Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 3

Advertisement

parvathi

Active member
Member






HERE WE GO WITH THE 3RD EPISODE. PLEASE LIKE COMMENT N SHARE UR THOUGTS.THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT.





அத்தியாயம் 3





கோவையின் பிரதான சிற்றுண்டி உணவகம் அன்னபூர்ணாவை அன்று மதுராவின் தோழிகள் பட்டாளம் கலக்கிக் கொண்டிருந்தனர். வகுப்புகள் தொடங்கிய நாளாய் மதுராவை ட்ரீட் கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தவர்களின் நச்சரிப்புத் தாங்காமல், அன்று தருவதாக ஒத்துக்

கொண்டு மதுரா வெளியே வந்திருந்தாள். ரெஸ்டாரெண்டில் டிபன் சாப்பிட்டபின் கங்கா யமுனா காவேரி காம்ப்ளெக்ஸில் ஏதோ ஒரு தமிழ் படத்திற்குப் போவதாக திட்டம்.

மெனு கார்டை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு இஷ்டத்திற்கு ஆர்டர் செய்ய, சத்தியமாய் மதுராவே பயந்து போனாளென்றால், பாவம் அந்த அப்பாவி வெயிட்டர் என்ன செய்வான்?

நல்லவேளையாக கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டு, எல்லாருக்கும் ஒரே விதமாய் இனிப்பும் நான் பட்டர் பனீர் மசாலாவும் ஆர்டர் செய்ய, தோழிகள் கூட்டம் தலையைத் தொங்கப் போட்டது.

"இவ என்னடி நாட்டாமை? ட்ரீட் கொடுக்கறது மது. அவளே சும்மாயிருக்கறப்போ இவ எதுக்கு நடுவிலே புகுந்து அதிகாரம் பண்றா?"

வசந்தியின் பொறுமலை கார்த்திகா கண்டு கொள்ளவேயில்லை.

"நேரத்தோடு சினிமாவுக்குப் போகனும்னா ஒழுங்கா வளவளக்காமல் டிபனை சாப்பிட்டுக் கிளம்புங்க அப்புறம் நேரமாகிப் போய் படத்தோட ஆரம்ப சீன் போச்சேன்னு என்னைக் குற்றம் சொல்வதில் புண்ணியமில்லை....புரிஞ்சுதா?"

கார்த்திகாவின் குரலுக்கு எப்பொழுதுமே ஒரு ஆளுமைத் திறன் உண்டு. அதன் சக்தியில் வழக்கம் போலவே இன்றும் அனைவரும் கட்டுண்டனர்.

டிபனை முடித்துக் கொண்டு அனைவரும் தியேட்டர் காம்ப்ளெக்ஸிற்கு வந்தபொழுது, நல்லவேளையாக படம் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. காத்திருந்த நேரத்தில் அவர்கள் கல்லூரி நடப்புகளைப் பற்றி வம்பளக்க ஆரம்பித்தனர்.

"ஏய் உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம பார்மகாலஜி லெக்சரர் ராஜீவ்க்கு இன்னும் கல்யாணமாகலே தெரியுமா? ஹி இஸ் ஸ்டில் அன் எலிஜிபிள் பாச்சுலர். ம் எவளுக்குக் கொடுத்து வெச்சிருக்கோ?"

நிவேதா நெடுமூச்செறிந்தாள்.

"ஏய் பார்த்துப்பா....நிம்மி ஏற்கெனவே காத்து மாதிரி லேசாயிருக்கா. உன் பெருமூச்சில் பக்கத்திலிருக்கறவ காத்தோடு காத்தா பறந்துடப் போறா........"

அருகிலிருந்த நிர்மலா போலியாய் பயந்த பாவனையுடன் ஒதுங்க, தோழிகள் பட்டாளம் விழுந்து விழுந்து சிரித்தது. நிவேதா எரிச்சலுடன் முறைத்தாள்.

