இளந்திரையனினின் அதட்டலில் மாதவி கொஞ்சம் அடங்கிப்போக வஞ்சி காஃபியைக் கொண்டு வந்து கொடுக்க அமைதியாக வாங்கினார். காஃபியைக் குடித்து முடிக்கவும் அவரை குளிக்கப் போக சொல்லிவிட்டு இளாவும் பூஸ்ட் குடித்து குளிக்கப் போக கமலி அதற்குள் குளித்தே முடித்திருந்தாள்.
“என்ன அத்தாச்சி வந்தப்போ நல்லா இருந்த, இப்போ டல்லா இருக்க?” என்றபடி வஞ்சியின் அருகே வந்து நின்றாள் கமலி.
“ஒன்னுமில்ல கல்யாணப்பொண்ணே” என்று முயன்று முறுவல் செய்தவள்
“உனக்காக வாங்கின திங்க்ஸ் எல்லாம் பெட்ரூம்ல இருக்கு, எடுத்துப் பாரு, எதாவது பிடிக்கலைன்னா சொல்லு வேற வாங்கிக்கலாம், இல்ல இன்னும் வேற என்ன வேணும்னு பாரு” என்றாள்.
“அத்தாச்சி அதெல்லாம் பார்க்கலாம் எங்கம்மா கொஞ்சம் தூங்கட்டும், அது மாதிரி இது எல்லாம் இங்கேயே இருக்கட்டும், நான் டிரைக்டா என் மாமியார் வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்டுறேன், எங்கம்மா கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடலாம் கூடவே ஏன் அதை தூக்கிட்டு அலையனும்” என்று சிரிப்புடன் கமலி சொல்ல
“விவரம்தான் டி நீ” என்று வஞ்சியும் சிரித்தவள்
“ப்ச், பாரு உனக்குக் காஃபி வைச்சேன்” என்றவள் அது கொஞ்சம் ஆறியிருக்க மீண்டும் சூடு செய்து கொடுத்து கமலி குடிக்கவும்
“பரவாயில்ல நீயாச்சும் சீக்கிரம் குளிச்சியே, உங்கண்ணா குளிக்க போனா அரை மணி நேரம் ஆகுது” என்றதும் கமலிக்குப் புரையேறும் அளவு சிரித்தவள்
“அவன் பல்லு விளக்கவே அரை மணி நேரம் ஆக்குவான் நீ வேற” என்றாள் கமலி. அம்மாவும் அண்ணாவும் வருகிறார்களா என்று பார்த்தவள்
“கமலி, உங்கம்மாவும் சரி உங்கண்ணாவும் சரி உனக்குக் கல்யாணம்ன்ற காரணத்தால மட்டும்தான் என்னைப் பார்க்க வந்திருக்காங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி உனக்குக் கௌரவமா இருக்கனும்னு நினைச்சுத்தான் வந்திருக்காங்க” என்ற வஞ்சியின் பேச்சை கமலி ஏற்கவில்லை.
“உனக்கு எங்கண்ணாவைத் தெரியல அத்தாச்சி, அவன் என்ன பாசமலர் சிவாஜியா? இல்லை எங்கப்பாவா? நோ நோ, அவனுக்குப் பிடிச்சவாசிதான் அவன் உங்கூட இருக்கான், எனக்காக எல்லாம் அவன் இறங்கி வர ஆளே கிடையாது, எங்கம்மா வேணும்னா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி மருமக கூட இல்லைன்னா கௌரவமா இருக்காதுன்னு உன்னைக் கூப்பிட வந்திருக்கலாம், ஆனா எங்கண்ணன் சான்ஸே இல்லை” என்றாள் அவ்வளவு உறுதியுடன்.
கமலியும் ஒரு சுடிதாருக்கு மாறி வந்தவள் வஞ்சியிடம் மெதுவாக,
“பார்த்தியா அத்தாச்சி அவனை? எப்படி சமாளிக்கிறான் பாரேன்” என்றாள் அண்ணனின் சாதுர்யம் கண்டு. வஞ்சி ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். இவர்களுக்கு உணவு எடுத்து வைத்தவள் உடை மாற்றி வந்தாள்.
