கணவன் தன்னிடம் கோபமாகக் கத்தி விட்டு பால்கனிக்கு சென்று கதவை அடைத்துக் கொள்ளவும்… அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே வெகு நேரம் அழுதழுது ஓய்ந்து போய் தன்னையும் அறியாமல் அருகிலிருந்த சோபாவில் தலைசாய்த்து உறங்கிவிட்டிருந்தவள்….
காலையில் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தமும் “மலர் மலர்” என்று தன் பெயரை அழைக்கும் குரலும் கேட்டு விழிகளை திறந்த மலர்விழிக்கு தான் யுவராஜின் அறையில் இருப்பது புரிய, வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கோ… கூடவே நேற்று இரவு தங்களுக்குள் நடந்த வாக்குவாதங்களும் கண் முன் தோன்ற… அவள் விழிகள் வேகமாக கணவனைத் தேடியது….
மலர்விழியிடம் “காலம் முழுக்க கன்னியாவே இருக்க வேண்டியது தான்” என்று சீறி விட்டு பால்கனிக்குச் சென்றவனும் வெகு நேரம் அங்கேயே உலவி நடந்த விஷயங்களை அசை போட்டவன்… அன்றைப் போலவே இன்றும் தன் உரிமை பறிக்கப்பட்டு மலரால் தான் புறக்கணிப்பட்டதாகவே எண்ணிக் கொண்டவன்… “ஒரு பொம்பளக்கி என்ன இவ்ளோ திமிர்” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்டவனோ ஆண் கர்வத்தின் பிடியில் தான் சிக்கி இருந்தவன், தன் பிடிவாதத்தை மட்டும் சிறிதும் தளர்த்த விரும்பவில்லை போலும்.
அனைத்துக்கும் மலரையே முழுக் குற்றவாளியாக்கி… அவள் மேல் இன்னும் இன்னும் கோபத்தை வளர்த்துக் கொண்டவனுக்கு சிறிது நேரத்திற்கு முன்னால், வெகு அருகில் தன் கரங்களுக்குள் உணர்ந்த மலரின் பஞ்சன்ன தேகச்சூடும், தன் முத்தங்களில் கிறங்கிய அவள் மலர் முகத்தில் தெரிந்த மயக்கமும், அவனுள் கோபத்தை தாண்டிய மோகத்தையும் விதைக்க… அந்த இரவின் பல மணித்தியாலங்களை சிறுவயதில் தான் கற்ற தியானத்தின் உதவியோடு சிரமப்பட்டு நெட்டித்தள்ளியவன்… நடு சாமம் தாண்டியே அறைக்குள் நுழைந்து, உறங்கும் மலரை உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்தவன்… படுக்கையில் விழுந்து உறங்கிப் போனான் மலரின் மாமன் யுவராஜ்….
உறங்கும் போது கூட தன் பிடிவாதத்தை கைவிடாத மதலை போல் அழுத்தமான வதனத்துடன் உறங்கிக் கொண்டிருந்த கணவனையே பார்த்திருந்த மலர்விழி மீண்டும் கதவு தட்டப்படவும்… “இதோ வர்றேன்க்கா” என்று சற்றே உரத்த குரலில் கூற…
அதில் யுவராஜின் உறக்கமும் கலைந்ததில் விழி திறந்து… அறைக் கதவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மலர்விழியைப் பார்த்தவன்… வேகமாக எழுந்து ஈரெட்டில் அவளை நெருங்கியவன்… அவளை இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாற்றி… அவளின் சாசர் விழிகளைக் கண்டுகொள்ளாமல் அவள் தலையில் வாடிப் போயிருந்த மல்லிகைச் சரத்தை உருவி விட்டு, அவளின் நெற்றி வகிட்டில் மின்னும் கும்குமத்தையும் லேசாக அழித்து விட்டவன்…
“நேத்து நமக்குள்ள நடந்தது எதுனாச்சும் வெளிய போச்சு, நா மனுசனாவே இருக்க மாட்டேன்” எனச் சீறிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
ஐந்து நிமிடமே ஆனாலும் அவன் அருகாமையில் மூச்சு முட்ட நின்றவள் அவன் விலகிச் செல்லவும் பெருமூச்சு விட்டவாறு “இதுக்குத்தே இவ்ளோ பில்டப்பா நா கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” என்று வழக்கம் போல் புலம்பியள்… இன்னும் கதவு தட்டப் படுவதை உணர்ந்து வேகமாக ஓடிச் சென்று கதவைத் திறக்க….