"அதெப்படிப்பா இவரை இவ்வளவு சின்ன வயசுல லெக்சரரா அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க? அதுவும் மருத்துவத் துறையில் அனுபவம் தான் அதிகம் பேசும்னு நம்பப்படற ஒரு துறையில் இளைஞரை அப்பாய்ண்ட் பண்ணியிருக்காங்கன்னா ஆச்சரியமாயில்லே?"

வசந்தியின் ஆச்சரியத்திற்கு நிவேதாவே பதில் சொன்னாள்.

"உனக்குத் தெரியாதா? ராஜீவ் எம் எஸ்ல கோல்ட் மெடல் வாங்கியவராம். அதோட நம்ம மது மாதிரி ஒவ்வொரு வருஷமும் ஹை டிஸ்டிங்ஷனோட பாஸ் பண்ணியிருக்காரு. அதான் நம்ம காலேஜ் டீன் அவரை ஸ்டாஃப்பா வளைச்சுப் போட்டுட்டார்."

"அடேயப்பா? இவ்வளவு தானா இல்லே இன்னும் எதாவது தகவல் பாக்கி வெச்சிருக்கியா?"

வசந்தியின் கேலியை நிவேதா கண்டு கொள்ளவேயில்லை.

"அவருடைய அப்பாவும் டாக்டர் தான். ந்யூரோ சர்ஜன் டாக்டர் சுந்தரம். கோயம்புத்தூரின் பாஷ் ஏரியா ஆர்எஸ் புரத்தில் சொந்த வீடு. சாய்பாபா காலனியில் ஹாஸ்பிட்டல். ராஜீவின் ஒரே தங்கை வித்யா கல்யாணமாகி மும்பையில செட்டிலாகியிருக்கா. ராஜீவுக்கு அதனால லைன் க்ளியர். அவரோட கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்துட்டிருக்காங்க தெரியுமா?"

மூச்சு விடாமல் பேசியவள் நிறுத்தவும், சட்டென்று தூய குடிநீர் பாட்டிலை அவள் முன் நீட்டினாள் வசந்தி,

"சாரிப்பா கைவசம் இது தான் இருக்கு, பான்டாவோ சோடாவோ இல்லே,"

என்ற முத்தாய்ப்புடன் அவள் முடிக்க, சுற்றியிருந்த தோழியர் கலகலவென்று சிரித்தனர்.

"ஏய் என்னைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் கேலியாய் இருக்கில்லே?"

நிவேதா ஆத்திரத்துடன் ஆதங்கப்பட, மதுரா அவளை சமாதானப்படுத்தினாள்.

"இவ்வளவு சொன்னவ அவரோட ஜாதகத்தையும் கையோடு கொண்டு வந்திருந்தேன்னா இப்பவே அம்சமாப் பொருத்தம் பார்த்திருக்கலாம்......."

வசந்தி விடாமல் சீண்ட, நிவேதா சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தாள்.

"மது.......உன் முகத்துக்காகப் பார்க்கறேன். இல்லேன்னா இவளை இன்னிக்கு ஒரு வழி பண்ணியிருப்பேன்........."

"ஆமாமா......இவ என்னை ஒரு வழி பண்றவரைக்கும் என் கை பூப்பறிச்சிட்டிருக்குமாக்கும்?"

வசந்தி முணுமுணுக்கவும், நிவேதா மீண்டும் வரிந்து கட்டிக் கொண்டு அவளோடு மோத முற்பட, மதுரா காதுகளைப் பொத்திக் கொண்டு கெஞ்சினாள்.

"ப்ளீஸ் பப்ளிக்ல ஏன்ப்பா இப்படி சண்டை போடறிங்க? நம்ம காலேஜ் மானத்தை இப்படி தியேட்டர் வாசல்ல கூறு போடனுமா? இதிலே நாமல்லாம் டாக்டர் படிப்பு வேற படிக்கறோம்...."

