வலது கையை மார்பின் மேல் வைத்து, இடது கையால் கண்களை மூடியபடி படுத்திருந்தவனின் கோபம் இன்னும் தணியவில்லை என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் அவனது மார்பு விம்மித் தணிந்து கொண்டிருந்தது!
எப்படி! எப்படி! அக்காவால் இப்படி பேச முடிந்தது என்று எண்ணியவனுக்கு மனம் ஆறவே இல்லை!
அதுவும் அவ்வளவு உறுதியுடன் அன்று தான் அழைத்து பேசியதையும் மீறி எப்படி இன்று அன்னையிடம் இத்தகைய கொடிய வார்த்தைகளை சிந்த முடிந்தது என்று ரணத்துடன் நினைத்துக் கொண்டான்!
கொஞ்சம் கூட நிதானமே இல்லாமல் பேசினாலும் ஒரு அளவு கோல் வேண்டாமா? என்று இப்போதும் அவனது உள்ளம் கடும் கோபத்தில் சீறியது!
அமைதியிழந்த மனம் இறுகி இருக்க, இளகும் மார்க்கமற்று அப்படியே கிடந்தான்.
விம்மித் தணியும் மார்புடன் படுத்திருந்தவனின் மேல் மலர்க் கொடியாக அவன் மேல் சாய்ந்த மலர், கணவவனைத் தன் கைகளால் சுற்றிக் கொண்டாள்.
அவன் இதயத் துடிப்பை உணரும் வகையில் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அமுதனின் கரங்கள் தானாக நகர்ந்து மனைவியை தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டது!
சிறிது நேரம் மௌனத்தில் கழிய, கணவனிடம் அசைவில்லை என்றதும் மலர் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
மூடியிருந்த அவனின் கண்கள் பதகளிப்புடன் (பதகளிப்பு – பரிதவிப்பு) இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருந்ததைக் கண்டவள் முகம் கனிய அவனின் சிகையை கோதினாள்!
அவளின் கைகளை பற்றிக் கொண்டவன் சிகையில் இருந்து அவளது கரத்தை பிரித்து தன் இடது கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்!
மனைவிக்காக மனம் தவித்தது! அவளின் முகத்தைப் பார்க்கும் தெம்பற்றவனாக இறுக்கமாக கண்களை மூடி இருந்தான்.
தேன்மலர் மென் புன்னகையுடன் அவனின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதிக்க, பட்டென்று அமுதனின் கண்கள் திறந்து கொண்டன.
திறந்திருந்த அவனது கண்களைப் பார்த்துக் கொண்டே அவனின் நெற்றியை வருடியவள், வலது பக்க புருவத்தை கட்டை விரலால் வருடி இடது பக்க புருவத்தையும் வருட, அவளின் வருடல் தந்த சுகத்தில் அமுதனின் இறுக்கங்கள் இளகி அலைப்புறுதல்கள் அகன்று மனதில் ஒரு வித அமைதி நிலவியது!
அந்த அமைதியில் அவன் மீண்டும் கண் மூடிக் கொள்ள, மூடிய இமைகளையும் வருடியவள், நான்கு நாட்களாக மழிக்கப் படாத மெல்லிய தாடியுடன் இருந்த அவனது கன்னம் வருடி “கீதன்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, மீண்டும் கண்கள் திறந்து அவளைப் பார்த்தான்.
மனைவியின் முகத்தில் ஒரு துளி அளவு கூட வேதனையின் சாயலோ கவலையோ எதுவுமில்லை!
அவ்வளவு ஏன்? சிறு சுணக்கம் கூட அல்லாமல் பளிச்சென்ற முகத்துடனும் மென் புன்னகையுடனும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன் முகத்தை வச்சு நீ நார்மலா தான் இருக்கேன்னு எனக்கு நல்லாப் புரியுது மலர். ஆனா, எனக்காக உன் உணர்வுகளை மறைக்கிறயோன்னு கஷ்டமாவும் இருக்கு” என்று தன் மனதை அப்படியே அவளிடம் கூறினான்!
தேன்மலர் புன்னகை விரிய அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு “நான் ஏன் என் உணர்வுகளை மறைக்கணும்? அதுவும் என்னோட கீதன் கிட்ட?” என்று இயல்பான குரலில் கேட்டவள்,
அவன் முகமருகே சென்று அவன் நெற்றியோடு தன் நெற்றி முட்டி “ஒரு உண்மைய சொல்லவா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க, அந்தக் குரல் தற்காலிகமாக அவனுள் மயக்கத்தை உண்டு செய்தாலும் மனைவியின் மன நிலையை அறிய வேண்டி “சொல்லு மலர்..” என்றான்.
