காலைக் கதிரவன், கிழக்கிலிருந்து சற்றே மேலெழும்பி தன் பொன் கிரகணங்களை பூமிக்கு பாய்ச்சிவிட்டு சற்றே இளைப்பாறிய நேரம். வெய்யோனின் ஒளிக்கீற்றால் பச்சைப் பட்டாடை உடுத்திய வயல்கள் இருமருங்கிலும் இளங்காற்றின் உதவியால் சரசரக்க, இருபுறங்களிலும் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கருப்பு நிற தார்ச்சாலை அழகாக காட்சியளித்தது.
அந்தத் தார்ச்சாலையில், கருப்பு நிற ராயல் என்பீல்டில், தன் வாகனத்தை ஒரு குதிரையாக நினைத்து, குதிரையின் வேகத்திற்கு இணையாக அதில் பயணித்துக் கொண்டிருந்தான் பரிதீரன்.
அந்த இளவட்டக்குதிரைக்கு, வயது இருபத்துஏழு, சோலையூர் பண்ணையாரின் ஒரே தவப்புதல்வன், வேளாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்று தனக்கு பிடித்த விவசாயத்தை தனக்கு சொந்தமான நிலங்களில் செய்து கொண்டும், தந்தையின் மில்லையும் அவ்வப்போது கவனித்துக்கொள்ளும் பொறுப்பான இளைஞன்.
வெள்ளை வேட்டியும் பச்சை நிற பருத்தி சட்டையும் அணிந்து, ஆறடி உயரமும், அவன் உயரத்திற்கு ஏற்றார் போல் கம்பீரமான உடல் அமைப்பும், கண்களில் கூர்மையும், இறுகிய தாடையும், முறுக்கி விட்ட மீசைக்கு கீழே செதுக்கிய உதடுகளும், கழுத்தில் புலிநக டாலரும் மின்ன,
தடித்த கைச்சங்கிலி அணிந்த கைகள் வாகனத்தின் தோள்களை முறுக்கிக்கொண்டிருக்க, அவன் முறுக்கிய வேகத்தில் கை நரம்புகளும், கடித்த பற்களால் இறுகிய தாடையும், கழுத்தில் புடைத்து தெரியும் நரம்புகளும் அவன் அதீத கோபத்தில் இருக்கிறான் என்று பறைசாற்றியது.
வாகனம் அவன் நண்பன் மருதன் வயலின் பம்பு செட்டு மோட்டார் ரூமை நோக்கி சீறி பாய்ந்தது.
வாகனத்தை நிறுத்தாமலே கால்களை தரையில் ஊன்றி, தன் இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டியவாறு “ஏலேய் மருதா, என்ன டா செய்யுற, எங்கருக்க” என்று குரல் கொடுத்தான் பரிதீரன்.
பனியனும் கைலியும் அணிந்து, துண்டை கழுத்தில் முன்புறம் போட்டுக்கொண்டு, அந்த துண்டின் நுணியால் தன் முகத்தை துடைத்துக்கொண்டே “என்னடா மாப்ள, ஏன் இப்படி சலம்புற நைட் அடுச்சது இன்னும் எறங்கலயா?” என்று சிரித்துக்கொண்டே வந்தான் பரிதீரனின் உயிர் தோழன் மருதன்.
மருதனும் பரியும் சிறுவயது தொட்டே இணைபிரியா தோழர்கள். சிந்தனை, செயல் மட்டுமல்லாது உருவத்திலும் உடல் மொழியிலும் கூட ஒன்றுபட்டவர்கள். இருவரது புகைப்படத்தையும் சிறுவர்களிடம் கொடுத்தால் பத்து ஒற்றுமைகளை உடனே கண்டறிவார்கள்.
இருவரையும் தனித்தனியே எங்கும் பார்க்க முடியாது. பள்ளிப்பருவம் தொட்டு கல்லூரி வரை ஒன்றாக படித்து முடித்தவர்கள். மருதன் தனக்கு சொந்தமான சிறு நிலத்தில் விவசாயம் செய்பவன். மிகவும் வயது முதிர்ந்த தாய் தந்தை. இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்தனர்.
