Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 20

பமீலாவிற்கு, கமலியைக் கண்டதும் முதலில் ஒரு மிரட்சி, பின் அவள்முன்னே தான் இப்படி தாழ்ந்து போனதாய் ஒரு எண்ணம், எல்லாம் சேர்த்து கமலியைப் பார்க்கவும் தலை குனிந்துகொள்ள, அங்கே அந்த அறையிலோ இந்திராவும் சிவகாமியும் இருந்தனர்.

சிவகாமியும் இவளோடு வந்திருக்க, வனமாலி தான் அழைத்துவந்தான், வந்தவனோ, ஏற்கனவே அங்கிருந்த மணிராதாவிடம் “ம்மா வா போகலாம்...” என,

அவரோ “நானும் இருக்கேனே..” என்றார் மகனிடம் மட்டும் மெதுவாய்.

“அங்க வந்தனா மட்டும் இருக்கா.. வீடு வெள்ளை அடிக்க ஆள் வருவாங்க.. வீட்ல வந்து இரு..” என்றவன், “கமலி கிளம்புறப்போ சொல்லு வர்றேன்..” என,

“நாங்களே ஒரு ஆட்டோல கூட வந்துக்கிறோம்..” என்றுவிட்டாள் அவள்.

ஆனால் மணிராதாவோ இவர்கள் என்னவோ பேசப் போகிறார்கள் என்று உணர்ந்து, “வனா நீயும் இரு கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்..” என, அவனோ கமலியின் முகம் பார்க்க, அவளோ ‘பரவாயில்லை..’ என்றவள்,

பமீலாவிடம் “ஏன் இப்படி பண்ண??” என்று கேட்க, பமீலாவோ திகைத்துப் போய் அவளைப் பார்த்தவள், பின் அவளின் அம்மாவை பார்த்தாள்.

“அவங்களை ஏன் பாக்குற?? எப்பவும் நம்ம பண்ணதுக்கு நம்மதான் பதில் சொல்லணும்..” என்றவள், “இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை??” என்றாள் ஒருவித நிமிர்வில்.

சிவகாமி எதுவுமே சொல்லவில்லை. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று அமைதியாய் இருக்க,

மணிராதாவோ ‘என்ன இது..’ என்று பார்க்க, இந்திராவோ மாறி மாறி ஒருவர் முகத்தைப் பார்க்க, கமலியோ “நான் தப்பா எதுவும் பேசலை..” என்றாள் அவரைப் பார்த்து.

வனமாலியோ சம்பந்த பட்டவர்கள் பேசட்டும் என்று இருக்க, மணிராதா “இப்போ இதெல்லாம் தேவையா??!!” என்றார்.

“இல்லை.. அது.. அது வந்து..” என்று இந்திரா திணற,

கமலியோ பமீலாவிடம் “நீ இங்க இருந்து வர்றபோ தெளிவா வரணும்.. அதான் சொல்றேன்..” என்றவள்,
சிவகாமியை ஒருமுறை பார்த்துவிட்டு, “இங்க பாருங்க உங்களை யாரும் அந்த வீட்டை விட்டு போக சொல்லப் போறதில்லை..” என்றாள் இந்திராவிடம்.

சிவகாமியோ “சிலது இங்க வச்சு பேசுறது சரியுமில்லை.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன் நானோ என் பொண்ணோ அந்த வீட்ல இருந்து உங்களை போன்னு எல்லாம் சொல்லமாட்டோம்..” என்றவர்,

பமீலாவிடம் “இனியாவது உன் வாழ்க்கையை வாழப் பாரு கண்டதையும் நினைக்காம.” என்றார் கொஞ்சம் கறாராய்.

