மாலை வேளைகளில் சாலையின் நெரிசலைக் கூறவா வேண்டும்? எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்வது போல் வாகனங்கள் சாலைகளில் நகர்ந்து கொண்டிருக்க, நளனால் மட்டும் என்ன பறந்து செல்லவா முடியும்?
வலக்கை ஸ்டியரிங் வீலையும் இடக்கை கியர் லீவரையும் அழுத்தமாகப் பற்றியிருக்க, ட்ராபிக்கில் சிக்கியவன் ஹரனை அழுத்திக் கொண்டும், ஷீட் என்று கைகளால் ஸ்டியரிங் வீலை அடித்துக் கொண்டும் போவோர் வருவோரைத் திட்டிக் கொண்டும் அமர்ந்திருந்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் நேத்ராவின் வீட்டின் முன் காரை நிறுத்தியவன், நேத்ராவின் வீட்டில் ஆட்கள் போவதும் வருவதுமாக இருப்பதையும், வீட்டின் முன் அணிவகுத்திருந்த வாகனங்களையும், வீட்டின் வாசலில் கிடந்த செருப்புகளையும் நோட்டமிட்டவன், பற்களை நறநறவென்று கடித்தான்.
காரிலிருந்து இறங்கியவன் தன் பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டபடி அழுத்தமான நடையுடன், நேத்ராவின் வீட்டை நோக்கி நடந்தான். அங்கே அவர்களுடன் வேலை செய்யும் பல அறிமுகமான முகங்கள் தென்படவும், நளனுக்கு ஆத்திரம் தாள முடியவில்லை.
நளனைக் கண்டதும் அங்கே நின்றிருந்த ப்ரீத்தி ஓடி வந்தாள். வந்தவள் “வாங்க சார், லேட் ஆயிடுச்சா?” எனவும்,
தலையை லேசாகத் ப்ரீத்தி புறம் திருப்பியவன் “பொண்ணு எங்க இருக்காங்க?” என்றான்.
புருவத்தை சுருக்கி ‘என்ன இவரு உள்ள வந்தவுடனே பொண்ண எங்கேன்னு கேக்குறாரு, நமக்கெதுக்கு வம்பு’ என்று நினைத்தவள்,
“வாங்க சார் நான் கூட்டீட்டுப் போறேன்” என்றுவிட்டு முன்னே நடந்தாள்.
அவளைப் பின் தொடர்ந்தவன் ஹாலில் அமர்ந்திருந்தவர்களைக் கண்களை உயர்த்தி நோட்டமிட்டான், அங்கே கார்த்திகேயன், நந்தினி, சக்கரவர்த்தி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஒரு புறம் அமர்ந்திருக்க, வினோத், நந்தன், அருண் மற்றொரு புறமும் அமர்ந்து அவர்களுக்குள் பிசியாக பேசிக் கொண்டிருந்தனர்.
நளனை கண்டு கொள்ளாமல் அனைவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கவும், ஒரு நொடி தாமதித்தவன் மீண்டும் ப்ரீதியைப் பின் தொடர்ந்தான்.
நேத்ராவின் அறைக்கு செல்லும் வழி நளனுக்குத் தெரிந்திருந்தாலும் கடைசி முயற்சியாக அது நேத்ராவாக இருக்கக் கூடாதா என்னும் நப்பாசையில் தான் ப்ரீத்தியை அழைத்துப் போகச் சொல்லிக் கேட்டான் நளன்.
ஆனால் ப்ரீத்தி அழைத்துச் செல்லும் வழி நேத்ராவின் அறைக்குச் செல்வதை உறுதிப்படுத்தவும், இறுகியவன் மேலும் இறுக்கமான முகத்துடன் நேத்ராவின் அறை முன்னாள் இடக்கை இன்னும் அவனது பேண்ட் பாக்கெட்டினுள் இருக்க, வலக்கையை உயர்த்தி நேத்ராவின் தாழ்வாக இருந்த அறை நிலைப்படியைப் பிடித்தவன், கூர்மையான கண்களை அறையினுள் செலுத்தினான்.
அங்கே நேத்ரா கருநீல வண்ணப் பட்டுப் புடவையில் கண்ணாடி முன் அமர்ந்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, அவளைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம். அதில் வனிதாவும் நேத்ராவின் தாய் ரேணுகாவும் தென்பட,
கைகளை மார்பின் குறுக்கே கட்டியவன் கண்ணாடியில் தெரிந்த நேத்ராவின் பிம்பத்தைப் பார்த்தான், தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தவள், கண்ணாடியில் தெரிந்த தன்னவனின் பிம்பத்தைக் கண்டு பிளந்த வாயுடன் எழுந்து நின்றாள்.
நேத்ராவின் பார்வை சென்ற திக்கைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் எழவும் நேத்ராவைப் பார்த்துக் கொண்டே அனைவருக்கும் “கெட் அவுட்” என்று கட்டளை பிறப்பித்தான்.
