Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 14

வனமாலியும் கமலியும் அப்போது தான் வனமாலியின் வீடு வந்திருந்தனர். முதல் நாள் திருமணம், அது இதென்ற எவ்வித பரபரப்பும் இல்லை. இருவரும் எப்போதும் போலிருக்க, வீட்டில் இருந்த ஒருசில விருந்தினர்களும் கிளம்பியிருக்க, வீட்டினில் ஒருவித அமைதியே நிலவியது.

சிவகாமியோ “நீங்க அங்க போயிடுங்க.. அங்க வந்து தான் மறுவீடுக்கு கூப்பிடனும்..” என்றிருந்தார் மகளிடம்.

“ம்ம்மா அப்போ நீ அங்க வருவியா??!!”

“ஏன் வந்தா என்ன?? இப்போ அது என் பொண்ணு வீடு...” என்று சிவகாமி மிடுக்காய் கூற, “ம்ம்ம்...” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள் கமலி.

காலையில் எழுந்ததுமே, வனமாலியை தான் பார்த்தாள், கட்டிலில் சற்றே தள்ளி படுத்திருந்தான். அவன் ஒரு ஓரம் இவள் ஒரு ஓரம் என்றெல்லாம் இல்லை. ஒட்டியும் இல்லாது கொஞ்சம் தள்ளி படுத்திருக்க, கமலிக்கு முதல் நாள் இவன் சொன்னது தான் நினைவில் வந்தது.

“திடீர்னு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சா.. சோ...” என்று வனமாலி இழுக்க, “சோ...!!” என்றாள் இவளும் அவனைப் போலவே..

வேறெதுவோ சொல்ல வந்தவன் “உனக்கு டென்சன் இல்லையா?? ஹாயா இருக்க??” என்றான் அவள் என்னதான் சொல்கிறாள் என்று பார்க்க.

அவளோ “நியாயமா பார்த்தா நான் இந்நேரம் எல்லாரையும் உண்டு இல்லைன்னு செஞ்சு அப்படி ஒரு சண்டை போட்டிருக்கணும்.. செய்யலைன்னு சந்தோசப் படுங்க..” என்றாள் வேகமாய்..

‘அதானே பார்த்தேன்...’

“என்ன???”

“இல்ல.. இப்படியான அரேஜ்மேன்ட்ஸ் பார்த்து யாருக்குமே கொஞ்சம் சங்கோஜமா இருக்கும்தானே..” என்றான் அவர்களுக்கென்று ஒதுக்கிய அறையை காட்டி.

“உங்களுக்கு இருக்கா அப்படி??!!”

“நான் உன்னைக் கேட்டா நீ என்னை கேட்கிறியா???”

“ஹா ஹா நீங்கதானே சொன்னீங்க நானும் நீங்களும் வேற இல்லன்னு...” என்றவள், “நான் ஒண்ணு சொல்லணுமே...” என்றாள் கொஞ்சம் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து.

“எதுவா இருந்தாலும் என்னைப் பார்த்து சொல்லு..” என்றவன், அவள் திரும்பவும் என்னவென்று பார்க்க,

“அது... ம்ம்ம்... நம்ம கொஞ்சம் சீக்கிரமே குழந்தை பெத்துக்கணும்..” என, “ஹா...!!!” என்று வனமாலி அதிர்ந்து தான் பார்த்தான்.

‘இன்னும் இவளைப் பத்தியே முழுசா தெரியாது இதுல குழந்தை.. அதுவும் சீக்கிரமா??!!!’ என்று அவன் மனம் நினைக்க, “என்ன?? என்ன சொன்ன??!!” என்றான் நம்பாது.

எதையும் முதல் முறை சொல்லும்போது தானே கொஞ்சம் தயக்கம் கூச்சம் எல்லாம் இருக்கும்.. இரண்டாவது முறையெனில் அதெல்லாம் கொஞ்சம் தகர்ந்துதானே போகும். ஆக இப்போது கமலிக்கும் வார்த்தைகளில் கொஞ்சம் அழுத்தமே வந்தது.

