Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaaro - 1

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 1:



நன்னியூர்....

காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள... அழகிய கிராமம்.தென்னை மரங்களும்....நெல் வயல் வெளிகளும்.... பசுமையாய் காட்சியளிக்க....ஜனசந்தடி இல்லாத...ஒரு அமைதியான கிராமம்.

விவசாயமே இங்கு பிரதான தொழிலாக இருக்க....சிறு குறு தானியங்கள் தொடங்கி...நெல்,தென்னை போன்றவையும் செழித்து வளரும் பூமியாக இருந்தது.

காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால்....தண்ணீர் வரத்து நாட்களில்...காண்போரை கொள்ளை கொள்ளும் அழகுடன் திகழும்.


வீடுகள் என்று பார்த்தால்...பெரிய அளவில் இல்லை. அதனை குக்கிராமம் என்றே வரையறுக்க முடியும்.

பொதுவாக அதனை சுற்றியுள்ள பகுதிகளும் செழிப்பாக காணப்பட...அதை எல்லாம் மிஞ்சி விடும் அளவிற்கு அந்த பகுதி இருந்தது.

இடையில் ஏற்படும் பஞ்சங்களையும் தாங்கிக் கொள்ளும் பூமியாக இருந்தது.

இதற்கு மேல் கதையில் வருபவை அனைத்தும் கற்பனையே..!

காலை நேரப் பரபரப்பில்..அனைவரும் தோட்டம், காட்டிற்கு சென்று கொண்டிருக்க...

சுந்தர மகாலிங்கம்-அந்த ஊரின் தலைவர் வீட்டில்...

செயற்கை சாயம் பூசப்படாத உதடுகளும்...பால்வண்ண மேனியும்... முன்னால் தூக்கிப் போடப்பட்ட ஆறடி கூந்தலும்....,சிவப்பு கரையிட்ட பச்சைப் பாவடையும்,அதே வண்ணத்தில் மேல் சட்டையும், சிவப்பு தாவணியும் அணிந்து...எழில் ஓவியமாய் வந்தாள் சக்தி...என்று அழைக்கப்படும் சிவ சக்தி.



சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால்...மகாலிங்கம் அவளை பொத்தி பொத்தி வளர்த்தார்.ஒற்றை பெண் என்றாலும்..அவள் தான் அவருக்கு எல்லாம்.மகனுக்கு மகனாகவும்,மகளுக்கு மகளாகவும் இருந்து அவரைப் பார்த்து கொண்டாள் சக்தி.

அசாத்திய துணிச்சலும்,தைரியமும் மிக அதிகம்.சமையல் கட்டே கதி என்று இல்லாமல்....வயலில் அவளுக்கு தெரியாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு..அனைத்து வேலைகளையும் கற்று தேர்ந்திருந்தாள்.

படிப்பு என்று பார்த்தால்..உயர் நிலை பள்ளிப் படிப்பு மட்டுமே.மகாலிங்கம் எவ்வளவு எடுத்து சொல்லியும் மேலே படிக்க அவள் விருப்பம் கொள்ளவில்லை.அதற்காக படிப்பு வராத பெண் என்று சொல்ல முடியாது.பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேறியிருந்தாள்.

அப்பாவின் உடல்நிலையை கருதி....வயல்,தோப்பு என அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள்.

“ஏட்டுக் கல்வியை விட அனுபவ அறிவே பெரிது” என்ற வாசகம் அவள் விசயத்தில் உண்மையாகிப் போனது.

“அடியாத்தி...! எம்புட்டு நேரம் தான் கண்ணாடி முன்னாடி நிப்பவ...?” என்று அலுத்துக் கொண்டார் அவளின் பாட்டி பாப்பம்மாள்.

“பாட்டி....” என்று பல்லைக் கடித்தவள்....

“என்னைப் பார்த்தா அலங்காரம் பண்ணிட்டு இருக்க மாதிரியா தெரியுது...?” என்று மூக்கு விடைக்க கேட்க...

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன பஞ்சாயத்து..?” என்றபடி வந்தார் மகாலிங்கம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா...நீங்க சாப்பிட வாங்க..! குப்பாயி அக்கா...சாப்பாடு ரெடியா..?” என்று கேட்டுக் கொண்டே சமையலறை நோக்கி போக...

