Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 4

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 4:

ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.

அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும் ஆத்துல குளிச்சுட்டு வரார்...” என்று எண்ணியவன்...அதை அஜய்யிடம் கேட்டும் துணிவின்றி அமைதியாக இருந்தான்.

கேரவனுக்குள் புகுந்த அஜய்க்கோ....என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு.அவள் இதழை தீண்டிய வேட்கை இன்னும் அவனை விட்டு அகன்ற பாடில்லை.அந்த உணர்விலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.அப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்று அவன் எந்த முன் திட்டமும் தீட்டவில்லை.

ஆனால் அவளின் பேச்சு,அவளின் நடவடிக்கை எல்லாம் அவனை தூண்டிவிட....அவளின் கையைப் பிடித்தவனுக்குள் மின்சாரத்தின் பாய்ச்சல்.அவளைத் தன் மேல் விழ வைக்க அவன் செய்த யூகம்...அவளிடம் தோற்றுப் போக...அந்த கடுப்பில் இருந்தவன்.. வேகமாக அவளின் இதழைத் தீண்டிவிட்டான்.

ஆனால் மனம் இப்பொழுது...அந்த தீண்டல் மறுபடியும் வேண்டும் என்று ஏங்க..தன் மனம் போன போக்கை எண்ணியவனுக்கு சிறு வியப்பு.

“யாரவள்...? ஒரு சாதாரண கிராமத்துப் பெண்..அழகிற்கு குறைவில்லை. ஆனால் அதை தவிர்த்து என்ன உள்ளது அவளிடம்...சரியான படிப்பு கிடையாது...நாகரிகம் கிடையாது...ஒரு சினிமா ரசனை கூட இல்லை..அப்படி இருக்கும் பட்சத்தில்..எது என்னை அவளை நோக்கி இழுக்கிறது...ஒரு சின்ன பெண் எந்த வகையில் என்னை பாதிக்கிறாள்....

அவள் நினைவு என்னை பாதிக்கிறது என்றால் அந்த அளவு நான் பலவீனமானவனா..? இல்லை என் மனம் தான் தவறாக யோசிக்கிறதா...?” என்று தனக்குத் தானே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க...

“அவள் உன் மனதில் நுழைந்து ஒரு வருடம் ஆகிறது...உனக்குத்தான் அது புரியவில்லை மகனே..!”என்று மனம் ரவுண்டு கட்ட...

“இல்லை...அவளை எனக்கு பிடிக்காது...! என்னுடைய மார்க்கெட்டையே பின்னால் தள்ளியவள் அவள்..அவளிடம் எனக்கு என்ன ஈர்ப்பு..அவளை என் காலடியில் விழவைப்பேன்..” என்று தனக்குள் சபதம் எடுக்க...

விதி அவனைப் பார்த்து சிரித்தது....”அவளை உன் காலடியில் விழவைக்க போகிறாயா..? இல்லை அவள் காலடியில் நீ விழப் போகிறாயா..?” என்று.

அவன் இதழ் பட்ட இடத்தில் அவள் பச்சை மிளகாயை தேய்த்த அந்த நிமிடம்..அவன் கண்ணிற்கு முன்னால் வர....”இருந்தாலும் உனக்கு ஆங்காராம் அதிகம் தான்....நான் குறைக்கிறேன் அதை..” என்று எண்ணிக் கொண்டிருக்க...

“சார்..ஷாட் ரெடி...” என்று ஆட்கள் வந்து சொல்ல...அவளின் நினைவுகளை பின்னுக்குத் தள்ளியவன்...வேகமாய் கேரவனிலிருந்து வெளியே சென்றான்.

மேக்கப் மேன் வேகமாய் வந்து மீண்டும் அவனுக்கு ஒரு டச் அப் கொடுக்க....பிறகு தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினான்.

முன்னனி ஹீரோ என்பதால்..அங்கே கூட்டம் அலைமோத....அவனுக்கு பாதுகாப்புத் தர....அங்கே காவல்துறையினர் நின்றிருந்தனர்.

