… 10. சிந்தியாவின் சிந்தனை …
நறுமுகை பதிப்பகத்தில் இனியன் தலையங்க ஆசிரியராக தனது பணியை தொடர்ந்துகொண்டிருந்தான். அவ்வேளையில் “அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு சார்பாக தஞ்சை நகரின் கல்வி செயல் அலுவலர் இனியனின் பதிப்பகத்திற்கு நாளிதழ் விளம்பரத்திற்காக வந்திருந்தார்.
பத்தாம் வகுப்பு முடிவின் சில நாட்களுக்குப் பிறகு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான சேர்க்கை நடந்துக் கொண்டிருந்தது. யாழினி அவள் படித்த பள்ளியிலேயே “வரலாறு” பாடப்பிரிவை எடுத்திருந்தாள். முதல் நாள் பதினொன்றாம் வகுப்புச் சென்றிருந்தவளுக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
ஆம், அவள் வகுப்பறைக்கு வெளியே இருந்த வேம்பு மரத்தின் நிழலில் சிந்தியா அமர்ந்திருந்தாள். யாழினியுடன் படிப்பை தொடரவேண்டும் என்பதற்காக தனது அம்மா, மாமாவிடம் அனுமதி பெற்று ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு பள்ளி விடுதியில் தங்கி படிக்க வந்திருப்பதாக யாழினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தாள். சிந்தியாவோ கணினி அறிவியல் பாடப்பிரிவை எடுத்திருந்தாள்.
பள்ளியின் இடைவேளை 10 நிமிடத்திலும், மதிய உணவு இடைவேளை என இவர்களின் நட்பு சந்திப்புகள் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. பதினொன்றாம் வகுப்பின் காலாண்டுத்தேர்வு முடிவு வெளிவந்த நாள் தான் இவர்களின் நட்பு நாட்களுக்கு முடிவு ஏற்படக்கூடிய தொடக்க நாளாக இருக்கக்கூடும் என்பதை யாழினி கனவிலும் சிந்தித்துப் பார்த்ததில்லை.
ஆம், 1057/1200 என்ற மதிப்பெண்ணைப் பெற்றிருந்தாள் யாழினி. மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் கணிதம் உட்பட இயற்பியல் பாடத்தில் சிந்தியா தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்ணைக் கூட பெறாமல் இருக்கிறாள் என்பது யாழினிக்கு மிகப்பெரும் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் உண்டாக்கியது.
மதிய உணவு இடைவேளையில் பள்ளி மைதானத்தின் வேம்பு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர் இருதோழிகளும். இரு பாடத்தில் ஏற்பட்ட தோல்விப் பற்றி சிந்தியாவிடம் யாழினி கேட்டுக்கொண்டிருந்த போது, “உனக்கென்ன நீ எடுத்திருப்பது வரலாறு பாடப்பிரிவு தானே! கதை எழுதி அனைத்து 6 பாடங்களிலும் மதிப்பெண் பெற்றுவிட்டு, மிகவும் கடினமான பாடப்பிரிவில் நான் மதிப்பெண் பெறவில்லை என்பதை ஏளனமாக பேசுவதை விடு” என்று கூறிவிட்டு யாழினி சிந்தியாவிற்காக கொண்டுவந்திருந்த மதிய உணவை அப்படியே வைத்துவிட்டு தனது வகுப்பறை நோக்கி சென்றுக்கொண்டிருந்தாள் சிந்தியா. யாழினி ஒரு வித அச்ச உணர்வுடன் தன் உணவையும் சாப்பிடாமல் எழுந்துச் சென்றிருந்தாள்.
உண்மையில் கணினி அறிவியல் பாடப்பிரிவு மிகவும் கடினம்தான். அதனால் தான் சிந்தியாவால் மதிப்பெண் பெற முடியவில்லை என்று தன் மனதுக்குள் தனக்குத் தானே ஆறுதல் அளித்துக்கொண்டு தன் வகுப்பறையை அடைந்திருந்தாள் யாழினி.
நாட்கள் செல்லச் செல்ல சிந்தியாவின் சிந்தனையோ படிப்பைத் தொடராமல், வேறொரு சிந்தனையாக இருந்தது. இந்த சிந்தனைகளால் யாழினி சிந்தியா இடையில் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அரையாண்டுத் தேர்வும் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது.
சிந்தியாவின் குடும்பமும் அவளின் படிப்பு முடியும் வரையில் தஞ்சாவூரில் யாழினியின் வீடு அமைந்திருக்கும் வீதியில் குடிபெயர்ந்தனர். சிந்தியாவுக்கு விடுதி உணவு ஒத்துக்கொள்ளவில்லை, அதனால் இங்கு வந்துவிட்டோம் என்பதை யாழினியிடம் காரணமாகக் கூறினார் சிந்தியாவின் அம்மா சாந்தா.
