அயர்வோடு தன் கேபினில் வந்து அமர்ந்தவனின் பின்னே வந்து நின்ற மதன், “மச்சான்” என்றதற்கு,
“இதோ பாரு மதன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நீ பேர் சொல்லி கூப்பிடுன்னு நீ கேட்க மாட்டேங்குற. வாடா போடான்னு கூட கூப்பிடு நான் வேணாங்கல, ஆனா இந்த மாதிரி மச்சான்னு மட்டும் கூப்பிடாத.”
“ஏன் கூப்பிட கூடாது ”
“அது அப்படித்தான். உறவுகள் மேலே எனக்கு நம்பிக்கை கிடையாது. உறவுகள் எல்லாமே பணம் இருந்தா உன்னைத் தேடி வரும், இல்லன்னா உன்னைத் தேடி வராது. இதுக்கு மேல இப்படி கூப்பிட மாட்டேன்னு நினைக்கிறேன், மீறி கூப்பிட்டா நிஜமாவே உன்கூட பேசுறதை நிறுத்திடுவேன் அதை நியாபகம் வச்சுக்கோ”
“சரி சரி இனி கூப்பிடல ரொம்ப பாயாத. உன் புரோகிராம் முடிஞ்சிடுச்சு இதுக்கு மேலே என்ன பண்ண போற?”
“என்ன பண்ண போறேன், வேற ஏதாவது ஒர்க் இருந்தா பார்ப்பேன், ஆபீஸ் டைம் முடிஞ்சதும் கிளம்பிடுவேன் ஏன் கேட்குற”
“இல்லை எங்காவது வெளியில போகலாம்னு…” என இழுத்து நிறுத்தினான் மதன்.
“காலையிலையே நான் முடியாதுன்னு சொல்லிட்டனே மறுபடியும் ஏன் அதைப் பத்தியே கேட்குற.” சட்டென்று கோபப்பட்டான் அழகன்.
“சரி அதை விடு இனிமே அதை பத்தி நான் கேட்கல. புதுசா வந்த பொண்ணைப் பார்த்தியா?” எக்கச்சக்க ஆர்வத்தோடு கேட்டான்.
“ஓ எது அந்த ரெட் சுடியா?” என்று இவன் அலட்சியமாய் கேட்க,
“எப்படா பார்த்த” பரபரத்தான் மதன்.
“ரெக்கார்டிங் ரூம்ல இருந்தாங்க, புதுசா இருக்காங்களேன்னு பார்த்தேன் அவ்வளவு தான்”
“ஏதாவது பேசுனியா?”
“இதுல பேசறதுக்கு என்ன இருக்குது, பேசணும்னு தோணல அதனால பேசல.”
“நீ என்னடா இப்படி இருக்கிற?”
“எப்படி இருக்கேன் ஜடம் மாதிரியா.?”
“நான் மனசுல அதைத் தான் நினைச்சேன், ஆனா நீ வார்த்தையிலையே சொல்லிட்டியே.”
“அதான் உன்னோட முகமே காட்டிக் கொடுக்குதே நீ மனசுக்குள்ள என்ன நினைக்கிறன்னு. உங்க மொழியில ஒரு பொண்ணு கிட்ட வழிய போய் பேசினா தான் உயிருள்ள மனுஷன் இல்லன்னா ஜடம் இல்லையா? நான் உயிருள்ள ஜடமாவே இருந்துட்டு போறேன், போ போய் நீ கடல போடுற வேலைய பாரு, ஏன்னா அதுதானே உங்களுக்கு முக்கியமான வேலை. தனியா போகாம இந்த ரெண்டு மடையனுங்களையும் சேர்த்து கூட்டிட்டு போ, நீங்க பண்ற அலப்பறையில வந்திருக்கிற பிள்ளை ஒரே நாள்ல தெரிஞ்சுக்கிட்டு ஓட போகுது.”
“அட ஏண்டா நீ வேற. வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசுறதுக்கு ட்ரை பண்றோம் இடம் கொடுக்கவே மாட்டேங்குறா. கேட்டியா உன்னோட ப்ரோக்ராமுக்கு அடுத்த புரோகிராம் அந்த பொண்ணு பண்ண போறதா பேசிக்கிறாங்க.”
“ஓ என்ன ப்ரோக்ராம்?”