“உங்க அக்கா பேசினது எல்லாம் எனக்குள்ள எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தல. ஆனா, எனக்காக கிருஷ்ணாவும் நீங்களும் மாமாவும் பேசினது தான் எனக்குள்ள பல வித பாதிப்பை ஏற்படுத்திடுச்சு” என்க, மனைவியின் கூற்றில் அமுதனின் இதழ்களில் மெல்லிய புன்னகை உதயமானது!
அதுவும் தங்கையின் பேச்சை நினைத்துப் பார்த்த போது மேலும் புன்னகை விரிந்தது அவனுக்கு.
தன் தங்கைக்கு இவ்வளவு கோபம் வரும்.. இல்லை.. முதலில் அவளுள் கோபம் எனும் உணர்வு உண்டு என்பதையே இன்று தான் அறிந்திருந்தான்.
அப்பப்பா!
அவள் முகம் காட்டிய கொந்தளிப்பும், வார்த்தைகளில் தெறித்த அனலும் பார்வையில் இருந்த உக்கிரமும் அவனையே ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க வைத்திருந்தது உண்மையோ உண்மை!
கிருஷ்ணரூபியின் கோபத்தை நினைத்துப் பார்த்த தேன்மலருக்கும் இப்போது வரை ஆச்சர்யமும் புன்னகையும் நீங்கவில்லை!
சில மணி நேரங்களுக்கு முன்பு…
மேலே கணவனுக்கான காஃபியை எடுத்து வந்த தேன்மலர் வள்ளி அண்ணி வந்திருக்கிறார் என்று சொன்னதும் அவன் முகம் இறுகியதை கண்டு வருத்தம் கொண்டாள்.
இத்தனைக்கும் வள்ளி வந்திருப்பதை மட்டுமே கூறினாள். தன்னிடம் நடந்து கொண்ட முறையை பற்றி சொன்னால் நிச்சயம் கணவன் அவரின் வரவை ஒதுக்குவான் என்று தான் வேறு எதையும் கூறாமல் விட்டாள்.
ஆனால், அவனின் முக பாவனையை வைத்தே அவனுக்கு வள்ளியைக் காண விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள்,
“உங்களை தான் பாக்க வந்திருக்காங்க. இப்படி அவாய்ட் பண்ண நினைக்கிறது நல்லது இல்ல. காஃபியை குடிச்சிட்டு வாங்க. ரெண்டு பேரும் போகலாம்” என்று கூற, மனைவியின் வார்த்தைகளை மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டான்.
இருவரும் காஃபியை அருந்தி விட்டு கீழே வந்த போது தான் வள்ளி தன் கொடிய வார்த்தைகளை விஷமென சிந்தி இருந்தார்.
அவர் சொன்னவற்றை கேட்டு தேன்மலர் தேகம் இறுக உணர்வுகள் துடைத்த முகத்துடன் நின்று விட்டாள். ஆனால், கைகள் கணவனின் முழங்கையை தானாக பற்றிக் கொண்டது. பற்று கோலாக!
கலங்கத் துடித்த கண்களை ஒரு வித வைராக்கியத்துடன் கட்டுப் படுத்தி இமைக்குள்ளையே கண்ணீருக்கு அணை கட்டினாள்.
மனதிற்குள் அவளின் திடமான குரல் ஒரு வித நடுக்கத்துடன் ஒலித்தது.
“இல்ல.. என்னோட கீதனுக்கு என்னால எதுவும் ஆகல. நான் வந்த நேரத்துனால எல்லாம் இப்படி ஆகல! என் கீதனுக்கு நடந்த விபத்துக்கு அவரோட மலர் காரணம் இல்ல” என்று அவளுக்கு அவளே தைரியம் கூறிக் கொண்டவள் தனக்குள் எதிர்மறை எண்ணங்களை பரவ அனுமதிக்கவில்லை!
கணவனின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு தனக்குள் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை மந்திரமாக உச்சரித்தாள்!
மனைவியின் நிலை உணர்ந்து தோளோடு அவளை அணைத்து தன்னுடன் அணைத்துக் கொண்டவன், “மலர்… காம் டவுன்..” என்று அன்பும் ஆதரமும் நிறைந்த குரலில் கூறி மனைவிக்கு பலம் தந்தவன்,
அடுத்த நொடியே
வள்ளியை நோக்கி “அக்காஆஆஆ…” என்று வீடே அதிரும் படி கொந்தளிப்புடன் இரைந்திருந்தான் அமுதகீதன்.
