பழைய நினைவில் அமர்ந்திருந்தவன் மீண்டும் கதவு பலமாக தட்டப்படும் சத்தத்தில் தான் தன் நினைவில் இருந்து கலைந்தான். எழுந்து சென்று கதவைத் திறக்க, வெளியே விமலா அக்கா நின்று இருந்தார்.
“என்னக்கா இந்த நேரத்துல?”
“பாப்பா தான் என்னை வந்து கூட்டிட்டு வந்தா. வீட்டுல என்ன தம்பி பிரச்சனை?”
“அதெல்லாம் எதுவும் இல்லைக்கா”
“இல்லையே பாப்பா என்னமோ வேற மாதிரி சொன்னா” என்றதும் அவன் விழிகள் தங்கையை நோக்க அவளோ சற்றொன்று தலையை குனிந்து கொண்டாள்.
“இப்ப எதுக்கு பாப்பாவை முறைக்கிற? அவன் உண்மையை தானே வந்து சொன்னா, ஏன் நான் யாரோவா”
“ச்சே.. இல்லக்கா நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான். பெருசா எதுவும் இல்லைக்கா. தம்பி தான் புரிஞ்சுக்காம பேசறான்னா நாமளும் அதே மாதிரி பேச முடியுமா?” என்று அப்போதும் தம்பிக்கு தான் பரிந்து பேசினான்.
“அண்ணா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அகில் அண்ணா புரிஞ்சுக்காம எல்லாம் பேசல, தெளிவா முடிவு எடுத்துட்டு தான் பேசுது” என்றான் இளம்பரிதி.
“என்னடா சொல்ற ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இதுல நீ வேற புதுசா எதுவும் இழுத்து விடாத அமைதியா இரு”
“இல்லைங்கண்ணா அகில் அண்ணா போன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.”
“என்ன கேட்ட?”
“அகில் அண்ணா யாரோ ஒரு பொண்ணை விரும்புது இல்லையா”
“ஆமா…”
“அவங்க வீட்டுல அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருப்பாங்க போல. அதனால என்னை நீ இப்பவே கல்யாணம் பண்ணிக்கோ, எங்க வீட்டுல வந்து பொண்ணு கேளுன்னு அவங்க கேட்டாங்க”
“இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?”
“நான் சொல்றதை முழுசா கேளுங்கணா..”
“சரி சொல்லு”
“ம். அவங்க அப்படி கேட்டதும் அகில் அண்ணா சொல்லுச்சு உடனே எல்லாம் அப்படி பொண்ணு பார்க்க வர முடியாது. எனக்கு ஒரு அண்ணா இருக்காருன்னு”
“சரி அதை வச்சு நீயா முடிவு பண்ணிக்கிட்ட அந்த பொண்ணு இப்படித்தான் சொல்லி இருக்கும்னு இல்லையா”
“இல்ல, அவங்களா தான் சொன்னாங்க. போன் ஸ்பீக்கர்ல தான் இருந்துச்சு.”
“அதெப்படிடா எங்க யாருக்கும் இந்த விஷயம் தெரிய மாட்டேங்குது, ஆனா உனக்கு மட்டும் எப்படி கரெக்டா இந்த விஷயம் தெரியுது”
“அதான் எனக்கும் தெரியல. அகில் அண்ணா பக்கத்துல அதிகமா இருக்கிறது நான் தானே அதனாலையா இருக்கலாம். அது மட்டும் இல்ல எப்பவுமே எனக்கு எதாவது டவுட்னா அகில் அண்ணா தான் சொல்லி தரும். ஒரு சின்ன புரோகிராம் அசைன்மெண்ட் எரர் வந்துட்டே இருந்துச்சு அதான் டவுட் கேட்கலானு போனேன், ஆனா அண்ணன் போன் பேசிட்டு இருந்துச்சு, சரி ஏதோ பர்சனலா பேசுவாங்கன்னு நானும் போயிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா இப்படி அந்த பொண்ணு சொல்லவும் என்னால அங்கிருந்து போக முடியலன்ணா. அகில் அண்ணா என்ன சொல்லுதுன்னு கேட்கலாம்னு அப்படியே நின்னேன்.”
“சரி அதுக்கு அகில் என்ன சொன்னான்?” இப்போது கேட்டது விமலா.
“அது வந்து.. அதை சொன்னா மறுபடியும் சண்டை வந்துருமோன்னு பயமா இருக்குதுக்கா”
“அதெல்லாம் ஒன்னும் வராது அதான் நான் இருக்கேன்ல சொல்லு, அகில் அந்த பொண்ணுக்கிட்ட என்ன சொன்னான்?”
