கிருஷ்ணாவின் தேர்வுகள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இன்னும் இரண்டே இரண்டு பரீட்சை இருக்கும் பட்சத்தில் அன்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவள் இரண்டு நாட்கள் கழித்துத் தான் அடுத்த பரீட்சை என்பதால் நன்றாக உறங்கி எழுந்தாள்!
மாலையில் வேலை முடித்து விட்டு தேன்மலர் வரும் வரையிலும் நல்ல உறக்கம்!
தேன்மலர் காஃபியோடு அவளின் அறைக்கு வந்ததும் தான் எழுந்தாள்.
“டயர்டா இருந்தது அண்ணி.. அதான் தூங்கிட்டேன்..” என்றவள், எழுந்து முகம் கழுவி வர, அவளிடம் காஃபியை நீட்டினாள் தேன்மலர்.
அவளின் அன்றைய பரீட்சையை பற்றி விசாரித்து முடித்ததும் “இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல கிருஷ்ணா. இன்னைக்கு எங்கேயாவது வெளிய போய்ட்டு வரலாமா?” என்று கேட்க, கிருஷ்ணாவும் உற்சாகத்துடன் சரி என்றாள்!
“எங்க போகலாம்? நீயே சொல்லு..” என்று தேன்மலர் கேட்க, “ஹ்ம்ம்… எனக்கு கோவில் போகனும்னு இருக்கு அண்ணி! கூட்டிட்டு போறீங்களா?” என்றாள் இளையவள்.
“அதுக்கென்ன? போகலாம் வா” என்றவள் எழுந்து கொள்ள, அவளின் கைப் பற்றி நிறுத்தியவள் “அண்ணா கிட்ட பேசினீங்களா அண்ணி? எப்ப வராங்களாம்?” என்று கேட்க, தேன்மலர் முகம் அப்படியே மாறி விட்டது.
நான்கு நாட்களில் வருகிறேன் என்றவன் பத்து நாட்கள் ஆகியும் வந்திருக்கவில்லை!
ஐந்தாம் நாள் காலை அவனுக்கு போன் செய்த போது அவள் கோபத்தில் பேசுவதற்கு முன்பு அவன் கெஞ்சலுடன் முந்தி இருந்தான்!
“மலர்.. மலர்.. மன்னிச்சிடு.. தயவு செஞ்சு கோபப்படாத!! இங்க வேலை இழுத்துட்டே போகுது! கண்டிப்பா இப்போதைக்கு வர முடியும்னு தோணல! இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு நினைக்கிறேன்! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மலர்!”
அவன் கெஞ்சலில் சமாதானம் அடைந்தாலும் மலர் மனம் மன்னவனின் அருகாமைக்கு ஏங்கியது!!
அதில் அவள் பதில் பேசாமல் அமைதியாக இருக்க, “நீ கோபப் பட்டு பேசாம இருந்தா நான் இங்க எப்படி மலர் வேலை செய்ய முடியும்?” என்று அவன் பாவமாகக் கேட்கவும் தான் “சரி பாருங்க!” என்று இயல்பாக கூறி இருந்தாள்.
ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்தும் அவன் வரவில்லை!
கடுப்புடன் இவள் அழைக்க, எடுத்ததும் “மலர்….” என்று அவன் இழுத்த இழுப்பிலேயே அன்றும் வர மாட்டான் என்று புரிந்து விட, “அருமையா உங்களோட வாக்கை காப்பாத்தி இருக்கீங்க மிஸ்டர். மலர்தாசன்!” என்று கடுப்போடு சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்!
அதற்கடுத்து மூன்று நாட்கள் கடந்தும் அவன் வந்திருக்கவில்லை! மூன்று நாட்களில் அத்தனை முறை அழைத்து விட்டான்! தேன்மலர் அவன் மீதிருந்த கோபத்தில் அழைப்பை ஏற்கவில்லை!
ஒரு சில நேரங்களில் வேலையில் இருப்பவனை தவிக்க விடக் கூடாது என்று சில அழைப்புகளை ஏற்பாள் தான்! ஆனால், பேசவில்லை!
மௌனமாகவே இருப்பாள்! அமுதன் தான் தவித்துப் போனான்!