அதிலேயே வள்ளி அரண்டு பார்வையைத் தம்பியின் குரல் வந்த திக்கில் பதிக்க, அவனின் குரலுக்கடுத்து “வள்ளி…!!!!” என்ற தந்தையின் பெரும் கோபத்தை தாங்கிய குரலில் திடுக்கிட்டு மிரண்டு போய் பார்வையை தந்தையின் குரல் வந்த திக்கில் திருப்பி இருந்தார்!
தந்தை அறையின் பக்கம் இருக்க, எதிரே இருந்த மாடிப் படிகளின் முதல் படியில் மனைவியுடன் அமுதன் இருக்க, அவர்களின் நடுவே ஹால் பகுதியில் இருந்தார் வள்ளி!
எதிர் எதிரே இருந்தவர்களின் முகம் வள்ளி மீதான கோபத்தில் ரத்தமென சிவந்து ஜிவுஜிவுத்துப் போயிருந்தது!
நடுவில் இருந்த வள்ளி இருவருக்கும் இடையே நன்றாக சிக்கிக் கொண்டோம் என்று உணர்ந்து மிடறு விழுங்கி சோஃபாவில் இருந்து தானாக எழுந்து நிற்க, அடுத்து அவரின் சுவாசத்தை மூச்சுக் குழாய்க்குள்ளேயே நிறுத்தும் வகையில் ஆவேசத்துடன் வீட்டிற்குள் நுழைந்து அவரின் எதிரே வந்து நின்றாள் கிருஷ்ணரூபி.
தான் அமுதனின் தங்கை என்று சொல்லாமல் சொல்லும் வகையில், நாக்கில் நரம்பில்லாமல் தன் அண்ணியை அவர் பேசிய பேச்சை பொறுத்துக் கொள்ள இயலாமல் சீறி இருந்தாள்!
தந்தையும் தம்பியும் பேசிய பேச்சிலேயே அரண்டு மிரண்டு நெஞ்சம் நடுங்க நின்றிருந்த வள்ளிக்கு, எப்போதுமே தன்னைக் கண்டால் தன் கூட்டுக்குள் ஒடுங்கி அறைக்குள் ஓடி மறையும் தங்கை… இன்று தன்னை விரல் நீட்டி மிரட்டியது.. அதுவும் கண்ணில் கனலுடன் மிரட்டியது சற்று திகைத்து மூச்சடைக்க வைத்தது என்பது மறுக்க முடியாத நிஜம்!
அதுவரை நிலமையின் தீவிரமும் வெம்மையும் கூடிக் கொண்டே போகிறதே.. எப்படி இதை சீர் செய்ய என்று பயத்தில் திகைத்து தவித்துப் போய் நின்றிருந்த வசுந்தலா இளைய மகளின் பேச்சில் அதிர்ந்து தான் போனார்!
வழமை போல் அவளிடம் அதட்டிப் பேசவோ கண்டிக்கவோ கூட வாய் வரவில்லை! அந்த அளவிற்கு கிருஷ்ணாவின் முகம் கோபத்தில் சிவந்து இறுகி இருந்தது!
வள்ளிக்கோ மும்முனை தாக்குதலாக மூன்று பேரும் ஆளுக்கு ஒரு புறம் இருந்து தன்னை ஒரு வழி செய்யத் தயாராக இருப்பது புரிந்தாலும் தன் எதிரே நின்றிருந்த கிருஷ்ணரூபியைக் கண்டு, கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டுக் கொண்டார்.
‘சின்னக் கழுதை…! என்ன தைரியம் இருக்கணும்? அண்ணியாம் அண்ணி! அவளுக்காக இவ என்னை விரல் நீட்டி மிரட்டுவாளாமா!! அதுவும் காம்பஸ்ஸ வச்சு என் வாய்ல நாலு கோடு போடுவாளாமே…! எவ்வளவு திமிர்!!’ என்று எண்ணி பல்லைக் கடித்துக்கொண்டு,
“ஏய்… எங்க வந்து யாரு முன்னாடி விரல் நீட்டி பேசிக்கிட்டு இருக்க? சின்ன கழுதை! போடி உள்ள…” வள்ளி அகங்காரத்துடன் கத்த,
“அக்கா…” என்று கர்ஜித்தபடி மனைவியுடன் நடு ஹாலிற்கு வந்த அமுதகீதன், கோபத்தில் நடுங்கியபடி நின்றிருந்த தங்கையை மற்றொரு கையால் அணைவாகப் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டான்!