விவசாய பின்னணி கொண்ட வேடத்தில் அவன் நடிக்க...அவன் உடையும்..வேட்டி சட்டையாக இருந்தது.

“வெள்ளை வேட்டியும்....வெள்ளை சட்டையுமாய்...இடுப்பில் கைவைத்தபடி அவன் நிற்க....”

அவனை அப்படிப் பார்த்த கண்ணனுக்கு....”ச்ச்ச...இவர் மட்டும் எதுக்கு இப்படி அழகா பிறந்து தொலச்சாரோ தெரியல..மனுஷன் என்ன டிரஸ் போட்டாலும்..சும்மா அள்ளுது...” என்று எண்ணிக் கொண்டு அவனை ரசனையோடு பார்க்க...

“இங்க வாங்க கண்ணன்..” என்றான் அஜய்.

“சார்..” என்றபடி வேகமாய் அருகில் போக..

“என்னை சைட் அடிக்கிறதை விட்டுட்டு ஆகுற வேலையைப் பாருங்க...கிரவுட் அதிகம் ஆகுற மாதிரி தெரியுது..சோ..டைரக்டர் கிட்ட பேசுங்க...! அப்பறம் ஷூட்டிங் பாதிக்கும்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..வந்து இறங்கினாள் துப்னா.

அவள் வருவதைப் பார்த்த இளைஞர் பட்டாளம்...அங்கே கரகோஷத்தை எழுப்ப....அனைவரையும் பார்த்து கையை ஆட்டியவள்..அஜய்யின் புறம் திரும்பி...ஒரு சவாலான பார்வை பார்க்க...

அஜய்யின் மனதிலோ...கோபத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.கண்களில் கனலைக் கக்கியவன்....திரும்பி கண்ணனை முறைக்க...

“இந்தம்மா வேற சும்மாவே இருக்காது...!ஏற்கனவே இங்க சார்... எரிஞ்சுக்கிட்டு இருக்கார்..இந்தம்மா வந்ததும் வராததுமா எண்ணையை வேற ஊத்துது....” என்று எண்ண...

மீண்டும் பிரச்சனை எதுவும் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய டைரக்டர் வேகமாக அஜய்யின் அருகில் வந்து...”சார் ஷாட் போகலாம்...” என்றார்.

அவரைப் பார்த்து கோபமாகத் தலையாட்டியவன்....தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

கதைப்படி அன்று இருவருக்கும் இடையிலான ஒரு பாடல் காட்சியை எடுக்க முடிவு செய்திருந்தனர்.

ஹீரோயின் துப்னாவும்...கண்டாங்கி சேலையில் ரெடியாகி வர..அவளைப் பார்த்த இளவட்டங்கள்....அளவுக்கு அதிகமான ஜொல்லை வடிக்க..அந்த இடமே கலை கட்டியது.

“ரோலிங்...ஸ்டார்ட் ...கேமரா....ஆக்சன்...” என்ற வார்த்தைகள் காதில் கேட்ட மாயம்...டைரக்டர் சொன்னதை அஜய் ஒரே ஷாட்டில் சரியாக முடிக்க....அவனைப் பார்த்த இயக்குனர் வாயைப் பிளந்தார்.

துப்னாவும்...”நான் உனக்கு சளைத்தவள் இல்லை..” என்பதைப் போல் நடித்துக் கொண்டிருக்க...அவர்களின் நடிப்புத் திறனைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் வியந்தனர்.

“சரியான ஜோடி...” என்று யாரோ சொல்ல....அது கண்ணனின் காதில் விழுந்து வைக்க...

“டேய் மெதுவா சொல்லுங்கடா...சார் காதுல விழுந்தது...அப்பறம் அவரும் பேக் பண்ணிட்டு,உங்களையும் பேக் பண்ணிடுவார்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆற்றின் கரையோரத்தில் எடுக்க வேண்டிய ஷாட்களை அன்றைக்கு எடுத்து முடிக்க....எண்ணியிருந்தனர்.

அடுத்து நெற்பயிர்கள் விளைந்த வயலுக்குள் இரண்டு மூன்று ஷாட் எடுக்க வேண்டியிருந்தது.

ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்த ஒருவரின் வயலுக்கு சென்று பார்வையிட...அங்கு நெல் விளைந்து...புற்கள்...இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது.

“என்னய்யா..அன்னைக்கு பார்க்குறப்ப பச்சை பசேல்ன்னு இருந்தது...இன்னைக்கு இப்படி இருக்கு..” என்று டைரக்டர் சொல்ல...

“சார்....அறுவடைக்கு ரெடியகிருச்சு சார்..” என்று உதவி இயக்குனர் சொல்ல...என்ன செய்வதென்று தலையைப் பிடித்தார் டைரக்டர்.

அங்கே ஒருவன்...ஷூட்டிங்கை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க....

“தம்பி இங்க வாப்பா..!”
 
“நீ இந்த ஊரா..?”

“ஆமா சார்..!”

“இங்க...பச்சை பசேல்ன்னு இருக்குற வயல் இருக்கா...அதாவது இளம் நெற்கதிர் பருவம்...” என்று கேட்க...சற்று யோசித்தவன்..

“சார்...எங்க ஊர்ல..பெரியய்யா வயல்ல தான் எப்பவும் ரெண்டு வயல் மாறி மாறி சாகுபடி பண்ணிட்டே இருப்பாங்க..!” என்றான்.

“பெரியய்யாவா...? அவர் பேரு..?” என்றார்.

“சுந்தர மாகாலிங்கம்...” என்றான்.

“இப்ப அவரைப் பார்க்க முடியுமா..?” என்றார்.

“இல்ல சார்...அவரை சாயங்காலமா தான் பார்க்க முடியும்...!” என்றான்.

அதற்குள் அந்த இடத்தில் எடுக்க வேண்டிய ஷாட்களை அவர் மனதிற்குள் வரிசைப்படுத்த....அடுத்து நிறக் கூட நேரமில்லாமல்...காட்சிகள் படமாக்கப்பட்டது.

“சார்..ஐ ஆம் டயர்ட்..ஐ வான்ட் ஜூஸ்..” என்று துப்னா சொல்ல...

“இவங்க வேற ..எப்ப பார்த்தாலும் ஜூஸ்...அது இதுன்னுட்டு....” என்று கடுப்படைந்தவர்...கொஞ்சம் இடைவெளிவிட....

“ஒய்யாரமாய் அமர்ந்தவள்...ஜூசை மெதுவாகப் பருக...அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய்க்கு...அவளை கொலையே செய்யும் அளவுக்கு வெறி ஏற்பட்டது...”

துப்னா அவன் வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகளுக்கு பின்னரும்... அவன் இவ்வளவு தூரம் வளர்த்திருக்கிறான் என்றால் அது அவனுடைய தன்னம்பிக்கையால் மட்டுமே....

கர்ம வினைப்பயன் என்று ஒன்று உண்டு.நாம் விட்டாலும் வினைப்பயன் நம்மை விடாது என்று சொல்வதைப் போல...அவனின் வினைபயன் துப்னாவின் வடிவில் வந்து..அவனை ஆட்டுவித்தது ஓரு காலத்தில்.அதற்கு அவனின் அம்மா சாந்தாவும் ஒரு காரணம் என்றால்..அதுவே முழுக்க உண்மை.

சினிமா என்பது மாய உலகம்..அதற்குள் சென்றவர்கள் மீண்டு வெளியே வருவது கடினம்..வாழ்வோ,சாவோ..இறுதிவரை அவர்களின் பயணம்..அந்த உலகிற்குள் தான்.

வெளியில் பகட்டும்,மக்கள் மத்தில் பிரபலமாக இருந்தாலும்..தனிப்பட்ட அவர்கள் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால்..திரையில் காண்பதற்கு..நேரெதிர் குணமாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் அஜய்.திரையிலும் சரி,நேரிலும் சரி அவனுக்கு ஒரே முகம் தான்.தனக்கு பின்னால் கூட்டம் கூடுவதை அவன் எப்பொழுதும் விரும்பியதில்லை.அப்படி தானாக கூடும் கூட்டத்திற்கு அவன் பொறுப்பு எடுத்துக் கொள்ளவும் மாட்டான்.

