Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 24.1

Advertisement

நதியோட்டம் – 24

புருஷோத்தமனுக்கு ஹர்ஷூவின் செயலில் விருப்பமில்லை என்றாலும் தன் மகனே அவளுக்கு இந்தளவிற்கு உறுதுணையாக இருக்கும் போது தான் சொல்வதில் என்ன இருக்கிறது என ஒதுங்கிவிட்டார்.
ஆனாலும் அவ்வப்போது ஷக்தியிடம் தனது மனதை ஒவ்வாமையை அறிவுறுத்தவே செய்தார். ஆனாலும் ஷக்தி தான் ஹர்ஷூவை பார்த்துகொள்வதாக கூறி அவருக்கு தைரியம் அளித்தான்.

ஆனால் அவர் பயந்தது போலத்தான் நடந்தது. ஹர்ஷூ பிரச்சனையை தேடி போய் அதில் தானே சிக்கினாள்.
சிவதாஸின் வீட்டு வேலையாள் மூலம் அவன் வரும் நாளை அறிந்துகொண்ட ஹர்ஷூ அவன் அன்று மாலை வெளியில் கிளம்ப அவனை பின் தொடர்ந்தாள்.
சிவதாஸின் கார் சென்னையை விட்டு வெளியில் புறநகர் சாலையில் திரும்ப ஹர்ஷூவின் இதயம் முதல் முறையாக நிதானமாக யோசிக்க ஆரம்பித்தது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த வழியில் இப்போது செல்லத்தான் வேண்டுமா என யோசிக்க ஆரம்பித்தாள். எப்போதுமே நிஷாந்தின் துணையோடு செல்பவள் முதன் முறையாக தனித்து இந்தளவிற்கு வந்திருக்கிறாள்.
ஆனாலும் மீனுக்குட்டி கண்முன் தோன்ற எதுனாலும் பார்த்துக்கலாம் என வழக்கம் போல அசால்ட்டாக விட்ட பணியை தொடர ஆரம்பித்தாள். சிவதாஸின் கார் ஒரு பழைய கட்டிடத்தின் முன்பு நிற்க அதிலிருந்து சிவதாஸ் உள்ளே செல்லவும் அந்த கார் கிளம்பிவிட்டது.

“இந்த இடத்தில் இவனுக்கென்ன வேலை?...” என சிந்தித்துக்கொண்டே ஹர்ஷூவும் மறைவாக வண்டியை நிறுத்திவிட்டு தனது ஹேண்டிகேமராவை எடுத்துக்கொண்டு கட்டிடம் நோக்கி சென்றாள்.
இதை எதிர்பார்த்தோ என்னவோ ஷக்தி சேகர் மூலமாக அவளை பின்தொடர ஆளை ஏற்பாடு செய்திருந்தான்.
ஷக்தி தன் சக்திக்குட்பட்ட வேலைகளை எல்லாம் ஹர்ஷூவிற்காக பார்க்க ஆரம்பித்திருந்தான். அதில் ஒன்றுதான் இந்த பாதுகாப்பு ஏற்பாடு. ஹர்ஷூ சிவதாஸை பின்தொடர்வதை சேகர் மூலமாக அறிந்த ஷக்தி அலுவலகத்தில் முக்கிய வேலையை ஒத்திவைத்துவிட்டு ஹர்ஷூவை தடுக்க சென்றான்.
அவனறிந்தவரை சிவதாஸ் நிச்சயமாக ஹர்ஷூ பின்தொடர்வதை தெரிந்துகொண்டிருப்பான். வேணுமென்றே ஹர்ஷூ திட்டமிடப்பட்டு வரவழைக்கப்பட்டது போல அவனது உள்ளுணர்வு அறிவுறுத்த விரைந்து சென்றான் ஷக்தி. உள்ளுக்கு பதட்டமும் பதைபதைப்பும் ஏனோ அதிகமாகவே இருந்தது.

எப்படியாவது ஹர்ஷூவை காப்பாற்றியாக வேண்டுமே வேண்டிக்கொண்டே அவனும் ஹர்ஷூவை நெருங்கிவிட்டான். அந்த இடத்தில் எந்த காரும் இல்லாமல் நிசப்தமாக இருக்க காரிலிருந்து இறங்கி ஓடினான்.
அங்கே ஹர்ஷூ கட்டிடத்தின் பின்புறம் ஒவ்வொரு இடமாக ஒவ்வொரு ஜன்னலாக வேறு யாரும் உள்ளே இருக்கிறார்களா என எச்சரிக்கையோடும் கொஞ்சம் பயத்தோடும் எட்டிப்பார்த்துகொண்டே இருந்தாள்.

