Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 7

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 7

வனமாலியின் வீட்டில் யார் முகத்திலும் ஈ ஆடவில்லை.. கமலியின் வருகை என்பது அவர்களுக்கு எப்படியானதொரு உணர்வை கொடுக்கும் என்பது வனமாலி அறிந்ததுதான். கமலிக்கும் தெரியும் தான். ஆனால் அதனை அவனும் காட்டிக் கொள்ளவில்லை, அவளும் காட்டிக்கொள்ளவில்லை..

முதல்நாள் சிவகாமி கமலியை அழைத்துப் பேசவும், கமலி மறைக்காது சொல்லியும்விட்டாள், தான் வனமாலி வீடு செல்வதை. கேட்டதும் சிவகாமிக்குத் தான் நம்ப முடியாது போனது. ஆனால் அடுத்து அவர் பேசியது கேட்ட கமலிக்கோ, வனமாலி தன்னிடம் கேட்ட, சிவகாமி மகுடேஸ்வரன் பற்றிய கேள்விகளே மனதில் எழ, பேசமால் சிவகாமியின் முகத்தினைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்ன கமலி பதில் பேசேன்..” என்று சிவகாமி கேட்கவும்,

“இல்லம்மா ஒன்னும்மில்ல.. நான் எதுவும் தப்பா பண்ண மாட்டேன்..” என்று இமைகளை மூடி தலையை இடவலமாய் ஆட்ட,

“உன் மனசுல வேற எதுவோ கேள்வி ஓடுது..” என்று சரியாய் கேட்டுவிட்டார் சிவகாமி..

“இல்லையே...”

“உன்னை எனக்குத் தெரியாதா??” என்றவர் “சும்மா கேளு கமலி..” என,

“நீ... நீ ஏன் ம்மா.. உன்னோட வாழ்க்கைய இன்னொருத்தருக்கு பங்கு கொடுத்த??” என்று கேட்டுவிட்டாள் கமலி.

பல வருடங்களாய் மனதில் இருக்கும் கேள்விதான் இது. இன்று அதே கேள்வி வேறொரு விதத்தில் வனமாலியின் வார்த்தைகளாய் வரவும், அவளுள் பெரும் அதிர்வு இருந்தாலும், அவனின் கேள்வியில் இருந்த உண்மை என்னவோ அவளை பதில் சொல்லமுடியாத ஒரு சூழலில் தள்ளியதுதான். அந்த பதில் சொல்லமுடியாத தன்மையே அவளுக்கு ஒரு எரிச்சல் கொடுக்க, வனமாலியைக் கத்திவிட்டாள்.

அம்மாவின் மனம் நோகுமே என்றே இத்தனை வருடங்கள் இதைக் கேட்காது விட்டிருந்தாள். ஆனால் இன்றோ அந்த கேள்வியின் பாரம் தாங்காது, கேட்டுவிட்டு, எங்கே அம்மாவின் மனது வருந்துமோ, முகம் வாடுமோ என்றெல்லாம் தயங்கி அவளின் பார்வையை சிவகாமியின் முகத்தினில் ஓட்ட, அவரோ ‘ப்பூ இவ்வளோதானா???!!’ என்பதுபோல் பார்த்தார்.

“என்னம்மா??!!!!”

“இந்த கேள்வி நீ எப்போவோ கேட்பன்னு நினைச்சேன்..” என்று சொல்லி மெதுவாய் சிரித்தவர், “ஹ்ம்ம் சொல்லு என்ன திடீர்னு..” என்றார்..

என்னவோ கமலிக்கு வனமாலியின் பெயரை சொல்லிட முடியவில்லை.. அவன் மீது ஆயிரம் கோபங்கள் இருந்தாலும், அவனைப் பிடிக்காது என்று தானே ஒரு எண்ணத்தில் இருந்தாலும் கூட, இந்தத் தருணத்தில் அவன் இப்படி என்னிடம் கேட்டான், எனக்கு மனதில் சுருக்கென்றது என்று அம்மாவிடம் வெளிப்படையாய் சொல்ல முடியவில்லை.. அது ஏன் என்றும் தெரியவில்லை..