அவள் புடவையில் வர, இளந்திரையனின் பார்வை முழுவதையும் தன் பக்கம் ஈர்த்தாள் அவனின் அத்தைப் பெற்ற தத்தை, முதன்முதலில் அவளை புடவையில் பார்க்க, அதுவரை அகத்தின் ஈர்ப்பில் இருந்தவனை புறத்தே ஈர்த்தாள் பெண். விழிகள் நங்கையிடம் மட்டுமே நிலைப்பெற்றிருக்க
“அண்ணா, உனக்கு இட்லி போதுமா?” என்ற கமலியின் கேள்வியில் நிலைப்பெற்றவன்
“ஹான் போதும்” என்றவன் சிரமப்பட்டு பார்வையை அடக்கினான். அதன்பின் எல்லாரும் தயாராகி கமலிக்குப் புடவை எடுக்கப் போனார்கள், அவர்கள் சென்று காத்திருக்க பத்து நிமிடத்தில் மாப்பிள்ளை வீட்டினரும் வந்துவிட, ஸ்ரீனிவாசனின் பார்வை ரகசியமாய்க் கமலியைத் தீண்ட, அதைக் கமலி கவனித்தாளோ இல்லையோ இளந்திரையனின் பார்வையில் விழ, அவனுக்குள் சில ஏக்கங்கள்.
‘இது போல் எல்லாம் அவனின் திருமணம் நடக்கவில்லையே?’ என்ற எண்ணமும் ஏக்கம் ஒருங்கே சேர முயன்று மனதை அடக்கினான். அவனின் பார்வை வஞ்சியைப் பார்க்க, அவள் இவனைக் கொஞ்சமும் பார்க்கவில்லை கமலியுடனே சுற்றினாள்.
திருமண பட்டு எடுக்கும் பிரிவுக்குப் போய் புடவையைப் பார்க்கத் தொடங்கினார்கள். கமலியின் வருங்கால மாமியார் பிருந்தா,
“உனக்கு எப்படி பிடிக்குதோ எடுத்துக்கோ கமலி” என்று சொல்லிவிட
“உனக்குப் பிடிச்சதைப் பாரு கமலி, ஒரே மருமக நீ எங்களுக்கு, பொண்ணும் கூட இல்லை, நீ விலையெல்லாம் பார்க்கவேண்டாம்டா” என்றார் பிருந்தா வாஞ்சையுடன். அவள் ஒவ்வொன்றாய்ப் பார்க்க வஞ்சியும் கமலிக்கு எது நன்றாய் இருக்குமென பார்த்து பார்த்து உதவினாள். வஞ்சுளவல்லியைப் பார்த்த பிருந்தா,
“உன் கல்யாணத்துக்கு எங்கம்மா புடவை எடுத்தீங்க? எது மாதிரி டிசைன்மா” என்று பேச்சுவாக்கில் கேட்க
அவள் என்ன பதில் சொல்வதென தெரியாமல் பார்க்க, உடனே மாதவி
அவருக்கு எங்கே வஞ்சிக்குப் புடவை என்று ஒன்று எடுக்கவில்லை என்று சொன்னால் தன் மகளுக்குக் குறைவாய் எடுப்பார்களோ என்ற யோசனையில் அப்படி சொல்ல, இளந்திரையனுக்கோ அம்மாவின் பேச்சில் நிறைய கோபம், இப்படி ஏன் பொய் சொல்கிறார் என. ஆனால் வஞ்சுளவல்லி கண்டுகொள்ளவில்லை, அவள் கமலியிடம் கவனம் செலுத்தினாள்.
