வெற்றியின் கைகள் வெண்பாவின் தோளை அழுந்த பிடித்திருந்ததிலே தெரிந்தது, அவனது காதலின் உறுதி.
மெல்ல அவனை வெண்பா நிமிர்ந்து பார்க்க, அவனோ புன்னகையுடன் அவளை பார்த்தவன், சட்டென்று ஒற்றை கண்ணை சிமிட்டி விட, குப்பென்று வெட்கம் சூழ்ந்து கொண்டது அவளை.
வெட்கத்தில் அவசரமாக தலையை குனிந்து கொண்டவளுக்கு படப்படவென வந்தது.
அவனிடம் கேட்க வேண்டியது ஆயிரம் இருந்தது. தெரிந்து கொள்ள வேண்டியது ஆயிரம் இருந்தது. இருந்தாலும் இந்த நொடி, இந்த செய்கை அவளுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க செய்ய, கொஞ்சம் திணறி தான் போனாள் வெண்பா.
“டேய் போதும் டா, உன் பொண்டாட்டியை இறுக்கி பிடிச்சுட்டு நின்னது. கொஞ்சம் அவளை விட்டினா, நல்ல இருக்கும்” என விசாலாட்சி குரல் கொடுக்கும் வரை இருவரும் அப்படியே தான் இருந்தனர். அவர் குரல் கொடுத்ததும் பதறி விலகி கொண்டாள் வெண்பா. வெற்றிக்கு அந்த பதற்றம் எல்லாம் இல்லவே இல்லை.
“ம்மா, என் பொண்டாட்டியை நான் பிடிச்சுட்டு நிக்கிறேன். உங்களுக்கு என்ன வந்துச்சு?” என அன்னை புறம் திரும்பி பேசியவன், மீண்டும் தன் கையணைப்புகளுக்குள் கொண்டு வர, வெண்பாவோ அனைவரும் பார்க்கிறார்களே என்ற கூச்சத்தில்,
“விடுங்க மாமா” என நெளிந்தாள்.
அவளின் சங்கடத்தை உணர்ந்தவன், “என் பொண்டாட்டி சொல்றாளேனு தான் கையை எடுக்கிறேன்” என்றவன் கையை எடுத்து விட, வேகமாக அவனிடமிருந்து விலகி, விசாலாட்சியின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
“போ டா, ரொம்ப பண்ணாதே! போய் உன் ரூமில் ரெஸ்ட் எடு” என அவனை அனுப்பி வைக்க, அவனும் சிரித்து கொண்டே அவனறையை நோக்கி சென்றான்.
வெண்பாவின் புறம் திரும்பிய விசாலாட்சி,
“நீ மீனாட்சி ரூமில் போய் ரெஸ்ட் எடு. நான் உங்க வீட்டுக்கு ஆள் அனுப்பி உன் துணிமணி எல்லாம் எடுத்துட்டு வர சொல்றேன். வந்ததும் மாத்திக்கோ” என்றவர் மீனாட்சியிடம்,
“கூட்டிட்டு போ மீனாட்சி” என துணைக்கு மீனாட்சியையும் அனுப்பி வைத்தார்.
அதன் பின் சமையல் வேலைகளை வேக வேகமாக அவர் பார்க்க, அறைக்குள் இருந்த வெண்பா, மாற்று துணி வந்ததும் அதனை மாற்றி கொண்டு ஜன்னலின் வழியே வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
கழுத்தில் அவள் மனம் விரும்பியவன் கட்டிய தாலி மின்னி கொண்டிருந்தது.
நடந்து முடிந்தது கனவா? நனவா? உண்மையில் தனக்கு திருமணம் முடிந்து விட்டதா? அதுவும் தான் நேசித்த என் திரு மாமாவுடனா? நினைக்க நினைக்க பிரமிப்பாக இருந்தது வெண்பாவிற்கு. யோசனையிலேயே அவள் நேரம் கழிந்தது.
சமையலை முடித்த, விசாலாட்சி அனைவரையும் உணவுண்ண அழைத்தார். நாச்சியாரையும் அவர் அறைக்கே வந்து அழைக்க, அவரோ,
“எனக்கு ஒன்னும் தேவல. எல்லாமே என் விருப்பப்படியா நடக்குது? இப்போ சாப்பாடு ஒன்னு தான் குறைச்சல்”
என அவர் எரிந்து விழ, விசாலாட்சியோ,
“அத்தே!! மனுஷங்க விருப்பப்படி தான் எல்லாம் நடக்கணும்னா கடவுள் எதுக்கு இருக்கார். அவர் விருப்பப்படி தான் இந்த உலகமே இயங்குது. அதை புரிஞ்சுகோங்க”
“உங்க கோபத்தை சாப்பாடு மேலே காட்டாதீங்க. நிறைய மாத்திரை போடணும். நேரத்துக்கு சாப்பிட்டா தானே தெம்பு கிடைக்கும்.
