ஜெயதேவ், “பொழுதே விடிய போகுது! காலைல திறப்புவிழாவை வச்சுக்கிட்டு, எந்த கூமுட்டை நம்ம இடத்துலயே நம்மளை கடத்தி வச்சுருப்பான்?” என்றார் சந்தேகமாய்.
“நீதானேடா சொன்ன இது உன் பொண்டாட்டி வேலையா இருக்கும்ன்னு? அந்த நம்பிக்கைல தானே நானே தைரியமா இருக்கேன்?” என ராஜகோபால் அதிர்ந்து போய் கேட்க,
“அப்டிதான் நானும் நினைச்சே….ன்!” என இழுத்தார் ஜெயதேவ்.
“என்னடா இழுக்குற?”
“இல்லடா, ஒருவேளை இதை தெய்வா செஞ்சுருந்தா, இந்நேரத்துக்கு நமக்கு சூடா ஒரு டீ’யோ, இல்ல காஃபி’யோ வந்துருக்கணுமே? நான் பசி தாங்க மாட்டேன்னு தெரியும்டா அவளுக்கு! அதான் சந்தேகமா இருக்கு” என்றிட,
“அடப்போடாஆஆ!!! நீயும் உன் சந்தேகமும்! உன்னை நம்பி நானும் உட்காந்துருக்கேன் பாரு” என பதறிய ராஜகோபால், அங்கிருந்து செல்வதற்காக மார்க்கம் கிட்டுமா என சீரியஸாய் சிந்திக்க ஆரம்பித்தார்.
“நீங்க சொல்றதை வச்சு பார்த்தா, இங்கிருந்து ரொம்ப தூரம் போயிருக்க வாய்ப்பில்லை! அதுமட்டுமில்லாம, நீங்க சந்தேகப்படுற அந்த பிரகாஷ் இன்னும் சென்னை’ல இருக்குறதா தான் ‘ஜி.பி.எஸ்’ காட்டுது! அதனால, பதறாதீங்க! கண்டிப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சுடலாம்” என்றான் இனியன் திடமாக.
லட்சுமி கூட திடமாய் இருக்க, தெய்வாவின் ஆக்ஷன் தான் ஓவர்ஆக்ஷனாய் இருந்தது.
“கண்டுபிடிச்சு குடுங்க தம்பி, உங்களுக்கு புண்ணியமா போவும்! எனக்கு மொத்தம் மூணு புள்ளைங்க! ஒன்னு கூட முழுசா செட்டில் ஆகல, இன்னும் ரெண்டு புள்ளைக்கு கல்யாணமே செஞ்சு வைக்கல, சொத்துக்கூட பிரிக்கல!” என அடுக்கிக்கொண்டே போக, “அண்ணீ…” என அவர் கரத்தை கிள்ளினார் லட்சுமி.
தெய்வா, “சும்மா இரு லட்சுமி, நம்ம கஷ்டத்தை எல்லாம் சொன்னா தானே தம்பிக்கு புரியும்!” என மூக்கை உறிஞ்ச, மெல்லிய சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன்.
லட்சுமி, “நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க தம்பி, அண்ணி இப்படி தான் எதார்த்தமா பேசிட்டு இருப்பாங்க” என்று சமாளிக்க,
“எனக்கு எங்க அம்மாவை பார்க்குற மாறியே இருக்கு” என இதழ் விரிய சிரித்தான் இனியன்.
பின்னே அனைவரும் தங்கியிருந்த இடத்தையும், அதை சுற்றிய இடங்களையும், இறுதியாய் ஒன்றாய் குழுமியிருந்த இடத்தையும் நன்றாய் அலச, அங்கிருந்த ஆட்களையே ஆவண செய்ய, ‘ஒருவரையும் காணவில்லை’ என்ற பதிலே கிட்டியது.
“எங்க தம்பி போயிருப்பாங்க?” கவலையுடன் தெய்வா கேட்டிட, சுற்றிலும் பார்த்துக்கொண்டே நின்ற இனியன் கண்களில் தூரத்தில், தனிப்பொலிவுடன், பலவண்ண விளக்குகளால், அந்த அதிகாலை பொழுதை ரம்மியமாக்கிக்கொண்டிருந்த புத்தம்புது ரெசார்ட் தெரிய,
“அங்க செக் பண்ணீங்களா?” என்றான் கூர்மையாய் பார்த்தபடி.
