முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க,
சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன், விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள், குளிர் காற்றின் தாக்கத்தால் கைகளை மடக்கி மார்பின் குறுக்கே கட்டியவளை, பின்னிருந்து அவன் அணிந்திருந்த ஜெர்க்கினுள் சேர்த்து அணைத்திருந்தான் ஒருவன்.
ஆறடி உயரமும், காற்றில் ஆடும் சிகையும், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பும் அவன் அவளை அணைத்ததில் அவனுடன் ஒன்றிய அவளது முதுகுப்புறமும், அவன் அளவாக திருத்தப்பட்ட மீசை அவள் கழுத்தில் குறுகுறுப்பூட்ட, குளிர் காற்றில் சில்லிட்டிருந்த அவள் மேனி அவனின் செயலால் சூடேறியது.
ம்ம்ம் என்று முனகியவள் முன்னே திரும்பி அவன் அகன்ற மார்பில் தன் மலர் கைகளால் குத்தினாள். பின் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முயன்றாள்…
“ஏய் எருமை மாடு எந்திரி, இன்னும் எவ்வளவு நேரம் தான் உன்னைய எழுப்புறது கொரங்கு, எனக்குன்னு தங்கச்சியா வந்து பொறந்திருக்கு பாரு குட்டி பிசாசு”
“அம்மா அவ எந்திரிக்க மாட்டேங்கிறா… எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு கேப் வந்துரும் நான் குளிக்க போறேன், நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு, என்னமோ பண்ணுங்க” என்ற நந்தன் என்ற நந்தகுமரன் குளிக்கச் சென்றான்.
நந்தகுமாரன் எழுப்பியவுடன் தான் கண்ட கனவிலிருந்து மீண்டவள் “ச்ச கனவா… கனவை கூட ஒழுங்கா முடிக்க விடமாட்டான் நெட்டை குரங்கு, போடா… எந்திரிக்க முடியாது” என்று மனதினுள் பேசியவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
நந்தகுமரன் குளிக்கச் சென்றவுடன், தன் மகளுக்கு விருப்பமான பூரியும் பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவையும் சமையல் அறையில் காலை உணவாக சமைத்துக் கொண்டிருந்த ரேணுகா,
“ஆபீசுல டீம் மேனேஜரோட மீட்டிங்ன்னு சொன்னாளே எழுப்பலன்னாலும் திட்டுவா…” என்றவர்
பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவில் இறுதியாக கொத்தமல்லியைத் தூவியவர், பிள்ளைங்க குளிச்சுட்டு வந்ததும் பூரி போட்டுக்கலாம் என்றுவிட்டு தன் மகளின் அறைக்குள் நுழைந்தார்.
போர்வைக்குள் கண்களை மூடி கலைந்த கனவை மீண்டும் காண முயற்சி செய்து கொண்டிருந்தவள், படாரென்று போர்வையை விளக்கி வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
தன் இரு கைகளையும் தலையில் வைத்து “ஐயோ ஆமாம்மா, இதை மொதல்லயே சொல்றதுக்கு என்ன?
அந்த டீம் மேனேஜர் காண்டாமிருகம் வேற ஹோம் ஒர்க் செய்யாத ஸ்கூல் ஸ்டூடெண்ட் மாதிரி வெளிய நிக்க வைச்சு பனிஷ்மென்ட் குடுப்பாரு” என்றவள்
வேகமாக கைக்கு கிடைத்த ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு ஓடினாள். (காண்டீபனுக்கு அவள் வைத்திருக்கும் பெயர் காண்டாமிருகம்)
அங்கே நந்தகுமரன் கழுத்தில் டவலுடனும் வாயில் பிரஷுடனும் குளியலறை முன்பு நின்று பல்துலக்கிக் கொண்டிருந்தான்.
“ஐயோ இவனும் குளிக்க நிக்கிறானே, இப்போ என்ன செய்யுறது… என்று யோசித்தவள் ஆஆ… இவனுக்கு இது தான் சரி” என்றவள், வேகமாக அவன் அருகில் சென்றாள்.