“என்ன பேசுற வள்ளி!” என்று உறுமியபடி இன்பசேகரனும் ஹாலிற்கு வந்திருந்தார்!
வள்ளியோ ஆத்திரத்தின் உச்சியில் நின்று “நான் பேசுனது இருக்கட்டும்! முதல்ல இதோ இங்க நிக்குறாளே இந்தக் கழுத… இவளை முதல்ல ரூமுக்குள்ள போய் அடைய சொல்லுங்க!” என்று இரைந்தார்!
அதற்கு அமுதனும் இன்பசேகரனும் பதில் கூறும் முன் கிருஷ்ணரூபியே பதில் கூறி இருந்தாள்! அதுவும் அழுத்தமாக!
“முடியாது! நான் ரூமுக்குள்ள போக மாட்டேன்!”
அவளின் அதீத அழுத்தமான பதிலில் அமுதன் கண்கள் விரிய தங்கையைத் திரும்பிப் பார்த்தான்!
அவளின் அழுத்தத்தில் தன்னைப் பார்ப்பது போலவே ஒரு மாயை அவனுள்!
ஏன், இன்பசேகரன் கூட வள்ளியின் மீதான கோபத்தை விடுத்து இளைய மகளின் அழுத்தத்தில் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்து நின்றார்.
என்றுமில்லாத வகையில் கிருஷ்ணாரூபியின் குரல் முதல் முறையாக அவ்வீட்டில் உயர்ந்தோங்கி ஒலித்திருந்தது!
ஆகையால் தமையனும் தந்தையும் விழிகள் விரிய அவளையே பார்த்து நின்றனர்.
இளையவளோ தன் அக்காவைப் பார்த்து “நான் ஏன் ரூமுக்குள்ள போகனும்? இத்தனை நாள் போன மாதிரி இன்னைக்கும் போவேன்னு மட்டும் நினைக்காதீங்க! நீங்க என் அண்ணியை இவ்வளவு தூரம் ஹர்ட் பண்ற மாதிரிப் பேசுவீங்க.. அதைப் பாத்துட்டு நான் வழக்கம் போல எதுவும் பேசாம ஊமை மாதிரி ரூமுக்குள்ள போய் உக்காந்திடுவேன்னு நினைச்சீங்களா?” என்றாள் தீர்க்கமான குரலில்!
தனக்காக தன் குட்டி நாத்தனார் தன் இயல்பு மீறி அக்காவிடம் கோபமாக வாதாடும் விதத்தைக் கண்டு தேன்மலருக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. ஆனால் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது!
அமுதனும் கூட சற்று நெகிழ்ந்து தான் போனான். அவனும் தங்கையின் பேச்சில் ஆச்சர்யம் கொண்டு நின்றானே தவிற, தன் கை வளைவில் நின்றிருந்தவளின் தீர்க்கமான பேச்சினை தடுக்க விழையவில்லை.
“ஏய்.. என்ன கூட கூட பேசிட்டே இருக்க! உன் அண்ணி உனக்கு அவ்வளவு ஓவியமா போய்ட்டாளா? அவளுக்காக இந்தத் துள்ளு துள்ளுற…” என்று வள்ளி விடாது அப்போதும் பேச,
“ஆமா.. துள்ளுவேன்! அவுங்க என் அண்ணி! எனக்கு மட்டுமே அண்ணி! என் அமுதன் அண்ணாவோட எல்லாமுமா இந்த வீட்டுக்கு வந்தவங்க என் அண்ணி! அண்ணனுக்கு அடுத்து எனக்குத் தாய்ப் பாசத்தை காட்ட ஆரம்பிச்சவங்க என் அண்ணி! சொல்லப் போனா இப்போ எனக்கு என் அண்ணனும் அண்ணியும் வேற வேற இல்ல” என்றவள் கண்கள் கலங்க அண்ணனின் மற்றொரு கை வளைவில் நின்றிருந்த தேன்மலரை அதீத அன்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் கண்ணீரை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்.