“எங்க பெரிய அண்ணாவுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் எனக்கு கல்யாணம் பண்ணுவாங்க, அவருக்கே இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொல்லுச்சு. அதுக்கு அந்த பொண்ணு, அதெப்படி இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிக்காம இருக்க முடியும். அவரை விட சின்ன பையனான நீயே லவ் பண்ணி கல்யாணம் பண்ணுற வயசுக்கு வந்துட்ட, அப்படி இருக்கும் போது இன்னும் உங்க அண்ணா கல்யாணம் பண்ணலன்னா என்ன அர்த்தம்? உங்க அண்ணனுக்கு ஏதும் உடம்பு சரியில்லையா? உடம்புல வேற ஏதாவது பிரச்சனை இருக்குதான்னு அந்த பொண்ணு கேட்டுச்சு” என்றான் பரிதி.
“அதுக்கு அகில் என்ன பதில் சொன்னான்?” என்று கேட்டது வேறு யாரும் இல்லை குமரேசன் தான்.
அவரை அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அனைவரும் அதிர்ந்து திரும்ப, “அப்பா அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா நீங்க கடைக்கு போகலையா? எனக்கு பதில் நீங்க கடைக்கு போய் இருப்பீங்கன்னு நினைச்சேன்” என்று அவரை திசைதிருப்ப முயன்றான் அழகன்.
“கடைக்கு போனேன் தான். ஆனா ஏன்னு தெரியல மனசுல ஏதோ நெருடல். அதான் மனசு கேட்காம அந்த குமாரைக் கடையில விட்டுட்டு வந்தேன்” என்றவர்,
“சொல்லு பரிதி அதுக்கு அகில் என்ன சொன்னான்?”
“அதுக்கு அகில் அண்ணா.. எனக்கும் அந்த டவுட் இருக்குதுன்னு சொல்லுச்சுப்பா. அதுக்கு அந்த பொண்ணு என்ன சொன்னாங்கன்னா
‘ என்னால எப்படி வெயிட் பண்ண முடியும். எங்க வீட்டுல எனக்கு அலையன்ஸ் பாக்குறாங்க, அதுலையும் நான் வீட்டுல ஒரே பொண்ணு கண்டிப்பா நான் வேணான்னு சொன்னாலும் அவங்க கல்யாணம் பண்ணி வைக்க தான் நினைப்பாங்க. சரி கல்யாணம் கூட உங்க அண்ணனோட கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வச்சுக்கலாம், அட்லீஸ்ட் வந்து பொண்ணாவது பார்த்துட்டு போங்க’ அப்படின்னு சொன்னாங்க..”
“அதுக்கும் உங்க அண்ணன் அகில் என்ன சொன்னான்?” என்ற குமரேசனின் குரலில் ஏகத்துக்கும் கோபம் நிரம்பி வழிந்தது.
“அது வந்து.. அண்ணன் ரொம்ப டஸ்கி ஸ்கின்னா இருக்காங்க அவ்வளவு சீக்கிரம் அவருக்கு பொண்ணு அமையாது, அதனால இன்னும் ஒரு வருஷமாவது வெயிட் பண்ணுன்னு அகில் அண்ணா சொல்லுச்சு.”
“ஓஓ.. மேலே சொல்லு” என்று விமலா எடுத்துக் கொடுக்க,
“அதுக்கு மேல அவங்க ரொம்ப ஆர்கியூ பண்ணிக்கிட்டே இருந்தாங்க அக்கா. கடைசியா அந்த பொண்ணு நீ இல்லன்னா நான் செத்துப் போயிருவேன், உங்க வீட்டுல நீயா பேசுறியா இல்ல நானே பொட்டி படுக்கையைத் தூக்கிக்கிட்டு உங்க வீட்டு வாசல்ல வந்து உட்கார்ந்து போராட்டம் பண்ணட்டுமா? மத்தவங்க மாதிரி ஒருத்தனை லவ் பண்ணிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போற ரகம் நான் கிடையாது.
உன்ன தான் விரும்புறேன், உன்னைத் தான் கல்யாணமும் பண்ணிக்க போறேன். எங்க ஸ்டேட்டஸுக்கும் உங்க ஸ்டேட்டஸுக்கும் ஒத்துவரும், உன்னைப் பத்தி எல்லாம் நான் விசாரிச்சேன். என்ன உங்க குடும்பம் கொஞ்சம் பெருசா இருக்குது அது தான் எனக்கு இடிக்குது. அது ஒண்ணும் பிரச்சனை இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனி குடித்தனம் போயிடலாம்னு அந்த பொண்ணு சொல்லுச்சுப்பா.