ஆனால், யாழினிக்கு இந்த பதில் சிறிது குழப்பத்தை உண்டாக்கியது. ஆம், யாழினிதான் சிந்தியாவிற்கு தினமும் தனது வீட்டிலிருந்து மதியஉணவு எடுத்துச்செல்வாள்: ஆனாலும் சிந்தியா மீதிருந்த அலாதி நம்பிக்கையினால் யாழினி சாந்தா கூறியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒருநாள் சத்யவர்தன் சிந்தியாவை ஒரு பையனுடன் பார்த்ததாக யாழினியிடம் கூறிக்கொண்டிருந்தார். அதுபற்றி யாழினி சிந்தியாவிடம் கேட்டபோது, “நான் பத்தாம் வகுப்பில் உன்னை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். அதனால் என் மீது சிறிது பொறாமையால் உன் அப்பா சொல்கிறார்” என்று சிந்தியா கூறியபோது, தனது அப்பாவின் வார்த்தையை மனதிலிருந்து துடைத்துவிட்டு சிந்தியாவின் கண்களில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
சிந்தியாவின் சிறு வயதிலேயே சாந்தா தனது கணவனை விபத்தில் இழந்துவிட்டார். சாந்தாவின் தம்பி கண்ணன் குடும்பப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு சிந்தியா மற்றும் அவளது தங்கை வித்யாவின் வாழ்க்கையை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
சாந்தாவின் வார்த்தைகளின் தெளிவை உணர்ந்து சிந்தியாவை எச்சரித்து தஞ்சாவூரில் யாழினியுடன் பள்ளிக்கு அனுப்ப சம்மதித்திருந்தார் கண்ணன். ஆம், படிப்பால் மட்டுமே தற்போது அரசு வேலையில் இருக்கும் கண்ணனுக்கும் படிப்பின் அவசியம் நன்கு தெரியும்.
கண்ணனின் கல்லூரி படிப்பு காலங்களில் சாந்தா மற்றும் கண்ணனின் அம்மா, அப்பாவிற்கு ஏற்பட்ட விபத்தால் அவர்கள் இருவரும் இறந்த பின் சாந்தாவின் கணவர் திருமூர்த்தி கண்ணனின் படிப்பை தொடர்வதற்கு முழு ஆதரவு அளித்திருந்தார்.
திருமூர்த்தியும் சாந்தாவும் தனது இரு மகள்கள் சிந்தியா, வித்யா போலவே கண்ணனையும் வளர்த்துவந்தனர். தனது அக்கா சாந்தாவின் மகள் சிந்தியா என்பதையும் தாண்டி சிந்தியா மேல் அக்கறை எடுத்துக்கொள்வதற்கு காரணம் திருமூர்த்தியின் நன்செய்கை தான் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தார். அதனால் தான் திருமூர்த்தியின் இறப்பு நிகழ்ந்து 10 வருடங்கள் ஆகியும் தனக்கென்று திருமணம் வேண்டாம் என்று அக்கா குடும்பத்தின் மேல் அலாதி பிரியத்துடன் வாழ்ந்து வருகிறார் கண்ணன்.
ஏன் தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தோம் என்பதை இதுவரை யாழினிக்கு தெரியாத வண்ணம் சிந்தியாவும் சாந்தாவும் பார்த்துக் கொண்டனர். சிந்தியா அடிக்கடி யாழினியிடம் “நீ நல்ல மதிப்பெண் பெறுவதை வைத்து உன் அம்மாவும், அப்பாவும் புகழ் அடையலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உன் எண்ணம் எது என்பதை அவர்கள் இதுவரை கேட்பதுகூட இல்லை. என்னைப் பற்றியும் தவறாக உன்னிடம் சொல்லி வருகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
பதினொன்றாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வும் முடிந்துவிட்டது. யாழினி நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள். சிந்தியாவோ இம்முறை கணிதபாடத்தில் தோல்வி அடைந்திருந்தாள். இதுபற்றி சிந்தியாவிடம் யாழினி கேட்டபோது எவ்வித தயக்கமும் இன்றி “நான் ஒழுங்காக படிக்கவில்லை” என்று மட்டும் பதிலாக கூறினாள். சிந்தியாவின் பதிலானது யாழினிக்கு புதிராக இருந்தது.
வரலாறு பாடம் சம்பந்தமாக குறிப்புகள் எடுக்கவும், தமிழ்நாடு அளவில் நூலகம் சார்பாக “இலக்கியத்தில் சமூகம்” என்னும் தலைப்பில் நடத்தப்பெறும் ஆய்வுக்கட்டுரை வெளியிடுதல் தொடர்பாகவும் பெருவுடையார் கோவிலின் தென்வீதியில் இருந்த மாவட்ட மைய நூலகத்திற்கு யாழினி வந்திருந்தாள்.
நூலகத்திலிருந்து வெளியே வந்தபோது யாழினி கண்ட காட்சி அவளுக்கு அழுகையை வரவழைத்துக்கொண்டிருந்தது…
ஆம், சிந்தியாவை ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்தைப் பார்த்தேன் என்று யாழினியின் அப்பா கூறியது இப்போது யாழினியின் நினைவிற்கு வந்தது. அலாதியான நம்பிக்கை அவநம்பிக்கை ஆனதை யாழினி உணர்ந்தபோது அவளது நட்பின் வலிகள் விழிநீராய் அவளது கையில் இருந்த குறிப்பேட்டை நனைத்துக்கொண்டிருந்தது. அவ்வேளையில் நிலமும் மழையால் நனைந்துக்கொண்டிருந்தது.
(சிந்தியாவின் சிந்தனைகள் எதைப்பற்றியது என்பது யாழினியும் சந்திப்பாள் அடுத்த அத்தியாயத்தில்)
– இசைக்கும்