“ஒரு அம்மாவோட உணர்வு எப்படி இருக்கும்னு இந்த கொஞ்ச நாள்லயே எனக்குத் தந்தவங்க அவுங்க தான். தாய்ப் பாசம் இவ்வளவு தூரம் பரிசுத்தமா தூய்மையா இருக்கும்னு எனக்குப் புரிய வச்சதும் என் அண்ணி தான்! அண்ணி எனக்கு அம்மா மாதிரி!” என்றவள்,
“மாதிரி என்ன மாதிரி..? அவுங்க தான் என் அம்மா! என்னைக் கருலையே கொல்லாம, கொல்ல முடியாம.. வேண்டா வெறுப்பா என்னை சுமந்து பெத்தது உங்க அம்மாவா இருந்தாலும் இந்தக் கொஞ்ச நாள்லயே அம்மாவோட அன்பை எனக்குக் கொடுத்தது என் அண்ணி தான்! அதனால நீங்க கேட்ட மாதிரி என் அண்ணி எனக்கு ஓவியம் தான்!” என்று படபடவென கூறியவள்,
“என் அண்ணியை நீங்க எதாவது ஹர்ட் பண்ற மாதிரிப் பேசினீங்கன்னா அண்ணா, அப்பா கோபத்தை சேர்த்து என் கோபத்தையும் ஃபேஸ் பண்றதுக்கு ரெடியா இருந்துக்கங்க!” என்று கண்ணில் சவாலுடன் சொன்னவள்,
“காம்பஸ்ஸ வச்சு கோடு இழுத்து விட்டிடுவேன்னு சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்னு மட்டும் நினைக்காதீங்க! நிச்சயமா செய்வேன்! இதுக்கு மேல நீங்க பேசினா கண்டிப்பா சொன்னதை செய்வேன்! வசுந்தலா பெத்த பொண்ணு இப்படி எல்லாம் பேச மாட்டா.. செய்யவும் மாட்டா! ஆனா, இன்பசேகரன் பொண்ணு.. அமுதனோட தங்கச்சி..கண்டிப்பா செய்வா!” என்றாள் அழுத்தம் நிறைந்த குரலில்.
பேசுவது கிருஷ்ணரூபி தானா என்று இளைய மகளை வசுந்தலா பெரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவரின் இதயத்தை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போட்டு விட்டது.
“இப்ப உங்க கண்ணு முன்னாடி நிக்கிறது உங்களைக் கண்டா ஊமை மாதிரி ரூமுக்குள்ள போய் மறைஞ்சிக்கிற, வசுந்தலா வேண்டா வெறுப்பாப் பெத்த கிருஷ்ணரூபி இல்ல! கோபம் வந்தா அழுத்தமா தன்னோட கோபத்தை வெளிப்படுத்துற அமுதனோட தங்கச்சி! இந்தக் கொஞ்ச நாளா அவர் மலரோட வளர்ப்புல வளர்ந்த கிருஷ்ணா! அதனால இனிமேல் இங்க வந்தா என்னை உள்ள போன்னு சொல்ற வேலை வேண்டாம்!” என அனல் பறக்க பேசியவள்,
“இது உங்க அம்மா வீடுன்னு சொல்லி உறவு கொண்டாட நீங்க இங்க வர்றீங்க. அதே மாதிரி எனக்கு இது என் அமுதன் அண்ணனோட வீடு! என்னோட வீடும் கூட! அதனால இந்த வீட்ல என் மூத்த அக்காங்க மூணு பேர்ல யாரு வந்தாலும் இனிமேல் நான் ரூமுக்குள்ள போய் உக்கார மாட்டேன்! என்னைப் பாக்கப் பிடிக்கலேன்னா நீங்க இங்க வராதீங்க! இல்லையா உங்க அம்மாவோட ரூமுக்குள்ள போய் கொஞ்சிப் பேசுங்க! ஆனா, இனி என்னை ரூமுக்குள்ள போகச் சொல்ற வேலை வேண்டாம்!” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக நிமிர்ந்த பார்வையுடன் பேசியவள்,
அண்ணனின் கை வளைவில் நின்றிருந்த அண்ணியிடம் வந்து அவளின் கைகளை பற்றிக் கொண்டு “அவுங்க பேசினது ஜஸ்ட் குப்பை அண்ணி! நீங்க வாங்க. நாம மொட்டை மாடிக்கு போய் கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரலாம். இனி அப்பாவும் அண்ணாவும் அவுங்களை ஹாண்டில் பண்ணிக்குவாங்க” என்றவள், அவளை கையோடு மாடிக்கு இழுத்துப் போய் விட்டாள்!
