ஹாஸ்பிடலில் டாக்டர் கூறியதைக் கேட்ட நளன், தன் பார்வையை மறைத்த கண்ணீரை மறைத்துக் கொண்டு, இறுகிப் போன உடலும் மனமும் கனம் கூட்ட, அவன் மனதைப் போலவே தள்ளாடிய நடையுடன் அவன் நேத்ராவுடன் வசித்த அவன் கனவு இல்லத்திற்குள் நுழைந்தான்.
தன் மனச் சிம்மாசனம் இளவரசி இல்லாமல் வெற்றிடமாக காட்சியளிப்பது போல், அவன் வீடும் நேத்ரா இல்லாமல் வெற்றிடமாகக் காட்சியளித்தது.
தனக்கு இது வேண்டும் என்று வாய் திறக்கும் முன், கொண்டு வந்து முன்னாள் நிறுத்தும் தாய் தந்தை இருக்க, ஒவ்வொரு முடிவையும் தனக்குப் பிடித்ததை செய்து வெற்றி கண்ட நளன், இப்போது முதன் முறையாக தன் மனைவியிடம் தோல்வி அடைந்துவிட்டான்.
வீட்டினுள் வந்தவன், தன் இரு கைகொண்டு தலையைத் தாங்கி பிடித்தபடி சோஃபாவில் அமர்ந்தான்.
நந்தனுடன் அவனது பைக்கில் வந்துகொண்டிருந்த நேத்ரா,”அண்ணா என்னோட போன் அப்பார்ட்மெண்ட்ல இருக்கு, அவரு கண்டிப்பா எனக்கு கால் பண்ணியிருப்பாரு, இந்த டென்ஷன்ல போன எடுக்காமலே வந்துட்டேன்,
அதுனால அப்பார்ட்மெண்ட் போயி போன எடுத்துட்டு நாம அவரோட ஆபீஸ் போகலாம்” என்றவளை, இறுக்கமான முகத்துடன் இருந்த நந்தன் பதிலேதும் கூறவில்லை.
அப்பார்ட்மெண்ட் முன் வண்டியை நிறுத்தியவன் “நீ போயி எடுத்திட்டு வா, நான் இங்க வெயிட் பண்றேன்” என்றவன் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே காத்திருந்தான்.
வேகமாக லிபிட்டினுள் நுழைந்தவள், அவள் வீட்டின் வாசலை அடைந்தாள், வீட்டைத் திறக்க கதவின் நாபில் கை வைத்தவள் வீடு திறந்திருக்கவும் உள்ளே எட்டிப் பார்த்தாள்.
அங்கே நளன், நெற்றியில் தன் இருகைகளையும் தாங்கி குனிந்தபடி அமர்ந்த்திருந்தான். அவனுக்கு முன்னே இருந்த செவ்வக வடிவ கண்ணாடி டீப்பாயின் மேல், அவள் உபயோகித்த மாத்திரையின் கவர் மற்றும் ஹாஸ்பிடல் ரிப்போர்ட்ஸ் இருக்கவும் திடுக்கிட்டவள்,
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அம்மு… என்ற அழைப்புடன் ஓடிச்சென்று அவன் காலடியில் அமர்ந்தாள்.