அதுக்கு அகிலண்ணாவும், எனக்குமே இப்படி கசகசன்னு இருக்குறது பிடிக்கல. போன் பேசுறதுக்கு கூட ஒரு பிரைவசி இல்ல. கண்டிப்பா மேரேஜ் ஆனா நாம தனியா தான் போக போறோம். ஆனா இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் பண்ணனுமான்னு யோசிக்கிறேன். அப்பா அண்ணனுக்கு பண்ணாம கண்டிப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாரு, நான் சொல்றதை புரிஞ்சுக்க டியர் அப்படின்னுச்சு ஆனா அதுக்கு மேல ரொம்ப கொஞ்சலா பேசவும் நான் கேட்கல, அங்க இருந்து விலகிப் போயிட்டேன்” என்று பரிதி சொல்லி முடிக்க, அங்கிருந்த யாருக்கும் அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஏற்கனவே அகிலின் பேச்சில் நொந்திருந்த அழகனுக்கு இப்போது பரிதி சொன்னதெல்லாம் கேட்டு இன்னும் நெஞ்சு கனக்கத்தான் செய்தது. தன்னை தன் தம்பி எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று தெளிவாக புரிந்து போனது. ‘இவர்களுக்கா இவ்வளவும் பார்த்து பார்த்து செய்தேன்?’ என்று மனதின் ஓரம் விரக்தி ஏற்பட அப்படியே ஓய்ந்து போய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டான்.
அவன் அருகில் அமர்ந்த பரிதி, “நாங்க அகில் அண்ணா மாதிரி இருக்க மாட்டோம்ணா. நானு, முகில், சங்கரி மூணு பேருமே நீங்க என்ன சொல்றீங்களோ அதைத்தான் அண்ணா செய்வோம். மனச தளர விடாதீக்க அண்ணா, அகில் அண்ணா இப்படி எல்லாம் பேசும்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல” என்றான்.
“இல்லடா அவன் மேலே தப்பில்லை. ஒரு பழமொழி சொல்லுவாங்க, தாயும் பிள்ளையும் ஒண்ணா இருந்தாலும் வாயிம் வயிறும் வேற வேற தான்னு. அதை அவன் நிரூபிச்சுட்டான், நீங்க எப்போ நிரூபிக்க போறீங்களா தெரியல” என்றவன் கண்கள் கலங்கி நின்றிருந்த தன் தந்தையிடம்,
“ஏன்பா ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க..?” என்று கேட்க,
“நீ எப்படி என் பிள்ளையோ அதே மாதிரி தானே அவனும் என் பிள்ளை. அவன் மட்டும் எப்படிடா இப்படி எல்லாம் யோசிச்சு, இப்படி சுயநலமா நடந்துக்குறான்”
”யாரோட சூழ்நிலையும் ஒரே மாதிரி இருக்காதேப்பா. அகில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோவமா பேசிட்டு போனதுக்கு காரணமும் கூட அந்த பொண்ணு செத்துருவேன்னு சொன்னதா இருக்கலாம். விடுங்கப்பா காதல் எல்லாரையும் ஒரே மாதிரியா இருக்க வைக்குது. எல்லாருக்கும் ஒரே மாதிரி வலி, வேதனையை தான் தருதா? இல்ல சந்தோசத்தை தான் தருதா? அது எப்ப எப்படிப்பட்ட உணர்வை தரும்னு நம்மளால கணிக்க முடியாதே, நம்ம கையில எதுவுமே கிடையாதுப்பா. கொஞ்ச நாளாவே நான் ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா அதை முன்னமே ஏன் செய்யலன்னு இப்ப ரொம்ப வருத்தப்படுகிறேன்பா” என்றவனின் குரல் நடுங்கியது, சிரமப்பட்டு அதை சரி செய்தவன்,
“சரிங்கப்பா நீங்க குமாரை நம்பி கடைய விட வேணா, கொஞ்ச நேரம் கடையில இருங்க நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன்” என்றவன் தன் தம்பிகள் மற்றும் தங்கையிடம், “மூணு பேரும் குளிச்சிட்டு அவங்கவங்க வேலையைப் பார்க்க கிளம்புங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு இவனும் அந்த காய்ச்சலோடவே குளித்து முடித்து வெளியில் கிளம்பி விட்டான். அப்போது வெளியில் சென்றவன் கிட்டத்தட்ட பொழுது சாயும் போது தான் வீட்டிற்கு திரும்பி வந்தான். வந்தவனது கையில் பெரிதாக இரண்டு பைகள் இருந்தன.