அவளை பெருமிதம் வழியும் கண்களோடு பார்த்தனர் தாயும்,மகனும். இது தான் அவள்.செல்லம் கொஞ்சவோ....விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கவோ...அவளுக்கு நேரம் இருந்ததில்லை.

“எல்லாம் தயாரா இருக்கு சாமி..” என்றார் குப்பாயி வாஞ்சை வழியும் கண்களுடன்.

“அப்பாவுக்கு கம்மங் கூழும்,மோர் மிளகாயும் எடுத்து வைங்க...! பாட்டிக்கு கேப்பை களி....எனக்கு சாப்பாடு...” என்று மடமடவென்று சொன்னவள்... அவளே அனைத்தையும் எடுத்து வைக்க...அவளை ஆச்சர்யப் பார்வை பார்த்தார் குப்பாயி.

சக்தியின் வாய் தான் அவருக்கு வேலை சொல்லுமே தவிர..கைகள் பாதி வேலையை முடித்து விடும்.அவளுக்கு அப்படியே அவள் அம்மாவின் கைப் பக்குவம்...குப்பாயியை விட நன்கு சமைத்தாலும்....

“உங்கள மிஞ்ச முடியாதுக்கா...!” என்று பெருந்தன்மையோடு சொல்வாள்.

“இன்னைக்கு என்ன வேலைம்மா..?” என்றார் மகாலிங்கம்.

“இன்னைக்கு வயல்ல நடவு இருக்குப்பா...அப்பறம் வெங்காய காட்ல களை எடுக்க ஆள் வராங்க....தோப்புல தேங்காய் வெட்ட..இன்னைக்கு வரலையாம்..நாளைக்கு வரதா சொல்லியிருக்காங்க..! அப்பறம் இன்னைக்கு சம்பளப் பணம் குடுக்கணும்...பணம் எடுக்கு டவுன் பேங்க் வரை போகணும்...” என்று சாப்பிட்டுக் கொண்டே மடமடவென்று சொல்ல....கேட்டுக் கொண்டிருந்தவர்கள வாயைப் பிளந்தனர்.

“என்ன ஆத்தா..இத்தனை வேலையும் ஒத்த ஆளா எப்படி செய்ய முடியும்..?” என்று பாப்பம்மாள் வாயைத் திறக்க...

“நான் எப்ப பாட்டி அப்படி சொன்னேன்...அப்பா நீங்க ஒரு எட்டு வயல் வரைக்கும் போயிட்டு வந்திடுங்க...நான் வெங்காய காடு வரை போயிட்டு அப்படியே டவுனுக்கு போயிட்டு வந்திடுறேன்...அப்பறம் சாயங்காலமாய் கூலி குடுத்துடலாம்..” என்றாள்.

“சரிம்மா..!” என்றார் மகாலிங்கம்.சதி சொன்னால் அவள் வார்த்தைக்கு மறு பேச்சு என்பதே கிடையாது.அதற்காக அவள் பிடிவாதக்காரி இல்லை. தப்பென்று சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வாள்.



“பொம்பளைப் புள்ளை....இப்படியே காடு கரைன்னு திரிஞ்சுகிட்டு இருந்தா...எப்படி உன்னை ஒருத்தன்கிட்ட கரை சேர்க்கிறது...நம்மகிட்ட என்ன குறையா இருக்கு..?பேசாம நகை நட்டுன்னு போட்டு..ஊரே அதிர சீர் செஞ்சு ஒரு கல்யாணத்தை பண்ணிப் புடு மகாலிங்கம்..” என்று பாட்டி பெரிய மனுஷியாய் அறிவுரை சொல்ல...

“பாட்டி நான் போய்ட்டா..உன்னைய,அப்பாவை எல்லாம் யார் பாத்துக்கறது...அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..அது மட்டும் இல்லாம..நான் வேற ஊருக்கு எல்லாம் போக மாட்டேன்...” என்று பிடிவாதமாய் சொன்னாள்.சக்தி பிடிவாதம் பிடிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது இதுதான்.