லட்சுமி, “திறப்புவிழா முடிச்சுட்டு தானே தம்பி அதுக்குள்ள ஆளுங்க போவாங்க? இப்ப யாரு இருப்பாங்க அதுல?” என்று குழப்பமாய் கேட்க, அவரை பார்த்து, அர்த்தமாய் சிரித்தான் இனியன்.
“மதூ….!!! என் பொறுமையை ரொம்ப சோதிக்குற நீ!” சுரேன் பேசிப்பேசி அயர்ந்துப்போய் சொல்ல,
“நீங்களும் தான்” என பதிலுக்கு பதில் பேசினாள் மது.
சலித்துப்போன குரலில் “உன் அண்ணன் எப்படி உன் லவ்வுக்கு ஒத்துக்கிட்டான்!?” சுரேன் கேட்க,
“நீங்க என் லவ்வுக்கு ஓகே சொல்லுங்க, அதுக்கப்பறம் அவன் எப்படி ஓகே சொன்னான்னு நான் சொல்றேன்” என்றாள் அவள்.
“மது உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதா? உனக்கென்ன குறைச்சல்? எதுக்காக என்னை லவ் பண்ற? நான் ஒன்னும் அழகு இல்லை! என்கூட நீ வந்தா, என்னவோ நீ பெரிய தியாகம் பண்ணிட்ட மாறிதான் எல்லாரும் உன்னை பார்ப்பாங்க! எனக்கு அது புடிக்கல! உனக்கேத்த மாறி ஒருத்தனா பார்த்து கல்யாணம் செஞ்சுட்டு போய் சேரு! இதுக்குமேல பேசி என்னை டென்ஷன் பண்ணாத!” என்று விரக்தியுடன் ஆக்ரோஷமாய் அவன் கத்த,
“நீங்க வேணாம் வேணாம்ன்னு சொல்ல சொல்ல தான், நீங்க வேணும் வேணும்ன்னு எனக்கு அழுத்தமா தோணுது” என மது சொன்ன மறுநொடி,
“எதுக்காக? எல்லாம் என்கிட்ட இருக்க பணத்துக்காக தானே? அதுக்கு தானே இத்தனை பிடிவாதம்? இங்கிருந்து போனதும் எல்லாத்தையும் உன் பேருல எழுதி வைக்குறேன்… அப்போவாது என்னை விட்டு போய் தொலைவியா?” அவளை ஏற்றுக்கொள்ள முழுதாய் இடம் தராத மனதுடன் சுரேன் வேண்டுமென்றே அவளை தள்ளி வைக்க எண்ணி, வார்த்தையை விட, அது மதுவின் மனதை குத்தி, கிழித்து, காயப்படுத்தியது.
பேச்சற்ற மௌனத்துடன், பலவித கேள்விகளுடன் அவன் முகத்தை ‘இதானா நீ?’ என்ற தாழ்ந்த பார்வையுடன் ஏறிட்டு நின்றாள் மதுதேவா.
“யார் சொன்னதையோ நம்பி தான் நீ ஆதியை விட்டு போனியா?” மேடம் என்ற அழைப்போ, மரியாதையான பேச்சோ இன்றி பிரியா கோவத்துடன் கேட்க, அவள் அதட்டலில் தலை குனிந்தாள் தன்யா. (Adipex)
“உன்னைதான் கேட்குறேன் தன்யா… சொல்லு!” மீண்டும் அதட்ட,
“அவங்க சொன்னதை நான் நம்பினேனோ, இல்லையோ! ஆனா அது என் மனசுல ஆழமா விழுந்துடுச்சு! ஆதி திரும்ப வந்தப்போ அவரோட என்னால முன்னமாதிரி இயல்பா இருக்க முடியல! ஸ்வேதா சொன்னதை என்னால ஆதிகிட்ட சொல்லவும் முடியல! நான் அதை ஏதோ ஒரு ஓரத்துல நம்புறேங்குறதே என்னை ஆதியை விட்டு தள்ளி நிறுத்துச்சு! ஆதி பேசுறது பழகுறது எல்லாத்துலையும் ஏதோ ஒரு குறை என் கண்ணுல பட ஆரம்பிச்சுது! மொத்ததுல நான் நானாவே இல்ல அப்போ” என்றாள் தன்யா.
