Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
வசீகர வனமாலி – 8

சில விஷயங்கள் நாம் பார்த்து பார்த்து நேர்த்தியாய் செய்தாலும், எது எப்படி நடந்திட வேண்டுமோ அது அப்படியே நடக்கும். சிலது நாம் கண்டுகொள்ளாது போனால் கூட இறுதியில் நம் விருப்பத்தின் பேரில் நடந்தேறும்.. வந்தனா திருமணத்தில் தன் வீட்டினரும் சரி இல்லை கமலியும் சரி யாரும் தேவையில்லாது பிரச்னைகள் கிளப்பக் கூடாது என்றெண்ணியே அனைத்தையும் தன் தோளில் போட்டுக்கொண்டான்.

ஆனால் அதுவே இப்போதும் பெரும் பிரச்சனை ஆனது.. நடப்பதெல்லாம் இயல்பாய் நடக்கிறதா இல்லை கமலி தனக்கேற்றார் போல் சூழல்களை மாற்றிக்கொள்கிறாளா?? இதெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல, வனமாலி தான் அனைத்துப் பக்கத்திலும் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கல்யாண பத்திரிக்கை கமலியின் பொறுப்பில் இருக்க, கல்யாணத்திற்கு என்று துணிகள் எடுக்கச் சென்றால், அங்கேயே கமலி இருந்தாள், வந்தனா போய் அவளிடம் பேசி ‘வா நீயும் வந்து செலக்ட் பண்ணு...’ என்று அழைக்க,

முரளியின் அம்மாவோ ஒருபடி மேலே போய் சிவகாமிக்கும் கமலிக்கும் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக்கொடுக்க, யாராலும் எதுவும் சொல்ல முடியாத ஒரு நிலை.. ஜவுளிக் கடைக்கு அவர்கள் வேலையை வருபவர்களிடம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் கமலி அவள் மட்டும் வரவில்லை, உடன் ராணியும் அவரின் மகளும் வந்திருந்தனர்.

வந்தனாவும், அவளின் வருங்கால மாமியாரும் அழைக்கையில் கமலி அத்தனை தயங்கினாள் தான்.

“வேண்டாமே வந்தனா.. நீங்க பாருங்க.. நாங்க இப்போ கிளம்பிடுவோம்..” என்றுசொல்லி நகரப் பார்த்தவளை முரளியின் அம்மா தான் வம்படியாய் இழுத்து வந்தார்.

அப்போதும் கூட பட்டும் படாமலும் தான் நின்றிருந்தாள், அவளுக்கு அப்படி சும்மா நிற்பதும் கூட சங்கடமாய் இருக்க, அப்போது தான் அங்கே வனமாலி வந்து சேரவும், அவனைக் கண்டு ‘அப்பாடி...’ என்ற ஒரு நிம்மதி அவள் முகத்தினில் தோன்றி மறைந்தது.

‘இங்கே வா..’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவனும் அதை சரியாய் புரிந்து “ஹே கமலி.. நீ எப்போ வந்த??” என்று இயல்பாய் கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அவளின் அருகே செல்ல, “நான் கிளம்பறேன் ப்ளீஸ்...” என்றாள் மெதுவாய்..

‘என்னடா அதிசயத்திலும் அதிசயமாய் கெஞ்சுகிறாள்..’ என்று வனமாலி ஆச்சர்மாய் பார்க்க,

“நீங்க அப்புறம் ஷாக் ஆகுங்க.. இப்போ நான் கிளம்பனும்.. அதுக்கொரு வழி பண்ணுங்க.. நான் எந்த ப்ளான்லயும் வரல..” என்று கமலி முணுமுணுக்க,

“ஓ..!! அப்போ ப்ளான் பண்ணி வேற வருவியா??” என்றான் வனமாலி கொஞ்சம் கேலியாய்..