மதுராவிற்கு உண்மையிலேயே அவமானமாக இருந்தது. இந்த சண்டைக்கெல்லாம் காரணமாயிருந்த அந்த ராஜீவ் மீது கோபம் கூட வந்தது.

அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்து முழுசாய் ஓரு வாரம் கூட இன்னும் முடியவில்லை அதற்குள் பெண்களிடையே பொறாமையைக் கிளப்பி விட்டாகிவிட்டது.

இந்தப் பெண்கள் தானாகட்டும். உலகத்தில் பேசுவதற்கும் செய்வதற்கும் வேறு விஷயமே இல்லாததைப் போல் அவனையே விழுந்து விழுந்து கவனிக்க வேண்டுமா?

'உனக்கும் பொறாமை தான் மது......ஒரு காலத்தில் உன் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்தவனின் மீது இப்பொழுது இத்தனை பெண்களின் பார்வை விழுவது உனக்கும் தான் பொறுக்கவில்லை. பெரிதாய் ஜாதகம் பொருத்தம் என்றெல்லாம் பேசும் இந்தப் பெண்களுக்கு முன்னொரு காலத்தில் உனக்கும் அவனுக்கும் ஏகமாய் மனப்பொருத்தமிருந்த விஷயம் தெரியுமா?

அதை வெளிப்படையாய் இவர்களிடம் இப்பொழுது சொல்லும் துணிவுண்டா உனக்கு?'

மனசாட்சி அவளை மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டதில் மலைத்துப் போன மதுராவால் அதற்குப் பின் படத்தில் கூட லயிக்க முடியவில்லை. காதலைப் பற்றிய படம் என்பதாலேயேகூட அவளால் அதில் லயிக்க முடியாமல் போயிருக்கலாம். எப்பொழுதடா கிளம்பலாம் என்று தவித்துக் கொண்டிருந்தவள், இன்டர்வெல்லில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக

கார்த்திகா வெளியே சென்றபொழுது, உடனே அவளுடன் தானும் சென்றாள்.

தியேட்டர் இருட்டிலிருந்து வெளியே வந்தது ஏதோ சுதந்திரக் காற்றை ஸ்வாசித்த சந்தோஷத்தைத் தந்தது

"ஏய் மது.......அங்கே பாரேன் யார் வந்திருக்கான்னு?"

காதருகில் கிசுகிசுத்த கார்த்திகாவின் பார்வை சுட்டிக் காட்டிய இடத்தில் நின்றிருந்தவன் ராஜீவ். அவனும் அவர்களிருவரையும் பார்த்து விட்டான் போலும். அருகிலிருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு அவர்களை நோக்கி நிதானமாய் நடந்து வந்தான். மதுராவின் கால்கள் தரையில் நிற்க மாட்டாமல் துவண்டன. கார்த்திகாவின் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

"கார்த்தி.......வா உள்ளே போயிடலாம்......."

"லூசாடி நீ? அவர் நம்மைப் பார்த்துட்டு வர்றப்போ நாம முகத்தைத் திருப்பிட்டுப் போனா நல்லாவாயிருக்கும்? அது மரியாதைக்குறைவான செயலில்லையா? நல்லவேளை நம்ம சினேகிதப் பட்டாளம் எல்லாம் உள்ளேயிருக்குங்க. இவர் வந்திருக்கறது தெரிஞ்சா இவரை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சுட மாட்டாளுங்க.....அதிலும் நம்ம நிவேதா ஒருத்தி போதும்"

"ஹலோ கர்ல்ஸ்..........நீங்க எங்கே இங்கே?"

இயல்பான விசாரணையுடன் நெருங்கிய ராஜீவ்வை விழியகலப் பார்த்தாள் கார்த்திகா.

