என சதீஷும், சந்தோஷும் வினய்யின் இருபக்கமும் நின்று கொண்டு பாடி இருவரின் மோன நிலையும் கலைத்து விட, வந்தனா பதறிப்போய் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“ஏண்டா உங்களுக்கு இந்த கொலைவெறி??” என்பதைப் போல் இருவரையும் முறைத்து வைத்தான் வினய்.
“ஹாஹா!! கொஞ்சம் உங்க உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க பாஸ்!! அங்க ஒருத்தர் கொலைக் கொடூரமா உங்களைத் தான் முறைச்சிட்டு இருக்காரு” என நாட்டரசனைக் குறிப்பிட்டு சதீஷ் கூறவும் தான், அவரின் நினைப்பே வினய்க்கு வந்தது.
“இவளோ பயம் இருக்கவன் ஏன் அவரை வச்சிகிட்டு ரொமான்ஸ் பண்ணனும்!!” என கிண்டல் செய்த சதீஷ்,
“தனுவை நீ மறைச்ச மாதிரி நின்னிருந்ததால அவ பார்த்தது அவருக்குத் தெரிஞ்சிருக்காது.. ஆனா நீ எப்படி எங்க கூட இவளோ க்ளோஸ் ஆனன்னு அவர் நம்மளைத் தான் சந்தேகமா பார்த்துட்டே இருக்காரு வச்ச கண்ணு வாங்காம.. சோ உஷாராவே இரு!!” என எச்சரித்தான்.
அதன் பின் சங்கீதாவுடன் சேர்ந்து கொண்டு அவள் பொங்கல் வைக்க உதவி செய்யக் கிளம்பி விட,
இவன் சதீஷ், சந்தோஷுடன் சேர்ந்து கொண்டான்.
நாட்டரசனின் பார்வை அடிக்கடி வினய்யைத் தழுவி மீண்டது சந்தேகமாய், அதைக்கொண்டே அவன் வந்தனாவிடம் ஓடத் தொடங்கிய கால்களையும், ரசிக்கத் தவித்துக் கிடந்த கண்களையும் முயன்று கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
ஆனால் அவனுக்கு நேர்மாறாய், வந்தனாவின் பார்வை அடிக்கொருதரம் இவனைத் தான் காதலாய் தழுவிச் செல்ல,
“படுத்துற வதனா!!!” என கைகளை மடக்கி உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் தான் தவித்துப்போனான்.
இங்கு பொங்கல் பொங்கி வருவதற்குள், மருதூரின் பெரியவர்களை கோவிலுக்கு வந்து புது மணமக்களை ஆசிர்வதித்து செல்லுமாறு நேரில் அழைப்பு விடுவது அவ்வூரின் முறையாதலால், நாட்டரசனும், அறிவழகனும் அதற்குக் கிளம்ப, சந்தோஷும் கணேசனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
அவர்கள் கிளம்பியது தான் தாமதம், “சகலை!!! இதான் நல்ல சான்ஸ்!! மிஸ் பண்ணிராத.. பெரியவங்களை நான் எப்படியாச்சும் சமாளிச்சுக்குறேன்.. நீ வந்தனாகிட்ட பேசி அவ சம்மதத்தை வாங்கிரு.. அவ ஓகே தான் எனக்குத் தெரிஞ்சு.. இருந்தும் அவ வாயைத் திறந்து சொல்லிட்டா நம்ம அடுத்து தைரியமா மூவ் பண்ணலாம்” என சதீஷ் கூறவும்,
உண்மையில் வினய்க்கு, ‘தனக்காக தன்னை விட அதிகமாய் யோசித்து மெனக்கெடும்’ சதீஷை எண்ணி வியப்பாக இருந்தது.
வந்தனாவின் மூலம் அவன் வாழ்க்கையில் உண்மையான நண்பன் ஒருவன் கிடைத்து விட்டதாகத் தோன்ற,
“தேங்க் யூ டா” என அவனை அணைத்திருக்க,
“அடச்சீ!! தள்ளு தள்ளு!! என் மச்சினிச்சி கிட்ட பண்ண வேண்டியதை என்கிட்ட பண்ணிட்டு இருக்க?? தள்ளிப்போட பரதேசி!!” என அவன் அணைப்பில் இருந்து சதீஷ் துள்ளிக் கொண்டு வெளியே வர,
சந்தோஷ் அவர்களைக் கண்டு சத்தமாக சிரித்து விட்டான்.
