மனைவியின் வாசமும், அவளது மேனியை அணைத்து பிடித்திருந்ததில் உண்டான உணர்வுகளும், அவனை சரசத்திற்கு தூபம் போட்டது. ஏற்கனவே போதையின் பிடியில் சிக்கியிருந்தவன், மெல்ல தன்வசமிழக்க ஆரம்பித்தான்.
தாம்பத்தியத்திற்காக மனதிற்குள்ளேயே, இத்தனை நாட்கள் ஏங்கி தவித்திருந்தவனுக்கு, அவளுடனான இந்த உரசல், பூட்டி வைத்திருந்த ஆசைக்கு அடிகோலிட்டது போலிருந்தது.
உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில், இன்ப வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்க துடித்தவன், ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி மனைவியிடம் எல்லை மீற ஆரம்பித்தான்.
பானு அவனது கைகளை விலக்கியும், அவனை நகர்த்தியும் பார்த்தவள், அவனது இரும்பு பிடியிலிருந்து மீள முடியாமல், கணவனிடம் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தாள்.
அங்கு இருவருக்குமிடையே “சத்தமில்லாமல் ஊடலுடன் கூடிய கூடல் நடந்துமுடிந்தது”.
காலையில் வெகு நேரம் சென்று எழுந்தமர்ந்தவனுக்கு சில நொடிகளுக்கு பிறகே, நேற்று நடந்தது எல்லாம் நினைவில் வந்தது. “ஐ..யோ….” என தலையில் கையை வைத்து எழுந்து அமர்ந்தான்.
ஏற்கனவே “சாமியாடுவா…….., இன்னைக்கு என்ன செய்ய போறாளோ…..? ராட்சஷி”, என் டிரீம்…. எல்லாம் ஒன்னுமில்லாம ஆக்கிட்டாளே…….
எப்படியெல்லாம் நடக்கனும்னு…, பிளான் பண்ணி வச்சிருந்தேன். எல்லாத்தையும் கொலாப்ஸ் பண்ணிட்டாளே………………. என மனதில் கறுவிக் கொண்டான்.
எழுந்து சத்தமில்லாமல் குளிக்க சென்றவனுக்கு தண்ணீர் மேலே பட்டதும், நேற்றைய கூடல் பற்றின நினைவுகள் எழுந்து, உடலிலும் மனதிலும் சுகமான பரவசத்தை தந்து, இன்பத்தைக் கூட்டியது நாடி நரம்புகள் எல்லாம்.
குளித்து முடித்து வெளியே வந்து பார்த்தவனுக்கு, வெற்று வீடே காட்சியளித்தது. கிட்சன் சென்று பார்த்தான். அங்கே சமைத்ததற்கான எந்த அறிகுறியும்… தெரியவில்லை.
அவனுக்கும் நேரமானதால், வேலைக்கு கிளம்பி சென்றான், இரவு வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று.
பேங்க் சென்ற பானுக்கு, வேலையில் கவனம் செலுத்தமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். சங்கரின் அடாவடி செயலில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. கணவனுடான தாம்பத்தியத்தை அவளும் ஏற்கதான் விரும்பினாள்.
அவள் மனதில் நினைத்திருந்ததற்கும், நேற்று இரவு நடந்திருந்ததற்கும் நிறைய முரண்பாடு இருந்தது. சங்கர் அவளை பலவந்தப்படுத்தியதை எண்ணி உள்ளுக்குள் வேதனை மண்டியது.
இடைப்பட்ட நாட்களில் அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த நல்லிணக்கத்தால், வாழ்க்கையே வசந்தமாக மாறியிருந்தது இருவருக்கும்.
அது எல்லாம் இந்த ஒரே இரவில் கனவாக காணாமல் போயிருந்தது அவளுக்கு.
இரவு அவன் பிடி விலகியதும், நகர்ந்து படுத்தவளுக்கு, எதிலிருந்தோ ஏமாந்து தோற்றுவிட்டதைப் போல உணர்வு எழுந்தது. வெகு நேரம் கண்ணீர் சிந்தியபடி படுத்திருந்தவள், விடியும் தருவாயில்தான் உறங்கியிருந்தாள்.