“ஹேய் நந்து” என்றவள் அவன் திரும்பி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் அவன் பல் துலக்கும் வேலையை தொடரவும்,
“திமிர பாரு, இரு நெட்டை குரங்கு உன்னை… என்று கருவியவள் ஆமா உங்க ஹெட் பேரு என்ன, என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் பின் ஆ… சுலோச்சனா தானே?” என்றாள்.
அதற்க்கு புருவத்தை சுருக்கி “ஆமா இப்போ அதுக்கு என்ன?” என்று சலித்துக் கொண்டவனிடம்,
“இல்ல நான் பாக்கும் போது உன்னோட போன்ல சுலோச்சனா அப்படிங்கிற பேர்ல 5 மிஸ்ஸுடு கால்ஸ் இருந்தது அதான் கேட்டேன்” என்றாள்.
“என்ன மிஸ்ஸுடு காலா” என்றவன் வேகமாக அவன் அறைக்குள் ஓடினான். பின்னே 1 மிஸ்ஸுடு காலுக்கே தலைகீழாக தண்ணி குடிக்க வைப்பவள் சுலோச்சனா, இப்போது 5 என்னும் போது நம் நந்தகுமாரைக் கேட்கவா வேண்டும்.
“ஹப்பாடா போய்ட்டான், ஜாலி…” என்றவள் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
நேத்ரா குளித்து விட்டு வந்து நந்தகுமாரிடம் திட்டு வாங்குவதற்குள் அவள் குடும்ப உறுப்பினர்கள் பற்றி சற்று அலசுவோம்…
நேத்ரா, வயது இருபத்தைந்து, பொறியியல் படித்துவிட்டு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்பவள்.
அண்ணண் நந்தகுமரன் அதே பொறியியலில் மேற்படிப்பு படித்துவிட்டு கார்பொரேட் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவன்.
தந்தை ஈஸ்வரமூர்த்தி அரசுப் பணியில் இருப்பவர். இன்னும் ஒரு வருடத்தில் பணி நிறைவு பெறப் போகும் நிலையில் உள்ளவர்.
தாய் ரேணுகா, ஈஸ்வரமூர்த்தியைத் திருமணம் செய்யும் முன்பிருந்தே ஐ.டி நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருந்தவர் நந்தனை வயிற்றில் தாங்கியதிலிருந்து வேலையை விட்டு விட்டு பிள்ளைகளை பொறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார், இல்லத்தரசியாக.
நடுத்தரக் குடும்பம், ஈஸ்வரமூர்த்தியின் சம்பளத்தில் நந்தகுமாரும் நேத்ராவும் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்த்தார்கள்.
போதாத பணத்திற்கு நந்தகுமாருக்கு லோன் வாங்க சம்மதித்த ஈஸ்வரமூர்த்தி நேத்ராவிற்கு லோன் வாங்க எளிதாக சம்மதிக்கவில்லை.
“பையன் அவன் வேலைக்கு போயி பணத்தை கட்டீருவான், பொம்பள புள்ள….” என்று யோசித்தவரை,
“ஏன்? எம்பொண்ணும் கண்டிப்பா வேலைக்கு போவா, அவ வேலைக்கு போயி தான் அவளோட கடனை அடைப்பா, என்னைய மாதிரி வீட்லேயே இருக்க வைக்கலாம்னு பாக்குறீங்களா?” என்று சண்டையிட்டு சம்மதம் வாங்கினார் ரேணுகா.
அதில் அண்ணனும் தங்கையும் படித்து கேம்பஸ்சில் தேர்வாகி நல்ல வேலையில் சேர்ந்தவர்கள், அவர்கள் வங்கி கடனை அவர்களே அடைத்துவிட்டு குடும்ப வருமான நிலையையும் சற்றே உயர்த்தினர்.
நந்தகுமரன் பொறுப்புள்ள இளைஞன், நேத்ராவுக்குத் தேவையான எந்த ஒரு முடிவையும் எடுப்பவர் அவள் தாய் ரேணுகா.
உதாரணத்திற்கு ஜவுளிக்கடையில் எந்த உடை தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பதும், இன்று அவள் தேர்ந்தெடுத்திருக்கும் பொறியியல் துறை வரை ரேணுகாவின் முடிவு தான். தாய் என்ன கூறினாலும் யோசிக்காமல் அதை அப்படியே செய்பவள் நேத்ரா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.