“பாட்டி சொல்றதும் சரிதானே சக்தி...நான் உயிரோட இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா..எனக்கும் நிம்மதியா போய்டும்..” என்று தந்தையும் சேர்ந்து கொண்டு சொல்லும் போது..அவளால் மறுக்க முடியவில்லை.

“சரிப்பா...ஆனா கொஞ்ச நாள் மட்டும் போகட்டும்..” என்று அனுமதி வாங்கினாள்.

“பேங்க்குக்கு எதுல போறமா...?” என்றார்.

“நான் டவுன்பஸ்ல போயிட்டு வந்தறேன்ப்பா..” என்றாள்.

“வேண்டாம்மா....நம்ம கந்தன் ஆட்டோவை வர சொல்றேன்..அதுலயே போயிட்டு..அதுலயே வந்திடுமா..” என்றார்.

“சரிப்பா..” என்றவள்....

“குப்பாயக்கா....வயல்ல வேலை பாக்குறவங்களுக்கு...நீச்சத்தண்ணியம், மோரும் கலந்து வச்சிடுங்க...நான் போறப்ப... அப்படியே அப்பா கூட போய் குடுத்துட்டு போய்டுறேன்..” என்றபடி சாப்பிட்டு முடித்தாள்.

“சரி சாமி...” என்றவர் அதை கலக்க உள்ளே சென்றார்.குப்பாயி எப்பொழுதும் சக்தியை சாமி என்று தான் அழைப்பார்.தாயில்லாத பெண் என்ற பாசம் எப்பொழுதும் அவரிடம் இருக்கும்.



“நத்தத்து சாலை வழி...

நான் வருவேன் ஒத்தை வழி...

தண்ணிக்கு போரவரே....

துணைக்கு வந்தால் ஆகாதோ...”

என்ற பாடலை வாய் மொழியாக படித்துக் கொண்டு அங்கிருந்த பெண்கள் களையெடுத்துக் கொண்டிருக்க....

“என்ன ராசமாக்கா...பாட்டெல்லாம் பலமா இருக்கு..?”என்றபடி வரப்பில் நின்றாள் சக்தி.

“வாடியம்மா...! குனிஞ்சு நிமிந்து வேலை பார்க்கனும்ல...இப்படி எதையாவது முனுமுனுத்தா தான்...அசதி தெரிய மாட்டேங்குது... இன்னைக்கு என்னமோ ஒருத்தியும் வாயைத் திறக்காம வேலை பாக்குறாளுக..அதான் பாட்ட படிச்சேன்..” என்றாள் அவள்.

“சரி சரி...முன்னாடி இருக்குற மண்ணை வெட்டி..பின்னாடி இருக்குற புல்லை மூடாம...பார்த்து வெட்டுங்க..வெங்காய தாள் எல்லாம் இளசா இருக்கு...கொஞ்சம் பட்டாலும் செடி போய்டும்...” என்று அவள் லாவகமாய் சொல்ல..

“நீ சொல்லனுமா சக்தி..அதெல்லாம் சரியா செய்வோம்...புல்லு நல்ல வளர்ந்திருக்கு..அதான் பார்த்து மெதுவா வெட்டிட்டு இருக்கோம்..!” என்றாள் அவள்.

“நல்ல கோரைப் புல்லுக்கா..அப்படியே அரிச்சு வைச்சா..மாட்டுக்கு ஆகும்..பாலும் நல்லா கறக்கும்...” என்றாள் சக்தி.

“நீ சொன்னா சரிதான் சக்தி...பச்சப் புல்லை போட்டா...மாடெல்லாம் ..அப்படியே பாந்தமா சாப்பிடும்..!” என்றாள்.

“வசந்தி அக்கா....காட்டுக்குள்ள பல கீரையும் இருக்கு...களையெடுக்கும் போதே..பிடுங்கி..மடியில வைங்க..வெங்காய காட்டு கீரை...கடைஞ்சு எடுத்து அருமையா இருக்கும்...உங்க மகளுக்கு குடுங்க...படிக்கிற பிள்ளைக்கு நல்லது...” என்று தனக்கு தெரிந்ததை சொன்னபடியே... அங்கிருந்த மர நிழலில்..மோரை வைத்து விட்டு...