காலை எப்பவும் எழுந்திருக்கும் நேரத்தைவிட லேட்டாகவே எழுந்தவள், அருகில் கணவன் இன்னும் அசையாமல் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
அவனையே கண் எடுக்காமல் பார்த்திருந்தவள் மெல்ல எழுந்து குளித்து கிட்சனிற்கு சென்றாள். அங்கே சென்றவளுக்கு எந்த வேலையும் செய்யும் மனமில்லாததால் டீக் கூட போடாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வயிற்றை நிரப்பியவள், வேலைக்கு கிளம்பி வந்திருந்தாள்.
தரணி, பானு சாப்பிடப் போகலையா…….?
அப்பொழுது தான் தன்னைச் சுற்றி திரும்பி பார்த்தாள். எல்லோரும் உணவருந்த சென்றிருப்பது தெரிந்தது.
“ஹம்ம்…… சாப்பிடனும் ஸார்”.
“என்னாச்சு ஏன் டல்லாயிருக்கீங்க………….., உடம்புக்கு முடியலையா…………?”
“லைட்டா தலைவலி………” என எழுந்தாள்.
“சாப்பாடு எங்க…..? கொண்டு வரலையா……………?”
“இல்ல ஸார், கடையிலதான் …… வாங்கிட்டு வர சொல்லனும்…..”
“வாங்க,,,,,,,, நான் வெளியதான் சாப்பிட போறேன்……, சாப்பிட்டு வரலாம்”.
“இல்ல, இருக்கட்டும் ஸார்…………., நான் யாரையாவது வாங்கிட்டு வர சொல்லி இங்கேயே சாப்பிட்டுக்கறேன்”.
“சும்மா…… வாங்க.., பக்கத்துல தான் ஹோட்டல் இருக்கு. நடந்தே போயிடலாம்…” என அவளை அழைத்துச் சென்றான். அவளுக்கும் பசி அதிகமாக இருந்ததால், அதற்கு மேல் யோசிக்காமல் அவனுடன் நடந்தாள்.
ஹோட்டலை அடைந்ததும், இருவருக்கும் டோக்கன் வாங்கிக் கொண்டு வந்த தரணி, இருவரும் அமருவதற்காக இடம் பார்த்து அவளை அழைத்துச் சென்று அமர்ந்தான்.
“ஸாரி… நீங்க கேட்ட வெஜ் புலாவ் இல்ல, மீல்ஸ்தான் இருந்தது. உங்களை கேட்காமலேயே டோக்கன் வாங்கிட்டு வந்துட்டேன்”.
கணவனைப் பற்றிய பேச்சு வந்ததும், அவள் முகம் மாறியது. அது எதிரில் அமர்ந்திருந்த தரணியின் கண்களிலிருந்தும் தப்பவில்லை. எப்போதும் கணவனைப் பற்றிய பேச்சு வரும்போது அவளது முகத்தில் வரும் உற்சாகமும்… பொலிவும்…. இன்று மிஸ்ஸிங்.
அதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்காமல் பேச்சை மாற்றிவிட்டான். சில நிமிடங்களிலேயே உணவும் வந்ததால் சாப்பிட்டு முடித்து வேலைக்கு திரும்பினர் இருவரும்.
அன்று இரவு வந்து மனைவியை சமாதானப்படுத்த எண்ணியிருந்த சங்கருக்கு நேரத்துடன் வீட்டிற்கு வர முடியவில்லை. அவன் வருவதற்குள் பானு உறங்கியிருந்தாள்.
காலையில் எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மனைவியைத் தேடி வந்தான். பானு கிட்சனில் நின்று சமைத்துக் கொண்டிருந்தாள். கணவன் வந்து நின்றதை உணர்ந்தும், அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.
சங்கர் மனைவியிடம் பேச முயன்றும், அவளுக்கு அவனது பேச்சு காதில் விழுந்தாலும், கண்டு கொள்ளாமல் நின்றிருந்தாள். மனைவியை கெஞ்சி, கொஞ்சி, மன்னிப்பு கேட்டு என என்ன முயன்றும் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
பேசிப் பார்த்தவன், அவளது பாராமுகத்தைக் கண்டு அவளது கைகளைப் பிடித்து, தன் முகம் பார்க்கும்படி திருப்பினான். அவனது கையை விலக்கியவள், அங்கிருந்து ஹாலுக்கு வந்து நின்று கொண்டாள்.
