Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 9

‘கமலி கமலி கமலி.... எங்க பாரு இவ தான்.. எங்க போனாலும் இவ தான்.. என் வீட்ல கூட இவ பேருதான்.. இவ பத்தின பேச்சுதான்.... ஏய் கமலி... இத்தனை வருஷம் எங்க டி போன.. அமைதியா தானே இருந்த... இப்போ ஏன் இப்படி படுத்துற..’ என்று கத்தி கூப்பாடு போட்டது வனமாலியின் உள்ளம்.

பின்னே எங்கே போனாலும் ஒன்று கமலி இருக்கிறாள், இல்லையோ அவளின் தலையீடு அவள் இல்லாமலேயே நடந்தேறுகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாய் நரசிம்மன் அந்த காகித ஆலையை வாங்கு வனா என்று சொல்கிறார் தான். ஆனால் வனமாலி தான் ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தான், கோடி கணக்கில் பணம் வேண்டும்.. இருக்கிறது தான். ஆனால் அனைத்தையும் கொண்டு இதில் ஒன்றில் முடக்கிவிட முடியாது அல்லவா??

ஆக மனதில் ஆசை இருந்தாலும், கொஞ்சம் அதனை தள்ளி வைத்திருந்தான். ஆசை என்பதனை விட அவனுக்கான பல நாள் கனவு இது. என்னவோ சிறு வயதில் இருந்தே மகுடேஸ்வரனோடு அந்த காகித ஆலைக்கு சென்றிருக்கிறான் தான்.. அவரின் இன்னொரு நண்பரின் ஆலை.

இப்போது நரசிம்மன் பொறுப்பில் அதனை கொடுத்துவிட்டு, அந்த நபர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட, நரசிம்மனோ ‘நீ வாங்கிக்கோ வனா..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்..

இப்போது தான் வனமாலிக்கும் தோதாய் அதற்கான சூழல் அமைந்திருந்தது. அவனுக்கு வர வேண்டிய பணம், பின் இத்தனை நாள் இதற்கென்றே ஒதுக்கி வைத்தது என்று எல்லாம் சேர்ந்து சரி வாங்கிவிடலாம் என்ற முடிவில் அவன் வந்துவிட, இப்போதோ இதில் கமலியின் தலையீடு. அவன் எதிர்ப்பார்த்திடாத ஒன்று..

‘இத்தனை நாள் என்னை எப்படியாவது வாங்கிடு வனான்னு சொல்லிட்டு இருந்தா நரசிம்மன் மாமா கூட இப்போ கமலி வந்து கேட்கவும் அவ்வளோ தயங்குறார்...’ என்று எல்லாம் சேர்த்து வைத்து கமலியின் மீது இப்போது அப்படியொரு கோபம்..

ஆம் நரசிம்மன் ‘கொஞ்சம் டைம் கொடு வனா.. யோசிச்சு சொல்றேன்.. கமலிக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்..’ என்று சொன்னவர் இப்போது ஏன் அழைக்கிறார் என்று விளங்காது, காரை ஒட்டியபடி,

“ஹலோ சொல்லுங்க மாமா..” என்றான் அவனின் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாது..

“தப்பா எடுத்துக்காத வனா.. உன் முகமே எப்படியோ ஆகிடுச்சு..”

“அட அதெல்லாம் இல்லை மாமா..” என்று அவன் சொல்லுகையிலேயே, “இல்ல வனா இதுல வேறொன்னும் இருக்கு...” என்றார் தயங்கி நரசிம்மன்.

வனமாலியின் முகத்தில் ஒரு யோசனை பாவம் வர, “என்ன மாமா வேறெதுவும் பிரச்சனையா??” என்றான்.

“அடடா பிரச்சனை எல்லாம் இல்லை.. எல்லாம் ஒரு நல்ல விஷயம் தான்.. சிவகாமி நம்ம கமலி என் பிரன்ட் பையனை பேச சொன்னாப்ல.. கமலி வந்து மில் விலைக்கு பேசுங்கன்னு சொல்றாப்ல, ரெண்டுல எது செய்றதுன்னு குழம்பிட்டு இருக்கேன்...” என்றார் அவரோ..