அங்கே அவள் தமக்கை காயத்ரி முறைத்தவாறு நின்றிருந்தாள்.
“ஏண்டி நைட்டு ரூமுக்குள்ளார போகவே அவ்ளோ யோசிச்ச, இப்ப இவ்வளவு நேரமா கதவத் தட்டிகிட்டு இருக்கேன் ரூம விட்டு வெளியவே வர மாட்டிங்கறியே.?” என்று தலை முதல் கால் வரை தங்கையை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவாறு வினவிய காயத்ரி…
“என்னடி கண்ணுலா ரொம்ப செவந்திருக்கு ராவெல்லாம் தூங்கவே இல்லியா…?” என்று கிண்டல் குரலில் மீண்டும் வினா எழுப்ப….
‘இவ வேற நடந்தது தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு’ என்று மனதுக்குள் சலித்துக் கொண்ட மலர்விழியோ… “அத விடுக்கா ஆமா இப்டி இருக்க சமயம்
அதற்கு காயுவோ, “அது… யுவா மாமாவத் தேடி கதிர் தம்பி வந்துருக்கு அப்பத்தா வேற பூஜை இருக்குன்னு சொல்லுச்சு… இந்தா யுவா மாமாக்கு எந்திருச்சதும் காபி இருக்கணும் மசமசன்னு நிக்காம ரெண்டு பெறும் சீக்ரம் குளிச்சுட்டு கெளம்பி வாங்க…”
என்றவள் காபியை தங்கை கையில் வைத்து விட்டு மெல்ல கீழே இறங்கிச் செல்ல… தமக்கை கொடுத்த காபியோடு மீண்டும் தங்கள் அறைக்குள் நுழைந்தாள் மலர்விழி.
அந்தக் காலத்தில் கட்டப்பட்ட அந்த மிகப்பெரிய அரண்மனை வீட்டின், அனைத்து அறைகளையும் அதன் பழமை மாற்றாது இப்போதுள்ள சில நவீன வசதிகள் மட்டும் செய்திருக்க… பெரிய அளவு குளியல் அறையோடு கூடிய யுவராஜின் பிரம்மாண்ட அறையில் இருந்த கட்டில், பீரோ, மேஜை, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள், உடை மாற்றும் தடுப்பு, அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தும் களை நயமிக்க பழமை வாயந்த பொருட்களாகவே இருந்தது.
அந்த அறையின் அழகையும், அதை அவன் வைத்திருக்கும் நேர்த்தியையும் பல முறை பார்த்து ரசித்தாலும் இன்றுதான் முதன் முதலாய் பார்ப்பது போல் அறைமுழுதும் தன் விரிந்த விழிகளை சுழல விட்டு ரசித்திருந்த மலர்… (சுட்டுப் போட்டாலும் அப்படி ஒரு நேர்த்தி மலருக்கு வராதல்லவா) குளியல் அறை திறக்கும் சப்தம் கேட்டுத் திரும்ப, அவள் கணவன் இடுப்பில் துவாலையோடு நீர் சொட்ட வெளியேறியவன்… அவளை திரும்பிக் கூடப் பார்க்காது அலமாரியைத் திறந்து உடைகளை ஆராய, அவளோ அவன் பரந்த முதுகைத்தான் வெறித்த வண்ணம் நின்றிருந்தாள்.
