“அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர் மு.வ விளக்க உரை: அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.”
“என் க்ளாஸ் தான்..”
“அப்படியா டா?! பொண்ணு எப்படி? பேசிப் பாப்போமா?”
“ம்மா.. அவ என் ஸ்டூடண்ட் அப்படியெல்லாம் கவனிச்சதில்ல மா.. இதெல்லாம் சரி வராது நீ அமைதியா இரு.”
“இளா கண்ணு எப்படியும் இந்த வருசத்தோட படிப்பை முடிச்சு வெளியே போற பிள்ளை தான? அப்பறம் என்ன?”
“என்னாச்சு உங்களுக்கு? இதை விட்டா பொண்ணே வராதா என்ன?”
“ப்ச்ச் போடா எதோ மனசுக்கு பிடிச்சுதேனு சொன்னேன். என்னவோ பண்ணு..”, என்றவர் தனது காலை உருகிக் கொண்டு எழுந்து சென்றிருந்தார்.
இளன் அவரைப் பார்த்து இடவலமாய் தலையசைத்த படி எழுந்து தனதறைக்குச் செல்ல வேலனின் நிச்சயதார்த்திற்கு வந்தவள் அவளது பெற்றோரோடு அமைதியாய் முதல் இருக்கையில் தலை குனிந்து அமர்ந்திருந்தது நினைவிற்கு வந்தது.
யாரும் எதுவும் கேட்டால் அதற்கு பதில் மட்டுமே. ஒரு சாதாரண பேச்சோ சிரிப்போ எதுவுமே இல்லை. உணவருந்த வந்த நேரம் இவனைப் பார்த்து விழி விரித்தவளாய் வணக்கம் வைக்க தலையசைப்போடு நகர்ந்திருந்தான்.
மறுநாள் திருமணத்திலும் அவ்வப்போது கண்ணில் பட்டவளின் முகமே ஒளியிழந்து இருந்தது. சற்று ஊன்றி கவனித்தால் லேசாய் அழுதிருப்பதாய் கூடத் தோன்றியது.
இருந்த வேலைகளில் அதை மறந்தும் போயிருந்த இளனுக்கு இப்போது தாயிடம் பேசிய பின் ஏதேதோ யோசனைகள்.
அனைத்தையும் புறந்தள்ளியவனாய் மறுநாள் எப்போதும் போல் தனது வேலையை கவனிக்கக் கிளம்பியிருந்தான்.
இறுதி ஆண்டு வகுப்பிற்குள் நுழைந்தவன் எப்போதும் போல் பாடத்தை நடத்த தற்செயலாய் நீணிதியை கவனித்தவனின் புருவங்கள் சுருங்கின.
உதடு தடித்து முகம் சற்றே வித்தியாசமாய் இருந்ததாய் தோன்றியது. வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவேளை என்பதால் அவன் வெளியே சென்றதும் மாணவர்கள் சிலரும் வெளியே செல்ல ஆரம்பிக்க மீண்டுமாய் உள்ளே எட்டி பார்த்தவன்,
“நீணிதி..”
“சார்??”
“இங்கே வா..”, என்று அழைத்து வெளியில் கேரிடரில் நின்று கொண்டான்.
“சார்..”
“என்ன அடி பட்டுருக்கு?”
“அது.. அது.. விழுந்து இடிச்சுகிட்டேன் சார்..”, என்றது நூறு சதவிகித பொய் என்பது அவனுக்குத் தெரிந்தாலும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் அமைதியாய் சென்றிருந்தான்.
“என்ன டி கேட்டாரு?”
“என்ன அடி பட்டிருக்குனு கேட்டார்..”
“ம்ம் சொல்ல வேண்டியது தான என்ன பெத்த மகராசன் பார்த்த வேலை தான்னு..”
“..”
“இப்படி உதடு கிழியுற அளவுக்கா அடிப்பாரு. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா டி..”
“இரக்கம் இல்லைனால் கூட பரவால்ல.. நம்பிக்கையே இல்லையேனு தான் எனக்கு..”
“வாத்தி வீட்டு கல்யாணத்துல எவன்னே தெரியாதவன் வந்து பேசினதுக்கு நீ என்ன பண்ணுவ. என்ன ஏதுனு கூட விசாரிக்காம இப்படியா அடிப்பாரு. என்ன மனுஷனோ போ..
உன்னை விட உங்க அம்மாவை நினைச்சா தான் இன்னும் பாவமா இருக்கு எனக்கு..”, என்றதற்கு ஒன்றும் கூறாமல் அமைதியாய் உணவை மெதுவாய் உண்ண ஆரம்பித்திருந்தாள்.
வேலனின் திருமணத்தில் தாயும் தந்தையும் சற்று தள்ளி யாரையோ பார்த்து பேசி வரச் சென்றிருக்க உறவினர் ஒருவனின் மகன் தானாகவே வந்து நீணிதியிடம் பேச்சு கொடுத்தான்.
அவளுக்கோ தந்தையை நினைத்து பயமாய் இருக்க பேந்த பேந்த விழித்த வண்ணம் அவனை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தாள்.
