யுவாவின் மகள்கள் இருவரையுமே தன் மருமகள்களாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்றிய அன்றே தன் இளைய மகனிடம் மேலோட்டமாகப் பேசி அவன் மனதிலும் பெண்கள் மேல் உள்ள பிடித்தத்தை உணர்ந்து கொண்ட அஸ்வின் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று மனைவியிடம் கலந்தாலோசித்து பின் ஆதியிடமும் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன், அன்றைய இரவு பால் டம்ளரோடு தங்கள் அறைக்குள் நுழைந்த மதியை, “உனக்காகத்தான் வைட்டிங் பேபீ” என்று இறுக்கிக் கொண்டவனை ஏகத்துக்கும் முறைத்தவளும் வழக்கமான பல்லவியாக, “கல்யாண வயசுல ரெண்டு பசங்கள வச்சுக்கிட்டு இன்னும் என்ன பேபீன்னு கொஞ்சல்.” என்று அவனிடமிருந்து திமிறினாள்.
அவனும் எப்பொழுதும் போல், “ஏன் பேபி கல்யாண வயசுல பசங்க இருந்தா பொண்டாட்டியக் கொஞ்சக் கூடாதுன்னு ரூல்ஸ் ஏதும் இருக்கா என்ன?” என்று மென் மேலும் அணைப்பை இறுக்கியவன் அப்படியே அவளை அழைத்துச் சென்று படுக்கையிலும் அமர வைத்து, “உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் பேபி” என்று சொல்ல…
அவளும், “நானும் தான் அஸ்வி உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்று சொன்னாள்.
அதற்கு அஸ்வினும், “அப்டியா!” என்றவன் “அப்போ லேடிஸ் பர்ஸ்ட். நீயே முதல்ல சொல்லுடா. என்ன விஷயம்?” என்று கேட்க…
அவளும், “நம்ம யுவா அண்ணா பொண்ணுங்களப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அஸ்வி?” என்று வினவினாள்.
மனைவியின் கேள்வியிலே அவளும் தன்னைப் போலவே யோசித்திருப்பதைப் புரிந்து கொண்டவன், “யுவாவோட டாட்டர்ஸ் ரெண்டு பேருமே என் மதி பேபி மாறியே சோ ஸ்வீட் கேர்ள்ஸ். என் மதி பேபிக்கு மருமகளா வர்ற எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன்டா” என்று கண் சிமிட்டிச் சொல்ல…
கணவனின் கூற்றில் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவளும்,
“நீங்களும் இதப் பத்தி தான் பேசனும் சொன்னீங்களா அஸ்வி?” என்று குதூகலக் குரலிலே கேட்டாள்.
அவளைப் பார்த்து “எஸ் டா” என்று இதழ் பிரித்துச் சிரித்தவனும், “நீயும் இது பத்தி யோசிச்சுருப்பன்னு நான் கெஸ் பண்ணேன்டா மதி” என்றும் சொல்ல…
“எப்டி அஸ்வி?” என்றாள் மதி கணவன் என்ன சொல்லுவான் என்ற பதிலைத் தெரிந்து கொண்டே.
அவளின் எதிர்பார்ப்பு போலவே, “என் மதி பேபியோட மனசு எப்போ என்ன நினைக்கும்னு எனக்குத் தான் தெரியும்டா. ஏன்னா அங்க இருக்கதே நான் தானே” என்று இன்றளவும் இம்மியும் குறையாத காதல் பொங்கும் குரலில் கூறி மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுச் சிரித்தவனின் கரத்தைப் பற்றிக் கொண்ட மதியும், “ஐ லவ் யூ அஸ்வி” என்று கிள்ளை மொழியால் சிணுங்கினாள்.