பமீலாவும், இந்திராவும் கொஞ்சம் இவர்களின் பேச்சில் வாயடைத்துத்தான் போனாலும், அவர்களுக்கு ஈடாய் பேசவும் முடியாது போக, இத்தனை நாள் பமீலா பேசியதற்கு, கத்தியதற்கு எல்லாம் சேர்த்து இன்று வாய் மூடி நின்றாள். ஒரு வேகத்தில் ஒரு கோபத்தில் தன் கைகளை வெட்டிக்கொண்டாளே, தவிர உயிர் விடும் எண்ணமெல்லாம் எதுவுமில்லை.

ஆனால் அதன் பின்னே மனதில் ‘ஐயோ செத்து போயிடுவோமோ..’ என்ற பயமே அவளை பாடாய் படுத்தியிருந்தது. இந்திராவும் அதையே தான் சொன்னார் அவள் விழித்த பின்னே..

‘உனக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா..’ என்று..

அதிலும் கோவர்த்தன் அவளின் கரங்களை பிடித்துக்கொண்டு “ஏன் பமீ.. என்னை நீ நினைக்கலயா.. யார் என்ன செஞ்சாலும் உன்னையும் அத்தையும் நான் அப்படியே விட்டுடுவேனா என்ன??” என்று கேட்கையில் அவளுக்கு தொண்டை அடைத்தது.
உண்மையும் அதுதான். கணவன் என்று ஒருவன் இருக்கையில், அவள் அவனைப் பற்றி நொடியும் சிந்திக்கவில்லையே. தனக்காக, தன்னோடு வாழ என்று அவன் ஒருவன் இருப்பதை அவள் எள்ளளவும் எண்ணாது போக, கோவர்த்தன் அப்படி கேட்கவும் அவளால் அவனை பார்க்கவும் கூட முடியாது போனது..

மரணபயம் என்பது அவளுக்கு சில விசயங்களை உணர்த்தி இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.. வீட்டினர் யார் வந்து பார்த்தாலும் அமைதியாகவே இருந்தாள். ஆனால் கமலியும் சிவகாமியும் வந்து பேசுவர் என்று எதிர்பார்க்கவிலை.

அதிலும் கமலி இப்போது விடாது “சொல்லு உனக்கு என்னைப் பார்த்தா என்ன பயம்??” என்று கேட்க,

வனமாலியோ “கமலி..??!!” என்றான், இப்போ இது பேசாதே என்பதுபோல்.

“இல்லைங்க.. எப்போ என்னைப் பார்த்தாலும் இவ கண்ல வர்றது முதல்ல பயம்தான்.. அப்படி நான் என்ன பண்ணிட்டேன்..” என்றவள்,

“இதுவரைக்கும் நான் ஏதாவது செஞ்சேனா??” என்றாள் பமீலாவிடம்.

அவளோ மறுப்பாய் இல்லையென்று தலையை ஆட்ட, “பின்ன என்ன பயம்??” என்றாள் இவளும் திரும்ப. “ஏதாவது செஞ்சிட்டா??!!!” என்றாள் பமீலா மெதுவாக..

“ம்ம்.. என்னது?? ஒன்னும் கேட்கலை..” என்று கமலி அவளின் அருகே அமர,

“அ.. அது..” என்று மணிராதாவைப் பார்க்க,

அவரோ என்ன நடக்கிறது இங்கே என்று ஒருவித நம்ப இயலாத் தன்மையோடு பார்த்துக்கொண்டு இருந்தார். இப்படியான காட்சிகள் எல்லாம் காண முடியும் என்று அவர் கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரே அறையில் இப்படி அனைவரும்..

அதிலும் சிவகாமியும் கமலியும் மட்டுமே பேச, மற்றவர்கள் வாய் மூடி கேட்கும் நிலை.. ஹம்ம் வாழ்வில் எதுவும் நடக்கும் அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கான சிறந்த உதாரணம் இதுதான்.. அதை உணர்ந்து நடந்தால் அனைவர்க்கும் நல்லதே.

