பெரிய விபத்தில் இருந்து தப்பி சில பல காயங்களுடன் வந்திருக்கும் கணவனுக்குத் துணையாக இருக்க வேண்டி தேன்மலர் ஒரு வாரம் பணியில் இருந்து விடுமுறை எடுத்திருந்தாள்.
அதற்கு அமுதன் அவளிடம் “ஒரு வாரம் எதுக்கு மலர்..? இன்னும் ரெண்டு நாள்ல நான் கொஞ்சம் நார்மல் ஆகிடுவேன். கைல மட்டும் தையல் பிரிக்க நாளாகும். நீ வேலைக்கு போ..” என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்தவள்,
“எனக்கு உங்க கூட இருக்கணும்! நைட் உங்களை இறுக்க கட்டிப் பிடிச்சுட்டு படுக்கணும்! நீங்க என் கைக்குள்ள தான் இருக்கீங்கன்ற நிம்மதியோட தூங்கனும்! விடியிறப்ப எந்த பதட்டமும் இல்லாம உங்க முகத்தை பார்த்துட்டே கண் முழிக்கணும்! அந்த நாள் முழுக்க உங்களை விட்டு தள்ளி இருக்காம உங்க பக்கத்துலயே இருக்கணும். என்னோட கீதனுக்கு ஒன்னும் இல்ல. அவர் என் பக்கத்துல தான் இருக்காருன்னு ஆசுவாசத்தோட அந்த நாளை நான் முழுசா அனுபவிக்கனும்!” என்று அவனின் கண்ணோடு கண் கலந்து பேசியவள்,
“இதெல்லாம் நான் வேலைக்கு போனா கிடைக்குமா? கிடைக்காதில்ல! அதனால அமைதியா இருங்க! நான் ஒரு வாரம் லீவ் எடுக்கறது உறுதி. எதாவது சொன்னீங்கன்னா கெட்ட கோபம் வந்திடும் பாத்துக்கங்க” என்று கோபத்தில் பொரிந்து தள்ளி அவனை மிரட்டினாள்!
அதட்டல் குரலில் சொன்னாலும் அவள் சொன்ன ஒவ்வொரு வரியிலும் அவனுக்கான காதல் கரை காணாத அளவிற்கு அளப்பரியாதாக இருந்ததை உணர்ந்தானே!
அதுவும் ‘என்னோட கீதனுக்கு’ என்றவள் வலது கை ஆள் காட்டி விரலை மார்பின் மத்தியில் வைத்து அழுத்திச் சொல்லிய விதத்தில் அவள் மீது மீண்டும் மீண்டும் மீள முடியா நேசத்தில் விழுந்தான் அமுதன்!
கோபத்தில் முகம் திருப்பிக் கொண்டு நின்றிருந்தவளை நேசம் வழியும் புன்னகையுடன் பார்த்தவன் கட்டிலில் அமர்ந்தபடி காயம் இல்லாத இடது கையால் அவளின் வலது கைப் பற்றி இழுத்து தன் மடி மீது அமர வைத்துக் கொண்டவன்,
“லவ் யூ சோ மச் மலர்” என்றான் அவளின் கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்றை வைத்து!
அவன் சொன்ன வார்த்தைகளிலும் செய்த செயலிலும் திகைத்து லேசாக முறைத்தவள், “நான் கோபமா பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதுவும் இப்படி மடில உட்கார வச்சிட்டு. அடி பட்ட உடம்பு வேற….” என்று அதற்கும் கோபம் கொண்டவள் எழுந்து கொள்ளப் பார்க்க, அதற்கு அனுமதிக்காமல் அவளின் இடையோடு இரு கரங்களையும் சுற்றி கோர்த்து அவளைத் தன் மடியில் சிறை வைத்தவன்,
பார்வையால் அவளை வருடிக் கொண்டிருந்தான்.
“நான் கோபமா இருக்கேன்! நீங்க இப்படி பார்த்து வைக்காதீங்க..” என்றாள் அவன் பார்வையில் தன் கோபம் கரைவதை உணர்ந்து கறாராக!
அதைக் கண்டு மேலும் மந்தகாசமாக ஒரு புன்னகையை சிந்தியவன், “கோபப் படும் போது இன்னும் அழகாக இருக்கியே மலர்!” என்றவன், அவளை ரசித்துக் கொண்டே..