“இதுக்கு ஏன் மாமா குழம்பனும்...” என்று கேட்டவனின் நெற்றி சுருங்க, ‘கமலிக்கு கல்யாணம் பேசுறாங்களா??!!’ என்று உள்ளம் துணுக்குற்றது.

“ரெண்டுமே ஒரே இடம் வனா.. பேப்பர் மில் சிவராமன் மகனுக்குத்தான் சிவகாமி பேச சொல்றாப்ல, கமலி வந்து மில்லை விலைக்கு பேசுறாப்ல..” என்றவர், “எதுக்கும் நீயும் கமலியும் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்களேன்..” என்றார்..

பாவம் அவர் நிலைமை அவருக்கு.. யாருக்கு சொல்வார். தர்ம சங்கடமாய் அவர் உணர்வது வனமாலிக்கு நன்கு புரிந்தது, தன்னை விட வயதில் பெரியவர், நன்கு தெரிந்தவரும் கூட, அவரின் வருத்தம் புரிந்து,

“மாமா நீங்க ஒன்னும் நினைக்கவேணாம் நான் பார்த்துக்கிறேன்..” என,

“இல்ல வனா கமலி பொண்ணுட்ட சொன்னேன் ஏற்கனவே வனமாலி இதை வாங்கனும்னு இருக்கான் ம்மா அப்படின்னு..” அவர் சொல்லும்போதே,

“அதுக்கு கமலி என்ன சொன்னா மாமா??!!” என்றான் வேகமாய்..

“அது.. கமலியும் கொஞ்சம் பிடிவாதம் செய்றாப்ல...” என்று அவர் தயக்கமாய் சொல்ல, பல்லைக் கடித்தவன் “சரி மாமா நான் பாத்துக்கிறேன்..” என்று போனை வைத்துவிட்டான்.



வீட்டினில் நடக்கும் களேபரம், இப்போது நரசிம்மன் சொன்னது என்று எல்லாம் சேர்த்து அவனுக்கு அவளை என்ன செய்தால் தகும் என்றுதான் தோன்றியது. இவள் வேண்டுமென்றே எல்லாம் செய்கிறாளோ இல்லை எல்லாம் தன்னைப்போல் நடக்கிறதோ என்ற சந்தேகம் போய் வேண்டுமென்றே தான் செய்கிறாள் என்ற எண்ணம் ஊர்ஜிதமாக, முதல் நாள் தான் அவனுக்கும் அவளுக்குமான அந்த திருமண கோல காட்சி மனத் திரையில் தோன்றியது எல்லாம் மறந்து, இவளை அடக்கிக் காட்டுகிறேன் என்ற வேகம் மட்டுமே மனதில் எழ, நேராய் சிவகாமி அச்சகத்தில் சென்றுதான் காரை நிறுத்தினான்.

காரிலிருந்து இறங்கியவனோ விடுவிடுவென உள்ளே செல்ல, அங்கே யார் இருக்கிறார்கள் இல்லையென்று எல்லாம் பார்க்கவில்லை. நேரே அவளின் அறை கதவை திறந்துகொண்டு போக, அவளோ கணினியில் ஒரு பத்திரிக்கையின் டிசைனைப் சரி பார்த்துக்கொண்டு இருக்க, கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவளின் முக மாற்றம் அவனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதனை காட்டியது..

“என்ன பாக்குற?? என்னை எதிர் பார்க்கலையா?? இனி நீ எதிர்பார்க்காத எல்லாம் நடக்கும்.. என்ன டி நினைச்சிட்டு இருக்க நீ.. நானும் சரி சரின்னு விட்டா ரொம்ப போற... இப்போ எதுக்கு நீ போய் நரசிம்மன் மாமாவைப் பார்த்த..” என்று அவன்பாட்டில் எகிற ஆரம்பித்துவிட்டான்..