“நம்ம கொஞ்சம் சீக்கிரம் அப்பா அம்மா ஆகணும்...” என்று திடமாய் சொன்னாலும், அவளுக்கு என்னவோ அந்த நொடி அவனை நேராய் காண முடியவில்லை.

வெளியே திடமாய் காட்டிக்கொண்டாலும், உள்ளே அவளின் அவஸ்தை அவனுக்குப் புரிய, “ம்ம்ம்.. அப்புறம் ...” என்றான் சுவாரஸ்யமாய்.

“என்ன?? அதான் சொல்லிட்டேனே..”

“இது மட்டும் தானா...”

“ஆமா...”

“ம்ம் நம்ம ஹஸ்பன்ட் வொய்ப் தான்.. நமக்குள்ள எதுவும் நடக்காதுன்னு எல்லாம் இல்லை. பட் இந்த சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் தான் புரியலை???!!!” என்று வனமாலி கேட்க, கமலி கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தாள்.

“பதில் சொல்லு கமலி.. நீ இது சும்மா சொல்லலைன்னு தெரியும்.. சொல்லு..”

“அது...”

“சொல்றப்போ தயங்கல.. இப்போ தயங்குற...”

“அது நம்ம குழந்தை தான் இந்த குடும்பத்தோட முதல் வாரிசா இருக்கணும்...” என்று அவள் சொல்கையில் அவள் கண்களில் தான் எத்தனை உணர்வுகள்.

தவிப்பு.. ஏக்கம்.. ஒருவித குழப்பம்.. நிறைய நிறைய கேள்விகள்.. ஏமாற்றங்கள் இப்படி அனைத்தும் கலந்த கலவையாய் அவள் கண்களில் தெரிந்த உணர்வுகள் வெளிப்பட, இதற்குமுன் தான் பார்த்த கமலி இவளில்லையோ என்று தான் தோன்றியது வனமாலிக்கு..

“என்ன கமலி...!!” என்று ஆதரவாய் அவளின் கைகளைப் பற்றியவன், “நீ இப்போ எதுவும் நினைக்காத..” என,

“முடியலை... நினைக்காம இருக்க முடியலை.. யார் தப்பு யார் சரி.. எதுவுமே எனக்கு புரியலை.. நா... நான் இங்க வந்திருக்கக் கூடாதுன்னு தோணுது...” என்றாள் கண்ணில் நீர் வழிய.

“ஏய்.. இப்போ ஏன் இப்படி பேசற...”

“இல்ல.. சில விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாத வரைக்கும் அதைப்பத்தி நமக்கு பெருசா எதுவும் இருக்காது தானே... ஆனா இங்க வந்து அந்த போட்டோஸ் எல்லாம் பார்க்கிறப்போ நான் ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன் தெரியுது...”

“ம்ம்ம்..”

“எனக்கே இப்படினா அம்மா ரொம்ப பாவம்ல...”

“ம்ம்ஹும்.. இல்ல கமலி. அத்தை பாவமில்லை..” என்று வனமாலி கூற, கமலி புரியாது பார்த்தாள்.

“அத்தைக்கு தான் எந்த இடத்துல இருந்தா அவங்க மரியாதை கெடாதுன்னு நல்லா தெரிஞ்சு தான் இப்பவும் கூட தள்ளி நிக்கிறாங்க.. ஒருவேள அத்தை இங்கயே இருந்திருந்தா, நிச்சயம் வீட்ல பெரிய பெரிய பிரச்னைகள் வந்திருக்கும்..”

“வர வச்சிருப்பாங்க...”

“ம்ம் ம்ம் சரி.. வர வச்சிருப்பாங்க.. ஒருவேளை மாமா மனசுல கூட அத்தை மேல சில கசப்புக்கள் வந்திருக்கலாம்..”

“அதையும் வர வச்சிருப்பாங்க..”

“அடடா.. சரி வர வச்சிருக்கலாம்.. சோ அத்தை இதெல்லாம் அவாய்ட் பண்ண தனியா வந்தது சரின்னு எனக்கு எப்பவுமே தோணும்.. அவங்கனால தனியா எதையும் பேஸ் பண்ண முடியும் கமலி.. ஆனா இந்திரா அத்தை அப்படியில்லை..”

