Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 5.2

Advertisement

“வேடிக்கை பார்க்கனா மட்டும் கூட்டத்தை கூட்டிடுவீங்களே? இங்க என்ன பிரச்சனை? எதுக்கு அடிக்கிறேன்னு ஒருத்தரும் கேட்டுடாதீங்க. ஆனா மொபைல்ல ரொம்ப க்ளியரா வீடியோ, போட்டோன்னு எடுத்து இந்த விஷயத்தை பரப்பி உங்களோட சமூக அக்கறையை தவறாம கடைபிடிச்சு காப்பாத்திடுவீங்க. அப்டிதானே?...”

“உங்க மொபைல்ல வீடியோ எடுத்ததுமில்லாம காபிஷாப்பில் இளம்பெண்ணிடம் வாலிபன் அத்துமீறல். தர்ம அடி கொடுத்த துணிச்சல்கார யுவதி அப்டின்னு பெரிய டைட்டிலோட யூடியுப்லையும், பேஸ்புக்லையும் அப்லோட் பண்ணி உங்க பராமக்ரமத்தை சுதந்திரமா வெளிப்படுத்துவீங்க. அப்டித்தானே?. நான் கேட்டேனா என்னோட கொள்கையை பரப்ப சொல்லி?...”

“தெரியாமதான் கேட்கேன், இதே உங்க சொந்தபந்தத்துல ஒரு பொண்ணுக்கிட்ட யாராவது நான்சென்ஸா பிகேவ் பண்ணினா நீங்க எல்லோரும் அப்போவும் இப்டிதான் வீடியோ, போட்டோன்னு எடுத்து உலகமெல்லாம் ஒளிபரப்பு செய்வீங்களோ?. என்ன பிரச்சனைன்னு தட்டிக்கேட்க தைரியமில்லை, உங்களுக்கெல்லாம், முதல்ல இங்கிருந்து போங்கைய்யா எல்லோரும்...” என கூட்டத்தை பார்த்து கத்தி விட்டு,

“டேய் இன்னொரு தடவை என் கண்ணுல நீ சிக்கின, செத்தடா...” என கோவமாக மீண்டும் ஒருமுறை சிவாவை எச்சரித்து விட்டு காபி ஷாப்பை விட்டு வெளியேற கூட்டத்தை தள்ளிக்கொண்டு சென்றவள் ஷக்தியின் நெஞ்சில் கையை வைத்து,

“யோவ் வேடிக்கை பார்க்கனும்னா வெளில போறதுக்கான வழியை விட்டுட்டு பாருய்யா. பேக்கு...” என அவனை ஒரே தள்ளு தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டாள் நிஷாந்தோடு.

அவள் நடந்து செல்லும் வேகத்திலேயே அவளது கோவமும் பிடிபட அவளின் தோளில் புரண்ட சுருள் முடிகள் முகத்தில் இருந்த வியர்வையில் அப்பிக்கொள்ள அதையும் பிரித்தெடுத்தவள் நிஷாந்தோடு ஏதோ இன்னும் கோபமாகவே பேசிக்கொண்டு வெளியில் சென்றாள்.

அவளை பின் தொடரும் எண்ணமில்லாமல் ஷக்தி அவள் சென்ற வழியை பார்த்தவாறே உறைந்து நின்றான். உமா மகேஷ்வரனின் உலுக்கலில் தன்னுணர்வு பெற்றவன் அடிவாங்கிய சிவாவை பார்க்க உள்ளே சென்றான்.

அவனோ, “தெரியாத்தனமா பொண்ணு அழகா இருக்காளேன்னு நினச்சு நம்பி போய் பேசினேன். அடிச்ச அடி ஒண்ணொண்ணும் இடி மாதிரி விழுது. இவ நிஜமாவே பொண்ணா? நிச்சயமா இல்லை. இத்தனை ஆம்பளைங்க இருந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கானுங்களே? ஒருத்தனுக்கும் என்னை காப்பாத்தனும்னு தோணலையே?. என்ன உலகமோ?...” என தனக்குள் புலம்பியபடி கீழே இருந்து தட்டுத்தடுமாறி எழ முயன்றான்.

செக்யூரிட்டிகளின் உதவியின் பெயரில் ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டு அவனை அந்த இடத்தை விட்டு தூக்கிகொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றனர். உடன் அவனது தங்கை பைரவியும். ஷக்திக்கு அழுதுகொண்டே செல்லும் அப்பெண்ணை பார்க்கத்தான் பாவமாக இருந்தது.