“ஹா ஹா நான் எதுவும் செய்யாம இருக்கும்போதே எல்லாம் நடக்குது.. இதுல ப்ளான் எல்லாம் பண்ணா அவ்வளோதான்... டாமால்.. டுமீல்னு வெடிக்கும்..” என்றவள்,

“இப்போ சொல்லுங்க நான் இருக்கவா இல்லை போகவா???” என, இவர்களின் பேச்சை கோவர்த்தன் ஒருவித வேடிக்கையாய் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனுக்கு வனமாலியைப் பற்றிய தெரியாதா என்ன?? இதுநாள் வரைக்கும் கூட அவன் கமலியோடு இப்படியெல்லாம் பேசியதில்லை. கமலியும் சரி இவர்கள் இருக்கும் பக்கம் கூட வரமாட்டாள். ஆனால் இப்போதோ எல்லாமே மாறிக்கொண்டு இருக்க, அண்ணனும் கமலியும் பேசுவதைப் பார்க்க அவனுக்கு என்னவோ சுவாரஸ்யமாய் இருந்தது.

வனமாலி பார்த்தவன் “என்னடா பாக்குற..” என,

“ஒன்னுமில்லையே...” என்று கோவர்த்தன் சொல்லும்போதே, வந்தனா “நாங்க பார்த்துட்டு தான் இருக்கோம்..” என்றாள் கேலியாய்..

அதற்குள் முரளியும் “ஆமாமா பார்த்துட்டு தான் மச்சான் இருக்கோம்..” என்று வந்தனா சொல்லியதையே சொல்ல, கமலிக்குப் புரிந்தது எதுவோ கிண்டல் செய்கிறார்கள் என்று.

ஆனால் அவளுக்கு அன்றைய மனநிலை மிக மிக நல்லதொரு நிலையில் இருக்க, சண்டையிடும் எண்ணமோ, இல்லை குதர்க்கம் காட்டும் யோசனையோ இம்மியளவு கூட இல்லை. ஆக அவளுமே கூட வந்தனா முரளியைப் பார்த்துவிட்டு “நீங்க ஏன் எங்களை பாக்கணும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பாக்குறதை விட்டு..” என்று பதிலுக்கு கிண்டல் அடிக்க,

‘பார்ரா...’ என்று பார்த்தது வனமாலியே..

கமலி அழகிதான். அவள் முகத்தில் இருக்கும் புன்னகை அவளை இன்னமும் அழகாய் காட்டியது. கோபம் வருகையில் காளி அவதாரம் என்றாள், புன்னகை சிந்துகையில் மோகினி அவதாரம் போல என்று எண்ணியவனுக்கு ‘வனா....’ என்று அவனின் புத்தி எச்சரிக்கை மணி அடித்தது..

‘சரி சரி...’ என்று அவனே தன்னை சமாளித்துக்கொண்டவன், “உனக்கும் அத்தைக்கும் சேலை பாரு..” என்று சொல்லி பேச்சை மாற்ற,

“அல்ரடி எடுத்து கொடுத்துட்டாங்க...” என்றவள், “வந்து ரொம்ப நேரமாச்சு... எனக்காக அவங்களும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க..” என்றுசொல்லி ராணியையும் அவரின் மகளையும் காட்ட,

அவர்களைப் பார்த்தவன் “ஓ.. சரி ஆனாலும் பொண்ணு வீட்டு சைட்லயும் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்.. உனக்கு நாங்க செலெக்ட் பண்ணா பிடிக்குமோ என்னவோ...” என,

கோவர்த்தன் “அண்ணா இன்னொரு நாள் அந்த ப்ளான் பண்ணலாமே..” என்று அவனும் இவர்களோடு சேர்ந்துவிட்டான்..

கமலியோ சற்றே தள்ளி அமர்ந்து இதெல்லாம் ஒருவித புகைச்சலோடும், எரிச்சலோடும் பார்த்துக்கொண்டு இருந்த மணிராதா, பமீலா, இந்திராவின் முகத்தினைப் பார்த்தவளுக்கு மனதினில் ஒரு திருப்தி தோன்ற,

“ஓ..!! அம்மா கூட சொன்னாங்க வந்தனாக்கு சேலை நகை எல்லாம் எடுக்கணும்னு.. எப்போன்னு ஒரு டைம் சொல்லுங்க எல்லாமே சேர்ந்து வரலாம்..” என்று சற்றே சத்தமாய் சொல்லிவிட்டு, வனமாலியிடம் ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டாள்..

