரவும், மீண்டும் மயங்கவுமாக இருந்தாள். தேவிகாவும் அவளை தன் நேரடி கண்காணிப்பில் வைத்து பார்த்துகொண்டார்.

இதில் மீண்டும் கலவரமடைந்த பரணி, “அந்த தீட்சண்யாவால என் பொண்ணோட வாழ்க்கையே திசை மாறி போய்டுச்சே. என் பொண்ணு அந்த கொடுமையை நித்தமும் நினைச்சு நினைச்சு தனக்குள்ளேயே மறுகி மறுகி போராடிட்டு இருக்காளே?...இதுக்கு ஒரு விடிவே கிடையாதா?...” என மீண்டும் கண்ணீரை உகுத்தவரை பார்த்த நிஷாந்திற்கும் பழைய நினைவில் அடக்கமாட்டாத கொலைவெறியில் தாடை இறுகியது.

“இதுக்கெல்லாம் காரணமான அந்த குடும்பத்தை சும்மா விடகூடாது நிஷாந்த். அந்த குடும்பம் நல்லாவே இருக்கமாட்டாங்க. நிச்சயம் அவங்க வெளில வரக்கூடாது. என் பொண்ணு கொலைகாரியா மாறுவதை என்னால பார்க்க முடியாது. அவங்க வெளில வந்துட்டா ஹர்ஷூ சொன்னதை செய்வா. எனக்கு என் பொண்ணு நல்லா இருக்கனும். அதுக்கு எதுவும் செய்ய நான் தயாரா இருக்கேன். என்ன செலவானாலும் பரவாயில்லை. தீட்சண்யாவை சேர்ந்த ஒருத்தரோட மூச்சுக்காத்தும் வெளி உலகத்துல கலந்துட கூடாது...” என தீவிரமாக கூற,

அவர் பேசியதில் “பரணிம்மா நீங்க நல்லா இருந்தாதான் ஹர்ஷூவை பார்த்துக்க முடியும். நீங்க முதல்ல அமைதியா இருங்க. ஹர்ஷூ எழுந்ததும் இந்த விஷயத்தை பத்தி திரும்ப பேசி அவளை குழப்பிடாதீங்க...” என்றவன் அவருக்கு குடிக்க ஏதாவது சூடாக வாங்கி வருவதாக சொல்லி வெளியேறினான்.
 
அவன் சென்ற சில நொடிகளில் புயல் போல உள்ளே நுழைந்தான் கௌரவ் ஷக்திவேல். இந்த நேரத்தில் அவனை பார்த்ததும் என்ன சொல்லி சமாளிக்க என திகைத்துப்போனார் பரணி.

“ஹர்ஷூக்கு என்னாச்சு அத்தை?... நாளைக்கு ஹர்ஷூவை வெளில அழைச்சிட்டு போகலாமான்னு கேட்க வீட்டுக்கு திரும்ப வந்தேன். அப்போதான் வாட்ச்மேன் சொன்னார். ஏன் எனக்கு யாருமே போன் பண்ணலை?...” என கேட்டுக்கொண்டே சோர்ந்துபோய் படுத்திருந்த ஹர்ஷிவ்தாவின் முகத்தை கவலையோடு பார்த்தது அவனது விழிகள்.

உண்மையில் அவன் ஹர்ஷிவ்தாவை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் தான் வெளியில் அழைத்துச்செல்ல கேட்பது போல அவளை பார்க்க இதை சாக்கிட்டு கேட்கவந்தான்.

பரணிக்கு ஏனோ ஹர்ஷூவின் உண்மை நிலையை சொல்ல மனம் வரவில்லை. அது தெரியும் போது தெரியட்டும் என்று தான் நினைக்க தோன்றியது. தான் எதுவும் சொல்லி அதன் காரணமாக கூட திருமணத்தில் எந்த விதமான தடங்களும் வந்துவிட கூடாது என்று நினைத்தார். அதனால் தன்னை சமாளித்துக்கொண்டு,

“அதொண்ணுமில்லை மாப்பிள்ளை, இன்னைக்கு காலையில நடந்த விஷயம் தான் உங்களுக்கு தெரியுமே? நாங்க திட்டுவோம்னு பயந்துட்டு சரியா சாப்பிடாம் இருந்திருக்கா. நானும் கோவத்தில் கவனிக்கலை. இப்போ உங்க நிச்சயதார்த்தம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கு. அதனால் ஏற்பட்ட மயக்கம் தான் டாக்டர் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டாங்க...”என மனப்பாடம் செய்தது போல கடகடவென ஒப்பித்தார்.

