ஏக்கர் கணக்கில் விரிந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஓட்டலின் புல்வெளி மைதானத்தில், விழா ஏற்பாடு செய்திருந்தனர். அருகே வண்ண விளக்குகளால் ஆன ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்க, ஆங்காங்கு வண்ண வண்ண நிறத்தில் பொடிகளும் தண்ணீரும் நிரப்பி வைக்கப் பட்டிருந்தன.
நேத்ரா, வனிதா மட்டுமல்லாது அனைவரும் நளன், வினோத் உட்பட அனைவரும் வெள்ளை வண்ண உடையில் காட்சிதர, வினோத் மேடை ஏறினான்.
அவனிடம் மைக் கொடுக்கப்படவும் “ஹாய் கைஸ், நீங்க கேட்ட மாதிரியே இந்த செலிப்ரேஷண் ஏற்பாடு பண்ணியாச்சு, நவ் லெட்ஸ் எஞ்சாய்” என்றவன் அதிகம் பேசி போரடிக்காமல் மேடையில் இருந்து இறங்கிக் கொள்ள,
நடனத்திற்குப் பயின்றிருந்த அனைவரும் அவர்கள் முறைக்காக காத்திருந்து ஒவ்வொருவராக மேடையை அலங்கரித்தனர்.
இறுதியாக வனிதாவும் நேத்ராவும் மேடை ஏறியவர்கள் அவர்கள் பயின்றிருந்த பாடலுக்குரிய நடனத்தை ஒன்றாக ஆடினர்.
எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த நளனைப் பார்த்த வினோத், “டேய் சிஸ்டர் சூப்பரா ஆடுறாங்கல்ல?” எனவும் அவன் புறம் திரும்பி “ம்ம்..” என்றவன் அதற்கு மேல் அதுவும் கூறவில்லை.
“உன்கிட்ட போயி சொன்னேன் பாரு” என்றவன் அருணைத் தேடிச் சென்றான். மேடை முன்பு நின்றிருந்த அருணை பார்த்தவன் அவனிடம் சென்று ஏதோ கூறிவிட்டு மீண்டும் நளனிடம் வந்து அமர்ந்தான்.
நேத்ரா மற்றும் வனிதாவின் ஆட்டமே கடைசி ஆட்டமாக இருக்க அவர்கள் ஆட்டம் முடிந்தவுடன் அனைவரும் கலர் பொடிகளை கைகளில் அள்ளிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.
கீழே நின்றிருந்த அருண் கைகளில் கலர் பொடிகளுடன் நேத்ராவை நெருங்கினான். “அருண் வேண்டாம் ப்ளீஸ்” என்றவள் கீழே இறங்கி அவனிடமிருந்து ஓட ஆரம்பிக்கவும், அருண் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.
இங்கு நளனும் வினோத்தும் அமர்ந்திருந்த இடத்தில் கைகளில் வண்ணப் பொடிகளை பின்னே மறைத்துக் கொண்டு வந்த வனிதா, “ஹாய் அண்ணா, ஹாய் சார், எங்களோட டான்ஸ் எப்படி இருந்தது?” என்றவள் பேசிக்கொண்டே இருவர் மேலும் பொடிகளைத் தூவினாள்.
“ஹே வனிதா…” என்ற இருவர் மேலும் வண்ணப் பொடிகள் தூவப்பட அதை சாக்காக வைத்துக் கொண்டு மற்ற கன்னிகளும் காளையவர்கள் மீது கைகளால் தொட்டும் தொடாமலும் வண்ணங்களைப் பூசினர்.
அவர்களிடமிருந்து தப்பித்த வினோத் கைகளில் வண்ணப் பொடியுடன் வனிதாவைப் பின் தொடர்ந்து செல்ல, இங்கு நளனோ “இனப்…இனப்…” என்றவன் புன்னகையுடன் அந்தக் கன்னிகளிடமிருந்து தப்பித்துச் சென்றான்.
அங்கிருந்த டேப்பில் முகத்தைக் கழுவியவன் நிமிர, அங்கே நேத்ராவோ “அருண் வேண்டாம் ப்ளீஸ்…” என்று அவனிடமிருந்து ஓடிக் கொண்டிருந்தாள்.