இருந்தும் இந்த காட்சி கணேஷின் கண்ணில் தவறாமல் பட்டு விட அங்கேயே மற்றவர் கண் உறுத்தாதவாறு மகளை உண்டு இல்லையென ஆக்கி விட்டிருந்தார்.
வீட்டிற்கு வந்தது தான் தாமதமென அப்படியாய் ஒரு அடி நீணிதிக்கு. அவளும் தாயும் எத்தனையோ எடுத்துக் கூறியும் எதையும் காதில் வாங்குவதாய் இல்லை அவர்.
“அத்தனை பேர் முன்னாடி ஆம்பளையோட பேசுற அளவுக்கு திமிரு கூடி போச்சோ? என்ன சொன்னான் அவன்? நீயும் வாயாடிகிட்டு கிடக்க? நாலெழுத்து படிச்சா ஒழுக்கமில்லாம போயிருமா?”
“ப்பா சத்தியமா நான் எதுவுமே பேசலைப்பா.. என்னை நம்புங்க.. நம்பிக்கை இல்லைனால் ஏன் என்னை பெத்தீங்க.. ஏன் வளர்த்தீங்க..
பேசாம சின்ன வயசிலேயே கொன்னு போட்டுருக்கலாம்..”, என்றவள் அழுது அரற்ற அதை கேட்டவர் தான் ஓங்கி கன்னத்திலேயே அடித்திருந்தார்.
நடந்ததை நினைத்தவளுக்கு பெருமூச்செழ எத்தனை மறக்க நினைத்தாலும் முடியாமல் போகும் அந்த வலிகள் அவளது உள்ளத்தை பதம் பார்த்துக் கொண்டே தான் இருந்தன.
ஒரு வேகத்தில் அவளை அழைத்து பேசி விட்டவனுக்கு இப்போது என்னவோ போல் இருந்தது. மாணவர்களிடம் இப்படியெல்லாம் பேசியே இராதவனுக்கு ஏதோ பெரும் தவறாகவே தோன்றியது.
இதற்கெல்லாம் காரணமான அன்னையை மனதில் திட்டிவனாய் தனது வேலையைக் கவனிக்கச் சென்றான். மாலை வீட்டிற்கு வந்த நேரம் மகிழ் வேலனும் ஆரணியும் தேனிலவிற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.
“வாங்க கொழுந்தனாரே.. காபி தரவா?”, என்ற அண்ணியைப் பார்த்து புன்னகைத்தவனாய் தன் தாய் ஜானகி மடியில் தலை வைத்து படுத்த படி காலை ஆட்டிக் கொண்டிருந்த மகிழ் வேலனின் காலைத் தட்டி விட்டான்.
“ஊருக்கு கிளம்பலையா நீ?”
“இன்னும் டைம் இருக்கு டா.. மாமியார் வீட்டில் ஏக போக கவனிப்பு அந்த அலுப்பு தீர தான் படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்.”, என்ற நேரம் இளனிற்கு காபியைக் கொடுத்த ஆரணி கணவனை முறைத்தாள்.
“ஆரணி மா ஸ்வெட்டர் எல்லாம் வைச்சுகிட்டியா டா?”, என்றபடி வந்த ரங்கமணியும் இப்போது மகனை முறைத்தார்.
“ஏன் எல்லாருமே அன்பா பாக்குறீங்க என்ன?”
“ஏன் டா அந்த பொண்ணு தனியா எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு இருக்கு. நீ என்னனா இப்படி விளையாடிட்டு இருக்க?”
“ம்மா எல்லா உதவியும் பண்ணிட்டு தான் வந்துருக்கேன். உங்க மருமகளையே கேளுங்க..”, என்றவன் மனைவியைப் பார்த்து கண்சிமிட்ட அவளோ கணவனின் உதவிகளை நினைத்து சிவக்கும் முகத்தை மறைக்க பாடுபட்டவளாய் இருந்த இடத்திலேயே நெளிந்தாள்.
“அத்தை எப்படி தான் இவங்களை சமாளிச்சீங்க?”
“இதை நீ ஜானுட்ட தான் கேட்கணும். செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சுருக்காங்க இவளும் சின்னவரும்.”
“ஆனாலும் எனக்கு ஆச்சரியமா இருக்கு சின்ன மாமாவும் அத்தையும் எப்படி இப்படி இருக்காங்க?”
“வீட்டுக்கு முதல் பிள்ளை. சின்னவர் மிலிட்டரியில் இருந்ததால இவளுக்கு நாள் மொத்தம் பொழுது இவனோட தான். என்னை கூட தேட மாட்டான் ஆனா ஜானு இல்லாம முடியாது.
இதில் சின்னவரு லீவுக்கு வந்தா கேட்கவே வேணாம் இவங்களை விட்டு அங்கஇங்க நகர மாட்டான்.
நான் கூட வளர்ந்தா சரியா போயிடுவான்னு பார்த்தா இப்போ எல்லாம் தான் இன்னும் மோசமா இருக்கான்.”
“ம்ம் அப்படியே இவங்க மட்டும் என்னவாம்? உன் மாமனாருக்கு இளா முகம் லேசா சுணங்கினா கூட தாங்காது. இவனுக்காக தான் எங்க சித்தப்பாவோட சண்டை போட்டு மிலிட்டரியில் இருந்தே வர வைச்சாரு.