தலையைக் குனிந்து அமர்ந்திருந்தவன் அவளது அழைப்பில் இன்னும் நிமிராமல் இருக்கவும் அவன் காலை இறுகப் பற்றியவள் “அம்மு ப்ளீஸ், என்னை பாருங்க நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க, நேத்து தான் எனக்கு நான் கன்ஸீவா இருக்குற விஷயமே தெரியும், நான் நேத்தே அம்மா கிட்ட சொன்னேன் உங்க கிட்ட சொல்லீடலாம்ன்னு, அம்மா தான் வேண்டான்னு சொன்னாங்க,
இந்த விஷயத்துக்கு நான் ஒத்துக்கவே இல்ல அம்மா தான், இன்னும் மூணு நாலு வருஷம் ஆகட்டுன்னு என்னைய கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சாங்க,
என்னை மன்னிச்சிருங்க அம்மு ப்ளீஸ், நான் பண்ணுனது தப்பு தான் பெரிய தப்பு, இனிமே நான் உங்கள கேக்காம எதுவுமே பண்ண மாட்டேன்” என்றவளின் கண்ணீர் ஆறாய் பெருகி ஓட…
நேத்ரா அருகில் வந்து அம்மு என்றதும் கை முஷ்டியை இறுக்கி பற்களை நறநறவென்று கடித்தவன் அவள் பேசிய பேச்சில் “ஸ்டாப் இட்” என்று வீடே அதிர சிம்மக் குரலில் கர்ஜித்தான்,
அவன் முன்னாள் போடப்பட்டிருந்த கண்ணாடிட் டீப்பாயைத் தன் இரும்புக் கரங்கள் கொண்டு ஓங்கி அடித்தவன் அவன் முழு உயரத்திற்கு எழுந்து நின்றான்.
அவன் அடித்த அடியில் அந்த கனமான கண்ணாடிட் டீப்பாய் உடைந்து சுக்கு நூறாக சிதற, நளனின் உள்ளங் கைகளில், கண்ணாடித் துகள்கள் கிழித்ததில் செங்குருதி சொட்டியது.
நளனின் கைகளில் குருதியைக் கண்டவள் பதறி எழுந்து “ஐயோ அம்மு ரத்தம்…” என்று அவன் கைகளைப் பிடிக்கப் போக,
கைகளை வேகமாக பின்னால் இழுத்தவன் “டோன்ட்… நெவெர்… எவர்… டச்… மீ … எனி மோர்…” என்று நிறுத்தி ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு வலக்கை சுட்டு விரல் கொண்டு எச்சரித்தான்.
கண்கள் ரெத்தமென சிவந்திருக்க, தலை முடி கலைந்து, இறுகிய தாடையும், கம்பீரமான உடலும் கொண்டு ஆறடி உயரத்தில் தன் முன் எரிமலையாய்க் குமுறிக் கொண்டு நின்றவனைக் கண்டு, பயம் நேத்ராவை ஒரு அடி பின்னால் எடுக்க வைத்தது.
திருமணம் ஆன இந்த மூன்று மாதங்களில் நளனை இப்படி எந்த சூழ்நிலையிலும் நேத்ரா கண்டதில்லை.
எப்போதும் உதட்டில் ஓட்டி வைத்த ஒரு மாயப் புன்னகையும், கலையாத கேசமும், கசங்காத உடையும் கொண்டு பார்ப்போரை கிறங்கடிப்பவன் நளன். ஆனால் இப்போது…
நேத்ராவின் கண்களை நேராய்ப் பார்த்தவன் “ஏன் நீ கன்சீவா இருந்த விஷயத்தை என் கிட்ட சொல்லலை?” என்றான் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி கடினமான குரலில்.
கண்களை மறைத்த கண்ணீரை இமை கொட்டி விழித்தவள் “அம்மு, நான்… நான்… குழப்பத்துல இருந்தேன், அதுனால அம்மா கிட்ட…” என்றவளை
“சோ உன்னோட குழப்பத்தை தீக்குற அளவுக்கு எனக்கு அறிவில்லையா? இல்லை என்கிட்டே பிரீயா பேசுறதுகு உனக்கு நான் பிரீடம் கொடுக்கலையா?” என்றான் நேத்ராவைக் குத்திக் கிழிக்கும் பார்வையுடன்.
அவன் கூறியதை மறுக்கும் தோரணையில் வேகமாக “அப்படி இல்லை அம்மு நான் சின்ன வயசுல இருந்தே, அம்மா கிட்ட….” என்றவளிடம்
“ஷீட்… ஸ்டாப் திஸ் யூ இடியட், நான் உன்னை தானே கல்யாணம் பண்ணியிருக்கேன் உன்னோட அம்மாவை இல்லைல…” என்றவனின் பேச்சை உள்வாங்கியவள், அவன் கூறுவதின் அர்த்தம் புரிந்து அருவருப்புற்றாள்,
நேத்ராவின் அருவருப்பான முகத்தைக் கண்டவன் அவள் முன் எட்டு வைத்து முன்னேற பாவையோ பின்னால் நகர்ந்தாள்.