“நான் உன்னைக் கேட்டா நீ ஏன் அத்தையை பாக்குற??” என,

மணிராதாவோ ‘அத்தையா...??!!!!!’ என்று அதிர்ந்து பார்க்க,

வனமாலிக்கோ தன் அம்மாவின் முகம் பார்த்து ஒரு பக்கம் சிரிப்பு தாளவில்லை. ஆனால் இந்த நிலையில் சிரித்தால் நிச்சயம் கமலி முதற்கொண்டு எல்லாம் முறைப்பார் என்று தெரியும். ஆக மிக சிரமபட்டே அவன் சிரிப்பை அடக்க, அவனின் முகத்தைப் பார்த்ததுமே கமலி கண்டுவிட்டாள் இவன் எதற்கு சிரிக்கிறான் என்று..

‘என்னங்க...’ என்று அவளின் கண்களிலேயே லேசாய் முறைக்க, ‘சரி சரி..’ என்று அவனும் அதே பார்வையில் பதில் சொல்ல, இதெல்லாம் அனைவரும் பார்த்துகொண்டு தான் இருந்தனர்.

மணிராதாவோ “வனா போலாமா??!!” என்றே கேட்டுவிட்டார்.

அங்கே நடப்பதை எல்லாம் காணவும் முடியாது, பேசாமல் இருக்கவும் முடியாது அவரால் இருக்க முடியவில்லை.

சிலது எல்லாம் உண்மையை ஏற்றுகொள்ள கசக்கும் தானே. ஆனாலும் வேறு வழியில்லை என்கையில் அவரும்தான் என்ன செய்ய முடியும். மனதளவில் பிள்ளைகளின் பேச்சு பெரும் அடியை கொடுத்திருந்தது. பமீலா கையை வெட்ட, அது இன்னொரு விதத்தில் பாதிப்பு, மகுடேஸ்வரன் உயில் விசயமோ பெரும் ஏமாற்றம் கொடுக்க, அனைத்தையும் தாண்டி கடைசியில் தன் பிள்ளைகளின் வாழ்வு நல்ல முறையில் இருந்தால் போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார். ஆனாலும் இதெல்லாம் அவரால் கண்கொண்டு பார்க்க முடியவில்லைதான்.

வனமாலியோ “இரும்மா.. கோவர்த்தன் வரவும், நம்ம எல்லாம் கிளம்பலாம்..” என்று சொல்ல,

கமலியோ “ம்ம் சொல்லு..” என்று பேச்சினை வளர்க்க,

சிவகாமியோ “விடு அவ தூங்குறதுன்னா தூங்கட்டும்..” என, “இ.. இல்ல..” என்றாள் பமீலா வேகமாய்..

“ம்ம் அப்புறமென்ன..”

“அ.. அது.. சின்ன வயசுல இருந்தே, நீங்க எங்களை விரட்டிடுவீங்க, அந்த வீட்ல வந்து இருந்துப்பீங்க.. அ.. அப்புறம் அம்மாவை யாரும் மதிக்கமாட்டாங்க.. என்னையும் யாரும் பெருசா நினைக்க மாட்டாங்க..” என்று பமீலா சொல்லும்போதே, மணிராதாவின் முகம் கறுத்துப் போனது..

ஏனெனில் இதெல்லாம் சொல்லி பமீலாவை வளர்த்தது அவர்தானே.. அவர் சொன்னதை அவர் கேட்கையில் நாராசமாய் இருப்பது தான் நிஜம். வனமாலிக்கும் இதை கேட்கையில் அப்படியொரு கஷ்டமாய் இருந்தது. என்ன இருந்தாலும் அவனின் அம்மா அல்லவா.. பிறர் முன் தன்னைப் பெற்றவர்கள் தரம் தாழ்ந்து போகையில் யார்தான் அதை மனமுவந்து ஏற்றுகொள்வர்..