“இன்னும் பிக்ஸ் பண்ணல, ஆனா கூடிய சீக்கிரம் பிக்ஸ் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் எல்லாரும் எப்படி பேசுறாங்கன்னு கத்துக்க சொல்லி இருக்காங்க போல. ஆள் இந்த வேலைக்கு புதுசுன்னு நினைக்கிறேன், ஆனாலும் வாய்ஸ் ஸ்வீட்டா தான் இருக்குது ” சிலாகித்து சொன்னான் மதன்.
“எப்படி எல்லாரோட வாய்ஸூம் ஸ்வீட்டா இருக்குது, ஸ்வீட்டா இருக்குதுங்கிறீங்க குரலை கேட்க தான் முடியும் சாப்பிட முடியாது. எங்கிருந்து வந்தது இந்த ஸ்வீட்டுங்கிற வார்த்தை? கேட்க நல்லா இருக்குது அப்படின்னா கூட பரவால்ல, அதை விட்டுட்டு உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்குதுன்னு சும்மா அடிச்சு விட வேண்டியது. யார் கேட்க போறாங்கங்கிற எண்ணம். ஏன்டா வர்ணனைக்கும் ஒரு அளவு வேணாமாடா? ஆமா இன்னேரம் சார் எல்லாரையும் கூப்பிட்டு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சுருப்பாரு இன்னும் காணோம்” என்று சொல்லி வாயை மூடவில்லை அவர்களது புரோகிராமிங் ஹெட் அழைத்தார்.
அனைவரும் மீட்டிங் ஹாலில் சென்று நிற்க, “கைஸ் இந்த பொண்ணு பேரு கவித்தாரகா. நம்மளோட நியூ ஜாயினி. உங்களோட தான் இனிமே ஒர்க் பண்ண போறாங்க, சோ எல்லாரும் கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணுங்க. அது மட்டும் இல்லாம இந்த பீல்டே அவங்களுக்கு புதுசு முடிஞ்ச வரைக்கும் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணுங்கப்பா, இதை சொல்ல தான் கூப்பிட்டேன், சரி போங்க போய் வொர்க்கை பாருங்க” என்று அனைவரையும் அனுப்பி வைத்த மார்த்தாண்டம் கவியை மட்டும் நிறுத்தி வைத்தவாறு,
“ஓகே மா உனக்கு என்ன டேலன்ட் இருக்குன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்றியா?”
“சார் எனக்கு அப்படி எல்லாம் சொல்லத் தெரியாது, என்ன செய்ய சொல்றிங்களோ அதை கத்துக்கிட்டு செய்யறேன் அவ்வளவு தான்”
“ஓ அப்படியா. மந்த்ரா, அபி ரெண்டு பேரும் உனக்கு தேவையானதெல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. அவங்க கொஞ்சம் சீனியர்ஸ். இங்க இருக்கிற பசங்களும் ரொம்ப நல்ல பசங்க தான் நீங்க பாதுகாப்பா தான் இருப்பீங்க” என்றதும் சரி என்று தலையாட்டியவள் மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வர,
மந்திரா, அபி இருவரும் இவளை பிடித்துக் கொண்டார்கள்.
”வந்ததும் பேச முடியல கொஞ்சம் வேலை இருந்துச்சு. வந்ததும் வராததுமா நேரா ரெக்கார்டிங் ரூமுக்கு தான் போனீங்க போல” என்று மந்த்ரா கேட்க,
“ஆமாங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. அங்க எப்படி பேசுவாங்க என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னு நெனச்சேன் அதான் போனேன். நிஜமாவே நான் கேட்ட பர்ஸ்ட் புரோகிராம் அது தான் ரொம்ப நல்லா இருந்துச்சு. அவர் ரொம்ப நல்லா பேசுனாரு” என்று அழகனை கைகாட்டி சொல்ல,
“ஆமா அவரு ரொம்ப நல்லா ப்ரோக்ராம் பண்ணுவாரு. ஆனா யார்கிட்டையும் அதிகமா பேசவே மாட்டாரு. அதுவும் பசங்கக்கிட்ட கூட ரெண்டு வார்த்தை பேசுவாரு, ஆனா எங்கக்கிட்ட பேசுறதே கிடையாது. நாங்களா போய் பேசினாலும் என்னங்கிற கேள்விக்கு உண்டான பதில் மட்டும் தான் வரும், எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தை கூட வராது. நாங்களும் வெளியில எங்காவது போயிட்டு வரலாம் வான்னு கூப்பிட்டாவும் வரவே மாட்டாரு. என்னன்னு தெரியல இங்க வந்து மூணு வருஷம் ஆகுது இப்பவும் எங்களோட க்ளோசா பேசி பழக மாட்டாரு. சரி வெளிய வர பிடிக்கல போலன்னு நாங்களும் போர்ஸ் பண்றது கிடையாது..” என்று அபி சொன்னாள்.
