அவசரமாக தியேட்டர் உள்ளே வந்த மித்ரன், அங்கு ஓரளவு இருந்த கூட்டத்தை பார்த்து திகைத்தான். அட! நம்ம ஆதிரன் மாதிரி மத்த குழந்தைகளும் கார்டூன் வேணும்ன்னு கேட்டு இருப்பாங்களோ!.. நிறைய பேரண்ட்ஸ் வந்து இருக்காங்க.. இதுல நம்ம மேடத்தை எங்கு தேட.. என்றவாறு கண்களை ஓட விட்டான்.
கார்னர் சீட்டில் மகனோடு அமர்ந்து இருந்தாள் பிரவீனா. தனக்கு கொடுக்கப்பட்ட சீட்டை பார்த்தான் மித்ரன். அவளை விட்டு தள்ளி இருந்தது. இதற்காகவா அடித்து பிடித்து ஓடி வந்தது. அவன் மனதில் யோசனைகள் ஓட, பிரவீனாவுக்கு அடுத்த சீட் ஃப்ரீயாக தான் இருந்தது. முதலில் போய் அவர்கள் அருகில் அமருவோம், அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவன், எதுவும் தெரியாதது போல அவள் அருகில் பட்டென்று அமர்ந்து கொண்டான்.
மித்ரன், அவளை கண்டு கொள்ளாதது போல இருக்க.. யாரோ தன் அருகில் இருக்கும் சீட்டில் அமர்வதை உணர்ந்து திரும்பி பார்த்தவள்,
“சார் நீங்களா? உங்க ப்ரெண்ட் எங்க? இந்த படத்துக்கா வந்து இருக்கீங்க…” என்று கேட்க.
“ஹாய் பிரவீனா. சும்மா தான் டிஃபரண்டா ட்ரை பண்ணலாம்ன்னு.. அப்புறம் அவங்க என் ஃப்ரெண்ட் கிடையாது. என்னோட சிஸ்டர் முறை ரிலேட்டிவ்…” அசால்டாக பொய் சொன்னான்.
அவனுக்கு பிரவீனாவிடம் தன் மதிப்பு குறைவதை விரும்பவில்லை.
“அப்படியா சார், உங்க சிஸ்டரா?…” அவன் சொன்னதை உண்மையாக நம்பினாள்.
“அப்பாவி பெண் தான் போல.. என்ன சொன்னாலும் நம்புது..” என்று நினைத்து கொண்டவன், ஆதிரனை நோக்கி,
“ஹாய் அத்து..”
“ஹாய் மித்து..” என்றான் சின்னவன்.
“நான் இன்னைக்கு தான் இந்த படம் பாக்குறேன். எனக்கு ஒன்னுமே தெரியாது. நீங்க சொல்லி தாரீங்களா?…” ஆதிரனை பெரிய மனிதனாக வைத்து மித்ரன் கேட்கவும்,
“ஓஹ! எனக்கு எல்லாம் தெரியும் மித்து.. டோண்ட் வொர்ரி, நான் ஸ்டோரி சொல்றேன்..” அவனும் பெரிய மனித தோரணையில் பேச, மித்ரன் முகத்தில் புன்னகை விரிந்தது.
ஓகே டன். நம்ம ரெண்டு பேரும் ஜாயின் பண்ணிப்போம். பிரவீனா மேடம்.. நீங்க அந்த சீட் போயிட்டு, ஆதிரனை இந்த சீட்டு அனுப்புங்க…” என்று சொல்ல,
மித்ரன் மீது இருந்த மரியாதை இன்னும் பெருகியது பிரவீனாவுக்கு.. அருகருகே உட்கார்ந்து அவளை சங்கடப்படுத்தாமல் நடுவில் ஆதரனை அமர்த்திக் கொண்டான் மித்ரன். பிரவீனா, மகன் சொல்லும் ஸ்டோரியை கேட்கவே அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டாள். இதில் எங்கிருந்து படம் பார்க்க.. எல்லாம் மகனுக்காக தான். இதில் ஆதிரன் பொறுப்பை மித்திரன் ஏற்றுக்கொள்ள.. அவள் தன் போனை எடுத்துக் கொண்டாள். பிரவீனாவுக்கு பெரிதாக சினிமாவில் எல்லாம் ஆர்வம் இருக்காது.