“அவங்களைப் பத்தி எனக்கு கவலையில்லை...”

“ம்ம்ச் பாத்தியா.. குடும்பனா எல்லாரும் சேர்த்திதான்..” அவனின் முதல் முயற்சியை வனமாலி இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டான்.

செய்யவேண்டும் என்றில்லை, ஆனால் அதற்கான வாய்ப்பை கமலியே கொடுத்துவிட்டாள். அவள் இந்த பேச்சை ஆரம்பிக்கவில்லை என்றால் நிச்சயம் அவனும் எதுவும் பேசியிருக்கப் போவதில்லை. ஆனால் இப்போது மனதில் ஓர் எண்ணம், எதையும் ஆரம்பத்தில் இருந்தே தெளிவு படுத்திவிடவேண்டும் என்று.

“எனக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை..” என்றவள் “குழந்தை இல்லைன்னு தானே ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க. பமீலா பிறந்ததுக்கு அப்புறம்..” என்று சொல்ல வந்தவள், கொஞ்சம் பேச்சை நிறுத்த,

“உன் மனசுல என்ன இருக்கோ அதை சொல்லி முடி கமலி..” என்றான் இவனும்.

“பமீலா பிறந்ததுக்கு அப்புறம்.. ஏ.. ஏன் என்னை பெத்துக்கணும்..” என்றவளின் முகத்தில் அப்படியொரு வேதனை.

அவளின் இத்தனை வருட வேதனைகள் எல்லாம் இன்றுதான் மொத்தமாய் வெளி வருகிறதோ என்று இருந்தது வனமாலிக்கு. அவனுக்குத் தெரிந்து அவள் சிவகாமியிடம் கூட இதெல்லாம் பேசியிருக்கமாட்டாள் என்றே நினைக்கத் தோன்றியது. இப்போதும் கூட அப்பா என்ற ஒரு வார்த்தை அவளின் வாயில் இருந்து வரவில்லை.. ஆனால் அடிமனதில் நிறைய நிறைய அவரின் மீது பாசமிருக்கிறது என்பது மட்டும் அவள் புகைப்படங்களை பார்த்து கண்ணீர் சிந்தியத்தில் அவனுக்குப் புரிந்திருந்தது. மனதில் நிறைய நிறைய போட்டு குழப்பிக்கொள்கிறாளோ என்று நினைத்தவன்,

“ஹ்ம்ம் இதை நீயோ நானோ எதுவும் கேள்வி கேட்க முடியாது கமலி.. அத்தை மாமா அவங்க வாழ்ந்த வாழ்க்கை இதெல்லாம் அவங்க நமக்கு விளக்கனும்னு அவசியம் இல்லை..” என, வேகமாய் அவன் முகம் பார்த்தவள்,

“இதைதான் அம்மாவும் சொன்னாங்க...” என்றாள் வேகமாய்.

“அப்போ இதை அப்படியே அத்தைக்கிட்டயும் கேட்டியா??” என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் அவன் பார்க்க,

“இல்ல இல்ல.. உங்கக்கிட்ட கூட இதை எப்படி பேசினேன் தெரியலை.. ஆனா பேசிட்டேன்.. பட் அம்மா சொன்னாங்க.. நாங்க வாழ்ந்த வாழ்க்கை எல்லாருக்கும் விளக்கணும்னு இல்லை.. உனக்குன்னு ஒருத்தர் வர்றபோ புரியும்னு..” என்று கமலியும் சொல்ல,

“அப்புறமென்ன, நடந்ததை மாத்த முடியாது...” என்றான் இவளும் அவளை சமாதானம் செய்யும் விதமாய்.

“ஆனா நடக்கப் போறதை மாத்தலாமே...” என்று கமலி பார்க்க, வனமாலியின் பார்வை மாறியது.

“இங்க பாரு கமலி, நீ என் வொய்ப் தான் உனக்கு எல்லா உரிமையும் என்கிட்டேயும் நம்ம வீட்லயும் இருக்குதான். ஆனா உன்னால வீட்ல ஒரு பிரச்சனை வருதுன்னா நான் சும்மா இருக்கமாட்டேன்..” என்று கடின குரலில் சொல்ல,

“இதுவரைக்கும் நான் என்ன பிரச்சனை பண்ணிட்டேன்..??” என்றாள் இவளும் வீம்பாய்.
 