அதில் ஷக்திக்கு ஹர்ஷிவ்தாவின் மேல் கோவம் கூட எழுந்தது. இப்பெண் என்ன பாவம் செய்தாள்? இவளை எதற்கு அனைவரின் முன்பும் அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ண, அவனின் மனசாட்சியோ ஹர்ஷூ என்பவள் மட்டும் என்ன பாவம் செய்தாள்? சிவாவில் அருவருப்பான பேச்சை சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க அவள் என்ன தியாகியா? என அவனை சாடியது.

ஆம் அப்போதைக்கு அடித்தவளின் பெயர் ஹர்ஷூ என்பதும், உடன் இருந்தவன் நிஷூ என்பதும் மட்டுமே ஷக்திக்கு தெரிந்த விபரம் அவளை பற்றி வேறு எந்த தகவலும் இல்லாமல் எப்படி மீண்டும் அவளை சந்திப்பது என தெரியாமல் அன்றிரவே அவள் தன்னை தேடி வரப்போவதை அறியாமல், அவள் யாரென்று அவனுக்கு தெரியப்படுத்த போவதை தெரியாமல் தவித்துத்தான் போனான்.

புருஷோத்தமன் அவனிடம் ஷர்ஷிவ்தாவின் புகைப்படம் எதையும் காண்பிக்கவில்லை. காண்பித்திருந்தாலும் அவன் அப்போது இருந்த மனநிலையில் திருமணத்திற்கு ஒத்துகொண்டிருப்பானா என்பதே சந்தேகம் தான். ஆனால் இப்போது அவளை பார்த்த பின்பு இவள் தான் தன் தந்தை தன்னை மணக்க சொல்லிய பெண் என்பதை அறியாமலே அவளின் மீது காதல் கொண்டுவிட்டான். அவளின்புறம் இவனை ஈர்த்தது அவளின் அழகா, துணிச்சலா, தைரியமான நேர்கொண்ட பார்வையா, நிமிர்வான பேச்சா எதுவென்று பிரித்தறியமுடியாத உணர்வில் தன் இதயத்தை அவளிற்கு தாரைவார்த்தான்.

அவனின் மோனநிலையை கலைத்த உமா மகேஷ்வரன், “ஏன் மச்சி உன்னை அந்த பொண்ணு படு கேவலமா பேக்குன்னு திட்டிட்டு போகுது. கொஞ்சம் கூட அசராம நிக்கிற?...”

“விடுடா, விடுடா. அவ என்ன வேணும்னா திட்டினா?... போக வழி விடலைன்னுதானே திட்டினா. அதெல்லாம் பெருசா எடுத்துக்கபடாது. பாவம்...” என இன்னும் கனவில் மிதந்தபடி பேச அவனை பார்த்து ஆவென வாயை பிளந்தவன்,

“புரிஞ்சுபோச்சுடா. உனக்கு நேரம் சரியில்லை. பேசாம உன்னோட மனசை மாத்திக்க. அதுதான் உனக்கு நல்லது. அடியை பார்த்தல. கண்டிப்பா கராத்தே கத்துக்கிட்டவளா தான் இருக்கனும். பொழச்சுக்கோ ராசா...” என அவனின் நாடியை பிடித்து கெஞ்ச,

“நான் என்னோட லவ்வை சொன்னாத்தானே?. எப்டி டீல் பண்ணனுமோ அப்டி பண்ணிக்கறேன். இவக்கிட்ட வழக்கமான மெத்தட்ல அப்ரோச் பண்ணக்கூடாது. முதலுக்கே மோசமாகிடும். எல்லாம் நான் பார்த்துக்கறேன். வா போகலாம்...” என்றவனை குழப்பமாக பார்த்த உமாவை இழுத்துக்கொண்டு அந்த ஷாப்பிங் மாலை விட்டு வெளியேறிவிட்டான்.