ஆதிரன் ஆர்வமாக படத்தைப் பார்த்து கதையை சொல்ல, அவன் சொல்வது ஒன்று கூட புரியவில்லை மித்திரனுக்கு.. தத்து புத்து என்று எண்ணத்தவோ உளறிக் கொண்டிருந்தான். அப்படித்தான் மித்ரன் நினைத்தான். ஆனால், அவன் கதை சொன்ன விதம், முகபாவனை, சிரிப்பு எல்லாம் மித்ரனை கவர, அவனோடு ஐக்கியமாகி விட்டான்.
பிரேக் விடும் போதும் ஆதிரனை தூக்கிக் கொண்டு மித்ரன் நகர, பிரவீனா மிக சங்கடப்பட்டு விட்டாள். வந்த போதே வாங்கி கொடுத்திருந்தான். இப்போதும், இவனே வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்காது என்றறிந்து..
“சார் நீங்க இருங்க. நான் அவனை கூட்டிட்டு போறேன்..” என்று எழுந்து கொள்ள,
“பிரவீனா விடுங்க, அவன் சின்ன குழந்தை அவனுக்கு வாங்கி கொடுக்கறதுல என்ன இருக்கு.. அதோட எனக்கு அவன் கூட இருக்க ரொம்ப புடிச்சிருக்கு.. நான் கொஞ்சம் அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண விரும்புகிறேன். என்னவோ ஒரு மாதிரி வாழ்க்கையே போர் அடிக்குது. ஆதிரன் கூட கொஞ்சம் நல்லா இருக்கு ப்ளீஸ்..” என்றதும் விட்டு விட்டாள்.
உன்னோடு டைம் ஸ்பெண்ட் பண்ண விரும்புகிறேன் என்று சொல்லியிருந்தால் அதை தவறாக நினைக்கலாம். ஆதிரன் சின்ன குழந்தை, அவனோடு இருக்க விரும்புவதை தவறாக எப்படி நினைக்க.. அவள் ஒன்றும் சொல்லாமல் மித்ரனுக்கு வழி விட்டாள்.
அடுத்து படம் முடியும் வரையும் மித்திரனும், ஆதிரனும் ஒன்றாகவே இருந்தார்கள். ஆதிரன் சொன்னதன் பொருளை உணராமல் அவன் சொல்லிய விதத்திலே சிரித்துக்கொண்டிருந்தான் மித்ரன். பிள்ளை மொழி அவனை ஈர்த்தது. தன்னை ஒரு பெரிய மனிதனாக கருதி, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு மித்ரனுக்கு விளக்கம் கொடுத்தான் ஆதிரன். அவனின் அந்தத் தன்மையை வாட விடாமல் அவனோடு ஒட்டி நடந்தால் மித்ரன்.
படம் முடிந்து வெளியே வந்த பின்னும் ஆதிரனை விடாமல் தூக்கிக் கொண்டு மித்ரன் நடக்க.. புரியாமல் அவர்கள் பின்னோடு சென்றாள் பிரவீனா. மித்ரன் ஃபுட் கோர்ட் நோக்கி நகர்வதை பார்த்ததும்,
“சார் ப்ளீஸ் நாங்க வீட்டுக்கு போகணும். வீட்டிலேயே லன்ச் ரெடி பண்ணி வச்சுட்டு தான் வந்தேன். அதோட ஸ்நாக்ஸ் இங்க நிறைய சாப்பிட்டு இருக்கான்..” என்று பரவீ சொல்ல,
“இன்னைக்கு ஒரு நாள் தானே பிரவீனா மேடம். குழந்தைகள் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம். ரொம்ப யோசிக்காதீங்க வாங்க..” என்றவாறு மித்ரன் முன்னோக்கி வேகமாக நகர்ந்துவிட்டான்.