ஷக்தி வருவதை தூரத்திலிருந்து பார்த்த நிஷாந்த் வேகமாக வருவதற்குள் ஹர்ஷிவ்தாவை பற்றி பரணியிடம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். பரணியின் இப்போதைய எண்ணம் தான் நிஷாந்தின் மனதிலும் ஓடிகொண்டிருந்தது. அதனால் தான் அவரை தடுத்துவிடவேண்டும் என நினைக்கு போது அவரே சமாளித்த விதம் நிஷாந்திற்கு நிம்மதியை உண்டாக்கியது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு அப்போதுதான் உள்ளே நுழைபவன் போல, “வாங்கத்தான். உங்களுக்கு எப்படி தெரியும் நாங்க இங்க இருக்கிறது?...” என குரலில் சாதாரணத்தை வரவழைத்துகொண்டு கேட்கவும்,

“வாட்ச்மேன் சொன்னான் நிஷாந்த். நீ எங்க போய்ட்ட அத்தையை தனியா விட்டுட்டு?...”

“பரணிம்மா வீட்லயும் எதுவும் சாப்பிடலை. அதான் அவங்களுக்கு குடிக்க எதாச்சு வாங்கலாம்னு போனேன். கேன்டீன்ல கூட்டம் கம்மியா இருக்கு. டிபனும் இருந்தது. அதான் நர்ஸை இருக்க சொல்லிட்டு அவங்களை கூட்டிட்டு போய் சாப்பிட வைக்கலாமேன்னு வந்தேன்...”

“ஹ்ம், ஓகே. நீங்க போய் சாப்பிட்டு வாங்க அத்தை. நான் ஹர்ஷூவோட இருக்கேன்...” என்றவனை பார்த்த பரணி வேண்டாம் என மறுக்க அவரை வற்புறுத்தி நிஷாந்த்தோடு அனுப்பிவைத்து விட்டு ஹர்ஷிவ்தாவின் கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து பொத்திகொண்டவன் அதை நீவியபடியே அவளை பார்த்திருந்தான்.

ஹர்ஷிவ்தாவிற்கு சில நிமிடங்களில் மயக்கம் அரைகுறையாக கலைய தன் முன்னே அமர்ந்திருந்த ஷக்தியை பார்த்தவள் அவனை கண்டு மெல்ல முறுவல் பூத்தாள். அதில் ஆச்சர்யம் அடைந்தவன் அடுத்து அவள் பேசியதில் அதிசயித்து போனான்.

மெல்லிய குரலில் “என்ன கௌரவ், பயந்துட்டியா?... எங்க நீ என் கிட்ட தோத்துடுவியோன்னு?... அதுக்காக அவசரப்பட்டு எனக்கு பெஸ்ட் ஆஃப் லக் சொல்லிடாத...” என்றவளை பார்த்தவனுக்கு புரிந்தது அவள் சுயநினைவில் உணர்ந்து பேசவில்லை என்று. ஆனாலும் எப்படி இப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை உணர்ந்து எப்படி அவளால் பேச முடிந்தது என்று நம்பமுடியவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு வரை தான் அவளை ஈர்க்கவில்லையோ?... அவளுக்கு துளியளவேனும் தான் பிடித்தமானவன் இல்லையோ என சஞ்சலம் கொண்டிருந்தவன் இப்போது அவளின் பேச்சிலிருந்தே புரிந்துகொண்டான் ஏதோ ஒரு விதத்தில் அவளினுள் தன் மீதான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளோம் என்று.

அதனால் உண்டான அளப்பறியா காதலில் கொஞ்சம் கரகரத்துபோன குரலில், “தேனு, தேனுடா. இல்லை, நான் உனக்கு கண்டிப்பா பெஸ்ட் ஆஃப் லக் சொல்லமாட்டேன். என்னோட சண்டிராணியை யாருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்...”என்று கண்கள் சிரிக்க உற்சாகமாக பேச,

“ஹ்ம், எதுக்கும் தயாரா இரு. மேரேஜ்க்கு அப்றம் நீ தாங்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. நான் உன்னை சும்மா விடமாட்டேன். வெய்ட் அன் சி மேன்...” என கூறியவள் புன்னைகையோடே மீண்டும் மயக்கத்திற்குள் சென்றாள்.