நிஜம்தான் இவளாக எதுவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் உணர்வுகளை தூண்டும் வகையில் கொஞ்சம் நடந்துகொண்டாள் தானே.. அவ்வளவு ஏன் வனமாலியையே எத்தனை கோவப்படுத்தி பார்த்திருக்கிறாள். அப்படியிருக்க, இனி அனைவரும் ஒரே வீட்டினில் என்கையில் கண்டிப்பாய் தினம் தினம் ஏதாவது ஒன்று நடக்கும் என்பது வனமாலிக்குப் புரியாதா என்ன??

“நீ பண்ணல தான்.. ஆனா இனிமே நிறைய நடக்கும் வீட்ல, அப்போ நீ தேவையில்லாத எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் சொல்றேன்..” என்றவன், “இப்போ இந்த பேச்செல்லாம் வேண்டாமே கமலி..” என்றான் பட்டென்று.

இத்தனை நேரம் பதிலுக்கு பதில், பேச்சிற்கு பேச்சென்று பேசியவன் திடீரென இப்படி சொல்ல, “என்னாச்சு??!!” என்றாள்..

“எதுவும் ஆகலை. இந்த ஒன் வீக்கா அவ்வளோ டென்சன்.. இன்னிக்காவது நல்லா தூங்கனும்...” என, கமலிக்கு சிவகாமி சொன்னதே நினைவில் வந்தது.

‘எத்தனை டென்சனை வச்சிட்டு இருக்கானோ..’ சிவகாமி அடிக்கடி இதை சொல்லிக்கொண்டு இருந்தார். ஆக, கமலியும் இப்போது வேறெதுவும் சொல்லாது “சரி தூங்கலாம்...” என்றுவிட,

“இன்னும் நீ சொன்னதுக்கு நான் பதில் சொல்லலை..” என்று அவளைப் பார்க்க,

“சொல்றதை நான் சொல்லிட்டேன்..” என்றுவிட்டு அவள் படுத்துவிட்டாள்.

“ஹ்ம்ம்... எல்லாம் தானா நடக்கணும் கமலி..” என்றவனும் தூங்கிவிட, அவளிடம் பதிலே இல்லை..

ஆனால் இருவருக்குமே மனதினுள் ஒரு புது உணர்வு. இருவருமே மற்றவரிடம் ஒதுக்கம் காட்டவேண்டும் என்று நினைக்கவில்லை. ரொம்பவும் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்றும் நினைக்கவில்லை. ஆனாலும் ஒரு இலகு நிலை. சகஜமாய் பேசும் ஒரு உணர்வு. இதற்கு முன் முறைத்திருந்தாலும், சண்டைகள் போட்டிருந்தாலும், இப்போது அதெல்லாம் இல்லை என்பதுபோலான மனம் திறந்த பேச்சு...

ஒருவருக்குத் தெரியாது மற்றவர் “ஹ்ம்ம்...” என்று மூச்சு விட்டுக்கொள்ள,

“உனக்காவது அப்பான்னு ஒருத்தர் கண் முன்னாடி இருந்தார்...” என்றான் மெதுவாய் வனமாலி.

திரும்பிப் படுத்திருந்தவள், “என்ன..??” என்று வேகமாய் அவன் பக்கம் திரும்பிட, “உண்மைதான...” என, “ம்ம்ம்... பட் நீங்க பீல் பண்ணிருக்கீங்களா..?”

“ரொம்பன்னு இல்லை. பட் கண்டிப்பா பண்ணிருக்கேன்..” என்று அவனும் மறைக்காது கூற, “அதனால தான் வந்தனா கோவர்த்தன் மேல கொஞ்சம் பாசம் ஜாஸ்தியோ...” என்றாள் கமலியும்..

“இருக்கலாம்..”

“ம்ம் நானும் கூட அப்பாங்கிற உறவுல ரொம்ப அட்டாச் ஆகலைதான்.. சோ என்மேலயும் பாசமா இருக்கலாம் தப்பில்ல...” என்று கமலி நமட்டு சிரிப்போடு கூற, “ஹா ஹா.. நீயும் தான்..” என்று அவனும் சொல்ல, “இருக்கவிட்டா நல்லது..” என்றாள் கமலியும்..