அழகன் வீட்டிற்குள் நுழையும் போதே அகில் சட்டமாக சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, சங்கரி கார்முகில் இருவரும் சமையலுக்கு தேவையானதை நறுக்கி வைத்துக் கொண்டிருக்க, பரிதியோ சமைக்க ஆரம்பித்து இருந்தான்.
அவர்களது தந்தை குமரேசன் அனைவருக்குமே சமைக்க கற்றுக் கொடுத்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் அகிலைத் தவிர அனைவருமே சமைக்க கற்றுக் கொண்டிருந்தார்கள். அகிலோ, சமைக்க கற்றுக்கொள்ள வா என்று கூறி அழைத்தாலும் கூட ஏதேனும் சாக்கு போக சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு பொறுப்பு என்பது கிடையாது, குடும்பத்தின் மீது பற்றுதல் கிடையாது, அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று அவர்கள் இதுவரை எண்ணிப் பார்த்தது கிடையாது.
ஆனால் இன்று அவன் பேசிய பேச்சு அதிகம் என்பதை அனைவருமே உணர்ந்து இருந்தார்கள். ஆனால் தான் பேசியதில் சிறு தவறு கூட இல்லை என்பது போல் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான் அகில்.
களைப்போடு வீட்டிற்கு வந்த அழகன் அந்த இரு பைகளையும் அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வர, அவசரமாக சமையலை முடித்து இருந்தார்கள் முகில், பரிதி, சங்கரி மூவரும் சேர்ந்து.
இன்னும் கடையிலிருந்து குமரேசன் வராமல் இருந்தார். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த அழகன் தந்தைக்கு அழைத்து, “கடையை சாத்திட்டு வாங்கப்பா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன், மற்ற இரண்டு கடைகளை பார்த்துக் கொள்ளும் நபர்களுக்கு அழைத்து தந்தையிடம் சொன்னது போல் கடையை அடைத்து விட்டு சாவியைக் கொண்டு வருமாறு சொல்லி இருந்தான்.
குமரேசன் வீட்டுக்கு வரும் போது மற்ற இரு கடைகளுக்கு உண்டான சாவிகளும் அழகன் கைக்கு வந்து சேர்ந்து இருந்தது..
தலையை கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பெரிய மகனை கண்டு விட்டு பதைபதைத்த குமரேசன், “என்னாச்சு தம்பி, என்ன செய்யுது? காலையில போனவன் இப்பதான் வந்திருக்க போல, எங்க போன? இப்ப என்னைய வேற அவசரமா கிளம்பி வர சொன்ன என்னாச்சுய்யா” என்றிட,
“உக்காருங்கப்பா கொஞ்சம் பேசணும்” என்றதும் அவன் அருகில் அமர்ந்தார்.
சமைத்து முடித்து இருந்ததால் மற்றவர்களையும் அழைத்தவன், “எல்லாரும் வந்து உட்காருங்க” என்றான். இருந்த இடத்தில் அவர்கள் அமர்ந்து விட, சங்ககிரிக்கு இடமில்லை அகில் அருகில் மட்டுமே இடம் இருந்தது.
ஆனால் அவன் அருகில் அமர அவளுக்கு பிடிக்கவில்லை என்பதால் நின்று கொண்டே இருக்க, கார்முகில் எழுந்து சென்று அகில் அருகில் அமர்ந்து கொண்டதும் அந்த இடத்தில் சங்கரி அமர்ந்து கொண்டாள்.
சில நிமிடங்கள் அங்கு அமைதியே நிலவியது. பின்பு தானே பேச்சைத் துவங்கினான் அழகன்.
“உங்க எல்லார்கிட்டையும் இதை நான் முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன் ஆனா எல்லாரும் இன்னும் கொஞ்சம் பெரிய பசங்களாகட்டும் அதுக்கப்புறம் சொல்லலாம்னு அதை அப்படியே விட்டுட்டேன். ஆனா இப்ப தான் உண்மை நிலவரமே புரியுது. நாங்க எப்பவோ வளர்ந்துட்டோம், ஆனா நீ தான் இன்னும் எங்களைச் சின்ன பசங்களாவே நெனச்சிட்டு இருக்கேன்னு ஒவ்வொருத்தரும் நிரூபிக்கிறீங்க” என்றவன்,
“அப்பா..” என்றதும்.