“கோபம் கொள்கையிலும்..
கிறங்க வைக்குதடி.. மீண்டும் ஒருமுறை நீ.. கோபத்தில் பார்ப்பாயா….” என்று பாட, தேன்மலருக்கு அவனின் பாடலில் அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் தானாக இதழ்களில் புன்னகை மலர்ந்தது!
அந்தப் புன்னகையில் கரைந்தவனாய்..
“ஆளை கொள்ளும்
அழகே…
நிழல் கூட அழகின்
நகலே…
ஒரு நாளும்.. குறையாத..
புது போதை.. கண்ணோரம்
தந்தாயே… அணைத்தாலும் அணையாத…
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே…!” என்று பாடி முடிக்க, தேன்மலர் கண்ணில் காதலுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகம் சிரிப்பில் ஜொலித்துக் கொண்டிருந்தது!
மலரை மொய்க்கும் வண்டாக அவளின் முகத்தையே பார்வையால் மொய்த்துக் கொண்டிருந்தவன் “மலருக்கு நான் கீதனா?” என்றான் முகத்தில் புன்னகையும் காதலும் போட்டி போட!
அப்போது தான் தான் சொன்னவற்றை உணர்ந்தவள் இதழ் கடித்து தலையைக் குனிந்து கொண்டாள்!
“மலர்” என்று இரு கரங்களாலும் அவளின் முகத்தை பற்றி நிமிர்த்தியவன் “கீதன் அத்தான்னு கூப்பிடு மலர்..” என்றான் ஆசையாக!
அவன் கேட்ட விஷயத்தில் படக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் சடுதியில் கோபம் குடி கொண்டிருந்தது!
கூடவே.. இதழ்கள் “முடியாது! முடியவே முடியாது!” என்று அழுத்தமாக அவனின் ஆசைக்கு மறுப்பினை கூறி விட, அமுதன் திகைத்து அவளைப் பார்த்தான்! முகத்தில் வாடி விட்ட தன்மை!
ஆனாலும் தன்னை சமன் செய்து கொண்டு அவள் மறுப்பிற்கான காரணத்தை அறிய வேண்டி “ஏன் மலர்…?” கரகரத்த குரலில் கேட்டான்.
அதில் அவளுக்கும் கண்கள் பனித்துப் போனது.
“என்னை அப்படி எல்லாம் கூப்பிடாதன்னு முகத்துல அறைஞ்ச மாதிரி சொன்னதே நீங்க தான! அப்புறம் எப்படி கூப்பிடுவேன்? மாட்டேன்! கூப்பிட மாட்டேன்! கூப்பிடவே மாட்டேன்!” என்று சிறு குழந்தை போல் பிடிவாதமாக இடமும் வலமும் தலை அசைத்து கூறியவள் பெருகிய கண்ணீருடன்
அவனுக்கும் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டன! அவள் சிறு பிள்ளையாக இருந்த போது சொன்ன விஷயம் அவள் மனதுள் ஆழப் பதிந்திருப்பது மட்டுமல்லாமல் இத்தனை தூரம் அவளுக்குள் காயத்தை உண்டு செய்திருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை அவன்!
அதுவும் அன்று அவன் சொன்ன விஷயத்தை இன்றளவும் மறக்காமல் மனதோடு வைத்து புழுங்கி, தான் ஆசையாக கேட்ட போது சட்டென்று மறுத்து இதோ இப்போது கண்ணீருடன் தன்னிடமே தஞ்சம் அடைந்திருக்கும் மனைவியை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான்.
என்ன சொல்லி அவளை சமாதானம் செய்ய என்று கூட புரியவில்லை!
அவளோ அவனின் கூடிப் போன இறுகிய அணைப்பை உணர்ந்து “ஏன் அப்படி சொன்னீங்க அன்னைக்கு? உங்களை அத்தான்னு கூப்பிட ஒரே ஒரு அத்தை பொண்ணு நான் தான் இருக்கேன்னு தெரிஞ்சும் ஏன் அப்படி சொன்னீங்க! எனக்கு மட்டும் தான் உங்களை அப்படிக் கூடப்பிடுற உரிமை இருக்கு! ஆனா நீங்களே அதை வேண்டாம்னு சொன்னீங்க தானே! இப்ப ஏன் ஆசையா கேட்டு என்னை மறுக்கிற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தினிங்க!” அன்றவன் கூறியதற்கு இன்றவனிடம் தன் கோபத்தையும் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் அவனிடம் கொட்டினாள்!
