சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா,
ஒரு சீரியலின் பெயரைச் சொல்லி “அம்மா அம்மா ஓடி வா ***** சீரியல் போட்டுட்டான்”என்று கிச்சனில் இருந்த ரேணுகாவை அழைத்தாள்.
“இதோ வந்துட்டேன், அதுக்குள்ளே போட்டுட்டானா, ச்ச கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டான், இந்த தேங்கா சட்னியை தாளிக்க விடுறானா, படுபாவி” என்று சலித்தவர்,
“சரி இடைவேளை போடவும் வந்து தாளிப்போம்” என்று அடுப்பில் வைத்த தாளிப்பு கரண்டியை இறக்கி வைத்தார்.
அதற்குள் நேத்ரா மீண்டும் அம்மா என்று கத்தவும்,
இந்தா வந்துட்டேன் என்று வேகமாக வந்தவர் நேத்ராவின் அருகில் அமர்ந்தார்.
“அப்புறம் என்ன மா ஆச்சு, அந்த மாமியார் மருமக சண்டை…” என்று ஆவலாக கேட்ட நேத்ராவிடம்,
“ஐயோ நீ எப்போ கேக்குற நேத்ரா, அதெல்லாம் என்னைக்கோ முடிஞ்சு போச்சு, இப்போ அந்த மருமகளை விவாகரத்து பண்ண வைச்சுட்டு வேற மருமகளைக் கொண்டு வந்திருக்கா மாமியாகாரி” என்றார் ரேணுகா.
“ம்ம்ம் எவ்வளவு திமிரு பாத்தியா ம்மா, பேசாம மகனுக்கு கல்யாணம் பண்ணாம வச்சுக்கிட்டா எதுக்கு தேவையில்லாம மருமக கூட சண்டை போடணும், கொஞ்சம் கூட அறிவே இல்லை” என்று சிப்ஸை வாயில் திணித்துக் கொண்டிருந்த நேத்ரா ஆவேசமாக பேசவும்,
“ம்ம் ஆமா உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் இந்த மாதிரி சீரியல் பாத்து இப்படி சீரியஸா பேசுனா, இப்படித்தான் சீரியல் ஹிட் ஆகும்” என்று
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டும், தன் லேப்டாப் பேக்கை மார்பின் குறுக்கே அணிந்து கொண்டும் நேத்ராவை முறைத்துக் கொண்டும் நின்றிருந்தான் நந்தகுமரன்.
நந்தனை கண்டதும் ரேணுகா கிச்சனுக்குள் சென்றுவிட,
“ஐய் ரைமிங்கு… இந்தாண்ணா சிப்ஸு” என்று சிப்ஸ் பாக்கெட்டை நந்தன் முன் நீட்டினாள் நேத்ரா.
அவள் நீட்டிய கையை அவன் இடக்கை கொண்டு தள்ளியவன், நேத்ராவை ஆழ நோக்கினான்.
“அம்மா தான் பொழுது போறதுக்கு சீரியல் பாக்குறாங்கன்னா, நீயும் அவங்க கூட சேந்து கும்மியடிக்கிற, உனக்கு வேற வேலை இல்லையா” என்றான் நந்தன்.
“சும்மா தானே ண்ணா, எதையும் நாம நம்மளோட லைப் ல அப்ளை பண்ணாத வரை பிரச்சனை இல்லை” என்றாள் நேத்ரா.
என்னவென்றே கணிக்க முடியாத ஒரு ரியாக்க்ஷன் கொடுத்தவளை,
“போ போயி எனக்கு குடிக்க தண்ணி எடுத்துட்டு வா” என்றவன் அவன் அறையினுள் சென்றான்.
“ஐயோ இந்த நெட்டை குரங்கு என்ன கேக்க போகுதுன்னு தெரியலையே தனியா வேற கூப்பிடுறான், சரி போயி பாப்போம்” என்று மனதினுள் நினைத்தவள், வெளியே சரிண்ணா என்றாள்.