உடை மாற்றி வந்த யுவா, தன்னையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த மனைவியைத் தாண்டிச் செல்லப் போனவனின் மேனியில் இருந்து வெளியேறிய அவனின் பிரத்யேக நறுமணப்பூச்சின் வாசம், மலரின் நாசிக்குள் புகுந்ததில் சுயநினைவு பெற்றவள் தன்னைக் கடந்து சென்றவனை “யுவித்தான்” என்று வழிமறித்து கையில் இருந்த காபி டம்ளரை நீட்டியவளை பொசுக்கி விடுவது போல் பார்த்தவன் “அதேன் நைட்டு நா சொன்னத செய்யலல்ல அப்றம் என்னடி அத்தான் பொத்தான்னு கொஞ்சற” என்று குரலை உயர்த்தாமலே சீறியவன் தன் வேகநடையில் கீழே விரைய…
இப்பொழுதும் கண்ணை விட்டு மறையும் வரையிலும் கணவனின், பரந்த முதுகையே வெறித்தவாறு நின்றிருந்தவள் “காபி தான குடுத்தேன் அதுக்கு ஏன் இப்டி ஏசிட்டு போறாகளாம்” என்று பெருமூச்சு விட்டவளை அதற்கு மேல் யோசிக்க விடாமல் கையிலிருந்த காபியின் நறுமணம் சுண்டி இழுக்க.. “காபி அத்த போட்ருப்பாங்க போல” என்று மேலும் மேலும் மூச்சை இழுத்து “ஆகா என்னா வாசம்” என்று சிலாகித்துக் கூறியவள், அடுத்த நொடி அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து கொண்டவள், அனைத்தையும் மறந்து கையிலிருந்த காபியை ரசித்து பருகத் தொடங்கினாள் யுவாவின் மலர்விழி.
மனைவி நீட்டிய காபியை மறுத்து கீழே இறங்கி வந்த யுவராஜ் அவனுக்காகக் காத்திருந்த கதிரோடிணைந்து அந்த வீட்டு கூடத்தின் இடது மூலையில் இருந்த அவனின் அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவனிடம்….
“யுவா நம்ம புட் பேக்டரில ரைடு நடத்தப் போறதா தகவல் வந்துருக்குடா” என்று பதட்டமாகக் கூறியவனை
‘அதுக்கு இப்ப என்ன.?’ என்பது போல் கூலாக பார்த்தான் யுவா.
“நம்ம பேக்டரில தயாரிக்கிற உணவுப்பொருள் எல்லாம் தரமானத்தே மச்சான், ஆனா இந்த திடீர் ரைடுக்கு பின்னாடி மாயன் இருப்பானோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்குடா” என்று மேலும் பதறிய கதிரிடம் “சந்தேகமே வேணாம்” என்றவன் தன் மடிக்கணினியை உயிர்பித்து சிசிடிவி மூலம் நேற்றிரவு எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்பதிவை ஓடவிட..