கூடவே அவன் ஆசையாக கேட்டதை மறுக்கிறோமே என்று மறுகல் வேறு அவளின் கண்ணீரை இன்னும் அதிகரிக்கச் செய்தது!
அமுதன் எதுவுமே பேசவில்லை! அவள் பேசட்டும் என மௌனமாக அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான்!
மனமெல்லாம் வலித்தது!
எதற்காக அப்படி சொன்னோம் என்று தன் மீதே கோபம் வந்தது!
சிறிது நேரம் அழுதவள் தன்னை திடப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள்!
வலியில் அவன் முகமும் கசங்கி இருந்தது! கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரை உள்ளிழுத்துக் கொள்ள முயன்றபடி மனைவியின் கண்ணீரைத் துடைத்து விட்டான்!
மளுக்சென்று மீண்டும் கண்ணீர் தேங்கியது மலரின் கண்களில்!
“ஷ்ஷ்… மலர்! அழக் கூடாது! ஏன்டா அப்படி சொன்னேன்னு என் சட்டையைப் பிடிச்சு நாலு அடி அடிக்கிறதை விட்டுட்டு எதுக்கு கண்ணீர் விடுற..?” என்று முயன்று அதட்டியவன்,
அதில் மேலும் கண்ணீர் வழிய ஒன்றும் பேசாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்! அவனின் ஆசையை மறுக்கிறோம் என்று ஒரு புறம் தவிப்பாக இருந்த போதிலும் அன்றைய நாளின் தாக்கம் இன்றும் அவளை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது!
அப்படி எல்லாம் என்னை கூப்பிடாத என்று சொன்னது மட்டுமா அன்றைய நாளின் தாக்கம்???
இல்லையே!
அவள் ஆசை ஆசையாக உண்ணும் கடலை மிட்டாயைத் தட்டி விட்டு என்னவெல்லாம் பேசினான் என்று சிறு பிள்ளையின் உணர்வுகளுடன் நினைக்கும் போது மீண்டும் கண்ணீர் கண்களை மறைத்தது!
அவளின் எண்ணம் போகும் போக்கை அறிந்து கொண்டவனுக்கு இந்த விஷயத்தில் எப்படி அவளை சமாதானம் செய்வது என்று சத்தியமாகத் தெரியவில்லை!
அழுது கொண்டிருப்பவளின் முகம் பற்றி “உனக்கு எப்படித் தோணுதோ அப்படிக் கூப்பிடு மலர்! நான் எதோ ஆர்வத்துல லூசுத் தனமா கேட்டுட்டேன். விடு. அழாத. இந்த விஷயத்தை நேரம் வரும் போது நான் சரி பண்றேன்” எனக் கூறியவனின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில் அவளின் மனதிலும் தவிப்புகள் அடங்கியது.
தன் மனதில் அழியா தழும்பாக இருக்கும் கடந்த கால மனக்ளேசங்களை கணவன் எப்படியாவது களைந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அவன் நெற்றியொடு தன் நெற்றியை வைத்து அழுத்தியவள் “சாரி.. சட்டுன்னு முடியாதுன்னு சொல்லி உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்” என்க,
“அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ ஃபீல் பண்ணாத” என்று மனைவியைத் தேற்றியவன், எப்படியாவது இந்த மனக்கசப்பை நீக்கியே ஆக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
யோகராணியும் யோகலக்ஷ்மியும் சென்னையில் இருந்து கிளம்பி நேரில் பார்க்க வரோம் என்று சொன்னதற்கு ‘சின்ன காயம் தான். அலைச்சல் வேண்டாம்’ என்று சொல்லி விட்டான் அமுதன்.
யோகவள்ளி அவனின் நலம் விசாரிக்கவென அலைபேசியில் தொடர்பு கொள்ள, அமுதன் அவரின் அழைப்பை ஏற்கவே இல்லை.