அவளின் மௌனம் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பதைக் காட்ட, அவளை மலை இறக்க முடியாமல் முழி பிதுங்கிப் போனான்!
“பேச மாட்டியா மலர்!..”
“சாரி மலர்.. என் கூட பேசேன்!”
“நாளைக்கு வந்துடுவேன் மலர்! போதுமா இப்பப் பேசு!”
“இதென்ன முன்ன மாதிரி கால் அட்டன் பண்ணிட்டு பேசாம இருக்க பழக்கம்! பேசு மலர்!”
ஒவ்வொரு அழைப்பிலும் டிசைன் டிசைனாக கெஞ்சி விட்டான்! ம்ம்ஹூம்!! மலர் மனம் அசையவில்லை!
“நாலு நாள்ல வரேன்னு சொல்லிட்டு ஏழு நாள் ஆகியும் வராம இருப்பாராம்! நாம பேசனுமாம்! நல்லா மண்டைய பிச்சுக்கட்டும்! பேசக் கூடாது மலர்!” என்று மலரிடம் அத்தனை உறுதி!
இன்று காலை கூட அவன் அழைத்திருக்க அவன் குரலை கேட்க வேண்டும் போலிருந்ததால் அவளும் மனம் இறங்கி அழைப்பை ஏற்றிருந்தாலும் எதுவும் பேசவில்லை!
“ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம் ஆகாது மலர்! பேசப் போறியா இல்லையா!”
சொன்னது போல் வராமல் விட்டது தவறு தான்! அதற்காக பேசாமல் இருப்பாளா என்று அவனுக்கும் கோபம் வந்தது!
மலர் இதழ் பூட்டில் மலர்தாசன் கோபமாகித் தகிக்க, அவளோ அவனுக்கும் குறையாத தகிப்புடன் “நீங்க எப்ப வரீங்களோ வாங்க! நீங்க வர்ற அன்னைக்கு மொத்தமா பேசுறேன்! இப்ப போய் வேலையைப் பாருங்க!” என்று கூறி விட்டு அழைப்பை பட்டென்று துண்டித்து இருந்தாள்!
அதன் பின்னர் அலுவலகம் கிளம்பி சென்றவளுக்கு பல முறை அவன் அழைத்தும் கூட மனைவி ஏற்கவில்லை!
புலனத்தில் வழியே அவன் குரலில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது..
“இப்ப நீ பேசலேன்னா நான் அடுத்து கூப்பிடவே மாட்டேன் மலர்” என்று மிரட்டி கூட பார்த்து விட்டான்!
அமுதனின் மிரட்டலுக்கு எல்லாம் அசருபவளா தேன்மலர்? அழுத்தத்தையும் விடவில்லை! அமைதியையும் விடவில்லை!
பிறகென்ன?
இறுதியில் அவன் தான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது!
“சரி.. உன் கோபம் என்னைப் பார்க்கணும்னு தான! என் கூட இருக்கணும்னு தான! எனக்கு மட்டும் என்ன ஆசையா மலர்.. உன்னை விட்டுட்டு இருக்கணும்னு. இங்க கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் போய்ட்டு இருக்கு மலர். நந்தனும் நானும் பக்கத்துல நின்னு பாக்க வேண்டிய கட்டாயம்! நான் இன்னும் நாலு நாள்ல வந்துடுவேன். அதுவரைக்கும் என்னோட பேசாம இருக்காத மலர்! பேசுமா.. நீ பேசாம விடுறது.. ரொம்ப ஒரு மாதிரி டிஸ்டர்ப்பா இருக்கு..” என்று உருக்கமாக பேசி அனுப்பி இருந்தான்.
அவன் தவிப்பில் இவளுக்கும் உருகினாலும், இன்னும் நாலு நாட்கள் கழித்து தான் வருவேன் என்றதில் அவளுக்கு இன்னும் தான் கோபம் வந்தது!
“நீங்க வரவே வேண்டாம்! அங்கேயே இருந்துக்கோங்க! இதுல தங்களின் உத்தரவுப் படி வந்துடுவேன் மகாராணின்னு பில் டப் வேற” என்று அவளும் கடுப்போடு பதில் அனுப்பி வைத்தாள்!
இப்போது கிருஷ்ணா கேட்டதும் மலருக்குள் கணவனின் எண்ணங்கள்! கணவனுக்கான ஏக்கங்கள்!