அவர்களின் சப்தத்தில் பெண்களின் கவனமும் இங்கே திரும்ப, இவர்களின் பிணைப்பை எண்ணி அவர்களும் புன்னகைத்துக் கொள்ள, வந்தனா மட்டும், ‘ இவர்கள் எப்போது எப்படி இவ்வளவு நெருக்கமாகினர்??’ என ஆராய்ச்சியாக அவர்களைப் பார்த்திருந்தாள்.
“பார்த்து பார்த்து!!! பார்த்தே கரைச்சிடாத!!” என சங்கீதா கிண்டல் செய்யவும்,
சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்ட வந்தனா, “நான் ஒன்னும் பார்க்கலை!!” என சமாளிக்க,
“நான் தான் பார்த்தேனே!!” சங்கீதாவும் விடாமல் வாயாட,
“என்ன பார்த்த!?” என்றாள் வந்தனா பதட்டமாக,
“நீ என்ன பார்க்கலைன்னு நான் பார்த்தேன்” என்ற சங்கீதாவிற்கு அதற்குள் சதீஷிடம் இருந்து ஏதோ குறுஞ்செய்தி வர,
அதை எடுத்துப் பார்த்தவள், சதீஷைக் கேள்வியாகப் பார்க்க, அவனின் சமிஞ்யை புரிந்து கொண்டு, இளவரசியிடம் திரும்பி,
“சித்தி!! அவருக்கு இந்த கோவில் பின்னாடி இருக்க நம்ம பூர்வீக தோட்டம் எல்லாம் அவருக்கு சுத்திப் பார்க்கணுமாம்.. சந்தோஷும் ஊருக்குள்ள போய்ட்டான்.. அதுனால தனுவை அவர்கூட அனுப்பி வைக்குறீங்களா???” என தயக்கத்துடன் கேட்கவும்,
“அட இதுக்கு எதுக்கு இப்படி பம்முறவ??” என சங்கீதாவிடம் கடிந்து கொண்ட இளவரசி,
“தனு!! போ!! தோட்ட வீட்டுச் சாவி அம்மா பையில இருக்கு.. எடுத்துட்டு போய் மாமாக்கு காமிச்சிட்டு இரு.. இங்க பொங்கல் பொங்குனதும் நான் கூப்பிடுறேன்” என அவரே தனுவை அனுப்பி வைக்கவும்,
வந்தனாவிற்குத் தெளிவாகப் புரிந்து போனது. இவர்கள் தன்னை வைத்து ஏதோ விளையாடுகிறார்கள் என்று. ஆனால் எதற்கு??? என்பது அவளுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்க, அதற்கான பதிலாய் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் வினய்.
அவன் சதீஷுடனே இத்தனை நேரமும் சுற்றிக் கொண்டிருந்ததால், இப்போதும் அவனுடன் செல்வது இளவரசிக்குத் தவறாகப்படவில்லை.
மருதூரில் இவர்களின் குடும்பத்திற்கு பூர்வீகமாக சில நிலங்கள் இருக்க, அதைத் தோப்பாக மாற்றி, வந்தால் தங்கிக்கொள்ள சிறிதாய் வீடு ஒன்றையும் கட்டியிருந்தனர் நாட்டரசனும் அறிவழகனும். அது கோவிலுக்குப் பின் சிறு நடை தூரத்திலே அமைந்திருக்க, மூவருமாக மெதுவாய் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வீட்டின் அருகே வந்ததும் வந்தனா தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறக்க,
“உள்ள வாங்க மாமா!!” என சதீஷை அழைத்துவிட்டு,
அவனருகில் இருந்த வினய்யை பார்வையாலே உள்ளே வருமாறு பணிக்க,
விழிகளின் பாஷையை உள்வாங்கிக் கொண்டவனும் ஒரு மந்தாகாசப் புன்னகையுடன் உள்ளே நுழைந்தான்.