அப்பறம் உன் மாமியாருக்கு சாப்பாடு தூக்கம் புருசன் பையன் யாரும் வேண்டாம் இளா இருந்தால் போதும். இதில் எங்களை சொல்றாங்க..”, என்றதில் அனைவருமாய் சிரித்திருக்க ஆரணிக்கு தான் ஆச்சரியம் சற்றும் அடங்காமல் போனது.
“மற்றவர்கள் ஆளுக்கொரு வேலையாய் எழுந்து செல்ல ஆரணியும் ரங்கமணியும் மட்டுமே அங்கு இருந்தனர்.
“எல்லாரும் ஒரே வீட்டில் இருக்குறதுனால பெருசா ஒண்ணும் தெரியலை டா. அவன் சித்தி செல்லம்னாலும் பெத்தவ நான் தானே. என்னை கண்டுக்காம போனா தான் அந்த பயமெல்லாம்.
என்ன வாய் பேசினாலும் எனக்கு ஒண்ணுனால் துடிச்சு போயிடுவான். எங்களைப் பொறுத்த வரை எங்களுக்கு இரண்டு பசங்க. அதே தான் ஜானுவுகக்கும்.”, என்றதில் புன்னகைத்தாள் ஆரணி.
புது ஜோடி தேனிலவிற்கு கிளம்பியிருக்க இங்கு பெரியவர்களோடு அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்தான் இளன்.
“என்ன இளா.. அம்மா விஷயத்தை சொன்னாளா?”, என்று ஸ்ரீதர் கேட்டதில் தாயை முறைத்தான்.
“அவளை ஏன் டா முறைக்குற.. எங்களுக்குத் தெம்பு இருக்கும் போதே உங்க இரண்டு பேருக்கும் எல்லா பொறுப்பையும் முடிச்சு விட வேண்டாமா..
இவன் தான் இப்போ அப்போனு 30 வயசு வரை இழுத்தடிச்சான். உனக்கென்ன?”
“…”
“எதாவது சொல்லு டா?”, என்று கோபாலனும் அழுத்தம் கொடுத்தார்.
“ப்பா கொஞ்ச நாள் போகட்டும்.. அதுவுமில்லாம அவ என் ஸ்டூடண்ட்.. சின்ன பொண்ணு பா..”
“டேய் கிழவன் மாதிரி பேசாத 7 வயசு தான வித்தியாசம்..”, என்று ரங்கமணியும் சுற்று போட்டார்.
“அப்போ எல்லாரும் ஒரு முடிவோட இருக்கீங்க?”
“அப்படி இல்ல இளா கண்ணா.. செல்வி சித்தி சொன்னா கண்டிப்பா நல்ல பொண்ணா தான் இருக்கும்.
எப்படியும் அவங்ககிட்ட பேசி ஜாதகம் பொருந்தி அவங்களுக்கும் விருப்பம் இருந்து.. எப்படி எவ்வளவோ இருக்கு தான..”, என்றதில் யோசனையாய் உணவை கைகளால் அளந்து கொண்டிருந்தான் இளன்.
“சரி அவனை போட்டு படுத்தாம இத்தோட இந்த பேச்சை விடுங்க.”, என்று ஸ்ரீதர் இளனிற்கு பரிந்து கொண்டு வந்தார்.
ஜானகி பாவமாய் ரங்கமணியைப் பார்த்தார். அவருக்குத் தெரியும் ஸ்ரீதர் முட்டுகட்டை போட்டு விட்டால் அதன் பின் தலைகீழாய் நின்றாலும் எதுவும் செய்ய முடியாதென.
தாயைக் கவனித்தவனுக்கு அவரின் முகம் மிட்டாயைப் பிடுங்கிக் கொண்ட பிள்ளையைப் போல் தோன்ற மனம் கரைந்தவனாய்,
“சரி இளா நான் என்ன ஏதுனு விசாரிக்குறேன்”, என்ற படி ஸ்ரீதர் எழுந்து கொள்ள ரங்கமணியும் கோபாலும் சென்றவுடன் தாயிடம்,
“அப்படி என்ன உங்களுக்கு இந்த பொண்ணே முடிக்கணும்னு?”
“இந்த காலத்து பிள்ளைங்க எல்லாமே துறுதுறுனு இருக்கும். நீயோ அமைதி உனக்கு அந்த மாதிரி பொண்ணெல்லாம் தோதுபடுமோ என்னவோ?
இந்த பிள்ளை ரொம்ப சாதுவா இருந்தாளா அதான். உனக்கும் அவளுக்கும் பொருத்தம் கூட நல்லாயிருந்தது டா இளா.”
“ம்மா.. முடிவாகாம என்ன இதெல்லாம்..”
“அடப் போடா எனக்கென்னவோ இந்த இடம் கண்டிப்பா முடியும்னு தோணுது. நீ வேணா பாரு.”, என்று செல்பவரை ஒன்றும் கூற முடியாமல் அமர்ந்திருந்தான் இளன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.