“எதையும் நினைக்காம தூங்கு...” என்றவன் மெதுவாய் அவளின் முதுகில் தட்ட, கமலியின் இதழில் அவளும் அறியாது ஒரு புன்னகை.

வனமாலி தூங்கிவிட்டான் என்று லேசாய் இமைகள் திறந்து பார்த்தாள். உறங்கித்தான் இருந்தான், ஆனால் அவனது உதட்டிலும் ஒரு புன்முறுவல் ஓட்டிக்கொண்டு இருந்தது. அழகாய்.. சின்னதாய்.. வசீகரமாய்.. வாய் விட்டு சிரிப்பதை விட, வனமாலியின் இப்புன்னகை அவளுக்குப் பிடித்திருந்தது. அவளை வசீகரித்தது.

கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள் அப்படியே.. இவனை பிடிக்குமா என்பதுகூட அவளுக்கு அப்போது நம்ப முடியாததாய் இருந்தது. இதே எண்ணங்களோடு கமலியும் உறங்கிவிட, விடியல் எழுந்ததும் கூட, வனமாலி முகம் தான் பார்த்தாள். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சிவகாமி தான் அழைத்துவிட “சாப்பிட இங்க வாங்க..” என்றழைக்க,

பின் கமலியும் வனமாலியை எழுப்பி, இருவரும் தயாராகி கீழே வர, ராணி இவர்களை அழைத்துப் போகவென வந்திருக்க, அப்போதும் பமீலாவோ இந்திராவோ அங்கே கண்ணிலே படவேயில்லை. கமலியின் பார்வை அவர்களை தேட,

“நேரா பார்த்து நட..” என்று வனமாலி சொல்ல, “எனக்குத் தெரியும்..” என்றுவிட்டு அவளும் வந்தாள்.

இருவரும் அங்கே சென்று, காலை உணவு உண்டுவிட்டு, அடுத்தது என்ன என்று வனமாலி கமலியைப் பார்க்க, அப்போதுதான் சிவகாமி “அங்கே போங்க..” என்று வனமாலியின் வீட்டினை சொல்ல, இருவரும் கிளம்பி அங்கே சென்றனர்.

வீட்டினில் எப்போதும் இருப்பவர்களே இருக்க, வனமாலியும் கமலியும் ஹாலில் அமர, அப்போதுதான் கேட்டது மணிராதாவின் அறையில் நடந்த பேச்சு சத்தம், வந்தனா வந்து “இந்திரா அத்தையும் பமீலாவும் பேசுறாங்க..” என்றுசொல்ல,

வனமாலியோ “சரி விடு..” என, “அம்மா ரொம்ப டென்சன் ஆகுறாங்க...” என்றாள் வந்தனா.

“ஏன் என்னவாம்..” என்று வனமாலி கேட்கும்போதே,

உள்ளே “நீங்க உங்க பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு எங்க வாழ்க்கையோடு விளையாடுறீங்க..” என்று பமீலா கத்துவது வெளியே நன்றாய் கேட்டது.

கமலி இதைக் கேட்டு வனமாலியைப் பார்க்க, அவனோ வந்தனாவிடம் “தனா எங்க?” என்று கோவர்த்தனை கேட்க,

“இவ்வாளோ நேரம் பேசி பேசி பார்த்துட்டு வெளிய போயிட்டான்..” என்றவள் “சொத்து பிரிச்சு கொடுக்கணுமாம்..” என்றாள் மணிராதாவின் அறையைப் பார்த்தபடி.

“என்னது?!!!” என்று வனமாலி கொஞ்சம் சத்தம் கூட்டிட,

“ம்ம்.. பமீலா கேட்கிறா..”

“நீ போ.. போய் அம்மாவை கூப்பிடு.. நாங்க வந்துட்டோம் சொல்லு..” என்று வனமாலி சொல்ல, வந்தனாவோ தயங்கி கமலியைப் பார்த்தாள்..

