Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 6

“வனா.. சொன்னா கேளுடா.. வீட்டுக்கு வா... நீ என்ன சொல்றியோ அதை கேட்டுக்குறோம்...” என்று மணிராதா கெஞ்சாத குறையாய் கேட்டுக்கொண்டு இருக்க, கோவர்த்தனும் முகத்தை கெஞ்சலாய் வைத்திருக்க, வனமாலியோ தன் முகத்தை வேறுபக்கம் திருப்பி அமர்ந்திருந்தான்.

“வனா.. கல்யாண வேலை எல்லாம் தலைக்கு மேல இருக்குடா.. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு...”

“அண்ணா.. என்ன கோவம் இருந்தாலும் வீட்டுக்கு வா ண்ணா...”

“வனா சொல்றதை கேளேன் டா.. நீ எப்படி சொல்றியோ எல்லாமே அப்படி செஞ்சுக்கலாம்.. நான் வாயே திறக்கமாட்டேன்.. வனா...” என்று மணிராதா மகனின் கரம் பற்ற,

“ம்ம்ச்.. இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??” என்று எரிந்து விழுந்தான்.

“நீ வீட்டுக்கு வரணும்..”

“எதுக்கு??”

“எதுக்கா?? என்ன பேச்சு வனா.. அங்க அவ்வளோ பெரிய வீடு இருக்க, இங்க தியேட்டர் ரூம்ல வந்து இருக்க. உனக்கென்ன தலையெழுத்தா??”

“என் பேச்சிற்கு மரியாதை இல்லை.. நான் ஒருத்தரை இன்வைட் பண்ணா அவங்களுக்கு மரியாதை கொடுக்கமாட்டீங்க.. உங்க இஷ்டத்துக்கு நீங்க பண்ணா அப்புறம் நானும் என் இஷ்டத்துக்கு நானும் செய்வேன்..” என்று வனமாலி பிடிவாதமாய் சொல்ல,

“இல்ல வனா கண்டிப்பா இனி எந்த தப்பும் நடக்காதுடா.. நமக்கு வந்தனா வாழ்க்கையை விட வேறென்ன முக்கியம்.. நீயே சொல்லு..” என்று மணிராதா அத்தனை இறங்கி வந்து பேசவும், பிள்ளைகள் இருவருக்கும் ‘என்னடா இது அதிசயம்..’ என்றுதான் பார்த்தனர்..

என்னதான் மணிராதாவிற்கு வாய் துடுக்கு ஜாஸ்தி என்றாலும், மனதில் அவருக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருந்தது. காரணம், வனமாலிக்கு திருமணம் ஏற்பாடு செய்து அது நின்றுபோனது, கோவர்த்தனுக்கும் பமீலாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனபின்னும் கூட குழந்தை என்ற ஒன்று இதுவரைக்கும் உண்டாகவில்லை... வந்தனாவிற்கு இத்தனை வருடங்களாய் வரன் பார்த்து பார்த்து ஒன்றுமே சரிவராது போய் இப்போது தான் ஒரு நல்லது கூடி வந்திருக்கிறது.

இத்தனை நாள் வரைக்கும் மனதில் ஒரு நெருடல், ஒருவேளை சிவகாமியின் கண்ணீர் எல்லாம் சேர்ந்து என் பிள்ளைகள் வாழ்வில் விளையாடுகிறதோ என்று. அதிலும் இப்போது கமலி பேசிய பேச்சு நிஜமாகவே மனதினில் ஒரு ஆட்டம் கொடுத்துவிட்டது..

‘ஒருவேளை கல்யாணத்தை நிறுத்திடுவாளோ..’ என்ற பயமே மணிராதாவை வனமாலியிடம் இப்படி கெஞ்ச வைக்க, அவனோ பிடிவாதமாக இருந்தான்.

“ம்மா உங்களைப் பத்தி நல்லா தெரியும்.. காரியம் ஆகணும்னா இப்படி பேசுவீங்க.. இல்லன்னா எப்படி நடப்பீங்கன்னு.. ஏன் நான் இல்லைன்னா என்ன இதோ இவன் இருக்கானே.. இவனை வச்சு எல்லாம் பாருங்க..” என்று கோவர்த்தனை காட்டினான் வனமாலி..