“சரி வந்தனா!! ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. நான் வெளியே வெய்ட் பண்றேன்” என சொல்லிவிட்டு சதீஷ் வெளியே சென்று விட,
“மாமா!! நில்லுங்க!! எங்க போறீங்க??” என்ற வந்தனாவின் குரல் காற்றில் கலந்தது.
இப்போது, இருவர் மட்டும் அந்த அறையில் தனித்திருக்க, இதுவரை அவனுடன் தனித்திருந்த பொழுதுகளில் வந்திராத வெட்கம் ஒன்று அவளை வந்து ஒட்டிக்கொள்ள, அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் அவஸ்தையுடன் திரும்பிக் கொண்டது பெண்மை இன்று.
அவளின் சிறு கண்ணசைவு கூட அவனுள் இதுவரை கண்டிராத பல மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க, சுகமாய் காதலின் இதத்தை சொட்டு சொட்டாய் ரசித்துக் கொண்டிருந்தான்.
“வதனா!!!”
‘அவளின் பெயரை இத்தனை வருடங்களில் இப்படி மென்மையாய் இதுவரை கேட்டிருக்கவில்லை’ என அவளுக்குத் தோன்றும் அளவிற்கு மயிலிறகால் இதமாய் வருடியதைப் போல் இருந்தது அவனின் குரல்.
அவன் குரலின் மென்மையாய் அவள் இன்பமாய் உள்வாங்கி அமைதியாய் அதை ரசித்துக் கொண்டிருக்க,
“வதனா!!!” இப்போது அவளின் செவிக்கு மிகவும் அருகில் கேட்டிருந்தது அவனின் குரல்.
அதில் பெண்மைக்கே இயல்பான கூச்சம் கொண்டு அவள் அனிச்சை செயலாய் இரண்டடி பின்னே நகர்ந்திருக்க,
அவனின் கண்களில் சுவாரசியம் கூட,
“என்கிட்ட என்ன பயமாம் என் வதனாக்கு???” அவள் மனதைக் கண்டுகொண்டதால் உரிமையும் அனுமதி கேட்காமல் இயல்பாய் வந்து ஒட்டிக் கொண்டது அவன் கேள்வியில்.
“உன் வதனாவா???” என அவளின் கண்களில் இவனிடம் கேள்வியெழுப்ப,
அதை சரியாய் மொழிபெயர்த்தவனும், “இல்லைன்னு சொல்லிடுவியா என்ன??” என்பதைப் போல் பதில் பார்வை பார்த்து வைத்தான்.
“டேய் எப்பா பார்வையாலேயே பேசிக்கிட்டது போதும்.. சீக்கிரம் சட்டுபுட்டுன்னு வாயைத் திறந்து பேசத் தொலைங்க டா.. எவனும் வந்துடப் போறான்” என வெளியே இருந்து எட்டிப்பார்த்தான் சதீஷ்.
“இன்னும் கிளம்பலையாடா நீ!??” என்பதைப் போல் வினய் முறைக்க,
“இந்தா ஓடிட்டேன்!!!” என சதீஷும் சிரிப்புடன் அவர்களுக்கு தனிமை கொடுத்து தோட்டத்து பக்கம் நகர்ந்து விட்டான்.
அவன் சென்று விட்டதை வினய் சென்று உறுதிபடுத்திக் கொண்டு வர,
“மாமாக்கு நீங்க சொந்தம்ன்னு சொன்னது பொய் தான??” என பதில் தெரிந்து கொண்டே கேள்வியாக அவள் நிற்க,
“இல்லையே!!! உன்னோட அக்கா ஹஸ்பண்ட் எனக்கு அண்ணா முறை தான?? சொந்தம் தானே அப்போ??” என அவன் புருவம் உயர்த்திக் கேட்கவும்,
“ஸ்மார்ட் தான்!!!” என மனதினுள் மெச்சிக் கொண்டவள்,
“எனக்கு சொந்தம்னா உங்களுக்கு எப்படி சொந்தமாகும்??” என அவள் வேண்டுமென்றே சீண்ட,
“வதனா!! போதுமே இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்… நான் உன்னை, உன்னோட காதலை கண்டுபிடிச்சிட்டேன்னு உனக்கும் தெரியும்.. இன்னும் முடியாது என்னால.. பிளீஸ் இப்போவாச்சும் உன் மனசுல என்ன இருக்குன்னு என்கிட்ட சொல்லிடேன்” என அவன் தவிப்புடன் கேட்கவும்,
இத்தனை நேரம் இலகுவாய் அவனுடன் உரையாடிய வந்தனாவிற்குள் சட்டென ஒரு தயக்கம்.