இதேது மற்ற நேரத்தில் வாய்ப்பு கிடைக்கையில் எல்லாம் வனமாலியை காய்ச்சி எடுத்துவிடுவாள் சிவகாமியிடம். என்னவோ குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரின் மீதான கோபமும் அவன் வந்துபோனால் அவன் மீதே திரும்பும். ஆனால் இன்றோ மறந்தும்கூட அவன் பெயரை சொல்லிடமுடியவில்லை..

‘ஏன் சொல்லேன்.. அவன்தான் கேட்டான்னு..’ என்று அவளின் மனதே அவளைக் குற்றம் சாட்ட, ‘இல்லை இல்லை.. அவன்னு சொன்னா அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க...’ என்று தனக்குதானே ஒரு காரணமும் சொல்லிக்கொண்டாள்.

“கமலி... அதுக்குள்ள என்ன யோசனை?” என்று சிவகாமி அவளின் தோளைத் தட்ட,

“ஆ... நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம பதில் கேள்வி கேட்டா எப்படி??” என்று பேச்சை மாற்றினாள் கமலி..

“ம்ம் சில விஷயங்கள் சொல்லி புரியாது.. புரிய வைக்கவும் முடியாது.. அதுபோல ஒண்ணுதான் நானும் அவரும் வாழ்ந்த வாழ்க்கை.. எங்க வாழ்கை அதை நாங்க எப்படி வாழ்ந்தோம்னு யாருக்கும் நான் விளக்கனும்னு அவசியம் இல்லை. சில விஷயங்கள் நீயா இருந்தாலும் கூட..” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் சிவகாமி அழுத்தம் கொடுத்து பேச,

‘நானாக இருந்தாலும் கூடவா??!!!’ என்ற கேள்வி கமலியை திகைத்துப் பார்க்க வைத்தது.

அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்த சிவகாமியோ மெதுவாய் அவள் கன்னம் தொட்டு “நான் இப்படி சொல்றேன்னு பீல் பண்ணிக்காத கமலி.. ஆனா நிஜம் அதுதான்.. எங்களுக்கான அன்பு.. புரிதல்.. நட்பு.. இதெல்லாம் தான் கடைசி வரைக்கும் எங்களை, எங்க வாழ்க்கையை வாழ வைச்சது.. அந்த வீட்டுக்குப் போகாதது என்னோட ஒரு வைராக்கியம்.. சொல்லப் போனா என்னோட ஈகோன்னு கூட சொல்லலாம்.. இதுக்குமேல உனக்கு பதில் சொல்ல ஒன்னும் இல்லை..” என்றவர் இதற்குமேல் நீ கேட்கவும் வேண்டியதில்லை என்று பார்க்க,

“ம்ம்ம்......” என்று கமலி உதடு பிதுக்கினாலும், அவளுக்கு சிவகாமியை எண்ணி ஆச்சர்யமாய் கூட இருந்தது எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என்று..

ஆனால் இதற்குமேலும் பேச்சை அவளும் வளர்க்க விரும்பவில்லை.. அம்மாவின் பேச்சு அவளுக்கு வேறு பல யோசனைகளை கிளப்பி விட்டிருந்தது. அம்மாவின் பதிலோ ‘என் வாழ்வு.. அது என் விருப்பம்..’ என்று நாசூக்காய் சொல்வது போலிருக்க, அதற்குமேல் அவளால் எதுவும் கேட்க முடியாது தானே..

எழுந்துகொண்டவள் “சரிம்மா... நான் கிளம்புறேன்..” என்றவளின் கை பிடித்து சிவகாமி நிறுத்தினார்.

கமலி என்னவென்றும் கேட்கவில்லை, அப்படியே நிற்க சிவகாமியோ “சிலது உனக்கு இப்போ புரியாது.. உனக்குன்னு ஒருத்தர் வரவும் புரியும்..” என்றுசொல்ல,

“ஹா ஹா.. அட போம்மா.. இதுக்கு நீ இன்னொரு அடி கூட அடிக்கலாம் என்னை..” என்று கிண்டலாய் மொழிந்துவிட்டு சென்றுவிட்டாள்.