அவள் பின்னாலேயே வந்து, அவளிடம் சமாதானம் பேச முயன்றும், அவள் கண்டு கொள்ளாமல் பாத்ரூம் சென்று புகுந்து கொண்டாள் குளிப்பதற்காக.
அவனுக்கும் கோவம் வந்தது அவளது பிடிவாதத்தில். “தப்புன்னு இறங்கி வந்து மன்னிப்பு கேட்டு, சமாதானம் பேசினாலும், முகத்தை திருப்பிட்டு போறா………….. போடி…… ரொம்ப தான் பிகு பண்ற…….” என அவனும் விட்டு விட்டான் ஏதும் பேசாமல்.
கணவன் மனைவிக்கான பனிப்போர் நீண்டு கொண்டே இருந்தது முடிவில்லாமல்.
பூர்ணிக்கு பள்ளியில் நான்கு நாட்கள் சேர்ந்தாற் போல விடுமுறை வந்தது. அதில் அவள் எங்காவது கணவனுடன் வெளியூர் சென்று வருவதற்காக பிளான் செய்து மதுவிடம் பேசினாள்.
மதுவுக்கும் மனதில் ஆசைதான் மனைவியுடன் எங்காவது சென்று வரவேண்டும் என்று. திருமணமாகி இத்தனை நாட்களில் ஹனிமூன் கூட எங்கும் சென்று வரவில்லை.
இருந்தும் மனைவியிடம் ஏதும் வார்த்தையை விடாமல் பார்க்கலாம் என்றிருந்தான்.
பூர்ணி, பார்க்கலாம் எல்லாம் இல்ல. நாம கண்டிப்பா…… போறோம் என அவனை வற்புறுத்தினாள். இதை விட்டா எனக்கு சான்ஸ் இல்ல. இந்த லீவ்லயே நாம எங்கயாவது போயிட்டு வரலாம். சரின்னு சொல்லுங்க………
முன்னாடியே பிளான் பண்ணாதான், போக வர டிக்கெட் ரிசர்வ் பண்ண ஈசியா இருக்கும். அதுவுமில்லாம அங்க தங்கறதுக்கு ரெசார்டும் புக் பண்ணனும்.
மனைவியின் ஆசையை பார்த்தவன், மறுக்க முடியாமல் சரி என தலையசைத்துவிட்டான்.
அந்த வார இறுதியில் பூர்ணியும் மதுவும் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்த குடகு (கூர்க்) மாவட்டத்திற்கு கிளம்பினார்கள்.
மைசூர் வரை ட்ரெயினில் வந்தவர்கள், அங்கிருந்து, கார் எடுத்துகொண்டு கூர்க் நோக்கி பயணித்தனர். கணவனுடனான இந்த பயணத்தை மிகவும் என்ஜாய் செய்தாள் பூர்ணி. அதுவும் முதன்முதலாக அவனுடன் தனியாக வந்தது, அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
அவளது மகிழ்ச்சியை பார்த்தவனுக்கு, மனைவியினுடைய ஏக்கமும் ஆசையும் புரிந்தது. தனக்கான அவள் ஏக்கத்தை அறிந்தவன், இனி அவளுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும்… என மனதில் முடிவு செய்து கொண்டான்.
வெளியே மழை அடர்ந்து பெய்யாமல், சிலுசிலுவென தூரலாக பெய்து கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் பச்சை ஆடை விரித்தது போல பசுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது.
தூரத்தில் தெரிந்த மேற்குதொடர்ச்சி மலைமுகடுகளின் மேல் பனிபடலம் சூழ்ந்திருந்தது. சாலையின் இரண்டு பக்கத்திலும் அடர்ந்த வனம். தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரங்கள் பரவலாக காணப்பட்டது. மலையேறும் வழியிலேயே காபி தோட்டத்தை பார்க்க முடிந்தது. ஏலக்காய் மிளகு போன்றவை பயிரிடப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.
கார் கண்ணாடியை இறக்கிவிட்டாள். குப்பென்று குளிர்ந்த காற்று முகத்தில் வந்து மோதியது. மழையுடன் கூடிய மண்வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள். அவளது செயலில் சிரித்த மதுவைப் பார்த்தவள், அவனது கையை தனது கையுடன் கோர்த்துகொண்டு, “மழை பெய்யறதாலயோ என்னமோ… மரத்தோட அந்த பசுமையான வாசம் வருதுல்ல….. நல்லா ஆழமா மூச்சை இழுத்து பாருங்களேன்…. நல்லாயிருக்கில்ல… என்றாள்.
