சென்னையின் வெப்பம் தார் சாலையைக் கூட இளக்கிக் கொண்டிருக்க, ஓரளவு நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களிலும், பஸ்ஸிலும் பயணிக்க, ஏசி காரில் செல்வோருக்கு ஏசி போதாமல் வெப்பம் தாக்கி…அஸ் புஸ் என்று புலம்பி கொண்டிருக்க,
என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை விட இந்த வெயில் ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்று அங்கே தெருக்களிலும், நடை வண்டியிலும் கடை வைத்திருப்பவர்கள் அவரவர் வேலையை கவனிக்க,
இங்கே நேத்ராவும் அஸ் புஸ் என்று பொருமிக் கொண்டிருந்தாள். சென்னையின் வெப்பத்தால் அல்ல காண்டீபனின் செயலால்.
ஆட்டோவில் அமர்ந்திருந்தவளை ஆட்டோ ஓட்டுநர் பின் கண்ணாடி வழி பார்த்து “என்னம்மா… வெயில் ரொம்ப என்ன மா?” என்றார் அப்பாவியாக.
அவருக்கு ஒரு சிரிப்பை பதிலளித்தவள் “ம்ம் ஆமா, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” என்றாள்.
“இதோ இன்னும் 10 நிமிஷம் மா போய்டலாம்” என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
அவர் சொன்ன படியே 10 நிமிடங்களில் நேத்ரா சொன்ன இடத்தை அடைந்திருந்தார் ஆட்டோ ஓட்டுநர்.
ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து நன்றி சொன்னவள், மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தாள்.
அது 12 எனக் காட்டவும், ‘சரி கால் பண்ணி பாப்போம்’ என்று நினைத்தவள், அவள் போனில் வனிதா என்று பதிந்து வைத்திருந்த எண்ணிற்கு அழைத்தாள்.
ஆம் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியே வந்தவள், நேராக அவள் தோழி வனிதா வேலை செய்யும் நிறுவனத்திற்கு வந்திருந்தாள்.
ஒரு முழு அழைப்பு சென்று நின்றவுடன் “என்ன இவ எடுக்க மாட்டேங்கிறா, வேலையா இருப்பாளோ? இல்லையே இப்போ லஞ்சு டைம் தானே” என்று மீண்டும் முயற்சித்தாள்.
இந்த முறை அழைப்பு ஏற்கப்படவும் “ஹேய் வனிதா எங்க இருக்க?” என்றாள்.
“ஏன் டி இங்க கேன்டீன்ல தான் இருக்கேன், ஏன்” என்றாள் வனிதா.
“நல்லா கொட்டிக்கோ, தின்னி மாடு” என்று பொரிந்த நேத்ராவிடம்,
“ஏன் டி, நீ சாப்பிடலையா?” என்றாள் வனிதா
“ஆமா இப்போ அதுக்கு தான் கொறைச்சல்” என்று சலித்துக்கொண்ட நேத்ராவின் பின்னால் கேட்ட ஆரன் ஒலியில்,
“சரி, நீ இப்போ எங்க இருக்க, ஆரன் சத்தம் கேக்குது” என்ற வனிதாவுக்கு,
“உன்னோட ஆபீஸ் முன்னாடி தான் இருக்கேன்” என்றாள்.
“என் ஆபீஸ் முன்னடியா எதுக்கு? ஏன்? இதை ஏன் நீ முதல்லயே சொல்லலை?
அமைதியாக இருந்த நேத்ராவிடம், சரி நீ அங்கேயே இரு நான் வெளிய வரேன்” என்றவள் சில நொடிகளில் அவளை அடைந்திருந்தாள்.
செக்யூரிட்டியிடம் கையெழுத்திட்டு நேத்ராவை கான்டீன் உள்ளே அழைத்துச் சென்றவள் “நீ இங்க உக்காரு நான் இதோ வரேன்” என்றவள் கேன்டீனில் போடப்பட்டிருந்த நாற்காலியை காட்டி அதில் அமரச் செய்தாள்.
சில நொடிகளில் திரும்பி வந்தவளின் கைகளில் ஒரு குளிர் பானமும், இரு கார்னிட்டோ பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீமும் இருந்தது.
ஒன்றை நேத்ராவிடம் நீட்டியவள் “இந்தா மொதல்ல இதை சாப்பிடு ரொம்ப சூடா இருக்க” என்று ஒரு ஐஸ்கிரீமை நேத்ராவின் கைகளில் திணித்த வனிதா, அவள் எதிரில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தாள்.
வனிதா கொடுத்த ஐஸ்கிரீமை பிரிக்க துவங்கியவள் சற்று நிறுத்தி “நான் காசெல்லாம் தரமாட்டேன் ஓகே வா” என்றாள்.
