Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5

Advertisement

SHALU shalu

Well-known member
Member
மகனிடம் கேட்ட, அடுத்த நாளே, அதைச் செயல்படுத்தும் விதமாக, மெல்ல நடந்து நூலகத்தை அடைந்தார் கவிபாரதி.

அன்றைக்குப் பார்த்து, நூலகத்தில் சிறிதளவு கூட்டம் இருந்தது.

அதனால், தயங்கியவாறே, உள்ளே நுழைந்தவரது விழிகள், ருத்ராக்ஷியைத் துழாவியது.

அவளோ, ஒன்றிரண்டு பெண்மணிகளுக்கு ஒரு புத்தகத்தைப் பற்றிய விரிவுரையை வழங்கிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று ஏதோ தோன்ற, அங்கு சென்று, அவர்களுடன் தானும் இணைந்து கொண்டார் கவிபாரதி.

அவரைப் பார்த்ததும், குறுநகை முகிழ்த்திய ருத்ராக்ஷியோ,”இவங்களுக்கு முடிச்சிட்டு, உங்களுக்கு முதல்ல இருந்து சொல்றேன் ங்க” என்று கூறி விட்டுத், தன் உரையைத் தொடர்ந்தாள்.

அந்த நூலகத்தின் நிர்வாகி துரைமுருகனோ, இவருக்காக நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டு, அவரை அமரச் சொன்னார்.

“நன்றி ஐயா” என அதில் உட்கார்ந்து காத்திருந்தார் கவிபாரதி.

“இந்தப் புக் உங்களுக்கு வேணுமா? எடுத்துட்டுப் போறீங்களா?” என்று அப்பெண்மணிகளிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா. ஒன்னு தான் இருக்கா? எங்க எல்லாருக்குமே வேணுமே!” என்றார்கள்.

“சார், இது எத்தனை செட் இருக்கு?” என்று துரைமுருகனிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“பெட்டியில் மூனு செட் புக்ஸ் இருக்கும்மா” என்றார்.

“அதை நான் இவங்களுக்கு எடுத்துக் கொடுக்கவா சார்?”

“சரிம்மா” என்று சம்மதித்தார் துரைமுருகன்.

புதுப் பெட்டியைப் பிரித்து, அதிலிருந்து மூன்று புத்தம் புது புத்தகங்களை எடுத்து வந்தவள்,”இந்தாங்க” என அவ்விரண்டு பெண்மணிகளிடம் தந்தாள் ருத்ராக்ஷி.

“நன்றி ம்மா” என மனதார கூறி விட்டுச் சென்றனர்.

அந்த மூன்றாவது புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, கவிபாரதியிடம் போய்,

“உங்களுக்குச் சொல்லவா ம்மா?” என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

சிறு புன்னகையை உதிர்த்தவரோ,”நான் இதுக்காக வரலை ம்மா, உன்கிட்ட மெழுகுத்திரி வாங்கலாம்னு வந்தேன்” என்று அவளுக்கு விளக்கினார் கவிபாரதி.

அதைக் கேட்டு முகம் மலர்ந்தவள்,”ஓஹ், அப்படின்னா நீங்க என் வீட்டுக்கே வந்து இருக்கலாமே ம்மா?” என்றாள் ருத்ராக்ஷி.

“என்கிட்ட ஃபோன் இல்லை ம்மா. நீ எப்போ வீட்டில் இருப்ப, எப்போ அங்கே வந்தால் சரியாக இருக்கும்னு எனக்குத் தெரியாதே? உன்கிட்ட மெழுகுத்திரி வாங்கின, மத்தவங்க கிட்டேயும், நான் அதைப் பத்திக் கேட்காமல் ஏதோ ஞாபகத்தில் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்று வெள்ளந்தியாக உரைத்தவரிடம்,

“சரிம்மா. நான் சார்கிட்ட சொல்லிட்டு வர்றேன். இப்போவே என் வீட்டுக்குக் கிளம்பி போகலாம். பெரியவங்க உங்களைக் காக்க வைக்கக் கூடாது இல்லையா?” என்றவாறு துரைமுருகனிடம் சென்று விஷயத்தைச் சொல்லி இரண்டு மணி நேரம் அனுமதி கேட்டாள்.