நடுவில் கொஞ்ச நாள் இருவருக்கும் சண்டையில்லாது இருந்தது, அதிலும் இத்தனை நாள் பொறுமையாய் போகும் வனமாலியே இப்போ வலியப் போய் வார்த்தைகளை விட, இப்படியொரு தருணம் அமையாதா என்று காத்திருந்த கமலிக்கு சொல்லவும் வேண்டுமா??

‘நீ பேசு..’ என்பதுபோல் பார்வையை மாற்றிக்கொண்டாள்..

ஆனால் அவளின் அந்த பார்வையே வனமாலியின் வேகத்தை தூண்டிவிட “ஏய் என்ன திமிரா பாக்குற... வந்தனா கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொன்னப்போவே உன்னை ஒரு வழி செஞ்சிருக்கணும்.. சிவகாமி அத்தைக்காக சும்மா விட்டேன்..” என்று மேஜையை ஓங்கி ஒரு தட்டு தட்ட, அவள் முன்னிருந்த பொருட்கள் எல்லாம் ஒருமுறை ஆடி பின் நின்றது..

ஆனாலும் கூட கமலி எதுவும் சொல்லாமல், அமைதியாய் அழுத்தமாய் அவனைப் பார்க்க, “என்ன பதில் பேச மாட்டியா??” என்று அவளை நெருங்கியவன்

அவளின் தோளை பிடித்து இழுக்காத குறையாய் இழுத்து நிறுத்தி, “என்ன சொன்ன வந்தனா கல்யாணத்தை நிறுத்துவேன்னா??? முடிஞ்சா பண்ணிக்கோ.. அப்படியே உன்னோட கல்யாணம் எப்படி நடக்கதுன்னும் பாரு.. என்னை மீறி என்னை மீறி ஒரு...” என்று எதையோ சொல்ல வந்தவன்,

பின் வார்த்தைகளை விழுங்கி “என்னை மீது எதுவும் செய்ய முடியாது.. பேப்பர் மில்.. உன்னோட கல்யாணம்.. வந்தனா கல்யாணம்.. எல்லாமே.. எல்லாமே என்னை வச்சு மட்டும்தான்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..” என்று சட்டென்று அவன் பிடியை விட,

அவளோ அவனின் பேச்சிலும், பார்வையிலும், செயலிலும் கொஞ்சமே கொஞ்சம் திகைத்து போய் நிற்க, அவன் பிடியை விட்ட நேரம் லேசாய் ஆடி, பின் சுதாரித்து நின்றவள், கண்களை இடுக்கி

“ம்ம் அப்புறம்...” என்று மட்டும் சொல்ல, “ஏய் என்ன டி திமிரா??!!” என்று வெகுவாய் அவளை நெருங்கி நின்றான் வனமாலி.

கமலி அவனை நேருக்கு நேராய் பார்க்க, நெருங்கி நின்றவன, அவளை தன்னை நோக்கி இன்னும் நெருக்கமாய் இழுத்து, “என்னை மீறி உனக்கு கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறியா??” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

அவனின் கேள்வியில் கண்களில் மெல்லிய ஆச்சர்ய மின்னல் வெட்ட, அப்படியே நின்றவள் “நடந்துட்டா???!!” என்றாள் சவால் போல்..

“நான் மாப்பிள்ளையா நின்னா மட்டும் தான் நடக்கும்..” என்றவன் “என்ன அப்போ நடத்திக்கிறியா??” என்று எள்ளலாய் கேட்க,

“ஹா ஹா.. கனவு காணாதீங்க...” என்று சிரித்தவள், அதே சிரிப்பினூடே அவனிடம் இருந்து இமைக்கும் நொடியில் விலகி நின்றாள்.

“இப்போ விலகலாம்.. ஆனா இனிமே அது நடக்காது..” என்றவன், “கனவு நீ காண ஆரம்பி கமலி...” என்று அர்த்தம் பொதிந்த சிரிப்போடு சொல்லியவன், அப்படியே கிளம்பியும் விட்டான்..

அவன் இருக்கும் வரைக்கும் திடமாய் பேசுவதுபோல் நின்றிருந்தவள், அவன் சென்றதுமே தொப்பென்று இருக்கையில் அமர்ந்துவிட, லேசாய் வியர்த்திருப்பது தெரிந்தது.