“அத்தாச்சி! அவங்களுக்கு என்ன புடவைப் பிடிச்சிருக்குன்னு கேளேன்” என்று வஞ்சியிடம் முணுமுணுத்தாள் கமலி. வஞ்சி உடனே இளாவின் பக்கம் பார்க்க, அவன் தான் இவள் பார்வைக்கு ஏங்கி நின்றானே, உடனே இவளருகே வந்து நிற்க
“கமலி மாப்பிள்ளைக்கு என்ன புடவை பிடிச்சிருக்குன்னு கேட்கிறா, கேட்டு சொல்லுங்க” என்றதும் அவன் முகம் ஏமாற்றத்தை அப்படியே அப்பட்டமாய்க் காட்ட, வஞ்சி புரியாமல் அவனைப் பார்க்க தலையசைத்தவன் நின்றிருந்த ஸ்ரீனிவாசிடம்,
“ஸ்ரீ, உங்களுக்கு எந்த புடவைப் பிடிச்சிருக்குன்னு கமலி கேட்கிறா” என்று இளந்திரையன் சொல்ல
“எனக்கு சேரீஸ் பத்தி ஒன்னுமே தெரியாது இளா, கமலிக்கு என்ன பிடிக்குமோ எடுக்க சொல்லுங்க” என்றதும் இளா அதனை மனைவியிடம் சொல்ல, ஒரு மணி நேரம் கழித்து கமலி ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள். இருபத்தைந்தாயிரம் தொட்டது அப்புடவை.
“அழகா இருக்கு கமலி, இன்னும் இரண்டு புடவை எடுடா” என்றார் பிருந்தா. மாதவிக்கு மகளை மாமியார் தன்மையாய்த் தாங்கிட தாயாய் உள்ளம் குளிர்ந்தது. ஆனால் தானும் தாயில்லா தன் மருமகளைத் தாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது. அதன்பிறகு சம்பந்தி புடவையை பிருந்தாவும் மாதவியும் ஆளாளுக்கு எடுக்க, மாதவி மகனிடம்
“மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுத்துட்டு வந்திடு இளா” என்று சொல்லி அனுப்ப, இளந்திரையனும் ஸ்ரீனிவாசனும் ஆண்கள் பிரிவு சென்றனர், அங்கு அவர்கள் இருவருக்கும் எடுத்துவர, அதற்குள் இங்கு கமலிக்கு எல்லா புடவையும் எடுத்து முடித்திருக்க, அதற்கு நல்ல நேரத்தில் பில் செய்துவிட எல்லாரும் மதிய உணவை அங்கேயே முடித்தனர்.
மாதவி
“டேய் நம்ம இன்னும் கொஞ்சம் எடுக்கனும்” என்றார் மகனிடம் தனியாக.
“சாப்பிட்டு அவங்க கிளம்பினதும் எடுக்கலாம்மா” என்றான். உண்டதும் ஸ்ரீனிவாசனின் வீட்டினர் கமலியிடம் அளவு உடை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட, மீண்டும் புடவை எடுக்க நுழைந்தார்கள் இளாவின் குடும்பத்தினர்.
“தம்பி! உன் கல்யாணத்துக்குத்தான் புடவை யாருக்கும் எடுக்க முடியல, ஏன் எனக்கே எடுக்கல, எல்லாம் இவ அம்மா மகராசியால” என்று ஆரம்பிக்க, வஞ்சிக்கு வலித்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. இளந்திரையனோ இன்னும் எத்தனை வருடம் இவர் இதையே பேசுவார் என்ற எரிச்சலில்
“ம்மா, இப்போ என்ன புடவைதானே? உனக்குப் பிடிச்ச மாதிரி எத்தனை வேணும்னாலும் எடும்மா, என் கல்யாணத்துக்கும் சேர்த்து எடு, யார் யாருக்கு எடுக்கனுமோ அவங்களுக்கும் எடுத்திடு” என்றதும் அவர் உற்சாகமாய் அவருக்கும் அவரின் உறவுகளுக்கும் புடவை பார்த்தார்.
“ஏய் கமலி! இந்த ப்ளூ கலர் நம்ம ஜீவாவுக்கு நல்லா இருக்குமா?” என்றார் அவரின் அண்ணன் மகளுக்கென ஒரு புடவையை எடுத்துக் காட்டி. (pacifictiregroup.com)
“நல்லா இருக்கும்” என்ற கமலி நகர்ந்து போனை நோண்டிய அண்ணனிடம் வந்தாள்.