அதற்கு அவரும்,”போயிட்டு வா ம்மா. நீ நேரமாகவே எல்லாத்தையும் முடிச்சிட்ட. கொஞ்ச நேரத்தில் லன்ச் டைம் ஆகிடும். கையோட சேர்த்து சாப்பிட்டுட்டு வந்துரு” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

“தாங்க்ஸ் சார்” என்றபடி, அவரிடம் விடைபெற்றுக் கொண்டவள்,“யார் உங்களுக்கு என்னோட மெழுகுத்திரியைப் பத்திச் சொன்னது?” என்று கவிபாரதியிடம் பேச்சுக் கொடுத்தவாறே நடந்தாள் ருத்ராக்ஷி.

“அரசல் புரசலாகப் பேசிக்கிட்டாங்க ம்மா. அதை வச்சுத் தான் உங்கிட்டக் கேட்டேன். எனக்கும் அதெல்லாம் பயன்படுமே?” என்றார்.

“அப்படியா ம்மா? சரி” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, அவளுடைய இல்லத்திற்கு வந்து சேர்த்திருந்தனர் இருவரும்.

கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தவள், “வாங்க ம்மா” எனக் கவிபாரதியையும் உள்ளே வர அனுமதித்தாள் ருத்ராக்ஷி.

அவள் தன் வீட்டை வைத்திருந்த நேர்த்தி இவருக்குப் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போயிற்று.

நாற்காலியில் அமர வைத்து விட்டு, உள்ளே சென்று, அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை வாங்கிக் குடித்ததும்,”வீட்டை நல்லா பராமரிக்கிறம்மா” என அவளைப் பாராட்டவும் செய்தார் கவிபாரதி.

“நன்றி ம்மா” என்றவள், “தண்ணீர் மட்டும் குடிக்கக் கூடாது. இங்கே வந்தால், எதாவது சாப்பிட்டுட்டுத் தான் போகனும். அதுவும் இது சாப்பாட்டு நேரம் வேற!” என்று அவரிடம் கறாராக உரைத்தாள் ருத்ராக்ஷி.

“சாப்பாடெல்லாம் வேணாம் மா. நான் கிளம்பனுமே?” என அவர் தயங்கவும்,

“ப்ளீஸ் ம்மா. எனக்குக் கம்பெனி கொடுங்க” என்று அவள் மேலும் கெஞ்ச, அன்று மாலை நேரம் தான், மகனும் வீட்டிற்கு வருவான் என்பதால், இனிப் போய் தான், சமைக்க வேண்டும் என நினைத்திருக்க, இவள் இவ்வாறு கேட்கவும், சரியென்று கூறி விட்டார் கவிபாரதி.

“ம்ஹ்ம்” என்று புன்னகைத்து விட்டு, அடுக்களைக்குள் இருந்து, உணவுப் பாத்திரங்களைக் கொண்டு, இருவருக்கும் பொதுவாக வைத்து விட்டு, அவருக்கென்று தட்டு வைத்து அதில் பரிமாறி, தனக்கும் உணவைப் போட்டுக் கொண்டவள்,

“இப்போ சாப்பிடுங்க. முடிஞ்சதும், என்னோட மெழுகுத் திரிகளைப் பார்த்து, எது வேணுமோ, அதை வாங்கிக்கோங்க” என்று கூறி விட்டு உணவுண்டாள் ருத்ராக்ஷி.

அவளது விருந்தோம்பலை, மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு, சாப்பிட்டு முடித்தார் கவிபாரதி.

“இப்போ வாங்க” என்று அவரை ஒரு அறைக்குள், கூட்டிச் சென்றவள்,”இங்கே எல்லா விதமான, வாசனை இருக்கிற, மெழுகுத்திரிகள் இருக்கு. என்னென்ன டிசைனில் வேணுமோ, பார்த்து எடுங்க ம்மா?” என்று அவரிடம் கூறி விட்டு, அருகில் நின்று கொண்டாள் ருத்ராக்ஷி.

