அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமையாக இருக்க, காலையில் சற்றுத் தாமதமாக எழுந்து குளித்து முடித்து அமர்ந்திருந்தாள் தமிழ்ப்பிறை. தந்தை சூடாக வைத்துக் கொடுத்த காஃபி அவள் கையில் இருக்க, தலைக்கு ஊற்றியிருந்ததால் தலைமுடியை விரித்து விட்டிருந்தாள்.
அவள் தந்தை உள்ளே சமையலறையில் இருக்க, மகளுக்கு காலை உணவாக இடியாப்பம் செய்து கொண்டிருந்தார். தந்தை சமையலறையில் தனியே இருப்பதால் கையில் இருந்த காஃபியுடன் அவள் சமையலறைக்கு வர, வியர்த்து விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தார் மனிதர்.
“அப்பா.. எப்படி வேர்த்திருக்கு பாருங்க. (Xanax) நான் செய்யுறேன், நீங்க வெளியே இருங்க.” என்று மகள் பாசத்துடன் கண்டிக்க,
“நான் பார்த்துக்கறேன்மா.. தினமும் நீதானேடா சமைக்கிற. லீவுநாள்ல நான் சமைச்சா என்ன.. விடுடா..” என்று மகளைக் கொஞ்சிக் கொண்டார் சிவசு.
“தான் எத்தனை சொன்னாலும் கேட்கமாட்டார்..”என்று தந்தையை அறிந்தவளாக அவள் சிரித்துக் கொள்ள, வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
தமிழ்ப்பிறை வாசலுக்கு வர, ஒரு வயது முதிர்ந்த பெண்மணியும், அவள் வயதையொத்த ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். “யார் இவங்க.” என்ற நினைப்புடன் அவள் முன்னேற, அவள் வெளியே வருவதற்குள்ளாகவே அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்து விட்டனர்.
தமிழ் மரியாதைக் குறையாமல் “வாங்க..” என்று அழைத்து “நீங்க…” என்று இழுத்து நிறுத்த,
“நீதான் அந்த தமிழா..” என்றாள் அந்த சின்னவயதுக்காரி.
தமிழ் “ஆமாம்..”என்பதாகத் தலையசைக்க,
“யார் வந்தாலும் இப்படித்தான் பல்லை இளிச்சு உள்ளே விடுவியா.. இப்படித்தான் எங்கவீட்டு பிள்ளைகிட்ட இளிச்சுட்டு நின்னியோ..” என்று கொஞ்சமும் நாகரீகமில்லாமல் வார்த்தைகளை வீசினாள் அந்த இளவயதுப் பெண்.
தமிழ் அவள் பேச்சில் திகைத்து நிற்க, சிவசு வெளியே வந்துவிட்டார் இதற்குள். “யாரும்மா நீ.. எதுக்காக இங்கே வந்து சத்தம் போட்டுட்டு இருக்க.” என்று அவர் அதட்ட, தமிழுக்கு தொண்டை வறண்டு போனது.
ஆனால், அந்தப்பெண்ணுக்கு அப்படி ஏதும் இல்லையே.. “நீ யாருய்யா.. இந்த ஊர்மேயுறவளோட அப்பனா நீ.. த்தூ..” என்று இகழ்ச்சியுடன் அவள் பேச, “ஏய்..” என்று கத்திவிட்டாள் தமிழ்.
தமிழின் ரௌத்திரம் எதிரில் நின்றவளை இன்னும் தூண்டிவிட, “ஏய்யா.. பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி நீ. என்னை ஏய்ன்னு சொல்றியா. உனக்கு என்ன தைரியம் இருந்தா, என் கொழுந்தனை வளைச்சு பிடிச்சிருப்ப. இதுக்காகவே அலைவீங்களாடி..” என்று கொஞ்சமும் மரியாதையின்றி பேசி வைத்தாள் அவள்.
சிவசு குறுக்கிட்டு, “ஏய்.. யார் நீ.. யாரும்மா நீ. எங்க வந்து என்ன பேசிட்டு இருக்க. யாரு உன் கொழுந்தன்.? நீ தப்பான இடத்துக்கு வந்திருக்க,வெளியே போம்மா… வெளியே போ முதல்ல… என் மகளை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு..” என்று ஆத்திரத்துடன் கத்த,
“யோவ். சும்மா குதிக்காம அடங்கி இருய்யா… என்ன பெருசா பேச வந்துட்ட… நீதானே கொதிக்கிற.. உன் பொண்ணு கமுக்கமா தான நிற்கிறா.. அவளைக் கேளு.. அவளை வாயைத் திறந்து சொல்ல சொல்லுய்யா. என் கொழுந்தனுக்கும் அவளுக்கும் ஒண்ணுமில்லன்னு சொல்ல சொல்லுய்யா..” என்று அவரையும் பேசி வைத்தாள் அவள்.
