அந்த டிசம்பர் மாதக் குளிரில் வெள்ளை வண்ணப் பனிப் பாறைகள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்க, கொட்டும் பனியில் இரு ஜெர்கின்கள் அணிந்தாலும், உடலை குளிர் தாக்கும் -40 டிகிரி குளிரில், கனடாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர் நம் நளனும் வினோத்தும்.
அவர்கள் குழுவில் உள்ள வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாண்டு முடித்தவர்கள் அங்கிருந்த படிகளில் அமர்ந்து இளைப்பாறினர்.
தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்த நளன், மீதம் இருந்த நீரை அவன் முகத்தில் ஊற்றினான். குளிரில் சிவந்திருந்த அவன் முகம் நீரின் தாக்கத்தால் மேலும் சிவக்க,
“ஹே மேன் நளா இப்போ எம் எஸ் முடிச்சாச்சு, அப்புறம் உன்னோட அடுத்த பிளான் என்ன?” என்று ஆங்கிலத்தில் வினவினான் அவன் நண்பர்களுள் ஒருவனான ஹென்றி.
இந்தியா போகணும், தென் அப்பாவோட உழைப்பு இல்லாம நானா ஏதாவது தொழில் செய்யணும். அதுவரைக்கும் சென்னையில ஏதாவது ஒரு கம்பெனில வேலை செய்யணும், என்னடா வினோ?” என்றவனிடம், ம்ம் என்றான் வினோத்.
“கண்டிப்பா எங்க வீட்லயே வச்சுக்கலாம், என்ன டா வினோ” என்ற நளனுக்கு தன் இரு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினான் வினோத்.
பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த நளனும் வினோத்தும் தங்கள் பொறியியல் மற்றும் மேற்படிப்பை வெளிநாட்டில் தொடர்ந்தனர். இப்போது படிப்பு முடிந்து அவர்கள் தாயகம் செல்லத் தயாராக உள்ளனர் இருவரும்.
ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் கழித்திருந்தாலும் நம் கலாச்சாரத்தை எப்போதும் மீறாதவர்கள், பெண்களை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்பவர்கள் அதற்க்கு மேல் சென்றதில்லை இருவரும், குடி, சிகிரெட் என்றாலும் அதுவும் அளவோடு தான்.
சென்னை வந்த இருவருக்கும் எந்தத் தடையுமின்றி பெரிய ஐ டி கம்பெனியில் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
“அம்மா என்னம்மா நீங்களும் அப்பா கூட சேந்து பேசீட்டு இருக்கீங்க, சொல்லுங்கம்மா அப்பா கிட்ட…” என்ற நளனை பார்த்து சிரித்த நந்தினியை “போங்க மா” என்று சிறுபிள்ளை போல் முகத்தைத் தூக்கி வைத்தவன்,
“அப்பா நான் எப்படி ப்பா போக முடியும், எனக்கு நாளைக்கு ஒர்க் இருக்கு ப்பா” என்றான் தன் தந்தையிடம், அதே சிறு குழந்தை தனத்துடன் …
“என்ன பா நளா, அப்பாவால முடியலைன்னு தானே கேக்குறேன், அப்பா நாளைக்கு கண்டிப்பா இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணனும், இல்லன்னா ஒன்னு செய்யலாம், நீ எனக்காக மீட்டிங் அட்டென்ட் பண்ணு, நான் போறேன்” என்று பிளானை திருப்பிப் போட்டவரை,
“ரொம்ப தேங்க்ஸ் நளா, நான் கால் பண்ணி சொல்லீடுறேன் எனக்கு பதிலா என்னோட பையன் வருவான்னு” என்று முகம்மலர குதூகலித்தார் கார்த்திகேயன்.
“ம்ம் சரி சொல்லீடுங்க நான் எனக்கு பெர்மிசன் சொல்லீடுறேன்” என்ற நளன் சலிப்பாக அவன் அறைக்கு மாடி ஏறினான்.
தந்தை மற்றும் மகனின் சம்பாஷணைகளை கவனித்துக் கொண்டிருந்த நந்தினிக்கு பெருத்த மகிழ்ச்சி.
கருப்பு நிற முழுக்கை சட்டையும் கிரீம் வண்ண பேண்ட்டும் அணிந்து, தலை முடி அலைஅலையாக காற்றில் மிதக்க கையில் வாட்ச் காட்டிக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து இறங்கிய மகனின் அழகை கார்த்திகேயனும் நந்தினியும் கீழே சோபாவில் அமர்ந்துகொண்டு ரசித்திருந்தனர்.
அழகிய புன்னகையை உதட்டில் தவளவிட்டு தன் தாய் தந்தை அருகே வந்தவன், இருவரின் பார்வை கண்டு “என்னாச்சு ஏன் ரெண்டு பேரும் புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க” என்றான்.
“ஒன்னும் இல்ல நளா கோட்டு போடலையா” என்ற தந்தைக்கு
“அப்பா கோட்டெல்லாம் போடா மாட்டேன், இப்படி தான் போவேன், இல்லன்னா சொல்லுங்க நான் போகலை” என்று முறுக்கிக் கொண்டவனை,
“சரி சரி நீ இப்படியே போ, நாங்க எதுவும் சொல்லலை” என்று ஜகா வாங்கினார் கார்த்திகேயன்,
மகனை பூரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியிடம் “அம்மா நான் அப்படியே ஆபீஸ் போயிடுவேன், எனக்காக சமைக்காதீங்க” என்றான்.