“அண்ணா... என்னண்ணா...”

“நான் வரலை.. அவ்வளோதான்...”

“டேய் வனா....”

“என்னம்மா?? என்ன?? இல்லை என் பொறுப்புல விடுறதா இருந்தா நீங்க யாரும் வாயே திறக்கக் கூடாது.. இதுக்கு சம்மதம்னா நான் வர்றேன்..” என்றான் முடிவாய்..

ஆம் வனமாலி கிளம்பி வரும்போதே இப்படியான ஒரு முடிவில் தான் வந்தான்.. இப்படி செய்தாலும் மட்டுமே மணிராதா ஒரு வழிக்கு வருவார் என்பதும் தெரியும். கோவர்த்தனும் போய் பமீலாவை கண்டித்து வைப்பான்.. இவர்கள் இருவர் சும்மா இருந்தாலே இந்திரா அடங்கிவிடுவார். இதெல்லாம் கணக்கு செய்தே அவன் வந்தது. எதிர்பார்த்தது போலவே மணிராதா பேச, அவனும் அவன் முடிவை சொல்லிவிட்டான்.. ஆனால் அம்மாவும் தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“இதுக்கு மேல உங்க இஷ்டம்..” என்றவன் எழுந்துவிட,

“இல்ல வனா.. நீ என்ன சொன்னாலும் சரி.. நீ வீட்டுக்கு வந்தா போதும்..” என்றார் மணிராதாவும்.

அப்படியா என்று அவன் பார்க்கும் போதே அவனின் அலைபேசி சப்தம் எழுப்பியது. எடுத்துப் பார்த்தவனுக்கு ‘இதென்னடா அதிசயம்..’ என்று பார்க்க, அவனின் அலைபேசி திரையிலோ ‘கமலி..’ என்ற பெயர் அழகாய் மிளிர்ந்துகொண்டு இருந்தது.

‘கமலி...’ என்று அவனின் இதழ்கள் உச்சரிக்க, மகனின் இந்த தோற்றம் கண்டு மணிராதா கண்களை சுறுக்கி, “என்ன வனா..??” என்றுகேட்க,

“ஒண்ணுமில்லை...” என்றவன் “ஹலோ...” என்றான் அவனின் எவ்வுணர்வுகளையும் வெளிப்படுத்தாது.

“இங்க வரமுடியுமா கொஞ்சம்?” என்ற கமலியின் குரலில் அப்படியொரு நிமிர்வு.

“ஏன்?? எதுக்கு??” என்று கேட்டவனுக்கோ மனதினில் பல நூறு எண்ணங்கள்.

“முரளி, அவங்க அப்பா எல்லாம் வந்திருக்காங்க.. நீங்களும் வந்துட்டா கொஞ்சம் பேச வசதியா இருக்கும்..”

“என்ன?? என்ன பேசணும்??”

“வந்தா தெரியும்..” என்றவள் வைத்துவிட, வனமாலிக்கோ இவள் என்ன செய்துகொண்டு இருக்கிறாள் என்றே இருந்தது.

இத்தனை நேரம் அம்மா தம்பியிடம் கோபமாக பேசினாலும் அவனிடம் ஒரு பொறுமை இருந்தது. ஆனால் இப்போதோ அப்பொறுமை காணாது போக, “ம்மா வீட்டுக்கு போங்க. நான் வந்திடுறேன்..” என்றவன் வேகமாய் தான் சிவகாமி அச்சகம் வந்து சேர்ந்தான்.

