Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 5

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 5TH EPISODE. PLEASE LIKE COMMENT N SHARE UR THOUGTS.THANKS TO ALL READERS FOR UR GENUINE SUPPORT.



அத்தியாயம் 5


மதுரா அப்பொழுது ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள். வனிதா பத்தாவது வகுப்பு.

சகோதரிகள் இருவருமே படிப்பில் படு கெட்டி. ராகவனுக்கு தன் பெண்களின் அழகில் புத்திசாலித்தனத்தில் ஏக பெருமை. அவர் மனைவி கமலத்திற்கோ என்ன தான் தன் பெண்கள் கலைமகளும் திருமகளுமாய் கண்ணுக்கு நிறைவாய் இருந்தாலும், கொள்ளி போட ஓரு பிள்ளை இல்லையே என்ற குறை கழுத்து மட்டும் இருந்ததென்னவோ உண்மை.

"அடிப் போடி புரியாதவளே.......கேரளத்துக் குட்டிங்க மாதிரி அழகிலும் படிப்பிலும் படு சுட்டியாய் ரெண்டு தங்ககட்டியைப் பெத்திருக்கோம். இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படறா புரியாதவ........"

ராகவன் அவ்வப்போது கமலத்தின் மண்டையில் தட்டி வைக்கும் பொழுது, அவள் இன்னும் பெரிதாய் சலித்துக் கொள்வாள்.

"ஆமா.....உங்க பொண்ணுங்களைத் தலையில் தூக்கி வெச்சுக் கொண்டாடுங்க. ஒரு நாளில்லே ஒரு நாள் ரெண்டும் புருஷன் கையைப் புடிச்சுகிட்டு நமக்கு டாட்டா காட்டிட்டுப் போறப்போ தான் பிள்ளையில்லாத என் வேதனை உங்களுக்குப் புரியும்....."

"அடி அசடே இதுக்குத் தானா இத்தனை விசனப்படறே? பேசாமல் வீட்டோட மாப்பிள்ளையா பார்த்துடுவோம்........"

"அதுசரி......உங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பத் தான் அவ அவ பிள்ளையப் பெத்து வெச்சுட்டு காத்துட்டிருக்காளாக்கும்......மனுஷனுக்கு ஆனாலும் இவ்வளவு ஆசை ஆகாது....."

கழுத்தை நொடித்துக் கொண்டு கமலம் நகர, ராகவன் குழம்பிப் போவார்.

"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவ இந்த நொடிப்பு நொடிச்சுட்டுப் போறா......"

ராகவன் தான் அன்று மனைவியின் பேச்சில் குழம்பினாரென்றால், அவருடைய பெண்களோ அதைவிடப் பெரிய குழப்பத்தில் இருந்தனர்.

மதுராவிற்கு வந்திருந்த பிறந்த நாள் வாழ்த்தொன்று சகோதரிகள் இருவரையும் குழப்பத்தில ஆழ்த்திய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது.

பெயரில்லை. முகவரியில்லை. இவ்வளவு ஏன்? அதிலிருந்த வாசகங்கள் கூட பிறந்த நாள் வாழ்த்தாகயில்லை. கவிதையாய் தன் காதலைச் சொல்லியிருந்த அந்த முகமறியா நபர் யாராகயிருக்கும் என்று தான் சகோதரிகள் இருவரும் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்.

கவிதையென்னவோ அழகாய் அம்சமாய் தானிருந்தது.

மதுரமானவளே

உன் பாதக் கொலுசுகளின்

கிண்கிணி இசையே

என் காலை நேர சுப்ரபாதம்.

அதிகாலையில்

வானவில்லாய் நீ வாசலில்

போடும் கோலத்தில் அந்த

ஆதவன் மட்டுமா கண் விழிக்கிறான்?

அடியேனும் தான்

உன் தொடுகைக்காக ஏங்கி தவமிருப்பது

பனித்துளி பூத்த பன்னீர் ரோஜா மட்டுமா?

காதல் வரம் வேண்டும் இந்த ராஜாவும் தான்.

என் மனதில் மலர்ந்த

இந்த காதல் ரோஜாவை உன் மனதிலும்

பதியன் போடும் அந்த நல்ல நாளுக்காய்

நாளும் காத்திருக்கிறேன்.....

"கவிதை நல்லாயிருக்கில்லே?.......அனுபவிச்சு எழுதியிருக்கான் மது....."

வனிதா நேரங்காலம் தெரியாமல் கவிதையை விமரிசிக்க, மதுரா தங்கையின் தலையில் குட்டினாள்.

"ஏண்டி நானே யாரோ எவரோன்னு பதறிப் போயிருக்கேன். நீ நல்லாயிருக்குன்னு விமரிசனமா பண்றே? நல்லவேளை இதை அப்பாவோ அம்மாவோ பார்க்கலே. வெறும் பிறந்த நாள் வாழ்த்துத் தானேன்ற நினைப்பில் பிரிக்காமல் என்னிடம் கொடுத்துட்டாங்க. இல்லேன்னா.....என் கதி......."