அவள் போன பின்னும் கூட வனமாலி அப்பக்கமே பார்த்துக்கொண்டு இருக்க வந்தனா தான் “போயாச்சு போயாச்சு...” என்று அண்ணனின் தோளைத் தட்ட,

“அடாடா.. ஒன்னுமில்லாததை ஏன் ஊதி கெடுக்கிறீங்க.. என்னவோ நல்ல மூட்ல வந்திருக்கா இல்லை அவ்வளோதான்..” என்றவன் பயந்தது போல் நடிக்க, இவர்களின் இந்த சிரிப்பும் உற்சாகமும் அவர்களின் வீட்டு மற்ற பெண்களுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

இது மட்டுமென்றில்லை, அடுத்து சில பல நிகழ்வுகளும் இப்படியே கமலியை பொது இடத்தில் பார்க்கும் நிலை ஏற்பட, அது தன்னைப்போல் நடந்ததா இல்லை கமலி தானாக நடத்திக்காட்டினாளா என்று வனமாலிக்கு விளங்கவில்லை.

அவளோடு பேசுகையில் அவள் இயல்பாய் எப்போதும் போல் தான் இருக்கிறாள். ச்சே இவள் மனதில் எதுவுமில்லை எதோ கோவத்தில் அன்று அப்படி சொல்லியிருக்கிறாள் என்று தோன்றும், ஆனால் தனியே சிந்தித்துப் பார்க்கையில், கமலியின் ஒவ்வொரு பார்வைக்கும் சிரிப்புக்கும் வேறொரு அர்த்தம் இருக்கிறதோ என்றும் இருக்கும்..

வீட்டிலோ மகிழ்வாய் இருக்க வேண்டிய நேரமிது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை.. மணிராதா கூட மகளின் திருமணம் நல்ல முறையில் நடந்தேற வேண்டும் என்று கொஞ்சம் வாய் மூடி போனார்.

‘எல்லாமே வந்தனா கல்யாணம் வரைக்கும்தான்..’ என்று வீட்டிலும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டார்..

ஆனால் பமீலாவோ “அத்தை இதெல்லாம் இவ வேணும்னே பண்றா.. அதுக்கு வனா மாமாவும் துணை.. இத்தனை நாள் அவங்க இப்படித்தான் பேசிக்கிட்டாங்களா?? இப்போ எல்லாமே புதுசா இருக்கு... அப்போ உங்களுக்கு வேணும்னா அவங்களை சேர்த்துப்பீங்க.. இத்தனை வருசமா உங்களோடவே இருந்த எங்கம்மா என்ன பண்ணுவாங்க??” என்று மணிராதாவை சடைக்க,

அவரோ “வனா.. உன் பொறுப்பு நீ சரியா பண்ணுவன்னு தானே அமைதியா இருக்கேன்.. இப்போ எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. அந்த கமலி ஏன் எல்லா இடத்துக்கும் வரா..” என்று மகனிடம் மல்லுக்கு நின்றார்.

“ம்மா... நான் போய் கூட்டிட்டு வந்தேனா? இல்லை கமலி வந்து எதுவும் தப்பா பேசி பிரச்சனை இழுக்கிறாளா ?? எதுவுமே இல்லை.. சொல்லப்போனா கமலி ஒதுங்கி தான் போறா.. இப்போ நீங்க எல்லாரும் தான் தேவையில்லாம பேசுறீங்க..” என்று வனமாலி சத்தம் போட்டாலும் மனதில் அவனுக்குமே நிம்மதி குறைந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை என்கையில் அவன் என்னதான் செய்வான்.. வெளி வேலைகள் பார்ப்பானா?? தொழிலை கவனிப்பானா?? கல்யாண வேலைகள் பார்ப்பானா?? இல்லை இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் பேசி முடிப்பானா??

அவன் ஒருவன் என்னதான் செய்ய முடியும்..

இந்த பமீலா செய்வது போதாது என்று இந்திரா வேறு.. இந்திரா ஆரம்பித்தில் இருந்தே மணிராதாவின் கைப் பிள்ளை. இப்போதோ பமீலாவின் பேச்சுக்கள் அவரை சஞ்சலப் படுத்த, அவரின் பதற்றம் கூட ஆரம்பித்தது.