அவன் பதறி அடித்து வந்திருக்கிறான் என்பது அவனைப் பார்த்தாலே யாருக்கும் தெரியும். சங்கிலிநாதன் கூட இவனின் வேகம் பார்த்து “என்ன வனா என்னாச்சுன்னு இவ்வளோ வேகமா வர..” என்று அவனின் பின்னோடு வர,

“சின்ன பொண்ணு எதோ கோவத்துல பேசுறான்னு விட்டா. ரொம்ப பண்றா..” என்றபடி கமலியின் அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே வர, அங்கேயோ சிரித்த முகமாய் கமலி, முரளி மற்றும் அவனின் அப்பாவும் இருக்க, ஆனாலும் அவனின் யோசனைகளை வெளிக்காட்டாது “வாங்க மாமா.. வாங்க மச்சான்..” என்று அவர்களை வரவேற்க,

“என்ன மச்சான் இவ்வளோ வேகமா வந்திருக்கீங்க..” என்று முரளி சிரிக்க,

“வனா நான் உன்னையும் கூட்டிட்டு வரணும்னு நினைச்சேனப்பா.. சரி வந்து போன் போடலாம்னு இருக்க, கமலி பொண்ணுதான் நான் கூப்பிடுறேன்னு சொல்லிச்சு..” என்றார் அவரும் புன்னகையோடு.

வனமாலியோ யோசனையாய் கமலியின் முகம் பார்த்துவிட்டு “சொல்லுங்க மாமா..” என,

“இன்னும் ரெண்டு மாசம்தானே இருக்கு.. ஒவ்வொரு வேலையா ஆரம்பிக்கணுமே.. அதான் பத்திரிக்கை எப்படி என்னன்னு பார்க்க வந்தோம்.. கமலி பொண்ணுதான் கேட்டுச்சு இரு வீட்டு அழைப்புக்கு ஒரே டிசைன்ல பத்திரிக்கை அடிச்சிட்டு, முரளிக்கும் உனக்கும் தனிப்பட்ட ஆட்களுக்கு கொடுக்க வேற டிசைன்ல போட்டுக்கலாம்னு..”

‘இதுக்குதான் கால் பண்ணாளா..??’ என்று கண்களை இடுக்கி கமலியைப் பார்த்தவன், “அதுக்கென்ன மாமா தாராளமா முடிவு செய்யலாம்..” என்றான் பார்வையை மாற்றாது.

கமலியோ ‘அடிச்சு பிடிச்சு வந்தீங்களோ...’ என்ற ஒரு நமட்டு சிரிப்போடு, “கண்டிப்பா இங்கதான் இன்விடேஷன் போடணுமா???” என்று கேட்க, “கண்டிப்பா...” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“இதிலென்னம்மா உனக்கு சந்தேகம்...”

“இல்லை பெரியப்பா.. இவங்க வீட்ல என்ன சொல்வாங்கன்னு தெரியாதே..” என்று வனமாலியைப் பார்த்து விரல் நீட்ட, அவரும் அதே யோசனையோடுப் பார்த்தார். இவர்களின் பிரச்சனை தான் ஊர் அறிந்த ஒன்றாகிற்றே..

“நிச்சயத்துக்கு வந்து சீர் எல்லாம் பண்ணீங்களே...” என்று அவர் வியந்து பார்க்க,

வனமாலியோ “மாமா.. வந்தனா கல்யாணம் நான்தான் முன்ன நின்னு பண்றேன்.. எதுன்னாலும் என் முடிவுதான்.. யாரும் எதுவும் சொல்லப் போறதில்ல..” என்றான் உறுதியாய்.

“அப்படியா வனா.. ரொம்ப சந்தோசம் ப்பா....” என்றவர், “கமலிம்மா.. அப்போ என்ன எல்லாரையும் வச்சு வீட்லயே என்ன டிசைன்னு முடிவு பண்ணிடலாம் தானே..” என, அவளோ ஒருநொடி உள்ளே திடுக்கிட்டாலும்

“அதுக்கென்ன பெரியப்பா.. தாராளமா..” என்றாள் புன்னகை மாறாது.