பாச மிகுதியில் கண்கள் கலங்க தேன்மலரும் இளையவளின் இழுப்பிற்கு சென்றாள்.
முதல் தளத்தை எட்டியதும் அங்கே நின்று எல்லோரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்த கிருஷ்ணரூபி இறுதியில் தன்னை பெற்ற அன்னையிடம் பார்வையை நிறுத்தி “இனி நான் சின்ன பொண்ணு இல்ல! நானும் பெரிய பொண்ணு தான். இன்னையோட டெந்த் முடிச்சுட்டேன். அடுத்த வருஷத்துல இருந்து ப்ளஸ் ஒன் போகப் போறேன். இதை எல்லாத்தையும் விட, சின்ன வயசுலயே என் அம்மா காட்டுன அபரிமிதமான ஒதுக்கத்துலயும், வெறுப்புலயும் ரொம்ப ரொம்ப பக்குவப்பட்டு தான் வளர்ந்திருக்கேன்! அதனால தான் இத்தனை நாள் அவசியம் இல்லாத எந்த விஷயத்துக்கும் நான் பேசினது இல்ல. ஆனா, என் அண்ணியை யாரும் அனாவசியமா பேசினாலோ, ஹர்ட் பண்ணாலோ நான் திருப்பிப் பதிலடி கொடுப்பேன்! அது யாரா இருந்தாலும் சரி!” என்றவள் இறுதி வரியை ஆழமான பார்வையுடன் வள்ளியைப் பார்த்து கூறி விட்டு தேன்மலருடன் மாடிக்கு சென்று மறைந்தாள்!
செல்லும் இளைய மகளைக் கண்டு இன்பசேகரனின் இதழ்களில் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தையும் மீறி மெல்லிய புன்னகை அரும்பியது!
பிறந்தலில் இருந்து மகள் இன்று தான் மிக மிக நீளமாக கோபமாக பேசி இருக்கிறாள் என்பதை சொல்லொண்ணா உணர்வுடன் உள்வாங்கிக் கொண்டார்!
அதுவும் இறுதியாக அவன் சொன்ன வரிகளில் அவரின் முகத்தில் மேலும் புன்னகை விரிந்தது!
பின்னே? அன்று காலை உணவு வேளையின் போது மருமகள் அவளின் மன வேதனை அத்தனையும் கொட்டித் தீர்த்ததைக் கேட்டு அன்று இரவு தன்னிடம் “எப்படிப்பா நீங்க அண்ணி குடும்பத்தை தனியா விடலாம்?” என்று தன்னுடன் சண்டை கட்டி இரண்டு நாட்கள் தன்னோடு பேசாமல் அவளின் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப் படுத்தி இருந்தாளே!
இளைய மகளைப் பற்றி நினைத்துக் கொண்டே இன்பசேகரன் மூத்த மகளைப் பார்த்தார். முகத்தில் மெல்ல மெல்ல கடுமை பரவியது!
தாடை இறுக, “இன்னைக்கு என் மருமகளை பத்தி நீ பேசினதே ரொம்ப மோசமான வார்த்தைகள் தான்! ஆனா, இதுக்கு முன்னாடியும் என்னமோ பேசி இருக்க?” என்றவர் மிகுந்த கோபத்துடன் மனைவியிடம் பார்வையை செலுத்தினார்!
அந்தப் பார்வையில் ‘உனக்குத் தெரிந்தும் என்னிடம் ஏன் சொல்லவில்லை’ எனும் குற்றச்சாட்டு இருந்தது.
வசுந்தலா கணவரின் பார்வையை உணர்ந்தாலும் அதை உள்வாங்கும் தன்மை கிஞ்சுத்தும் அவரிடம் இல்லை!
அவரின் மனம், தான் வேண்டா வெறுப்பாக பெற்ற இளைய மகள் சொன்ன வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருந்தது!
எவ்வளவு தெளிவாக.. வள்ளியிடம் “உங்க அம்மா..” என்று தன்னைப் பிரித்து பேசி இருந்தாள்?
அவள் சொல்வதிலும் தவறேதும் இல்லையே!
பெற்றால் மட்டும் தாயாகி விட முடியுமா? அதுவும் வேண்டா வெறுப்பாக பெற்ற பெண் என்று பளிச்சென உண்மையைக் கூறினாளே..!
அவள் பேசிய ஒவ்வொரு வலி நிறைந்த வரிகளும் அவருள் பூதாகரமான உணர்வுகளை பொங்கி எழ வைக்க, கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது!