பிரியா, “….”
தன்யா, “இது சாதாரண விஷயம் தான்! ஆனா, இதை தாண்டி வர எனக்கு அப்போ மெச்சுரிட்டி பத்தல!” என சொன்னதும், “இப்ப ரொம்ப வந்துடுச்சோ?” என எள்ளலாய் கேட்டாள் பிரியா.
“இப்போ மெச்சுரிட்டி இருக்கு… கூடவே, ஈகோ’வும் இருக்கு” என தன் தரப்பு தவறை வெளிப்படையாய் ஒப்புக்கொண்டாள் தன்யா.
ஆனால், இதையெல்லாம் ஏன் ப்ரியாவிடம் சொல்கிறோம்? என்ற எண்ணம் தோன்றாமலில்லை.
“சோ, எவளோ ஒருத்தி விட்டெறிஞ்ச கல்லுல, உங்க காதல் கூடு சிதறிடுச்சு! அப்படிதானே?” பிரியா கேட்டதும்,
“அது மட்டும் காரணம் இல்ல! ஆதியை பார்த்ததுல இருந்து, கல்யாணம் செஞ்ச வரைக்கும் எல்லாமே என்னோட விருப்பமா மட்டும் தான் இருந்துச்சே தவிர, ஆதி என்னை தேடி வந்த மாதிரி எதுவுமே இல்லை. கொஞ்சம் விலகி இருந்தா, என்னை தேடி வருவாரோன்னு நினைச்சு, ஒரே வீட்டுல இருந்தும் கூட அவரை விட்டு தள்ளி இருக்க ஆரம்பிச்சேன்! ஆனா, அப்பவும் அவர் என்னை நெருங்கி வர முயற்சி பண்ணவே இல்லை!” என்றாள் முகத்தை சுருக்கி.
“லீவ் முடிஞ்சு காலேஜ் போக ஆரம்பிச்ச பிறகும், நான் தான் அவரை ரொம்ப தேடுனேனே தவிர, அவர் என்னை தேடவே இல்லை! எப்பவும் போல பார்க்கிறது, சிரிக்குறது, யாரும் இல்லாதப்போ கொஞ்ச நேரம் பேசுறதுன்னு அவர் அவரோட இயல்புல இருந்தாரு! எனக்கு தான் அவரோட மனைவியா இருந்துட்டு, மறுபடி வெறும் காதலியா மட்டும் இருக்க முடியல! இருக்கவும் வரல” என்றாள் தன்யா.
அவள் சொல்வதை உணர்ந்துக்கொள்ள முயன்றாள் பிரியா.
“பாக்குறது எல்லாமே தப்பாதான் தெரிஞ்சுது எனக்கு! தேவா எந்த பொண்ணுக்கிட்ட பேசுனாலும், ‘எங்க என்னை விட்டு போயடுவாரோ?’ன்னு ஒரு இன்செக்யூர் பீல்! ஒருநாள் என்கிட்ட பேசலைன்னாலும் என்னை கழட்டி விட்டுட்டாறோன்னு மனசு பதற ஆரம்பிச்சுது! காலேஜ்ல என்னால நார்மலா இருக்க முடியல! எப்பவும் இதே திங்கிங்… ஸ்ட்ரெஸ் ஆச்சு! ஒருநாள், எதுவுமே வேண்டாம்ன்னு முடிவு செஞ்சு ஒரேயடியா கிளம்பிட்டேன் அங்கிருந்து!” என்றாள் கண்ணீர் சிந்த.