சிவகாமி அத்தனை நேரம் பொறுமையாய் இருந்தவர் இந்திராவிடம் “இனியாவது என்ன செய்யணும்.. எப்படி இருக்கணும்னு புரிஞ்சு நடந்துக்கோங்க.. நீ இருக்கிற விதத்துல தான் இவளுக்கும் எல்லாமே புரியும்.. முதல்ல நிமிர்வா இருக்க பழகு.. என்ன இல்லை உனக்கு.. வசதி வாய்ப்பு.. பொண்ணு மருமகன்னு எல்லாமே இருக்காங்க தானே..” என்று சொல்ல, வேகமாய் இந்திராவின் தலை ஆம் என்று ஆடியது.

கமலியும் “அதெல்லாம் எதுவுமில்லை.. இதுக்கப்புறமாவது இவர் தம்பியோட நிம்மதியா வாழப் பாரு..” என்றவள்,
இதற்குமேல் இவர்களிடம் என்ன பேச என்று வனமாலியிடம் “என்னங்க கிளம்பலாமா??” என்று கேட்க, சரியாய் கோவர்த்தனும் அங்கே வந்து சேர்ந்துவிட்டான்.

“என்ன எல்லாரும் நான் வந்ததும் கிளம்புறீங்க??”

“அதுசரி கூட்டமா உக்காந்து என்ன செய்ய..” என்றபடி வனமாலி எழுந்துவிட, அப்படியே கமலி சிவகாமி எல்லாம் கிளம்ப, மணிராதாவோ ‘இவர்களுடன் சேர்ந்து செல்லவேண்டுமா??’ என்று தயங்கிப் பார்த்தார்..

“ம்மா..” என்று வனமாலி அழைக்க,

“அது வனா.. நா.. நான் இருந்துட்டு கொஞ்ச..” என்று சொல்லும்போதே,

“ம்மா நான் உங்களை விட்டுட்டு மதுரைக்கு கிளம்பனும்.. வேலை இருக்கு.. ஆள் வந்திடுவாங்க..” என்றான் அவரை கிளப்பும் வகையில்.

கோவர்த்தனும் “ம்மா இங்கதான் நானும் அத்தையும் இருக்கோமே..” என்றுசொல்ல,

வனமாலியோ “அத்தை நீங்களும் வீட்டுக்கு வந்துட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வேண்டியது தானே.. இங்கயே இருக்கீங்க.. இவன் இருக்கான்ல பார்த்துப்பான்...” என்று கோவர்த்தனை கை காட்டி இந்திராவிடம் செல்ல,

அவரோ “இல்ல வனா.. அது..” என்று இழுத்தார்.

பமீலாவோ “ம்மா நீ போறதுன்னா போயிட்டு சாயங்காலம் கூட வா.. நீயும் வீட்டுக்கே போகலை..” என,

கமலியோ கோவர்த்தனிடம் மெதுவாய் “சில சான்ஸ் எல்லாம் ஒன் டைம் தான் கிடைக்கும்..” என, கோவர்த்தன் பட்டென்று சிரித்து விட,

“என்ன ரகசியம்??” என்றான் வனமாலி.

“அதான் ரகசியம்னு நீங்களே சொல்லிடீங்களே..” என்றவள் கிளம்பிட, வேறு வழியே இல்லாது மணிராதாவும் இவர்களுடன் கிளம்ப, காரில் அத்தனை ஒன்றும் பேச்சில்லை.

முன்னே வனமாலியோடு கமலி அமர்ந்துகொள்ள, பின்ன சிவகாமியும் மணிராதாவும், இந்திராவும் இருக்க, மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், இப்படி ஒன்றாய் வருவதைப் பார்க்கவே கொஞ்சம் வனமாலிக்கு மனம் நிம்மதியானது. கமலியிடம் ஜாடைக் காட்டினான் பார் என்று.