நினைக்கும் பொழுதே சிலிர்த்துக் கொண்டு வந்தது மதுராவிற்கு.

"யாராயிருக்கும் வனி?"

"என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? ஆனால் ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது. நீ வாசல்ல கோலம் போடறதையும், தோட்டத்தில் பூப்பறிப்பதையும் நீயறியாமல் யாரோ உன்னை கவனிச்சிருக்காங்க. யாரோ யாரோடி உன்னோட புருஷன்......."

வனிதா இராகமிழுத்துப் பாடவும்,. மதுரா கோபத்துடன் முறைத்தாள்

"ஏண்டி பாட்டா படிக்கறே? என் அவஸ்தை புரியாமல் ஏண்டி வனி இப்படிப் படுத்தறே?"

"ஜஸ்ட் பார் பஃன் மது உனக்கென்ன இதை எழுதியவன் யாருன்னு தெரியனும்

அவ்வளவு தானே? கவலையை விடு மது நானாச்சு அவனைக் கண்டுபிடிக்க பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போகப் போறான்? ......."

வனிதா பெரிதாய் மார் தட்டிக் கொண்டாள் என்றாலும் அந்தத் திருடன் அவ்வளவு சுலபத்தில் அகப்படவில்லை. கவிதை எழுதியவனைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை.

கமலம் என்ன தான் ஆறு மணியிலிருந்து திருப்பள்ளியெழுச்சி பாடினாலும் சாதாரணமாய் ஏழு மணிக்குக் குறைந்து எழுந்திருக்காத வனிதா, அடுத்த நாள் முதல் அம்மா எழுப்பாமலேயே அதிகாலையில் எழுந்து, அக்கா வாசலில் கோலம் போடும் நாழிகையில் கண்குத்திப் பாம்பாய் வெராண்டாவில் குத்துகாலிட்டு அமர்ந்து, தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் நோட்டம்

விட, ஆரம்பத்தில் உற்சாகமாய் ஆரம்பித்த வனிதாவின் இந்த துப்பறியும் பணி நாளடைவில் சலித்துப் போனது.

பின்னே மதுரை மாநகரத்தின் அந்த புறநகர் பகுதியில் தெருவில் அறுபதைத் தாண்டிய பெரிசுகளும், குண்டு மாமிகளும், சர்க்கரை நோயாளிகளும் மட்டுமே வாக்கிங் போனார்களே தவிர இளவட்டமாய் ஒரு பயல் கூட கண்ணில் தென்படவில்லை என்றால் வனிதா தான் பாவம் என்ன செய்வாள்?

போதாததற்கு அந்த முகமறியா நபர் வரிசையாய் கவிதைகளை வாழ்த்து அட்டைகளாய் அனுப்பி வைக்க ஆரம்பிக்க, அவற்றை பெற்றவர்களின் கண்ணில் படாமல் மறைப்பதே பெரிய வேலையாகப் போய்விட, மதுரா ஒரு கட்டத்தில் பயந்து போனாள்.

"வனி பேசாமல் அம்மா கிட்ட சொல்லிடலாமா?"

"ஐயோ வேற வினையே வேண்டாம். டாக்டருக்குப் படிக்கனும்ன்ற உன் லட்சியம் பணால் தான். படிப்பை நிறுத்திட்டு உனக்கொரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டுத் தான் மறு வேலை பார்ப்பா. ஏற்கெனவே மடியிலே நெருப்பை கட்டிட்டிருக்க மாதிரி அவஸ்தைப்பட்டுட்டிருக்கா. நீ போய் இந்த விஷயத்தைச் சொன்னேன்னா உடனே அப்பாவுக்கு மகுடி ஊத ஆரம்பிச்சிடுவா. தேவையா இது?"

"அப்போ என்னை என்ன தான்டி பண்ணச் சொல்றே?"

"யாமிருக்க பயமேன்?.....கொஞ்சம் பொறுமையா இரு மது....என்னை யோசிக்க விடு."

தீவிரமாய் சிந்தித்த வனிதா வாழ்த்து அட்டைகளை மீண்டும் ஊன்றி கவனித்தாள். முகத்தில் பளீரென்று ஒரு பிரகாசம் பரவியது.

"பாரு மது இதெல்லாம் நம்ம ஏரியா போஸ்ட் ஆபீஸ்லருந்து தான் போஸ்டாகியிருக்கு. அதனால ஆசாமி இங்கே தான் எங்கேயோ இருக்கான். இன்னும் ஒரே வாரத்தில் அவன் யாருன்னு நான் கண்டுபிடிக்கறேன் பார்...."

வனிதா சொன்ன மாதிரியே அடுத்த ஓரிரு நாட்களிலேயே 'கண்டேன் சீதையை' என்று அனுமன் குதித்த உற்சாகத்திற்குக் கொஞ்சமும் குறையாமல் சந்தோஷமாய் கூவியபொழுது மதுரா ஒரு நிமிஷம் மூச்சு விட மறந்து போனாள்.