ஆமாம்… என சிரித்துகொண்டே, அவளது நெற்றியோடு முட்டியவன், அவளது தோளில் கையை போட்டு அணைவாக பிடித்துகொண்டான்.
அவர்கள் தங்கவிருக்கும் ஹோம் ஸ்டேவுக்கு வந்தவுடன், அதைச்சுற்றயிருந்த இயற்கையின் வனப்பைப் பார்த்து ஆச்சர்யமாக கண்களை விரித்தாள் பூர்ணிமா. “இந்த இடம் சூப்பராயிருக்குல்ல” என்றாள் மதுவைப் பார்த்து.
“ஹ்ம்ம்…. நல்லாயிருக்கு……”
அவர்கள் தங்குவதற்காக புக் செய்திருந்த “ஹோம் ஸ்டே” இயற்கை சூழலில் மலைகளுக்கு இடையே அமைந்திருந்தது. அதனைச் சுற்றி காஃப்பி தோட்டமும், மிளகு கொடியுமாக இருந்தது.
பூர்ணியின் உடன் வேலை செய்யும் ஆசிரியை ஒருவர், இங்கு டூர் வந்து சென்றதைப் பற்றி பள்ளியில் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டவளுக்கு தாங்களும் இங்கேயே செல்லாம் என முடிவு செய்து, அவரிடமே, எப்படி சென்று வந்தார்கள்…? எங்கு தங்கினார்கள்…? என எல்லாம் கேட்டு, அவர் மூலமாகவே புக் செய்திருந்தாள்.
வந்ததுமே குளித்துவிட்டு சுற்றி பார்க்க வெளியே கிளம்பிவிட்டார்கள். மலைகளுக்கு இடையே பச்சை பசேல் என இயற்கை வனமும், அருவியின் ஓசையும், ஆங்காங்கே சிறு சிறு ஒடைகளும் என பார்க்கவே கண்களுக்கு அற்புதமாக, மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
அதுவும் மலைகளின் முகடுகளில் உரசிச் சென்ற பனி மூட்டத்தையும், மேகத்தையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. அற்புதமான காட்சிகளாக மயக்கியது மனதை.
பகல் முழுவதும் வெளியில் சுற்றுபவர்கள் இரவில் அறைக்கு திரும்பி விடுவர்.
அன்று இரவு அங்கு தங்கியிருந்தவர்களுக்காக “கேம்ப் பைர்” போட்டு அதன் அருகேயே டின்னரும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இவர்களைப்போல், அங்கு டூர் வந்து தங்கியிருந்த காலேஜ் ஸ்டூடன்ஸ், பாட்டு… டேன்ஸ்… என கேம்ப் பையரை சுத்தி ஆட்டம் போட்டு கொண்டு, ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயே உட்கார்ந்து, அதையெல்லாம் பார்த்து ரசித்து கொண்டிருந்த மதுவும் பூர்ணியும், இரவு டின்னரையும் முடித்து உறங்கச் சென்றனர்.
பூர்ணி, “அதுக்குள்ள இரண்டு நாள் போனதே தெரியல” என்றாள் பெருமூச்சுவிட்டு.
அவளைப் பார்த்து திரும்பி பார்த்து படுத்தவன், “ஹம்ம்…….., அதுக்காக இங்கயேவா இருக்க முடியும். இனி நாம அடிக்கடி இல்லனாலும் இதுமாதிரி ட்ரிப் வரலாம் டா……” என்றான்.
“நிஜமாவா…….. , கூட்டிட்டு வருவீங்களா……………..? நான் இந்த மாதிரி வெளிய ட்ரிப் எல்லாம் போனதே இல்ல……”
“படிக்கற காலத்திலிருந்தே போகனும்னு ஆசை. ஸ்கூல் டூர்க்கு கூட பெரிம்மா அலோவ் பண்ணமாட்டாங்க எங்கள யாரையும்”.
“இங்க நல்லா பேசுவீங்க…. ஊருக்கு போனதும், வேலையே கதின்னு உட்காந்துருவீங்க……. குடும்பம், பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறது எல்லாம் மறந்துடும் உங்களுக்கு” என அலுத்துகொண்டாள்.