அவளோ திரும்பியவள், பார்த்துவிட்டு ‘சிலது எல்லாம் மாறாது.. ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கிறது பெட்டர்..’ என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய் சொல்ல, அடுத்து இவர்களின் பேச்சு மட்டுமே அங்கே இருக்க, பின்னே இருந்த பெண்கள் மூவரும் யாரும் ஒன்றும் பேசவில்லை..

ஆனால் வனமாலி கமலியை கவனித்துக்கொண்டு தான் இருந்தனர். வனமாலி எதுவோ சொல்வதும், அதற்கு கமலி பதில் சொல்வதுமாய் இருக்க, இப்படி மாறி மாறி பேசிக்கொண்டு வர, சிவகாமிக்கு இனி தன் பெண்ணுக்கு அவள் வாழ்வில் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற நம்பிக்கை வந்தது.

இந்திராவிற்கோ “இந்த பமீ கொஞ்சம் எல்லாரையும் அனுசரிச்சு நடந்துட்டா பரவாயில்லை..” என்ற எண்ணம்.

மணிராதாவோ “எப்படியோ என் பசங்க சந்தோசமா இருந்தா போதும்..” என்று..

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று நினைக்க, சிவகாமி அவரின் வீட்டில் இறங்கிக்கொள்ள, இந்திரா பெரிய வீட்டில் இறங்கிக்கொள்ள, மற்ற மூவரும் அவர்களின் வீடு வர, வந்தனவோ தன் அம்மாவினை தான் முறைத்தாள்.

“ஏன் ம்மா வீட்ல நான் ஒருத்தி இருக்கேன்னு எண்ணமே இல்லையா..” என,

“நான் என்ன வந்தனா செய்ய, அங்கயும் போய் பார்க்கணும்மில்ல..” என்றார் அவரும் பதிலுக்கு..

“அதுதான் இந்திரா அத்தை கோவர்த்தன் எல்லாம் இருக்காங்களே பாத்துக்க மாட்டாங்களா?? சும்மா முதல்ல எல்லாம் நான்தான் பாக்கணும் செய்யனும்னு இருக்கிற எண்ணத்தை விடு..” என்றவள்,

“கமலி நாளைக்கு நம்ம ஷாப்பிங் கொஞ்சம் செய்யணும்..” என,

கமலியோ “சரி...” என்றவள் வனமாலியைப் பார்க்க,

அவனோ “உங்கக் கூடவா???!! கார் எடுத்திட்டு நீங்களே போயிட்டு வாங்க..” என்றுவிட்டான்..

“ஏன் ஏன்??!1 எங்கக் கூட வந்தா என்ன??” என்று கமலி கேட்க, “அதானே என்னவாம்??” என்றாள் வந்தனாவும்.

“என்னால முடியாதுப்பா.. ஒருத்தர் கூட போனாலே ஒருநாள் ஆகும்.. இதுல ரெண்டு பேரா.. நோ நோ..” என்று வனமாலி வம்பு வளர்க்க,

“ஹலோ ஹலோ.. நீங்க ஒரு வாரத்துல கல்யாணம்னு சொல்லி நானுமே என் கல்யாணத்துக்கு எந்த ஷாப்பிங்கும் செய்யலை.. சோ நீங்கதான் நாளைக்கு கூட்டுப்போறீங்க..” என்று கமலி முடிவாய் சொல்ல,

“அடடா இப்படி ஒரு பாயின்ட் சொல்லி லாக் பண்ணிட்டியே..” என்றவன், மதுரை கிளம்ப தயாராகப் போனான்.

வந்தனாவோ “எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு..” என்று கமலியிடம் சொல்ல,

“என்னது??!!” என்றாள் அவளும்.

“இல்ல நிஜமாவே நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் லவ் அது இதுன்னு..” என்று சொல்ல வந்ததை சொல்லி முடிக்காது சிரிக்க,

“ஹா ஹா கல்யாணம் பண்ணதுக்கே இங்க இவ்வளோ களேபரம்.. லவ் எல்லாம் செஞ்சு நாங்க ஊர் சுத்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்குமே..” என்றாள் கமலி லேசாய் பக்காவாட்டில் மணிராதாவைப் பார்த்து..