"வனி நிஜமாகவா? யாருன்னு கண்டுபிடிச்சுட்டயா? யாருடி அவர்? சொல்லு.......சொல்லு......."

"சொல்றேன் சொல்றேன் சொல்லாமல் எங்கே போறேன்? ஆனால் அதை சொல்றதுக்கு முன்னால நான் ஒரு விஷயம் தெளிவுபடுத்திக்கனுமே. அவர் யாருன்னு தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே? அவரைக் காதலிக்கப் போறியா இல்லை கண்டிக்கப் போறியா?"

தங்கையின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் மதுரா திணறிப் போனாள். முகம் தெரியாத அந்த ஆசாமியின் கவிதைகளிலேயே அவள் மயங்கிப் போனதென்னவோ உண்மைதான். ஆனால் அதை தங்கையிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்வது எப்படி?

வனிதாவின் கரங்கள் சகோதரியின் கழுத்தை மாலையாக வளைத்தன.

"உன் மனசு எனக்குப் புரியாதா மது? ஆள் யாருன்னு தெரியறதுக்கு முன்னாலயே அவர் சுவர்னு மரியாதையெல்லாம் பிரமாதமாயிருக்கறதைப் பார்த்தாலே தெரியலையா அம்மணி அவருக்கு அடிமையாயிட்டிங்கன்னு........ நான் சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன். ஆல்ரைட் ஆள் யாருன்னு தெரியுமா? நம்ம பக்கத்து வீட்டுல இருக்கற லலிதா மாமியோட பிள்ளை ராஜீவ்"

மதுராவின் விழிகள் வியப்பில் விரிந்தன.

"வனி......அவர் எங்கோ வெளியூர்ல மெடிசின் படிக்கறதால்ல மாமி சொல்வாங்க......அவரா கவிதையெல்லாம் எழுதியனுப்பினார்?"

"சாட்சாத் அவரே தான். வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிச்சாலும் ஐயா ஒரு விடுமுறை தவறாமல் வீட்டுக்கு வந்துடறார் அம்மணி உன் தரிசனத்திற்காக. அவங்கம்மா என்னவோ பிள்ளை தன்னைப் பிரிஞ்சிருக்க முடியாமல் தான் ஓடோடி வர்றதா நினைச்சுட்டிருக்காங்க.

மெடிசின் படிச்சாலும் ராஜீவுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். அது தான் தன் காதலையும் கவிதையாகவே வெளிப்படுத்தியிருக்கார்."

"அது சரி அவர்தான்னு எப்படி வனி கண்டுபிடிச்சே?"

"கையெழுத்து வேட்டை மூலமாத் தான். நம்ம ஸ்கூல்ல தான் கொடுத்திருக்காங்களே சேவாமந்திர்க்காக நன்கொடை வசூலிக்கச் சொல்லி ஒரு அசைன்மென்ட் அந்த புக்கை எடுத்துட்டு வீடு வீடா போய் காசும் கையெழுத்தும் ஒரே சமயத்தில் கலெக்ட் பண்ணினேன். ஆனால் ஆசாமி படு உஷார் பார்ட்டி தெரியுமா? வீட்டுக்கு ஒருத்தர் கொடுத்தா போறாதா?

அதான் எங்கப்பா கொடுத்துட்டாரேன்னு சொல்லி தப்பிச்சுக்கப் பார்த்தார். ஆனால் வனிதாவா கொக்கா? நானா அவ்வளவு சுலபத்தில் விடுவேன்? நல்லா குழையடிச்சு நீங்களும் போட்டாத்தான் ஆச்சுன்னு அவரை ஒரு வழி பண்ணிட்டேன். ஆனால் கையெழுத்துப் போட்டுட்டு சிரிச்சுகிட்டே ஒரு கேள்வி கேட்டார் பார் அப்படியே ஆடிப் போய்ட்டேன்."

வனிதா சஸ்பென்ஸாய் நிறுத்தவும் மதுரா ஆர்வத்துடன் கேட்டாள்.

"ஏன் என்ன கேட்டார்?"

"அதென்ன எல்லா கையெழுத்தும் ஆண்களுடையதாகவே இருக்கு. ஏன் பெண்கள் காசு கொடுக்க மாட்டேன்னுட்டாங்களா? இல்லே அவங்க கையெழுத்து தேவையில்லைன்னு விட்டுட்டிங்களான்னு கேட்டார் மது. நான் என்ன பதில் சொல்ல முடியும்? ஆளை விட்டாப் போதும்னு ஓடி வந்துட்டேன் சும்மா சொல்லக் கூடாது. உன் ஆள் ரொம்பவே ஸ்மார்ட் தான் எல்லா விஷயத்திலும்......."

வனிதா குறும்பாய் கண்சிமிட்ட, மதுரா. வெட்கத்தில் கன்னம் சிவக்க நின்ற அந்த நொடியில் ஆரம்பித்தது ராஜீவின் காட்டில் அடைமழையாய் காதல்.
 
Top