“எப்ப வராங்கன்னு தெரியல கிருஷ்ணா. ரொம்ப அதிக வேலை போல. சீக்கிரம் வந்துடுவாங்க” என்று தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
“அண்ணா இல்லாம நீங்க தான் அண்ணி ரொம்ப டல்லா இருக்கீங்க..” என்று கிருஷ்ணா அண்ணியின் முக மாற்றத்தை வைத்து வருத்தத்துடன் கூற, “அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா. நாம கோவில் போகலாம்” என்றவள் கிருஷ்ணா தயாராகி வந்ததும் கைலாசநாதர் கோவில் கிளம்பினர்.
கிளம்பும் முன்னர் வசுந்தலாவிடம் தேன்மலர் சொல்லிக் கொள்ள, அமைதியாக அவள் அருகே நின்றாள் கிருஷ்ணரூபி!
“சேது இருக்கார் தேனு. ரெண்டு பேரும் கார்லயே போங்களேன்” என்று வசந்தலா சொல்ல, கிருஷ்ணாவின் முகம் சுருங்கி விட்டது.
அதை கவனித்த தேன்மலர் “கைலாசநாதர் கோயில் தான் போறோம் அத்த. பக்கத்துல தான். ஸ்கூட்டியிலயே போய்ட்டு வரோம்” என்க, வசந்தலாவும் அதற்கு மேல் மறுக்கவில்லை.
“பத்திரமா போயிட்டு வாங்க” என்று மட்டும் சொல்ல, கிருஷ்ணாவின் முகம் உடனே மலர்ந்து விட்டது.
இளைய மகளின் அந்த சிரிப்பை கவனித்த படியே தன் அறைக்குள் சென்று மறைந்தார் வசுந்தலா!
கிருஷ்ணாவுடன் கைலாசநாதர் கோவிலுக்கு வந்த தேன்மலர் கடவுளை தரிசித்த பின்னர் ஐயர் கொடுத்த திருநீறு குங்குமத்தை கிருஷ்ணாவிற்கு வைத்து விட்டு, அவளின் இமைகளுக்கு விரல்களால் கொடை பிடித்து நெற்றியில் ஊதி விட, அவளின் அந்த செயலில் கிருஷ்ணாவின் கண்கள் சட்டென்று கலங்கிப் போயின!
அதைக் கண்டு “என்ன கிருஷ்ணா? கண்ணுல பட்டிடுச்சா?” என்று தேன்மலர் வினவ,
இமையை சிமிட்டிக் கொண்டவள் “லேசா அண்ணி..” என்று சமாளித்து விட்டு “வாங்க அண்ணி பிரசாதத்த வாங்கிட்டு அங்க போய் உட்காரலாம்” என்று முன்னே நடக்க, தேன்மலரும் புன்னகையுடன் அவளைத் தொடர்ந்தாள்!
பிரசாதத்தை வாங்கிக் கொண்டு காற்றாட ஒரு இடத்தில் அமர்ந்தார்கள் இருவரும்.
தன்னையேப் பார்க்கும் கிருஷ்ணாவின் பார்வை தேன்மலரின் கவனத்தை ஈர்க்க “என்ன கிருஷ்ணா.. எதாவது கேட்கணுமா?” என்றாள் வாஞ்சையாக!
“கேட்க ஒன்னும் இல்ல அண்ணி.. சொல்லணும்..” என்றாள் கிருஷ்ணா புன்னகையுடன்!
“சரி சொல்லு!” என்று தேன்மலரும் பிரசாதத்தை உண்டபடி புன்னகைக்க,
“எனக்கு பெருசா இது தான் படிக்கணும்.. இப்படி தான் ஆகனும்னு எல்லாம் ட்ரீம்ஸ் இருந்தது இல்ல அண்ணி! என்னோட ஸ்கூல்ல கூட நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட் தான்! ஆனா, நீங்க அன்னைக்கு உங்க வேலைக்காக அப்பா கிட்ட எல்லாத்தையும் பேசினது கேட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டேன்! அதுவும் நீங்க டாக்டர் ஆகனும்! கார்டியாலஜிஸ்ட் ஆகனும் அதெல்லாம் அன்னைக்கு இருந்த சூழ்நிலையில முடியலன்னு வலியோட சொன்னதை இப்ப நினைக்கும் போது கூட எனக்கு அவ்வளவு அழுகை வருது..” என்க,
“கிருஷ்ணா..” என்று அவளின் கையை பிடித்துக் கொண்ட தேன்மலருக்கு நெஞ்சம் அடைத்தது!