வந்தனாவிற்கு அவள் சொன்னது புரிந்து சத்தமாய் சிரிக்க, கமலியும் அவளோடு இணைந்துகொள்ள, மணிராதாவோ ‘இப்போ என்ன சொல்லிட்டான்னு இப்படி சிரிப்பு வேண்டி கிடக்கு..’ என்று முணுமுணுத்தபடியே எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
வனமாலியோ கமலி சொன்னது கேட்டு, உள்ளிருந்தபடியே “கமலி...” என்றழைக்க,

“போ போ..” என்று விரட்டிய வந்தனாவும், அவளின் அறைக்கு போய்விட, “என்ன??!” என்று கேட்டபடி அவளும் அவனருகே போனாள்..

“அம்மாவை அத்தைன்னு சொல்ற.. மாமாவை அப்பான்னு சொல்ற.. ஆனா என்னைமட்டும் ஏன் இப்படி??!!”

“உங்களை வேணா தாத்தான்னு கூப்பிடவா???!” என்று கமலி நக்கலடிக்க,

“அடேங்கப்பா.. அதெல்லாம் என் பேர பசங்க கூப்பிடுவாங்க..” என்றவன் “வேணாம் நான் எதுவும் சொல்லிடப் போறேன்..” என்றுவிட்டு, “சரி சரி தனாக்கிட்ட என்ன சொன்ன??!!” என்றான் கொஞ்சம் ஆர்வமாய்.

“நான் என்ன சொன்னேன்??!!” என்று புரியாதவள் போல கேட்க,

“எதோ ரகசியம்னு சொன்னியே..” என்றவன், அவளை தன்னருகே இழுத்துக்கொள்ள, “நீங்க கிளம்பலையா??” என்றாள் அவனைப் பார்த்து.

“நீ சொல்லவும் போகணும்..”

“ம்ம்..” என்று யோசிப்பது போல் பாவனை செய்துவிட்டு “சில சான்ஸ் எல்லாம் ஒன் டைம் தான் கிடைக்கும் சொன்னேன்..” என்றுசொல்லி கமலி சிரிக்க,

“அடிப்பாவி..!!!” என்றுதான் பார்த்தான் வனமாலி.. அவளோ மேலும் சிரிக்க,

“நமக்குதான் ஒரு சான்ஸ் கூட கிடைக்கலை..” என்று போலியாய் அவன் வருந்த,

“என்னது??!!!” என்று கமலி விழி விரிக்க,

“இல்ல கொடைக்கானல் போக ஒரு சான்சும் கிடைக்கலை சொன்னேன்..” என்றவனை பிடித்து தள்ளிக்கொண்டே அறைக்கு வெளியே வந்தவள், “இப்போ மதுரைக்கு போவீங்களாம்.. அடுத்து வந்தனா கல்யாணம் எல்லாம் முடியவும் நம்ம கொடைக்கானல் என்ன காஸ்மீர் கூட போலாம்..” என்றவளிடம் இருந்து சந்தோசாமகவே விடைபெற்று சென்றான் வனமாலி..

வாழ்வு என்பது இதுதான்.. சில பல துரோகங்களும், அனர்த்தங்களும் கலந்தவைதான். அனைத்தையும் தாண்டிதான் நாம் நம்மின் அன்றாட வாழ்வை நகர்த்தவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டால் நம்மின் நிம்மதியும் மகிழ்வும் நம் கையில் மட்டும்தான் உண்டு.