உயிரை கையில் பிடித்துகொண்டு வந்ததால் அங்கே ஹர்ஹூ செய்துகொண்டிருந்த வேலையில் கோவமும், சிரிப்பும் ஒருங்கே கிளம்பியது ஷக்திக்கு.

“இவளை. இவ்வளோ பயப்படறவ எதுக்கு இங்க வரனும்...” என நொந்துகொண்டே அவளருகில் செல்ல அவளோ,
“வா கௌரவ், இப்போதான் வர நேரமா? உனக்கு கொஞ்சமும் பொறுப்பிருக்கா?...” என அவனை கேள்வி கேட்டு கடுப்படிக்க அதில் மேலும் நொந்தான்.

“என் நேரம்டி. பொறுப்பை பத்தி நீ பேசறியா? கொஞ்சமாச்சும் மண்டைல மசாலா இருக்கா? இப்படியா தனியா வந்து என் உயிரை எடுப்ப?...” என கடிந்துகொள்ள,
“அதான் நீ வந்துட்டியே? அதை விடு. உள்ளே அந்த சிவதாஸ் போனான். அதை மட்டும் தான் பார்த்தேன். ஆனா இந்த பில்டிங் உள்ள போன அவன் இப்போ இருக்கிறது போலவே தெரியலையே கௌரவ்?...”

யோசனையாக உதட்டை பிதுக்கியவளை கண்டு கிளர்ந்தெழுந்த கோபத்தை அடக்கியவன்,
“போதும் உன்னோட ஆராய்ச்சி. முதல்ல இந்த இடத்தில இருந்து கிளம்பனும் ஹர்ஷூ. இல்லைனா நமக்கு சேப்டி இல்லை...” சுற்றிலும் பார்வையை ஓட்டியவாறே ஷக்தி கூற,
“கொஞ்சமாவது பொறுப்பிருக்கா கௌரவ், எவ்வளவு முக்கியமான விஷயம் இது. மீனுக்குட்டி கூட இவனுக்கு நடக்க இருக்கிற கல்யாணத்தை நாம நிறுத்தியே ஆகணும். உனக்கு இஷ்டமில்லைனா நீ கிளம்பு. நானே பார்த்துப்பேன்...”

என்னதான் வீராப்பாக அவனை கிளம்ப சொல்லிவிட்டாலும் எங்கே ஷக்தி ரோஷப்பட்டு உடனே கிளம்பிவிடுவானோ என்ற தவிப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது ஹர்ஷூவின் விழிகளில் இருந்து.
“நாமன்னு என்னையும் உன்னோட இன்வெஸ்டிகேஷன்ல கூட்டு சேர்க்க பார்க்கிறாயே? முதல்ல நாம வீட்டுக்கு போகலாம். உன்னால நான் முக்கியமான மீட்டிங்கை கேள்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்...”

“என்னால யாரும் எந்த வேலையையும் நிப்பாட்ட வேண்டாம். என்னோட வேலையை கெடுக்காம இருந்தா போதும்...” அந்த நேரத்திலும் ஷக்தியோடு மல்லுக்கட்ட ஆரம்பித்தாள் ஹர்ஷூ.
“உங்க ரெண்டு பேருக்கும் சண்டை போட வேற இடமே கிடைக்கலையா? இப்போ வர போறீங்களா இல்லையா?...” என இருவரையும் கடிந்துகொண்ட சேகர்,
“ஷக்தி நாம கிளம்பலாம். இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. மழை வந்திரும் போல? இனி இங்க இருக்கிறது சரியில்லை...” ஹர்ஷூவை முறைத்துக்கொண்டே தான் சேகர் கூறினான்.
ஷக்தியிடம் பதிலுக்கு பதில் வாயடித்த ஹர்ஷூ அவனிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தாள். எப்போதாவது சேகரின் உதவி நிச்சயமாக மீனுக்குட்டி விஷயத்தில் தேவைப்படும் என்று நினைத்து தான் அடங்கிப்போனாள். அதுவும் இல்லாமல் முக்கியமான தருணத்தில் தன்னை காப்பாற்றியவனும் என்று அமைதியாக இருந்தாள்.