வெளியில் சென்று அவனோடு சாப்பிட்டுவிட்டு மாலை மயங்கிய பின் ஹோட்டலுக்கு வந்தவனிடம் அவனது நண்பன், “ஷக்தி நீ கேட்டது போல தனி ரூம் புக் பண்ணிட்டேன். மேல இருக்கு ரூம். போய் பிரெஷ் ஆகிட்டு வா. பக்கத்துல எங்கையாவது போகலாம்...” என்ற நண்பனிடம் மறுப்பாக தலையசைத்தவன்,

“எனக்கு ரொம்ப டயர்டா இருக்குடா. நீங்க போய்ட்டு வாங்க...” என அவர்களை அனுப்பிவிட்டு தன்னுடைய லக்கேஜை எடுத்துகொண்டு நான்காம் மாடிக்கு சென்று குளித்துவிட்டு அலுப்பில் அப்படியே தூங்கியவன் நடுநிசியில் ஹர்ஷிவ்தாவின் வரவின் போதுதான் நித்திரை கலைந்தான். இப்போது நினைத்தாலும் நம்பமுடியா ஆச்சர்யம் தான் அவனுக்கு. அந்த நினைவு தந்த சுகத்திலேயே தனதறைக்கு வந்தவன் துயிலுலகத்தில் நுழைந்து கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினான்.

--------------------------------------------------------------------

மறுநாள் காலையில் எழும் போதே இயல்புநிலையில் இருந்த ஹர்ஷிவ்தாவிற்கு முதல்நாள் போன்ற எந்தவிதமான மன அழுத்தமும் இருக்கவில்லை. எழுந்தது முதல் பரணியிடம் வளவளத்துகொண்டிருந்தவள் நிஷாந்திடம் பேச மறுத்து அவனின் புறம் திரும்பவும் மறுத்தாள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டை கண்டும் காணமல் பரணி விட்டுவிட நிஷாந்த் கெஞ்சவும், ஹர்ஷூ மிஞ்சவுமாக இருந்தாள்.

காலையிலேயே பரமேஷ்வரன் வந்துவிட அவரோடு பரணியை வீட்டிற்க்கு அனுப்பியவன் அவர்கள் சென்றபின்,

“இங்க பாருடா ஹரி. என்னோட பேசு. உனக்கு நிச்சயதார்த்தம் நடக்கபோறது எனக்கும் லேட்டா தான் தெரிஞ்சது. அதுக்கப்பறம் அத்தான் என்னை தனியாவே விடமாட்டேன்னுட்டார். நான் என்னடா செய்ய?...”

“ப்ச் அதை பாத்தி பேசாத. அதுக்குள்ளே அத்தானாக்கும்? விடு விடு. அவனை நான் பார்த்துக்கறேன். அவன் நேரம் சரியில்லை. அவனா வந்து தலையை குடுக்கறான். அனுபவிக்கட்டும். நான் கோவமா இருக்கிறது அதுக்கு மட்டுமில்லை...” எனவும் புரியாமல் பார்த்தவனிடம்,

“நான் உங்கிட்ட ஆயிரம் தடவை கேட்டேனே? அந்த மைதாமாவு இருக்கிற ரூம் கரெக்ட்டா என்னனு? இப்படி என்னை மாட்டிவிட எத்தனை நாளா காத்திட்டு இருந்த? நான் போனது அவனோட ரூம் கிடையாது. உன் அருமை அத்தானோட ரூம். கத்தி வச்சு மிரட்டினது எல்லாம் அந்த கௌரவ்வை தான்...”

“ராஸ்கல், இப்படி மிரட்டினது நாந்தான்னு தெரிஞ்சும் என்னை நிச்சயம் பன்ற வரைக்கும் வந்திருக்கான்னா அவனோட தைரியத்தை பாரேன். என்க்கிட்டையே சொல்றான்டா இன்னைக்கு நைட்டும் அதே ரூம்ல தான் இருப்பேன். பைப் ஏறி வரவேண்டாம், முன்னாடி வழியாகவே வான்னு...” என மூச்சுவாங்க பேச,

“அந்த கொடுமையை ஏண்டா கேட்குற. அந்த மைதா மாவுதான் முதல்ல அந்த ரூம்ல இருந்திருக்கான். வந்ததும் பால்கனிக்கு வந்து நின்னவன் கீழே எட்டிபார்த்ததும் தலை சுத்திடுச்சாம். அதுல பயந்து போய் கீழே உள்ள ரூம் கேட்டு மாத்திருக்காங்க. அத்தானுக்கு ஈவ்னிங் தான் அந்த ரூம் புக் பண்ணிருக்காங்க.அதனால ஏற்பட்ட குழப்பம் தான் இது...” எனவும் அவினாஷை நினைத்து தலையில் அடித்துகொண்டாள் ஹர்ஷிவ்தா.