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னை சமாளித்த கிருஷ்ணரூபி, தேன்மலரிடம் தன் முடிவைப் பற்றி கூறத் தொடங்கினாள்.
“நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் அண்ணி! இனிமேல் நல்லா படிக்க போறேன்! ஆவரேஜ் ஸ்டூடன்ட்டா இருக்க மாட்டேன்! ப்ளஸ் ஒன் அண்ட் ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுக்கணும்! NEET எக்சாம் எழுதனும். டாக்டர் ஆகனும்! நீங்க படிக்க முடியாம போன கார்டியாலஜிய நான் படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்!” என்று ஒரு வித ஆத்மார்த்தமான குரலில் கூற, தேன்மலர் என்ன சொல்ல என்று கூட மறந்தவளாய் கண்ணில் நீருடன் அமர்ந்திருந்தாள்!
“உங்களுக்கு சந்தோஷம் தானே அண்ணி! நீங்க கண்டிப்பா பாருங்க.. நான் நிச்சயம் டாக்டர் ஆகி காட்டுறேன்” என்று மீண்டும் உறுதியுடன் சொல்ல, “கிருஷ்ணா..” என்று நெகிழ்ந்த குரலில் அழைத்த தேன்மலர் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு அவள் உச்சியில் முத்தம் வைத்தாள்!
இளையவளின் அன்பில் மலரின் மனம் நிரம்பி வழிந்தது! வார்த்தைகளில் சொல்ல முடியாதளவு ஒரு வித நெகிழ்வு!
“நீங்க ஹேப்பி தான அண்ணி..” என்று கிருஷ்ணா நிமிர்ந்து அவளிடம் கேட்க, “எப்படி சந்தோஷப் படாம இருக்க முடியும்? எனக்காக என்னோட கிருஷ்ணாப் பொண்ணு இவ்வளவு தூரம் யோசிச்சு டாக்டர் ஆகிக் காட்டுறேன்னு சொல்றாளே!” என்க,
அவளின் ‘என்னோட கிருஷ்ணாப் பொண்ணு’ எனும் அழைப்பு கிருஷ்ணாவை மிகவும் உணர்ச்சி வசப் பட வைத்தது!
“ஆமா.. நான் உங்க கிருஷ்ணா பொண்ணு தான்!” என்று மனமார சொல்லிக் கொண்டவள், “என்னோட அண்ணாக்கும் அண்ணிக்கும் நான் செல்ல கிருஷ்ணா பொண்ணு தான்!” என்றாள் பாச மிகுதியில் கண்கள் கலங்க.
இருவருக்கும் இடையில் இருந்த அன்பான பந்தம் அன்று மேலும் ஸ்திரம் பெற்று அன்பின் அஸ்திவாரத்தால் அடிவேரின் உறுதியுடன் ஆழமான பிணைப்பாக உருமாறி இருந்தது!
****************
மேலும் நான்கு நாட்கள் கடந்த நிலையில்!
அன்று காலை வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் தேன்மலர்.
உடைகளைத் தாங்கி இருக்கும் ‘ஹேங்கரில்’ கணவனின் டி ஷர்ட் தொங்கிக் கொண்டிருந்ததை பெரு மூச்சுடன் ஒரு பார்வை பார்த்து அதனை எடுத்து முகத்தோடு போர்த்திக் கொண்டாள்.
அவனின் வாசம் சுவாசம் முழுவதும் பரவி அவனின் அருகாமைக்கு ஏங்க வைத்தது!
“இன்னைக்கு வரேன்னு சொன்னார்.. ஆனா வர மாட்டார் போல!” என்று ஏமாற்றம் நிறைந்த குரலில் சொன்னவள் அவனின் டி ஷர்ட்டை மேலும் ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்து அவனது வாசனையை தன்னுள் நிரப்பிக் கொண்டதும் எழுந்து
குளித்து வந்தாள்.