“ஏலேய் வெங்காயம், என்ன நடந்துருக்கு நீ நைட் அடுச்சது எறங்கலயாங்கரவ… “என்று கத்திய பரிதீரன்” வண்டியில ஏறு மொதல்ல, போற வழியில சொல்றேன்” என்றான் பரிதீரன்.
நண்பனின் வேகத்தை, பேச்சிலும் கண்களிலும் கண்டவனும், வேகமாக ஆணியில் மாட்டியிருந்த தனது சட்டையை மாட்டிக்கொண்டே மோட்டார் ரூமை பூட்டியவன் நண்பனின் இருசக்கர வாகனத்தின் பின்னே ஏறினான்.
மருதன் இருசக்கர வாகனத்தின் பின்னே ஏறியதும் வண்டி மீண்டும் வேகம்பிடித்தது. இவர்களின் வேகத்தின் காரணம் என்னவென்பதை நாமும் அறிந்துகொள்வோம்.
“அந்த பக்கத்தூரு பாண்டி, நேத்து நைட் ஷிப்ட்ல நம்ம அலரி கிட்ட ஆஸ்பத்திரில வச்சு மறுபடியும் பிரச்னை பண்ணீருக்கான், இந்த அலரி புள்ள காலையில வந்து என்கிட்டே சொல்லுது” என்று பரிதீரன் கூற மருதனின் முகம் அவனையும் அறியாமல் கடுகடுப்பை தத்தெடுத்தது.
ஏழு வருடத்திற்கு முன்பு…..
பரிதீரனின் தந்தை-தாய் சொக்கலிங்கம் – முத்துலட்சுமி. சொக்கலிங்கத்தின் தங்கை மலர்விழி – தனுஷ்கோடி தம்பதியினரின் மகள் அலரி.
சொக்கலிங்கத்தின் வீட்டிலிருந்து இரு தெரு தள்ளி தான் அவர் தங்கை மலர்விழியை திருமணம் செய்து கொடுத்தது. அலரியை எப்படியாவது பரிதீரனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது மலர்விழியின் ஆசை.
அலரி பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததில் இருந்து வாரம் ஒரு முறை சொக்கலிங்கத்தை சந்தித்து திருமணப்பேச்சு பேசுவார்.
அதற்கு சொக்கலிங்கம் “ஏத்தா மலரு நாம பேசி என்னாக போகுது, கட்டிக்க போறதுக விரும்பனும்ல, நீ பரி கிட்ட பேசுனியா” என்பார்.
பரிதீரனின் தந்தை சொக்கலிங்கம் கிராமத்து தகப்பன் போல் அல்லாமல் சற்று மாறுபட்டவர். புடிக்கிதோ புடிக்களையோ நீ செஞ்சுதான் ஆகணும், என்போரின் மத்தியில் நல்லதோ கெட்டதோ நம்ம மனசுக்கு மொதல்ல பிடிக்கணும் என்னும் ரகம்.
பரிதீரன் கல்லூரியில் தன் அக்ரி படிப்பின் மூன்றாம் வருடத்திலிருந்தான்.
பரிதீரன், “அத்த, அலரி இப்போ தான பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிருக்கு, அவ நர்சிங் படிக்கனும்ன்னு ஆசைப்படுறா, மொதல்ல அவ விருப்பப்படி படிக்கட்டும் அப்புறமா இத பத்தி பேசலாம்” என்றான்.
“அதுசரி, கல்யாணம் பண்ணீட்டு உங்க இஷ்டத்துக்கு அவளை என்னவேனா படிக்க வையுங்க மருமகனே, உன் அத்தையும் மாமனும் ஒரு சொல்லு என்னனு கேக்கமாட்டோம்” என்று அத்தை அங்கலாய்க்க.
“அத்த அதெல்லாம் சரிவராது, நா சொன்னா சொன்னதுதான், இப்போ பேச்சை விடப்போறியா இல்லையா” என்று குரலை உயர்த்தவும் கப்சிப் என்று அடங்கினர் மலர்விழி.