அதிலோ அவர்களுடைய எள் மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கும் குடவுனில் இருந்த எள்மூட்டைகள் அனைத்தும் அகற்றப்பட்டு அதற்கு பதில் வேறு பல எள்மூட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டது, இதற்கு யுவாவின் குடவுனில் வேலை பார்க்கும் காவலாளியும் உடைந்தையாயிருப்பது முதல்கொண்டு அனைத்தையும் பார்த்து முடித்த கதிரோ…
அதைக் கேட்ட கதிரோ, “சூப்பர்ரா” என்று நண்பனை அணைத்துக் கொண்டவன்
“சரி நா போய் உணவுத்துற அதிகாரி வர்றங்குள்ளயும் அந்த எள்ளுமூட்டயெல்லாம் நம்ம குடவின விட்டு கடாசிட்டு வந்தர்றேன்” என்று எழுந்தவனோடு தானும் எழுந்தவன்…
“அதெல்லாம் ஆள வெச்சு எப்பவோ தூக்கியாச்ச்சு” என்று தூக்கியாச்சுவில் ஒரு அழுத்தம் கொடுத்துக் கூறியவனின் குரலிலேயே
‘நான் தூக்கியது எள்மூட்டைகளை மட்டுமல்ல’ என்னிடமே சம்பளம் வாங்கிக்கொண்டு எனக்கு எதிராகவே செயல்பட்ட காவளாலியையும் சேர்த்துத் தான்’ என்பதை உணர்ந்த கதிருக்கு, அந்த அரிமாவின் அதிரடி பழக்கப்பட்டதே ஆனாலும்
“யுவா அந்த வாட்ச்மேன என்னடா பண்ண.?” என்று நண்பனை சற்று பீதியோடு பார்த்த கதிரிடம் அவன் கேள்விக்கு பதிலாக “உயிரோடதா இருக்கான்” எனக் கூறிய யுவா சற்றும் அலட்டிக் கொள்ளாமல்….
“இப்ப உனக்கு இருக்க ஒரே வேல சாப்புட்ற வேல மட்டுந்தே, வா” எனக் கூறி கண்ணடித்தவன் மலர்விழி சமையலறைக்குள் நுழைந்ததை கவனித்தவாறே உணவு மேஜையில் வந்து அமர, அந்த வீட்டின் மற்ற அங்கத்தினரும் ஒவ்வொருவராக வந்து உணவு மேஜையின் முன்னால் அமர்ந்தனர்.
வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் உணவருந்த அமர்ந்திருக்க, அவரவர் கணவர்களுக்கு அவரவர் மனைவியர் உணவு பரிமாற, சற்று நேரத்திற்கு முன்னால் மலர் கொடுத்த காபியை வாங்காது மறுத்து விட்டு வந்த யுவாவின் விழிகளோ அவனையும் மீறி ஒரு எதிர்பார்போடு சமையலறையையே நோக்கிக் கொண்டிருக்க… அவனுடைய அன்புத் தங்கை ஜானவியோ உண்ணும் உணவோடு சேர்த்து தன்னெதிரில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த கதிரவனின் சாந்த முகத்தையும் விழியாலே உண்டு கொண்டிருந்தாள்.
பெண்ணவள் தன்னையே விழியெடுக்காது பார்ப்பதை உணர்ந்தும் உணராத ஆணவனோ தன் தட்டிலிருக்கும் உணவையே அலைந்த வண்ணம் இருக்க, அவனைப் பார்த்து “டியுப்லைட், சாமியார்” என்று வாய்க்குள்ளே திட்டிக் கொண்ட ஜானவியோ மேஜைக்கடியில் இருக்கும் அவன் காலை தன் காலால் மெல்ல வருட, சட்டென்று நிமிர்ந்து பார்த்த கதிரோ சுற்றும் முற்றும் பார்த்தவன் ஜானுவை ஒரு முறைப்போடு நோக்கி விட்டு தன் கால்களை வேகமாக அவளிடமிருந்து விலக்கிக் கொண்டான்.