“எனக்குன்னு பார்த்திருக்காங்க பாரு சரியான தொடை நடுங்கி மாப்பிள்ளையை. அதை விடு...” என்றவள் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு,

“இந்த கௌரவ்க்கு என்னை பத்தி இன்னும் சரியா தெரியலை. சார் சவால் எல்லாம் விடறார் எனக்கு. இந்த கல்யாணம் முடியிறதுக்குள்ள அவன் ஒவ்வொரு நிமிஷமும் நான் என்ன செய்வேனோனு பதறோ பதறுன்னு பதறனும். இந்த பதினைஞ்சு நாளும் அவனை தலையால தண்ணி குடிக்க வைக்கிறேனா இல்லையான்னு பாரு? அவன் என்னபாடு படபோறான்னு கண்குளிர பாரு. அத்தானாம் அத்தான்...” என கூறியவளின் முகத்தில் தீவிரத்தோடு கொஞ்சம் குறும்பும் படர்ந்திருந்தது.

இவளின் திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் கௌரவ் ஷக்திவேல் என்பதும், இவள் செய்யும் எதையும் அவன் கண்டுகொள்ள போவதில்லை என்பதும் ஹர்ஷிவ்தாவிற்கு தெரியாமல் போய்விட்டது.

முதலில் இவளது பேச்சில் மிரண்ட நிஷாந்தின் கருத்தில் அவளது கௌரவ் என்ற விளிப்பும், முகத்தில் மின்னிய குறும்பும் வித்தியாசமாக பட அவளின் மனம் மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதோ, என சந்தோஷித்தவன், அதை மறக்காமல் ஷக்திக்கும் தெரியப்படுத்தினான்.

எப்படியோ திருமணத்தை நிறுத்த அவள் முயலவில்லை என்பதே பெருத்த நிம்மதியாக போய்விட்டது நிஷாந்திற்கு. திருமணம் வரை தீட்சண்யா விஷயங்கள் எதுவும் ஹர்ஷூவின் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தவன் நரேந்திரனிடம் பேசி எதுவாக இருந்தாலும் தன்னையோ, இல்லை தன் பெரியப்பாவையோ மட்டும் தொடர்புகொள்ள வேண்டும் எனவும், தப்பி தவறியும் கூட ஹர்ஷிவ்தாவிடம் எதையும் சொல்லகூடாதெனவும் உத்தரவு பிறப்பித்தான்.

வீட்டிற்கு சென்ற பரணியும் பரமேஷ்வரனும் ஹாஸ்பிடல் திரும்பிவிட உடன் சரஸ்வதியும் வந்திருந்தார். காலையில் ஹர்ஷிவ்தாவிற்கு உணவை ஊட்டிவிட்டு தேவையான மாத்திரைகளையும் கொடுத்து முடிக்கவும், ஷக்தி அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

நிஷாந்த் போன் செய்து சொன்னபின் அவனிற்கு சந்தோஷத்தில் கால்கள் நிலைகொள்ளவில்ல. உடனே கிளம்பி வந்துவிட்டான். முதல்நாள் இரவு வந்ததை ஹர்ஷூவிடம் சொல்லவேண்டாம் என முன்பே சொல்லியிருந்ததால் யாரும் அதைப்பற்றி பேசவில்லை.

“வாங்க மாப்பிள்ளை. உள்ள வாங்க. நிஷாந்த், கேன்டீன்ல போய் குடிக்க எதாவது வாங்கிட்டு வா...” என பரமேஷ்வரன் பரபரப்பாக,

“மாமா, அதெல்லாம் வேண்டாம். நான் வரும் போதே சாப்பிட்டுட்டு தான் வந்தேன்...” என்றவன் ஹர்ஷிவ்தாவை பார்க்க, அதுவரை அவளும் அவனையே தான் பார்த்துகொண்டிருந்தாள். இருவரும் பேசட்டுமேன அனைவரும் வெளியேற அதற்கென்றே காத்திருந்தவன்,

“என்னாச்சு மேடம்? கல்யாணம்னு சொல்லவும் பயத்துல மயக்கமே வந்திருச்சு போல?.. ஹ்ம்... இவ்வளோ வீக்கா நீ?...” என அவளை சீண்ட,

“அச்சோ, என்னை பார்த்தா அப்டியா தெரியுது?... எனக்கென்னமோ உங்களை பார்த்தாதான் பயந்து போய் வந்திருக்கிறது போல தெரியுது...” எனவும் அவன் விழிக்க,