“சொல்லு கண்ணா” என்றார் அவர்.
பல நாட்களுக்கு பிறகு ‘கண்ணா’ என்ற வார்த்தையைக் கேட்டு சட்டென்று நீர் கோர்த்துக் கொண்டது அவன் விழிகளில். அவன் தாய் அப்படித் தான் அவனை அழைப்பார்.
அவன் விழியோர நீரின் பளபளப்பைக் கண்டு விட்ட சங்கரி, “அண்ணா எதுக்கு இப்ப..” என்று ஆரம்பிக்கலையே,
“இல்ல பாப்பா அம்மா இப்படித்தான் கண்ணான்னு கூப்பிடுவாங்க. அப்பா அப்படி கூப்பிடவும் கொஞ்சம் எமோஷனலாகிட்டேன் வேற ஒண்ணும் இல்ல. உங்க அண்ணன் ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளுமா அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எல்லாத்துக்கும் உடைஞ்சட மாட்டான்” என்றவனது பார்வை ஒரு முறை அகிலைத் தொட்டு மீண்டது.
அந்த இரு பைகளில் ஒரு பையை எடுத்தவன் அதிலிருந்த பணக் கட்டுகளை அவன் முன்பு இருந்த டேபிளின் மீது எடுத்து வைத்தான். அனைவரும் அந்த பணத்தையே அதிர்வோடு பார்த்துக் கொண்டிருக்க,
குமரேசனோ, “எ.. என்னாச்சு தம்பி? எதுக்கு இந்த பணம் எல்லாம்? ஏது இது?” என்று கேட்க,
“சொல்றேன் பா அமைதியா இருங்க..” என்றவாறு மற்றொரு பையைத் திறந்தவன் அதிலிருந்த சில பத்திரங்களை எடுத்து அந்த பணக்கட்டின் மீது வைத்தவன், நிறுத்தி நிதானமாக அனைவரையும் பார்த்து விட்டு, “நம்மக்கிட்ட இருக்கிற சொத்துக்களைப் பிரிக்கலாம்னு நினைக்கிறேன், யார் யாருக்கு என்ன வேணும்னு சொல்லுங்க” என்றான்.
”இப்ப எதுக்கு அதெல்லாம்? இன்னும் பசங்க படிச்சே முடிக்கல அதுக்குள்ள எதுக்கு தம்பி இதெல்லாம்” குமரேசன் தாங்கலோடு கேட்க,
“இல்லப்பா அதுக்கான நேரம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். இவ்வளவு நாள் இவங்களை எல்லாம் பார்த்துக்கறதுக்கு நானும் நீங்களும் மட்டும் தான் இருக்கோம்னு நெனச்சிட்டு இருந்தோம். ஆனா எங்களை எங்களால பார்த்துக்க முடியும், நீங்க ஒன்னும் எங்களைப் பிடிச்சு தூக்கி நிறுத்த வேண்டாம்னு சொல்லாம சொல்லிட்டாங்க. அதனால அவங்க அவங்களுக்கு உண்டானதைப் பிரிச்சு கொடுத்துட்டா அவங்கவங்க அவங்களோட வாழ்க்கையை பார்த்துக்கிட்டு போவாங்க இல்லையா” என்று சொல்லி முடிக்கவில்லை,
“அண்ணா இதெல்லாம் வேண்டாம்” என்று பரிதியும்,
“அண்ணா உங்களை விட்டா யாருங்கண்ணா எங்களுக்கு இருக்கா” என்று கார்முகிலும்,
”அண்ணா ப்ளீஸூங்கண்ணா இப்படி எல்லாம் எங்களைப் பிரிச்சு பேசாதீங்கண்ணா” என்று சங்கரியும் அழுதவாறு சொல்ல, அகிலோ அந்த பணத்தைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இல்ல நான் உங்களை பிரிச்சு பார்க்க நினைக்கல, உங்களுக்கு உண்டானதை உங்களுக்கு கொடுக்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா இதுல என்னோட உழைப்பு மட்டும் இல்லையே, நீங்களும் சம்பாதிச்ச பணத்தை வீட்டுக்கு தான் கொடுத்தீங்க. அப்படி இருக்கும் போது எல்லாத்தையும் சரிசமமா பிரிக்கிறது தானே சரியா வரும், அதனால தான் சொல்றேன் யார் யாருக்கு என்னென்ன வேணுமோ நல்ல யோசிச்சு பதில் சொல்லுங்க..” என்றான் நிதானமாகவே.