அன்னை மூலமாக பேச முயன்ற போது தயவு தாட்சண்யம் ஏதுமின்றி “எனக்கு வள்ளி அக்கா கூட பேச விருப்பம் இல்லமா” என்று விட்டான் ஒரே வரியாக!
வள்ளிக்கு தம்பியின் ஒதுக்கத்தில் கோபமும் கண்ணீரும் வந்தது.
“அவளைக் கல்யாணம் பண்ணி வந்ததும் கூடப் பிறந்த அக்காவை ஒதுக்கி வச்சுட்டான்ல….” என்று தனிமையில் மனதிற்குள் மட்டுமே பொறும முடிந்தது வள்ளியால்!
பின்னே?
அமுதன் அவரின் வாய்க்கு தன் உறுதியான வார்த்தைகளால் பெரிய பூட்டாகப் போட்டிருந்தானே!
திருமணத்தன்று தன் மனைவியைப் பேசிய பேச்சை அறிந்த மறு தினமே அக்காவிற்கு அழைத்தவன் “இனி என் பொண்டாட்டியை ஒரு வார்த்தை நீங்க பேசினாலும் என்னோட பொல்லாத கோபத்துக்கு ஆளாகிடுவீங்க. அவளை பார்த்து இப்படி சொல்றதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?” என்று கொதித்தவன்,
“ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சிக்கங்கக்கா.. நீங்க எப்படிப்பட்ட வார்த்தையை வீசி மலரை கேவலப் படுத்தினாலும் அது உங்க உடன் பிறந்த தம்பியை கேவலப் படுத்துறதா தான் அர்த்தம்! மலரை நீங்க காயப் படுத்தினாலோ அசிங்கப் படுத்தினாலோ அது அமுதனையும் காயப்படுத்தும், அசிங்கப் படுத்தும்! ஏன்னா.. நானும் மலரும் வேற வேற இல்ல!” என்று இறுகிய குரலில் கூறியவன்,
“உங்களுக்கு இனிமேல் உடன் பிறந்தவன்னு கடமைக்கு ஒருத்தன் இருக்கான்! ஆனா, இனிமேல் அவனோட உரிமையா உறவு கொண்டாட நினைக்காதீங்க! இந்த நிமிஷத்துல இருந்து அந்த உரிமையை நீங்க இழந்துட்டீங்க!!” என்று உள்ளத்து கோபம் அத்தனையும் ஒன்று திரட்டி வார்த்தைகளில் கொட்டி விட்டு அவரின் வாயை அடைத்தவன், ஒட்டு மொத்த உறவையும் துண்டிக்காமல், தன்னிடம் அவருக்கு இருக்கும் உரிமையை மட்டும் அந்த அழைப்போடு சேர்த்து துண்டித்திருந்தான்!
இந்த விஷயம் குறித்து அவன் மனைவியிடம் எதுவும் பகிர்ந்திருக்கவில்லை! அவளிடம் கூறினால் தன்னால் அக்காவுடன் கோபித்துக் கொண்டான் கணவன் என நினைத்து வருந்துவாள் என்று உணர்ந்தவன் வள்ளியிடம் பேசியதைப் பற்றி யாரிடமும் கூறி இருக்கவில்லை.
இதோ கடந்த இரண்டு தினங்களாக தனக்கு அழைத்துப் பேசத் துடிக்கும் அக்காவின் அழைப்புகளை புறக்கணித்த வண்ணமே இருந்தான்.
பொறுத்துப் பார்த்த வள்ளிக்கு தம்பியின் உதாசீனத்தில் கோபம் உச்சிக்கு சென்று விட, நேரிலேயே அவனைக் காண முடிவு செய்து அன்று மாலை அமுதனின் வீட்டிற்கே வந்திருந்தார்.
கிருஷ்ணாவிற்கு அன்று தான் இறுதித் தேர்வு! எனவே பள்ளிக்குச் சென்றிருந்தாள்.
இன்பசேகரன் வீட்டில் இருக்க, வசுந்தலா கோவிலுக்குச் சென்றிருந்தார்.
திடீரென்று வருகைத் தந்திருக்கும் மகளைப் பார்த்த இன்பசேகரன், தம்பியை காண வந்திருப்பாள் என்று புரிந்து கொண்டு “வா வள்ளி..” என்று நல்ல முறையாகவே வரவேற்றார்.