“சென்னைல வந்து படிப்பை தொடர்ந்தப்போ, என்னோட ஸ்ட்ரெஸ் இன்னும் தான் அதிகமாச்சு! ஆதி நான் இல்லாம சந்தோசமா இருக்காரு, அவருக்கு நான் தேவையில்லைன்னு நானே நினைக்க ஆரம்பிச்சுட்டேன்! அப்போதான் ஆதி என்னைத்தேடி வந்தாரு, ‘ஏன் சொல்லாம போன?’ன்னு கோவமா சண்டை போட்டாரு! எனக்கு சந்தோசமா இருந்துச்சு! ஆனாலும், மனசு முழுக்க குற்றவுணர்ச்சி!
என்னனு சொல்லுவேன் அவர்கிட்ட? ஒருத்தி உங்களை தப்பா சொன்னா, அதை நான் நம்பிட்டேன்! அதுக்கு பிறகு உங்க மேல இருந்த நம்பிக்கைல விரிசல் விழுந்துடுச்சு, அதான் ஓடி வந்துட்டேன்னு சொல்ல முடியுமா? அதுக்கப்பறம் ஆதியோட என்னால எப்படி இயல்பா இருக்க முடியும்? நம்பிக்கை இல்லாம தானே போனன்னு என் தேவா என்னை பார்த்து கேட்டுட்டா?” என்று நிறுத்திய தன்யா,
“அவருக்கு நான் வேண்டாம்ன்னு முடிவு செஞ்சு, ஒருநாள் அவர் என்னை தேடி வந்தப்போ, ‘உங்களால என் கற்பு போச்சு’ன்னு கத்திட்டேன்… அப்போ அவர் முகத்தை கூட என்னால பார்க்க முடியல! அவ்ளோ வேதனை தெரிஞ்சுது அந்த முகத்துல!” என்ற தன்யா, அவன் முகத்தை இப்போது காண்பதை போல வேதனையில் முகம் சுருக்கினாள்.
தன்யா அவ்வாறு சொன்னபோது, அதிர்ந்துப்போய் அப்படியே நின்றுவிட்ட ஆதி, “கற்பு போச்சா?” என வார்த்தைகள் தொண்டையில் சிக்க கேட்டுவிட்டு,
“நீ எதுக்காக இப்படி பேசுறன்னு எனக்கு தெரியல தன்யா! ஆனா, நான் வேண்டாம்ன்னு நீ முடிவு பண்ணிட்டன்னு மட்டும் புரியுது எனக்கு!” என்று வேதனையுடன் சொன்னவன், “உன் மனசுக்குள்ள நான் என்னைக்கு வந்தேனோ, அன்னைக்கே உன்னோட கற்பு போச்சுடி!” என்றான் சீற்றமாய்.
“கற்பு மனசுல தான் இருக்கு, சிதைஞ்சு போகப்போற இந்த உடம்புல இல்லை” என்றவன், திரும்பியும் பார்க்காது அங்கிருந்து சென்றிருந்தான்.
தன்யா, “அன்னைக்கு என்னை திட்டிட்டு போன ஆதி, அதுக்கு பிறகு என்னைத்தேடி வரவே இல்லை! அவர் வரணும்ன்னு நான் எதிர்ப்பார்க்கிறது தப்பு தான், ஆனாலும், அவர் எனக்காக வரணும்ன்னு என் மனசு ஆசைப்படுறதை தடுக்க முடியலையே!?”
பிரியாவுக்கு தன்யாவின் உணர்வுகள் புரிப்பட ஆரம்பித்தது.
“ஆனாலும், என்னைத்தேடி வர மாட்டாரான்னு எதிர்ப்பார்த்துட்டு தான் இருந்தேன்! அப்பவும் அவரைத்தேடி போகணும்ன்னு எனக்கு தோணல! முழுசா நாலு வருஷத்துக்கு பிறகு அவரை நான் பார்த்தப்போ, சந்தோசப்படுறதா, இல்லை உன் காத்திருப்புக்கு நான் தகுதியானவ இல்லைன்னு அழுகுறதான்னு தெரியல! அவரை பார்க்குறப்போ எல்லாம் என் குற்றவுணர்ச்சி அதிகம் தான் ஆச்சு… அவருக்கு நான் ‘வேண்டவே வேண்டாம்’ன்னு முடிவு செஞ்சு தான் அவரை தவிர்க்க ஆரம்பிச்சேன்! ஆனாலும், மனசு அவர் வேணும்ன்னு கேட்குதே” என்றாள் சிறுபிள்ளையென ஏக்கத்துடன்.