வனமாலியிடமே வந்து “ஏன் வனா நானும் உனக்கு அத்தை தான.. ஆரம்பத்துல இருந்து நம்ம எல்லாம் ஒண்ணாதானே இருக்கோம்.. இப்போ ஏன் எல்லாத்தையும் மாத்தனும்னு நினைக்கிற...” என்று என்னவோ இவன்தான் கமலிக்கு உறுதுணையாய் நின்று அனைத்தும் செய்கிறான் என்பதுபோல் பேச,

அவனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சண்டை போடுபவரிடம் சண்டை போடலாம் ஆனால் அழும் நபரிடம் ஆறுதல் சொல்வதுதானே சரி.. அதிலும் இந்திரா, அவனை விட வயதில் மூத்தவர் அழுகையில் அவனுக்கு சங்கடமாய் போனது..

“அத்தை என்ன இதெல்லாம்.. ப்ளீஸ் அழாதீங்க..” என்று அவரை கொஞ்சம் அமைதி படுத்தியவன்,

“ஏன் நீங்க இப்படியெல்லாம் நினைக்கிறீங்க?? நம்ம எல்லாருமே ஒரே குடும்பம் தான்.. மாமா இருந்திருந்தாலும் அதானே செய்வார்..” என்றான் பொறுமையாய்..

“யார் இல்லைன்னு சொன்னா.. ஆனா சிலது எல்லாம் ஒண்ணா இருந்தா ஒத்து வராது வனா.. அவருக்கு ரெண்டு குடும்பம்.. ஆரம்பத்துல இருந்து வேற வேறன்னு இருந்தாச்சு.. இப்போ நீ ஒண்ணு சேர்த்து வைக்க முயற்சி பண்ணாத..” என்றார் மீண்டும் ஒரு அழுகையை ஆரம்பித்து..

நிதானமாய் அவரின் முகம் பார்த்தவன் “ஏன் அத்தை ஒண்ணா இருந்தா என்ன தப்பு?? ஒற்றுமையா இருக்கிறதுல என்ன தப்பு??” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்க, அவனின் கேள்வியில் கொஞ்சம் திகைத்தவர்,

“அ.. அது.. அதெல்லாம் எதுவும் வேணாம்.. அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா போதும்...” என,

“சரி அப்போ ஏன் பமீலா அவங்க சும்மா இருந்தாலும் இவ்வளோ பேசுறா?? வீட்ல எப்போ பார் சண்டை.. எல்லாம் நீங்களும் பாக்குறீங்க தானே..” என்று வனமாலியும் விடாது பேச, இந்திராவோ ஓரளவுக்கு மேலே திணற ஆரம்பித்தார்.

அவரை பேசு என்று சொன்னதே மணிராதாதான்.. ‘நான் பேசினா அவன் கண்டிப்பா ஏதாவது சொல்லி வாயை அடைப்பான்.. எல்லாத்தையும் விட எனக்கு இப்போ வந்தனா கல்யாணம் முக்கியம். அதுவரைக்கும் நான் எதுவும் பேச முடியாது..’ என்று இந்திராவை பேசு என்று சொல்லியிருந்தார்.

ஆனால் ஒரு அளவுக்கு மேலே, இந்திராவும் பேசத் திணற “என்ன அத்தை பேச்சு வரலியா?? நிதானமா யோசிக்கிறதுக்கு எல்லாம் வருசமும் ஓடிருச்சு. ஆனா இனியாவது கொஞ்சம் எல்லாம் புரிஞ்சு நடந்தா சரி.. சிவகாமி அத்தையும் கமலியும் இந்தளவு பொறுமையா ஒதுங்கிப் போறதே பெரிய விஷயம்..” என்றவன் அமைதியாய் அவரைப் பார்க்க,

இந்திராவோ எப்பதிலும் சொல்லாது எழுந்துப் போனார். கண்டிப்பாய் அவரிடம் பதில் இல்லைதான். ஆரம்பத்தில் இருந்தே, அதாவது மகுடேஸ்வரனுக்கு இவரை இரண்டாம் தாரமாய் பேசியதில் இருந்தே, மணிராதாவின் பேச்சு மட்டுமே இவருக்கு.. அப்படியே ஆகிப்போனது..