“அதானே நா சொன்னா கேப்பியா, இப்ப பாரு” என்று சொக்கலிங்கம் மனத்திற்குள் சிரித்துக் கொண்டார்.
பின் மலர்விழி தன் அண்ணி முத்துலட்சுமியின் துணை நாட அவரோ “அடியே அவந்தே சொல்றான்ல விடுடி, எங்க போய்டப்போதுக” என்றிட
“இல்ல அண்ணி என் பொழப்பு மாதிரி ஆயிடக்கூடாதில்ல, அதுக்கு தே”
“அடியே வாய மூடு, இப்போ உன் பொழப்புக்கு என்ன கொறைச்சல்? இன்னும் நீ அத மறக்கலையா, போடி போகெத்தவளே போய் வேற வேலை இருந்தா பாரு அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும்” என்று விட்டு அடுக்களைக்குள் சென்றார்.
மலர்விழியின் மனம் பின்னோக்கி பாய்ந்தது. மலர்விழியின் இளமைப்பருவத்தில் சோலையூரில் ஆசிரியராக பணியாற்றிய செந்தில்நாதனிடம்…
ஆம், நம் இளவரசியின் தந்தை மீது காதல் கொண்டார் மலர்விழி. அவரிடம் தன் விருப்பத்தை கூறியதற்கு செந்தில்நாதனோ “இல்ல மலர் இது சரிவராது, நீ எங்கயோ நான் எங்கயோ ஏணி வச்சாலும் எட்டாது, பண்ணையாருக்கு நாம இப்படி பேசுறது தெரிஞ்சாலே என் தோலை உருச்சுப்போடுவாரு, தயவுசெஞ்சு இத இங்கயே மறந்துரு” என்று கூறிவிட்டார்.
அதற்காக மலர்விழியும் அப்படியே விட்டுவிடவில்லை, தொடர்ந்து செந்தில்நாதனிடம் பேசமுனைய, ஒரு நாள் செந்தில்நாதன் தன் குடும்பத்துடன் சென்று தன் சொந்தங்களில் ஒரு முறைப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் மலர்விழியின் அழுகையிலும் சோகத்திலும் சேதி என்ன என்று ஒரு வழியாக முத்துலட்சுமியின் வாயிலாக கேட்டறிந்த சொக்கலிங்கமோ இது பற்றி தங்கையிடம் ஏதும் கேட்காமல் மலர்விழியின் திருமணத்தை அதி விரைவாக முடித்தார்.
தன் கடந்தகால நியாபகங்களிலிருந்து ஒரு பெரு மூச்சுடன் நடப்புக்கு மீண்டு வந்தார் மலர்விழி.
பின், பரிதீரன் அலரியின் நர்சிங் படிப்பிற்கு, ஆண்டிபட்டி மருத்துவக் கல்லாரியில் சீட் கிடைத்துவிட்டதாக சொல்ல, அலரியும் நர்சிங் படிக்கலானாள்.
இப்போது சோலையூரில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறாள்.
அலரி, பெயருக்கேற்றார் போல அழகான பூ அவள், இடைவரை நீண்ட கூந்தலும் மைவிழியும் பார்ப்போரை கிறங்கடிக்கும், உடல் பருமனாகவவோ ஒல்லியாகவோ இல்லாத சிற்றிடை மேனியாள். அவள் வயதிற்கேற்ற செழுமையும் பூரிப்பும் பெற்று, பார்ப்போரை திரும்பி பார்க்க வைக்கும் அழகுடையவள்.
நம் இளவரசியின் உயிர் தோழி. சிறு வயது முதல் இருவரும் ஒன்றாக நேரத்தை கழித்தவர்கள். ஒருவர் முகம் பார்த்தே ஒருவருக்கு பிடித்ததை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் இணை பிரியா நண்பிகள். செந்தில்நாதனின் பணியிடை மாற்றத்தால் இருவரும் பிரியவேண்டிய சூழல்.