இத்தனை வருட மகிழ்ச்சியான திருமண வாழ்வில் காதலில் மட்டுமல்லாது எண்ணங்களிலும் செயல்களிலும் கூட தன் மனதை ஒத்திருக்கும் கணவனின் கரையில்லாக் காதலில் சில நிமிடங்கள் கட்டுண்டு இருந்த மதியும் மெல்ல தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டவள், “ஆனா அஸ்வி, ஆதி இதுக்கு என்ன சொல்லுவான்னு நினைச்சாத்தான் கொஞ்சம் யோசனையா இருக்கு.” என்றும் சொல்ல…
அதில் அவளை மெல்லிய சிரிப்போடே ஏறிட்டவனும், “நிச்சயம் வேணாம்னு தான் சொல்லுவான் பேபி. மூனு வருசமா மேரேஜ் பேச்சுக்கு பிடி கொடுக்காதவன் இப்பவும் வேணாம்னு தான் சொல்லுவான். அவன் ஆசைப்பட்டான்னு சைல்ட் வுட்லயிருந்து அவன யூ எஸ் லயே விட்டு வச்சது தான் நம்ம செஞ்ச தப்பு. அப்போவே கொஞ்சமாச்சும் அவனுக்கு இந்தியன் கல்ச்சர கத்துக்கொடுத்துருக்கணும். நாம தப்பு பண்ணிட்டோம் பேபி” என்று ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு நிறுத்தியவன், “அதுக்காக அவன அப்டியே விட்டுட முடியுமா?” என்றும் கேட்டு… “நாளைக்கு ஈவ்னிங் பசங்க ரெண்டு பேர் கிட்டயுமே பேசலாம். பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம் பேபி. இப்போ தூங்கலாம் வா” என்று சொல்லி இரவு விளக்கை ஒளிர விட்டு மனைவியோடு இணைந்து உறக்கத்தைத் தழுவிய அஸ்வின், மனைவியிடம் கூறியது போலவே மறுநாள் மாலை மகன்கள் இருவரிடமுமே சற்று சீக்கிரமே வீட்டிற்கு வருமாறும் கூறியிருந்தான்.
அவர்களும் தந்தை ஏதோ தொழில் விஷயம் பேசுவாரோ என்று எண்ணி பெற்றோரின் முன்னே அமர, அவர்களும் தங்கள் ஆசையை, எதிர்பார்ப்பை அவர்களிடம் கூறினார்கள்.
“யுவாவோட ட்வின் டாட்டர்ஸ் ரெண்டு பேரையும் உங்க ரெண்டு பேத்துக்கும் மேரேஜ்கு கேக்கலாம்னு நினைக்கிறோம்பா நீங்க என்ன சொல்றீங்க?” என்று அருகில் இருந்த மனைவியையும் ஒரு முறை ஏறிட்டு விட்டு மகன்களிடம் வினவிய அஸ்வினின் வார்த்தையில், ஆத்விக்கின் முகமோ சிறிதான வெட்கத்தோடு கலந்த மகிழ்ச்சியைத் தத்தெடுக்க, ஆதியின் முகமோ முற்றும் முழுதும் பிடித்தமின்மையைப் பிரதிபலித்ததோடு, “வேற ஏதும் இம்பாரட்டெண்ட் திங் இல்லன்னா ஐம் நீட் டூ ரெஸ்ட் டாட்” என்று சட்டென்று எழுந்தே விட்டான்.
ஆதியின் எதிர்வினையை முன்பே யூகித்திருந்த அஸ்வினும் மகன்கள் இருவரையுமே மாறிப் மாறிப் பார்த்து, ஆத்விக்கின் சம்மதத்தை அவன் முகத்திலே படித்துக் கொண்டவன்,
“கூல் சார்ம். சிட் பார் எ வைல்” என்று ஆதியையும் அமர வைத்தவன், திருமணத்தின் முக்கியத்துவம் பற்றியும் தாம்பத்தியத்தின் புனிதம் பற்றியும் சிறிதொரு வார்த்தைகள் பேச அவனை அசூசையாகப் பார்த்தவனும், “ஒரு டீக்காக யாராச்சும் டீ எஸ்டேட்டையே வாங்குவாங்களா டாட்?” என்று கேட்டு தந்தை வாயையே அடைத்தான்.
அதைக் கேட்டுப் பொங்கி வந்த சிரிப்பை அன்னையின் முறைப்பில் அடக்கிக் கொண்ட ஆத்விக்கும் தந்தை மற்றும் தமையனின் வார்த்தைப் போரைப் பார்க்க ஆர்வமாக இருக்க ஆதியின் புறம் சற்றே சாய்ந்து அமர்ந்த அஸ்வினோ, “லைப் லாங் பெஸ்ட் டீ குடிக்கணும்னா ஒரு டீ எஸ்டேட் வாங்குறதுல தப்பே இல்லை மை சன்” என்க…
அதற்கு அவன் மகனும், “ஐம் நாட் இன்ட்ரெஸ்டெட் டாட்.” என்று மட்டும் சொன்னான்.