தலை முடியை பின்னலிட்டு நெற்றியில் பொட்டினை வைத்த பிறகு நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைக்கப் போன நேரம் கீழே மாமியாரின் பதற்றமான குரல் கேட்டது!
எடுத்த குங்குமத்தை அப்படியே வைத்து விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.
நந்தன் கைத் தாங்களாக அமுதனை வீட்டிற்குள் அழைத்து வந்து கொண்டிருந்தான்!
கணவனின் வலது பக்க நெற்றியில் சிறிய பேண்டேஜ்!
அதே போல் வலது முழங்கைக்கு மேலே தோள்பட்டைக்கு கீழே இருந்த புஜப் பகுதியை முழுவதும் சுற்றி சிறிய கட்டு!
மேலும் ஆங்காங்கே கீறல்களும், சிராய்ப்புகளும் சிவப்புக் கோடுகளாக தெரிந்தன.
கணவனை காயத்தின் கோலத்தில் கண்டதும் இதயத் துடிப்பு நின்று விட்டது தேன்மலருக்கு!
வசுந்தலா மகன் வந்த கோலம் கண்டு “அமுதா.. என்னப்பா இது?” என்று பதறிப் போனவராக ஒரு பக்கமாக வந்து அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
அன்று கிருஷ்ணாவிற்கு பரீட்சை இல்லாத காரணத்தால் அப்போது தான் எழுந்து வந்தாள்!
வந்தவள் கண்டது அடி பட்டு வந்திருக்கும் அண்ணனை தான்!
அண்ணனை அந்த நிலையில் கண்டு பயந்து பதறிப் போய் “அண்ணா..” என்று கண்ணீருடன் அவனை நெருங்கினாள்.
தேன்மலருக்கு அப்போது தான் நின்ற இதயத்தின் துடிப்பு மீண்டிருந்தது!
நந்தன் அவனை சோஃபாவில் அமர வைக்க, கண்ணீருடன் நின்ற அன்னையையும், பயந்து கண்ணீர் சிந்திய தங்கையையும் “பயப்பட ஒன்னுமில்ல! அழாதீங்க ரெண்டு பேரும்” என்று எப்படியோ சமாதானம் செய்தவனுக்கு மனைவியின் கண்ணீர் முகம் நெஞ்சை அறுத்தது!
“மலர்..” என்று இதயத்தில் இருந்து அழைக்க, கண்ணீர் பெருகிய விழிகளோடு அவனின் முன் மண்டியிட்டு அமர்ந்தவளுக்கு நெஞ்சம் துடித்தது!
‘நீங்க நேர்ல வந்ததும் மொத்தமா பேசுறேன்” என்றவள் கணவனின் கோலத்தில் இப்போது ஒரு வார்த்தை கூட உதிர்க்க முடியாமல் ஊமையாக அழுதாள்!
மலர் கண்கள் கடலாகிப் போனது!
இமை கரையைத் தாண்டிக் கொண்டு கண்ணீர் அலைகள் வெளியேற “ப்ச்.. எதுக்கு அழுகை? ஒன்னுமில்ல மலர். சின்ன அடி தான்” என்றான் அவளின் கண்ணீரைத் தாங்க முடியாதவனாய்!
“எ..என்ன ஒன்னுமில்ல? நெத்தில,கைல எல்லாம் காயம் ஆகி இருக்கு. கட்டு வேற போட்டிருக்கு! என்ன ஆச்சு?” அவன் காயங்களை கண்ணீர் சுமந்த விழிகளோடு தவிப்புடன் பார்த்துக் கொண்டே கலங்கிய குரலில் வினவினாள்.
அமுதன் பதில் சொல்லாமல் மௌனம் காக்க “ஒன்னுமில்லமா சின்ன ஆக்சிடென்ட்!” என்று நந்தன் சொல்ல, பெண்கள் மூவரும் பதறிப் போனார்கள்!
அவர்கள் பதட்டத்தில் அமுதன் நண்பனை முறைக்க, “டேய்.. என்னை ஏன்டா முறைக்கிற? நடந்ததை சொல்ல தான வேணும்” என்று நந்தன் பாவமாகக் கூற, அமுதன் பெருமூச்சுடன் கண்களை மூடித் திறந்தான்!