பிரவீனா முகம் சுருங்கி போனது.. மித்ரன் ஓரளவுக்கு நல்லவன் தான். அதற்காக அதிக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறானோ என்ற நினைப்பு ஓட ஆரம்பித்தது. நட்பாக பழகினாலும் அது எல்லாம் ஒரு எல்லைக்குள் தானே.. அவன் இஷ்டத்திற்கு தங்களை இழுப்பது என்ன பழக்கம்? முக சுருக்கத்தோடு தான் வந்த அமர்ந்தாள் பிரவீனா.
அவள் முகம் சுருங்குவதை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டான் மித்ரன். அவனுக்கு இவர்களோடு டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும். முக்கியமாக ஆதிரனோடு… அவன் மனமே ஒரு கட்டுப்பாட்டை போட்டு அதை அவனை உடைத்து கொண்டு ஓடினான். தன் கட்டுப்பாட்டை மீறியும் மனம் பிரவீனாவிடம் செல்வதே தடுக்க முடியவில்லை. அவள் அளவில், அவள் எல்லையில் அவள் சரியாகத்தான் இருக்கிறாள். இவனும் இருக்க நினைக்கிறான். ஆனால் முடியத்தான் இல்லை.
“பணம் நான் கொடுக்கிறேன் சார். ப்ளீஸ்..” என்று பிரவீனா சொல்ல, தடுக்கவில்லை மித்திரன். அவன் அறிவான்.. அவள் இயல்புக்கு மீறி தன் மீது உள்ள மரியாதைக்காக விட்டுக் கொடுக்கிறாள். தன் நடத்தை கொஞ்சம் அதிகப்படி என்றும் அவனுக்கு தெரியும்.
பிரவீனா மகனுக்கு சாப்பாடு ஊட்டி விட, அவர்களையே பார்த்து அமர்ந்திருந்தால் மித்ரன். இவன் வசதி என்பதையும் தாண்டி பணக்கார வர்க்கம். இந்த மாதிரியான அன்யோனியத்தை அவர்கள் வீட்டில் அவன் பார்த்ததில்லை. ஓரளவு நன்றாக விவரம் தெரிந்து ஒட்டும் வயதிலே தனியாக சென்று விட்டதால் பெரிதாக அம்மாவோடு பிணைப்பெல்லாம் இல்லை.
ஆனால், பிரவீனா ஒரு சிறந்த தாய். அவள் எங்கு இருந்தாலும் அவள் கண் பார்வை மகனை சுற்றியே தான் இருக்கும். ஓரிரு முறை தான் பார்த்திருக்கிறான். அவனே நன்றாக அறியும் அளவுக்கு பிரவீனா பிடி முழுக்க மகன் மீதுதான். இதுதான் அவரின் தனித்தன்மை. இந்தப் பண்புதான் மித்ரனை ஈர்த்ததும்…
“என்ன பாத்தா அப்படி சொல்றீங்க. எனக்கெனவோ எல்லாரும் என்ன பார்த்து அனுதாபப்படுற மாதிரியும், பரிதாபப்படுற மாதிரியும் தான் தெரியும்..” இயலாமை அவள் முகத்தில் தெரிந்தது.
“உண்மையா தான் சொல்றேன். பெரிய எதிர்பார்ப்பு எதுவுமில்லை உங்களுக்கு.. மகன் மட்டும் தான். அவனை சுத்தியே உங்க வாழ்க்கை. அவ்வளவு தான் இல்லையா?…”
“உண்மைதான் சார். எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல அதற்கு காரணம் நிறைய நிறைய எதிர்பார்த்து ஏமாந்து போனதால இருக்கலாம். என் மகனை சுத்தி தான் என் வாழ்க்கை.. அதற்கும் காரணம் இருக்கு, அது என்னன்னா எனக்கு என் மகன் மட்டும் இருக்கான். என்ன சுத்தி எல்லாம் சொந்தமும் இருக்கு ஆனா எனக்கு நீ இருக்கிறது என் மகன் மட்டும்தான். அதனாலதான் அவன் என் வாழ்க்கையா இருக்கான்…” முகத்தில் இயலாமை இருந்தது.