ஒரு நிலையில் அருணின் கையில் அகப்பட்டவளை கைகளில் இருந்த வண்ணப் பொடி கொண்டு நேத்ராவின் முகத்தில் அடித்த அருண் அவளிடமிருந்து தப்பித்து ஓடவும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் நேத்ரா.
இக்காட்சியைக் கண்ட நளனுக்கு கோபம் உச்சத்தைத் தொட, கை முஷ்டியை இறுக்கியவன் அவன் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தவன் யாரிடமும் சொல்லாமல் அவன் அப்பார்ட்மெண்டிற்கு விரைந்தான்.
காரை அதி வேகத்தில் செலுத்திய நளன் அவன் அப்பார்ட்மென்ட்டை அடைந்து உள்ள சென்றவுடன், பிரிஜ்ஜில் அவன் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து வாயில் சரித்து ஓரு முழு பாட்டிலையும் ஒரே மூச்சில் காலி செய்தான்.
இரவு எப்போது உறங்கினான் என்பது அவனுக்கே தெரியாது, கண் விழித்தபோது மணியைப் பார்த்தவன் மணி நண்பகல் ஒன்று என்று காட்டவும், ச்… என்று தலையில் கைவைத்து எழுந்தவனுக்கு முந்தைய நாள் இரவு நடந்த விழா ஞாபகம் வந்து அவன் தலைவலியை மேலும் கூட்டியது.
இங்க இருந்தா சரிவராது என்றவன், குளித்து கிளம்பி ஆபீஸ் வந்தான். வந்தவன் அவன் அறைக்குள் நுழையும் முன் நேத்ராவையும் அவளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அருணையும் கண்டவன், பற்களைக் கடித்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே சென்றவன் அதன் பின்பு மீண்டும் வெளியே வரவே இல்லை. காலையில் நளன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த வினோத் அவனை எழுப்பாமல் ஆபீஸ் வந்து சேர்ந்தான்.
இப்போது மணி நான்கைத் தொட்டிருக்க, நளனைத் தேடி வினோத் அவன் அறைக்கு வந்தான். “என்னடா நைட் செம்ம போதை போல” என்றவன் அவன் முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
வினோத் உள்ளே வந்த சில நொடிகளில் நேத்ரா “எக்ஸ்கியூஸ் மீ சார்” என்றவாறு நளன் அறையில் நுழைந்தாள்.
நேத்ரா அறையினுள் நுழைந்தவுடன் அவளை என்ன என்பது போல் பார்த்த நளனிடம் “சார் இன்னைக்கு எனக்கு ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு போக பர்மிஸ்சன் வேணும்” என்றாள்.
புருவத்தை சுருக்கி நேத்ராவைக் கூர்ந்து பார்த்தவன் “எதுக்கு?” என்றான்.
“அது… இன்னைக்கு ஈவினிங் பொண்ணு பாக்க வராங்க…” என்றவளை முறைத்தவன்,
“யாரை பொண்ணு பாக்க வராங்க?” என்றான் கடுமையான குரலுடன்,
நேத்ரா பதில் கூறும் முன் “டேய் நளா, நமக்கு எதுக்கு டா அது, யாரை பொண்ணு பாக்க வந்தா நமக்கு என்ன? என்றவன் சரிங்க நேத்ரா நீங்க போங்க” என்ற வினோத்தை முறைத்த நளனிடம்,
“சரிடா நளா எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு நானும் கிளம்புறேன், அதை சொல்லீட்டு போகத்தான் வந்தேன்” என்ற வினோத்தும் கிளம்பிவிட,
அவன் இருக்கையிலிருந்து எழுந்தவன் நேற்று நளன் அவனிடம் கூறியதை நினைத்துப் பார்த்தான். வீட்டிற்கு வந்த நளன் சோஃபாவில் அமர்ந்து அவன் குடியைத் தொடர்ந்து கொண்டிருக்க, நளன் வீடு வந்து வெகுநேரம் கழித்து வந்தான் வினோத்.
நளனின் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்தவன் அவன் அருகில் அமர்ந்தான்.