மகனின் பேச்சில் கலங்கிய மதியும் கணவன் விரல்களைப் பற்ற அதை அழுத்திக் கொடுத்த அஸ்வினும், “சரி… இப்டியே எவ்ளோ நாளைக்குதான் நீ மேரேஜ் பண்ணிக்காம இருப்ப சார்ம்?. உனக்கு முடிஞ்சா தானே ஆதுக்கு பண்ண முடியும். அவனுக்கே இப்போ மேரேஜ் ஏஜ் ஆகிடுச்சு. யூ ஆர் டூ லேட்” என்று சற்றே வார்த்தையில் அழுத்தம் கொடுத்துச் சொன்ன தந்தைக்கு…
“ஆது மேரேஜ் பண்ணிக்க விரும்புனா அவனுக்கு செஞ்சு வைங்க டாட். அதுக்கு எதுக்கு நான் மேரேஜ் பண்ணனும்?” என்று இப்பொழுதும் பதில் கேள்வியே கேட்டான் ஆதித்யா.
முற்றிலும் மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் ஊறிப் போய் விதண்டாவாதம் பேசும் மகனிடம் மேலும் என்ன பேசவென்று புரியாது திணறிய அஸ்வின் அமைதியாக இருக்க ஆனால் மகனைப் பார்த்து “ஆதிக்கண்ணா” என்றழைத்த மதியோ, “நீ சொல்றமாதிரி அண்ணன் இருக்கப்போ தம்பிக்கு மேரேஜ் பண்றது. அம்மாவும் மகளும் ஒரே டைம்ல பிள்ளை பெத்துக்கறது. இதெல்லாம் வெளிநாடுகள்ள வேணா சகஜமா இருக்கலாம். ஆனா நம்ம தமிழ் மண்ணுக்குன்னு சில கோட்பாடுகள் இருக்குப்பா. நாமளும் அதுக்குள்ள பொருந்தி தான் வாழனும் கண்ணா. ஆதுக்காகன்னு இல்லாட்டியும் எனக்கும் டாட்க்கும் உன்னையும் மணக் கோலத்தில பாக்கணும், உன்னோட குழந்தைகளை கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?” என்று குரல் கரகரக்கக் கேட்ட அன்னையைப் பார்த்தும், “யூ ஆர் ட்ரையிங் டூ மீ டாமினேட் மாம்” என்றே சொன்னவன் முகத்தில் கூட சிறிதும் இணக்கம் காட்டாமல் தான் அமர்ந்திருந்தான் ஆதித்யா.
இரவு நேரத்துப் பட்டாம்பூச்சிகளாய் மட்டுமே தன்னைச் சுற்றும் பெண் இனத்தைப் பார்த்து வளர்ந்தவனுக்கு தன் வாழ்க்கையில் மீதம் இருக்கும் பெரும் பகுதிக் காலத்தை ஒரு பெண்ணின் கையில் ஒப்படைக்க அவனுக்கு சிறிதும் விரும்பமில்லை. அவனைப் பொருத்த வரை திருமணம் என்பது கையும் காலையும் கட்டிக் கொண்டு சொர்க்கத்தில் வசிப்பது போன்றது. வெளியே இருந்து பார்க்கும் பொழுது அங்கு மகிழ்ச்சி மட்டுமே இருப்பது போல் தோன்றும். ஆனால் உள்ளே நுழைந்தால் தான் தெரியும் அங்கிருப்பது முட்களா மலர்களா என்று.
ஆனால் திருமண வாழ்வின் சூட்சுமமே ஒரு ஆணும் பெண்ணும் நான் என்ற அகம் உடைத்து நாமாய் இணைந்து தங்கள் காதல் நீரை கணக்கில்லாது ஊற்றி முட்களால் நிறைந்த வாழ்க்கையைக் கூட மலர்களாய் மாற்றி தங்கள் மகிழ்ச்சியை என்றென்றும் தக்க வைத்துக் கொள்வது தான் என்று காளை அவன் உணரும் நாளும் எந்நாளோ???
தமையனின் பிடிகொடுக்காத பதில்களில் ஆத்விக்கின் முகமும் களை இழந்து போக, மதியோ இன்னும் இன்னும் மகனின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்திருந்தாள்.