உண்மை தான்! நடந்தது ஒரு சிறிய விபத்து தான்! ஆனால், பெரிய விபத்தாக மாறாமல் எப்படியோ சின்ன அடிகளுடன் முடிந்திருந்தது.
ஏற்காட்டில் இருந்து வரும் வழியில் ஒரு மலைச் சாலை வளைவில் எதிரே வந்த டெம்போ வேன் அமுதனின் வலப்பக்க கார் மீது மோதி இருந்தது. மோதிய வேகத்தில் கார் கண்ணாடிச் சில்லுகள் சிதைந்து நொறுங்கி அமுதனின் நெற்றியிலும் கையிலும் குத்தி காயங்ககளை ஏற்படுத்தி இருந்தன!
அந்தக் காயங்கள் கொடுத்த வலியின் தாக்கத்தில் காரின் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்திருந்தான் அமுதகீதன்.
சாலைக்குண்டானத் தடுப்பு பகுதியை மீறி மரமும் புதரும் அடங்கிய மண் பகுதியில் காரோடு சரியவிருந்தவன் எப்படியோ ஸ்டியரிங்கை வளைத்து காரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.
நொடி நேர சுதாரிப்பினால் அவனின் உயிர் தப்பி இருந்தது! பெரிய அடிகளோ, முறிவோ இல்லை தான்!
ஆனால், அந்த நிமிடம்.. அவனுக்குள் ஏற்பட்ட நடுக்கம் அவ்வளவு உண்மை!
தனக்கு ஏதேனும் ஆகி விடுமோ எனும் பயம்.. நெஞ்சத்தை துடிக்க வைத்துக் கொண்டிருந்த தன் மலரைக் காணாமல் போய் விடுவோமோ எனும் அச்சம்.. அண்ணா என்ற தங்கையின் குரலை இனி கேட்க முடியாதோ எனும் பதற்றம்.. என எல்லாம் அவனை நடுங்க வைத்திருந்தது உண்மை!
காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் சுய நினைவோடுதான் இருந்தான் அமுதகீதன். எனவே காவல் துறைக்கு அழைத்து விபத்தைப் பற்றி சொல்லியவன் நந்தனுக்கும் அழைத்து அங்கே வரும்படி கூறியிருந்தான்.
போலீஸிடம் நடந்ததை விவரித்து, நண்பன் உதவியுடன் ஹாஸ்பிட்டல் சென்று காயங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு “என்னை தாரமங்கலம் கூட்டிட்டு போய் விடுடா நந்தா” என்றான் அவனிடம்.
நந்தன் அவனின் நிலை கண்டு மறுக்க, “டேய்.. நான் உன் கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேக்கல. கொண்டு போய் விடு!” என்றான் அமுதன் கட்டளையாக.
“உன்னால நிக்கவே முடியல அமுதா. இங்க இருந்து நம்ம ரிசார்ட் தான் பக்கம். அங்க வந்து ரெஸ்ட் எடு. வீட்டுக்கு அப்புறம் போகலாம்” என்று சொல்லிப் பார்க்க,
“இல்ல நந்தா. எனக்கு மலரைப் பாக்கணும். அவ கூட இருக்கணும். என் கார் நல்லா இருந்தா அதுலயே போயிருப்பேன்” என்றவன்,
“நீ என்னைக் கொண்டு வந்து விடு. இல்லேன்னா உன் கார் கீ கொடு!” என்றிருந்தான் பிடிவாதமாக.
“இந்தக் கையை வச்சுட்டு ட்ரைவ் பண்ணுவியா நீ? தையல் போட்டிருக்குடா!” என்று திட்டியவன், அவன் அழுத்தமாக நிற்கவும் வேறு வழி இல்லாமல் “நானே கொண்டு வந்து விடுறேன் வா” என்று அவனை அழைத்து வந்திருந்தான்.