மகனின் பேச்சில் திரும்பிய மாதவி, “அதானே, சீக்கிரம் உனக்கும் ஒன்னு எடுத்து வை” என்றதும் வஞ்சிக்குப் பிடித்தமாதிரி கமலி புடவைகளை எடுக்க, அதில் ஒன்றை வஞ்சி
“எனக்கு இது பிடிச்சிருக்கு” என்று சொல்ல இளந்திரையனுக்கு முன் அந்த புடவையை வாங்கிப் பார்த்த மாதவி, அதன் விலையைப் பார்த்தார், மூவாயிரம் கிட்டே இருக்க
“நல்லாதான் இருக்கு, இதையே எடுத்துக்கோ” என்று சொல்ல, இளந்திரையன் அந்த புடவையை ஓரமாய் வைத்தவன்
“அண்ணா! நீங்க வேற இன்னும் காஸ்ட்லியா காட்டுங்க” என்று சொல்லி அங்கேயே நிற்க
“டேய்! ஏற்கனவே கல்யாண செலவு அதிகம், இதுல இவளுக்கு எதுக்கு காஸ்ட்லி புடவை?” என்றார் மருமகளின் மீதான வெறுப்பில்.
“ஏன் உங்க அண்ணன் பொண்ணுக்கு மூவாயிரத்துக்குப் புடவை எடுப்பீங்க, என் பொண்டாட்டிக்கு எடுக்க கூடாதா? கல்யாணத்துக்குக் காஞ்சிபுரம் பட்டு எடுத்தேன்னு அப்படியே பொய்யா அடிச்சு விடுறீங்க கமலி மாமியார் கிட்ட” என்றவன் அம்மாவின் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.
“அது.. அப்படி சொன்னதானே கமலிக்குக் கொஞ்சம் நல்லதா எடுப்பாங்க” என்றார்.
“ம்மா! உனக்கு எத்தனை புடவை வேணுமோ எடு, நான் ஒன்னும் கேட்கலை, நம்ம சொந்தக்காரங்களுக்கு அவங்க நமக்கு எப்படி எடுத்தாங்களோ அது மாதிரியே எடு, மத்தபடி வேற எதுவும் இங்க பேசாதம்மா” என்றான் பொறுமையாக. அவனாகவே ஒரு தங்க நிறப்புடவையை மனைவிக்குத் தேர்வு செய்ய, மாதவியும் சில முக்கிய உறவுகளுக்குப் புடவை எடுத்து முடித்தார்.
வாங்கியதற்குப் பில் போடவென இளந்திரையன் செல்ல, கூடவே வஞ்சியும் போனாள். மனைவியும் உடன் வருவதில் அவன் மகிழ்ந்து கவுண்டரின் முன் வரிசையில் நிற்க, அவளுக்கென எடுத்த புடவையை தனியே எடுத்தவள் அவளின் கார்டைக் கொடுத்து
“இதுக்குத் தனியா பில் பண்ணுங்க” என்றதும் இளாவுக்கு அவ்வளவு கோபம் அவளின் செயலினால். உடனே புடவையின் மீதிருந்த கார்டை எடுத்துத் தன் பாக்கெட்டினுள் போட்டவன் அவளின் வலக்கையைத் தனது இடக்கையினால் இறுகப்பற்ற
“எனக்கு எடுத்த புடவைக்கு நானே பே பண்றேன், அதுல என்ன இப்போ?” என்றாள் மெதுவாக.