“கொஞ்ச நேரம் கழிச்சு...இந்த மோரை ஆளுக்கு ஒரு செம்பா குடுச்சுட்டு வேலையைப் பாருங்க..வெயிலுக்கு இதமா இருக்கும்..!” என்றபடி அங்கிருந்த காடுகளை பார்வையிட்டபடி சென்றாள்.

ஊரின் மற்ற தோட்டங்களில் கிடைக்காத ஒன்று இங்கு உண்டென்றால் அது வயித்துக்கு வஞ்சனை வைக்காத குணம் தான்.வெயில் காலங்களில்..நீச்சத் தண்ணியும்...குளிர்காலங்களில்..கடும் டீயும் கொண்டு வந்து கொடுத்து விடுவாள்.

தோட்டத்திற்கு சொந்தக்காரி என்ற பாகுபாடு இல்லாமல்...வேலைக்கு வருபவர்களுடன் சரிக்கு சரியாய் நடந்து கொள்வாள்.

அவள் செல்வதைக் கண்டவர்கள்...”இம்புட்டு அழகையும் கட்டிகிட யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..?” என்று மனதில் நினைத்து கொண்டனர்.
 
சென்னை....

சினிமாகாரர்கள் வசிக்கும் மிகப் பிரபலமான பகுதி அது.அந்த பகுதியின் பேரைக் கேட்டாலே சொல்லிவிடுவார்கள்..அது சினிமாகாரர்கள் தெரு என்று.

நவீன கட்டிடடங்களும்....எளிவேஷன் செய்யப்பட சுவர்களும்... வரிசையாக காட்சியளிக்க...ஒரு சிறிய கிராமத்தையே ஒரு வீட்டிற்குள் அடக்கி விடலாம் என்னும் அளவிற்கு பெரிய பெரிய வீடுகளுமாய் இருந்தது அப்பகுதி.

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தனித் தீவாய் காட்சியளிக்க....வெளியில் இருக்கும் பிரமாண்டம் உள்ளே இல்லை என்னும் அளவிற்கு...தன் வீட்டு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிச்சி செய்து கொண்டிருந்தான் அஜய்.

ஆண்களில் சற்று உயரம்...நல்ல நிறம்...ஒரு முன்னணி கதாநாயகனுக்கு தேவையான அனைத்தும் அவனிடம் இருந்தது.இல்லையென்று சொன்னால் அதை உருவாக்கி கொள்ளும் அளவிற்கு வல்லமையும்,ஆற்றலும் படைத்தவன்.நினைத்ததை முடிக்கும் மன ஆற்றலும்...அளவிற்கு அதிகமான பிடிவாதமும் கொண்டவன்.

தான் நினைத்ததை முடிக்க எந்த எல்லைக்கும் போவான்.தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் என்பது அவனின் தார்மீக கொள்கையாகவே இருந்தது.

பந்தா பகட்டும் இருக்காது...ஆனால் திமிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்...அது அவனின் துறைக்கே உரித்தான திமிர் போல.

தந்தை கிடையாது.தாய் மட்டுமே.அவரின் பெயர் சாந்தா.பெயரில் இருக்கும் சாந்தம் நடப்பில் கிடையாது.பெரிய ஹீரோவின் அம்மா என்ற அகம்பாவம் அவருக்கு எப்பொழுதும் உண்டு.கிளப்,பார்ட்டி என்று செல்ல நேரம் இருந்த அவருக்கு...மகனின் நேரத்தை பற்றி கவலையில்லை.அவனும் அதற்காக வருத்தப்பட்டானில்லை.

ஒரே வீட்டில் இருந்தாலும்...இருவரும் ஒரு தனித்தீவு என்று தான் சொல்ல முடியும்.

“சார்...” என்றபடி வந்து நின்றான் கண்ணன்.அவனுடைய பெர்சனல் பிஏ.

“சொல்லுங்க..!” என்று பார்வையால் அனுமதி கொடுத்தவன்..தன் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

“எஸ்.கே ப்ரொடக்சன்ஸ் படத்துக்கு நாளைக்கு இருந்து கால்ஷீட் ஸ்டார்ட் ஆகுது சார்...” என்றான் பவ்யமாய்.