இந்த துறையில் அவன் பெற்றது பணத்தை மட்டுமே..ஆனால் இழந்தது..அவன் வாழ்க்கை,மரியாதை,சுயகவுரவம்..இப்படி அனைத்தும்...எல்லாம் துப்னாவால்.

இதையெல்லாம் இழந்து,பல தடைப் படிகளைக் கடந்து தான்..இன்று இந்த உயரத்தில் இருக்கிறான்.

கடந்த காலம் என்றும் திரும்பாது என்ற கொள்கையில் நிலைப்பாடு உடையவன்..அதானால் நேரம் வீணாவதை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.

விரும்பி வந்த துறை இல்லையென்றாலும்..வந்த பிறகு அதை விரும்பத் தொடங்கியிருந்தான்.

“சார்..சார்..” என்று கண்ணன் இரண்டு முறை அழைக்க...சிந்தனையில் இருந்து மீண்டான்.

“ம்ம்..” என்க..

“சார்..நீங்க இன்னும் சாப்பிடலை..” என்று இழுக்க...

“நீங்க சாப்பிட்டாதான் சார்..நான் சாப்பிட முடியும்..” என்ற பதில் கண்ணனின் கண்களில் தொக்கி நிற்க...

“கேரவனுக்குள் அனுப்ப சொல்லுங்க..” என்றபடி மீண்டும் கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.

அங்கு துப்னாவோ...தன்னைப் பார்த்த பிறகும் அவன் அமைதியாய் இருப்பது கண்டு அவளுக்கு எரிச்சலாய் இருந்தது.

“எப்படியும் தான் இந்த படத்தில் நடிப்பது தெரிந்தால்..அவன் தாம் தூம் என்று குதிப்பான்...நடிக்க மாட்டான்...அவனைப் பற்றிய எரிச்சல்கள்.. செய்திகளாக வரும்...கிசுகிசுக்கள்..வரும் என்று எவ்வளவோ எதிர்பார்த்திருந்தவளுக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம் மட்டுமே..!”

அவனின் பார்வையில் இருந்த பொருள் அவளுக்கு புரியவேயில்லை.அதை யோசித்துக் கொண்டிருந்தாள் துப்னா.

“என்ன சார்..வெயில் இப்படி கொளுத்துது..இப்படி இடத்துல ஷூட்டிங் வச்சா..என்னோட ஸ்கின் எதுக்காகும்..?” என்று உதவி இயக்குனரிடம் காய்ந்து கொண்டிருந்தாள்.

“மேடம்..இது கிராம பின்னணி கொண்ட படம்ன்னு தெரிஞ்சு தானே ஓகே சொன்னிங்க..இப்ப என்னடான்னா..வெயில் அடிக்குது,புயல் அடிக்குதுன்னு குறை பட்டுகிறிங்க..? அஜய் சார் எவ்வளவு பெரிய ஹீரோ..அவரே இது வரைக்கும் இதைப் பத்தி ஒன்னும் சொல்லலை.நீங்க என்னடான்னா..?” என்று அவன் எரிச்சலைக் காட்ட...

“ஆமா அவன் பெரிய இவன்..!” என்று மனதிற்குள் குமுறியவள்... கேரவனுக்குள் செல்ல....

“மேடம் உங்களுக்கு இன்னொரு கேரவன் இருக்கு..!” என்றான் அந்த உதவி இயக்குனர்.

“ஏன்..? எப்போதும்..ஒரு கேரவன் தானே..? இன்னைக்கு என்ன புதுசா...?” என்றாள் கடுப்புடன்.

“அஜய் சார்...அவருக்கு கேரவன் தனியா தான் வேணும்ன்னு கேட்டுகிட்டார்...அதான்..” என்றான்.

“ச்ச்ச..நாம நினைச்சு வந்தது என்ன..? இங்க நடந்துகிட்டு இருக்குறது என்ன..?” என்று நினைத்தவள்...

“என்னமோ பண்ணித் தொலைங்க..!” என்றபடி சென்றாள்.

