இன்னும் சேவல் கூட எழும்பாத அதிகாலை வேளையில் திருநெல்வேலியில் உள்ள உணவுத் தொழிற்சாலையில் தனக்கென்று உள்ள பிரத்தியேக அறையின் படுக்கையில் கை இரண்டையும் தலைக்கு அடியில் கொடுத்து, மோட்டு வலையை வெறித்திருந்த யுவாவின் விழிகளோ மூன்று தினங்களாக ஒரு பொட்டுக் கூடத் தூக்கமில்லாததால் செஞ்சூரியனாய் தகதகக்க, அவனின் உதடுகளோ, “மொசக்குட்டி என்ன நீ நம்பலல்ல” என்றே சொல்லிய வண்ணம் இருக்க…
அவன் அருகில் இருந்த அவனது கைபேசியோ, மெல்ல வைப்ரேட்டிங் மோடில் அதிர்ந்து தன் இருப்பைக் காண்பிக்க, அவனோ கடந்த மூன்று தினங்கள் போலவே இன்றும் அதை பெரிதாக சட்டை செய்யாமல் தான் அசையாது படுத்திருந்தான் யுவா.
தன் மனம் கொய்த மலர்ப் பெண் தன்னை நம்பாது தன் மேல் அப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியதும் அன்றைய இரவு நா போறேண்டி என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய யுவா நடுசாமம் என்றும் பாராமல் ஜீப்பை விரட்டி தன் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தவனோ… முழுதாக மூன்று தினங்கள் முடிந்தும் கூட வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் தன் அத்தியாவசிய தேவைகளைக் கூட அங்குள்ள தன் பிரத்தியேக அறையிலேயே நிறைவேற்றிக் கொண்டவனை…
அவன் கனவுத் தொழிற்சாலையும் பகல் பொழுது முழுதும் அன்னை மடியாய்த் தாங்கி ஆதரவு அளித்தாலும் இரவு வேளையில் யுவாவைக் கேளாமலே மலரின் நினைவுகளும் தங்களுக்குடையில் அன்று நடந்த சாம்பாசனைகளும் வந்து சூழ்ந்து அவன் உறக்கத்தைக் கூட வாங்கிக் கொள்ள…
அவனோ காதலும், மோகமும், தாபமும் அது நிறைவேறாத ஏக்கமும் கோபமும் கலந்த ஒரு விரக்தி மனப்பான்மைக்கே வந்து விட்டிருந்தவனின் அலைபேசியோ விடாமல் சிணுங்கியது…
விடாது சிணுங்கும் கைபேசியை சற்று எரிச்சலுடனே எடுத்துப் பார்த்தவனோ, அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டு, மற்றய அழைப்புகளைப் போல் அதை புறந்தள்ள முடியாது கைபேசியை ஆன் செய்து செவியில் பொருத்தியவன்…
“ஹலோ அப்பா… சொல்லுங்கப்பா.?” என்று வினவ…
அந்தப் புறம் பேசிய சிதம்பரமோ, “தம்பி நீ வீட்டுக்கு வந்து மூணு நாள் ஆச்சுனு உங்கம்மா ஒரே நச்சரிப்பு பண்றாப்பா, இன்னிக்காச்சும் வீட்டுக்கு வருவியான்னு கேக்க சொல்றா.?” என்று அனைத்தும் அறிந்திருந்தாலும் ஒன்றும் அறியாதவர் போல் அன்னையை சாக்கிட்டு கேட்டவரிடம் போக்குக் காட்ட முடியாதவனோ…
“இதோ கிளம்பிட்டேன்பா” என்று மட்டும் சொல்லி கைபேசியை அணைத்தவனுக்கு இப்பொழுதும் வீட்டுக்குச் செல்ல அவன் தன்மானம் தடுத்தாலும், தன் அப்பாவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து வேறு வழியில்லாது வீட்டிற்கு கிளம்பிய யுவாவோ அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்கள் வீட்டிற்குள் நுழைய, அவன் வருகைக்காகவே காத்திருந்தாள் போல் ஓடி வந்து…
“வந்துட்டீகளா மாமா” என்று அவன் முன்னால் நின்றது என்னவோ அவன் மனைவி தான்.
மலர்விழி என்னதான் கணவன் மேல் அப்படி ஒரு பழியை சுமத்தி அவனை விரட்டி இருந்தாலும், அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டானே என்று அவன் மேல் கோபமும் கொண்டிருந்தாலும், இந்த மூன்று தினங்களாகக் கணவனைப் பாராது அவன் விழிமா என்ற அழைப்பைக் கேளாது தவித்துப் போய் இருந்தவள், இந்த மூன்று தினங்களாக அவனை கைபேசியிலும் அழைத்த வண்ணம் தான் இருந்தவளின் கைபேசி அழைப்புக்கு மட்டுமல்லாது இப்பொழுது நேரில் அவளுடைய அழைப்புக்கும் கூட பதில் உரைக்காது இறுகிப் போனபடிதான் வீட்டிற்குள் நுழைந்த யுவாவை எதிர் கொண்டார் சிதம்பரம்….