“நீ போய் கூப்பிடு வந்தனா...” என்றான் அழுத்தம் திருத்தமாய் வனமாலி.

“ம்ம்...” என்றவள் போய் மணிராதாவிடம் “ம்மா அண்ணனும் அண்ணியும் வந்துட்டாங்க..” என்றாள்.
 
“அண்ணியா?? யார் அண்ணி உனக்கு?? என்னை ஒருதடவை அப்படி சொல்லிருப்பியா.. என்னை விட சின்னவ அவ உனக்கு அண்ணியா..?” என்று ஆங்காரமாய் கத்திக்கொண்டு வெளியே வந்தாள் பமீலா.

“ஷ்...!!!” என்று வனமாலி நெற்றியைத் தேய்க்க, அவனின் மறுகரமோ கமலியின் கரத்தினை பற்றியிருந்தது ‘நீ எதுவும் பேசிடாதே..’ என்று சொல்வதாய்.. கமலியும் அது புரிந்தவள் போல அப்போதைக்கு பேசாது இருக்க, மணிராதாவோ இருவரையும் பார்த்தவர் “வந்தனா சாப்பிட எடுத்து வை..” என்றார்.

“நாங்க சாப்பிட்டோம் ம்மா..” என்றவன் “என்ன சத்தம்...” என்றான் பொதுவாய்..

இந்திரா வந்தவரோ இவர்கள் இருவரையும் பார்த்து ஒன்றும் சொல்லாது இருந்துகொள்ள, “அத்தை நீங்க இன்னும் எங்களுக்கு ஆசிர்வாதம் செய்யலை..” என்று வனமாலி சொல்லியபடி எழ, அவனோடு சேர்ந்து கமலியும் எழுந்தது அனைவர்க்கும் புதிதாய் இருந்தது.

சண்டை அவள் மூலமாய் வரும் என்று பார்த்தால், இங்கே நடப்பது எல்லாமே வேறாக இருந்தது. வனமாலி கமலியைப் பார்த்தவன், இந்திராவின் அருகே செல்ல “ம்மா நீ அவங்களுக்கு எதுவும் செய்யக் கூடாது...” என்று பமீலா நடுவே வந்தாள்..

‘ச்சே என்ன இந்த பெண்..’ என்று மணிராதா அவளை “பமீலா என்ன இதெல்லாம் என்னாச்சு உனக்கு..” என்று திட்ட,

“அடேங்கப்பா.. என்ன ப்ளேட் மாறுதோ.. அப்போ உங்க பொண்ணு வாழ்க்கைய இவ கெடுத்துடுவான்னு பயந்து எல்லாத்துக்கும் சும்மா இருப்பீங்க.. நாங்க எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாக்கனுமோ..” என்று கத்த, வந்தனா அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எரிச்சலோடு உள்ளே சென்றுவிட்டாள்.

கமலியின் கரங்களை பற்றியிருந்த வனமாலியின் பிடியோ இறுக, கமலியின் பார்வை அப்போதும் வனமாலியிடம் தான் இருந்தது.

“இப்போ உனக்கு என்ன வேணும் பமீலா..” என்று அவன் பமீலாவிடமே கேட்க,

“இவ இருக்கிற இந்த இடத்துல நான் இருக்க மாட்டேன். எங்க பங்கு சொத்தை பிரிச்சு கொடுங்க. நாங்க தனியா போறோம்..” என்றாள் கமலியின் முகத்தினை வெறுப்பாய் பார்த்து.

“ம்ம் அப்புறம்..”

“என்ன வனா மாமா நான் கதையா சொல்றேன்.. எங்களுக்கு சேர வேண்டியதை பிரிச்சு கொடுங்க.. நாங்க போறோம்..”

“எங்க போவீங்க??”

“எங்க போவோமா.. ஏன் போக இடமில்லையா என்ன?? எங்கப்பா வீடு கடல் மாதிரி இருக்கே...” என்றாள் பமீலா எகத்தாளமாய் கமலியைப் பார்த்து.