‘நான் சொல்றபடி கேட்டுகிட்டே நீ தான் அங்க ராணி...’

‘கொஞ்சம் இடம் விட்டா கூட, உன்ன தொரத்திவிட்டு அந்த சிவகாமி திரும்ப வந்திடுவா...’
 
‘நான் சொல்றபடி செய் இந்திரா.. அப்போதான் என் தம்பியும் நீ சொல்றதை கேட்பான்...’

‘பொம்பள புள்ள பெத்து வச்சிருக்க, என்னிக்கா இருந்தாலும் சிவகாமி இங்க வந்தா உன்னோட மதிப்பு போயிடும்.. நீ இந்த வீட்ல இருந்தா தான் உனக்கு மரியாதை கிடைக்கும்..’

‘பாரு அந்த கமலி பொண்ண என் தம்பிதான் இங்க தூக்கிட்டு வர்றானா நீ ஏன் அதை விடுற.. ஆரம்பத்துல இருந்து இதெல்லாம் தள்ளி வைக்கணும்.. இந்த வீடு உன்னோட வீடு பமீலாவோட வீடுன்னு மட்டும் இருக்கணும்.. அப்போதான் உனக்கு பாதுகாப்பு.. கமலி வந்தா எல்லாமே போச்சு..’

என்று இப்படியான வார்த்தைகளை கேட்டு கேட்டு மனதில் ஊறி ஊறியே, சிவகாமி மீதும் கமலி மீதும் ஒரு பய உணர்வு தோன்றிட, என்றாக இருந்தாலும் இவர்களால் எனக்கும் என் மகளுக்கும் ஒரு அவமானமும் மதிப்பின்மையும் வந்துவிட கூடாது என்ற எண்ணத்திலேயே மணிராதாவின் பேச்சிற்கு கட்டுபட்டே இந்திரா இத்தனை ஆண்டு காலத்தை கடத்திவிட்டார்.

மகுடேஸ்வரன் இறந்த பின்னரோ, சரி இவர்களால் எவ்வித தொந்திரவும் இருக்காது, மகளையும் கோவர்த்தனுக்கு கட்டி கொடுத்தாயிற்று, மிச்ச காலத்தை அமைதியாய் இப்படியே செலுத்திடுவோம் என்று நினைக்கையில், கமலியின் இந்த திடீர் தலையீடு அவருக்கு மனதினுள்ள ஒரு பிரளயம் உருவாகச் செய்தது.

அதற்குமேல் பமீலா..

அவளை கட்டுக்கொள் வைப்பது என்பது யாராலும் முடியவில்லை.. கோவர்த்தனிடம் சண்டை போட்டாள். மணிராதாவிடம் கத்தினாள். வந்தனாவோடு வார்த்தையாடினாள்.. எப்போது பார்த்தாள் சண்டை அழுகை கோபம் அது இதென்று ஏதாவது ஒன்று நிகழத் தொடங்கியது. ஆக மொத்தம் வீட்டில் இருந்த அந்த சந்தோஷ சூழல் காணாது போனது..

கல்யாண வீடு என்பது மாறி, எப்போது என்ன நடக்குமோ என்ற சூழலே இருக்க, வனமாலிக்கு இது எதுவுமே பிடிக்கவில்லை. நியாய அநியாங்கள் எல்லாம் தாண்டி ஒரு மனிதனக்கு அவனவன் நிம்மதி, அவனவன் வீட்டு சந்தோசம் இதுவே தான் பிரதனாமாய் ஆகும் ஒரு நேரத்தில்..

இப்போது வனமாலியின் எண்ணமும் அதுவாய் ஆனது.. ‘என்ன செஞ்சா வீட்ல எல்லாம் நிம்மதியா இருப்பாங்க??’ என்று யோசிக்கையில் பேசாது சிவகாமியோடு போய் பேசிப் பார்ப்போமா என்று தோன்றியது..

ஆனால் அவரிடம் தான் என்ன சொல்வான்??