இப்போது தன்யாவின் மனது கண்ணாடி போல பிரியாவுக்கு விளங்க, அவள் கண்களில், கையில் இருக்கும் மிட்டாயை தொலைத்துவிட்டு அழும், சிறு குழந்தையாகவே தெரிந்தாள் தன்யா.
அவளே பேசட்டும்’ என பிரியா அமைதி காக்க, “இப்போ நான் ஆதியை பார்த்தேன், மயங்கி கிடந்தாரு! கண்டிப்பா எனக்காக, என்னைத்தேடி தான் வந்துருப்பாரு!” என தன்யா சொல்ல, பிரியாவின் இதழ்கள் அழகாய் வளைந்தது.
“இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க மேடாஆம்?” பிரியா கிண்டலாய் சொல்ல, அதை உணர்ந்துக்கொள்ளாத தன்யா, “அவர்கிட்ட நான் ‘சாரி’ கேட்கணும், நான் செஞ்ச முட்டாள்தனம் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கணும்! இனியும் அவரை விட்டுட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியாது” என திடமாய் சொன்னாள்.
“ஆதி, உங்க சாரி’யை அக்சப்ட் பண்ணிப்பானா?” இப்போதும் சிறு கிண்டல் தொனிக்கவே பிரியா கேட்க, “நான் அழுதா அவரால பொறுத்துக்க முடியாது! சோ, ஹீ வில் அக்சப்ட் மி” என்று சொல்ல,
“ஹும், ஒரு வாட்டர் பால்ஸ் வீக்னெஸ் வச்சே பசங்களை காலாகாலமா கவுத்துட்டு இருக்கீங்க?” என்றாள் பிரியா.
தன்யா மெலிதாய் சிரிக்க, “சரி, சாரி கேளு” என்றாள் அவள்.
“யார்கிட்ட?”
“ஆதிக்கிட்ட தான்” என பிரியா சொன்னதும், “ஆதியா? எங்க?” என பரபரப்புடன் அவள் சுற்றிலும் நோக்க, “ஓய்” என்ற ஆதியின் குரல் கேட்டு இன்னமும் பரபரப்பானாள் தன்யா.
அவள் பரபரப்பதைக்கண்டு சத்தமாய் சிரித்த பிரியா, “தேடி கண்டுபிடி! இங்கதான் இருக்கான்” என்றதும், “இருக்கானா? என்ன நீ அவரை மரியாதை இல்லாம பேசுற?” என முறைத்தாள் தன்யா.
இன்னும் சத்தமா சிரித்தவள், “அவர்ர்ர்ர்….!! போதுமா மரியாதை?” என்ற பிரியா, “தேடு தேடு” என்று சொல்ல தன்யாவுக்கு சந்தேகம் துளிர்விட்டது.
“ஸ்வேதா யாருன்னு தெரியுமான்னு எதுக்கு கேட்ட? உனக்கு எப்டி அவங்களை பத்தி தெரியும்?” என கேட்க, சத்தம் போட்டு சிரித்த பிரியா, “இப்போவாது பல்பு எரியுதே?” என்றாள்.
“சொல்லு… உனக்கு எப்டி தெரியும்? ஸ்வேதா யாரு?”
“ஸ்வேதா ஆதியோட கேர்ள்பிரண்ட்” என்று பிரியா சொல்ல, “ஏய்….!!!” என கத்தினாள் தன்யா.
அதில் இன்னும் சத்தமாய் சிரித்தவள், “கூல் கூல்!!! ஸ்வேதாவுக்கும் ஆதிக்கும் எந்த கனெக்ஷமும் இல்லை! ஆனா, ஆதியோட அண்ணாக்கும் ஸ்வேதாவோட அக்காக்கும் ஏகப்பட்ட கனெக்ஷன்” என்று சொல்ல, “வாட்?” என குழம்பி நின்றாள் தன்யா.