அங்கே அலமாரிகளில், வண்ணமயமான மெழுகுத்திரிகள் பலவித வடிவமைப்பு கொண்ட கண்ணாடி மற்றும் பீங்கான் குடுவைகளில், அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

கண்களைப் பறித்துக் கொண்டிருந்தவற்றை எல்லாம் பார்த்து, அதன் வெளிப்புறத்தில் இருந்து வந்த, நறுமணத்தை ரசித்து, முகர்ந்தவர்,“நல்ல மணம் வருது ம்மா!” என்றார் கவிபாரதி.

“ம்ம்… என்ன வேணுமோ எடுங்க ம்மா, எனக்கு லைப்ரரிக்குப் போக நேரமாகுது” என்று தன் அவசரத்தை அவருக்கு உணர்த்தினாள் ருத்ராக்ஷி.

“இதோ ம்மா” என நீளவாக்கில் இருந்தக் குடுவை மற்றும் உருண்டை வடிவிலான குடுவை ஒன்றையும் எடுத்து,”இது ரெண்டும் போதும் மா” என்றார்.

“இது, ரெண்டுமே தேங்காய் மெழுகில் செஞ்சது ம்மா. சோயா மெழுகில் செஞ்சதையும், பயன்படுத்திப் பாருங்க. இது என்னோட பரிசாக வச்சுக்கோங்க” என்று ஒரு உருண்டை வடிவம் கொண்ட குடுவையை எடுத்து அவரிடம் தந்தாள்.

“அச்சோ, வேணாம் மா” என்று பதறியவரிடம், “இருக்கட்டும் மா. முதல் முதலாக எங்கிட்ட மெழுகுத்திரி வாங்குறவங்களுக்கு இப்படி ஒன்னைப் பரிசாகத் தருவேன். வாங்கிக்கோங்க. ப்ளீஸ்” என்று கெஞ்சியே அவரை அதை வாங்கிக் கொள்ள வைத்து விட்டு, அதற்குரிய விலையையும் சொன்னாள் ருத்ராக்ஷி.

நியாயமான விலையாக இருக்கவும், அதற்கானப் பணத்தைக் கொடுத்து விட்டு,

“நன்றி ம்மா. உன் கூடப் பேசிட்டே நடந்து வர்றது நல்லா இருக்கு. அதனால், இப்பவும், நீயும், நானும் ஒன்னா நடந்து போகலாமா? நீ லைப்ரரிக்குப் போயிட்டு வா, நான் என் பையனைப் பாக்க வயலுக்குப் போறேன்” என்று அவளிடம் கேட்டார் கவிபாரதி.

அதற்கு ஒப்புக் கொண்டு, அவருடன் சேர்ந்து நடந்தாள் ருத்ராக்ஷி.

சில தூரம் சென்றதும்,“நீ என்னம்மா படிச்சு இருக்கிற?” என்று வினவினார்.

”நான் எம்.ஏ வரலாறு படிச்சிருக்கேன் ம்மா” என்று விடையளித்தாள்.

“நல்லது ம்மா” என்றவாறு அதற்குப் பிறகு அவளது பிறந்தகம் பற்றியெல்லாம் வினவுவது தவறாகி விடும் என எண்ணியவர்,”எங்களோட வயலுக்கு வலது கைப் பக்கம் போகனும் மா‌” என்று அவளிடம் கூறினார் கவிபாரதி.

“நீங்களும் பத்திரமாகப் போயிட்டு வாங்க ம்மா” என அவரை அனுப்பி விட்டுத், தானும் நூலகத்திற்குச் சென்று விட்டாள் ருத்ராக்ஷி.