இதுவரை மகன்களின் எந்த தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடாத அஸ்வினும் மனைவியின் கலங்கிய வதனம் காணப் பொறுக்காமல் ஆதியிடம் திரும்பியவன், “உனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ள இருந்து இப்போ வரை உன்ன எந்த விதத்துலயும் கார்னர் பண்ணாத உன் அம்மா உன்கிட்ட மூனு வருசமா கேக்குற ஒரே விஷயம் உன்னோட மேரேஜ் தான். வேற யாருக்காக இல்லன்னாலும் உன் மாம்க்காகவாச்சும் உன்னோட தாட்ட கொஞ்சம் மாத்திக்கக் கூடாதா சார்ம்?” என்று கேட்டான் அஸ்வின்.
அதில் தன்னைப்போலவே தன் மகனும் இனிமையான ஒரு காதல் வாழ்வு வாழவேண்டும் என்கிற தந்தையின் தவிப்பும் சேர்த்தே இருந்தது.
கூடவே ஆத்விக்கும், “ஆமாண்னா ராஹியும் சாஹியும் நம்ம மாம் மாதிறியே வெரி பிரெட்டி கேர்ள்ஸ். அவங்க ரெண்டு பேரும் நம்ம பேமிலில ஜாயின் பண்ணா நம்ம லைஃப் இன்னும் ஹாப்பியா இருக்கும்ணா” என்று உள்ளே போன குரலில் சொல்ல…
தம்பியோடு சேர்த்து அனைவரின் பேச்சையும் அமைதியாகவே செவிமடுத்திருந்த ஆதியும், அத்துணை நேரமும் அன்னையின் முகத்தையே பார்த்திருந்தவன் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து நின்று லேசாக தொண்டையைக் கனைத்துக் கொண்டவனோ, “ஆல் இந்தியன்ஸ் பீப்பில்சும் இடியாட்டிக் செண்டிமெண்ட்ல நிறைய லாக் ஆகி இருக்கீங்க” என்று சற்றே சினம் மேவ சிலிர்த்துக் கொண்டவன், “ம்ம் ஓகே நான் மேரேஜ் பண்ணிக்கிறேன். ஆனா பொண்ணு…” என்று நிறுத்தியவனுக்கு கண் முன் ராஹியின் முகம் ஒரு கணம் வந்து செல்ல,
அதில், ‘அந்த வில்லேஜ் வாயாடியா நோ வ்வே’ என்று தலையைக் குலுக்கிக் கொண்டவன், “சாஹித்தியாவ வேணா பொண்ணு பேசுங்க” என்று மட்டும் கூறி முடித்தவன் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கு நில்லாது மாடிப்படிகளில் தாவி மறைந்து விட்டான் ஆதித்யவர்மா.
ஆதி சென்று மறைந்ததும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்ட அவன் பெற்றோரோ, “நம்ம ராஹியதானே ஆதிக்கு கேக்க நெனச்சோம். அவன் என்ன இப்டி சொல்லிட்டுப் போறான்” என்று வாய்விட்டுக் கூறியபடியே இளைய மகனை ஏறிட்டு நோக்க…
அவனும் செல்லும் தமையனின் முதுகையே பார்த்திருந்தவன் பெற்றோர் தன்புறம் திரும்பவும் வெண்ணிற பற்கள் ஒளிர காதுவரை இழுத்துச் சிரித்து கட்டாயப் புன்னகையைப் படர விட்டவனோ, “எனக்கு ரெண்டு பேரையுமே ரொம்ப பிடிக்கும் டாட். அண்ணாக்கு சாஹியத்தான் பிடிச்சிருக்குன்னா நீங்க அண்ணா விருப்பப்படியே எல்லாம் செய்யுங்க.” என்று ஆதிக்கு சாஹியின் மேல் விருப்பம் இருக்குமோ என்று எண்ணியவனாய் பெற்றோர் தன்னிடம் கேள்வி எழுப்பும் முன்பே தன் பதிலைக் கூறியவனும் தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.