கமலி நகர்ந்ததுமே சிவகாமிக்கு காலாகாலத்தில் கமலிக்கு ஒரு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது. எண்ணம் என்னவோ வந்துவிட்டது ஆனால் இதற்கு கமலி சம்மதிக்க வேண்டுமே. மகளிடம் பேச தக்க நேரம் பார்க்கத் தொடங்கினார் சிவகாமி. அதற்குமுன்னே சங்கிலிநாதனிடம் பேசவேண்டும் என்று அவருக்கு அழைத்தும் பேசினார்.

உறவுகளின் அருமை என்பது அது இல்லாது போகையில் மட்டுமே தெரியும். இத்தனை காலம் மகுடேஸ்வரன் இருந்தார். சிவகாமி மனதினில் ஒரு தைரியம் இருந்தது. ஆனால் இப்போதோ?? மனதில் நிறைய நிறைய பயங்கள்.. கவலைகள்.. மகுடேஸ்வரன் இருக்கும்போதே கமலிக்கும் ஒரு திருமணம் செய்திருக்கவேண்டுமோ என்று இப்போது வருந்தினார்.

கமலியோ எனக்கு யாரும் தேவையில்லை என்று இருக்கையில் அவளுக்கென்று ஒரு உறவு வந்தால் அவளின் எண்ணங்கள் மாறி அவள் மனதில் சந்தோசம் பிறக்கும் என்ற அந்த தாயின் எண்ணம் ஈடேறுமா?? காலமே பதில் சொல்லும்..

கமலியோ நாளைய பொழுதை பற்றிய சிந்தனையில் இருக்க, காலையில் எப்போதும் போலவே கிளம்பி அச்சகம் சென்றுவிட்டாள். அங்கே வனமாலி வீட்டிலோ முரளி வீட்டினர் வந்திருக்க, அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்..

முரளியின் அப்பாவோ “என்னப்பா.. கமலி, சிவகாமியம்மாலாம் எங்க??” என்று வனமாலியிடம் கேட்க, நல்லவேளை அது யார் காதிலும் விழவில்லை..

மணிராதா, மும்முரமாய் இந்திராவோடும் முரளியின் அம்மாவோடும் பேசிக்கொண்டு இருக்க, வந்தனவோ முரளியின் அருகே அமர்ந்திருக்க, பமீலா வந்தவர்களை கவனிக்கும் பொருட்டு என்று இங்கே அங்கே அலைந்துகொண்டு இருந்தாள். கோவர்த்தன் வெளியே சென்றிருந்தவன் அப்போதுதான் வீட்டிற்கு வந்து அமர்ந்திருந்தான்..

“இப்போ வந்திடுவாங்க மாமா..” என்று அந்த பக்கமும் விட்டுக் கொடுக்காது வனமாலி சொல்ல, நேரம்தான் சென்றது.

மேலும் இருபது நிமிடங்கள் கடந்திட, ‘ஒருவேளை கமலி இதுலையும் விளையாடுறாளா??’ என்று தோன்றவும் வனமாலிக்கு சுல்லென்று உச்சந்தலைக்கு எரிச்சல் ஏறியது.

“பேசிட்டு இருங்க மாமா ஒரு போன் பேசிட்டு வந்திடுறேன்..” என்றவன் கோவர்த்தனை ஒருபார்வை பார்த்துவிட்டு எழுந்து போனான். அண்ணன் எழுந்து செல்லவும் அவரோடு கோவர்த்தன் பேச்சினைத் தொடங்க, அனைவரையும் தாண்டி கொஞ்சம் தள்ளி வந்தவன் கமலிக்கு அழைத்தான்.

கமலி அப்போதுதான் கிளம்பிக்கொண்டு இருக்க, இவன் அழைத்ததும் எடுத்து “ஹலோ..” என,

“இங்க பார் கமலி... இப்பவும் சொல்றேன் வந்தனா முரளி கல்யாணத்துல விளையாட நினைக்காத.. நேத்து நீயாதானே அவங்கக்கிட்ட வர்றேன்னு சொன்ன.. இப்போ வராம இருந்தா என்ன அர்த்தம்??” என்று காந்தினான்.