கமலி அது செய்தாள் இது செய்தாள்... இப்படி வந்து பேசினாள்.. சண்டை போட்டாள் என்று ஏதாவது ஒன்று விரல் நீட்டி சொல்ல முடியுமா?? முடியாதே.. கமலி அவள்பாட்டில் தானே இருக்கிறாள்..

இல்லை இருப்பது போல் காட்டிக்கொள்கிறாளா?? எது எப்படியோ கமலி இவர்கள் வீட்டின் நிம்மதியை கொன்றுவிட்டாள்.

பால்கனியின் கம்பியை இறுகப் பற்றி நின்றிருந்தவன் ‘ஷ்..... கமலி... நீ என்ன கொல்ற....’ என்று அவனையும் அறியாது சொல்ல, அந்த நொடி அவனின் உணர்வு அவனுக்கே புரியாது போனது.

தான் என்ன யோசிக்கின்றோம்.. எதற்காக இப்படி செய்வது அறியாது நிற்கின்றோம் என்றே தெரியாது நின்றவனுக்குத் தான், என்ன செய்தால் கமலியும் சும்மா இருப்பாள், வீட்டிலும் நிம்மதி வரும் என்று யோசனை போக,

‘பேசாம நீ கமலிய கல்யாணம் பண்ணிக்கோ வனா... எல்லாமே சரியாகும்..’ என்ற குரல் அவனுள் ஒலித்தது..

அடுத்த நொடி விதிர்த்துப் போய்விட்டான்... கல்யாணமா அதுவும் கமலியோடா.... நொடிப் பொழுதில் அவனும் அவளுமாய் நிற்கும் மனக் கோலம் கண் முன்னே வர, இதயம் நின்றே துடித்தது வனமாலிக்கு. அந்த துடிப்பிலும் கூட ஒரு இதம்.. ஒரு ரிதம்.. சின்னதாய் ஒரு சுகம் பிறக்க, அந்த சுகத்தில் மீண்டும் கண்கள் மூடி நின்றான் வனமாலி..

வந்தனா கூட அவ்வப்போது கிண்டல் செய்வாள் தான்.. அப்போதெல்லாம் சிரிப்போடு கடந்துவிடுவான்.. அது தங்கைக்காக.. ஆனால் இன்று.. இந்த நொடி அவன் மனதில் தோன்றிய இவ்வுணர்வு?? இதன் பெயர் என்ன?

ஒருவேளை இந்த உணர்வு தான் நடக்கும், நடக்கப் போகும் அனைத்து சங்கதிகளுக்கும் வடிகாலா?? விடையறியா கேள்வி அவனுள்..

மறுநாள் மதுரை போகும் வேலை இருக்க, உறங்காது எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தானோ அவனுக்குத் தெரியாது.. ஆனாலும் கடமை என்று வந்துவிட்டால் தன் சுகமெல்லாம் அவனுக்கு அப்புறம் தான்.. அதிகாலையே எழுந்து மதுரை கிளம்பிவிட்டான்.

மனதிற்குள் நிறைய நிறைய எண்ணவோட்டங்கள்.. அதனோடு சேர்த்தே அவனின் காரும் ஓடியது..

வனமாலிக்கு மதுரையில் அடிக்கடி வேலைகள் இருக்கும் தான். அங்கே அவனின் அப்பா வழி சொத்துக்களில் இவர்களுக்கு சொந்தமான தனி வீடுகள், லைன் வீடுகள் எல்லாம் வாடைக்கு விட்டிருந்தனர்.. ஐந்தாறு கடைகள் வேறு இருந்தது எல்லாமே வாடகைக்கு தான்.. அதனின் வசூலுக்கு ஒன்று கோவர்த்தன் வருவான் இல்லையோ வனமாலி வருவான்.. ஆனால் இம்முறை இந்த மதுரை பயணமானது வனமாலிக்கு ஒரு புது அனுபவமாய் இருந்தது. வழக்கத்திற்கு மாறாய் ஒரு உற்சாகம், அதுவே அவனின் முகத்தை வசீகரமாய் காட்டியது..