“புரியலையா? ஆதியோட ப்ரதர் கிருஷ்ணா, ஸ்வேதாவோட சிஸ்டர் திவ்யாவை தான் கல்யாணம் பண்ணிருக்கான்” என்று சொல்ல, தன்யா திகைத்துப்போனாள்.
“அப்போ அந்த போட்டோஸ்?”
“அது கிருஷ்ணா அண்ட் திவ்யா எடுத்துக்கிட்ட போட்டோஸ்! ஸ்வேதாவை ஆதி கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொல்லிடவும், அவன்மேல இருந்த கோவத்தை அவ உன்கிட்ட காட்டிட்டா! நீயும் நம்பிட்ட” என்று பிரியா சொல்ல, “அதுல ஆதி தானே இருந்தாரு?” என்று இழுத்தாள் தன்யா.
“டவுட்டா?” பிரியா முறைக்க, “ச்ச…ச்ச…” என்ற தன்யா, “தெரிஞ்சுக்க தான் கேட்குறேன்” என்றாள்.
‘நம்பிட்டேன்’ என்ற பாவத்தில் சிரித்த பிரியா, “பிகாஸ், ஆதியும் அவன் அண்ணன் கிருஷ்ணாவும் டுவின்ஸ்” என்றிட, “வாட்ட்ட்ட்ட்?” என வாயை பிளந்தாள் தன்யா.
“திவ்யாவும் ஸ்வேதாவும் டுவின்ஸ்! அதனால, கிருஷ்ணா, திவ்யா சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ், உன் கண்ணுக்கு ஆதி ஸ்வேதாவா தெரிஞ்சுட்டாங்க” என்றாள் பிரியா.
ஆதியின் குடும்ப விவரம் கூட அறிந்துக்கொள்ளாமல் இருந்துள்ளோமே!? என உள்ளுக்குள் வெட்கி தான் போனாள் தன்யா. ஒருவேளை அதை அறிந்துக்கொண்டிருந்தால், இந்த பிரிவு கூட நிகழ்ந்திருக்காது என்றே தோன்றியது அவளுக்கு.
அவள் சிந்தனையில் மூழ்கி நிற்க, “ஓய் பாவ் பாஜி?” என சீண்டினாள் பிரியா.
வெடுக்கென தன்யா நிமிர, “சாரி கேளு” என்றாள் பிரியா.
“நான் ஆதிக்கிட்ட கேட்டுக்குறேன்” என்றதும், “ஆதிக்கிட்ட தான் கேட்க சொல்றேன்… கேளு” என்றாள் அவள் சிரிப்பாய்.
தன்யா புரிந்தும் புரியாத பாவனையில் ப்ரியாவை உற்று நோக்க, அந்த கண்களின் சிரிப்பு அவளுக்கு மனதுக்குள் ஒன்றை கூற, அதை நம்ப முடியாமல், விக்கித்து போய் நின்றாள் தன்யா.
பிரியா, “என்ன தனு? இன்னுமா புரியல?”
“தேவா….?” என சந்தேகமாய் தன்யா இழுக்க, “தேவா’வேதான்” என்ற பிரியா, தன் கரங்களை விரிக்க, நம்பமுடியாத ஆச்சர்யத்தில் அப்படியே நின்றாள் தன்யா.
அவள் அதிர்ச்சியை உள்வாங்கியவனா(ளா)ய், “உனக்காக எதுவேணா செய்வேன்னு உனக்கு தெரிய வேண்டாமா தனு? நீதானே சொன்ன, ஒரு பொண்ணால தான் உன் பீலிங்க்ஸ புரிஞ்சுக்க முடியும்ன்னு! அதான் பாம்பே போய்” என்றவன்(ள்), ‘முடிந்தது’ என்பதை போல, சைகை செய்ய, மூச்சுவிடவும் மறந்தவளாய் அவனை(ளை)யே பார்த்திருந்தவள், அதிர்ச்சி அதிகமாகி, மயங்கியே சரிந்தாள்.
-கலாட்டா தொடரும்…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.