“அந்த மூணுக் கடையை என்ன பண்ணுன, முதல்ல அதை சொல்லு” என்றான் அகில். காலையிலிருந்து அழகனுக்கு மரியாதை கொடுப்பது குறைந்திருந்தது.
இப்போதும் ஒருமையில் பேசியவனை அவனை அடிக்க பாய்ந்தார் குமரேசன். இழுத்துப் பிடித்து தந்தையை அமர வைத்த அழகனோ, “எதுக்குப்பா கோபப்படுறீங்க. உங்க உடம்பு இருக்க கண்டிஷனுக்கு இதெல்லாம் தேவையா? ஏற்கனவே பிபி, சுகர்னு ஏகப்பட்டதை உடம்புல வச்சிருக்கீங்க அப்படி இருக்கும் போது எதுக்குப்பா தேவையில்லாம இப்படி டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக்குறீங்க..”
“வேற என்ன பண்ண சொல்ற. இவன் பேசுறது எல்லாம் சரியாவா இருக்குது. பெரியவன்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறானா பாரு, மட்டு மரியாதை இல்லாம வாயிக்கு வந்ததெல்லாம் பேசுறான், இவனை அடிச்சுக் கொன்னா கூட தப்பில்ல” என்று கோபப்பட்டார்.
“பேசுனா பேசிட்டு போறான் விடுங்கப்பா, நம்ம தம்பி தானே” என்றவன்,
“என்ன அகில் உனக்கு தெரிஞ்சுக்கணும், அந்த கடையை என்ன பண்ணுனேன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா. அந்த கடை மூனையும் நல்ல விலைக்கு வித்துட்டேன் அதுல வந்த பணம் தான் இதெல்லாம்”
“ஓ அப்படியா. அது என்ன மூணு பத்திரம் இருக்குது,”
“அது மூணும் வீட்டோட பத்திரம்..”
“அது என்ன நாம பசங்க நாலு பேரு இருக்கோம், பொண்ணு வேற இருக்கா அப்படி இருக்கும் போது மூணு பத்திரம் தான் இருக்குது. எல்லாத்தையும் தெளிவா சொல்லு” அதிகாரம் அவன் குரலில் ஆழமிட்டிருந்தது.
“சரி சொல்றேன். இங்க இருக்கிற இவ்வளவு பணமும் ஒரு வீட்டோட மதிப்புக்கு சமம். அது மட்டும் இல்ல யார் யாருக்கு என்ன வேணும்னு தாராளமா சொல்லலாம். ஏற்கனவே ஒரு வீடு இருக்குது, நாம இருக்கிறததை தான் சொல்றேன். இது இல்லாம மூணு வீடு தனி தனியா வாங்கியாச்சு. அது போக மீதியானது இந்த பணம். கணக்கு சரியா வருதுன்னு நினைக்கிறேன், வீடு வேணுங்கிறவங்க வீட்டை எடுத்துக்கலாம், பணம் வேணும்ங்கிறவங்க பணத்தை எடுத்துக்கலாம்” என்று சொன்னான்.
மகன் தன் கையை அழுத்தமாக பிடித்திருப்பதிலேயே தான் எதுவும் பேசக்கூடாது என்று சொல்கிறான் என்பதை உணர்ந்து குமரேசன் அமைதி காக்க,
அகிலோ, “அப்படியா. நீ பங்கு பிரிக்கிறதை எல்லாம் ஏத்துக்கணும்னு எங்களுக்கு ஒன்னும் தலைவிதி கிடையாது. இன்னும் சொல்லப்போனா கிட்டத்தட்ட மூணு வருஷமா நானும் சம்பாரிச்சு தான் கொடுத்துட்டு இருக்கேன். அதனால எனக்கு மத்தவங்களை விட கொஞ்சம் அதிகமா பங்கு வரணும் அதுதான் முறை. இந்த பணத்தையும் நானே எடுத்துக்கிறேன், இந்த வீட்டையும் நானே எடுத்துக்குறேன் மீதியை நீங்க எல்லாம் பங்கு பிரிச்சுக்கோங்க” என்றான் அலட்சியமாய்.. அவன் வார்த்தைகள் அழகனைத் தவிர அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெற்றுக் காகிதங்களுக்கே உறவுகளிடத்தில் உயரிய மதிப்பு..
குணம் கூட பணத்தைக் கண்டால் பல்லிலித்து உருமாறும்..