வீட்டிற்குள் நுழைந்த மகனை எதிர் கொண்ட சிதம்பரமோ, “தம்பி… என்னப்பா இது நீ மூணு நாளா ராவுல கூட வீட்டுக்கே வரலயாமே, யார் போன் போட்டாலும் பிஸியா இருக்கேனு மெசேஜூதே பண்றியாமே உங்கம்மா வேற என்னய போட்டு கொடஞ்சு எடுத்துட்டா… நீ இப்டிலாம் செய்ய மாட்டியே ஏன்பா.?” என்று கேட்டவரின் பார்வையோ மகனின் முகத்தையும், அவன் மனைவியின் முகத்தையும் அளவிட்ட வண்ணமே இருக்க, அதைக் கண்டு கொண்ட யுவாவோ….
“இல்லப்பா… பாக்டரில கொஞ்சம் வேல ஜாஸ்தி, கதிர் வேற இல்லியா அதே நானே எல்லாம் பாத்து” என்று தன் முகம் பாராது பேசிய மகனின் வார்த்தைகளை என்றும் போல் இன்றும் அப்படியே ஏற்றுக் கொண்ட சிதம்பரமோ….
“அதுவும் சரிதேப்பா… கதிரும் இல்ல பாக்டரில ஆயிரம் வேல இருக்கும்தே, ஆனாலும் அதெல்லாம் நாலு சொவத்துக்குள்ள இருக்க பொம்பளகளுக்குத் தெரியாதுல்ல, அவகளுக்கு நாமதே உலகம்… நீ இப்டி மூணு நாளா வீட்டுக்கும் வராம, போனக் கூட எடுத்துப் பேசாம இருந்தா அவகளுக்கு கஷ்டமா இருக்குமா இல்லையா” என்று மருமகளின் சோர்ந்த முகத்தைப் பார்த்த வண்ணமே கூறியவரின் பேச்சில் தன் பார்வையும் இப்பொழுது அவள் மேல் பாய விட்டவன்….
மனதுக்குள், “அதெல்லாம் என்ன பாக்காட்டிதே மேடம் சந்தோசமா இருப்பாக” என்று சொல்லிக் கொண்டவனோ…
தந்தை யாருக்காகப் பேசுகிறார் என்று அறியாதவன் போல் அன்னையை நோக்கி, “ஏம்மா வேலைல கொஞ்சம் பிஸியா இருந்து வீட்டுக்கு வரலைன்னா இப்டித்தே பஞ்சாயத்துல நிக்க வக்குற மாறி நிக்க வைப்பீகலா, நா என்ன சின்னப்புள்ளயா? இதுக்கே இப்டி பண்ணா நா இப்போ ஒரு முக்கியமான வேலையா கேரளா போகப் போறீன் வர எத்தன நாள் ஆகும்னு கூடத் தெரியாது, அப்ப என்ன செய்வீக” என்று மலர் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் அன்னையின் மேல் கொட்டியவனுக்கு தந்தை இதில் தலையிட்ட பின் இனி வீட்டிற்கு வராமல் இருக்க முடியாது என்று நன்கு புரி பட்டுப் போக….
மலரை விட்டு சற்று விலகி இருக்க எண்ணியவனோ கேரளா செல்ல போகிறேன் என்று ஒரு குண்டை தூக்கி போட, அதைக் கேட்டு அதிர்ந்தது மலர்விழி மட்டுமல்ல மொத்தக் குடும்பமுமே தான்.
யுவா கேரளா செல்லப் போகிறேன் அதுவும் உடனே செல்லப் போகிறேன் என்றதும்… அனைவரும் ஒன்று சொன்னார் போல்…
“இன்னும் ஒரு வார்த்துல ஜானுமாக்கும் கதிருக்கும் நிச்சயம் ஏற்பாடு பண்ணிருக்கு இப்ப என்னப்பா இப்டி சொல்ற” என்று பதறியவர்களையும்,
வீட்டினர் முன்னே எதுவும் பேசமுடியாது தவித்துப் போய் நின்றிருந்த மலர்விழியையும் மாறி மாறிப் பார்த்தவனோ…
கதிரை நோக்கி, “டேய் கதிரு அந்த கேரளாப் பார்ட்டி வெவகாரம் எவ்ளோ முக்கியம்னு உனக்கே தெரியும்ல, நா உடனே போனாதான சரியா இருக்கும், எல்லாருக்கும் கொஞ்சம் எடுத்து சொல்லுடா” என்றவனை….