அதில் கொஞ்சம் கலவரமடைந்தவன் டாக்டரை அழைக்க அவர் வந்து மீண்டும் செக் செய்துவிட்டு வேறொரு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு அவனிடம் ஒரு அறிமுகப்படலத்தையும் நிகழ்த்திவிட்டு பயப்பட ஒன்றுமில்லை என கூறிச்சென்றார்.

சிறிது நேரம் கழித்து பரணியும் நிஷாந்தும் வர அவர்களிடம் நாளை வருவதாக சொல்லிக்கொண்டு கிளம்பினான் ஷக்தி. ஹர்ஷிவ்தாவின் பேச்சில் மெய் மறந்து தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தவனது ஆழ் மனதில் உறுத்தி கொண்டிருந்தது பரணியின் தடுமாற்றமான பேச்சு. அவர் பேசியதையும், மயக்கத்திற்கான காரணத்தையும் நிச்சயம் நம்பவில்லை.

அவரை துருவிதுருவி கேட்க அவன் மனமும் இடம் தரவில்லை. முதலில் திருமணம் முடியட்டும், பின் அவர்களாக சொல்லும் வரை தான் எதுவும் கேட்க கூடாது என நினைத்துகொண்டான்.

இந்த விஷயம் சம்பந்தமாக எதுவும் கேட்காமல் தள்ளி போட்டதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு. பிரச்சனை என்னெவென்று தெரிந்து அது தனக்கு பிடிக்காமலோ, விஷயம் மிக பெரிதாக இருந்தாலோ எங்கே இந்த திருமணத்தை தானே நிறுத்திவிடும் அளவிற்கு இந்த பிரச்சனையின் காரணம் இருந்துவிட்டால் ஹர்ஷிவ்தாவை எங்கே இழந்துவிடுவோமோ என்ற பயமே. அவள் தனக்கு மனைவியாகிவிட்டால் எந்த சூழ்நிலையானாலும் தான் அவளுக்கு உறுதுணையாக இருப்போம் என நம்பினான்.

ஆனால் அவளது பிரச்சனை தெரிய வரும் போது இதே திடத்துடன், மன உறுதியுடன் அந்த பிரச்சனையை கையாள்வானா? இதை தெரிந்துகொள்ளும்போது தன்னுடைய தூக்கமும் நிம்மதியும் மொத்தமாக பறிபோக போவதை அறிவானா?

இப்போதைக்கு இதை நினையாமல் இருப்பதே நல்லது என எண்ணி மொத்தாமாக அதை ஒதுக்கித்தள்ளினான். அப்படி இவனை நிம்மதியாக இருக்க விடுவாளா அவனின் சண்டிராணி?

நேராக திருவேங்கடத்தின் வீட்டிற்கு சென்றவன் உள்ளே செல்லும் முன்னே ஹர்ஷிவ்தாவை பற்றி யாரிடம் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்துக்கொண்டான். என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே இங்கிருப்பவர்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்கவேண்டாம் என எண்ணிக்கொண்டே.

“ப்ருத்வி, நான் சொல்றதை கேளுடா. எல்லா விஷயத்துக்கும் கோவப்படாதே, அவங்க நம்ம ஷக்தி, நம்ம ஹர்ஷூடா...” என கெஞ்சிக்கொண்டிருந்தார் சகுந்தலா.

கல்யாணம் நின்றுவிட்ட கோவத்தில் இங்கேயே இருந்தால் அனைவரின் கேலிப்பார்வைக்கு ஆளாகிவிடுவோம் என்ற வெறுப்பில் மும்பையில் இருக்கும் தன் நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட்டான் ப்ருத்வி. இப்போதைய தன் நிலைக்கு காரணமானவளுக்கு திருமணம், அதுவும் தன் தாய் தந்தையரே முன்னின்று பேசி முடித்திருக்கின்றனர் என்ற உச்சகட்ட கொதிப்பில் சகுந்தலாவிடம் பொரிந்துகொண்டிருந்தான்.