“ச்சே...” என்று தன்னை தானே நொந்து, முகத்தினை துடைத்தவள், வேகமாய் பாட்டிலில் இருந்த தண்ணீரை விழுங்க, உள்ளே இறங்கும் நீரோடு சேர்த்து அவனின் வார்த்தைகளும் அவளுள் இறங்கியது..

‘திருமணம்....’

அதுவும் அவனோடு... ‘ஹா ஹா ஹா..’ என்று சப்தமாய் சிரிக்கத் தோன்றியது.. லேசாய் சிரித்தும் கொண்டாள்.

‘இப்படி ஒரு நினைப்பா... இதெல்லாம் உங்கம்மா தெரிஞ்சது.. ஹா ஹா ஹார்ட் அட்டாக் ஆகிடுமே..’ என்றவளுக்கு மேலும் மேலும் சிரிப்பு கூட, கண்களில் நீர் கூட கோர்த்துவிட்டது..

நியமாய் பார்த்தால் கமலிக்கு கோவம் வந்திருக்கவேண்டும்.. இல்லை பதில்லுக்கு அவன் பின்னோடேயே சென்று அவனின் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தி இவளும் சூடாய் அவனின் பேச்சிற்கு திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். இல்லையோ இந்நேரம் ஆத்திரம் அடங்காது வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும்.. ஆனால் அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. மாறாக சிரித்துக் கொண்டு இருக்கிறாள்.

அதுவும் கண்ணில் நீர் வர... காரணம்?? அவளுக்கும் விளங்கவில்லை.. அவன் சொல்லிச் சென்றது அவளுக்கு வேடிக்கையாய் இருந்ததுவோ என்னவோ தெரியவில்லை. ஆனால் தான் இப்படி சிரித்தும் கூட வெகு நாட்கள் ஆனதுபோல் ஒரு நினைவு..

அந்த எண்ணம் மனதில் முளைத்ததுமே, அவளின் சிரிப்பு அப்படியே இதழ்களில் உறைந்துவிட, மனதில் பலவேறு சிந்தனைகள் ஓடியது. அனைத்துமே முன்பு நடந்ததுதான்.. கமலி பெரிய மனுஷி ஆகிருந்த சமயம் அது.. அத்தை முறைக்கு என்று முறை செய்ய, சீர் செய்ய மணிராதா தான் வரவேண்டும்.. ஆனால் வரவில்லை..

இதேது அதற்கு ஆறு மாதங்கள் முன்பு, பமீலாவிற்கு போய் அப்படி சீரும் சிறப்புமாய் அனைத்தும் செய்துவிட்டு வந்தார். ஆனால் கமலிக்கோ மகுடேஸ்வரன் அத்தனை சொல்லியும் ‘உடம்பு சரியில்லை மகுடா..’ என்றுசொல்லி ஒருவாரம் வரைக்கும் மருத்துவமனையில் படுத்துவிட்டார்.

அதன் பின்னே ராணி தான் வந்து எல்லாம் செய்தார்... மணிராதா வீட்டிற்கு திரும்பிய பின்னரோ மகுடேஸ்வரன் “அக்கா வந்து நீ ஆசிர்வாதம் மட்டும் பண்ணிட்டு போயேன்..” என்றுசொல்ல,

“அதெல்லாம் வேணாம் மகுடா.. நான் அங்கெல்லாம் வரமாட்டேன்..” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட, இதனை அறிந்த சிவகாமியோ

“அவங்களைப் பத்தி தெரிஞ்சும் ஏங்க கேட்கனும்.. விடுங்க..” என்று ஆறுதல் சொல்ல, கமலிக்கோ “ஒரு நாள் இல்லைனா ஒருநாள் என்னை தேடி நீங்க வருவீங்க..” என்ற எண்ணம் அப்போதே தோன்றியது.

அதே எண்ணம் இப்போதும் தோன்ற ‘நீங்க வரவேணாம்.. உங்க மகனே அதை செய்ய வச்சிடுவார்..’ என்றவளுக்கு மீண்டும் ஒரு சிரிப்பு.. அதே சிரிப்போடே கிளம்பி வீட்டிற்கு சென்றாள் கமலி.