கறுப்பு ரேமெண்ட் சூட்டும் சந்தன ஸ்லாக்கும் அவனுடைய கோதுமை நிறத்தை மேலும் மெருகேற்ற, முழங்கை நீளத்திற்கும் படர்ந்திருந்த ரோமச் சுருள்கள் அவனை இன்னும் வசீகரமாக்கின. நிக்கோடின் கறை படியாத உதடுகளிடையே சீரான வெண்ணிறப் பற்கள் கால்கேட் விளம்பரம் காட்டின. எல்லாவற்றிற்கும் மேல் அண்ணாந்து பார்க்க வைக்கும் அந்த உயரம்.......

'கடவுளே நிவேதா வாய் ஓயாமல் அவன் புராணம் படிப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

இந்த ஆண்மகனின் கம்பீரத்திற்கும் வசீகரத்திற்கும் எப்பேர்பட்ட பெண்ணும் விழுந்து விடுவாள் தான் அதில் சந்தேகமில்லை'

கார்த்திகா தன்னைப் பார்வையாலேயே விழுங்குவதை உண்ர்ந்த ராஜீவ் சங்கடத்துடன் மதுராவின் புறமாய் திரும்பினான். அவளோ தன் பார்வையை அழுத்தமாய் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் பதித்திருந்தாள். என்ன பேசுவதென்று புரியாமல் ராஜீவ் திகைத்த நாழிகையில், நல்லவேளையாக கார்த்திகாவே பதில் சொன்னாள்.

"தியேட்டருக்கு வேறு எதற்காக வருவார்கள் சார்? சினிமா பார்க்கத் தான்...."

துடுக்கான அந்த பதிலில் ராஜீவ் சிரித்து விட்டான்.

"நான் பேச்சை ஆரம்பிப்பதற்காக ஏதோ சொல்லப் போக அதற்காக நீங்க இப்படி என்னை மூக்கறுக்க வேண்டாம் மிஸ்........."

"கார்த்திகா..........இவ என் அறைத் தோழி மதுரா......"

"அப்படியா? நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் வந்திருக்கிங்களா?"

"இல்லையே உள்ளே ஒரு பட்டாளமே உட்கார்ந்திருக்கு. உண்மையைச் சொல்லனும்னா நாங்க இப்போ அவங்களுக்கெல்லாம் ஸ்நாக்ஸ் வாங்கத் தான் வெளியே வந்தோம். ஏன்னா இது மதுவின் ட்ரீட் அவ அனாடமியில் முதல் மாணவியாய் வந்ததற்காக நாங்கல்லாம் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கற ட்ரீட் இது....."

கார்த்திகா சாமானியத்தில் பேச மாட்டாள். ஆனால் பேச ஆரம்பித்தாலோ சாமானியத்தில் நிறுத்த மாட்டாள். விலாவாரியாய் விவரம் சொல்லத் தொடங்கி விடுவாள்.

"ஷ்.....கார்த்தி......பேசாமல் இருக்கியா? உன்னை யார் இப்ப இந்த விவரமெல்லாம் கேட்டா?"

மதுரா அடிக்குரலில் முணுமுணுத்தவுடன். கார்த்திகா சலிப்புடன் ராஜீவை ஏறிட்டாள்.

"இவளோட பெரிய ரோதனை சார். தானாகவும் தன்னைப் பற்றி எதுவும் சொல்லமாட்டா. மத்தவங்க சொல்ல வந்தாலும் தடுத்திடுவா......ஒரு நிமிஷம் சார் நான் போய் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்திடுறேன்.....மது நீ சாரோட பேசிட்டிரு."

கார்த்திகா மதுராவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், கேண்டீனுக்குச் செல்ல, அவள் பின்னோடு செல்ல அடியெடுத்து வைத்த மதுராவை ராஜீவின் குரல் நிறுத்தியது.

"ட்ரீட் உன் தோழிகளுக்கு மட்டும் தானா மது? எனக்குக் கிடையாதா?"

ஆத்திரத்துடன் திரும்பிய மதுவின் பார்வையில் தீப்பொறி பறந்தது.

"என் பெயர் மதுரா........"