“நீங்க ஏதோ என்கிட்டே உங்க மரியாதையை காப்பாத்திக்க தான் எனக்கிட்ட சாவல் விட்ருக்கீங்க. நான் மயக்கமாகிட்டேன்னு கேள்விப்பட்டதும் ஹப்பாடா ராட்சசிகிட்ட இருந்து தப்பிச்சுட்டோமேன்னு நினச்சு நிம்மதியா இருந்திருப்பீங்க. ப்ச். சோ சேட் பாருங்க, நான் நல்லா தான் இருக்கேன். இனி உங்களை யாராலும் எனக்கிட்ட இருந்து காப்பாத்தவே முடியாது...” என பேசியவளிடம் மேலும் வாதாடாமல்,

“வெல். கெட் வெல் சூன் மேடம். நான் இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பறேன். அதை உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு தான் வந்தேன். கல்யாணத்துக்கு முதல்நாள்தான் வருவேன்...” எனவும் ஏதோ ஒரு ஏமாற்றமான உணர்வு நொடியில் தோன்றி உள்ளுக்குள்ளேயே கரைந்து போனது ஹர்ஷிவ்தாவிற்கு. அதை ஷக்தியின் கண்கள் கண்டுகொண்டது.

ஆனாலும் அலட்சியமாக, “கல்யாணத்துக்கு தானே?... ம்ம். பார்க்கலாம், பார்க்கலாம்...” என விட்டேற்றியாக அவனிற்கு விடைகொடுக்க அதற்கு சிறு புன்னகையை பதிலளித்துவிட்டு வெளியேறிவிட்டான்.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டதும் நிஷாந்த் உள்ளே வந்தான். அவனிடம், “உன்னோட அத்தான் எங்க இங்க இருந்தா எனக்கிட்ட சிக்கிடுவோமோன்னு பயந்துட்டு ஊரை பார்த்து கிளம்பிட்டாரு பாரு. இனி இருக்கு அவருக்கு...” கூறியவளின் முகத்தில் தென்பட்ட கலவையான உணர்வில் நிஷாந்த் தான் குழம்பி போனான்.

ஹர்ஷிவ்தாவை அன்று மாலையே ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வரவும் வீடே கல்யாணகளை பூண்டது. திருமணம் வரை புருஷோத்தமனை திருவேங்கடம் எங்கும் செல்லக்கூடாது கூறி தன்னோடே வைத்துகொண்டார். அனைவரும் சேர்ந்து வேலைகளை பிரித்து பார்க்க கொஞ்சம் சுலபமாகவே நடந்தது வேலைகள் அனைத்தும்.

தன்னால் முடிந்தளவிற்கு அனைவரின் பிபியையும் ஏற்றி இறக்கிகொண்டிருந்தாள் ஷக்தியின் சக்தியான சண்டிராணி. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு குறையை கூறி மறுத்து அனைவரையும் கெஞ்ச வைத்து நிஷாந்தை காலில் விழாத குறையாக கதற வைத்த பின்பே சமாதானமாகி உங்கள் விருப்பம் என்று சென்றுவிடுவாள். இதுவே ஒவ்வொரு விஷயத்திலும் வாடிக்கையாகியது.

அனைத்து விவரங்களையும் நிஷாந்தின் மூலம் கேட்டு அறிந்துகொண்ட ஷக்திக்கு இருப்பே கொள்ளவில்லை. எப்போதடா அவளை பார்ப்போம் என தவித்து போனான்.

திருமணத்திற்கு முதல் நாள் வந்திறங்கியவன் ஏற்கனவே அனைவரின் கண்ணுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டிகொண்டிருப்பவள் இதற்கெல்லாம் காரணமான தன்னை பார்த்துவிட்டால் அதற்கும் சேர்த்து இன்னும் அதிகமாக ஏதாவது வில்லங்கம் செய்வாள் என நினைத்து அவளின் கண்முன்னே வராமல் அவளுக்கு ஆட்டம் காட்டினான்.

திருமணநாளும் அழகாய் விடிந்தது. காலையிலேயே மணமேடைக்கு வராமல் தன் அலம்பலை கூட்டினாள் ஹர்ஷிவ்தா. அனைத்தையும் பொறுத்துபோன ஷக்திக்கே தன் பொறுமை போய்விட்டது.

ஹர்ஷிவ்தாவின் எண்ணப்படி அவளிடம் ஷக்தி அடங்கினானா?


நதி பாயும்...
Nice
 
Top