‘முடியாது...’ என்பாளோ என்று வனமாலி பார்க்க, கமலி சம்மதம் சொன்னதும் அவனால் நம்ப முடியவில்லை.. ‘என்னடா இது எல்லாமே தலைகீழா நடக்குது..’ என்று வனமாலி யோசிக்கும்போதே,

“மச்சான்.. நாளைக்கு நாங்க எல்லாம் வீட்டுக்கு வர்றோம்.. சொல்லிடுங்க..” என்று முரளி சொல்ல,

“அட அதை நீங்க இல்லையா சொல்லணும்..” என்று வனமாலி சிரிக்க, இவர்களின் பேச்சை கமலி ஒரு பார்வையாளராய் மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் எண்ணமெல்லாம் நாளை தான் வனமாலியின் வீட்டிற்கு சென்றால் அங்கே இருப்பவர்களின் பாவனை எப்படியானதாய் இருக்கும் என்ற கணிப்பிலேயே இருந்தது. எப்படியும் நாளைக்கு ஒரு வேடிக்கை நிகழும்.. அது நிஜம்.. கமலி பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் அங்கே போனதே இல்லை.. அதுசரி அவளின் வீடு அதாவது அவளின் அப்பாவின் வீட்டிற்கு போனதே விரல் விட்டு எண்ணும் வகையில்தான். இதில் மனிராதாவின் வீடு என்றால் சொல்லவும் வேண்டுமா??

‘நாளைக்கு இருக்கு கச்சேரி.. சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம.. எல்லாம் திணறட்டும்..’ என்று தனக்குள்ளே சந்தோசித்துக்கொண்டு இருக்க,

“கமலிம்மா அப்போ நாளைக்கு பாப்போம்...” என்றுவிட்டு முரளியும் அவனின் அப்பாவும் எழுந்துவிட, “கண்டிப்பா பெரியப்பா..” என்றாள் எழுந்து நின்று கரம் குவித்து.

வனமாலியிடமும் சொல்லிக்கொண்டு அவர்கள் கிளம்பிய பின்னும் கூட, கமலியின் இதழ்களில் அந்த நமட்டுச் சிரிப்பு ஓட்டிக்கொண்டு இருக்க,

“கமலி...” என்று சற்று அதிகாரமாகவே அழைத்தான் வனமாலி..

“எஸ்...” என்று அவள் நேருக்கு நேராகவே பார்க்க, அவனோ இருவருக்கும் இடையில் இருந்த மேஜையை ஒரு தட்டு தட்டி,

“இன்னொரு தடவ வந்தனா கல்யாணத்தை வச்சு விளையாடினா நான் என்ன செய்வேன்னு தெரியாது..” என்றான் மிரட்டலாய்.

இதுநாள் வரைக்கும் வனமாலி கமலி முன்னே இப்படியெல்லாம் பேசியதில்லை என்பதால், முதல் முறை என்ற அதிர்வு அவளுக்குள் எழுந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாது “என்ன செய்வீங்க??” என்று திடமாகவே கேட்டாள்.

“என்ன செய்வேன்னு நிஜமா எனக்கு தெரியாது கமலி.. ஆனா வந்தனா விசயத்துல நீன்னு இல்லை யார் விளையாடினாலும் சரி.. ஒரு அண்ணனா என்ன செய்யணுமோ அதை கண்டிப்பா நான் செஞ்சே தீருவேன்..”

“ம்ம் சூப்பர்... அப்போ எல்லாரும் சேர்ந்து என் அம்மா லைப்ல விளையாடினாங்களே அதுக்கு?? அதுக்கு யார் பதில் சொல்வா??” என்று கண்மணி சீர,

“ஏய் என்ன?? நானும் உன் பக்கம் இருக்க நியாயம் தெரிஞ்சு.. அமைதியா போனா ரொம்ப பேசுற நீ...” என்றவன், “முதல்ல உங்கம்மா போராடினாங்களா அவங்க லைப்ப காப்பாத்திக்க??” என்றான் முகத்தில் அப்படியொரு சீற்றம் காட்டி..
 
இந்த கேள்வி நிச்சயமாய் கமலியை பாதிக்கும் என்றும் தெரியும். ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லை.. அவன் எப்படியானதொரு மனநிலையில் அங்கிருந்து இங்கே வந்தான் என்பது அவனுக்கே தெரியும்.. மனதினுள்ள அப்படியொரு பதற்றம்.. அதை சும்மாகூட வெளிக்காட்டாது அப்படியே தனக்குள்ளே அமிழ்த்தி வந்தவர்களோடு இன்முகமாய் பேசி அனுப்பிட, இவளோ அவனின் ஒவ்வொரு தவிப்பையும் ரசிக்கும்விதமாய் நமட்டு சிரிப்போடு இருக்க அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது. ஒருப்பக்கம் அவனின் தங்கையின் வாழ்வு.. எப்போது வேண்டுமானாலும் கமலி எதுவேண்டுமானாலும் செய்வாள் என்ற எண்ணத்தில் நிச்சயம் இந்தத் திருமணம் சந்தோசமாய் நிகழ்ந்தேறாது.