பிடித்தங்கள் பிரியங்களாய் எப்போதோ மாறியிருக்க, அதை பிரியமானவனிடம் ஒப்புக்கொள்ளத் தான் பெண்மைகள் எப்போதும் சண்டித்தனம் செய்கின்றன.
விழிகள் எழுதிய காதல் கவிதைகளை இதழ்கள் வாசிக்காமல், இன்னுமின்னும் அவனின் தவிப்பைக் கூட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
“வதனா பிளீஸ்!!!” என்பது போல் அவனின் கண்கள் சுருங்கி மொத்தமாய் அவளை சுருட்டிக் கொள்ளப் பார்க்க,
“எங்க அப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு!!!” என மறைமுகமாக அவளுக்கு இதில் சம்மதம் என்பதை அவனுக்கு வெளிப்படுத்தியே விட்டது பெண்மை இப்போது.
“ஏன் இப்படி???” என பரிதவிப்புடன் அவனை ஏறிட்டாள் வந்தனா.
அவளின் வாய்மொழியாக அவளின் காதலை அறிந்து கொள்ளாமல் விடப்போவதில்லை என அவன் உறுதியாக நிற்க,
மிகுந்த தயக்கத்திற்குப் பின், “பிடிச்சிருக்கு!!!” மெல்லிய குரலால் அவன் மனதில் மென் சாரலைத் தூவியிருந்தாள் வந்தனா.
காதலிப்பதை விட, காதலிக்கப் படுவதில் அதிக சுகம் உண்டு என்று எங்கோ படித்தது அவன் மனதில் வந்து போக, அவளின் இந்த ஒரு வார்த்தை அவனை மீண்டும் உயிர்பித்தது என்று சொன்னால் மிகையாகாது.
அந்த நொடியை அவன் உள்வாங்கி அதில் திளைத்திருக்க, இவனிடமிருந்து பதிலேதும் இல்லாததால் நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்ட வந்தனா, அங்கே அவன் கண்களில் கொள்ளை கொள்ளையாய் கொட்டிக் கிடந்த காதலைக் கண்டு பேச்சிழந்து நின்றுவிட்டாள்.
ஒரு பார்வையால் இத்தனை காதலை கடத்த முடியுமா??? இங்கே முடிகிறதே!!! வினய் தன் நெஞ்சில் நிரம்பிக் கிடந்த காதலை கண்களால் அவளுக்குள் கடத்தி, அவளுள் இன்னுமின்னும் ஆழமாய் தன்னை பதித்திருந்தான்.
இருவருக்குமான இடைவெளி இமைகளுக்கும், இதழ்களுக்கும் உள்ள தூரம் அளவே இருக்க, எப்போது?? எப்படி அவன் நெருங்கினான் என வந்தனா சுதாரிக்கும் முன்பே அவளின் மூச்சுக்காற்றை சுவாசித்து, அதைத் தன் ஜீவனில் நிரப்பினான்.
பெண்மையின் வாசம் ஒருவனை பித்தாக்குமா??? இதோ இங்கு அவன் நாசியைத் தீண்டிச் சென்ற அவனவளின் வாசத்தில், மயங்கி, கிறங்கி மதியிழந்து நின்று கொண்டிருந்தான் ஆண்மகன் அவன்.