கேரக்டர் ஆர்டிஸ்ட்டுகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இயக்குனருக்கு...வயலுக்கு உரிமையானவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற அவஸ்தை வேறு...மாலை அனுமதி வாங்கினால்..அதிகாலையில்... அந்த அருமையான நேரத்தில் தான் நினைத்து வைத்திருக்கும் காட்சிகளை படமாக்கிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அஜய்யோ...துப்னாவை என்ன செய்வது..? என்ற தீவிர யோசனையில் இருந்தான்.



காட்டில் வேலைகள் முடிய....

“நாங்க கிளம்புறோம் சக்தி..நாளைக்கு என்ன வேலை..?” என்று அந்த பெண்கள் கேட்க..

“அக்கா...நாளைக்கு மேற்கால வயல்ல..கைக்களை எடுக்கணும்..அப்பத்தான் நாத்து நல்லா வளரும்..நெல்லும் புல்லும் அங்க ஒண்ணா தெரியுது..!” என்றாள்.

“சரி சக்தி..அப்ப..நாளைக்கு வெயிலுக்கு முன்னமே வந்து..சீக்கிரம் வேலையை முடுச்சுபுட்டு போறோம்...நாளைக்காவது சூட்டிங்க பார்க்க போகணும்..” என்று புலம்பியபடி அவர்கள் செல்ல..

அவர்கள் செல்வதைக் கண்ட சக்திக்கு அவர்களை நினைத்து சிரிப்பாக வந்தது.இந்த கிராமத்தை தாண்டி வெளியில் எதுவும் அறியாதவர்கள்.

என்ன தான் செல்போன்..அது இது என்று வந்தாலும்..முன்னேறாத பல கிராமங்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன.

சக்தியிடம் இருந்தது ஒரு பட்டன் செல் மட்டுமே..! அதுவுமே ஒரு அவசரத்திற்காக தான் வைத்திருந்தாள்.

என்ன தான் அவர்களிடம் அஜய்யை தெரியாது என்று சொல்லிக் கொண்டாலும்...மீண்டும் மனம் என்னவோ அவனை எண்ணியது.

அவனுடைய தீவிர ரசிகை இல்லை என்றாலும்..அவ்வப்போது அவனுடைய படங்களைப் பார்த்ததுண்டு.

திரையில் தெரியும் அவன் ஆளுமை,அவன் கண்கள்...படத்தை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பிரமிப்பைக் கூட்டும்.கதாநாயகன் என்று சொல்வதை விட அவனை கதைக்கு நாயகன் என்று சொல்லலாம்..என அவள் பல முறை நினைத்ததுண்டு.

ஆனால் அதையும் மீறி...அவனைப் பற்றிய கனவுகளில் மிதக்கும் அபலைப் பெண்ணோ...நுனி நாக்கு நாகரிக மங்கையோ அவள் இல்லை.நாகரிக வளர்ச்சி அறிந்தும்..அதை ஏற்றுகொள்ளாத ஒரு பெண்.எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு நிலவு தான்..வானம் வானம் தான்...என்ற கருத்துள்ளவள்.

கையில் இருந்த மம்புட்டி..இன்ன பிற பொருட்களையெல்லாம்..அங்கிருந்த மோட்டார் ரூமில் வைத்து பூட்டியவள்....வீட்டி நோக்கி நடையைக் கட்டினாள்.

“ஏற்கனவே விளைந்திருந்த மக்கா சோளத்தில் ஒரு கருதை ஓடித்தவள்....அதில் ஒவ்வொன்றாய் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே செல்ல...

இரு புறம் சோளத் தட்டைகள்..காற்றில் அவளுக்கு சாமரம் வீச...கலைந்திருந்த கூந்தல் காற்றில் ஆட..வெயில் மறைந்து...மாலைத் தென்றல் வீச...அந்த ஏகாந்தத்தை அனுபவித்தபடி...நடந்து கொண்டிருந்தாள்.