கதிரோ, ‘அது எது நமக்கு தெரியாத கேரளா பார்ட்டி’ என்பது போல் பார்த்துக்கொண்டிருக்க…
யுவாவோ தன் முறைப்பாலே அவன் பார்வையை மாற்றியவன்…
“அண்ணே அப்ப பரிசத்துக்கு நீ வரமாட்டியா.?” என்று கேட்ட தங்கையை நெருங்கி…
“அண்ணே முடிஞ்சளவு சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு வந்து உன் நிச்சத்துல கலந்துப்பேண்டா, அப்டி ஒருவேள அண்ணே வராட்டியும் நீ சந்தோசமாதே இருக்கணும், சரியா.?” என்று ஜானுவோடு சேர்த்து மொத்தக் குடும்பத்திடமும் தான் கேரளா செல்லப் போவதை வலியுறுத்தியவனின் முடிவை மீறும் சக்தியற்ற, அவன் பெற்றோரும் வேறு வழியில்லாது…
“சரி தம்பி சீக்கிரம் போய்ட்டு நிச்சயத்துக்குள்ள சீக்கிரம் திரும்பி வந்துருப்பா” என்ற கெஞ்சலோடு அவனிடம் விடைபெற்றவர்கள்…
இன்னும் ஒரு வாரத்தில் நிகழவிருக்கும் ஜானுவின் நிச்சய வேலையை கவனிக்க ஆளுக்கொரு புறம் கிளம்பிச் செல்ல, யுவாவும் கேரளா செல்வதற்கான உடைகள் எடுக்க, தன் அறைக்குள் விரைய… அவனைத் தொடர்ந்த மலர்விழியும் அவனை தடுக்கும் நோக்கத்தோடு அறைக்குள் நுழைந்தாள்.
இந்த நிமிடம் வரை கணவன் மேல் உள்ள வருத்தம் மலர்விழிக்கு குறையாது இருந்தாலும், அவன் கடந்த சில தினங்களாக வீட்டிற்கே வராமல் தொழிற்சாலையில் இருந்ததையே தாங்கிக் கொள்ள முடியாத மலர்விழியோ யுவா இப்பொழுது கேரளா செல்லப் போகிறேன் என்று சொன்னதும், பெரிதும் கலங்கிப் போனவள் கணவனைப் பாராது இனி ஒரு நிமிடம் கூட தன்னால் இருக்க முடியாது என்று உணர்ந்தவள் போல்…
யுவாவைப் பின் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மறுகணம், யுவாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு…
“யுவித்தான் நீங்க கேரளா போகாதீங்கத்தான், உங்கள பாக்காம என்னால இருக்க முடியாதுத்தான்” என்று படபடப்பாகக் கூற…
இந்த மூன்று தினங்கள் மனைவியைப் பாராது, அவளை மொசக்குட்டி என்றழைக்காது, வாழ்வே சூனியம் ஆகிப் போனது போல் அத்துணை விரக்தியில் இருந்தவனுக்கு, மலரின் செயலும் அவள் வார்த்தைகளும் அவன் மேல் பூஞ்சிதறல் கொட்டியது போல் இருக்க…
அவனோ மூன்று தினங்கள் முன்னர் நடந்தது மட்டுமல்லாது சற்று முன்னர் கேரளா செல்ல போகிறேன் என்று கிளம்பியதைக் கூட மறந்து விட்டு….