தந்தையைக் கண்டதும் வள்ளியின் கோபமும் வேகமும் சற்று குறைந்தாலும் மாடிப் படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த தேன்மலரைக் கண்டதும் முகத்தில் அப்பட்டமாக ஆக்ரோஷம் வெளிப்பட்டது!
இவள் மேல் கொண்ட மயக்கத்தில் தானே தம்பி தன்னை ஒதுக்குகிறான்!
‘சரியான கைகாரி! என் தம்பிய கைக்குள்ள போட்டுக்கிட்டு அவ இஷ்டத்துக்கு ஆட வைக்கிறா.. இவளுக்கு இன்னைக்கு இருக்கு..!’என்று உள்ளம் பொறும ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
தேன்மலரோ வள்ளியைக் கண்டதும் எந்த ஒரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் “வாங்க அண்ணி…” என்று மட்டும் கூறி விட்டு அவளுக்காக காஃபி எடுத்து வரலாம் என்று அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
செல்லும் மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொல்லு வள்ளி.. நல்லா இருக்கியா?” என்று இன்பசேகரன் பேச்சைத் துவங்க,
அதில் தன்னிலை அடைந்த வள்ளி, “எனக்கென்னப்பா? நான் நல்லா தான் இருக்கேன்! ஆனா, என் தம்பி தான் ஆக்சிடென்ட்ல சிக்கி நல்லா இல்லாம இருக்கான் போல!” என்று நொடிப்புடன் பேச்சினை ஆரம்பித்தார்.
மகளின் குரல் பேதத்தை உணர்ந்தாலும் இன்பசேகரன் வெளியில் எதையும் காட்டில் கொள்ளாமல் “ஆமா வள்ளி. கைல நல்ல காயம். நல்ல வேளை பெரிய ஆபத்துல போய் முடியல” என்றார் பெரு மூச்சுடன்!
‘இப்படி ஒருத்தியை மருமகளா கூட்டிட்டு வந்தா… இப்படி தான் எதாவது ஆகும்!’ என்று கூற வந்த வார்த்தைகளை தந்தைக்கு பயந்து விழுங்கிக் கொண்டவர் “அம்மா எங்கப்பா?” என்று பேச்சினை மாற்றினார்.
“கோவிலுக்கு போய் இருக்கா வள்ளி. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவா” என்றார்.
கிருஷ்ணரூபியின் அறையைப் பார்த்தவர் “எங்க அவளைக் காணோம்?” எதாவது பேச வேண்டுமே என்று வேண்டா வெறுப்பாக தான் என்றும் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத தன் தங்கையான கிருஷ்ணரூபியைப் பற்றி விசாரித்தார்.
மகளை அதிசயமாக பார்த்த இன்பசேகரன் “அவளுக்கு இன்னையோட டென்த் கடைசி பரீட்சை முடியுது வள்ளி. இப்ப வர்ற நேரம் தான்” என்றார்.
“ஓ..” என்று கேட்டுக் கொண்ட வள்ளி, வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க தேன்மலர் இருவருக்கும் காஃபியை கொண்டு வந்து நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்!” என்று வள்ளி பட்டென்று கூற, தேன்மலர் அவரை ஒரு பார்வை பார்த்து ஒன்றும் சொல்லாமல் மாமனாரிடம் அவருக்கான காஃபியை நீட்டினாள்.
“தேங்க்ஸ்மா..” என்ற இன்பசேகரன் “உனக்கு காஃபி தேனு?” என்று கேட்க, “அவுங்களுக்கும் காஃபி எடுத்துட்டு போகனும் மாமா. அவரோடையே குடிச்சுக்குறேன்” என்றவள், தங்களுக்கான காஃபியை எடுத்துக் கொண்டு மேலே செல்ல,
“புருஷனும் பொண்டாட்டியும் ஜோடியா அப்புறம் உக்காந்து காஃபி குடிப்பீங்களாம். இப்ப போய் என் தம்பியை வரச் சொல்லு! அவனைப் பாக்க தான் நான் வந்திருக்கேன்!” என்றார் சட்டமாக!