ஆனால்..மனதில் காலையில் நடந்த சம்பவம்..அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.யாரது...என்னைத் தொட எவனுக்கு தைரியம் இருக்கு...இன்னைக்கு போய் அப்பாகிட்ட சொல்லணும்...என்று அவள் நினைத்த வினாடி..

“என்னன்னு சொல்லுவா சக்தி..ஒருவன் என் உதட்டில் முத்தம் வச்சுட்டியான்னு சொல்லுவியா...?” என்று மனம் நக்கல் கேள்வி கேட்க..

“ச்சி..இதை எப்படி சொல்லுவேன்...” என்று நொந்து கொண்டாள்.ஆனால் மனம் மட்டும் அனலாய் இருந்தது.அவள் பெண்மைக்கு வந்த சோதனை...முதல் ஆண் ஸ்பரிசம்...ஆனால் யாரென்று பார்ப்பதற்குள் ஆற்றில் குத்தித்து விட்ட..அவன் சாமர்த்தியம்...” இப்படி யோசிக்க..அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

“ஆனால் அவனின் உயரத்தை எங்கோ பார்த்திருக்கிறாள்...ஆனால் நியபகத்திற்குள் வரவில்லை.எப்படியும் இங்க தான இருப்பான்.கண்டு பிடிச்சு அவனை செருப்பால அடிக்கணும்..” என்று மனதிற்குள் சபதம் எடுத்துக் கொள்ள...

இவள் சபதத்தைப் அறியாத அஜய்யோ.....இவளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தான்.

வீட்டிற்கு சென்றவள்...மீண்டும் குளிக்க செல்ல...

“என்ன சாமி சமைக்கட்டும்..?” என்று கேட்டு வந்தார் குப்பாயி அக்கா.

“என்ன செய்வீங்களோ..செய்ங்க அக்கா..! நான் குளிச்சுட்டு வந்துடுறேன்..” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.

“குப்பாயி..ஒரு டீ குடும்மா..!” என்றபடி வந்து அமர்ந்தார் மகாலிங்கம்.

இதோ எடுத்துட்டு வரேங்கய்யா...!” என்றபடி அவர் செல்ல..

“சக்தி எங்கம்மா..?” என்றார் பாப்பம்மாவிடம்.

“இப்பதான்ய்யா வந்தா..குளிக்க போயிருக்கா...” என்றார்.

“வேலை செய்ய அத்தனை ஆள் இருக்கும் போது...பாப்பா எதுக்கு போய் வேலை செய்யுது...சொன்னாலும் கேட்குறது இல்லை....” என்று சொல்ல...

“சொன்னா எங்க கேட்குறா உன் மக..உடையவன் உட்கார்ந்து சாப்பிட்டா உலக்கை கூட மிஞ்சாதுன்னு...வேதாந்தம் பேசுவா..” என்று பாப்பாம்மாள் குறைபட...

“நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு ஆன பிறகு எப்படி சக்தியை விட்டுட்டு இருக்க போறோம்ன்னு தெரியலை..ஆம்பிளைப் பிள்ளை இல்லாத குறையே இல்லாம பார்த்துகிட்டா..வயலு,தோப்புன்னு..எல்லாமே பாப்பா பொறுப்புதான்...பாப்பாவுக்கு அப்பறம் எப்படி சமாளிக்க போறோம்..?” என்று அவர் இயலாமையில் தவிக்க...

“இப்ப என்ன ?அவளைக் கட்டிக்க போறவன் கிட்ட பொறுப்பைக் கொடுத்துடுவோம்..அப்பறம் அவளாச்சு அவ புருஷனாச்சு..இதுகெல்லாம் கலங்கலாமா ராசா..?” என்று பாப்பம்மாள் ஆறுதல் சொல்ல...

“ஐயா...!” என்றபடி வந்து நின்றார் ஒருவர்.

“சொல்லுப்பா என்ன விஷயம்..?” என்றார்.

“உங்களைப் பார்க்க..அந்த சினிமாக்காரங்க வந்திருக்காங்கய்யா..!” என்றான்.

“என்னைப் பார்க்கவா...? என்ன விஷயமா இருக்கும்...? சரி வர சொல்லு..” என்றார்.
 
Top