“என்ன?” என்ற வனிதாவுக்கு
“இல்ல… நான் இந்த ஐஸ்கிரீமுக்கு காசெல்லாம் தர மாட்டேன்” என்றாள் நேத்ரா,
“அட ச்சீ சாப்பிட்டு டி மொதல்ல” என்ற வனிதா, நேத்ரா உண்பதை கவனித்தாள்.
இருவரும் பள்ளிக்காலம் தொட்டே நெருங்கிய தோழிகள், நேத்ராவின் பேச்சை வைத்தே அவளை கணித்துவிடுவாள்.
இன்றும் அப்படிதான் ஏதோ சரி இல்லை என்று தெரிந்த வனிதாவுக்கு அது என்னவென்று தெரியவில்லை.
உடம்பு சரியில்லை என்றாள் வீட்டிற்கு தானே சொல்லுவாள், இங்கே இவ்வளவு தொலைவு வருமளவு என்ன நடந்திருக்கும், என்று சிந்தித்துக் கொண்டிருந்தவள்.
நேத்ரா பாதி ஐஸ்கிரீம் சாப்பிடும் வரை பொறுமை காத்த வனிதா “என்ன ஆச்சு, ஏன் ஆபீசுல இருந்து பாதியில வந்த” என்றாள்.
சாப்பிடுவதை நிறுத்திய நேத்ரா கண்களை மட்டும் உயர்த்தி “நான் வேலைய விட்டுட்டேன்” என்றாள்.
“என்ன வேலையை விட்டுட்டியா, ஏன்?” என்ற வனிதாவுக்கு இன்று நடந்ததை விளக்கினாள் நேத்ரா.
“சரிதான், நீ செஞ்சதும் சரிதான், இவனுங்கள திருத்தவே முடியாது, எல்லா இடத்திலும் இது மாதிரி ஆளுக இருக்கத்தான் செய்வாங்க, நாம தான் பிடிக்கலைன்னா விலகி வந்திரனும், சரி விடு இப்போ அம்மா கிட்ட என்ன சொல்லப் போற” என்ற வனிதாவுக்கு,
“ம்ம்ம் அதுக்கு தான் நானே உன்னை தேடி வந்திருக்கேன், நீ திரும்பவும் என் கிட்டயே கேளு” என்றாள் நேத்ரா.
“நான் என்ன பண்ண முடியும் நேத்ரா”, என்று கழுத்தில் கிடந்த சிறு சங்கிலியை பற்கள் கொண்டு கடித்த வனிதா, ஏதோ யோசனை வந்தது போல்,
“ஆஆ சரியான நேரத்தில தான் டி அந்த காண்டாமிருகம் உன் கிட்ட வாலாட்டியிருக்கான், இன்னைக்கு எனக்கு மீட்டிங்ன்னு சொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றாள் வனிதா.
புருவம் சுருக்கி “ஆமா, அதுக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன டி சம்மந்தம்” என்று சலித்துக் கொண்ட நேத்ராவிடம்,
“சம்மந்தம் இருக்கு, இன்னைக்கு எங்களுக்கு மீட்டிங்கில ஒரு புது ப்ரொஜெக்ட்டுக்கு ஆள் எடுக்க போறதா எங்க எம் டி சொன்னாரு டி, பேசாம நீயும் அப்ளை பண்ணீரு, ப்ரோப்ளம் சால்வ்ட்” என்று கைகளை இருபுறமும் விரித்த வனிதாவை,
“சூப்பர் வனிதா, ஆனா எனக்கு கிடைக்குமா?” என்று தயங்கிய நேத்ராவிடம்,
“நீ ஏற்கனவே ஒர்க் பண்ண ப்ராஜெக்ட் மாதிரி தான் இருக்கும், அதுனால கண்டிப்பா உனக்கு கிடைக்கும்” என்று உறுதியளித்தாள் வனிதா.