ஷக்தியையும் ஹர்ஷூவையும் காரில் வர சொல்லிவிட்டு சேகர் ஹர்ஷூவின் ஸ்கூட்டியை எடுத்து வருவதாக கூறி ஸ்கூட்டி சாவியை வாங்கிக்கொண்டான்.
காரில் அமர்ந்த ஹர்ஷூ ஷக்தியை வார்த்தையால் பொரிந்துகொண்டே வந்தாள். அவனால் தான் சிவதாஸ் தப்பித்துவிட்டதாகவும், ஷக்தி மட்டும் இப்போது வராமல் இருந்தால் அவனை பற்றிய ஏதாவது முக்கிய ஆதாரம் கிடைத்து இந்த திருமணத்தை நிறுத்தி மீனுக்குட்டியை காப்பாற்றி இருக்கலாமென வருத்தெடுத்தாள்.

அவளது பேச்சுக்கு காதுகொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் சாலையிலேயே கவனம் வைத்தவனின் பார்வையில் சிறு எச்சரிக்கை. எதிரே வந்த வாகனத்தின் வேகத்தில் சுழித்த புருவங்களின் மத்தியில் யோசனை படையெடுக்க அது தங்களை நோக்கிதான் வருகிறது என உணர்ந்த நேரத்தில் வேகத்தை குறைக்க முயன்றான்.
முயலத்தான் முடிந்தது அவனால். ப்ரேக் வயர் கட் ஆகி இருக்க நொடியும் தாமதியாமல் ஹர்ஷூவை கதவை திறந்து வெளியே தள்ளிவிட்டவன் தானும் கவனமாக இதிலிருந்து தப்ப முயன்றான்.

முழுவதும் கவிழ்ந்துவிட்ட இருளில் தானும் சேதாரமின்றி தப்பிக்க வழி தேட அதற்கு இடம் கொடுக்காமல் எதிரே வந்த லாரி ஷக்தியே ஒதுங்கி போனாலும் விடாமல் வந்து மோதியது.
தன்னை நெருங்கி விட்ட வாகனத்தில் இருந்தவனை கண்டு அதிர்ந்தேவிட்டான் ஷக்தி. அந்த முகத்தை பார்த்த நொடியில் லாரியும் மோதிவிட காரில் இருந்த ஏர்பேக் மூலம் தலையில் பலமான அடி இல்லை என்றாலும் இடித்தவனை பார்த்த அதிர்ச்சியில் கவனம் சிதற தலையில் ரத்தம் கசிய தொடங்கியது.

முயன்று தன்னுடைய மொத்த சக்தியையும் திரட்டி தன்னை காரிலிருந்து வெளியில் இழுத்துக்கொண்டு வந்தான் ஷக்தி. வெளியில் வந்து விழுந்தவன் தூரத்தில் சென்றுகொண்டிருந்த லாரியை பார்த்தான்.
அந்த லாரியும் சற்று தொலைவில் சென்று விபத்தில் சிக்கி முன்பகுதி கோரமாக சிதைந்தது. அதுவும் நிச்சயம் திட்டமிட்டு தான் நடந்திருக்கிறது என யூகித்த ஷக்தி,
“ப்ருத்வி...” என அந்த லாரியை பார்த்து அலறினான். ஆம் ஷக்தியை இடித்த லாரியில் இருந்தது ப்ருத்வியே. இதை ஷக்தியே எதிர்பார்க்கவே இல்லை. என்ன ஒரு வன்மம்? அது தன் மீதா? ஹர்ஷூ மீதா? இப்போது அவனுக்கு என்னவாகிற்றோ? என எண்ணிக்கொண்டே மயங்கிபோனான்.

காரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த சேகர் இந்த இரண்டு விபத்தையும் பார்த்துவிட்டு வேகமாக செயல்பட்டான். உடனே தன்னுடைய அலுவலக நண்பர்களுக்கும் காவல் துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்துவிட்டு காரில் மயங்கிகிடந்த ஷக்தியை பார்த்தான்.
ஹர்ஷூவை தேடினால் அவளோ காரில் இல்லை. கார் சென்ற திசையிலிருந்து பின்னோக்கி சென்று தேடிப்பார்த்தால் அங்கே ரோட்டு ஓரத்தில் ஷக்தி தள்ளிவிட்ட வேகத்தில் உடலில் சிறு சிறு சிராய்ப்புகளுடன் அவளும் மயங்கிக்கிடந்தாள்.
Nice
 
Top