“உங்களுக்காவது உங்க மகன் இருக்கான் பிரவீனா. ஆனா, எனக்கெல்லாம் யாருமே இல்லாத ஒரு ஃபீல் தான் இருக்கு?.. எனக்கும் அம்மா, அப்பா, கூட பொறந்தவங்க, சொந்தம் எல்லாம் இருந்தும் என்னவோ ஒரு விரக்தி” அவன் முகத்திலும் இயலாமை இருந்தது.
“அப்படியா சொல்றீங்க எனக்கு என்னமோ நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி தான் நினைக்கிறேன்…”
“அப்படியா நான் என்ன அதிர்ஷ்டசாலி?…” என்று கேட்க.
“பின்ன இல்லையா? நல்ல படிப்பு, படிப்புக்கு தகுந்த நிறைவான வேலை, கை நிறைய சம்பளம்.. எதிர்காலத்தை பத்தி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம். உங்க வாழ்க்கை முழு செட்டில்டு, சேஃப்டி. வேற என்ன வேணும்? எங்கள மாதிரி நடுத்தரமா இருக்குற பாதி பேரு தேடி ஓடிட்டு இருக்கிறது, நீங்க வாழ்ற இந்த வாழ்க்கைக்காகத்தான்…”
அவன் முகத்தை பார்த்தவள், “எனக்கு என்ன தோணுதுனா உங்களுக்கு எல்லாமே நிறைவா இருக்கு. அதனால தான் உங்களுக்கு வாழ்க்கையில விரக்தி வந்திருச்சுன்னு நினைக்கிறேன். எங்களை மாதிரி அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு ஓடுற வாழ்க்கையா இருந்தா.. நீங்க இப்படி நினைக்க மாட்டீங்க போல…” லேசான சிரிப்போடு சொல்ல,
“நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். எனக்கு புடிச்ச படிப்பு, எனக்கு புடிச்ச வேலை, எனக்கு விருப்பமான வாழ்க்கை. அப்படித்தான் இவ்ளோ நாளா ஓடிட்டு இருக்கேன். பட் என்னவோ தெரியல பிரவீனா கொஞ்ச நாளா என்னவோ விரக்தி. எதிலுமே பெருசா ஆர்வமே இல்லை. என்னடா வாழ்க்கை இது அப்படின்னு தோண ஆரம்பிச்சிருச்சு…” சோகமாக சொன்னான் மித்ரன்.
“நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க சார். நீங்க என்கிட்ட இவ்ளோ பேசினனால நான் சொல்றேன். உங்களோட வாழ்க்கை முறை தப்பா இருக்கு…” என்றதும், மித்ரன் அவளை முறைத்து பார்க்க,
“நாம சின்ன வயசுல பாட்டி சொன்ன கதை கேட்டு இருப்போம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா. ஏழு மலைகளுக்கு அந்தப் பக்கம் ஒரு கூட்டுக்குள்ள புதையல் இருக்குமாம். அந்த புதையலை தேடி ராஜா அந்த ஏழுமலையும் கடக்கனுமாம். அப்படி கடக்கும்போது நிறைய சண்டை போட்டு, பல பிரச்சனை தாண்டி அப்புறம் தான் போய் அந்த புதையலை தொட முடியுமாம்!.. வாழ்க்கை கூட அப்படித்தான். நிறைவான சந்தோஷத்துக்கு முன்னோடி சடுதியான கஷ்டங்கள் தான். நீங்க உங்க வாழ்க்கை ரொம்ப இலகுவா, லேசா கொண்டு போக நினைச்சீங்க. ஆனா, அதுவே ஒரு கட்டத்தில் உங்களுக்கு விரக்தியை கொடுத்துருச்சு பாத்திங்களா?…”