யுவாவின் தட்டில் இரண்டு இடியாப்பத்தை வைத்த அவன் அன்னையோ “மலரு தம்பிக்கு அந்த கோழிக் குழம்ப கொண்டு வாம்மா” எனக் கூறவும், ஆரஞ்சு வர்ண ஜார்ஜெட் புடவை சுற்றப்பட்ட, சிலை போன்ற தேகத்தில் மின்னும் அணிமணிகளுக்குப் போட்டியாக பலீறிடும் வதனத்தோடும், அந்த அழகிய வதனத்திற்கு மென் மேலும் அழகு சேர்க்கும் கொழு கொழு கன்னத்தோடும் சமையலறையில் இருந்து வெளியே வந்த மலர்விழியையே விழுங்கி விடுவது போல் பார்த்திருந்த யுவாவுக்கு மலரின் மேல் என்னதான் கோபம் இருந்தாலும், திருமணம் முடிந்து முதன் முதலாக மனையாளின் கையால் சாப்பிடப் போகும் ஆவலில் காத்திருந்த தன் மாமனின் எதிர்பார்ப்புகள் எதையும் என்றும் போல இன்றும் உணராத பேதைப் பெண்ணோ…
சிறுவயதிலிருந்தே நாச்சியம்மை, மற்றும் மீனாட்சியின் அன்பில், யுவாவின் தங்கை ஜானுவுக்கு நிகரான செல்லத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தன் மாமன் வீட்டில் வலம் வந்தவளோ உணவுகளின் மேல் அலாதிப் பிரியம் கொண்டவள்,, கணவன் தான் பரிமாறுவதற்காக காத்திருக்கிறான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் குழம்பைக் கொண்டு வந்து தன் அத்தை கையில் வைத்து விட்டு அங்கிருந்த காலி இருக்கையில் அமர்ந்து இடியாப்பத்தையும் கோழிக் குழம்பையும் ஒரு கை பார்க்க ஆரம்பிக்க…
மனைவி தனக்குப் பரிமாறுவாள் சாப்பிடலாம் என்று காத்திருந்த யுவாவுக்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் போலத்தான் இருந்தது…
நேற்று முதலிரவு அறையில் தங்களுக்குள் எப்படியான ஒரு விவாதம் நடந்து அதன் முடிவில் எவ்வளவு பெரிய வார்த்தைகளையும் அவன் அவளிடம்
கூறி இருக்க… கணவனின் பேச்சிலும், கோபத்திலும் அப்போதைக்கு மட்டும் கலங்கி அழுதவள் இப்பொழுது இந்த நிமிடம் அதைப் பற்றிய சிந்தனையோ, தன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டமோ சிறிதும் இல்லாமல், உணவு மேஜையில் அமர்ந்து…
நடிகர் ராஜ்கிரன் திரைப்படங்களில் எல்லாம் எழும்பை கடித்து மெல்லுவது போல் கோழித் தொடையைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்த மலரைப் பார்த்த யுவாவுக்கு அவள் மேலிருந்த கோபத்தையும் மீறி, அவள் செய்கைகள் ஒவ்வொன்றும் அவள் மேல் உள்ள நேசத்தையே அதிகரிக்க… இதழ்க்கடையோரம் தோன்றிய அழகிய புன் முறுவலோடு அவளறியாவண்ணம் அவளையே ரசித்தவாறு இருந்தான்.
மனைவியை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே, ‘இப்டியொரு சாப்பாட்டு ராமிய, மக்கு மந்தாகினிய சின்னப் புள்ளைய்லயிருந்து காதலிச்சு இப்ப கல்யாணமும் கட்டிகிட்டனே என் கதி அதோ கதிதான் போல’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டவன், பெயருக்கு உணவைக் கொரித்து விட்டு, எழுந்த யுவா கதிரோடு வீட்டை விட்டு வெளியேற…
“ராஜய்யா பூச…” என்று அவனை வழி மறிக்கப் போன நாச்சியம்மையை தடுத்த அவர் கணவர் வேலுச்சாமியோ பேரனின் தொழிற்ச்சாலையில் நடக்க இருக்கும் சோதனையை அறிந்திருந்தவர்..
“நாச்சி…. புள்ள முக்கியமான சோலியா பேட்டரிக்குப் (பேக்டரி) போது, கோய்லுக்கு (கோவில்) அப்றம் போலாம், செத்த பேசாம இரு நாச்சி” என்று தடுத்தவரும் காடு கரை பக்கம் கிளம்பி விட, வீட்டிலிருந்த மற்ற நபர்களும் அவரவர் பணிக்குச் சென்று விட… தனியாக அகப்பட்ட மலர்விழியை பிடி பிடியென்று பிடித்து விட்டாள் அவளுடைய தமக்கை காயத்ரி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.