வனமாலி, சிவகாமி அச்சகத்தில் இருந்து கிளம்பி நேராய் அவனின் வீடு தான் சென்றான். வீடு சென்றவனோ வேறு யாரையும் பார்க்கவும் பிடிக்காது, பேசவும் பிடிக்காது நேராய் தன்னறைக்கு சென்று கட்டிலில் விழ, கொஞ்ச நேரத்தில் வந்தனா வந்து கதவு தட்டினாள்.
 
முதலில் வனமாலி திறக்கவேயில்லை. அவனுக்கு ஒரு தனிமை தேவைப்பட்டது.. யாரோடும் பேசும் நிலையிலும் அவனில்லை.

ஆனால் திரும்ப திரும்ப வந்தனா கதவு தட்ட “ம்ம்ச் என்ன வந்தனா??!!” என்றான் உள்ளிருந்தபடியே..

“டோர் ஒப்பன் செய் ண்ணா..”

“நான் தூங்கறேன்..”

“சாப்பிட்டு வந்து தூங்கு..” என்றவள் திரும்ப கதவு தட்ட,

“ம்ம்ச்...” என்ற சலிப்போடு வந்து கதவு திறந்தவன் “எனக்கு பசி எல்லாம் இல்லை..” என்றுசொல்ல,

“அப்போ இந்த பால் குடி..” என்று கையில் தயாராய் வைத்திருந்த டம்ப்ளரை அவனிடம் நீட்டியபடி வந்தனா உள்ளே வர,

“ஹ்ம்ம் ரெடியா தான் வந்தியோ..” என்று கேட்டபடி அவனும் டம்ப்ளரை வாங்கிக்கொண்டான்.

“பின்ன..” என்றவள் வெறுமெனே அங்கே இங்கே பார்த்துவிட்டு “ஏன் இவ்வளோ டென்சன் ண்ணா??” என்று கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றான் வேகமாய்

“உன்ன பார்த்தாலே தெரியுது...”

“ஹா ஹா பால் கொண்டு வந்துட்டு பதில் சொல்ல வச்சிட்டு இருக்க நீ..” என்றவன் “ஆமா முரளி கூட பேசாம இப்போ என்ன இங்க??” என்று அவளை விரட்ட,

“தோடா.. எங்கண்ணன் கூட பேச எனக்கு யார் என்ன சொல்லணும்..” என்று அவளும் கிண்டலாய் சொன்னவள் “சொல்லுண்ணா கமலிக்கும் உனக்கும் என்ன?” என்று நேரடியாய் விசயத்திற்கு போனாள்.

‘இவளுக்கு எப்படி தெரியும்???!!!’ என்று வனமாலி யோசிக்க,

“அண்ணா.. கமலி பண்றது சரியோ தப்போ எனக்குத் தெரியாது, பட் நீ எப்பவும் தப்பா எதுவும் யோசிக்கக் கூடாது..” என்று வந்தனா சொல்லும் போதே, வனமாலியின் அலைப்பேசி அங்கே இருப்பதாய் காட்ட,

‘இந்த நேரத்துல யாரு...’ என்று சொல்லிக்கொண்டே தான் போனை எடுத்தான்.

பார்த்தாலோ, அழைத்தது கமலி. கண்களை லேசாய் விரிந்து ‘இப்போ ஏன் கால் பண்றா?? கான்சப்ட் ரெடி பண்ணி சண்டை போடப் போறாளோ..’ என்றேண்ணியவன், கொஞ்சம் அலட்சியாமகவே “ஹலோ...” என்றான்..

ஆனால் அடுத்த நொடி, அப்படியே அவனின் முகமும் குரலும் மாறி விட்டது..