“உண்மைதான் பிரவீனா மேடம். ஆனா, நான் அப்படித்தானே வாழ்ந்திருக்கேன். நான் பழகுன சூழலும் அப்படித்தான். சில விஷயங்கள் எனக்கு தப்புன்னு தெரிஞ்சாலும், என் வாழ்க்கை முறை இதுதான். இப்படி இருக்கத்தான் நான் விரும்புறேன். ஆனா, இந்த கொஞ்ச நாளா தான் ஏதோ எதிலுமே பிடிப்பில்லாமல் இருக்கு.. காரணமே இல்லாத கோபம், தூங்கி எழுந்தாலே மனசு அழுத்தமா இருக்கு, என்னடா வாழ்க்கை. எதை நோக்கி போறதுன்னே தெரியல. எதோ பேருக்கு எழுந்து ஆபிஸ், வேலை, வாழ்க்கை ஓடிட்டு இருக்கு…”
“அப்படி ஏனோ தானோன்னு இருக்கிற எனக்கு, உங்கள பார்க்கும் போது கொஞ்சம் பொறாமை தான். ஆதிரன் நிஜமாவே சூப்பர்.. ஒரு பிசியான ஷெடுல் லைஃப் நீங்க ஓடிட்டு இருக்கீங்க. நான் மந்தமா இருக்கேன். அதான்…”
“மித்ரன் சார், உங்களுக்கு கடவுள் கொடுத்தது ரொம்ப நல்லா அழகான வாழ்க்கை. அதை சரியா அமைச்சுக்க தெரியாம, நீங்க நிறைய தடுமாறிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் அமைதியா பொறுமையா யோசிங்க. லைஃப் ஸ்டெடியா கொண்டு போங்க. நம்ம கலாச்சாரத்தில் பிறந்துட்டு, வெளிநாட்டு கலாச்சாரத்துல வளர நிறைய பேரு உங்கள மாதிரி தான். வயசு இருக்கும்போது ஒரே கொண்டாட்டம். வயசு போன பின்னாடி தான் சொந்த ஊர், மக்கள், நம்ம நாடு எல்லாம் ஞாபகம் வரும். நீங்க பார்த்து பொறாமை படுற அளவுக்கு எல்லாம் என் வாழ்க்கை விருச்சமா இல்ல.. நீங்க சொல்ற விரத்தின்றக்கு முழுமையான அர்த்தம் என் வாழ்க்கை தான்”
“உங்கள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நினைச்சது நடக்காம போனாலே வாழ்க்கை விரக்தி ஆயிடுது. என் வாழ்க்கையில நடந்ததுக்கெல்லாம் விரக்தி ஓட உச்சத்தை தொட்டது நானா தான் இருப்பேன்…” என்று பிரவீனா சொன்னதும்,
“உங்க கணவர் உங்களுக்கு இல்லாமா போனதை பத்தி சொல்றீங்களா…” என்றான் மித்ரன்.
“கணவர் இல்லை. தனியா இருக்கேன்றது ஒரு ஸ்டேட்மெண்ட். ஆனா, அந்த வலி. அதை கடக்கவே முடியாது. அந்த சூழ்நிலையை இப்போ நினைச்சாலும் என் நெஞ்சே ஆடும். நான் கூட்டு குடும்பத்தில் தான் இருந்தேன். ஆதிரன் பிறந்து மூணு மாசம் இருக்கும். அம்மா வீட்டில் இருக்கேன். திடீர்னு போன் வருது இந்த மாதிரி உன் புருசனுக்கு உடம்பு முடியலன்னு.. பதறிப் போய் அடிச்சு புடிச்சு ஓடி வந்தா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தாங்க… கைக்குழந்தைய வச்சுக்கிட்டு ஒரு வாரம் அங்க தான் இருந்தேன். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்துட்டோம்…”
“அவர்.. இளங்கோ, என்ன பிரச்சினை?..” என்றான் மித்ரன்.