அவளை சரியாக கணித்தவன் “என்னைய திட்டுனது போதும் போயி ஆகவேண்டிய வேலையை பாரு” என்றான் பின்னால் திரும்பி பார்க்காமல்.
ங்கே என்று விழித்தவள், டைனிங் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.
நந்தன் அவன் அறைக்குள் சென்றவன், லேப்டாப் பேக்கை அவன் அறையில் போடப்பட்டிருந்த டேபிளில் வைத்தவன், அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
நேத்ரா உள்ளே வந்தவுடன் தண்ணீர் பாட்டிலை நந்தனிடம் கொடுத்துவிட்டு அவன் முகம் பார்க்காமல் திரும்பினாள்.
“நேத்ரா…” என்ற நந்தனின் அழைப்பில், ஒரு கண்ணை மூடி திறந்தவள்,
“என்னண்ணா….?” என்றாள்.
“இங்க வா, உக்காரு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற நந்தனுக்கு,
சரி என்ற தலை உருட்டலுடன் அங்கு இருந்த கட்டிலில் தலை குனிந்தபடி அமர்ந்தாள்.
“நேத்ரா இங்க என்னை நிமிந்து பாரு, இன்னைக்கு ஏன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்ட” என்றான்.
“அது… அது… அண்ணா எனக்கு அந்த வேலை பிடிக்கலை, ரொம்ப டார்சரா இருக்கு, அதான் வனிதா வேலை பாக்குற இடத்துல வேகன்சி இருக்குன்னு சொன்னா, அதான் வேலையை ரிசைன் பண்ணீட்டேன்” என்றாள் திக்கித் திணறி.
“சரி வேலையை உடனே எப்படி ரிசைன் பண்ண முடியும், 3 மந்த்ஸ் முன்னாடி நோட்டீஸ் கொடுக்கணும்ல, உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ஆபர்” என்றான் நக்கல் தொனியில்.
“ஐயோ இவனோட இப்படி கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்குறானே, பன்னெண்டாவது எக்ஸாம்ல கூட இப்படி கேள்வி கேக்க மாட்டாங்க, பேசாம அவுட் ஆப் சிலபஸ்சுன்னு சொல்லீடலாமா” என்று யோசித்தவளை,
“மொக்கையா யோசிக்காம, உண்மையை மட்டும் சொல்லு” என்றான் நந்தன்.
பின்னே வெளி உலக அனுபவமுமாக நேத்ராவின் அண்ணனுமாக இரண்டிலும் அவனுக்கு அளவு கடந்த அனுபவம் உண்டு, ரேணுகாவையும் ஈஸ்வரமூர்த்தியையும் ஏமாற்றினாலும் நந்தனை ஏமாற்றுவது கடினமே…
“அண்ணா அது… உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை அண்ணா, உண்மையிலேயே முன்னாடி நான் சொன்னது தான் ரீசன்” என்றவளை மேலும் முறைத்தவன்,
“சரி விடு நீ ஓத்து வார மாட்ட, நானே சொல்றேன். அந்த காண்டீபன் உன்கிட்ட ரொம்ப தப்பா நடந்துக்கிட்டானா?” என்றான்.
நந்தன் உண்மையை சொன்னதில் பேயறைந்தது போல் முகத்தை வைத்தவளின் கண்களில் கண்ணீர்க் கோடுகள்… அதை வேகமாக தன் அண்ணனிடம் இருந்து மறைத்தவள்,
“அண்ணா… இந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்” என்று கண்ணீர் மல்க நின்றவளை,
“ஹே குட்டி பிசாசு எதுக்கு அழுகுற, அதான் அந்த காண்டாமிருகத்துக்கு நல்லா அடி குடுத்துட்டு தானே வந்த விடு, நீ எதுவும் பண்ணாம வந்திருந்தா தான் எனக்கு வேலை” என்றவனை,
“ஆமா உனக்கு எப்படி தெரியும், இந்த விஷயம் எனக்கும் வனிதாவுக்கும் மட்டும் தான் தெரியும், இப்போ உனக்கு எப்படி?” என்று வாயில் ஒரு விரல் வைத்து குழம்பினாள்.