திருவேங்கடமும் புருஷோத்தமனும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். சகுந்தலா ப்ருத்வியின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறியபடி திருவேங்கடத்தை பார்த்துவிட்டு ஷக்தியை பார்த்ததும் சங்கடமாக உணர அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் அவரிடமிருந்து போனை வாங்கி,

“உனக்கு என்ன பிரச்சனை ப்ருத்வி?.. என் கிட்ட சொல்லு. நான் தான் அத்தையையும் மாமாவையும் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போனேன். எதுவானாலும் என்கிட்டே பேசு நீ...” என அதட்டலாக கூற எப்போதுமே கௌரவ் ஷக்திவேலை பார்த்தால் ப்ருத்விக்கு இயல்பாகவே பய உணர்வு தலைதூக்கும்.

அவனின் உருவத்தினாலா, இல்லை அவனது பார்வையிலேயே இருக்கும் கண்டிப்பு தொனியினாலா, இல்லை இலகுவாக பேசாமல் எப்போதும் அவனிடம் இறுக்கமாகவே இருக்கும் பாவத்தினாலா எதுவென்று பிரித்தறியாத வகையில் அவனை பார்த்தால் அவனையும் மீறிய பய உணர்வு எப்போதுமே தன்னாலே தலைதூக்கிவிடும்.

அவனை பார்க்க நேரும் தருணங்களை மிக கவனமாக தவிர்த்துவிடுவான். எப்போதாவது சிக்கிகொண்டால் ஓரிரு வார்த்தைகளோடு தலைமறைவாகிவிடுவான். இப்போது அவனே லைனில் வருவானென்று எதிர்பார்க்காததால் பேச்சு வராமல் நா உலர்ந்து ஒட்டிக்கொண்டது.

“அது வந்து அண்ணா, நான்.... அம்மா...” என தடுமாற,

“இங்க பாரு ப்ருத்வி. ஹர்ஷூ உன் கல்யாணத்தை நிறுத்தினது எனக்கு தெரியும். மாமா என்கிட்டே எல்லாமே சொல்லிட்டாங்க. அவள் செஞ்சதில எனக்கொண்ணும் தப்பா தெரியலை. உன்னோட செயல்களுக்கான பிரதிபலன் இதுதான். உன்னை முதல்ல நீ மாத்திக்க பாரு...” என்றவன்,

“அப்புறம் மாமாவை, அத்தையை இன்னொரு தடவை என் கல்யாணவிஷயத்தை வச்சு ஏதாவது பேசின பார்த்துக்கோ. என் கல்யாணத்தை அவங்கதான் முன்ன இருந்து நடத்தி வைப்பாங்க. எனக்கான உரிமையை உனக்காக கூட விட்டுத்தர முடியாது. முடிஞ்சா விருப்பம் இருந்தா நீ கல்யாணத்துக்கு வா. இல்லைனா பேசாம அங்கேயே இரு. புரியுதா?... என அதே குரலில் கூறவும் மாட்டேன் என்றா சொல்லுவான்?

“சரிங்கண்ணா. நான் எதுவுமே இனிமே சொல்லமாட்டேன். சாரி...”

“ஹ்ம். இவ்வளோ நேரம் தூங்காம என்ன செய்யுற? போ போய் நேரத்துல தூங்கு. உன்னை நீ சரி பண்ணு. உன் வாழ்க்கை தானா சரியாகும். பை. குட்நைட்...” என்று கூறிவிட்டு போனை வைக்க விட்டால் போதும் என எங்கே மீண்டும் அழைத்து பேசிவிடுவானோ என்ற பயத்தில் அலறியடித்துக்கொண்டு இழுத்துபோர்த்தி படுத்துக்கொண்டான் ப்ருத்வி.

அவன் பேசுவதையெல்லாம் நமுட்டுச்சிரிப்போடு கவனித்துகொண்டிருந்த திருவேங்கடம், “சகு இனி உன் பிள்ளை வேற யார் போன் பண்ணினாலும் பதறப்போறான் பாரேன்...” என கூறி இடியென சிரிக்க அதை ஆமோதித்து சகுந்தலாவும் சிரிப்பில் இணைந்துகொண்டார்.