“லங்ஸ் பிராப்ளம்.. மூச்சு விடுறதுக்கு நிறைய சிரம்மம். அப்புறமும் என்னன்னமோ சொன்னாங்க. எனக்கு அந்த நிலைமையில எதையும் ஆராய தோணல.. எப்படியாவது என் புருஷன காப்பாத்தணும்னு தான் நினைச்சேன். குழந்தை பெத்த பொண்ணுக்கு கிடைக்கிற எந்த சௌகரியமும், வசதியும் எனக்கும், என் பையனுக்கும் கிடைக்கல”
“ஆதிரனுக்கு அஞ்சு மாசம் ஆகுற வரைக்கும் வீட்டுல தான் இருந்தாரு.. நானும் அத்தையும் தான் பாத்துக்கிட்டோம். நிறைய சிரமம் கைக்குழந்தை வச்சுக்கிட்டு.. எனக்கும் முடியாத உடம்பு, நிறைய விசயங்களை மனைவி தான் கூட நிக்க முடியும். நான் எல்லாத்தையும் சமாளிச்சேன். என் புருஷன் நல்லா வந்தா போதும்ன்னு வேண்டுதல் மட்டும்தான்…”
பிரவீனா வாழ்க்கையின் துக்கமான பக்கங்களை கேட்க மனதளவில் தன்னை தயார்படுத்தினான் மித்ரன். கேள்வி கேட்டு, பதிலாக எல்லாம் பிரவீனா சொல்ல மாட்டாள். அவளாக மனம் உடைந்து பேசினால் தான் உண்டு. இன்று அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஆதிரனுக்கு நல்ல காய்ச்சல். கையில வச்சே நடந்துட்டு இருக்கேன். ராத்திரி பன்னிரெண்டு மணி இருக்கும். சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்தவர் தான். ஒரு மணி நேரத்துல நிக்காம வாந்தி.. வாந்தியோடவே ரத்தமும் சேர்ந்து வர, திரும்பவும் பயந்து போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிட்டோம். வெண்டிலேட்டர்ல வச்சாங்க. அப்பல்லாம் அவர் பேசுறாரு என்னை ஞாபகம் இருக்கு. பிரவீ, தம்பிக்கு காய்ச்சல் நீ வீட்டுக்கு போ நான் சமாளிச்சுப்பேன். அப்படின்னு எல்லாம் நல்லா தான் சொன்னாரு…” லேசாக கண் கலங்கியது அவளுக்கு…
அவள் முகம் பார்த்ததும் மித்ரனுக்கு நிறைய வருத்தம்.
“அப்புறமா ஒரு வாரம் போச்சு. நிறைய டெஸ்ட் அது இதுன்னு எடுத்தாங்க. நான் கூட்டு குடும்பத்தில் இருந்ததால என் வீட்டுக்காரருக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா இருக்காங்க. சோ நிறைய பணம் பொதுவில் எடுத்து செலவு பண்ண முடியல.. நான் ரொம்ப யோசிக்கல, பட்டுனு என்கிட்ட இருக்குற நகை எல்லாம் அடகு வைக்கல வித்துட்டேன். எனக்கு ஓரளவு தெரிஞ்சுச்சு மித்திரன் சார் கொஞ்சம் கிரிட்டிக்கல் தான் நிறைய பணம் செலவாகுன்னு.. எனக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம். அதனால நான் பணம் போனா போயிட்டு போது.. என் வீட்டுக்காரர் நல்லா வந்தா போதும் மட்டும் தான் நினைச்சேன்…”
ஆதிரன் உறங்கி விழ, பிரவீனா மெல்ல மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள். மகனின் தலை கோதி கொடுத்தவள்,
“இவன் குழந்தையா இருந்ததாலோ என்னவோ.. இவனால அவங்க அப்பாவ உணரவே முடியல. இவன் பிறந்து பத்து மாசம் வரைக்கும் அவங்க அப்பா இருந்தாலும், இவனுக்கு அவங்க அப்பாவை பத்தின ஞாபகம் எல்லாம் நிறைய கிடையாது. அவரும் தூக்கி கொஞ்சனதில்ல.. நிறைய பணம் செலவாச்சு, யாரையும் எதிர்பார்க்காம நானே முன்ன நின்னேன். ஹாஸ்பிடல்லே வச்சு தான் பார்த்தோம். அன்னைக்கு சீப் டாக்டர் என்னை பாக்க வர சொல்றாங்க. ஆதிரன் ஆறு மாச குழந்தை. அவனையும் தூக்கிட்டு தான் போறேன்.. டாக்டர் சொல்றாங்க, சாரிமா பிரவீனா. இனி, உன் வீட்டுக்காரர் காப்பாற்றுவது கஷ்டம். அவரோட வாழ்க்கை அவ்வளவுதான் முடிஞ்சது. எவ்வளவு நாள் மாதம் சொல்ல முடியாதுன்னு…”
மித்ரன் பிரவீனா முகத்தையே பார்த்திருந்தான். அழுகவில்லை.. ஆனால், நிறைய வேதனை அவள் முகத்தில் இருந்தது.