“ஹேய் லூசு எவரிதிங் ஐ நோ” என்றான் சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி.
“அதான் எப்படி?” என்ற நேத்ரா புருவ முடிச்சுடன் தோன்ற,
அவள் குழப்பத்திற்கு விளக்கம் கொடுக்காதவன் “இங்க பாரு நேத்ரா, நான் உன் கூட பிரெண்டு மாதிரி தானே பழகுறேன், இந்த விஷயத்தை ஏன் என் கிட்ட முதல்லயே சொல்லலை ம்ம்ம்?” என்றான் வருத்தத்துடன்,
அவன் வருத்தத்தை புரிந்துகொண்டவள் “இல்லண்ணா அந்த காண்டாமிருகம் இன்னைக்கு தான் அப்படி நடந்துக்கிட்டான்” என்றாள்.
“சரி விடு இனிமே இது மாதிரி பிரச்சனைன்னா அண்ணா கிட்ட சொல்லு” என்றவரிடம் சரி என்றுவிட்டு அறையை விட்டு வெளியேற போனவள் நின்று,
“அண்ணா இந்த விஷயம் அம்மா, அப்பாவுக்கு தெரிய வேண்டாம், முக்கியமா அப்பாவுக்கு அப்புறம் அப்பா என்னை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க, என்னால வீட்ல இருக்க முடியாதுண்ணா” என்றவளிடம்,
“ஏன்…?” என்றான் நந்தன்.
“அண்ணா ப்ளீஸ் ணா, வீட்ல இருந்தா ஏதேதோ ஞாபகம் எல்லாம் வரும், எனக்கு கிறுக்கு பிடிச்சிறும், அப்புறம் அப்பாவும் கல்யாணம் பண்ணிக்க சொல்லுவாங்க, ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சியவளை,
“ம்ம் சரி, ஆனா ஒரு கண்டிஷன்” என்றவனை புரியாது பார்த்த நேத்ராவிடம்,
“என்னை இப்போ கூப்பிட்ட மாதிரி எப்பவும் அண்ணான்னு கூப்பிடணும், சரியா?” என்றான் எல்லா அண்ணண்களுக்கும் இருக்கும் ஏக்கத்தைப் போல்…
ஒரு முறைப்பு முறைத்தவள் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள்.
முறைத்துக்கொண்டு தன் அறையிலிருந்து வெளியேறும் தன் தங்கையை உணர்ச்சி பொங்க பார்த்த நந்தன் ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு, அவன் வேலையை கவனித்தான்.
அவள் அறைக்கு வந்தவளுக்கு வனிதாவிடமிருந்து வந்த இரு அழைப்புகள் தவறியிருக்க, வனிதாவுக்கு அழைத்தாள்.
“கால் பண்ணியிருந்தியா வனிதா” என்ற நேத்ராவிற்கு,
“ம்ம் ஆமா டி, நீ இன்னைக்கு நைட்டே உன்னோட சிவி ய ரெடி பண்ணி, நான் ஒர்க் பண்ற இடத்துக்கு அப்ளை பண்ணீடு,
நான் உனக்கு லிங்க் அனுப்புறேன், அப்புறம் என்னோட பேரை ரெகமெண்ட்ல போடு, நான் உனக்கு ஒரு ஐடி அனுப்புறேன், அது நீ ரெகமெண்டேஷன் பில் பண்ணும் போது கேப்பாங்க, சரியா,
எதுவும் டவுட்டுன்னா எனக்கு நைட் எப்போனாலும் கால் பண்ணு” என்றாள் அந்த உண்மையான தோழி வனிதா.
“சரி வனிதா, நான் பண்ணீடுறேன்” என்றவள் அன்று இரவே அப்ளை செய்திருந்தாள்.