“ஷட் அப்! நீ ஒன்னும் பேசாத” என்றான் அழுத்தமாக, பிடித்த கையை விடவே இல்லை இளா. எல்லாவற்றிற்கும் பில் போட்டு முடித்து வீட்டிற்குக் கிளம்ப, அப்போதுதான் மாதவி மகனின் கையைப் பார்த்தார்,
“என்னடி இவன் அவ கையைப் பிடிச்சு விடாம இருக்கான்” என்று மகளிடம் கேட்க, கமலியும் அதைப் பார்க்க அவளின் பார்வைக் கண்ட வஞ்சி,
“எல்லாரும் பார்க்கிறாங்க, என் கையை விடுங்க, அதான் நீங்களே பே பண்ணிட்டீங்களே” என்றதும் கையை விட்டவன் கேப் புக் செய்தான். வீட்டிற்குப் போகவே மணி ஏழாகிவிட, இளா எல்லாருக்கும் உணவு ஆர்டர் செய்தவன் அவனுக்கென்று ஒன்றும் வாங்கவில்லை. உண்ணும்போதுதான் அதைக் கவனித்து மாதவி மகனிடம் கேட்க
“எனக்கு டயர்டா இருக்கு, நான் தூங்குறேன்” என்று சொல்லி வஞ்சியின் அறைக்குள் போய்விட அகத்தினுள் அதிர்வுடன் பார்த்தாள் வஞ்சி, நெஞ்சத்தில் தடதட ஓசை. இதுவரை ஒரே வீட்டில் இருந்தது வேறு, இப்போது ஒரே அறையா? என்று நினைக்க பெரும் தயக்கமாக இருந்தது.
ஆனாலும் என்ன செய்ய?
முதல் நாளே அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு டபுள் குவில்ட்(quilt) வாங்கி வந்திருந்தான் இளா, அதை ஹாலில் போட்டு அவர்களுக்குப் படுக்க வசதி செய்தவள் அவன் ஒன்றும் உண்ணாமல் இருக்க மனம் கேளாமல் பால் கலந்து போனாள். கதவைத் தாழ்ப்பாள் போட்டு அவனைப் பார்க்க, இளா மெத்தையை விட்டு தள்ளி கீழே பெட்ஷீட் விரித்துப் படுத்திருந்தான்.
“ஏன் இப்படி பண்றீங்க நீங்க? காலையில இருந்து பார்த்தீங்களா இல்லையா? அத்தைக்கு என்னை சுத்தமா பிடிக்கல, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணா பார்த்துக் கட்டிக்கோங்க” என்றதும் படுத்திருந்தவன் படாரென எழுந்தான்.
அவ்வளவு ஆவேசத்துடன் அவளை நெருங்கியவன்,
“சின்ன வயசுல கூட உன்னை அடிச்சிருக்கேனா தெரியல, ஆனா இப்போ அதை செய்ய வைக்காத” என்று கோபத்தில் சீறியவன்
“எங்கம்மாவுக்குப் பிடிச்ச மாதிரி யாரும் இருக்க முடியாது, எங்கப்பா நல்லவர்தானே? அவரையும் குறை சொல்வாங்க அவங்க, எங்கம்மாவுக்கு என்னை பிடிக்கும், முதல்ல நீ எனக்குப் பிடிச்ச மாதிரி இரு” என்றான் எரிச்சல் மிகுதியாக.
அங்கிருந்த பாலைப் பார்த்தவன்,
“இந்த பால் பழமெல்லாம் மாமன் மகன்றதாலதானே? முதல்ல என்னை உன்னோட ஹஸ்பண்டா நினைச்சுப் பழகு” என்றான் அவளின் முகத்தில் பார்வையை வைத்து, அவனை சளைக்காமல் பார்த்தவள்
“ஹஸ்பண்டா நினைச்சதாலதான் இப்படி ஒரே ரூமில இருக்க விடுறேன்” என்றதும் இளாவிற்குள் சட்டென ஒரு தளர்வு, மனம் மலர்ந்துவிட
“ஓ ஐ சீ!” என்று மெத்தையில் அவளருகே உட்கார்ந்தவன்
“அப்புறம் ஏன் டி அப்படி பேசின?” என்றான் இப்போதும் கொஞ்சம் பொறுமையுடன்.