கமலி அப்படி செய்வாளா என்ற யோசனை இருந்தாலும், ஒருவேளை செய்துவிட்டால்?? பின் வந்தனாவிற்கு அவன் என்ன பதில் சொல்வான்.. யாரைவிடவும்.. எதனை விடவும் அவனுக்கு அவனின் தங்கை முக்கியமில்லையா.. ஆக இந்த விசயத்தில் கமலியை அடக்கிவைக்க அவனும் இப்படியான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய நிலை..

ஆனால் அவன் நினைத்ததற்கும் மாறாய் கமலி, முதலில் அதிர்ந்துபோனாலும், முகத்தினில் வலியைக் காட்டினாலும், அடுத்த நிமிடமே சுதாரிதுவிட, தன் பார்வையை மாற்றிகொண்டாள் வேகமாய். இவ்வளவு நேரமிருந்த அந்த நமட்டு சிரிப்பு காணாது போய், கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவள்,

“ம்ம் அப்புறம்..” என்றுமட்டும் சொல்ல,

“என்ன கதை கேட்கிறயா?? நானும் இதை சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா சொல்ல வச்சிட்ட.. சிவகாமி அத்தை சம்மதம் சொல்லாமையா மாமாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சாங்க?? அவங்க வேணாம்னு ஒருவார்த்தை சொல்லிருந்தா மாமா கடைசி நிமிசத்துல கூட அந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பார்.. ஆனா வீட்ல இருக்கவங்களுக்கு ஒரு காரணம் இருந்தாலும் அத்தைக்கும் அதுல சம்மதம் இருந்தது.

அப்புறம் அம்மா பண்ணது, இந்திரா அத்தை பண்ணது எல்லாம் ஒருப்பக்கம் இருந்தாலும்.. அத்தை ஏன் அங்க இருந்து கிளம்பினாங்க?? அதுக்கான பதில் அவங்கக்கிட்ட மட்டும் தான் இருக்கு.. நீ பிறக்குறதுக்கு முன்னையும் சரி, அடுத்தும் சரி மாமா எத்தனை தடவை அத்தைக்கிட்ட வீட்டுக்கு வான்னு சொன்னாங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். இப்போ நீயும் அத்தையும் அனுபவிக்கிறதுக்கு பாதி காரணம் அம்மாவும் இந்திரா அத்தையும்னா மீதி காரணம் சிவகாமி அத்தையும் தான்..” என்று வனமாலி வேகமாய் பேசிக்கொண்டே போக போக,

“போதும் ஸ்டாப் இட்..” என்று கைகளை நீட்டி கத்திவிட்டாள் கமலி..

அவளால் இதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. என் அம்மாவை இவன் குற்றம் சொல்வதா?? அதற்கு யாருக்குமே தகுதி இல்லையே.. அப்படியிருக்க, இவன்.. இந்த வனமாலி.. அதுவும் இங்கே வந்து அமர்ந்துகொண்டே என் அம்மாவின் மீதும் தவறு இருக்கிறது என்று சொல்வதா என்ற ஆங்காரம் எழ, அதற்குமேல் அவளால் அவன் பேசுவதை கேட்க முடியவில்லை..

கமலியின் அறை கதவிற்கு வெளியே இருந்த சங்கிலிநாதனோ கமலி போட்ட சத்தத்தில் என்னானதோ என்று உள்ளே வர, இருவருமே உஷ்ன மூச்சுக்களை வெளிவிட்டு ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க,

“கமலிம்மா என்ன இதெல்லாம்??” என்றார் அவர் சங்கடமாய்..