நடந்ததைக் கூறிய நந்தன் “ஹாஸ்பிட்டல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடான்னு சொன்னதுக்கும் கேட்கல. உடனே டிஸ்சார்ஜ் பண்ணிடுங்கன்னு முடிவா சொல்லிட்டான். சரி ரிசார்ட்டுக்கு வாடான்னு சொன்னதுக்கும் கேட்கல. உங்களைப் பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னான். அதான் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றவன், “நானா தனியா இருந்து வேலையை சமாளிக்க முடியாதுன்னு தான் அவனும் இத்தன நாள் அங்கேயே இருந்துட்டான். மன்னிச்சிடுமா” என்று மன்னிப்பையும் வேண்டியவன்,
“அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்மா. ரூமுக்கு கூட்டிட்டு போங்க” என்றான் மலரிடம்.
இன்பசேகரன் ஒரு வேலையின் காரணமாக இரண்டு நாட்களாக சேலத்தில் இருந்தார். இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. அவரிடம் அலைபேசி வழியாக விஷயத்தை கண்ணீருடன் சொல்லிக் கொண்டிருந்தார் வசுந்தலா!
தந்தையிடமும் அலைபேசி மூலம் பேசியவன் அவரிடம் பயப்பட வேண்டாம் பதற்றப் படாமல் வீட்டிற்கு வருமாறு கூறிய பிறகு சோஃபாவில் இருந்து மெல்ல எழுந்தான்.
உடலில் பெரும் காயங்கள் இல்லை என்றாலும் உடலெங்கும் வலி இருந்தது!
மலர் ஒரு பக்கம் கிருஷ்ணா ஒரு பக்கம் என அவனைத் தாங்கிக் கொள்ள, இருவரையும் புன்னகையுடன் பார்த்தவன் “நானே வந்துடுவேன்..” என்க,
“பேசாம வாங்க..” என்று கலக்கம் நீங்காத குரலில் அதட்டிய மலர் கணவனை அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்த பின்னரும் அவன் கையை விடவில்லை.
கிருஷ்ணா அண்ணனின் காயங்களை வருடி “இனிமேல் இப்படி வந்து நிக்காதண்ணா. இப்படி எல்லாம் உங்களை பாக்குற ஸ்ட்ரெந்த் எனக்கு இல்ல..” என்று அழுதாள்.
“கொஞ்ச நாள்ல சரி ஆகிடும் கிருஷ்ணா” என்று தங்கையை தேற்றியவன், “பசிக்குது கிருஷ்ணா. அம்மா கிட்ட எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா. சாப்பிட்ட பின்ன டேப்லட் போடணும்” என்றதும் “இதோ அண்ணா..” என்றவள் வேகமாக வெளியேறி இருந்தாள்.
அவள் சென்றதும் தன் வலது கை காயத்தையே விரல்களால் வருடிக் கொடுத்தபடி கன்னங்களில் கண்ணீர் வழிய அழும் மனைவியைப் பார்த்தவனுக்கு உள்ளம் வலித்தது.
“மலர்..” என்க, கண்ணீருடன் அடி பட்ட வலப் பக்கத்தின் தோளிலேயே நெற்றியை முட்டியவள் எதுவும் பேசவில்லை!
ஆனால், பெண்ணின் கண்ணீர்த் துளிகள் அவளின் வலியை பயத்தை அச்சத்தைப் பற்றி தெளிவாகப் பேசியது!
“மலர்.. என்னைப் பாரேன்..” இடது கையால் அவளின் நாடி பிடத்து நிமிர்த்தியவன், அவளின் அழுது சிவந்த விலிகளை காணப் பொறுக்காமல் “எனக்கு ஒன்னுமில்ல மலர். இதோ. நான் என் மலர் கூட.. மலர் பக்கத்துல.. மலர் முகத்தை பார்த்திட்டு இருக்கேன்! இந்த நிமிஷம் நிஜம்!” அவளுக்கும் சேர்த்து தனக்கும் சொல்லிக் கொண்ட அமுதனின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது!
அவனும் போதுமான அளவு பயந்திருந்தான் தானே!
“கவனமா தான இருப்பீங்க.. ஏன் இப்படி? எதாவது…ஆகி…” என்றவளால் அடுத்து ஒரு வார்த்தை கூட உதிர்க்க முடியவில்லை!
கேவலுடன் கதறி அழுதாள்.
“ஐயம் ஓகே மலர்” என்று அவளின் தலையை வருடிக் கொடுத்தான்!
அவளுக்கோ நெஞ்சம் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது. சின்ன சின்ன அடிகளோடு முடிந்ததால் சரி!