“நீ.. நீ எதுவும் டென்சன் ஆகாத கமலி.. இ.. இதோ வர்றேன்..” என்றவன் அப்படியே போனை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அவன் மறுகரத்தில் இருந்த பால் டம்ப்ளரை வந்தனாவிடம் திணித்துவிட்டு,

“நான் கிளம்புறேன்.. சிவகாமி அத்தைக்கு ரொம்ப முடியலையாம்..” என்று சொல்லியபடி பீரோவில் இருந்து இரண்டு ஐநூறு ருபாய் கட்டுகளை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தவன் அறையின் வாசல் வரைக்கும் வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

“அண்ணா...” என்று வந்தனாவும் அவனை நோக்கி வர,

“இப்போ வீட்ல எதுவும் சொல்லவேணாம்.. காலைல யாரும் கேட்டா, எனக்கு போன் பண்ணு நான் பேசிக்கிறேன்..” என்றுவிட்டு அவள் பதில் சொல்லும் முன்னே கிளம்பியவன் காரை எடுத்துக்கொண்டு சிவகாமி வீடு செல்ல,

அங்கேயோ கமலி கண்ணீர் விழிகளோடு இவன் எப்போது வருவான் என்று காத்திருந்தாள்..

“என்னாச்சு கமலி..” என்று கேட்டுகொண்டே வனமாலி உள்ளே நுழைய,

“தெரியலை.. ரொம்ப ரொம்ப ஒருமாதிரி என்மேல சாஞ்சிட்டாங்க...” என்று சொல்லும்போதே அவளின் குரலும் உடலும் நடுங்கியது.

அவளின் இந்த நடுக்கம் வனமாலியை எதுவோ செய்ய, வேகமாய் தன்னை சுதாரித்தவன் “அத்தைனால நடக்க முடியுமா??” என்று கேட்டுக்கொண்டே சிவகாமியின் அறைக்குள் செல்ல,

“தெரியலை..” என்று சொல்லியபடி கமலியும் பின்னேயே வந்தாள்.

அம்மாவிற்கு இப்படி ஆனது என்ற அதிர்ச்சியில் கமலிக்கு வேறெதுவும் நினைக்கத் தோன்றவில்லை. வேறு யாரையும் அழைக்கவும் தோன்றவில்லை. நொடிப் பொழுதும் யோசிக்காது வனமாலிக்கு அழைத்துவிட்டாள்.. இப்போதும் கூட அப்படித்தான் அவளுக்கு என்ன செய்வது என்று விளங்காது அவன் பின்னோடு சென்றுகொண்டு இருந்தாள்.

ஆனால் வனமாலியோ, சிவகாமியின் முகம் பார்க்க, அவரோ அரை மயக்கத்தில் இருப்பது புரிந்து, கார் சாவியை கமலியின் கையில் திணித்து “சீக்கிரம் போய் கார் கதவை திற..” என்று அவளை தோளைப் பிடித்து திருப்பியவன், அப்படியே சிவகாமியை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு வந்தான்..

கமலியின் கண்களில் நீர் வழிந்தாலும், அவள் வேறெதுவும் பேசாது, வீட்டினை பூட்டி, அப்படியே காரிலும் ஏறி அம்மாவினை தன் மடி மீது ஏந்திக்கொள்ள அடுத்த கால் மணி நேரத்தில் சிவகாசியின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிவகாமி அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிவகாமியை பரிசோதனைக்கு உள்ளே அனுப்பிய பின்னரும் கூட இருவருக்கும் மனதில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம்.. இந்நேரத்தில் யாருக்கும் அழைத்து சொல்லவும் முடியாது.. மிஞ்சிப் போனால் சங்கிலிநாதனுக்குத் தான் சொல்ல முடியும்.

பாவம் அவரும் வயதானவர்.. இந்த நேரத்தில் சொல்லவேண்டும் என்று வனமாலியும் சொல்ல,

“ம்ம்..” என்ற தலையசைப்போடு கமலி போய் அங்கிருந்த வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டாள்.

ஜன்னலை ஒட்டி அந்த பெஞ்ச் போடப்பட்டிருக்க, ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்துகொண்டவளின் பார்வையோ வெளியே தெரியும் இருளை வெறித்து.. கண்களில் மௌனமாய் கண்ணீர் வழிய, அவள் மனதில் அப்படியொரு அழுத்தம்.. வேதனை.. பயம்...