அவனின் இந்த திடீர் நெருக்கமும், அவன் கண்களில் தெரிந்த கிறக்கமும் சிறிது நேரம் சென்ற பின்பே அவள் புத்தியில் உரைக்க, பதட்டத்துடன் அவனை விட்டு விலகி நின்றவள்,
“தள்ளி நின்னே பேசலாம்!!” என தயக்கத்துடன் கூற,
அவளின் நிலையை புரிந்து கொண்ட வினய்யும் புன்னகையுடன் இரண்டடி பின்னே நகர்ந்தவன், “இப்போ ஓகே??” என கேட்கவேறு செய்ய,
உண்மையில் அவனைக் கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படி இவனால் கோபமே படாமல் இருக்க முடிகின்றது?? என யோசித்தவளுக்கு, இதுவரை அவள் வாழ்க்கையில் கடந்து வந்த ஆண்களில் நிச்சயம் அவன் தனித்துத் தெரிந்தான்.
“உங்களுக்கு கோபமே வராதா???” என அவள் வியப்புடன் கேட்டே விட,
அதற்கும் அவனின் புன்னகை மில்லிமீட்டர் அளவில் இருந்து சென்டிமீட்டராக விரிய,
“இதுக்கெல்லாம கோபப்படுவாங்க??? லுக் வதனா!!! மோஸ்ட்லி நான் அதிகமா கோபப்பட மாட்டேன்.. அது என் நேச்சர்!!! பட் சுட்ச்சுவேஷன்னு ஒன்னு இருக்கே!! எல்லா நேரமும் சிரிச்சிட்டே இருந்தா சரியா இருக்காது இல்லையா??” என அவளிடமே அவன் கேள்வியெழுப்ப,
நிச்சயம் இது சங்கீதாவின் திருமணத்தில் நாட்டரசன் செய்து வைத்த அனர்த்த செயலைத் தான் அவன் குறிப்பிடுகிறான் என எண்ணி அவள் முகம் கசங்க தலை குனிய,
“பட் இதை உன் மைண்ட்ல நல்லா ஏத்திக்கோ வதனா!!! வினய்க்கு என்னைக்கும் அவன் வதனா மேல கோபமே வராது!! எந்த விஷயத்துக்கும்!!! என்னைக்கும் வராது!!” என அவன் அழுத்தம் திருத்தமாக உரைக்க,
அதைக் கேட்டவளுக்கு தான் இவ்வாறு உணர்கிறோம் என்றே புரியவில்லை.
இந்த உலகிலே நமக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, நம்மை ஏதோ பொக்கிஷத்தைப் பார்ப்பதைப் போல் ஒருவர் பார்த்துக்கொண்டால் எவ்வாறு இருக்கும்?? வந்தனாவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தாள்.
‘இத்தனை காதலுக்குத் தான் தகுதியானவள் தானா??’ என அவளுக்கே ஐயம் தோன்ற,
“என்னைய பத்தி எதுவுமே தெரியாம எப்படி இப்படி ஒரு லவ்??” என அவள் கேட்டே விட,
“எல்லாம் அறிஞ்சு, தெரிஞ்சுகிட்ட பின்னாடி வரது இல்லையே லவ்!!! நம்ம காதலை சூஸ் பண்ணலை வதனா… காதல் தான் நம்மளை சூஸ் பண்ணிருக்கு.. நீ தான் என்னோட டெஸ்டினின்னு கடவுளுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு.. அதான் அவர் உன்னை என் கண்ணுல காட்டி!! இதோ இங்க வரைக்கும் வர வச்சிருக்காரு!!! இவளோ தூரம் கொண்டு வந்த அவருக்கு.. நிச்சயம் எல்லா தடைகளையும் தாண்டி உன்னை என் கையில சேர்க்கவும் தெரியும்.. நான் நம்ம காதலை முழுசா நம்புறேன்!! அதே மாதிரி நீயும் நம்பு.. உன் பயம் அப்போ காணாமப் போய்டும்!!! நிச்சயம் நம்ம சேருவோம்” என அவன் காதல் தந்த நம்பிக்கையில் உறுதியுடன் கூற,
அவனின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் அவளுள்ளும் இறங்கிக் கொண்டிருக்க, பாவம் அதற்கு ஆயுள் குறைவு என்பதை இருவரும் அப்போது அறியவில்லை.