“தாத்தா.. இவரை போக சொல்லுங்க..” என்று வனமாலியைப் பார்த்து பல்லைக் கடிக்க,

“ஏன்?? உண்மையை சொன்னதும் பொறுக்கலையோ....” என்று எழுந்தவன், “நீ சொல்லி நான் கிளம்பிட்டேன்னு நினைச்சுக்காத..” என்றுவிட்டு சங்கிலிநாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகரப்போக,

“உங்களை இங்க வர வச்சதே நான் தான்..” என்றாள் கண்களில் சீற்றம் காட்டி..

நின்று ஒருமுறை அவளை திரும்பிப் பார்த்தவன் “உனக்கு இன்னும் என்னைப்பத்தி தெரியலை போல.. தாத்தா சொல்லி வைங்க..” என்றுவிட்டு விடுவிடுவென சென்றுவிட்டான்..

இருவருமே ஒருவரை ஒருவர் தெரிந்தே வார்த்தைகளால் காயப்படுத்திட, சங்கிலிநாதனோ ‘சின்னவங்களாவது ஒத்துமையா இருப்பாங்கன்னு பார்த்தா இந்த பொண்ணு வனாக்கிட்டயே வம்பு வைக்குதே..’ என்று வருத்தமாய் பார்த்தார்..

இங்கே நடந்தது எதுவுமே அறியாத மணிராதாவோ “இந்திரா.. வந்தனா கல்யாண வேலை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நம்ம வனாக்கும் அடுத்து பொண்ணு பார்க்க ஆரம்பிக்கணும்.. இப்படியே அவன் சொல்லுவான்னு விட்டா அது நமக்குதான் பாதகம்..” என்றார் தீவிரமான முக பாவத்தோடு.

“என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன திடீர்னு..”

“சிலது திடீர்னுதானே செஞ்சாகனும்.. நான் அவனை கூப்பிட போறப்போவே இந்த முடிவை எடுத்துட்டு தான் போனேன்.. ஏன்னா அந்த சிவகாமியும் அவ பொண்ணும் எந்த நேரத்துல என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது.. அதுக்குள்ள இவனுக்கு ஒரு பொண்ண பார்த்து முடிச்சு வைக்கணும்..”

“அண்ணி.. அப்.. அப்போ அவங்க பிரச்சனை செய்வாங்கன்னு சொல்றீங்களா??” என்று இந்திரா பயந்து போய் கேட்க,

“ம்ம்ச் நீ ஒருத்தி எது எதுக்கு பயந்துக்கிறதுன்னு இல்லை. என் தம்பி இருக்கப்போவே அவளை வெளிய அனுப்ப தெரிஞ்ச எனக்கு இப்போ அவளை சமாளிக்கத் தெரியாதா நீ சும்மா இரு.. உன் பக்கத்துல ஏதாவது பொண்ணு இருக்கான்னு விசாரி.. ரொம்ப பெரிய இடமெல்லாம் வேணாம்.. நம்ம சொல்பேச்சு கேட்டு இருக்கிறவளா இருக்கணும்.. அப்போதான் வனாவும் நமக்குள்ள இருப்பான்...” எனும்போதே வனமாலி உள்ளே வந்திட, அடுத்தநொடி இரு பெண்களும் கப்சிப் என்றாகிவிட்டனர்.

வனமாலியோ இருவரையும் பார்த்துக்கொண்டே அவனின் அறைக்குள் நுழைந்திட, அவனின் மனதோ அடங்கவே மறுத்தது..

“ச்சே.. இருந்திருந்து இவ ஏன் இப்படி பீகேவ் பண்றா.. அம்மா பேசினது தப்புதான்.. ஆனா.. கமலியோடு குணமே மாறிட்டு இருக்கே..” என்று ஒருபுறம் அவளை எண்ணி வருத்தமாக கூட இருந்தது..

இதே வருதம்கொண்ட இன்னொரு ஜீவன் சிவகாமி.. சங்கிலிநாதன் அச்சகத்தில் நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் சொல்லிவிட, அவருக்கோ மகளின் போக்கு கண்டு மனம் வருந்தத் தொடங்கியது.