அவனால் சத்தமாய் பேசவும் முடியாது, அவனின் உணர்வுகளை முகத்தினில் காட்டவும் முடியாது, வனமாலி எழுந்து வரவுமே மணிராதாவின் பார்வை மகனைத் தான் தொடர்ந்தது. ஆக அவனின் குரல் மட்டுமே அவனின் உணர்வுகளை கடத்த, கமலியோ ‘கிளம்பிட்டு இருக்கேன்..’ என்று சொல்ல நினைத்தவள்,

அவனின் பேச்சில் கடுப்புற்று, “அடடா இப்போ வரைக்கும் அந்த எண்ணம் வரலை.. இதோ வந்துட்டே இருக்கேன்.. கெட் ரெடி பார் எ கேம்..” என்று கிண்டலாய் மொழிந்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்..

‘இவ.. எவ்வளோ சொன்னாலும் அடங்கமாட்டா.. இனியும் நீ பொறுமையா போறதுல அர்த்தமில்ல வனா...’ என்று சொல்லிக்கொண்டவன், வாசல் வராண்டாவில் போய் நிற்க, சிறிது நேரத்தில் மணிராதா அங்கே வந்தார்.

“வனா... இங்க ஏன் நிக்கிற?? யார் வரா??” என்று மகனின் முகத்தை ஆராய,

“பத்திரிக்கை டிசைன் பார்த்து முடிவு பண்ணதானே எல்லாம் வந்திருக்காங்க.. அதுக்குதான் ஆள் வர்றாங்கம்மா..” என்றான் அவரின் முகத்தில் பார்வையை வைக்காது.

“அதுக்கேன் நீ இங்க நிக்கிற??” என்றவருக்கு என்ன புரிந்ததோ “எங்க சொல்லிருக்க வனா பத்திரிக்கை அடிக்க??” என்று கேட்க,

“நான் சொல்லலைம்மா முரளி வீட்ல சொல்லிட்டாங்க. அதுக்குமேல அங்க என்னால மறுத்து பேச முடியாது.. நீங்களும் தேவையில்லாம ரியாக்ட் பண்ணாம அடுத்து என்ன செய்யனுமோ அதைமட்டும் செய்யுங்க. அப்புறம் பமீலா இந்திரா அத்தைக் கிட்டயும் சொல்லிடுங்க..” என்றவனின் குரலில் மணிராதாவின் முகம் அப்படியே மாறிப் போனது.

“வ.. வனா.. எ.. என்ன சொல்ற?? யா யார் வரா??” என்று கேட்கையிலேயே கமலியின் கார் வந்து அவர்களின் வீடு முன்னே நிற்க, அம்மா மகன் இருவரின் பார்வையும் அங்கேதான் சென்றது.

காரை விட்டு இறங்கியவள், இவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வர, வனமாலி வேகமாய் முன்னே சென்று “வ.. வா கமலி..” என்றான் வரவேற்ப்பாய்..

அவனோடு நடந்தவள், அவனின் பேச்சில் நின்று அவன் முகத்தை நேருக்கு நேராய் பார்த்து “சந்தோசமா வா சொல்றீங்களா??” என்று இரு புருவங்களையும் உயர்த்த, அந்த நொடி, அந்த பாவனையில், கமலியின் நெருக்கத்தில் கொஞ்சமே கொஞ்சம் தள்ளாடித்தான் போனான் வனமாலி.

மணிராதா கமலியை பார்த்ததும் திகைத்துப் போய் நின்றவர், பின் சுய நினைவு வர சிறிது நிமிடம் பிடித்தாலும் கூட, அதுவரைக்குமே வனமாலியும் கமலியும் இங்கே வரவில்லை.. சுதாரிப்பிற்கு வந்ததுமே அங்கே பார்க்க, கமலி சிரித்தபடி நிற்பதும், வனமாலி கொஞ்சம் திகைத்து பதில் சொல்லாது நிர்ப்பதுமே கண்ணில் தெரிய,

“வனா!!!” என்று கொஞ்சம் சத்தமாகவே அழைத்துவிட்டார்..