நீங்க அங்க எங்க கூட வந்து சாப்பிட விருப்பமில்லைன்னா இங்கேயே கொடுத்தனுப்புறேன் சாப்பிடுங்க” என்றவர் சொன்னபடி அவருக்கு தேவையான உணவினை அவரது அறைக்கே கொடுத்தனுப்பினார்.
உணவுண்ண அனைவரும் வந்தமர, வெண்பா அமராது பரிமாற தயாராகினாள். விசாலாட்சியோ,
“நீ என்ன பண்ற? போய் வெற்றி பக்கத்தில் உட்கார். புது பொண்ணு வேலை செய்யலாமா?” என்றவர், அவள் மறுக்க மறுக்க அழைத்து வந்து வெற்றியின் பக்கத்தில் அமர வைத்தார்.
அனைவரையும் பார்த்தவள், அங்கு நாச்சியார் இல்லாது இருப்பதை கண்டு,
“அச்சச்சோ, என்ன அத்தே சொல்றீங்க? அம்மாச்சி நேரத்துக்கு சாப்பிடணும். இல்லைனா அவங்க உடம்புக்கு ஒத்துக்காது. இருங்க நான் போய் சாப்பிட கூப்பிட்டு வரேன்” என அவள் எழுந்து கொள்ள, வெற்றியும்,
“ம்மா நானும் கூட போய் கூப்பிட்டு வரேன். என் மேலே தான் அவங்களுக்கு கோபம். அதான் வராமல் இருக்காங்க. நான் கூப்பிட்டா தான் வருவாங்க”
“இல்ல அத்தே, அம்மாச்சி சாப்பிடாம, எப்படி சாப்பிறது?” என வெண்பா கேட்க,
“அவங்க சாப்பிடலைன்னு யார் சொன்னா? அவங்க இங்க தான் வந்து சாப்பிட மாட்டேன் சொன்னாங்க. அதனால் அவங்க ரூமுக்கே சாப்பாடு கொடுத்தனுப்பிட்டேன். அவங்க சாப்பிட்டு இருப்பாங்க. நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என விளக்கினார் விசாலாட்சி.
“இருந்தாலும், அவங்க சாப்பிட்டாங்களா? இல்லையானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்து சாப்பிறேன் அத்தே!” என்றவள், நாச்சியாரின் அறையை நோக்கி. செல்ல, விசாலாட்சியோ,
“டேய், என்னடா? உன் பொண்டாட்டி இப்படி இருக்கா? சுத்தம்” என தலையில் கைவைத்து கொள்ள, வெற்றியோ,
“அவ எப்பவுமே இப்படி தானே ம்மா. கல்யாணம் ஆனா மாறிடனுமா? இப்படியே இருக்கட்டும் விடுங்க” வெற்றி மனைவிக்கு பரிந்து பேச,
“நல்ல சேர்ந்தீங்க ஜோடி” என பெருமூச்சு விட்டார் விசாலாட்சி.
லேசாக திறந்திருந்த நாச்சியாரின் அறையை வெண்பா எட்டி பார்க்க, அவரோ விசாலாட்சி கொடுதனுப்பிய உணவினை உண்டு கொண்டிருந்தார்.
அதை பார்த்ததும் தான் வெண்பாவிற்கு நிம்மதியாக இருந்தது. உணவு மேஜைக்கு திரும்ப வந்தவள்,
“அம்மாச்சி சாப்பிட்டு இருக்காங்க” என கூற,
“உங்க அம்மாச்சி பத்தி உனக்கு தெரியல. ஆனால் என் மாமியாரை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவங்களாவது பட்டினியா இருக்கிறதாவது. இப்பயாச்சும் சாப்பிடு” என விசாலாட்சி கூற, அனைவரும் உணவினை உண்டனர்.
உண்டு முடித்ததும், வெற்றியும் திருநாவுகரசும் வேலை இருப்பதாக வெளியே கிளம்பி விட, வெண்பா மீண்டும் மீனாட்சியின் அறைக்கு வந்து முடங்கி கொண்டாள்.
சிறிது நேரம் படுத்தவள், கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.
மஞ்சள் நிலவன் அந்தி வானில் உறங்க சென்ற மாலை பொழுது, ஏகாந்தத்தை பரப்பி கொண்டிருந்தது. சரியாக அந்நேரம் தான் கண் விழித்து பார்த்தாள் வெண்பா. நேரத்தை பார்க்க, அதுவோ இரவை தொட்டு கொண்டிருக்க சற்றே பதற்றமாகி போனாள்.
வேக வேகமாக, முகம் கழுவி, தன்னை சுத்தப்படுத்தி கொண்டவள், அறையை விட்டு வெளியே வர, விசாலாட்சி அமர்ந்து பூ தொடுத்து கொண்டிருந்தார்.