தனது யூனிபோர்ம் உடையை மாற்றிவிட்டு அவள் வீட்டிலிருந்து அணிந்துவந்த எளிய புடவைக்கு மாறியிருந்தாள் பெண்ணவள்.
வாஷ் பேசினில் முகத்தை கழுவி பொட்டிட்டு தன் கைப்பையில் இருந்த கைக்கடிகாரத்தை அணிந்து கொண்டே “ஏ ராணி, எனக்கு பஸ்சுக்கு நேரமாச்சு டி… நீ அந்த மூணா நம்பர் பேஷண்டுக்கு மட்டும் பிபி, சுகர் செக் பண்ணி எழுதீரு டி ப்ளீஸ்…, நான் சைன் போட்டுட்றேன்” என்று கூறிய அலரி,
ராணியின் முறைப்பில் “ப்ளீஸ் டி பழிவாங்கீராத, அந்த டாக்டரு என்ன பேசியே சாவடுச்சுருவான், நா உனக்கு நாளைக்கு கண்டிப்பா கிளி மூக்கு மாங்கா கொண்டு வாரேன், இன்னிக்கு மாதிரி மறந்துறமாட்டேன்” என்று கண்களும் கைகளும் கெஞ்ச நின்ற அலரியோ பாவமாக காட்சியளிக்க,
“சரி போய் தொலை, ஆனா நாளைக்கு நீ மட்டும் மாங்கா கொண்டு வரலை, நானே போய் டாக்டர் கிட்ட போட்டுவிட்ருவேன்” என்று உரைத்த ராணியோ பேனாவை சுற்றிக் கொண்டே மூன்றாம் நம்பர் பேஷண்டை பார்க்க சென்றாள்.
அவள் சென்றவுடன் “ஹப்பாடா……” என்று பெருமூச்சு விட்ட அலரியோ கையெழுத்தை போட்டுவிட்டு நகர எத்தனித்தாள்.
அதற்குள் “அலரி உன்னோட அவருருரு இன்னிக்கு வரலையா” என்று கேட்ட ராணிக்கோ ஒரு முறைப்பை பதிலாக கொடுத்தவள், தன்னவனின் நினைப்பில் உதட்டில் புன்னகையை பூசிக்கொண்டாள்.
அலரிக்கு அன்று நைட் ஷிப்ட், அதை முடித்து விட்டுத்தான் காலையில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தாள்.
கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவள் பஸ்சுக்காக காத்திருந்தாள். பேருந்தின் வருகையை கணக்கில் கொண்டு தலையை இடமும் வலமும் திருப்பினாள் அலரி.
எப்போதும் பரிதீரன் வருவான் அழைத்து செல்ல அல்லது மருதன் வருவான். அன்று எதோ வேலையாக இருவரும் சென்று விட அலரி பேருந்திற்காக காத்திருந்தாள், மனதில் தோன்றிய முறுவலுடன்.
திடீரென்று, ஒரு இரு சக்கர வாகனம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து தன்னவனாக இருக்குமோ என்னும் மனதின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஆவலே உருவாய் வாகனம் வரும் திசையை நோக்கினாள் அலரி.
அலரியின் முன் சடன் பிரேக் இட்டு நிறுத்தியவனோ, தன் மனம் அறவே வெறுக்கும் ஒருவனை, அவன் பாண்டி. எப்பொழுதும் அலரியிடம் வம்பு செய்பவன்.
ஏகப்பட்ட அடிகளும் மிதிகளும் அவள் மச்சான் பரிதீரனிடமும் மருதனிடமும் வாங்கியும் அடங்காதவன். ஒரு முறை அவன் செய்யத்துணிந்த காரியத்தை நினைத்தாலே அவள் மனம் இப்போதும் நடுங்கியது.
பரிதீரன் மட்டும் வரவில்லையென்றால் என்றோ அவளை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். ஆழ மூச்செடுத்து அவனை எதிர்கொள்ளத் தயாரானாள் அலரி.
-Kamali Maduraiveeran
Linkமகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