சிரித்துக் கொண்டே அவளை இழுத்து நெஞ்சில் படுக்க வைத்து கொண்டவன், “எப்பப்பாரு இதையே சொல்லிட்டிருக்க……” ஹம்ம்………
“என் தொழிலைப்பத்தி தெரிஞ்சிதான என்னை கல்யாணம் பண்ண…….” என்றான்.
தொழில் செய்றீங்கன்னு தெரியும். “தொழில் செய்ற எல்லாரும் இப்படியா… அங்கயே கதின்னு இருக்காங்க….. கொஞ்சம் வீட்டையும் பார்க்கலாமில்ல…”
“என்ன பார்க்கனும் சொல்லு……? இன்னிக்கு இதை பேசி பைசல் பண்ணிடுவோம்..”
கோச்சுக்கிட்டானோ என அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து நிம்மதியாக மூச்சு விட்டாள்.
“ஏன் அப்படி பார்க்கற……..? நான் கோவமா கேட்டகிறேன்னு பார்க்கிறயா…….?”
ஆமாம், என தலையசைத்தவள், “உங்களோட கோவத்தை அன்னைக்கு பார்த்ததிலிருந்து, எனக்கு பயம்தான்……………..”
என்றைக்கு சொல்கிறாள்…..? என யோசித்தான்.
“அது…. அன்னைக்கு செந்திலை போட்டு புரட்டி எடுத்தீங்களே, அதைதான் சொல்றேன்……………”
“எதுக்கு எதை சேர்க்கற…………….? அதுக்கு கோவப்படாம இருந்தா மனுஷனே இல்லை. அதுக்காக எல்லார்கிட்டையும் அப்படி பிஹேவ் பண்ணுவேனா…….”
“அது எனக்கும் புரியுது. சில சமயம் என்னையறியாமலே அந்த ஞாபகம் வந்துடுது. நான் என்ன செய்யட்டும்…?”
திருமணத்திற்கு முன்பு நடந்த அந்த நிகழ்விற்கு பிறகு அவள் தன்னை பார்க்காமல், பேசாமல் தவிர்த்ததிற்கான காரணம் புரிந்தது அவனுக்கு. “அப்ப பயந்திட்டு தான் அதுக்கப்புறம் என்னைப் பார்க்காம, பேசாம இருந்தியா நீ…………. ” என காதைப் பிடித்து திருகினான்.
தன்னை கண்டு கொண்டதை எண்ணி அசடு வழிந்தவள், ஹ்ம்ம்……………. “நான் பயந்த சுபாவம். நீங்க வேற அவனைப் போட்டு மாட்டை அடிக்கற மாதிரி அடிச்சதைப் பார்த்ததும் மூச்சே நின்னுடுச்சு”.
இது எல்லாம் சினிமாலே பார்த்தாலே பயத்தில கண்ணையும் காதையும் மூடிப்பேன். நேர்லயே, அதுவும் நீங்க அடிச்சதைப் பார்த்ததும், எனக்கு ரொம்ப ஷாக்……..
ஹா…………. ஹா……………. இது எனக்கு தெரியாம போச்சே………. என சிரித்தான்.
உன்னை பார்த்தா பயப்படுற மாதிரியா இருக்கு. என்னை தான் பயப்பட வைக்கற நீ…… என்று நெற்றியில் முட்டினான். எல்லார்கிட்டயும் பதுவிசா நல்லவ மாதிரி நடந்துக்கற. என்னைத் தான் ஏய்க்கற……………..
“நீங்களும் மத்தவங்களும் ஒன்னா…………………..?”
“அப்ப ஒன்னுல்லையா………..”
“ம்கூம், நீங்க எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்தான்……………”
“அப்படி என்ன ஸ்பெஷல்டா…. நான் உனக்கு…..?
நகர்ந்து படுத்தவளின் அருகே அவனும் நகர்ந்து நெருங்கி, அணைவாக படுத்துக் கொண்டான்.
“இப்படி படுத்தா எப்படி பேசறது….?”
“எனக்கு இப்படி படுத்திட்டு கேட்கறதுக்கு தான் பிடிக்குது. இப்படியே சொல்லு” என்றான் அவளது மூக்கோடு அவனது மூக்கால் உரசிக்கொண்டே.
தொடரும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.