மகளின் பேச்சில் அதிருப்தி அடைந்த இன்பசேகரன் “வள்ளி…” என்று அதட்டலுடன் அழைக்க,
“என்னப்பா?” என்ற வள்ளி, தந்தையின் முறைப்பில் “இப்ப என்ன சொல்லிட்டேன்? என் தம்பியை பாக்கணும்னு உங்க மருமக கிட்ட கேட்டது ஒரு குத்தமா?” என்று இறங்கிய குரலில் கேட்க, தேன்மலர் மாமனாரைப் பார்த்து “அவுங்க இப்ப தான் தூங்கி எழுந்தாங்க மாமா. காஃபி குடிச்சதும் ரெண்டு பேரும் ஒன்னாவே கீழ வரோம்” என்றவள் அழுத்தமாக வள்ளியை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள்!
அவள் தந்தையிடம் சொன்ன பதிலிலும், தன்னைப் பார்த்த பார்வையிலும் வள்ளியின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம் படர்ந்தது!
‘நீங்க என்ன சொல்றது? நானும் என் புருஷனும் ஜோடியா காஃபி குடிச்சிட்டு ஜோடியா தான் கீழ வருவோம்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்றிருந்தாளே!
அதுவும் சட்டமாக சொன்ன தன்னை தவிர்த்து விட்டு தந்தையிடம் பதில் கூறி விட்டுச் சென்றவளை நினைக்க நினைக்க
வள்ளி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!
அதை உணர்ந்த இன்பசேகரன் “தேனு மேல உனக்கு என்ன கோபம் வள்ளி?” என்றார் அதட்டலாக!
அதுவே வள்ளியின் பொறுமையை உடைக்க போதுமானதாக இருக்க, “என்ன கோபமா? எப்படிப்பா கோபம் இல்லாம இருக்கும்? அவ இடத்தில என் நாத்தனார் இருக்க வேண்டியது! என் நாத்தனாருக்கு என்ன குறைச்சல்னு இவளைப் போய் உங்க மகன் கட்டினா இவளை தான் கட்டுவேன்னு நின்னான்? இந்த வீட்டு மருமகளா வர்றதுக்கு இவளுக்கு என்ன தகுதி இருக்கு சொல்லுங்க? போயும் போயும் உங்க ஒன்னுமில்லாத தங்கச்சி வீட்ல இருந்தா இந்த வீட்டுக்கு பொண்ணு எடுக்கணும்!” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை சிதற விட்டுக் கொண்டிருந்தார்!
சற்று முன்னர் தேன்மலர் பார்த்துச் சென்ற அழுத்தப் பார்வை மேலும் அவரின் ஆத்திரத்தை கிளறி விட்டிருந்தது!
“இதென்ன மரியாதை இல்லாத பேச்சு வள்ளி..? தேனு ஒன்னும் ஒண்ணுமில்லாத வீட்ல இருந்து வரல! அவ என் சொந்தத் தங்கச்சியோட மக! நம்ம சொந்த உறவு! அவளை நம்ம அமுதன் விரும்பிக் கட்டிக்கணும்னு சொன்னதுல எந்தத் தப்பும் இல்ல! இன்னொரு தடவை இப்படி பேசாத” என்றார் கடுமையான குரலில் கண்டிப்புடன்.
தந்தையின் கோபத்தில் வள்ளி சுதாரித்துக் கொண்டு அப்படியே அமைதியாகி விட்டார்!
இன்பசேகரனுக்கோ மகளின் பேச்சில் மனம் வலித்தது! இப்படி எல்லாம் அவள் பேசுவதற்கு தான் தானே மூல காரணம் என்று தன்னையே நொந்து கொண்டார்.
அன்று காலை உணவு வேளையின் போது மருமகள் பேசிய வார்த்தைகள் எல்லாம் இன்றளவும் அவரின் இதயத்தை அலசி குற்ற உணர்வில் தத்தளிக்க வைத்துக் கொண்டிருந்தது!
அன்றில் இருந்து அவர் மருமகளைப் பார்க்கும் பார்வையில் பரிவும் அன்பும் சற்று கூடித் தான் தெரிந்தது!