“பாருடா ஷக்தி, நீ ப்ருத்வியை பிடிச்சு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிருக்க. அவனை பெத்த இதுக ரெண்டும் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சிரிக்குதுங்க பாரேன். என்னத்தை சொல்ல? நான் பெத்ததும் சரியில்லை. என் கூட வளர்ந்ததும் சரியில்லை...” என நொந்துகொள்வது போல பாவனை செய்ய அவரது அந்த பாவம் அனைவரையும் மேலும் சிரிப்பை உண்டாக்கியது.

“நீ வேற சோமா, அவன் இவன் ஒருத்தனுக்காகனாலும் கொஞ்சம் அடங்கி போறானேன்னு நான் சந்தோஷப்படறேன். அது பொறுக்கலையா உனக்கு...” என்றவர் குரலில் கொஞ்சம் கவலை எட்டிப்பார்த்ததோ. அதை கண்டு,

“விடு திரு. சின்னப்பையன் தானே. எல்லாம் போக போக சரியாகிடும். இல்லையா என் மருமகக்கிட்ட சொல்லி மந்திரிக்க வேண்டியதுதான்...” எனவும்,

“ப்ச் புருஷ்...” என ஷக்தி அதட்ட,

“இவன் வேற ஆரம்பிச்சுட்டான்டா. புருஷூ, பேஸ்ட்டுன்னு. அட போடா...” என நொந்துகொண்டார் புருஷோத்தமன்.

அதை கண்டுகொள்ளாமல், “ஓகே மாமா நான் ஹோட்டலுக்கு கிளம்பறேன். ப்ரெண்ட்ஸ் வெய்ட் பண்ணுவாங்க. நாளைக்கு வீட்டுக்கு வரேன் மாமா...”

“என்னடா நீ. இவ்வளோ பெரிய வீடு இருக்கும் போது நீ ஹோட்டல்ல தங்கினா எப்படி? நான் தான் நீ வரும்போதே சொன்னேன்ல. இங்கதான் தங்கனும்னு...” என ஷக்தியை ஆட்சேபிக்க,

“ஹைய்யோ மாமா. நான் என்ன நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்துட்டா ஹோட்டல்ல தங்கினேன். ப்ரெண்ட் கல்யாணத்துக்கு ஆபிஸ்ல கூட வொர்க் பன்ற எல்லோரோட வந்திருக்கேன். அவங்களோட வந்துட்டு தனியா இங்க வந்து தங்கறது மரியாதையா இருக்குமா? ப்ளீஸ்...” என கெஞ்சாமல் கொஞ்சியவனிடம் மறுப்பை தெரிவிக்க முடியாமல் அவனின் கூற்றை ஏற்றுக்கொண்டனர்.

“சரி எப்போ சென்னை கிளம்பற?...”

“நாளைக்கு வரை லீவ் போட்டிருந்தேன். இன்னொரு நாள் எக்ஸ்டைன் பண்ணனும். நாளை மறுநாள் கிளம்ப டிக்கெட் புக் பண்ணனும் மாமா. ஓகே வரேன் மாமா...” என்றவன் சகுந்தலாவிடமும் தன் தந்தையிடமும் கூறிக்கொண்டு திருவேங்கடத்தின் காரில் ஹோட்டலை நோக்கி செல்ல அவனது நினைவும் நேற்று தன் சண்டிராணியை தான் முதன் முதலாக பார்த்த தருணத்தை நோக்கி பின்னே சென்றது.

அந்த நினைவு தந்த சுகந்தத்தில் மனம் மயங்கி போனான். தான் அவளை பார்த்த அந்த நிமிடத்தில் ஹர்ஷிவ்தாவின் முகத்தில் ஜொலித்த ஆயிரமாயிரம் பாவங்கள் அவனை அவளின் புறம் அடியோடு சாய்த்தது.

அவனளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்காவது ஷக்தியின் காதலுக்கான பிரதிப்பலிப்பு ஹர்ஷிவ்தாவிடம் ஏற்படுமா? தீட்சண்யா விஷயத்தில் ஹர்ஷிவ்தாவிற்கு ஆதரவாக செயல்படுவானா ஷக்தி?



நதி பாயும்...
 
? ? ?

சண்டி ராணி இப்படி மயங்கி போய்ட்டா........
தீட்சண்யா யாரு என்னாச்சு?

ஷக்தியே terror போல........
அவனுக்கே தண்ணி காட்டுறாளே இந்த ஹர்ஷிவ்......
 
Last edited:
Top