அவரின் அழைப்பில் தன்னை மீட்டவன் கமலியைப் பார்க்க அவளோ “நான் எதுவும் பண்ணல பட் கேம் ஸ்டார்ட்ஸ்...” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க,

அத்தனை நேரமிருந்த ஒரு மென்மை மாறி, வேகமாய் அவளின் கரம் பிடித்து நிறுத்தியவன் “என்னை மீறி எதுவும் நடக்காது கமலி..” என்றான் குரலில் இருந்த இறுக்கம் பிடியில் காட்டி.
 
“அப்படியா???!!!!”

வனமாலி பதில் சொல்லும்முன்னே மணிராதா “வனா??!!” என்று மீண்டும் கத்த, கமலியின் சிரிப்போ இன்னும் விரிந்தது..

“இப்பவும் நானே எதுவுமே செய்யலை..” என்று தோள்களைத் தூக்கியவள், அவனின் பிடியில் இருந்த தன் கரத்தினை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும் அவனைப் பார்க்க, அவனோ சட்டென்று கைகளை விட்டான்.

‘என்ன வனா செய்ற நீ?? மனசுல தேவையில்லாத எண்ணங்கள் வைக்காத...’ என்று வனமாலி தனக்குதானே சொல்லிக்கொள்ள, “உள்ள போவோமா??!!!” என்று கமலி சொல்லவும் இருவரும் நடக்க,

மணிராதாவோ “வனா என்னடா இதெல்லாம்...??” என்று மகனை பார்த்தவர், “ஏய் நீ ஏன் இங்க வந்த? மாப்பிள்ளை வீட்ல சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி??” என்று கமலியையும் சாடினார்.

கமலியோ எதற்கும் அசரவில்லை, இவர்கள் எல்லாம் பேசாது இருந்தால் அவள் வந்த வேலையை பார்த்துவிட்டு அவள்பாட்டில் செல்வாள். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் செய்வது எல்லாம் அவளைத் தூண்டிவிடுவதாகவே இருக்க, அவள் சும்மா இருந்தாலும் கூட இவர்களே ஏதாவது செய்துவிடுகிறார்கள்..

மணிராதாவின் இக்கேள்வியில் “அப்போ உங்க மாப்பிள்ளை வீட்டாளுங்களுக்கு புத்தியில்லைன்னு சொல்றீங்களா??” என்று கமலி ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாய்க் கேட்க,

“ஏய் ஏய்!!!” என்று மணிராதா இன்னும் சத்தம் எழுப்பவும், வனமாலி பக்கம் திரும்பியவள்

“இங்க பாருங்க நடந்தது உங்களுக்குத் தெரியும். நானா எதுவும் செய்யலை.. அப்படி செய்யனும்னு நினைச்சிருந்தா நேத்து உங்களை கூப்பிட்டே இருக்கமாட்டேன்.. பட் இப்போ பாருங்க இதான் உங்க வீட்டுக்கு வந்தவளுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா?? நான் இப்படியே கிளம்புறேன் முரளி அப்பாக்கு நீங்களே பதில் சொல்லிக்கோங்க..” என்று பொரிந்துவிட்டு திரும்பப் போனவளை வனமாலி மீண்டும் கரம் பிடித்து நிறுத்த,

“அவளை விடு வனா போகட்டும்..” என்று மணிராதா சொல்ல, அதற்குள் வீட்டிற்குள் இருந்து முரளியின் அப்பா வெளியே வந்துவிட்டார்.

“அடடே வாம்மா.. இங்க நின்னு பேசிட்டு இருக்கீங்களா..” என்றவர் இவர்களை நோக்கி வர, வனமாலியோ அவனின் பிடியை விடவேயில்லை..