“வேற என்ன செய்ய சொல்றீங்க? என் அம்மாவுக்காக செஞ்ச ஒரு விஷயம் உங்களை உங்கம்மாவைக் கஷ்டப்படுத்தறப்போ வேற என்ன நினைக்க முடியும் என்னால?” என்றாள் சோர்வுடன், காலையில் இருந்த உற்சாகம் ஒரு துளி கூட இல்லை.
“என்னை நினைச்சுக்கோ சிம்பிள்!” என்று கண்ணடித்தவன் மெதுவாய் அவளின் கரம்பற்றி
“எங்கம்மாவை நினைச்சு டென்ஷன் ஆகாத, அவங்களுக்கு யார் மருமகளா வந்தாலும் இப்படித்தான் பேசுவாங்க, எனக்கு அவங்களைத் தெரியும், நான் அவங்களைக் கவனிச்சுக்கிறேன், நீ என்னைக் கவனிச்சிக்கோ” என்றான் ஆவலான குரலில்.
அவளின் கரத்தை விடாதவன் தோளோடு சேர்த்தணைத்து,
“இப்படி எல்லாருக்காகவும் யோசிக்கவெல்லாம் எனக்கு வராது, மனைவின்ற உணர்வு, உரிமையை தாண்டி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்க வைக்கிற இஞ்சி, இவ்வளவு நல்லப்பொண்ணு மனைவியா கிடைக்க நான் நிஜமாவே ரொம்ப லக்கிதான்” என்றவன் அவள் அவனின் அணைப்பில் தயங்கி விடுபட முயலவும், அவளை விட்டவன்
“ஆனா பாவம் உனக்கு அவ்வளவு அதிர்ஷ்டமில்லை! இந்த ஜென்மத்தில இந்த இளாதான் உனக்கு வாய்ச்சிருக்கேன், ஸோ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றதும் அவன் பேச்சில் வஞ்சி சிரித்துவிட்டாள்.
“இப்படி இருடி, இஞ்சி” என்றவன் மெத்தையில் இருந்து நகர்ந்து பெட்ஷீட்டில் படுக்க போக அங்கிருந்த பாலைப் பார்த்தவள்
“பால் வேண்டாமா?” என்று கேட்க
“வேண்டாம்” என்றதும் அவள் அதனை எடுத்து இரண்டு வாய்க் குடித்திருக்க
“ஏட்டி சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி, மடக்குன்னு குடிக்கிற” என்றவன் அவளிடமிருந்து பாலை வாங்கிக் குடிக்க, வஞ்சி அவனையே பார்த்திருந்தாள். பத்து நிமிடங்கள் அமைதியாய் யோசித்தாள். அவளின் பார்வைக் கண்டு இளா
“என்ன அப்படி பார்க்கிற? பால் காலி” என்று ட்ம்ப்ளரைக் காட்ட, அவனைக் கடுப்போடு பார்த்தவள்
“அது..இல்ல” என்று சொல்ல
“எனக்கு உங்க கூட வாழனும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்றாள்.
“ஏய்…இந்த ஆறு மாசத்துக்குப் பக்கத்துல வரக்கூடாது, கம்பளிப்பூச்சி ஊறுது, கரப்பான் பூச்சி பறக்குதுன்னு மட்டும் சொல்லாத” என்று அவன் அலற
“அது இல்ல” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“ஓஹ்! அது இல்லன்னா எதுனாலும் சொல்லு” என்று அவன் உற்சாகமாய் சொல்ல, அவளின் இரண்டு கண்டிஷன்ங்களுக்கும் யோசிக்காமல் உடனே ஓகே சொன்னவன் மூன்றாவதை சொல்லவும் சிரிக்கத் துவங்கிவிட்டான்.
“சிரிக்காதீங்க!” என்று அவள் அதட்ட, அவன் இன்னும் இன்னும் சிரிக்க
“ஹாஹா! இதை போய் கண்டிஷனா? உன்னோட ” என்று சிரிக்க
“சிரிக்காத, லூசு வெளியே கேட்கும் இளா” என்றவளின் பேச்சை அவன் காதிலே வாங்கவில்லை.