“விழிமா” என்று தன் கரம் பற்றி நின்றவளை ஒரு வேகத்தோடு இழுத்து அணைத்துக் கொண்டான் யுவா…
காதலும் ஏக்கமும் போட்டி போட மனைவியை இறுக அணைத்துக் கொண்டவனோ, “விழி என்னாலயும் உன்ன பாக்காம ஒன்னும் முடிலடி, ரொம்ப கஷ்டமா இருக்குடி” என்று முணுமுணுத்த வண்ணமே இந்த மூன்று நாள் பிரிவு வேதனையை போக்கும் பொருட்டாய் அவளை முத்தங்களாலும் அணைப்புகளாலும் குளிப்பாட்டியவனின் அணைப்பில் அவளும் சில கணங்கள் கட்டுண்டு நின்றவள்…
உணர்ச்சி வேகத்தில் அவன் கைகள் அவள் கழுத்தை வருடிய நொடி, சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவளாய்…
“ச்சீ மாமா… என்னய விடுங்க” என்று அவனை உதறித் தள்ளியவளோ… அவனைவிட்டு பத்தடி தூரம் தள்ளி நின்று கொண்டவள்…
“அன்னிக்கு நீங்க நெனச்சது பாதிலயே நின்னுப்போச்சுனு இன்னிக்கு திரும்பவும் ஆரம்புச்சிட்டிகலா.?” எனக் கேட்டு மேலும் கணவன் உள்ளத்தை ரணப்படுத்தியவளை இப்பொழுது ஒரு உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்தான் யுவா…
தன் அணைப்பில் காதலை உணர மறுப்பவளை வெறுமையாக நோக்கியவன், உள்ளே கனன்ற கோபத்தை பெரும் பாடு பட்டு அடக்கி “விழி போதும்டி நீ ஓவரா பேசுற, நாந்தே அன்னக்கி அப்டி நடந்ததுக்கு நா காரணமில்லனு இவ்ளோ சொல்றேன் என்னய நம்பவும் மாட்டிற, அப்றம் எதுக்குடி என்னய கேரளா போகாதீங்கன்னு தடுக்குற… என்னதேண்டி உன் பிரச்சன, என்னய வாழவிடு இல்லன்னா ஊர விட்டு போகவாச்சும் விடு…” என்று கர்ஜித்தவன் ஒரு கையில் தன் உடைகள் அடங்கிய பையையும், மறு கையில் தன்னுடைய மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறப் போக…
மலர்விழியோ “வேணாம்த்தான்… போகாதீங்கத்தான் நீங்க பக்கத்துல வந்தாத்தே பயமாயிருக்கு, ஆனா உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது யுவித்தான், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்த்தான்…” என்று அவன் மேல் அளவில்லா காதல் கொண்டும் அதற்கு நேர்மாறாக அவன் மேல் சிறிதும் நம்பிக்கையற்றும் பிதற்றியவளைக் கண்டு பல்லைக் கடித்த யுவாவோ…
“நீ தூரத்துல நின்னு பார்த்து ரசிக்க நான் ஒன்னும் சோகேஸ் பொம்மையில்லடி… உயிரும் உணர்வும், உன் மேல அவ்ளோ ஆசையும் வச்சிருக்க முழு மனுஷன், என்னால உன்ன மாறி தள்ளி நின்னுலாம் வேடிக்க பாக்க முடியாது, என்மேல நம்பிக்கை இல்லல… எப்ப நம்பிக்கை வருதோ அப்ப போன் பண்ணு நா வர்றேன், இப்ப நா போறேன் வழிய விடு” என்று அவளைத் தாண்டிக் கொண்டு சென்று படியில் இறங்க முற்பட்டவனின் கரத்தில் இருந்த மடிக்கணியை பற்றிக் கொண்ட மலரோ…
அவனோ, “ஏய் லேப்டாப்ப விடுடி” என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே மலர்விழி பற்றி இழுத்த மடிக்கணினி இருவர் கையிலிருந்தும் ஒரு சேர நழுவி மாடிப்படிகளில் சரிந்து கீழே போய் விழுந்து சுக்கலாக நொறுங்கி இருந்தது…
அதைப் பார்த்த மலர்விழியோ “அய்யய்யோ கைகுழந்த கீழ விழுந்துருச்சே” என்று அதிர்ந்து போய் யுவாவைப் பார்க்க…
அந்தச் சத்தம் கேட்டு தன்னறையில் இருந்த நாச்சியம்மையோ “என்னாச்சுப்பா.?” என்று ஓடி வந்தார்…
ஓய்வில் இருந்த கதிரும் கூட சத்தம் கேட்டு வந்தவன் உடைந்து கிடந்த மடிக்கணினியையும் திகைத்து நின்ற மலர்விழியையும் பார்த்து, “அய்யய்யோ மச்சானுக்கு அவன் லேப்டாப்ப யாரும் தொட்டாக்கூட புடிக்காதே, மலருப்புள்ள என்ன இப்டி பண்ணிருச்சு.?” என்று சொல்லிக் கொள்ள…
அங்கு நின்ற யாரையும் கண்டு கொல்லாமல் உடைந்து கிடந்த மடிக்கணினியைத் தூக்கிப் பார்த்த யுவா…
மலர்விழியின் சற்று முந்தய உதாசீனத்தில் அவள் மேல் மிகுந்த எரிச்சலில் இருந்தவனுள் இப்பொழுதைய அவள் செயல், என்றுமில்லாதளவு மித மிஞ்சிய கோபத்தையும் உற்பத்தி செய்ய… சிறு வயதிலிருந்து அவளை விளையாட்டுக்குக் கூட அடித்திராதவனோ இன்று மனையாளின் கண்ணத்தில் தன் ஐந்து விரல்களும் பதியும்படி இடி போல் ஒரு அடியை இறக்கினான் யுவா.