“என் பொண்ணு என்ன சொல்லணும்..?? எனக்கு என் மகளைத் தெரியும். நீ வெளியே போ முதல்ல.” என்று அவர் மீண்டும் அதட்ட,
“வாத்தியார்ன்னு சொன்னாங்க.. நீ பேக்கு மாதிரி உன் மகளை நம்பிட்டு இருக்கியே. நீ இத்தனைப் பேசியும் மரம் மாதிரி அசையாம நிற்கிறாளே இந்த அமுக்குணி.. அவளைக் கேளு.. கேளுய்யா நீ..” என்று அவருக்கு மேலாக அந்தப்பெண் சங்கரி சத்தமிட்டாள்.
அவளின் பேச்சில், “என்ன தமிழ் இதெல்லாம். நீ ஏன் இப்படி அமைதியா இருக்க. யார் இவங்க.? உனக்கு இந்த பொண்ணை தெரியுமா.?” என அப்போதும் நிதானமாகவே கேட்டார் சிவசு.
தமிழ்ப்பிறைக்கு தந்தையின் முகம் காணும் துணிவு வராமல் போக, அவள் கண்ணீருடன் தலையைக் குனிந்து கொள்ள, அதுவே சிவசுவை தளர்ந்து போகச் செய்தது. எப்போதும் நிமிர்ந்து நின்றே பழக்கப்பட்ட தனது மகள், தலைகுனிந்து நிற்பதே சான்றல்லவா.
ஆனாலும், மனது கேட்காமல் “தமிழ்மா..என்னடா இதெல்லாம்..” என்று அவர் மகளை நெருங்க, அவர் முன்பு மண்டியிட்டாள் அவள். முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அவள் கதற, மகளை அந்த நிலையில் காண முடியவில்லை தந்தையால்.
“தமிழ் ஏன்மா.. என்னடா..” என்று அவர் மகளை கவனிக்க,
“உங்க நாடகத்தை கொஞ்சம் நிறுத்தறீங்களா..” என்று மீண்டும் இரைந்தாள் சங்கரி.
தமிழ் அவள் சத்தத்தில் பயந்து உடல் நடுங்க, தந்தை மகளைத் தாங்கிக் கொண்டார். அவர்களின் பிணைப்பு எதிரில் நின்றவர்களுக்கு வேஷமாகத் தெரிய, அதுவரை வாய்மூடி நின்றிருந்த கதிரின் அன்னை அன்னலட்சுமி அப்போது வாயைத் திறந்தார்.
“இங்கேப் பாருங்க. எங்க வீட்டுக்காரர் இந்த ஊருக்கே பெரிய மனுஷன். இந்த ஊருக்கு சாமி மாதிரி அவர். நீங்க வேற ஆளுங்க. எங்க நிலையை விட்டு உங்களோட எல்லாம் சம்மந்தம் கலக்க முடியாது. உங்கப்பொண்ணு என் மகனை இனிப் பார்க்கவே கூடாது. ஏதோப் படிச்சவங்க எடுத்து சொன்னாப் புரிஞ்சிப்பீங்கன்னு தான் எங்க வீட்டுக்காரர் எங்களை அனுப்பி இருக்காரு.”
“இல்ல, அவர் பேசற விதமே வேறயா இருக்கும். இந்த ஊரைச் சேர்ந்த எந்த சிறுக்கியாவது இந்த வேலையை செஞ்சிருந்தா, அவ கொண்டை மயிரை அரிஞ்சிருப்பேன் இந்நேரம். பள்ளிக்கூட வாத்தியார் வீடுன்னு தான் அமைதியா பேசிட்டு இருக்கோம்.”
“அதை மனசுல வச்சு நடந்துக்க சொல்லுங்க உங்க மகளை. இனி இவ இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது. எத்தனை சீக்கிரம் ஊரைக் காலி பண்ணிட்டு போறிங்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்க உயிர் பிழைக்கும்..” என்று அகங்காரத்துடன் வார்த்தைகளை உதிர்த்தார் அவர்.
சிவசுவிடம் பேசி முடித்தவர் “உன் திட்டமெல்லாம் சரிதான். ஊருக்குள்ள செல்வாக்கான குடும்பம், பணம், காசுக்கு குறைவில்லை.. எல்லாம் தெரிஞ்சுதான் என் மகனை வளைச்சிருப்ப. ஆனா, எங்க குடும்பத்தை பத்தியும் கொஞ்சம் விசாரிச்சிருக்கணும் நீ.. இப்பவும் ஒன்னும் தப்பில்ல.. உயிர் மேல ஆசை இருந்தா ஓடிடு..” என்று தமிழ்ப்பிறையையும் மிரட்டி விட்டே அங்கிருந்து புறப்பட்டார்.
சங்கரி ஓர் ஏளனப்பார்வையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்ல, பெரும் இடியும், புயலும் அடித்து ஓய்ந்தது போல காட்சியளித்தது அந்த இடம். தந்தை வேரற்ற மரமாக தூணில் சாய்ந்து சரிய, “அப்பா..” என்று அவரை நெருங்கினாள் மகள்.