“ஓஓ. சரிங்க எனக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்களேன். இங்க மந்த்ரா, அபியின்னு ரெண்டு பேர் இருப்பாங்க, அவங்க உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க.”
“அது நாங்க தான். நான் மந்த்ரா, இவள் அபி. அடுத்த புரோகிராம் தீபாவோடது சோ அவள் அங்க போயிட்டா. எப்படியும் லஞ்ச் டைம்ல எல்லாரும் ப்ரீயா தான் இருப்போம் அப்ப எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இப்ப சிஸ்டம்ல இருக்கிற டீடெயில்ஸ் எல்லாம் பாருங்க, என்னென்ன ப்ரோக்ராம் எந்தெந்த டைம்ல ரெக்கார்டாகி இருக்குன்னு பார்த்துட்டு, அதெல்லாம் கேளுங்க உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்” என்றதும் சரி என்று தலையாட்டிய கவி, ‘எங்கு செல்வது என்று தெரியாமல் திணறி நிற்க,
“அட உங்களுக்கு கேபின் இன்னும் அலர்ட் பண்ணல, சோ நீங்க தீபாவோட சிஸ்டம்ல வந்து உட்காருங்க, உங்களுக்கு நான் சொல்லி தர்றேன். சிஸ்டம்ல வொர்க் பண்ண தெரியுமா?” என்று மந்த்ரா கேட்டதும்,
‘தெரியாது’ என்று தலையாட்டியவளைப் பார்க்க அவர்களுக்கே பாவமாக இருந்தது. ‘பாவம் ஒன்னும் தெரியாது சின்ன பிள்ளை போல’ என்று நினைத்தவர்கள் அவளை தீபாவின் கேபினுக்கு அழைத்துச் சென்று எப்படி சிஸ்டமில் அவற்றை எல்லாம் பார்ப்பது என்று சொல்லித் தந்ததோடு மட்டுமின்றி, சில ரெக்கார்டர்டு ப்ரோக்ராம்களை பார்க்க சொல்லி விட்டு தங்கள் வேலையை கவனிக்க சென்று விட்டார்கள். அடுத்து ஒரு மணி நேரத்தில் தீபாவும் தன்னுடைய நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வர இவர்களுக்கு உணவு இடைவேளை ஆரம்பமாகி இருந்தது.
ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை திரைப்பட பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். அனைவரும் உணவு இடைவேளைக்காக அருகில் இருந்த ஹாலுக்குள் நுழைய, தன் டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு எல்லாரும் சென்ற பிறகே தனித்து சென்ற அழகன் தானாக ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சடசடவென்று அவனைச் சுற்றி அனைவரும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
திலீப், மதன், தீபா, அபிநயா, சுபாஷ், மந்த்ரா என ஆறு பேரும் அவனைச் சுற்றி அமர்ந்து விட, பெருமூச்சை இழுத்து விட்ட அழகன், “இப்ப உங்களுக்கெல்லாம் என்ன வேணும்?” என்று கேட்க,
“புதுசா ஒரு பொண்ணு வந்து இருக்குல்ல, எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்கலாம்னு நினைச்சா நீ பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்துட்ட” என மந்த்ரா கேட்க,
“இதுல என்னப்பா இருக்குது. நிறைய பேர் வரத்தான் செய்வாங்க, போக தான் செய்வாங்க. ஒவ்வொரு டைமும் இதே மாதிரி பண்ண முடியுமா? எனக்கு பசிக்குது சாப்பிடட்டுமா?”