அஸ்வினோ அவனை சற்று யோசனையாகவே பார்த்திருக்க…
மகன்களின் கூற்றில் பரவசம் அடைந்த மதியோ, “அஸ்வி நாளைக்கே நாள் ரொம்ப நல்லாயிருக்கு. நம்ம நேர்லயே போய் யுவா மலர்கிட்ட பேசிட்டு வரலாம் அஸ்வி.” என்று அடுத்தடுத்த திட்டங்களைத் தீட்டத் தொடங்கி விட்டாள்.
ராஹியும் சாஹியும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள் ஆதலால் அதில் இளையவளை ஆதிக்கு பேசுவதில் அஸ்வின் தம்பதிக்கு மட்டுமல்ல, அவர்களின் திடீர் வரவோடு அவர்கள் விருப்பமும் அறிந்து கொண்ட யுவா வீட்டினருக்கும் கூட அதில் பெரிதான தடங்கல் இருப்பதாகத் தோன்றவில்லை.
மாறாக சென்னையில் இத்துணை பெரிய அந்தஸ்து கொண்டவர்கள் கிராமத்தில் வாழும் தங்கள் பெண்களைக் கேட்டு வந்திருக்கும் ஆச்சர்யத்தை விழிகளில் தேக்கி அவர்களை ஏறிட்டவர்கள், ‘ஆனா இவ்ளோ தூரத்துல எப்டி பொண்ணுங்களைக் கொடுக்கறது?’ என்றும் சற்றே தயங்கி, “அது அது வந்து மச்சான்” என்று வார்த்தைகள் கிட்டாது தடுமாற…
அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்ட அஸ்வினும், “கூல் கூல் யுவா” என்று அவர்களை அமைதிப் படுத்தியவன், “இது எங்களோட ஆசைதான். இதுக்கு நீங்க உடனே பதில் சொல்லணும்னு எந்த அவசரமுமில்லை. நீங்க எல்லாரும் டைம் எடுத்து நல்லா யோசிச்சு ஒரு நல்ல பதிலச் சொல்லுங்க” என்று சொல்ல… மலர்விழியின் கையைப் பற்றிக் கொண்ட மதியும், “சென்னை ரொம்ப தூரம்னுலாம் யோசிக்காத மலர். உன் பொண்ணுகளை நான் என் மகள்களா பாத்துப்பேன். பசங்களுக்கு இப்போ வேலையும் அங்கதானே. அவங்க கிட்டயும் பேசிட்டு நல்ல முடிவா எடுங்க” என்றும் கூறி முடிவை பெண் வீட்டினரிடம் விட்டுவிட்டு சந்தோசமாகவே சென்னை திரும்பினர் அஸ்வினும் மதியும்.
அஸ்வினும் மதியும் பூஞ்சோலை வந்து பெண் கேட்டு சென்றப் பின்னர் குடும்பத்தினரோடு இணைந்து கலந்தாலோசித்தவர்களுக்கு அஸ்வினின் மகன்களை விட சிறந்த வரன்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கிட்டாது என்றே விடை கிடைத்ததில் மனம் மிக்க மகிழ்வுற்ற போதும், தங்கள் கைக்குள்ளே வளர்ந்த பெண்களை அத்துணை தூரத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு எப்படி இருப்பது என்றும் ஒரு பாசமிகு பெற்றோராகவும் சிறிது தயங்கியவாறே இருந்தவர்கள் முடிவை பெண்களின் கையிலே விட்டு விட எண்ணி சென்னைக்கு வந்து இறங்கினர் யுவாவும் மலரும்.
முன்னறிவிப்பே இல்லாது திடீரென்று தங்களைக் காண வந்திருக்கும் பெற்றோரைக் கண்டதும் பெண்கள் இருவரும் “விழிம்மா… யுவிப்பா… நீங்க எப்போ சென்னை வந்தீங்க?” என்று ஆனந்தக் கூச்சலிட்டு அவர்களைக் கட்டி அணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த…
அவர்களும், “இப்போ தாண்டா வர்றோம். நீங்க எப்டி இருக்கீங்கடா?” என்று மகள்களின் நெற்றியில் முத்தமிட்டு அகம் மகிழ்ந்து கொண்டனர்.