சிவசு அப்போதும் மகளின் மீது தனது கோபத்தைக் காட்ட முடியாமல், தன் முகத்தை மட்டுமே திருப்பிக் கொண்டார். “ப்பா ப்ளீஸ்ப்பா.. சாரிப்பா..” என்று மகள் அவள் மடியில் விழுந்து அழுதபோதும், மெல்ல தன் கையால் மகளின் தலையை வருடிக் கொடுத்ததோடு சரி. ஒரு வார்த்தைக் கூட வாய்திறந்து பேசவே இல்லை அவர். தந்தையின் மௌனம் தனது தவறுகளை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுவதாக இருக்க, தமிழ்ப்பிறை மொத்தமாக உடைந்து போயிருந்தாள்.
சிவசு வந்தவர்களின் பேச்சில் கலங்கிப் போயிருந்தார். அவருக்கு பழையம்பெருமாளையும் தெரியும். அவரின் குடும்பத்தையும் தெரியும். அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளியின் தலைமையாசிரியராக பழையம்பெருமாளுக்கும் சிவசுப்ரமணியத்தை நன்குத் தெரியும்.
அதன் காரணமாகத் தான் தான் தலையிடாமல் மனைவியை அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணி விரக்தியுடன் சிரித்துக் கொண்டார் சிவசு. “தன் மகள் சரியாக இருந்திருந்தால், தான் இவர்களிடம் எல்லாம் பேச்சு வாங்க வேண்டி இருந்திருக்காதே..” என்று அது வேறு வருத்தத்தைக் கொடுக்க, இன்னமும் மகளின் செயலை நம்ப முடியவில்லை அவரால்.
‘எங்கு தவறிப் போனோம்..?’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தவர், நெடுநேரம் கழித்தே தெளிந்து எழுந்தார். மடியில் அழுதழுது உறங்கிப் போயிருந்த மகளை கன்னத்தில் தட்டி எழுப்பி அமர வைத்து “என்ன செய்யலாம் தமிழ்.” என்று அமைதியாக அவர் கேட்க, தந்தையின் பேச்சில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் மகள்.
“உன் விஷயமா என்ன முடிவு எடுத்திருக்க…?? அவங்க சொன்னபடி இந்த ஊரைவிட்டு போகப் போறோமா, இல்ல… இங்கேயே இருந்து இன்னும் அசிங்கப்படப் போறோமா.. நீதான் சொல்லணும். என்னவா இருந்தாலும் உன் முடிவுதான் தமிழ்.”
“அதுதான் உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற வயசும், பக்குவமும் உனக்கே வந்திடுச்சே.. இனி உன் வாழ்க்கைக்கான எந்த முடிவும் நீதான் எடுக்கணும். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை… நீ யோசி..” என்று தந்தை எழுந்துவிட,
“ப்பா….” என்று கண்ணீருடன் அவரது கையை பிடித்துக் கொண்டாள் தமிழ்.
தந்தை அசையாமல் நிற்க, “ப்பா.. நான் இப்படி நடக்கும்ன்னு நினைக்கலப்பா.. அவர் ரொம்ப நல்லவர்ப்பா.. அவருக்கு தெரிஞ்சா என்னை இப்படி விடமாட்டார்… ப்ளீஸ்ப்பா.. என்னை நம்புங்க.. ” என்று மன்றாடினாள் மகள்.
“நான் உன்னை எதுவும் கேட்கலையே தமிழ். நீ அவனை நம்பு. ஆனா, அந்த நம்பிக்கையை என்கிட்டே எதிர்பார்க்காத. நான் இருபது வருஷம் வளர்த்த என் மகளே எனக்கு உண்மையா இல்ல. பிறகு நான் யாரை நம்பி என்ன ஆகப் போகுது..” என்று சோர்ந்த குரலில் கூறி தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் அவர்.
மகள் அவர் பின்பு ஓட, அந்த அறையில் இருந்த இருக்கையில் சோர்வுடன் அமர்ந்து கொண்டிருந்தார். “ப்பா.. என்கிட்டே பேசுங்க. ஏன் இப்படி செஞ்சன்னு கேளுங்கப்பா.. இப்படி நம்பிக்கையில்லாம பேசாதீங்க.. தெரியமாப் பண்ணிட்டேன்ப்பா..” என்று தமிழ் அழுது புலம்ப,
“அவங்களோட நம்மால போராட முடியாது தமிழ். இது அவங்க ஊரு. இன்னிக்கு வீடேறி வந்து அவமானப்படுத்திட்டுப் போயிருக்காங்க. இன்னும் நீ அவன்தான் வேணும்ன்னு நினைச்சா, நாளைக்கு உன்னை தெருவுல நிற்க வச்சு அசிங்கப்படுத்துவாங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்டா.. அப்பா சொல்றதைக் கேளு..”
“என் மகளை இவங்க சாதி வெறிக்கு பலி கொடுக்க நான் தயாரா இல்ல. நாம போயிடுவோம் தமிழ்.” என்று உறுதியாக சிவசு கூற, அப்போதும் கதிரோனை ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று தான் ஏங்கியது தமிழின் மனம்.