“நளா நீ ஏன் இவ்வளவு கோபமா இருக்கேன்னு எனக்கு புரியுது, ஆனா நீ ஏன் இப்படி இருக்கேண்ணே எனக்கு புரியலை, சிஸ்டர் இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு சொல்ற, அப்புறம் ஏன் அவங்களை ஏத்துக்க மாட்டேங்கிற,
அவங்க பண்ணுனது தப்புதான், நான் இல்லன்னு சொல்லலை அதுக்காக அவங்களை பிரிஞ்சு இருந்து நீ அவங்களுக்கு கொடுத்த தண்டனை உனக்கு போதலையா,
பாவம் டா அவங்க, வீட்ல வேற அவங்களை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவங்க அப்பா அம்மா வற்புறுத்துறாங்க போல” என்றவன் கண்களை உயர்த்தி நளனை நோட்டமிட்டான்.
எதுவும் பேசாமல் வாயில் மது பாட்டிலை முழுதாக சரித்தவன் “ஆமா நானே உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கனுன்னு நெனைச்சேன், நேத்ரா முன்னாடி வேலை பாத்த இடத்துல என்ன பிரச்சனைன்னு உனக்குத் தெரியுமா? நீ தான் நந்தன் கூட அடிக்கடி பேசுவியே நந்தன் சொல்லியிருப்பார் இல்லையா?” என்றான் நளன்.
“எவ்வளவு குடிச்சாலும் தெளிவா பேசுறான் பாரு, ஆனா மனசுல இருக்கிறதை மட்டும் சொல்லவே மாட்டான்” என்று புலம்பியவனிடன்,
“என்ன சொன்ன?” என்று அருகில் வந்தான் நளன்.
“நான் ஒன்னும் சொல்லலை நள மகாராஜா…” என்று பயந்தவன், பின்பு “தெரியும் டா இப்போ அதுக்கு என்ன? அது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆகப் போகுது” என்றவன் அன்று காண்டீபன் நடந்து கொண்ட விஷயத்தையும் அவள் அவனை அறைந்ததையும் கூறவும்,
“அப்படிப் போடு நளனோட பொண்டாட்டின்னா சும்மாவா!” என்றவன்,
“அன்னைக்கு அந்த காண்டீபன் எம்முன்னாடியே எம்பொண்டாட்டிய என்னென்ன பேசினான் தெரியுமா, அவனை யூரினல் ல அடிச்சு தொவைச்சு காயப் போட்டுட்டேன்” என்றவன் வாய் குழற, அவன் படுக்கை அறைக்கு எழுந்து சென்றான்.
அன்று என்ன நடந்தது என்று வனிதா மூலம் தெரிந்துகொண்ட வினோத் இப்போது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
வினோத் கூறியதை யோசித்துப் பார்த்தவனுக்கு அவன் கூறியது போல் நேத்ராவை தான் பெண் பார்க்க வருகிறார்களோ என்று புருவம் முடிச்சிட யோசித்தவன், அவன் அறையிலிருந்து வெளிவந்து நேத்ராவின் இருப்பிடத்தைப் பார்த்தான்.
அது காலியாக இருக்கவும் “அதெப்படி… நேத்ரா இதுக்கு சம்மதிச்சிருப்பாளா? கண்டிப்பா சம்மதிக்க மாட்டா… என்று ஒரு மனம் ஆறுதல் கூறினாலும், சம்மதிச்சதுனால தானே இப்போ பர்மிஸ்சன் கேட்டுட்டு போறா, என்று மற்றொரு மனம் முரண்டியது”.
என்ன செய்வது என்று குழப்பத்தில் அமர்ந்திருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை, திடீரென்று மணி பார்த்தால் அது இரண்டு மணி நேரத்தைக் கடந்திருந்தது.
நேத்ராவின் தாய் ஞாபகத்திற்கு வரவும் ஆழ மூச்செடுத்து ஒரு முடிவுடன் அவன் அறையிலிருந்து அவன் கார் சாவியுடன் வெளியேறியவன் காரை வேகமாக கிளப்பினான்.
To Read👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே
Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Link 👉Amazon Kindle
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