“இன்னும் பயமா இருக்கா என்ன???” என அவளின் அமைதியில் அவன் கேள்வியெழுப்ப,
“இல்லை” என்பதாய் இடவலமாய் தலையசைத்த வந்தனா,
“சரி!! லேட் ஆச்சு!! கிளம்பலாமா?? அப்பறம் அப்பா வந்திடுவாரு” என அவள் கேட்கவும்,
அவனிடம் ஒரு குபீர் புன்னகை!!!
அது நிச்சயம் அவளை கேலி செய்வதாய் தோன்ற, அவளுக்கு கோபம் லேசாய் துளிர் விட்ட செடியாய் எட்டிப்பார்த்தது.
“எதுக்கு இப்படி சிரிக்குறீங்க???” என அவள் கடுப்புடன் கேட்பது கூட அவனுக்குக் காதலாய்த் தோன்ற,
“அழகா இருக்க வதனா!!! ரொம்பவே!!!” என அவளை ரசித்தபடி ஆழ்ந்த குரலில் அவன் கூறவும், அவளிடம் மீண்டும் அமைதி.
“இஃப் யூ டோண்ட் மைண்ட்!! உன் கையை மட்டும் ஒரு பத்து செக்கெண்ட் பிடிச்சுக்கவா???” என அவளின் அனுமதி வேண்டி அவன் தவம் கிடக்க,
கூச்சம் வந்து தையலவளை ஒட்டிக்கொள்ள, மிகுந்த தயக்கத்துடன் தன் வலக்கரத்தை அவனின் முன்பு நீட்டினாள் வந்தனா.
தன் முன்னால் நீட்டப்பட்ட கரத்தை, கனவோ என நம்பாமல் பார்த்தவன் பின் காதலுடன் அவளின் கரத்தை தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்து தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான்.
வாழ்க்கையின் தேடல் நிறைவடைந்து சேருமிடம் சேர்ந்துவிட்ட நிம்மதி, அந்த ஒற்றை ஸ்பரிசத்தில் அவன் உணர, அவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை உணர்வுப் பிரவாகங்கள்.
தவம் செய்யாமல், அவன் கைகளை வந்து அடைந்த வரமாய் அவளைக் கண்டவன்,
“தேங்க் யூ வதனா!!!” என உணர்ந்து சொன்னவன், அவள் கைகளை தன் கண்ணில் ஒத்திக் கொள்ள, அதில் திரண்டிருந்த இரு சொட்டு ஆனந்தக் கண்ணீர் அவள் கைகளை அபிஷேகித்தது.
அவனின் காதலில் முழுதாய் கரைவதைப் போல் ஒரு மாயை வந்தனாவினுள்.
“காதலால் என்னைக் கொல்லாதே!!!” என அவனின் காதலில் மூழ்கி மூச்சுக்குத் தவித்திருந்த வந்தனாவை காப்பது போல், சொன்னபடியே பத்து வினாடிகளில் அவள் கைகளை விட்டிருந்தான்.
அவனின் ஒவ்வொரு செயலாலும் மேலும் மேலும் அவனை நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்ந்த வந்தனாவினுள், காதல் தித்திப்பாய் இறங்கி, அவள் மனதில் நங்கூரம் போட்டதைப் போல் அழுத்தமாகப் பதிந்தது.
“சரி போலாம்!!! இதுக்கு மேலயும் என்னால நல்லவனா இருக்க முடியும்னு தோணலை!!!” என லேசாய் வெட்கம் கலந்த புன்னகையுடன் அவன் தலை கோதிவிட்டு முன்னே நடக்க,
அவன் கூற்றில் பொதிந்திருந்த பொருளைக் கண்டுகொண்டு, வெட்கத்தில் குப்பென சிவந்துவிட்ட முகத்தை மறைக்க அரும்பாடு பட்டுக் கொண்டே மென்சிரிப்புடன் அவளும் அவனைத் தொடர்ந்து வெளியேற,
காதலே இவர்களைக் கண்டு காதலிக்கும்படி இருந்தது இருவரின் ஜோடிப் பொருத்தமும்.
இதயம் கொள்ளா மகிழ்வுடன் இருவரும் வெளியே வர, அங்கே பார்வையாலே அவர்களை எரித்துக் கொண்டு கடுங்கோபத்துடன் அவர்களை எதிர்கொண்டார் நாட்டரசன்!!!!
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.