“நாளைக்கு ஷூட்டிங் இருக்கு...இன்னைக்கு வந்து சொல்றிங்க..? ஒன்னு பண்ணுங்க...நாளைக்கு காலையில வந்து சொல்லுங்க..!” என்றான் உருத்து விழித்த பார்வையுடன்.

வார்த்தையில் தான் கோபமில்லை...ஆனால் கண்கள் முழுதும் கோபம் இருந்தது.

கண்ணனும் என்ன பண்ணுவான்.அவனுக்கு இடைவிடாத படப்பிடிப்பு...சில சமயங்களில் கண்ணனே குழம்பிப் போவான். அவ்வளவு பிசியாக இருந்தான் பீல்டில்.எதற்காக இப்படி உழைக்கிறான் என்று தெரியாத அளவிற்கு படு பிசியாக இருந்தான் அஜய்.

ஆனால் அதை சொன்னால் இன்னமும் எகிறுவான் என்பதால்...”சாரி சார்..” என்றான் தன்மையாய்.

“இட்ஸ் ஓகே லீவ் இட்..” என்றான் அஜய்.

அவனிடம் இருக்கும் நல்ல பழக்கம் இது தான்.எதிரே இருப்பவர்கள் சாரி சொல்லிவிட்டால்..இவனும் உடனே கோபத்தை கைவிட்டு விடுவான். அவன் மீது தப்பே இருந்தாலும் கூட...அடுத்தவர் தான் “சாரி” சொல்ல வேண்டும் என்று என்னும் எண்ணம்.அப்படி ஒரு பிறவி அவன்.

“ஷூட்டிங் ஸ்பாட் எங்க..?” என்றான் சாவகாசமாய்.

“அது ஒரு வில்லேஜ் சார்....நன்னியூர்...!” என்றான்.

“வாட்..!” என்று அதிர்ந்தவன்...

“என்னா ஊர்...!” என்றான் அதிர்ச்சியாய்.

“நன்னியூர்...” என்றான் கண்ணன் மீண்டும்.

அவ்வளவுதான் அஜய்யின் முகம் செந்தணலாய் மாறியது.”உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா..இதை இப்ப வந்து சொல்ற...எனக்கு வில்லேஜ் ஸ்டோரில நடிக்கிற ஆர்வம் இப்ப சுத்தமா இல்லை..நீ கம்பெனிக்கு கால் பண்ணி சொல்லிடு..” என்றான் அசால்ட்டாய்.

“சார்...அது வந்து..அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டாங்க சார்...!” என்று கண்ணன் பயத்துடன் சொல்ல...

“வாட்...? யார் வாங்கியது..?” என்றான் கோபமாய்.

“அம்மா தான்..” என்று அவன் அமைதியாய் சொல்ல...

“ஷிட்..”என்று ஓங்கி கைகளால் குத்தியவன்...

“ஓகே...எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடு...” என்றபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் நகர்ந்த பின் தான் கண்ணனால் மூச்சு கூட விட முடிந்தது. இன்னும் ஒரு வாரம் அந்த ஊரில் இவனை வைத்து எப்படி சமாளிக்க போகிறோம்..” என்று எண்ணியவனுக்கு தான் பயம் அப்பிக் கொண்டது.

ஏனென்றால் அஜய்க்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும்.இம்மியும் அடுத்தவர்களுக்காக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள மாட்டான்.

“என்னாச்சு என்ன சொன்னான்..?” என்றார் சாந்தா..கீழே இறங்கி வந்த கண்ணனைப் பார்த்து.

“சரின்னு சொல்லிட்டார் மேம்..” என்றான் கடுப்பாய்.

“அதையேன் கடுப்பா சொல்ற...இதுக்கு தான் உனக்கு சம்பளம் கொடுக்குறோமா...சொல்றதை மட்டும் செய்..சும்மா முகத்தை தூக்கி வச்சு பேசிட்டு இருந்தா நான் அவனுக்கு வேற பிஏவ பார்க்க வேண்டி வரும்..” என்றார் சாந்தா கடுமையுடன்.