“வசு..” என்ற
கணவரின் அழைப்பில் தன்னிலை மீண்டவர் அன்று வள்ளி பேசியதை கணவரிடமும் கூறி விட்டார்.
அவ்வளவு தான் இன்பசேகரன் கொதித்து விட்டார். வார்த்தையால் வள்ளியிடம் சீறி, “என் மருமக இந்த வீட்டு மகாலக்ஷ்மி மட்டுமில்ல. எனக்கு இன்னொரு மகளும் கூட! இனி இந்த எண்ணத்தோட இந்த வீட்டுப் படி நீ மிதிக்கக் கூடாது வள்ளி! கிளம்பு!” என்று முகத்தில் அறைந்தார் போல் கூறியவர்,
“நல்ல எண்ணமும் நல்ல சிந்தனையும் வர்ற போது இந்த வீட்டுக்கு வா! அப்படி இல்லாத பட்சத்தில் கொஞ்ச நேரத்த்துக்கு முன்னாடி நீ சொன்ன மாதிரி இழவு வீடா மாறுனாக் கூட நீ இந்த வீட்டுக்கு வர வேண்டாம்!” என்று மிக மிக கடுமையாக கூறி விட்டார்.
தந்தையின் பேச்சில் வள்ளியின் அகங்காரம் எல்லாம் எங்கோ சென்று விட, “அப்பா…” என்றார் கண்ணீர் குரலில்.
“கிளம்பு!” என்று ஒற்றைச் சொல்லாக சொல்லியவர், மகனின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்து தன் அறைக்குள் சென்றார்.
வசுந்தலாவும் அதற்கு மேல் அங்கே நிற்காமல் கணவரின் பின்னே சென்று விட, அமுதன் அக்காவை ஒரு பார்வை பார்த்தான்!
“அன்னைக்கு நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க மாறல தான! ரைட்! இனி உங்க கூட எனக்கு எந்த வித பேச்சு வார்த்தையும் வேணாம்! உங்க உறவும் வேணாம்! எனக்கு இனிமேல் ரெண்டு அக்கா ஒரு தங்கச்சி மட்டும் தான்!” என்று வார்த்தைகளுக்கு அவ்வளவு அழுத்தம் கொடுத்து நிறுத்தி நிதானமாகப் பேசியவன் அவரின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் மேலே அறைக்கு சென்று விட்டான்!
எல்லோரும் சென்ற நிலையில் அனாதரவாக தனியே நிற்க முடியாமல் கண்ணீருடன் அங்கிருந்து கிளம்பி இருந்தார் வள்ளி.
மாடிக்கு கிருஷ்ணாவுடன் சென்ற தேன்மலரோ அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளின் கன்னங்களில் நெற்றியில் என முகம் முழுக்க முத்தமிட்டு “என் கிருஷ்ணா இன்னைக்கு ஃபையர் மோடுக்கு போவான்னு நான் நினைக்கவே இல்ல” குறும்புடன் கூறினாலும் தேன்மலர் குரல் தழுதழுத்துக் கிடந்தது!
கண்களில் கண்ணீர் வேறு அருவியாக கொட்டியது!
“நோ அண்ணி.. அழக் கூடாது..” என்ற இளையவள், அதற்கு மேல் அவளை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் தன் இறுதித் தேர்வு பற்றி பேசத் தொடங்கி விட, தேன்மலரும் நடந்ததை எல்லாம் மறந்து விட்டு அவளோடு ஒன்றிப் போனாள்.
இதோ.. இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் தான் மாடியில் இருந்து கீழே வந்திருந்தனர் கிருஷ்ணாவும் மலரும்.
தங்கள் அறைக்கு வந்தவள் கணவன் இன்னும் நடந்து முடிந்த நிகழ்வில் இருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிப்பதைக் கண்டு, அவனை இயல்புக்கு கொண்டு வர வேண்டி தான் அவனை நெருங்கி இருந்தாள்.
மனைவியின் வார்த்தைகளில் அமுதனும் கிருஷ்ணா பேசியதை எண்ணி புன்னகையுடன் தன்னை மீட்டுக் கொண்டான்.
“இன்னைக்கு கிருஷ்ணா அவ்ளோ அழுத்தமா கோபமா பேசும் போது அப்படியே என்னைப் பாக்குற மாதிரியே இருந்தது மலர்” என்றவன் குரலில் அத்தனை பெருமையும் பாசமும் வழிந்தது.