வனமாலியும் கமலியும் அதை நன்கு உணர்ந்திருந்தனர்.. அவர்களின் வாழ்வும் அவர்களின் மகிழ்வும் அவர்களிடம் என்பதை மட்டுமே மனதில் வைத்து மற்றதை எல்லாம் கொஞ்சம் தள்ளியே வைத்து, இலகுவாய் இருக்கப் பழக, அடுத்த அடுத்த நாட்களும் கழிய, பமீலா ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்தாள்..

அதேபோல் வந்தனா திருமண வேலைகள், எல்லாம் ஜரூராய் தொடங்க, கமலிக்கும் சரி வனமாலிக்கும் சரி காலில் சக்கரம் கட்டிய குறைதான். கோவர்த்தன் அண்ணனுக்கு உதவியாய் அனைத்தும் செய்தாலும், பமீலாவிற்கு உடலில் இன்னும் பழைய தெம்பு மீளாததால் அவளால் வெளியே எங்கேயும் அலையை முடியாதுபோக, கமலியே அனைத்தும் பார்க்கவேண்டிய நிலை.

மணிராதா ஆரம்பத்தில் அது இது என்று லேசாய் முணுமுணுக்க, வந்தனாவோ “ம்மா...” என்ற கண்டன பார்வை பார்க்க, அவரோ கப் சிப் என்றாக வேண்டிய நிலை.

பமீலா முன் போல ‘நான் தான் எல்லாம்.. எனக்குதான் உரிமை...’ என்றெல்லாம் சலசலக்காது அமைதியாய் அவளுக்கு எது செய்ய வருகிறதோ அதை செய்தாள்.

கமலியும் அவளிடம் ரொம்பவும் எல்லாம் ஒட்டி உறவாடவில்லை. பேசவேண்டிய இடத்தில் பேசிக்கொள்ள, மணிராதாகூட கமலியிடம் நேரடியாய் சிலது பேசவில்லை என்றாலும், ஒருசில நேரங்களில் ஜாடை மாடையாக,

‘இதை அவளை செய்ய சொல்லு..’ என்று வந்தனாவிடமும்,

‘கடைக்கு எப்படி கமலி கூட போறியா??’ என்று வனமாலியிடமும், அவர் சொல்வதிலேயே அனைவருக்கும் ஒருவித நிம்மதி பிறந்தது.

சிவகாமி அவர்பாட்டில் இருக்க, சங்கிலிநாதன் தான் “அந்த உயில் என் பொறுப்பு சிவா.. என்னை நம்பி அந்த வேலையை ஒப்படைச்சிட்டு போனான் உன் புருஷன்..” என்று சொல்ல,

“ம்ம்ம்.. அங்க நல்ல விஷயம் நடக்குது.. இப்போதான் எல்லாம் சுமுகமா இருக்காங்க.. வந்தனா கல்யாணம் முடியவும் பேசிப்போமே..” என, சங்கிலிநாதனோ அடுத்து வனமாலியிடம் போய் நின்றார்.

“இதுல நான் என்ன தாத்தா முடிவு செய்ய முடியும்.. அத்தைங்க ரெண்டுபேரும் தான் பேசணும்..” என்றவன்,

“வந்தனா கல்யாணம் முடிஞ்சுக்கட்டுமே.. இன்னும் ஒருவாரம் தானே இருக்கு..” என,

“எனக்கும் புரியுது வனா.. ஆனா எதையும் இழுத்துட்டே போகாம இருக்கிறது நல்லதில்லையா.. அதனால சொன்னேன்..” என்றவர் “சரி அடுத்துப் பார்த்துப்போம்..” என்றுவிட்டார்.

ஆம், இன்னும் ஒரே வாரம் தான் வந்தனாவின் திருமணத்திற்கு. அவளுக்குத் திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து இதோ இன்று வரைக்கும் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. எண்ணிப் பார்த்தால் இப்போதுதான் கடைசி கட்ட வேலைகள் கூட முடிந்து எல்லாம் நல்லபடியாய் இருப்பதாய் ஓர் உணர்வு வீட்டினில் அனைவர்க்கும்.
 
Top