“ஒழுங்கா வீட்டுக்குள்ள வா...” என்று அவனின் இதழ்கள் முணுமுணுக்க,

“வந்தவளை நீங்கதான் உள்ள போக விடலை..” என்று புன்னகை மாறாது பதில் சொல்ல, இவர்கள் இருவரின் இந்த கோலம் மணிராதா மனதில் எச்சரிக்கை மணி அடித்தது..

‘இதை நீடிக்க விடக்கூடாது...’ என்று யோசித்தவர், “என்னண்ணா இதுக்கேன் நீங்க எழுந்து வரணும்.. நாங்களே உள்ள வந்திருப்போமே..” என்றவர் வேகமாய் “வாங்க எல்லாம் உள்ளப் போவோம்..” என்று பொதுவாய் சொல்லிவிட்டு முன்னே நடக்க,

“அதுவும் சரிதான் நல்ல நேரம் முடியுபோகுது.. அதுக்குள்ள பத்திரிக்கை பார்த்துட்டா நல்லது..” என்று அவரும் சொல்ல, வனமாலி பிடித்த கரம் விடாது அவளை கரம் பற்றியே அவனின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

கமலிக்கு வீட்டினுள் நுழைய, அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அனைவரும் எழ, அதிலும் வனமாலி அவளின் கரம் பற்றி அழைத்து வருவது கண்டு மேலும் ஒரு திகைப்புக் கூட, வந்தனாவும், முரளியும் அவன் அம்மாவும் சந்தோசமாய்

“வா கமலி...” என்று வரவேற்க, அங்கே யாராலும் எதுவுமே பேச முடியவில்லை.

பமீலாவும் இந்திராவும் ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொள்ள, மணிராதாவோ ‘எதுவும் பேசாதீர்கள்..’ என்று கண்களில் எச்சரிக்கை காட்ட, பமீலாவோ “என்ன இதெல்லாம்...” என்று கோவர்த்தனைப் பார்த்தாள்.

அவனோ, இவர்களைப் போலவே ஒரு அதிர்வில் இருந்தாலும் பின் சுதாரித்து “வா.. வா கமலி..” என்று லேசாய் திணறி வரவேற்க, வந்தனாவோ அவளிடம் சென்று “நீ வந்ததுல ரொம்ப சந்தோசம்...” என்றுசொல்ல, அப்போதும் வனமாலி அவளின் கரங்களை விட்டானில்லை..

அனைவருக்கும் தன் சிரிப்பையே பதிலாய் கொடுத்தவள், “இப்போவாது கையை விடுங்களேன்..” என்று வனமாலியிடம் சொல்ல, ‘ச்சே...’ என்று நொந்து வேகமாய் அவன் பிடியை விட்டான்..

அதன்பின் அங்கே பேச்சோடு பேச்சாய் பத்திரிக்கை தேர்வு நடக்க, முரளியின் அப்பாவோ “கமலி அம்மா வரலையாம்மா??” என்று கேட்க, ‘என்ன சொல்ல போறாளோ..’ என்று மணிராதாவும் வனமாலியும் பார்க்க,

கமலியோ “கோவிலுக்குப் போயிருக்காங்க பெரியப்பா...” என்றவள் “நீங்க எது பிடிக்குதோ பாருங்க..” என்று பேச்சினை மாற்றினாள்.

அவளுக்குத் தெரியும் இவர்கள் எப்படியான திருமண பத்திரிக்கைகளை விரும்புவார்கள், எப்படி விலையில் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆக அதை வைத்து பல மாதிரிகளை கொண்டு வந்திருக்க, பெரியவர்கள் அந்த வேலையை தொடர, பமீலா எழுந்து உள்ளே போய்விட்டாள்.. இந்திராவும் கூட.

‘என்ன உள்ள போயிட்டாங்க..’ என்று முரளியின் அம்மா கேட்டதற்குக் கூட, “இந்திரா மாத்திரை போடல போல லேசா தலை சுத்துதாம்..” என்று மணிராதா கொஞ்சம் சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருந்தது.

வந்தனவோ இதெல்லாம் கவனித்தாலும் இப்போது எதுவும் கேட்க முடியாது என்பதால் அமைதியாய் இருக்க, வனமாலி தன் தம்பியை பார்த்தான் ‘இதெல்லாம் சரியில்லை..’ என்பதுபோல்.