மறுநாள் ஞாயிறு விடுமுறை நாளாக இருக்க முதல் நாள் மாலையே சென்னை வந்து இறங்கியவர்கள் பயணக் களைப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுத்தப் பின்பு தங்கள் முகத்தையே யோசனையாகப் பார்த்திருந்த மகள்களை அமர வைத்த யுவாவோ நேரடியாக விஷயத்திற்கு வந்தவனாய், “அஸ்வின் மாமா பசங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு கேக்குறாங்கடா.” என்று தொடங்கி, “அதப் பத்திப் பேசிட்டுப் போகத்தான் நாங்க வந்தோம்” என்று கூறி சற்றே நிறுத்தி தொண்டையைச் செருமிக் கொண்டு தொடர்ந்தவன், “உங்களுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்டா. ஒன்னும் அவசரமில்ல நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க” என்று மட்டும் கூறியவன் மகள்களைப் பார்க்க…
அவர்களோ, தந்தையின் கூற்றில் முகம் சிவந்து ஒருவரை ஒருவர் அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் நோக்கிக் கொண்ட இருவரின் விழிகளிலுமே சட்டென்று ஆத்விக்கின் முகம் தான் ஒரு கணம் மின்னி மறைந்து சென்றது.
மகள்களின் முகத்தில் தெரிந்த ஒளி வட்டத்தை வைத்தே அவர்களுக்கும் இந்தத் திருமணப் பேச்சில் மிகுந்த விருப்பம் என்று புரிந்து கொண்ட மலரோ மகள்களுக்கு மேலும் விபரங்கள் வழங்கும் பொருட்டாக, “என்ன யுவித்தான் இப்டி பசங்கன்னு மொட்டையா சொன்னா எப்டி?” என்று கணவனிடம் கேட்டவள், பெண்களிடமும், அஸ்வினும் மதியும் பூஞ்சோலை வந்ததிலிருந்து யாருக்கு யாரைப் பெண் கேட்டார்கள் என்று விலாவாரியாக அனைத்தும் கூறி முடித்தாள்.
தந்தையின் பேச்சில் தாமரையின் இதழாக மலந்திருந்த சாஹியின் முகமோ “ஆத்விக்கிற்கு ராஹியை கேட்டார்கள்” என்ற அன்னையின் வார்த்தையில் சட்டென்று சுற்றும் பூமி நின்று விட்டதைப் போல் அதிர்ந்து விட்டவளின் மனதோடு சேர்த்து விழிகளும் கலங்கிப் போக, வெளியே வந்து விழவா என்று உவரி நீரும் கரை கட்டி நின்றது.
இருந்தும் சுற்றம் கருதி தலையைக் குனிந்து தன்னுணர்வை மறைத்துக் கொண்டவள், “எங்களோட முடிவ யோசிச்சு சொல்றோம்ப்பா” என்று சற்றே கரகரத்த குரலில் ராஹிக்கும் சேர்த்தே பதில் உரைத்தவள், மறுநிமிடமே எழுந்து சென்று குளியலறைக்குள்ளும் நுழைந்து கொண்டாள்.
அந்த விடுதி அறையில் ஒரு சிறிய வரபேற்பரையும், இரு படுக்கைகள் கொண்ட படுக்கை அறை மட்டுமே இருக்க, தான் செவியுற்ற செய்தியில் நீர் நிறைந்து விட்ட விழிகளை மறைக்க முடியாது குளியலறைக்குள் புகுந்து கொண்டவளுக்கு கதவை அடைத்த மறுநிமிடமே மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் துளிகள் அவள் கன்னங்களில் இறங்க ஆரம்பித்து விட்டது.
ஆத்விக் எத்துணையோ முறை தங்கள் ஊருக்கு வந்து சென்ற பொழுதெல்லாம் அவன் மேல் தோன்றாத காதல் சாஹி சென்னை வந்த இந்த எட்டு மாத காலத்தில் அவனது மென்மையான குணத்தில் அன்பில் அக்கறையில் ஆத்விக்கின் பால் அவள் உள்ளம் முற்றும் முழுதுமாய் குடை சாய்ந்து அவனைத் தன் காதலனாகவும் கணவனாகவும் நெஞ்சில் சுமக்க ஆரம்பித்து விட்டவளுக்கு ஆத்விக்கிற்கு ராஹியைக் கேட்ட செய்தியே தாள முடியாதிருக்க, ‘அவர் சம்மதத்தோடு இந்த பேச்சு வார்த்தை நடந்ததா? அப்போ அவர் என்னைக் காதலிக்கவே இல்லையோ?’ என்ற எண்ணமும் அவள் உள்ளத்தை ரணமாய் வலிக்க வைத்தது.