வேலையை விடச் சொன்னதற்கு மனதார வருத்தம் தெரிவித்து “உனக்கு எது பிரியமோ அதையே செய் தேனு. அதே மாதிரி என்ன வேணும்னாலும் இனிமேல் என் கிட்ட தயங்காம கேளு. உனக்கு மாமனாரா இல்லாம உன்னோட தாய் மாமாவா எல்லாமே செய்ய நான் தயாரா இருக்கேன்” என்றிருந்தார் பாசத்துடன்.
அப்படி இருக்க.. இன்று மகள் தன் மருமகளை தரக்குறைவாக பேசுவதை அவரால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை!
இதற்கே இப்படி கடுமையாகப் பேசும் தந்தை திருமணத்தன்று தான் தேன்மலரைப் பேசிய பேச்சு தெரிய வந்தால் என்ன சொல்வாரோ என்று நினைத்த நொடி வள்ளியின் முகம் வியர்த்துக் கொட்டுவது போலிருந்தது!
எனவே, அடுத்து எதுவும் பேசுவதற்கு வாயைத் திறக்காமல் கமுக்கமாக அமர்ந்து கொண்டார்!
வசுந்தலா கோவிலில் இருந்து வந்திருக்க, மகளைக் கண்டதும் “வா வள்ளி” என்று வரவேற்று கோவில் பிரசாதத்தை நீட்டினார்.
வள்ளி அதனை நெற்றியில் வைத்துக் கொள்ள, இன்பசேகரனுக்கு ஃபேக்டரியில் இருந்து முக்கியமான அழைப்பு வரவும் “நீங்க பேசிட்டு இருங்க” என அழைப்பை ஏற்று பேசத் துவங்கியபடி எழுந்து அறைக்குள் சென்றார்.
தந்தையின் தலை மறைந்ததும் வள்ளிக்கு மீண்டும் தைரியக் கொம்புகள் நீண்டு கொண்டது!
“உங்க மகன் எதோ கோபத்துல என் கூட பேசலேன்னு சொன்னா நீங்களும் அப்படியே விட்டிருவீங்களாமா. அவனை நாலு திட்டுத் திட்டி என் கூட பேசச் சொல்ல மாட்டீங்களா?” என்று அன்னையிடம் காய்ந்தார் யோகவள்ளி!
வசுந்தலாவோ மகளை ஏகத்துக்கும் முறைத்து “நீ பேசின பேச்சுக்கு அவன் உன் கூட உறவே வேண்டாம்னு சொல்லுவான்னு நினைச்சேன். நல்ல வேளை. அப்படி எதுவும் சொல்லாம இருக்கதே என்னைப் பொறுத்த வரை பெரிய விஷயம்!” என்றவர்,
“இனிமேலாவது அவளை எதுவும் சொல்லாம இரு வள்ளி. அன்னைக்கு பேசினது தெரிஞ்சே அமுதன் கோபத்தை என்னால சமாளிக்க முடியல. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கதால பிரச்சனை இல்லை! இல்லேன்னா அப்பாவோட கோபத்துக்கும் நீ ஆளாகுற மாதிரி இருக்கும். இதுக்கு மேல நீ எதாவது பேசினா அமுதன் கோபம் எல்லையை கடந்திடும்” என்று மகளுக்கு முடிந்த வரையில் புரிய வைக்க முயன்றார் வசுந்தலா!
“நீங்க சொல்லலேன்னா அவனுக்கு அந்த விஷயத்தைப் பத்தி தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சுக்காது! நீங்க ஏன் நான் பேசினதை அப்படியே அவன் கிட்ட போட்டுக் கொடுத்தீங்க?” என்று ஆக்ரோஷத்துடன் அன்னையைச் சாடியவர்,
“அந்த வசியக்காரி உங்க புள்ளையை மயக்கினது மட்டும் இல்லாம உங்களையும் மயக்கி கைகுள்ள போட்டுக்கிட்டா போல இருக்கே!” என்று எள்ளலாக வினவ,
“வள்ளி..” என்று மகளை அதட்டினார் வசுந்தலா!