அனைவரையும் வனிதா வெளியே அழைத்துச் செல்லவும் அறையினுள் வந்து கதவைத் தாளிட்டவன், நேத்ராவைக் கூர்ந்து நோக்கினான்.
கண்களை விரித்து வாய் பிளந்தபடி தனக்குப் பின்னிருந்த கண்ணாடி அலமாரியைப் பிடித்திருந்த நேத்ராவிடம் “என்ன நடக்குது இங்க?” என்று பற்களைக் கடித்த படி வினவினான்.
எச்சிலை விழுங்கியவள் “அது… நிச்சயம்….” என்றவளை தோள்களில் கைவைத்து அங்கிருந்த சுவற்றில் மோதியவன்,
கடித்த பற்களினூடே “என்ன டி, என்னைய விட்டுட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கப் போறியா? என்னைய பாத்தா என்ன கேனப் பய மாதிரி இருக்கா? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? ஹா…” என்றவன்,
நேத்ராவின் பின் குத்தியிருந்த சேலை முந்தானையை சடாரென்று பிடித்து இழுத்தான். அதில் அவள் மார்பை மறைத்திருந்த சேலை நழுவவும், அவள் மார்பின் மத்தியில் கிடந்த பொன் தாலியைக் கையில் எடுத்தவன்,
“இது என்ன? இதை கழுத்துல போட்டுக்கிட்டே வேறவன் முன்னாடி…. ஷிட் என்னால அதை நெனச்சுக் கூட பாக்க முடியலை, உன்னால எப்படி முடிஞ்சது அப்போ நமக்குள்ள எல்லாமே அவ்வளவு தானா?” என்றான் அவன் கட்டிய பொன்தாலியைக் கையில் ஏந்தியபடி,
நளன் பிடுங்கிய மாராப்பை மறைக்கக் கூட இல்லாமல், அவனின் கோபத்தை… தன் மேல் அவன் கொண்ட பொசஸிவ்னசை ரசித்தவள் கண்களில் கண்ணீர் பெறுக நின்றிருந்தாள்.
“வாயத் தொறந்து சொல்லு, இதெல்லாம் யாரு உங்க அம்மாவோட வேலையா? அவங்க சொல்லி தான் இதுக்கெல்லாம் சம்மதிச்சியா?” என்றவன் கையில் பிடித்திருந்த பொன்தாலியை விடுவித்து விட்டு,
நேத்ராவிற்கு முதுகு காட்டியவாறு திரும்பி நின்று சற்று நிறுத்தி, “யாரு மாப்பிள்ளை?” என்றான்.
மீண்டும் அமைதி கத்தவள் புறம் திரும்பியவன், “என்னை ரொம்ப கோபப்படுத்துற, நீ என்னோட குழந்தையை கலைச்சப்போ கூட நான் உன்னை அடிக்கலை, இப்போ என்னைய அடிக்க வச்சுராத, வாய தொறந்து பதில் சொல்லு யாரு மாப்பிள்ளை?” என்று கையை ஓங்கியபடியே சிம்மக் குரலில் கர்ஜிக்கவும்,
“சொல்றேன்… சொல்றேன் வினோத், வினோத் அண்ணா தான் மாப்பிள்ளை” என்றாள் வேகமாக கைகளால் முகத்தை மறைத்த படி.
அவள் கூறியதை உள்வாங்கியவன் “வாட் வினோத்… அண்ணா வா….” என்றவன் புருவம் சுருக்கி வினவவும்,
முகத்தை மறைத்திருந்த கைகளை விலக்கியவள் “அது நான்… நான்… வேண்டான்னு தான் சொன்னேன், வினோத் அண்ணா தான்…” என்றவள் வார்த்தைகளை விழுங்கவும்,
“சரி… பொண்ணு யாரு?” என்றான் அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,
“அதுவந்து… பொண்ணு… வனிதா…” எனவும் சுருங்கியிருந்த புருவங்கள் விரிய திருப்தியுற்றவன்,
பெருமூச்சை வெளியேற்றிவிட்டு வேகமாக நேத்ராவின் அருகில் வந்தான். அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி அவளது கன்னக்குழியில் பெருவிரல் பதித்தவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்து இறுதியாக அவள் இதழ்களில் கரை சேர்ந்தான்.
இத்தனை நாட்களின் தவத்தை இப்போதே ஈடுகட்டத் துடிக்கும் அவனது உணர்வுகளின் கொதிநிலையில் திண்டாடியவளை விலக்கி நிறுத்தியவன், அவள் மாராப்பை எடுத்து அவளுக்குத் தானே அணிவித்தான்.
Linkமகரந்தம் தாங்கும் மலரவள் 34
Linkமகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Link Amazon Kindle
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