“ஆமா ஆமா சார் ரொம்ப ஹார்டுவொர்க் பண்ணி இருக்காரு பசிக்கத்தானே செய்யும்” என்று மதன் கிண்டல் செய்ய,
திரும்பி அவனை முறைத்தவன், “நிஜமா பசிக்குதுடா சாப்பிட விடுங்களேன்..”
“ரொம்பல்லாம் இல்லப்பா ஒரு ரெண்டு நிமிஷம் வந்து அங்க நின்னா எல்லாரும் அறிமுகம் ஆகிடலாம்” எல்லாரும் சேர்ந்து சொல்லவும், வேறு வழியில்லாமல் திறந்த டிபன் பாக்ஸை மூடி வைத்து விட்டு அவர்களோடு எழுந்து சென்றான்.
இவன் இருந்த டேபிளில் இருந்து நான்கு டேபிள் முன்னே அமர்ந்திருந்தாள் கவி. அவள் முன்னே இவர்கள் அனைவரும் சென்று நிற்க,
அவளோ, “ஹாய் கைஸ்” என்றாளே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. முதலில் ஆரம்பித்தது தீபா தான்.
“என்னோட பேர் தீபா” என்று சொல்லி கரம் நீட்ட, அவளது கரத்தைப் பற்றி குலுக்கினாள் கவி.
அடுத்ததாக அபிநயா, அடுத்து மந்திரா என வரிசையாக பெண்கள் மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அடுத்த மதன், திலீப், சுபாஷ் மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெண்களைப் போல் ஆண்களிடம் கரம் கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் சொல்ல, அவர்களும் அதே போல் செய்தார்கள்.
இறுதியாக அழகனோ, “என்னேட பேர் கவியழகன், உங்களை எங்களோட டீம்க்கு வரவேற்கிறோம்” என்று சொல்ல,
‘என்ன ரோபோ மாதிரி சொல்றான்” என்ற ரீதியில் தான் அனைவரும் அவனைப் பார்த்திருந்தார்கள்.
அவளோ இதழ் விரித்த புன்னகையோடு, “ரொம்ப சந்தோஷம். என்னோட பேர் கவி.. கவித்தாரகா” என்று சொன்னாள்.
“இரண்டு பேருக்கும் கவி கவின்னே பேர் ஆரம்பிக்கிதுல்ல, என்ன ஒரு பொருத்தம்” என்று மதன் சொன்ன வார்த்தையைக் கேட்டு சட்டென்று மின்னல் வெட்டியது போல் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் அழகன். அவன் அவளைப் பார்த்த அதே கணம் அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள், அவள் இதழில் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை சிறிதும் மறையவில்லை.
“எல்லாரும் சாப்பிடுங்க” என்ற அழகன் அங்கிருந்து நாசுக்காக விலகி சென்று விட, அனைவரும் அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவள் விழிகளோ எவரும் அறியாமல் அவனைத்தான் பின் தொடர்ந்தது.
அவள் இதுவரை பார்த்த நபர்களிலேயே மற்றவர்களை விட இவன் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தான், அவளுக்கு ஏனோ அவன் அப்படித்தான் தெரிந்தான். ஏனோ தன்னைப் போல் இருக்கும் நபர்களிடம் தோன்றும் ஈர்ப்பை விட, வித்தியாசமாக இருக்கும் ஒரு பொருளின் மீதோ, நபரின் மீதோ தான் ஈர்ப்பு அதிகமாய் தோன்றுமாம். அதேபோல் தான் மற்றவர்களை விட இவனிடம் இருந்த வித்தியாசம் நொடியில் அவன்பால் அவளை ஈர்த்து இருந்தது..
மதன் சொன்ன, ‘இரண்டு பேருக்கும் கவி கவின்னே பேர் ஆரம்பிக்கிதுல்ல, என்ன ஒரு பொருத்தம் ‘ என்ற வார்த்தையை அசைபோட்டவாறு தக்காளி சாதத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தவனுக்கு திடீரென்று விக்கல் எடுக்க ஆரம்பித்தது. தண்ணீர் குடித்தும் மட்டுப்படாமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் சாப்பிட முடியாமல் சாப்பாட்டை வைத்து விட்டவனுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்த வண்ணமே இருந்தது.
அந்த சத்தத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் இவன் புறம் திரும்பிப் பார்க்க, கவியும் திரும்பி பார்த்தாள்.
அழகனுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்துக் கொண்டே இருக்க, மதனோ அங்கிருந்தவாறே வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், “யாரோ வேண்டியவங்க உன்னை நினைக்கிறாங்க போலடா அதனால தான் விக்கல் எடுத்துக்கிட்டே இருக்குது” என்றிட,
திரும்பி அவனை அக்னி பார்வை பார்த்தவன், “வேண்டியவங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா, வாயை மூடிட்டு தின்னு” என்றதும், அவன் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டான்.
மீண்டும் இரு மிடறு தண்ணீரை குடித்துவிட்டு தொண்டையை நீவி கொண்டவனுக்கு அப்போதும் விக்கல் மட்டுப்படாமல் இருக்க,, கவியோ இருந்த இடத்திலிருந்தே, “ஏங்க உங்க காலுக்கு அடியில் பாருங்க தேள்” என்றதும் அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டு எழுந்து அந்த பென்ஞ்சின் மீது நின்றவன் கீழே குனிந்து தேள் இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்க,
அதை கண்டு மெளிதாக தனக்குள் சிரித்துக் கொண்ட கவியோ, “ஏங்க தேள் எல்லாம் இல்ல தேடாதீங்க. சும்மா உங்களோட விக்கல் நிக்கணுங்கிறதுக்காக பொய் சொன்னேன். ஏன்னா அதிர்ச்சியாகுற மாதிரியோ இல்ல பயப்படுத்துற மாதிரியோ ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னோம்னா விக்கல் நின்னுடும்னு சொல்லுவாங்க, அதுக்காக தான் அப்படி சொன்னேன்” என்றதும் ‘அப்பாடா’ என்று ஆசுவாசமாக பெருமூச்செறிந்தவன் தனக்கு விக்கல் நின்று விட்டதை உணர்ந்து, “நன்றிங்க” என்று சொல்லி விட்டு மீதமிருந்த சாப்பாடு அவசரமாக விழுங்கிக் கொண்டு அங்கிருந்து ஓடாத குறையாக செல்ல, மற்றவர்கள் அவன் செல்வதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
கவியோ, “ஏங்க எல்லாரும் இப்படி சிரிக்கிறீங்க?” என்று விவரமறியாமல் கேட்க,
“அவன் யாருக்கும் சாரி சொல்ல மாட்டான். அவ்வளவு சீக்கிரம் தேங்க்ஸூம் சொல்ல மாட்டான். முதல் டைம் வாய் தவறி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டான். எங்க அதை வச்சு நாங்க எல்லாம் ஓட்டிடுவோம்னு பயந்துக்கிட்டு ஓடுறான்” என்று சுபாஷ் சொன்னதும் இவளும் அவன் ஓடியதை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
அங்கிருந்து ஓடி வந்த அழகனோ தன் கேபினுக்கு வந்ததும் பெரிய பெரிய மூச்சுக்களாய் எடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “அவசரப்பட்டு தேங்க்ஸ் சொல்லிட்டமே. இந்த மூணு வருஷமா கட்டி காப்பாத்தி வச்ச எல்லா பேரையும் இந்த பொண்ணு வந்த முதல் நாளே போக வைக்கிறாளே. யார் முன்னாடியும் பயந்த மாதிரி கூட நான் நடிச்சது கிடையாது. ஆனா இன்னைக்கு பயந்து சின்ன பிள்ளைங்க மாதிரி பென்ஞ்சில் ஏற வச்சுட்டா. அடுத்தது தேங்க்ஸ் சொல்ல வெச்சாச்சு, போதாக்குறைக்கு” என்று எதையோ சொல்ல வந்தவனது இதழ்கள் சட்டென்று பூட்டிட்டது போல் அழுத்தமாய் மூடிக்கொண்டது.
அவன் தனக்குள் கூற வந்த வார்த்தையின் பொருள் உணர்ந்து திடுக்கிட்ட அழகனுக்கு ஏதோ தவறு செய்வது போல் உள்ளம் கிடந்து அடித்துக் கொண்டது. ‘இதுநாள் வரைக்கும் எந்த பொண்ணோட பேர் கூடவும், என் பெயரை நான் சேர்த்து வச்சு நெனைச்சு பார்த்ததே கிடையாது. ஆனா இன்னைக்கு இந்த மதன் அதையும் குழப்பி விட்டுட்டான். இன்னைக்கு நாளே சரியில்ல யார் முகத்துல முழிச்சனோ’ என்று புலம்பிக் கொண்டிருந்தவன், அனைவரும் வரும் அரவம் உணர்ந்து நல்ல பிள்ளை போல் கேபினில் அமர்ந்து தலையை குனிந்து கொண்டான்..