மகனுக்கு நெட்டிமுறித்த நந்தினி. “சரி நளா நீ பத்திரமா போயிட்டு வா, ஆமா எங்க வினோத்தை காணோம்” என்றார்.
“அவனுக்கு இன்னைக்கு கிளைண்ட்ஸ் ஓட ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு மா அதான் சார் ரொம்ப பிசி” என்றான் நளன்.
சாவகாசமாக அமர்ந்து வாய் பார்த்துக் கொண்டிருந்த கார்திகேயனிடம் “சரி… உங்களுக்கு எதோ வேலைன்னு தானே என்னைய போக சொன்னீங்க, இப்போ நீங்க கிளம்பாம இங்க உக்காந்திருக்கீங்க” என்ற நளனின் கேள்விக்கு,
“இதோ கிளம்பீட்டேன்” என்று அவர் அறைக்குள் புகுந்துகொண்டார் கார்த்திகேயன்.
கருப்பு நிற பென்ஸை லாவகமாக சாலையின் ஒரு திருப்பத்தில் திருப்பிய நளன் அங்கிருந்த சிறு கூட்டத்தைக் கண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.
காரிலிருந்து இறங்காமல் காரின் வேகத்தைக் குறைத்த நளனிடம் ஒரு பெண் வேகமாக ஓடி வந்தாள்.
‘பியூட்டீஸ் பியூட்டி பார்லர்’, என்ற பெயர்ப் பலகையைத் தங்கிய ஒரு அழகு நிலையத்தினுள், “அக்கா முடிஞ்சிருச்சா? டைம் ஆச்சு க்கா, காலையில ஆறு மணிக்கு வந்தது, இப்போ மணி ஒன்பது ஆக போகுது, சாப்பிட கூட இல்ல தெரியுமா” என்ற நேத்ராவிடம்,
கைகளில் கிரீமை பூசிக்கொண்டு நேத்ராவின் முகத்தில் அதை தேய்க்க வந்த அந்த அழகுநிலையப் பெண் “நீங்க அந்த போன கீழ வச்சுட்டு கொஞ்சம் எனக்கு கோஆப்பரேட் பண்ணா தானே என்னால முடிக்க முடியும்” என்றார் நேத்ராவிடம் மாட்டிக் கொண்ட அந்த அழகு நிலையப்பெண்,
“ஓஹ் சாரி சாரி”, என்று போனை கீழே வைப்பவள், டிக் என்ற சத்தம் கேட்டவுடன் “ஒரு நிமிஷம்” என்று கண்களை சுருக்கி அனுமதி கேட்பவள் மீண்டும் போனுக்குள் குனிந்து கொள்வாள்.
இதை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வனிதா “ஏய் அந்த போன குடு மொதல்ல, லேட் ஆயிட்டு இருக்கு” என்று போனை பிடுங்கினாள்,
“ஹே ஹே ப்ளீஸ் டி, அனிதா இன்ஸ்டால போஸ்ட் போட்ருக்கா அதை மட்டும் பாத்துக்கிறேன் டி, அவளுக்கு லைக் போடலன்னா அப்புறம் எனக்கும் போடமாட்டா” என்ற நேத்ராவுக்கு கொட்டு வைத்த வனிதா,
“அறிவிருக்கா உனக்கு, பத்து மணிக்கு கடைய தொறக்குறவங்க இன்னைக்கு நமக்காக ஆறு மணியில இருந்து இங்க இருக்காங்க, ஒழுங்கா உக்காரு இல்லன்னா பாதியிலேயே பத்திவிட்ருவாங்க,
அப்புறம் உனக்கு நான் தான் மேக் அப் போட வேண்டி வரும், அப்புறம் உன்னோட போட்டோவை இன்ஸ்டால அனிதா மட்டுமில்லை நம்ம சோடாபுட்டி அரவிந்த் கூட லைக் போட மாட்டான் ” என்றாள் வனிதா.
நேத்ரா மற்றும் வனிதா படித்துக் கொண்டிருந்த கல்லூரியின் விழாவில் வரவேற்பு நடனம் ஆடுவதற்க்காக நேத்ரா இங்கே பரதநாட்டிய உடையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.
நேத்ராவின் தாய் ரேணுகா மற்றும் தந்தை ஈஸ்வரமூர்த்தி, அண்ணன் நந்தகுமரன் அனைவரும் தூரத்து உறவில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்க, விழாவில் வரவேற்பு நடனம் ஆடவிருப்பதால் நேத்ரா உடன் செல்லவில்லை.
கல்லூரியிலேயே மேக்அப்புக்கு ஆட்கள் இருக்க, “ஆ எம்மகளுக்கு தனியா பியூட்டி பார்லர்ல தான் மேக் அப் பண்ணனும்” என்ற ரேணுகாவினால் தான் இப்போது இருவரும் இங்கே அமர்ந்திருப்பது.
“எல்லாம் உங்க அம்மாவை சொல்லணும், நேத்ரா நீ ஒழுங்கா கொஞ்ச நேரம் உக்காரலன்னா நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்” என்று மென்மேலும் பயமுறுத்திய வனிதாவிடம்,
“இல்ல இல்ல, அக்கா வாங்க சீக்கிரம்” என்றாள் நேத்ரா அங்கே கடுப்புடன் நின்றிருந்த அந்த அப்பாவி அழகு நிலையப் பெண்ணிடம்.
கல்லூரிக்கும் இந்த பியூட்டி பார்லருக்கும் ஐந்து நிமிடம் தான் என்பதால் இருவரும் வனிதாவின் இருசக்கர வாகனத்தில் வந்திருந்தனர்.
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,