… 13. யாழினியன்…
சிந்தியாவை எந்தவித தவறான கண்ணோட்டத்திலும் யாழினி சிந்தனை செய்ததில்லை. ஆனால் சிந்தியா செய்தது சரியா, தவறா என்பதையெல்லாம் தாண்டி தன் தந்தையின் வார்த்தையைக் கூட நம்பவில்லை என்ற எண்ணம் யாழினிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்திருந்தது.
தளிர்நடையிட்ட பருவம் முதலான நட்பானது கடந்த ஒரு வருடத்தில் பூத்துக்குலுங்கத் தான் செய்திருந்தது. ஆனால், யாழினிக்கு நட்பின் பூக்கள் நந்தவனமாக வாசனை பரப்பவில்லை என்பதே உண்மை. இத்தனை வருட நட்பினை சிறிது காலங்களில் விட்டு வருவது என்பது யாழினிக்கு முடியாத காரியம் என்றாலும், “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை தனது நட்பின் பயணத்தின் முடிவாக சிறப்பான கல்வி பயணத்தை தொடங்கி நிரூபித்திருந்தாள் யாழினி.
சிறிது காலம் பள்ளியில் யாழினிக்கு சிந்தியாவை நோக்கிய நினைவுகள் இருந்துக்கொண்டே தான் இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பின் முடிவில் சிந்தியா பற்றிய எண்ணமும் இல்லை, சிந்தியாவும் இல்லை. கண்ணன் சிந்தியாவை மறுபடியும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அழைத்துச் சென்றுவிட்டார் என்பதை மட்டும் தனது அம்மா மித்ராவின் மூலம் யாழினி தெரிந்துக் கொண்டிருந்தாள்.
நாட்களும் சென்றன. யாழினியின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிற்கான நாளும் வந்தது. ஆம், யாழினி 1185/1200 பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருந்தாள்.
இனியன் இதை எதிர்பார்த்தது போல் தனது பிரசுரம் சார்பில் வெளிவரும் மாத இதழில் “மதிப்பெண்ணும் மதிப்பான எண்ணமும்” எனும் தலைப்பில் யாழினியின் வெற்றி நினைவுகள் அச்சில் நிலைத்துக் கொண்டிருந்தன. வெற்றிக் கொண்டாட்டங்களும் அரங்கேறின.
தனது விருப்பப்படி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சிற்பக்கலை தொடர்பான பட்டப்படிப்பில் தனது வாழ்விற்கான புது அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தாள் யாழினி. அதில் முனைவர் பட்டம் பெறுவதே யாழினியின் கனவாக இருந்தது.
தனது முதலாம் ஆண்டு கல்லூரி பயணத்தில், செப்பேடுகள் குறித்த ஆய்வுக்காக சென்னை சென்றிருந்தாள் யாழினி. அப்போது, “இந்திய அளவில் சிறந்த பதிப்பகம்” என்ற போட்டிக்கான கருத்தரங்கம் “சென்னை அருங்காட்சியகத்தில்” நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஆம், யாழினி – இனியன் சந்திப்பும் அரங்கேறியதும் அந்த அருங்காட்சியத்தில் தான். அருங்காட்சியகம் அவர்கள் இருவரின் அகத்தின் காட்சியாக இருக்கும் என்று இருவரும் நினைத்திருக்கவில்லை. இனியனை அங்கே கண்ட நொடியில், என்றோ ஒரு நாள் மாடியில் நின்று மழையின் இடையில் தன்னை அறியாமல் அனிச்சையாக தன்னுள் பதிந்த முகம் என்பதை நினைவு கூர்ந்தாள் யாழினி. இனிய புன்னகையை இசைபடாஆ உதிர்த்தால் இனியன் முன்!….
அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் செப்பேடுகள் குறித்த புத்தகங்களைப் புரட்டி குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தாள் யாழினி. இனியனின் விழிகள் இவள் எடுக்கும் குறிப்புகளுக்கு இடையில் வேள்வியாக வந்துக்கொண்டிருந்தது.
அவள் புத்தகங்களை புரட்டுவது போல் இரண்டாம் தளத்தில் கருத்தரங்கத்தில் தன் கருத்துக்களை பதிவிட வந்தவனின் மனதானது அவளது புன்னகையால் புரண்டுக்கொண்டிருந்தது.
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் யாழினியின் காத்திருப்பானது இனியனுக்கு நயன புன்னகையை வரவழைத்துக்கொண்டிருந்தது. தன் கைகளில் இருந்த குறிப்பேட்டின் மேல் வரா இசையை தட்டிக்கொண்டிருந்தாள்; அவனுள் ஒலிக்கத்தொடங்கியது காதல் இசை…!
“தமிழ் யாழினி..” என்ற போது யாழினியின் விழியும் புருவமும் அடுத்தடுத்து இனியனை கேள்வியால் பாவனை செய்துக்கொண்டிருந்தன.
“ஒரு காதல் காபி” என்ற இனியனின் மொழியில் காதல் மட்டும் அனிச்சையாக மௌனமாகிவிட்டது.
“என்னது….” என்ற யாழினியின் மெய் கோபமற்ற மொழிக்கு பதிலாக அமைந்தது அருகில் இருந்த நறுமணம் கமழும் கண்ணாடியிட்ட குளம்பிக் கடை.
“நறுமுகை பதிப்பகத்தில்ல்ல்… உங்களைஐ” என்று யாழினி முடிப்பதற்குள்….
“நான் இனியன்… நீங்கள் தமிழ் யாழினி.. தஞ்சையில் சிற்பக்கலை முதலாம் ஆண்டு மாணவி… உங்களைப் பற்றி அனைத்தும் தெரியும்!”
“அனைத்துமா?…”
“ஆம், நீங்கள் வரலாறு பாடம் எடுத்து இயற்பியல் படித்தது வரை…ஐ ”
என்று இனியன் முடிப்பதற்குள் யாழினியின் விழிகள் ஆச்சரியத்துடன் இருந்தது. அவள் கைகளோ சிறிது இனிப்பை குளம்பியில் இட்டு கலக்கிக் கொண்டிருந்தது. அவள் மனதும் குழம்பித்தான் போயிருந்தது.
அவள் கண்களின் குளமும் இனியனுக்கு தென்பட்டுக்கொண்டிருந்தது..
இனிப்பில்லாமல் குளம்பியை சுவைத்துக் கொண்டிருந்த இனியனுக்கு இந்த நிமிடம் இனிப்பான நிமிடமாகவே உறைந்திருந்தது….
– இசைக்கும்.