எங்கே சப்தமிட்டு அழுதால் வெளியே இருக்கும் பெற்றோருக்குக் கேட்டுவிடுமோ என்று சிறிது நேரம் மௌனமாய் அழுதவளுக்கு
ஒருவேளை இந்த பேச்சு ஆத்விக்கிற்குத் தெரியாமலே நிகழ்ந்திருந்தால் என்றும் மூளையில் சிறு மின்னல் வெட்ட சிறிதும் தாமதியாது கையோடு கொண்டு வந்த கைபேசியை எடுத்தவள் அடுத்த நொடி அழைத்தது என்னவோ ஆத்விக்கிற்குத்தான்.
சில நாட்களாகவே தன்னறையே கதி என்று இருப்பவன் பெண்ணவள் அழைப்பாள் என்று அறிந்தே இருந்தது போல் ஆத்விக்கின் கையிலே குடியிருந்த கைபேசி, “ஏஞ்சல் கால்லிங்” என்று அலறியது.
சாஹி அழைப்பது தெரிந்தும் அதை எடுக்க மனமில்லாது கைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் மீண்டும் மீண்டும் அழைக்கவும் வேறு வழியில்லாது அதை உயிர்பித்து உயிர்ப்பே இல்லாமல் “ஹலோ” என்றான்.
ஆத்விக்கின் அந்தக் குரலும் அவனின் “ஹலோ” என்ற அழைப்புமே சாஹியின் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைத்தது.
இருந்தும் இழுத்துப் பிடித்த நம்பிக்கையோடு, “ஆது மாமா” என்றழைத்து முழுமூச்சாய் விபரம் முழுதும் கூறியவள்,
“கல்யாணம் விஷயம் முழுசா உங்களுக்குத் தெரியாதா மாமா?” என்றும் சேர்த்துக் கேட்க…
அவள் என்ன கேட்க வருகிறாள் என்று புரிந்து கொண்டாலும் புரியாத பாவனையில் லேசாக தொண்டையையும் செருமிக் கொண்டவன், “எனக்கு எல்லாம் தெரியும் சாஹி. என்னோட முழுச்சம்மதம் கேட்டப் பின்னதான் மாம்மும் டாடும் உங்க ஊருக்கு போனாங்க” என்று ஒரு மாதிரி வெற்றுக் குரலில் சொல்லி முடித்தான் ஆடவன்.
அதைக் கேட்டு அதிர்ந்தவளின் கால்கள் தடுமாறி குளியலறை திண்டில் அமர்ந்து விட்டவளோ,
“ஆது மாமா நீங்க நீங்க என்ன சொல் சொல்றீங்க?. நான் நான் உங்கள” என்று திக்கித் திக்கித் அவன் மேல் உள்ள நேசத்தைக் கூற முயன்றவளை…
மேலே பேசவிடாது தடுத்தவனோ, “உன்ன உன்ன அண்ணாவுக்குத்தான் பொண்ணு பேசிருக்காங்க சாஹி. நீ நீ என்னோட அண்ணாவ தான் மேரேஜ் பண்ணிக்கப் போற. நீ நீ நீ இனிமேல் எனக்கு அண்ணி முறை. அதனால எனக்கு இப்டி போனெல்லாம் பண்ணாத” என்றும் ஒரு வேகத்தோடு உரைத்தவன் அவள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் கைபேசியையும் அணைத்து விட…
அவன் பேச்சில் விக்கித்து நின்றவளோ, “நான் நான் அ அ அ அண்ணி முறையா?… என்ன அண்ணின்னு சொல்ல உங்களுக்கு எப்டி ஆது மாமா மனசு வந்தது? அப்போ என்ன நீங்க லவ் பண்ணவே இல்லியா?. என் மேல இவ்ளோ நாளா காட்டுன அன்புக்கும் அக்கறைக்கும் என்ன பெயர் மாமா?” என்றும் கைபேசியில் இருந்த ஆத்விக்கின் புகைப்படத்திடம் கேட்டுக் கேட்டே இரவு முழுதும் அழுது கரைந்தவள் விடிகாலை வேலையில் ஒரு உறுதியான முடிவோடு பெற்றோரின் முன்னால் நின்றாள் சாஹித்தியா.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.