அவர்கள் அதன் பிறகு தங்கள் வேலையை கவனித்திட, கவியோ அவ்வப்போது இவன் கேபினைத் திரும்பி பார்த்த வண்ணமே சின்ன சிரிப்போடு அன்றைய நாளை நகர்த்தினாள். அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு கிளம்பிய வேளையில் அனைவரையும் முந்திக்கொண்டு அவசரமாக கிளம்பிய அழகன், பேருந்துக்காக காத்திருந்த வேளையில் அவன் இருந்த, அதே பேருந்து நிலையத்தில் வந்த நின்றாள் கவி.
அவள் வந்ததைக் கண்டு விட்டு அவசரமாய் விழிகளை மறுபுறம் திருப்பிக் கொள்ள,
இவளோ, “ஹாய், என்கிட்ட பேச மாட்டீங்களாங்க?” என்று பேச்சைத் துவங்கி, தங்கள் இருவருக்குமான நெருக்கத்திற்கு முதல் புள்ளியை துவங்கி வைத்திட்டாள்.
அதை அறியாதவனோ, “இல்லங்க லேடிஸ்கிட்ட அவ்வளவா பேச மாட்டேன் அதுதான்” என்று தயங்கிட,
“பரவால்லங்க என்கிட்ட பேசலாம். ஒரே பக்கம் தானே ஒர்க் பண்றோம், நாளைக்கு எனக்கு ஏதாவது டவுட்னா நான் உங்ககிட்ட வந்து தானே கேட்பேன், அப்ப நீங்க இப்படித்தான் லேடிஸ்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லி, எனக்கு சொல்லித் தராம இருப்பீங்களா? எதுவா இருந்தாலும் உங்கக்கிட்ட எல்லாம் கேட்டு கத்துக்கணும்னு சார் சொல்லி இருக்காரு” என்றதும்,
“ஆங்க்.. பேசலாமே சொல்லுங்க” என்றான் தடுமாற்றமாய்.
“நீங்க எந்த ஊர்?” என்று அவள் கேட்டிட, இவன் பதில் சொல்லும் முன்பே இவர்கள் செல்லும் பேருந்து வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டார்கள்.
அவள் முன்புறம் ஏறிக்கொள்ள, அழகனோ பின்புறம் ஏறி காலியாக கிடந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள, முன்புறம் நின்றிருந்தவளோ இவனை தான் எட்டி எட்டி பார்த்திருந்தாள்.
அவள் தன்னை தேடுகிறாள் என்றுணர்ந்து அழகன் பரவசம் ஆனாலும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருந்து உறுத்திக் கொண்டே இருந்ததால் தலையை குனிந்து அவள் விழிகளில் படாதவாறு குறுகி அமர்ந்து கொண்டவனது செவியில் கிளம்பும் போது மதன் சொன்ன வார்த்தைகள் தான் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“அந்த பொண்ணு யார்கிட்டையும் கை கொடுத்து பேச மாட்டா போல. ரொம்ப ஜாக்கிரதையா பேசுற மாதிரி தெரியுது” என்று சொல்லியிருந்தான் மதன்.
ஆனால் ரெக்கார்டிங் ரூமில் அவள் தன்னிடம் கை நீட்டிய நினைவு தானாக அவனுள் எழுந்தது. ‘ஏன் என்கிட்ட மட்டும் கையை நீட்டி பேசணும்?’ என்ற கேள்வி பெரிதாய் அவனுள் எழ, அதற்கான பதிலை தேடி கலைத்தவனது உள்ளம், ‘இனிமேல் என்னால் தேட முடியாது ஓரமா ஓடிப்போ’ என்று அவனை அடித்து துரத்தாத குறையாக விரட்டி தள்ளியது. அடுத்து அதே கேள்வியைத் தூக்கிக் கொண்டு மூளையிடம் அவன் சரணடைய, மூளையோ எக்கு தப்பாய் பதில் கூறி அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தது.