எதாவது அசம்பாவிதம் நேர்ந்திருந்தால்?? அதனை யோசிக்கவே மனம் நடுங்கியது!
துயரத்தில் இருந்தவள் மன நிலை நிதானத்தில் இல்லாமல் போக அவளையும் மீறி வள்ளி சொன்ன வார்த்தைகள் செவிக்குள் ரீங்காரமிட்டது!
அவர் சொன்னது போல் நான் வந்த நேரம் தான் இப்படி ஆகி விட்டதோ என்று முகம் கசங்க எண்ணியவள் பரிதவிப்புடன் கணவனின் முகம் பார்த்தாள்!
அவள் பார்வையில் தெரிந்த கலக்கமும், பயமும் அவனை கவலை கொள்ள வைத்தது என்றால் ‘என்னால் தானோ.. நான் வந்த நேரம் தானோ’ எனும் ரீதியில் தன்னைப் பார்த்திருப்பதை உணர்ந்தவன், “தேவை இல்லாம எதையும் யோசிக்கக் கூடாது மலர்!” என்றான் அழுத்தம் பெற்ற குரலில்!
அந்த அழுத்தத்தில் நன்றாகவே கோபமும் இருந்தது!
அவள் முகம் அப்போதும் மாறாமல் இருப்பதைக் கண்டு, “தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்கு நீ அக்கா பேசினது வரை யோசிக்கணும்னு அவசியம் இல்ல!” என்றான் இறுகிய குரலில்!
தன் முகத்தை வைத்தே தன் உணர்வுகளைப் படித்தவன் மீது பெரும் நேசம் பெருகினாலும் அதனை முழுமையாய் உள்வாங்க முடியாமல் கவலை கொண்டாள்.
“நான் அப்படி நினைக்கல. அப்படி நினைக்கிற ஆளும் இல்ல. ஆனா, என்னையும் மீறி தோணுது.. நான் என்ன செய்ய?” என்று உள்ளே சென்று விட்ட குரலில் கேட்டவள்,
“ஒரு வேளை.. உங்க அக்கா சொன்ன மாதிரி.. அது உண்மையா…” என்று கலங்கிய குரலில் தொடர முடியாமல் விசும்பினாள்.
“இன்னும் ஒரு வார்த்தை நீ பேசினாலும்…” என்று கட்டுங்கடாத கோபத்தில் தாடை இறுக, பற்கள் நெரிபட கடுகடுத்த முகத்துடன் அவள் முகம் பற்றி தன்னைக் காண வைத்தவன் “நீ பேச வேண்டாம்!” என்று கூறி அவளை பேச விடாமலும் செய்தான்!
வேகத்துடன் இதழை அணைத்தவன் முற்றிலும் நிதானத்தை இழந்திருக்க, மலரும் அவனைத் தடுக்கவில்லை!
அவளுக்கும் அந்த முத்தம் தேவையானதாக இருந்தது! வேறெதைப் பற்றியும் சிந்திக்க வைக்காத கணவனின் முத்தத்தில் முழு கவனத்தையும் வைத்தாள்!
‘இப்படி நினைப்பியா? நினைப்பியா?’ என்று கேட்காமல் கேட்கும் வகையில் முத்தத்தால் கோபத்தை அவளுள் கிடத்தினான் அமுதகீதன்.
அதை உணர்ந்தவளும் மன்னிப்பைக் கோரும் விதமாக அவனின் கன்னங்களை பற்றி தானும் முத்தத்தில் சிறு பங்கினை எடுத்துக் கொண்டாள்!
அவன் கோபத்தை போக்கும் விதமாக தலைக் கேசத்தை வருடிக் கொடுத்தாள்!
இன்னொரு கை விரல்கள் அவன் நெற்றிக் காயத்தை வருடியது.
அமுதன் கொடுத்த இதழ் முத்தம் காதலையும் கோபத்தையும் சரி விகிதமாக காட்டியது என்றால் மலரின் முத்தம் காதலையும் மன்னிப்பையும் வெளிக்காட்டியது!
ஒற்றை முத்தத்தில் இருவேறு உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் இருவருக்குமே இருந்தது!
அமுதம் முத்தத்தை தொடர, மலரிதழ் கண்ணீருடன் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டது!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.