“ஆறு மாசம் கைக்குழந்தைய வச்சிட்டு அவர்தான் வாழ்க்கை என்று நான் நிக்கிறேன். ஆனா, இனி அவருக்கு வாழ்க்கையே இல்லை. நீ தனியாத்தான் பார்க்கணும் சொல்லும்போது.. நான் என்ன மாதிரியான ஒரு விரக்தி நிலையில் இருந்தேன்னு சொல்ல வார்த்தையே இல்லை. அழுக தோணல, பேச தோணல ஒரு மாதிரி உடைந்து போயிட்டேன். திக்கு தெரியாம நின்னுட்டேன். அப்படி தான் சொல்லணும்..” என்று முழு அமைதியாகி விட்டாள்.
“அப்புறம் என்ன ஆச்சு பிரவீனா?…” கேட்டான் மித்ரன். அவனால், அவள் வலியை உணர முடிந்தது.
“என்ன ஆகும். கடவுளை விட்டா வேற வழி…” விரக்தி அவள் குரலில்..
“ஆதிரனை முழுசா எங்க அம்மாகிட்ட விட்டுட்டேன். எப்படியாவது அவரை காப்பாத்தி கொண்டு வந்துடனும்னு ஒரு வெறி.. என் தாலி முதல்ல கொண்டு வித்துட்டேன். பைத்தியம் புடிச்ச மாதிரி என் புருசன் பின்னாடியே திரிஞ்சேன். இதுதான் ஆனதுக்கு அப்புறம் எதுக்கு இவ்வளவு போராடனும்னு எல்லாரும் சொல்ல தொடங்கிட்டாங்க. ஆனா நான் விடல.. அவர் எப்படியும் காப்பாத்திடனும்னு நினைச்சேன்…” ஒரு பெருமூச்சு விட்டு, வாயை இறுக்கமாக மூடி வலியை அடக்கினாள்.
“அடுத்தடுத்த நாள்ல அவருக்கு நினைவு தப்பி போச்சு. முழு படுக்கை தான். நான் யாருன்னு கூட அவருக்கு தெரியல.. நான் விடல ஹாஸ்பிடல், அவரை பாத்துக்கிறது, சாமி, விரதம்ன்னு ஒரு மாதிரி சுழல்ல சிக்கன மாதிரி ஓடிட்டு இருந்தேன். ராத்திரி ஒரு மணி இருக்கும் ஹாஸ்பிடல்ல தனியா ரூம் குடுப்பாங்க.. அங்க தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால அவர பாத்துட்டு வந்து கண்ணசந்து இருக்கேன். நர்ஸ் வாங்க டாக்டர் கூப்பிடுகிறாங்கன்னு சொல்லவும் போனேன்.. டாக்டர் பெருசா எதுவும் சொல்லல, முன்னாடியே எந்த ஹோப்பும் கொடுக்கல தானே. பல்ஸ் குறையுதுமா, அவர் கூடவே இருங்கன்னு சொன்னார். எனக்கு புரிஞ்சிடுச்சு. கால் எடுத்து வச்சு, அந்த ரூம்குள்ள போகவே எனக்கு மனசு வரல. ஆனாலும், இந்த உலக வாழ்க்கையில அவருக்கான கடைசி நொடி. இவ்வளவு நாள் கூட இருந்துட்டு, அந்த நேரம் அவர அனாதையா விட்டுட கூடாதுன்னு ஒரு நினைப்பு. தைரியத்தை திரட்டிட்டு அவரை போய் பார்த்தேன்…”
மித்ரன், இளங்கோவை உணரவில்லை. அவன் உணர்ந்தது பிரவீனா வலியை… இப்படி ஒரு அன்பு ஒரு தாலி கயிற்றால் சாத்தியமா?.. தாம்பத்திய சொந்தம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா என்ன?…