இந்தம்மா செஞ்சாலும் செய்யும் என்று எண்ணியவன்...”சாரி மேம்..” என்றான் பவ்யமாய்.

“அந்த பயம் இருக்கட்டும்....” என்றபடி செல்ல....

“இந்தம்மாவுக்கு இதே வேலையா போய்டுச்சு...! சார் அங்க நாயா உழைக்கிறாரு..இந்தம்மா இங்க தண்ணியா செலவு பண்ணுது...ம்ம் நமக்கெதுக்கு வம்பு..” என்று எண்ணியவன்...நன்னியூர் செல்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றான்.

ஆனால் அஜய்க்கோ....நன்னியூர் என்றதும் அவள் நியாபகம் தான் வந்தது.

மூன்று வருடங்களாக மனதில் மாறாத நினைவு.ஊரின் பெயரை சொன்னவுடன் திகைக்கும் அளவிற்கு அவனை பாதித்திருந்தாள் அவள்.

“வேண்டாம் அஜய்..உன் உயரம் வேறு...அவள் உயரம் வேறு.உன் வாழ்க்கை முறை வேறு..அவள் வாழ்க்கை முறை வேறு.நிழற்படத்தில் பார்த்தவள் என்றும் நிஜமாகப் போவதில்லை....என்று மனம் அவனுக்கு எவ்வளவு அறிவுறுத்தியும் ....அவன் கேட்டபாடில்லை.

“இந்த பயணத்தை ரத்து செய்...” என்று உள்ளிருக்கும் குரல் ஓங்கி ஒலித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

மனம் முழுவதும் மங்கலாய் பார்த்த புகப்படத்திலேயே நின்றது.

“சார்..” என்றபடி வந்தான் கண்ணன்.

“சொல்லுங்க..” என்றான்.

“இன்னைக்கு ஈவ்னிங் பிளைட் சார்...திருச்சி வரைக்கும் பிளைட்ல போயிட்டு..அப்பறம் கார் சார்..” என்றான்.

“வேண்டாம்..என் காரையே எடுங்க..” என்றான்.

“சார்..!” என்று அதிர்ந்தான் கண்ணன்.இதுவரை அவன் காரை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் எல்லாம் சென்றதில்லை.அனைத்தையும் கம்பெனிதான் செய்து கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருப்பான்.

கேரவண் எல்லாம் அவனுக்கு பக்காவாக இருக்க வேண்டும்.அதிக பந்தாவும் இல்லை...அதிக எளிமையும் இல்லை.தன் நிலையறிந்து செயல்படும் குணம்.

ஆனால் இன்று காரிலேயே செல்லலாம் சென்று அவன் சொன்னதை கண்ணனால் நம்பவே முடியலை.

“சார் அவ்ளோ தூரம்..” என்று இழுக்க..

“சொன்னதை செய்..!” என்பதுடன் முடித்துக் கொண்டான்.

காலம் அவனுக்கு வைத்திருப்பது என்னவென்று அவனுக்கு தெரியவில்லை.வாழ்க்கை என்ன புதிரை வைத்திருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை.தெளிந்த நீரோடையாய் போய்க் கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் குளத்தில் எறிந்த கல்லாய் அவள் மாறிப் போனது ஏனோ..?

கலங்கிய குளத்தில் மீன் பிடிக்கலாம் என்பதைப் போல....அவன் மனதில் விழுந்த அவளின் நினைவு....அவளுக்கு பிடிக்குமா..

தனக்குள் விழுந்திருக்கும் உணர்விற்கு என்ன பெயர் என்பதை அவன் அறிவானா..? என்பதை எண்ணி..விதி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
 
சக்தி கொஞ்சம் வித்தியாசமான ஹீரோயின் தான்.

ஹீரோ அஜய் திரைவானில் மின்னும் ஹீரோ. நன்னியூர் என்று சொன்னதும் ஞாபகம் வருவது சக்தியின் முகம் தானா?

எதிரெதிர் துருவங்களாய் இருவரும்.
அப்போ கண்டிப்பாக கதை சுவாரஸ்யமாகத் தான் இருக்கும்.
 
Top