அழுத்தமாய் தன் முழுப் பெயரையும் உச்சரித்தவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் ராஜீவ்.

"அப்பா என்ன கோபம்? நீ மாறிட்டே மது. மூனு வருஷம் முன்னால நான் பார்த்த பயந்த முயல்குட்டி மது இல்லை இப்போ நீ."

அவள் அழுத்தமாய் சொல்லியும் அவன் வார்த்தைக்கு வார்த்தை மது என்றே சொல்ல, மதுராவிற்குக் கண்மூடித்தனமாய்க் கோபம் வந்தது.

"என் வீட்டினருக்கும் என் சினேகிதிகளுக்கும் மட்டும் தான் நான் மது. உங்களுக்கு அப்படியில்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு பேசுவது நல்லது."

கத்தி வீச்சாய் மனசைக் காயப்படுத்தும் வார்த்தைக்ளைப் பேச மதுரா எப்பொழுது கற்றுக் கொண்டாள்?

அவளுடைய கறாரான பேச்சில் ராஜீவ் கத்திகுத்து பட்டாற் போல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை உள்ளூர வலியுடனேயே பார்த்திருந்த மதுராவிற்குள்ளும் ஏதோ ஒன்று உருகியது.

கோபம், கண்டிப்பு, துக்கம் என்று நொடிக்கொரு முகபாவனை காட்டிய மதுராவை உன்னிப்பாய் கவனித்த ராஜீவ்வின் குரல் மெல்லத் தழைந்தது.

"உன்னைச் செல்லமாய் அழைக்கும் உரிமை மற்ற எல்லோரையும் விட எனக்கதிகமாய் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன் மது......."

"நிச்சயமாக இல்லை....." என்று நிமிர்ந்தவளை ஒரே பார்வையில் அடக்கினான் அவன்

"உன்னிடம் எனக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதென்று நிரூபிக்க இது தகுந்த இடமோ நேரமோ அல்ல என்பதால் தான் நான் விலகி நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் மது."

'இல்லையென்றால் என்ன பண்ணிவிடுவானாம்? ரொம்ப ஓவராக உரிமை கொண்டாடுகிறானே?'

மதுராவின் பார்வையிலேயே அவள் மனதைப் படித்தானோ என்னவோ, ராஜீவ்வின் இதழ்களில் இளநகையன்று அரும்பியது.

"அப்படி நான் என்னதான் பண்ணிடுவேன்னு தானே யோசிக்கிறே? இந்த இடைவெளியே இல்லாமல் பண்ணிடுவேன். இந்த இடைவெளி நம்மிடம் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்காதே மது.......ஏமாந்து தான் போவாய்....."

'இவன் அவளை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்? விட்டால் ஒரேயடியாகப் பேசிக்கொண்டே போகிறானே. இல்லை இதற்கொரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.'

"அப்படி நீங்கள் அந்த இடைவெளியைக் கடந்து வர முயற்சி செஞ்சிங்கன்னா, அப்போ என் வாய் பேசாது கை தான் பேசும்......."

இப்படிப் பேசியதற்கு பதிலாக மதுரா ராஜீவின் முகத்தில் ஓங்கி ஒரு அறை கூட அறைந்திருக்கலாம். அவனுக்கு இந்த அளவிற்கு வலித்திருக்காது.



"நீ உடற்கூறியல்பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியென்று உன் சினேகிதி சொன்னாள். மனசைக் கூறு போடுவதிலும் நீ மகா வல்லவள் என்று உன் சினேகிதிக்குத் தெரியுமா மது?"

கத்தியின் கூர்மையுடன் வந்த வார்த்தைகள் தான். ஆனால் அவற்றையும் மிக மிக நைந்த குரலில் சொல்லிவிட்டு, ராஜீவ் திரும்பிப் பார்க்காமல் நடக்க, மதுரா தேள் கொட்டினாற் போல் துடித்துப் போனாள்.
 
Top