“சரி அப்போ அம்மா கிட்ட இந்த வேலைக்காக, இப்போ பாத்துட்டு இருந்த வேலையை விட்டுட்டேன்னு சொல்லீடவா” என்ற நேத்ராவிற்கு,
“ஏன்… உங்க அம்மா தானே நீ வேலைக்கு போகனுன்னு ஆசைபட்டாங்க, அவங்க கிட்ட போயி சொல்லு பொண்ணுங்க வேலைக்கு போறது எவ்வளவு கஷ்டம்ன்னு,
வீட்டை விட்டு வெளிய காலடி எடுத்து வைக்கிறதுல இருந்து, திரும்ப வீட்ட்டுக்குள்ள போறது வரைக்கும் நாம எவ்வளவு சகிச்சுக்கிறோம்னு அவங்களுக்கும் தெரியட்டும், நீ இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்குறதுக்கு காரணமே உங்க அம்மா தான் அதை மொதல்ல புரிஞ்சுகோ” என்ற வனிதாவுக்கு,
“ஹேய் சும்மா சும்மா எங்க அம்மாவை குறை சொல்லாத, அவங்க என்னோட நல்லதுக்கு தான் சொல்றாங்க” என்ற நேத்ராவின் பதிலில்,
“உன்னை திருத்தவே முடியாது, எப்படியோ போ, சரி வா எதாவது சாப்பிடலாம்” என்ற வனிதாவுக்கு,
“இல்ல டி நீ போயி உன்னோட வேலையைப் பாரு, நான் இப்படியே வீட்டுக்கு கிளம்புறேன்” என்ற நேத்ராவிடம்,
“இனி எங்க… எனக்கும் வேலை முடுஞ்சிருச்சு, நானும் ஆப் சொல்லீட்டு வரேன், ரெண்டு பேரும் சேந்தே போகலாம்” என்றாள் வனிதா.
இருவரும் அங்கே கேன்டீனில் நன்றாக சாப்பிட்டு விட்டு வீடு வந்து சேர மணி மூன்றைத் தொட்டிருந்தது.
நேத்ராவின் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய வனிதாவிடம் “ஹேய் வனிதா, நான் அம்மா கிட்ட, நீ வேலை பாக்குற இடத்துல வேகன்சி இருக்குறதுனால தான் வேலையை விட்டேன்னு சொல்லீடுறேன், நீயும் அதையே மெயின்டைன் பண்ணிக்கோ” என்றுவிட்டு திரும்பி நடந்த நேத்ரா மீண்டும் வனிதாவிடம் வந்து,
“ப்ளீஸ் டி, இப்போ தான் வீட்ல கொஞ்ச நாளா கல்யாண பேச்சு எடுக்காம இருக்காங்க, ஆபீசுல நடந்த பிரச்சனை தெரிஞ்சா, திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி, படுத்துவங்க” என்றாள் நேத்ரா.
“கல்யாணம் தானே… பண்ணிக்க வேண்டியது தானே, உனக்கு தான் அது ஒன்னும் புதுசு இல்லையே, உங்க அம்மா சொல்றதை அப்படியே கேக்குறவ, இதையும் கேளு” என்றாள் வனிதா வெடுக்கென்று.
முகத்தை சுருக்கி தன் இயலாமையைக் காட்டிய நேத்ரா “ஹேய் ப்ளீஸ் டி, தேவையில்லாம பேசாத, உள்ள வா” என்ற நேத்ரா வனிதாவுடன் வீட்டினுள் நுழைந்தாள்.
இருவரையும் ஒன்றாகப் பார்த்த ரேணுகா திடுக்கிட்டு “நேத்ரா என்ன ஆச்சு டா எப்பவும் வீட்டுக்கு வர எட்டு மணி ஆகும், இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட, உடம்பு முடியலையா டா தங்கம்” என்று நேத்ராவின் கைபிடித்து நெற்றியை தொட்டு பார்த்தார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மா, வனிதா ஆபீஸ்ல வேகன்சி இருக்குன்னு சொன்னா” எனவும்,
“அப்போ இப்போ பாக்குற வேலை?” என்ற ரேணுகாவிற்கு
“கோவிந்தா கோவிந்தா….” என்று குரல் எழுப்பினாள் வனிதா.
“என்னம்மா வனிதா… என்ன சொல்ற” என்ற ரேணுகாவிடம்,
“இல்ல ஆன்ட்டி, அவளுக்கு இப்போ வேலை செய்யுற இடம் பிடிக்கலை போல அதான் என்கூடவே எங்க ஆபீஸ் வந்துட்டா நல்லா தானே இருக்கும், அதுவுமில்லாம எங்க ஆபீசுல வேற ஒரு புது ப்ராஜெக்ட்டுக்காக ஆள் எடுக்க போறாங்க, அதான்…” என்றாள் வனிதா.
“அப்படியா டா தங்கம் வேற ஒண்ணுமில்லைல” என்று நேத்ராவை உற்று கவனித்தவர், அவள் இல்லை எனவும்,
“நான் அப்படியே கிளம்புறேன் ஆன்ட்டி, நாங்க அங்க இருந்து கிளம்பும் போது அம்மா கிட்ட பேசீட்டு தான் கிளம்புனேன், அதுனால லேட் ஆனா தேடுவாங்க” என்றவள் நேத்ராவிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
வனிதா சென்றவுடன் அவலறைக்கு சென்ற நேத்ரா ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு எழுந்தவள், கையில் பொட்டேடொ சிப்ஸுடன் சோபாவில் அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.