“அவர்கிட்ட பேச்சு மூச்சே இல்ல. கண்ணு மட்டும் திறந்திருந்துச்சு. அதுல லேசா ஒரு அசைவு. அவர் கைய புடிச்சுட்டு நானும் அமைதியா உட்கார்ந்துட்டேன். அவரோட பார்வையும் என் மேல தான், என்னோட பார்வையும் அவர் மேல தான்.. எங்க கல்யாண வாழ்க்கையில அன்பா, சந்தோஷமா, காதலா கூட ஒருத்தர ஒருத்தர் அவ்ளோ நேரம் பார்த்து கிட்டதில்லை. காலைல மூணு மணி இருக்கும். என் கைய லேசா அழுத்தினா மாதிரி இருந்துச்சு. அப்புறம் மெல்ல அடங்கி போயிட்டாரு…”
“நான் உணர்ந்துட்டேன். எனக்கு முதல்ல அழுகை கூட வரல.. அவரத்தான் இன்ச் பை இன்ச்சா கண்ணுல சேமிச்சு வச்சுகிட்டேன்… நேரம் போகவும் நானா போன் பண்ணி ஒவ்வொருத்தருக்கும் சொல்றேன். இந்த மாதிரி அவருக்கு தவறிவிட்டார்ன்னு.. அதெல்லாம் அவ்வளவு வலி… ஆதிரன் ஒரு வயசு கூட ஆகல. அவங்க அப்பாவுக்கு கொள்ளி வச்சான். வாழ்க்கையே இருண்டு போச்சு எத்தனை சொந்தம் இருந்தாலும், நான் பார்த்துக்கிறேன்னு எவ்வளவு பேர் கூட நின்றாலும் கடைசி வரைக்கும் நிக்க வேண்டிய ஒருத்தர நான் இழந்துட்டு நின்னுட்டேன். அவரோடு எனக்கான எல்லாம் போச்சு. எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கும் போது, கையில இருந்தது இவன் மட்டும் தான். இவனுக்காகவாது நீ வாழ தான் வேணும்னு ஒரு கட்டாயம் இந்த வாழ்க்கை எனக்கு…”
மித்ரன் தொண்டைக்குழி ஏறி இறங்கியது. இப்படி ஒரு வலி நிறைந்த வாழ்க்கை எல்லாம் அவள் வாயால் சொல்லும் போதே கேட்க முடியவில்லை. உண்மையில் அவள் எல்லாம் அனுபவித்து கடந்து வந்திருக்கிறாள்.
“காலமும் போய் ஆதிரன் மட்டும் தான் எனக்குன்னு, நான் நிக்கும் போது என் கையில் எதுவுமே இல்லை. நான் படிச்ச படிப்பை தவிர.. நகை போச்சு, சொந்த வீடு இல்ல, பணம் இல்ல, ஆதரிக்க உறவும் இல்லை. இவ்வளவு பெரிய கஷ்டத்துக்கு அப்புறமும் என் வாழ்க்கை போராட்டம் தான். எதுவுமே இல்லாம என்னை நம்பி இருக்கிற என் பையனுக்காக நான் ஓடிட்டு இருக்கேன். என்னை மாதிரி இங்கே எத்தனை பேரு இருக்காங்க… நாங்க வாழ்ந்துட்டு இருக்க விரக்தியான வாழ்க்கையை விடவா, உங்க வாழ்க்கை உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருச்சு. ஒரு காய்ச்சல் வந்தாலும் ரெண்டு நாளைக்கு மேல தாங்க முடியல. இந்த வாழ்க்கையை நாங்க சாகுற வரைக்கும் வாழணும். அதுவும் தனியா.. இப்ப சொல்லுங்க மித்திரன். உங்க வாழ்க்கை உங்களுக்கு கஷ்டமாவா இருக்கு. எங்கள மாதிரி பெண்களை விட?…” என்று பிரவீனா சொன்னதும், அவளை அணைத்து ஆறுதல் படுத்த எழுந்த கரங்களை அடக்கிக் கொண்டு அவளையே பார்த்து இருந்தால் மித்ரன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.