“எஸ்… இப்போ புரியுதா உனக்கு, இது நம்மளோட லைப், நீ அழிச்சது நம்மளோட குழந்தை, அதை பெத்துக்கணுமா வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நீயும், நானும் மட்டும் தான்.
உன்கிட்ட நான் முன்னமே சொல்லியிருக்கேன், எந்த விஷயமானாலும் நாம ரெண்டு பேரும் சேந்து தான் முடிவெடுக்கணும்னு, சொன்னேனா இல்லையா? என்றவன் நேத்ரா தலை குனியவும்,
டாக்டர்கிட்ட நான் பாரின்ல இருக்கேன்னு சொன்னீங்களாம், ஏன் நான் செத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே” என்று வேங்கை போல் வேடம் கொண்டவனிடம்,
கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிய “அம்மு ப்ளீஸ், என்னோட கெரியர் ஸ்பாயில் ஆகும்ன்னு தான் அம்மா…” என்றவளை,
இடுப்பில் கை குற்றியிருந்தவன், கண்களை சுருக்கி “வாட்…? கெரியரா மொதல்ல உன்னால உன்னோட லைஃப் ல சரியான டெஸிஸ்ஸன் எடுக்க முடியுமா? உனக்கு எது வேணும் வேணான்னு உன்னால சொல்ல முடியுமா?
உனக்கு ஒரு டிரஸ் செலக்ட் பண்றதுக்கு உங்க அம்மா வேணும், உனக்கு மட்டுமில்லாம எனக்கும் வேற, நம்ம்ம்ம வீட்டோட டேஸ்ட்டு… உங்க அம்மாமாமாவுக்கு பிடிச்சதா இருக்கணும், சரி சின்ன வயசுல இருந்து இப்படியே வளந்திருக்க, கொஞ்ச நாள்ல மாறீடுவன்னு நெனைச்சு தான் நானும் எனக்கு பிடிக்கலைனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன்.
பட் நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை” என்றவன் அவள் அருகில் வந்து,
செங்குருதி படிந்திருந்த அவன் கை கொண்டு அவள் கழுத்தைப் பிடித்து அங்கிருந்த சுவற்றில் இடித்தவன் “நான் உன்னை எவ்வளவு விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா? உன்னை எப்படியெல்லாம் பாத்துக்கணும்னு நெனச்சேன் தெரியுமா? உன்கூட வாழப்போற வாழ்க்கைய நெனச்சு எவ்வளவு கனவு கண்டு இருக்கேன் தெரியுமா?
நீ என்னோட உயிர், ஆனா நான் உனக்குள்ள விதைச்ச நம்மளோட காதலின் வேர நீ அடியோடு பிடுங்கீட்ட, நம்மளோட குழந்தை உனக்கு வேண்டான்னா… அப்போ நானும் உனக்கு வேண்டான்னு தானே அர்த்தம்.
நான் என்னோட காதலை உனக்கு எப்படி புரிய வைக்க மறந்தேன்னு எனக்குத் தெரியலை, இல்லை நீ எம்மேல நம்பிக்கை வைக்கிற அளவுக்கு நான் நடந்துக்கலையான்னும் எனக்குத் தெரியலை, உன்னை எப்படி மறக்குறதுன்னும் எனக்குத் தெரியலை.
இனிமேல் என்னோட கண்ணு முன்னாடி வராத, கெட் லாஸ்ட்” என்று கண்கள் கலங்க நேத்ராவின் கண்களைப் பார்த்து குரல் உடைய உரைத்தவன், அருகில் இருந்த படுக்கையறைக்குள் புகுந்து கதவைப் படாரென அடைத்தான்.