அவனோ ‘வேலை முடியட்டும்..’ என்று சைகை செய்ய, கமலியோ “வீட்டுக்கு பார்ஸ்ட் டைம் வர்றேன் எதுவும் கொடுக்க மாட்டீங்களா??” என்று வனமாலியிடம் ரகசியம் பேசுவதுபோல் கேட்க, இவர்களின் இந்த புது நெருக்கம் அனைவர்க்கும் ஒரு காட்சியாய் அமைந்தது.

என்னவோ கேட்கிறாளே என்று வனமாலி லேசாய் அவளின் புறம் சாய்ந்து கேட்க, பார்ப்பவர்களுக்கு இவர்கள் இருவரும் ரகசியமாய் எதுவோ பேசுவதுபோல் இருக்க முரளியோ “மச்சான்.. கொஞ்சம் எங்களையும் கவனிங்க..” என்று கிண்டல் அடிக்கவும்தான் வனமாலி லேசாய் அசடு வழிவது போல் சிரித்து,

“ம்மா கமலிக்கு ஏதாவது கொடுங்க..” என, அவரோ மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, “தேங்க்ஸ்...” என்றவள் வாங்கி மறுக்காமல் குடித்தும்விட்டாள்.

கமலிக்கு நன்கு தெரியும், தான் இங்கே சும்மா அமர்ந்திருப்பதே அனைவரும் நெருஞ்சியாய் மனதில் குடையும், ஆக நாம் எதுவும் செய்யாமலேயே எல்லோரும் என்னாகுமோ என்ற ஒரு அச்சத்தில் இருப்பார்கள் என்று. ஆக அவள் வந்த வேலையை மட்டுமே பார்த்தாள்.

அவள் சரியாய் தானே இருக்கிறாள் என்ற எண்ணம் வனமாலிக்குள் வர, ‘நம்மதான் தப்பா யோசிக்கிறோமோ??’ என்றும் தோன்ற, அதற்குள் முரளியின் அப்பா ஒரு பத்திரிகை காட்டி “இது நல்லாருக்கே..” என்றுசொல்ல, அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.

கமலி விபரங்கள் சொல்ல, பின் இருவீட்டு அழைப்பிற்கு என்று பொதுவாய் ஒரு பாத்திரிக்கையும், முரளி அவனின் நண்பர்களுக்கு கொடுக்கவென ஒரு பத்திரிக்கையும், பின் வனமாலி கோவர்த்தன் அவர்கள் தனியே அழைக்கவென்று வேறு வேறு பத்திரிகைகள் என்று எல்லாம் தேர்வாக, கவனித்துப் பார்த்தால் அனைத்துமே கமலி சொன்ன யோசனைகளின் படி முடிவு செய்ததாகவே இருந்தது.

உள்ளிருந்தே இவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்ட பமீலாவோ “ம்மா இப்படியே போனா ஒருநாள் இல்லை ஒருநாள் இவ இங்க வந்து ராஜ்ஜியம் பண்ணுவா, அத்தையும் வாய் மூடி இருப்பாங்க இதோ நம்ம இப்படிதான் வந்து தனியா உக்காந்து இருக்கணும்..” என்று கறுவிக்கொண்டு இருக்க,

“அண்ணியும் வந்தனா கல்யாணத்துக்காக பாக்குறாங்க..” என்று இந்திரா மகளுக்கு சமாதானம் சொல்ல,

“சும்மா இரும்மா.. இதெல்லாம் அவங்களுக்கு ஒரு விசயமா?? அவங்க நினைச்சா அந்த வீட்டுக்கு போயி சத்தம் போட்டு வரலாம்.. ஆனா இப்போ வரைக்கும் எதுவும் செய்யலை.. இந்த வனா மாமா வேற.. ச்சேய்...” என்று நொந்தவள் இங்கேயும் இருக்க முடியாது எழுந்து வெளியே போக, அங்கேயோ அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இவளின் மனதோ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.



தொடரும்..............................
 
Top