தங்களுடைய வயலில் டிராக்டரை வைத்து உழுது கொண்டிருந்தவன், தன் அன்னை வருவதைப் பார்த்ததும்,”ம்மா, வாங்க” என வரவேற்று, டிராக்டரை அணைத்து விட்டு, அதிலிருந்து இறங்கி வந்தான் ஸ்வரூபன்.

“நீ வேலையைப் பாரு ப்பா‌. நான் போய்க் கூட உட்காந்துக்கிறேன்” என்று அவனிடம் சொன்னார் கவிபாரதி.

“அதெல்லாம் இல்லைம்மா. உழுது முடிச்ச நேரத்தில் தான், வந்திருக்கீங்க” என்றான் மகன்.

தன்னுடைய கரத்திலிருந்தப் பையை நிழலில் வைத்து விட்டுப் புல் தரையில் அமர்ந்தார் அவனது அன்னை.

“கேட்டவுடனே போய் வாங்கிட்டு வந்துட்டீங்களா?” என்று தாயிடம் கேட்டான் ஸ்வரூபன்.

“ஆமாம் ப்பா. இதோட மணம் அப்படி அருமையாக இருக்கு. அதுவும், இயற்கையான முறையில் தயாரிச்சது வேறயா? உடனே வாங்கனும்னு ஆசை, அதான்” என்றவர், தனக்கு ருத்ராக்ஷி பரிசாக ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுத்ததைப் பற்றியும் மகனிடம் உரைத்தார் கவிபாரதி.

“அப்படியா? நல்ல மனசுக்காரவங்க தான் ம்மா! நான் வீட்டுக்கு வந்து மூனையும் பாக்குறேன்” என்று அவருடன் பேசி விட்டு, மறுபடியும் வயல் வேலையைத் தொடர்ந்தான் ஸ்வரூபன்.

அவரோ, பையிலிருந்த மெழுகுத்திரிகளை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, முகர்ந்து பார்த்தவாறே இருந்தார்.

அதையும் கண்டு கொள்ளாமல் இல்லை அவரது மகன்.
____________________

“எனக்கு நாளைக்கு ஸ்கூல் லீவ், நாம எங்கே மீட் பண்ணலாம்?” என்று காஷ்மீரனுக்கு அழைத்துக் கேட்டாள் மஹாபத்ரா.

“எனக்கு ஆஃபீஸ் இருக்கே? ஒரு பிரான்ச்சை சூப்பர்வைஸ் பண்ணனும் மா” என்றான்.

“ஓகே. அப்போ இந்த மன்த் என்ட் - ல ஏதாவது ஒரு டேட் சொல்லுங்க. இல்லைன்னா கஷ்டம்” என்று தன் நிலையை அவனுக்கு உணர்த்தினாள் மஹாபத்ரா.

“கண்டிப்பாக சொல்றேன் மா. இப்போ நான் எங்களோட ஸ்டோரில் இருக்கேன், ‌அப்பறமாகப் பேசுறேன்” என்று அழைப்பை வைத்து விட்டான் காஷ்மீரன்.

- தொடரும்
 
இரண்டு ஜோடியும் அவங்க அவங்க வேலையில் தான் கவனமா இருக்காங்க 🧐 🧐 🤔 🧐

இவங்களை லவ் பண்ண வைக்குறது ரொம்ப கஷ்டம் போல 😉😃😃😄😆

ருத்ரா மெழுகுவர்த்தி வாங்க வந்தவங்களா இருந்தாலும் விருந்து உபச்சாரம் எல்லாம் பண்றா 🤗🤗🤗🤗
 
இரண்டு ஜோடியும் அவங்க அவங்க வேலையில் தான் கவனமா இருக்காங்க 🧐 🧐 🤔 🧐

இவங்களை லவ் பண்ண வைக்குறது ரொம்ப கஷ்டம் போல 😉😃😃😄😆

ருத்ரா மெழுகுவர்த்தி வாங்க வந்தவங்களா இருந்தாலும் விருந்து உபச்சாரம் எல்லாம் பண்றா 🤗🤗🤗🤗
Haha ... Ama sis... Thank you so much ❤️
 
Top