அவன் சென்ற வேலையும் நல்லமுறையிலேயே முடிய, அவனின் காகித ஆலை விசயமாய் ஒருவரை சந்திக்க வேண்டி இருக்க, சிம்மக்கல் சென்றிருந்தான்.. மகுடேஸ்வரனின் நண்பரும் கூடத்தான் அவர்..

“அடடே வா ப்பா வனா.. இப்போதான் வழி தெரிஞ்சதா??” என்று சந்தோசமாகவே நரசிம்மன் வரவேற்றார் இவனை..

“எப்பவும் இந்த டைம்ல தானே மாமா வருவேன்..” என்றவன் “என்ன இளைச்சு போயிட்டீங்க??” என்று சிரிப்போடு கேட்க,

“அட ஆமாப்பா... உன்னை பார்க்கலைன்னு ஒரு சுத்து இளைச்சிட்டேன்..” என்று தன் பெருத்த உடலைக் காட்டி சிரித்தவர் “தங்கச்சி கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது வனா?” என்று விசாரிக்க,

“எல்லாம் நல்லபடியா போகுது மாமா..” என்றான் இவனும் சந்தோசமாகவே..

“சந்தோசம் வனா.. அப்படியே நீயும் ஒரு கல்யாணம் பண்ணிடு.. சீக்கிரம்.. சம்பாரிக்கிறது எல்லாம் அப்புறம் பார்ப்போம்..”

“ஹா ஹா நேரம் வந்தா அதையும் பண்ணிடலாம் மாமா..” என்றவன் “மாமா அந்த பேப்பர் மில் விலைக்கே வாங்கிடலாம்னு இருக்கேன்.. நீங்கதான் பேசி முடிக்கணும்..” என்று நேராய் விசயத்திற்கு வந்துவிட்டான்..

ஆனால் நரசிம்மனோ அடுத்த நொடி யோசனையாய் முகத்தினை வைத்து “ம்ம்ம் அப்படியா வனா???” என்று கேட்க,

“என்ன மாமா நீங்கதானே போன மாசம் சொன்னீங்க நீயே வாங்கேன்னு..” என்றான் இவனும்..

“அட ஆமா வனா... நம்ம கமலி பொண்ணு வேற அந்த மில் வாங்கனும்னு இருக்கும் போல, நேத்து வந்து சங்கிலி அய்யாவும் கமலி பொண்ணும் பேசிட்டு போனாங்க.. இப்போ நீயும் இப்படி சொல்ற.. அதான் யாருக்கு என்ன செய்யன்னு பாக்குறேன்...” என்று அவர் சூழ்நிலையை விளக்க,

‘கமலி....’ என்று அவனின் இதழ்கள் அவளின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியது.. கூடவே இத்தனை நாள் இல்லாது இப்போது நான் வாங்கவேண்டும் என்று நினைக்கையில் இவள் ஏன் இப்போது இதில் வருகிறாள் என்றும் இருந்தது..



தொடரும்......................
 
எங்கெங்கு நோக்கினும் கமலி...கமலி...கமலி...தான். இப்போது வனாவின் இதயத்திலும் கூட...

பார்க்கிற இடத்தில் எல்லாம் கமலியைக் காணும் போதெல்லாம் கதறும் மங்குணிராதாஸ் அன்கோவிற்கு வனாவின் இதயத்திலும் கமலி நுழைந்து விட்டாள் எனத்தெரிந்தால்;)
எப்படி இருக்கும்...:D
 
எங்கெங்கு நோக்கினும் கமலி...கமலி...கமலி...தான். இப்போது வனாவின் இதயத்திலும் கூட...

பார்க்கிற இடத்தில் எல்லாம் கமலியைக் காணும் போதெல்லாம் கதறும் மங்குணிராதாஸ் அன்கோவிற்கு வனாவின் இதயத்திலும் கமலி நுழைந்து விட்டாள் எனத்தெரிந்தால்;)
எப்படி இருக்கும்...:D
செத்தாண்டா சேகரு ....:p
 
Kamali jepam panni kittu irukiya vana . Parthu mani&pamela tension la mental aaka poranga.Kamali antha paper mill vanga ninaithaal nee vilaka vendiathu thaane
 
Last edited:
Top