தேன்மலரும் புன்னகையுடன் அதை ஆமோதித்து “அமுதன் தங்கச்சின்னு வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலோ இல்லையோ.. அதை நிரூபிச்சுட்டா” என்றவள்,
அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு “எனக்கு ரொம்ப நிறைவா ஃபீல் ஆகுதுங்க. ரொம்ப யோசிச்சு தான் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். ஆனாலும் ஒரு பயம் எனக்குள்ள இருந்துட்டே இருந்தது! இந்த வேலை வேண்டாம் விட சொல்லுன்னு அம்மா கிட்ட சொன்ன மாமாவை நினைச்சு கொஞ்சம் நெருடலாவே இருந்தது. அப்புறம் எனக்கும் உங்களுக்கும் சரி வருமா வராதா.. இங்க வந்து எல்லாரோடையும் ஒத்துப் போய் வாழ முடியுமா..
இப்படி நிறைய கேள்வி இருந்தது எனக்குள்ள. கல்யாணம் ஆகி வந்த பின்னாடியும் அந்த பயமெல்லாம் அப்படியே மாறாம தான் இருந்தது. ஆனா, இன்னைக்கு அதெல்லாமே இருந்த இடம் தெரியாம காணாம போச்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள் மன நிறைவுடன்!
மனைவியின் வார்த்தைகளில் அவனது மனம் நிறைய, அவளின் நெற்றியில் ஆழ்ந்த இதழ் பதித்தான் அமுதகீதன்.
அவளோ அவனின் கைக் காயத்தை வருடி ஒரு வித தீவிரமான குரலில்
“இந்தக் காயம் எப்ப சரியாகும்?” என்று கேட்க,
“கொஞ்சம் ஆழமான காயம் தான் மலர். Non- absorbable sutures வேற போட்டிருக்காங்க. சோ, தையல் பிரிக்கணும். தையல் போட்ட டாக்டர் காயம் சரியாக ஒரு வாரம் ஆகும். அப்புறம் தான் தையல் பிரிக்க முடியும்னு சொன்னார்”
இதெல்லாம் வந்த அன்றே கூறி இருந்தான் தான்! ஆனால், இப்போது மனைவி கேட்கவும் தெளிவாக விளக்கியவன், “ஏன் மலர் கேக்குற?” என்றான் அவளின் முகத்தை குனிந்து பார்த்துக் கொண்டே!
அவளோ அவனின் கண்களைப் பார்த்து “எனக்கு இனிமேல் உங்களை விட்டு தள்ளி இருக்க வேணாம்! நெருங்கி வர நான் தயார்! எனக்கு இனி உங்க கிட்ட தயக்கம் எல்லாம் இல்ல” முதலிரவு அன்று அலங்கரித்த கட்டிலை சுட்டிக் காட்டி இந்த நெருக்கத்திற்கு நான் தயாரில்லை என்று தெளிவாக கூறியது போலவே இன்றும் எந்த விதத் தயக்கமுமின்றி கணவனிடம் நம் வாழ்க்கைக்கு நான் தயார் என்று கூறிய மனைவியின் தெளிவான பேச்சில் சந்தோஷ ஊற்று பொங்கியது அவனுள்!
“ஹே மலர்….” என்று நம்ப முடியாத திகைப்பில் எழுந்து அமர்ந்தவன் அவளையும் எழுப்பி தன்னோடு அணைத்துக் கொண்டு “இந்த மாதிரி டைம்ல இப்படி சொல்லி என்னை சோதிக்காத மலர்” என்றான் அவஸ்தையும் ஆசையும் நிறைந்த குரலில்.
“நான் சோதிக்கவெல்லாம் இல்ல. ஜஸ்ட் என் மாற்றத்தை சொன்னேன்..” என்று சிரித்தவளிடம்,
“பேசுறது என்னோட மலர் தானா?” என்றான் குறும்பு வழியும் குரலில்!
“பின்ன யாரோட மலராம்? அமுதனோட மலரே தான்!” என்றவளின் தேன் சிந்தும் அதரங்களில் ஆசையோடு முத்தமிட்டு அதில் புதைந்தும் போனான் அமுதகீதன்!
மலர் கீதம் பாடவும் அமுதம் தேனைப் பொழியவும் தயாராக இருக்க, தேனமுதமாய் தித்திக்கவிருக்கும் கூடல் நிகழ்வுக்கான கூதல் நிறைந்த மங்குல்(இரவு) பொழுதுகள் விரைந்து கவிழக் காத்திருந்தது!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.