“சும்மா என்னையவே ஆளாளுக்கு பேசாதீங்கமா. என்னோட வீட்ல தினந்தினம் என் மாமனார் மாமியார் என் புருஷன்னு எல்லாரும் என்னப் பேசுறாங்க. எங்க வீட்டு பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டு உன் தம்பி அவன் இஷ்டப்படி உங்க அத்தை மகளயே கல்யாணம் பண்ணிக்கிட்டான்ல. நீ அவ்வளவு தூரம் கேட்டு, எவ்வளவோ சொல்லியும் உன் தம்பி ஒத்துக்கலைன்னா சரி! உன் அப்பா அம்மா கூடவா ஒத்துக்கல. உன் வார்த்தைக்கு உன் பொறந்த வீட்டுல இவ்வளவுதான் மதிப்பான்னு கேட்டுக் கேட்டு கொல்றாங்க” என்று எரிச்சல் நிறைந்த குரலில் கூறியவர்,
“அப்படி என்ன நான் தப்பா பேசிட்டேன்னு உங்க புள்ள என்னோட பேசாம முறுக்கிக்கிட்டு உங்களோட உரிமையை இழந்துட்டீங்கன்னு குதிக்குறான்! நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? இதோ நான் சொன்ன மாதிரி அந்த கிரகம் பிடிச்சவ வந்த நேரம் தான நம்ம அமுதனுக்கு இப்படி ஆகி இருக்கு? இல்லேன்னு சொல்ல முடியுமா? கல்யாணம் ஆகி ஒரு மாசம் முழுசா முடியல. அதுக்குள்ள இப்படின்னா.. இன்னும் வாழ்க்கை பூரா அவ இங்கேயே இருந்தா என்னென்ன நடக்குமோ? எழவு வீடா மாறாம இருந்தா சரி!” என்று என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாமல் வள்ளி வார்த்தையை வீசி விட,
வசுந்தலா நெஞ்சில் கை வைத்து திகைத்து போய் அமர்ந்து விட்டார்!
வள்ளி சொன்ன வார்த்தைகளில் நெஞ்சம் நடுங்கியது.
மேலும் தான் பெற்ற மகளா இப்படி எல்லாம் பேசுவது என்று எண்ணியவருக்கு வார்த்தைகளே வரவில்லை!
ஆனால் அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் வள்ளியை நோக்கி கோபத்துடன் தங்களின் வார்த்தையை உதிர்த்திருந்தனர்.
தேர்வுகள் முடிந்து விட்டது எனும் சந்தோஷத்துடன் பள்ளியிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்த கிருஷ்ணரூபியும், மாடியில் இருந்து மனைவியுடன் கீழே இறங்கிய அமுதகீதனும், அலைபேசியில் பேசி முடித்து விட்டு அறையில் இருந்து வெளியே வந்த இன்பசேகரனும் வள்ளியின் பேச்சில் உட்ச பட்ச கோபத்திற்கு ஆளாகி இருந்தனர்!
“அக்காஆ ஆ..!”
“வள்ளி!!!!” என்ற உக்கிரமான தந்தை மகன் அழைப்புகளுக்கு அடுத்து வீட்டிற்குள் விறுவிறுவென்று உள்ளே வந்த கிருஷ்ணரூபி தன் ஸ்கூல் பேகினையும் லஞ் பேகினையும் ஆவேசத்துடன் சோஃபா மீது ஒரே வீசாக வீசி விட்டு, ரௌத்திரம் நிறைந்த முகத்துடன் தன் மூத்த சகோதரிகளுள் மூன்றாவது சகோதரியை நெருப்பை சிந்தும் விழிகளுடன் ஏறிட்டவள்,
வள்ளியின் முன்னே ஒற்றை விரல் நீட்டி “என் அண்ணியைப் பத்தி இன்னும் ஒரு வார்த்தை நீங்க தப்பாப் பேசினாலும் பெரியவங்கன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்! என்னோட ஜாமெட்றி காம்பஸ்ஸ (Geometry compass) வச்சு உங்க வாய்ல நல்லா நாலு கோடு இழுத்து விட்ருவேன்!” குட்டிக் காளி தேவியாக மாறி அவரைப் பார்த்த உக்கிரப் பார்வையில் வள்ளியின் உயிரை நடுங்கச் செய்து, தான் அமுதகீதனின் தங்கை என்று நிரூபித்திருந்தாள் கிருஷ்ணரூபி!!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.