‘அம்மா...’ அவளுக்கு இருக்கும் முதலும் கடைசியுமான ஓர் உறவு.. சிவகாமி மட்டுமே அவளுக்கு எல்லாம்.. அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் பின் கமலி என்னாவாள்??

‘ம்மா..’ என்று கமலியின் இதழ்கள் உச்சரிக்க, சட்டென்று ஒரு பெரிய கண்ணீர் துளி அவளின் கண்ணில் இருந்து விழுந்தது..

வனமாலி இவளின் அமைதி கண்டு திரும்பிப் பார்க்க, கமலி அமர்ந்திருந்த விதமும், அவளின் தோற்றமும், அவளின் கண்ணீரும் எல்லாமே புதிதாய் ஒரு கமலியை அவன் கண்ணுக்குக் காட்ட,

“கமலி...” என்றபடி அவளருகே சென்றான்.

அவளின் மனவுணர்வுகள் அவனுக்குப் புரிந்ததுவோ என்னவோ “நீ எதுவும் கவலைப் படாத கமலி.. அத்தைக்கு எதுவுமில்லை..” என்று ஆறுதல் சொல்ல,

“எதுவும் இருக்கக் கூடாது...” என்று அவனுக்குப் பதில் சொல்ல முயன்றவளுக்கு ஒரு கேவல் பிறக்க, அழுகையை அடக்க முயன்றாள்..

“ஷ்... கமலி...” என்று அவளின் கரம் பிடித்தவன்,

“அழணும்னா அழுதுடு.. அடக்கி வைக்காத...” என்று சொல்ல, “ம்ம்ஹும்..” என்று தலையை இட வலமாய் ஆட்டி மறுத்தாள்..

“ஏன்.. என் முன்னாடி அழ உனக்கு கஷ்டமோ???!!!” பட்டென்று அவனின் குரலில் ஒரு கோபம் வெளிப்பட

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “அழுகை கூட நம்மை புரிஞ்சுக்கிறவங்க முன்னாடி தான் அழனும்..” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

‘என்ன சொல்ற நீ??!!’ என்று பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை.. நான் என்ன இவளை புரிந்துகொள்ளவில்லை.. இவள் அழைத்தாள் என்றதும் அப்படியே வந்தேனே என்று தோன்ற,

“நான் என்ன உன்னை புரிஞ்சுக்கலை..” என்றான் அடுத்து..

“ம்ம்ச் லீவ் இட்.. அப்போ இருந்த டென்சன்.. எதுவும் யோசிக்காம உங்களை கூப்பிட்டேன்.. சாரி அந்த தேங்க்ஸ்.. நீங்க கிளம்புங்க... நான் பாத்துக்கிறேன்..” என்று கண்களை துடைத்து சொல்லவும்,

“ஹே... என்ன?? என்னை என்னனு நினைச்ச...?? இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேணாம் பிச்சிருவேன்..” என்று விரல் நீட்டி மிரட்டினான் வனமாலி.

அவனின் செயலில் கமலிக்கு ஒரு வெற்று புன்னகை தோன்ற “இதுவே காட்டுதே உங்களுக்கு எதுவும் புரியாதுன்னு..” என்றுசொல்லி முகம் திருப்ப,

“ஏன் ஏன் ஏன் எனக்கு ஏன் புரியாது??” என்றான் வேகமாய்..

“ஏன்னா.. நீங்க வேற... நாங்க வேற..” என்று கமலி சொல்லி முடிக்குமுன்னே,

“அப்போ வேற வேற இல்லன்னு ஆனா?? கமலி, வனா வேற வேறயில்லன்னு ஆனா அப்போ நம்புவியா எனக்கு உன்னை புரியும்னு..” என்று சொல்லி வனமாலி கேட்ட கேள்வியில் வெகுவாய் திகைத்துத்தான் போனாள் கமலி..

திருமணம் பற்றி பேசியபோது வராத திகைப்பு இப்போது இந்த நொடி பிறந்தது.

 
Top