“அத்தே, நேரமாகிடுச்சா? நல்லா தூங்கிட்டு இருக்கேன். நீங்களாவது என்னை எழுப்பி இருக்க கூடாது” என வெண்பா சங்கடப்பட,
“இருக்கட்டும், என்ன ஆகி போச்சு இப்போ? நல்லா தூங்கிட்டு இருக்க, அப்புறம் எப்படி உன்னை எழுப்பறது? அதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்” என அவளது பயத்தை குறைத்தார் விசாலாட்சி.
“அம்மாச்சி, இன்னும் வெளியே வரலையா?” என நாச்சியாரின் அறையை பார்த்து கேட்க,
“இல்ல, வரலைனா விடு. அதுக்கு ஏன் நீ வருத்தப்படுற? இது அவங்க வீடு எப்போ வராங்களோ, அப்போ வரட்டும்” என்றவர்,
“திரும்பு, இந்த பூவை வச்சுக்கோ” என அவர் தொடுத்த பூவை அவளுக்கு சூட்டினார்.
இரவு உணவினை இருவரும் சேர்ந்து தயார் செய்ய, அனைவரும் உண்டு முடிக்க, வெண்பா வெற்றிக்காக காத்து கொண்டிருந்தாள்.
“அவன் வர நேரமாகும்னா, நீ சாப்பிட்டு தூங்கு வெண்பா” என விசாலாட்சி அறிவுறுத்த,
“இல்ல அத்தே! மாமா வந்துரட்டும், அவங்க கூடவே சாப்பிட்டுகிறேன்” என்றவள் அங்கேயே அமர்ந்து கொண்டாள்.
“சரி வெண்பா, சாப்பிட்டு நீ மீனாட்சி கூட படுத்துக்கோ” என அவர் எதார்த்தமாக கூறிவிட்டு உறங்க சென்று விட, அனைவருமே அவரவர் அறைக்கு உறங்க சென்று விட்டனர்.
வெண்பா மட்டும் வெற்றிக்காக காத்திருக்க, ஊரே அடங்கிய பின்னரே அவன் இல்லம் வந்து சேர்ந்தான்.
உள்ளே நுழைந்ததும் அவன் கண்டது சாப்பாட்டு மேஜையில் அழகு பதுமையாய் தலை சாய்த்து உறங்கி கொண்டிருந்த மனைவியை தான்.
அவளை கண்டதும் சட்டென்று பூத்த புன்னகையோடு அவளருகே சென்றவன், அவள் முகத்தின் அருகே தன் முகத்தை கொண்டு வந்து, “தமிழ்” என மெல்லிய குரலில் அழைக்க, அதில் திடுக்கிட்டு கண் விழித்தாள் வெண்பா.
“மாமா.., எப்போ வந்தீங்க? ரொம்ப நேரமாச்சா? முழிச்சுட்டு தான் இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல. உட்காருங்க சாப்பிடலாம்” என அவள் படப்படக்க,
“இரு.., இரு.., எதுக்கு இப்படி பதருற? நான் இப்போ தான் வந்தேன். நீ ஏன் இவ்வளவு நேரம் எனக்காக காத்திட்டு இருக்க? சாப்பிட்டு நேரத்துக்கு தூங்க வேண்டியது தானே!” என அவன் செல்லமாக கண்டிக்க,
“நீங்க சாப்பிடீங்களோ? இல்லையோனு தெரியாம எப்படி நான் தூங்கறது? அதான் உங்களுக்காக காத்துட்டு இருந்தான்” என்றாள்.
“சரி உட்கார் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றதும், அவளோ வேகமாக அவனுக்கு உணவினை பரிமாறினாள்.
“இதுக்கு அப்புறம் சாப்பிடனும்னா காலையில் தான் சாப்பிட முடியும். நேரம் என்ன ஆகுதுன்னு பார்த்தியா?” என கண்டித்தவன், அவள் கைப்பிடித்து இழுத்து தன்னருகே அமர்த்தி கொண்டான்.
“இந்தா சாப்பிடு” என அவனே அவளுக்கு ஊட்டி விட, அவளோ கூச்சத்தில்,
“இல்ல மாமா, நீங்க சாப்பிடுங்க” என மறுத்தாள்.
“இப்போ சாப்பிட போறீயா? இல்லையா?” என வெற்றி அதட்ட,
“அதுகில்லை மாமா, யாராச்சும் பார்த்தா, தப்பா நினைக்க போறாங்க. நீங்க சாப்பிடுங்க” என மீண்டும் அவள் மறுக்க,
“இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு? நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட போல,”
என்றவன், அவளின் அருகே நெருக்கமாக சென்று,
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதுவும் இன்னைக்கு தான். நியாபகம் இருக்கா?” என்றதும் வெட்கத்தில் அவளோ தலைகுனிந்து கொண்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.