ஆக இதெல்லாம் கமலியை சீண்டவும், தூண்டி விடவும் தான் என்று வனமாலிக்கு நன்கு புரிய, கமலியைப் பார்த்தவன் “அதோ அதான் நம்ம ரூம் நீ போய் ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு.. எனக்கு வெளிய வேலை இருக்கு..” என்று நகரப் போக,

“எனக்கு பதில் சொல்லாம எங்கயும் போகக்கூடாது..” என்றாள் பமீலா.

வனமாலி இந்திராவைப் பார்த்தவன் “இவளுக்குத்தான் புரியலை.. உங்களுக்குமா எதுவும் தெரியாது. ஏன் அத்தை இப்படி இருக்கீங்க??” என்றான்.

அவரோ “இல்ல வனா.. அது.. அது வந்து...” என்று தயங்கினார்.

“என்ன வனா...” என்று மணிராதா கேட்க,

“ம்மா இது உனக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை.. ஆனா மாமாவோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆனப்பிறகு தான் இதை சொல்லனும்னு மாமா உயில் எழுதி வச்சிருக்கார்..” என்றவன்,

கமலியின் திகைத்த முகத்தினைப் பார்த்து “இது எனக்கும் தெரியாது சங்கிலி தாத்தா நேத்து காலைல தான் சொன்னார்..” என, “தாத்தாவா..??!!” என்றாள் கமலி வியந்து.

“ம்ம்.. பெரிய வீடு சிவகாமி அத்தைக்கும் கமலிக்கும்.. பின்னாடி தெருவில இருக்க இன்னொரு வீடு தான் இந்திரா அத்தைக்கும் பமீலாவுக்கும் மத்தது எல்லாம் பாதி பாதின்னு எழுதிருக்கார்..” என, இது மணிராதாவிற்கே புதிய விசயமாய் இருந்தது.

“என்ன அத்தை உங்களுத் தெரியும் தானே..” என்று வனமாலி கேட்க,

“ம்ம்..” என்றார் இந்திரா.

“ம்மா.. என்ன இது?? ஏன் என்கிட்டே சொல்லல நீ??” என்று பமீலாவின் மொத்த கோபமும் இப்போது அவளின் அம்மா மீது திரும்ப,

“எ.. எனக்கு இப்போதான் இவங்க கல்யாணத்துக்கு முதல்நாள் தெரியும்..” என்று இந்திரா சொல்ல, ஆக இதை சொல்லித்தான் சங்கிலிநாதன் அனைத்து ஏற்பாடுகளும் செய்தாரோ என்று அனைவர்க்கும் புரிந்தது.

“இல்ல.. இல்ல.. இல்ல.. அது என் வீடு.. நான் பிறந்து வளந்த வீடு.. அதை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.. முடியவே முடியாது.. நோ...” என்று பமீலா பைத்தியம் பிடித்தவள் போல கத்த, கமலிக்கோ ‘இதென்னட...’ என்றுதான் ஆனது.

வனமாலியோ ‘எல்லாம் உங்களால் தான்..’ என்று மணிராதாவைப் பார்க்க,

அவரோ “இந்திரா அவளை உள்ள கூட்டிட்டு போ..” என,

“நான் ஏன் போகணும்?? ஏன் போகணும்?? முடியாது.. இதுவும் என் வீடு.. அதுவும் என் வீடு.. நான் போகவே மாட்டேன்..” என்று அப்படியே தரையில் சம்மணம் இட்டு அமர்ந்துகொண்டாள் பமீலா.

அவளைப் பார்க்கும்போதும், அவள் பேசுவதைப் பார்க்கும்போதும் இவள் இயல்பாய் இல்லையோ என்றே நினைக்க முடிந்தது கமலிக்கும் வனமாலிக்கும்.
 
Mee first tuu.. ???

Vanamali vanthaale kuthoogalam thaan.. athuvum kamali and vana convo entertainment thaan.. ??

Aana innaki konjam feel aachu kamali pesurathu.. ? romba ekkam pola ava manasula

Pamila.. enaku oru doubt di.. unaku ennachu keelpaakam la admission pannanumo.. ?? naanum paakuren iva kathura kathura kathikitte iruka.. ? ithuvum un veedaam athuvum un veedaam loosaama nee

Shappaaa ipo vaavathu urimai thanthaangale magudeswaran..
 
Last edited:
Top