‘கடவுளே என்ன இது.. என் பொண்ணு குணம் இப்படியில்லையே.. ஒரு கல்யாணத்தை வச்சு விளையாட நினைக்கிறாளா?? அது தப்பில்லையா..’ என்று இறைவனிடம் முறையிட்டு, மகளின் வரவுக்காய் காத்திருந்தார் இன்று அவளோடு பேசியே ஆகவேண்டும் என்ற முடிவில்.

கமலியும் மாலை எப்போதும் வருவது போல் வர, சிவகாமியோ “கமலி இங்க வா..” என்றார் அவரின் அறையில் இருந்தபடி. அவளுக்குத் தெரியும், எப்படியும் அம்மாவிற்கு விஷயம் வந்திருக்கும், தன்னோடு இதைப் பற்றி பேசுவார் என்று..

பதிலே சொல்லாது அவரின் முன் போய் அமர்ந்தவள், ‘என்ன??’என்று பார்க்க, சிவகாமியோ இம்முறை கோவம் எதுவுமில்லாது மகளின் கரங்களை பிடித்துக்கொண்டு,

“உனக்கு என்னாச்சு கமலி?? என் பொண்ணு இப்படி இருக்கமாட்டாளே..” என்றார் பாவமாய்..

கமலியோ தலையை சரித்து, அவரின் முகம் பார்த்து, “நான் எப்படி இருந்தாலும் உன் பொண்ணுதானே ம்மா..” என,

“கண்டிப்பா.. ஆனா என் பொண்ணால யார் வாழ்க்கையும் பாதிக்கப்பட கூடாது. யாரும் அவளால பாதிக்கப்படக்கூடாது..” என்றார் சிவகாமியும் வேகமாய்..

“ம்மா.. நான் அப்படி செய்வேனா??” என்ற கமலியின் கேள்வி, அவருக்குள் ஒரு நிம்மதியை கொடுத்தது.

“ஆனா நீ ஏன் வனாக்கிட்ட இப்படி நடந்துக்கிற?? அவனும்தான் என்ன செய்வான்..”

“நானா எதுவும் செய்யலை.. வந்தனா கல்யாணத்தை நான் நிறுத்துவேன்னு சொன்னதுகூட ஒரு கோவத்துலதான். ஆனா அவங்களும் அதையே நினைச்சிட்டு இருந்தா நான் எதுவும் செய்ய முடியாது..” என்றவள், பின் லேசாய் சிரித்து “ஆனா அம்மா இதுக்கூட நல்லாருக்குல நம்மளை பார்த்து ஒருத்தர் பயப்படுறது..” என்றாள் இன்னும் சத்தமாய் சிரித்து..

“கமலி...!!!!”

“சரி சரி.. கண்டிப்பா நான் எதுவும் தப்பா செய்யபோறதில்லை.. ஆனா அதுக்காக நான் சும்மா இருக்க போறதுமில்லை.. அட்லீஸ்ட் கொஞ்சமாது எல்லாரும் அவங்கவங்க பண்ணதை உணரனும் இல்லையா..” என்றவள் “நான் நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகப் போறேன்..” என்று சிறுபிள்ளை போல் இரு புருவமும் தூக்கி கண்களில் ஒரு கேலிப் பார்வை பார்த்து சொல்ல,

“எ.. என்ன சொல்ற?? யார் வீட்டுக்கு..” என்றார் சிவகாமி.. இது அவருக்குத் தெரியாதே.. வனமாலிக்கும் கமலிக்கும் சண்டை என்பதுமட்டும் தானே தெரியும்..

“அதான்.. வனமாலி வீட்டுக்கு...”

“அடி... உன்னைவிட பெரியவன்.. நீ ஏன் கமலி அப்பாவையும் அப்பான்னு சொன்னது இல்லை.. அவங்க யாரையும் உறவுமுறை சொல்றதுயில்ல.. இதெல்லாம் தப்பு..”

“ஹா ஹா உறவுமுறை சொல்லாட்டி அவங்கெல்லாம் வருத்தப்படுறாங்களா??”

“அப்பா எவ்வளோ வருத்தப் பட்டார் தெரியுமா??” என்று சிவகாமி கேட்கவும், அடுத்தநொடி அவளுள் வனமாலி கேட்ட கேள்வியே ஒலித்தது..
 
Top