ஐந்து கரத்தினை யானை முகத்தினை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
கண்மூடி கைகூப்பி பூஜை அறையில் நின்று வினாயகர் துதி சொல்லி பிரார்த்தித்து கொண்டிருந்தாள் பூர்ணிமா.
பூர்ணி ரெடியாகிட்டியாடா…….., சீக்கிரம், அவங்க எல்லாரும் வர நேரம் ஆகிடுச்சிம்மா…… என்றார் மாதவி.
இதோ ரெடியாகிட்டே…. இருக்கேன் க்கா ……
மாதவி கையிலிருந்த பூப்பந்தை பூர்ணிமாவிடம் கொடுத்து, ‘’இந்தா இதை தலையில வைச்சுக்கோ……”
பூர்ணிமா, க்கா….., இவ்வளவா……. என சினுங்கினாள்.
எப்பயும் வைக்கற மாதிரி கொஞ்சமா வைக்காம, தலை நிறைய வைச்சுக்கோடா……., அப்ப தான் பார்க்க அழகாயிருக்கும். உன் முடிக்கு இந்த பூக்கூட வைக்கலன்னா எப்படி? எனக்கு வேலையிருக்கு சீக்கிரம் ரெடியாகு, என பூவை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு வெளியே சென்றாள் மாதவி.
செல்லும் மாதவியையே கண் எடுக்காது பார்த்திருந்தாள் பூர்ணிமா. இவங்க மட்டும் இல்லைனா, என் நிலைமை என்னாகியிருக்கும்…, என கண் கலங்கியவள், ஏதோ… எப்பவோ…, என் அப்பா அம்மா பண்ண புண்ணியம்… என நினைத்து, நீண்ட பெரு மூச்சொன்றை விட்டவள், தயாராக ஆரம்பித்தாள்.
இன்று பூர்ணிமாவுக்கு நிச்சயதார்த்தம். ஏற்கனவே பெண் பார்த்து, ஜாதகம் பொருத்தம் எல்லாம் பார்த்து, பேசி முடிவு செய்திருந்தார்கள். மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான். இவர்களை விட வசதி குறைவுதான். மாதவியின் பிடிவாதத்தில் இந்த கல்யாண ஏற்பாடு நடக்கிறது.
மாதவியின் தாய் செல்வி கூட, ‘’ஏன்டி… அவசரப்படற மாப்பிள்ளைக்கு சொந்த வீடு கூட இல்ல, இன்னும் நல்ல இடமா பார்க்கலாமே… என்றார்.’’
மாதவிதான், இல்லம்மா…… மாப்பிள்ளை பார்க்க நல்லாயிருக்கார், கவர்மென்ட் வேலை, ஒரே தங்கச்சி தான், அதையும் கட்டிக் குடுத்திட்டாங்க, பிக்கல் பிடுங்கல் இல்ல.
வீடு அவங்களுக்கு இல்லன்னா என்ன…? இவளுக்கு தான் இருக்கே. நீ எதுவும் தடை சொல்லாத, என மாதவி அவளுடைய அம்மாவின் வாயை அடைத்திருந்தாள்.
மாதவியின் தாய் செல்வியின் உடன்பிறந்த தங்கையின் மகள் பூர்ணிமா. பூர்ணிமா பிறந்த சில ஆண்டுகளிலேயே அவளது தாய் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அவர் இறந்த சில வருடங்களிலேயே மனைவியை தொடர்ந்து, அவளது தந்தையும் இறைவனடி சேர்ந்திருந்தார்.
இது எல்லாம் பூர்ணிமா ஐந்து வயது நிரம்புவதற்குள்ளாகவே நடந்து முடிந்திருந்தது. பூர்ணிமாவைச் சுற்றி இருந்த சொந்தங்கள் யாரும் அவளை பாதுகாக்கவோ, எடுத்து வளர்க்கவோ முன் வரவில்லை.
செல்வி தங்கையின் மகள் நிர்கதியற்று நிற்பதைப் பார்க்க முடியாமல், அவரே அவளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவரது கணவரும் அதற்கு பெரிதாக எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதது அவருக்கு வசதியாகப் போனது.
பூர்ணிமாவின் தந்தை நல்ல வசதியான பின்புலத்தை உடையவர். வீட்டினர் அவருக்காக பார்த்த பெண்களில் ஒருத்தர் தான் பூர்ணிமாவின் தாய். பெண் அழகாக இருந்தாலும், தங்களுக்கு நிகரான வசதியில்லாத காரணத்தால் தயங்கினர் அவரது வீட்டில்.
ஆனால் பூர்ணிமாவின் தந்தைக்கு, பூர்ணிமாவின் தாயைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. அவரின் விருப்பத்தின் பேரில் வீட்டினரும் அவரையே திருமணம் செய்து வைத்திருந்தனர். திருமணத்திற்கு பின்னான மணவாழ்வும் இருவருக்கும், இன்பமாகவே… சென்றது.
பூர்ணிமாவின் தந்தைதான் அவர்களது வீட்டின் கடைசி பிள்ளை என்பதால், அவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரவருக்கான சொத்தினையும், தொழில்களையும் முறையாகப் பிரித்து கொடுத்திருந்தனர்.
பூர்ணிமாவின் தந்தைக்கு ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் உண்டு. அவர்கள் இருவரும் வளமையான இடத்தில் மணமுடித்திருந்ததால் இவருடைய திருமணத்திற்குப் பிறகு இவருடன் பெரிதாக எந்த ஒட்டுதலும், உறவும் வைத்துக் கொள்ள விரும்பியதில்லை.
சொத்துக்களையும், தொழிலையும் பிரித்திருந்ததால் அது அவர்களுக்கு இன்னும் சௌகரியமாகப் போனது. பூர்ணிமாவின் தந்தையும் அதையெல்லாம் கண்டுகொண்டதில்லை. அவர்கள் இணக்கம் பாராட்டாவிட்டாலும், இவர் வீட்டினருடன் எப்பொழுதும் போலவே பாசமாகவே இருந்தார்.
மனைவி தாய்மை அடைந்ததும், அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். அவர்களது செல்ல மகள் பூர்ணிமா பிறந்த பிறகு மனைவிக்கு ஒன்று மாற்றி ஒன்று என்று, ஏதாவது உடலுக்கு வந்தவாறே இருந்ததில் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்தே ஓய்ந்திருந்தார்.
ஒரு பக்கம் பால் குடிக்கும் பச்சிளங் குழந்தை, இன்னொரு பக்கம் மனைவியின் பிணி என அவரை அல்லல்பட வைத்திதிருந்தது. இறுதி வரை மனைவியின் மீதிருக்கும் அன்பினால் எப்படியாவது அவரைக் காப்பாற்றி விடலாம் எனப் போராடியவரை, ஏமாற்றி சென்றிருந்தார் அவரது மனைவி.
மனைவியின் மறைவு அவரை நிலைகுலையச் செய்திருந்தது. ஆதரவற்று கைக் குழந்தையுடன் அல்லாடிக் கொண்டிருந்தவரை பார்த்து…, அவரது உறவுகள் ஆறுதலாக இருக்கவில்லை என்றாலும், அவரைக் குறை சொல்லியே வேதனைப்படச் செய்தனர்.
‘’நாங்க வேணாம்னு சொல்லியும் விரும்பிக் கட்டிக்கிட்டல்ல அனுபவி’’ என்றிருந்தது அவர்களது பேச்சும், நடத்தையும். மனைவியின் நினைவிலேயே மகளைகூட எண்ணாமல்…, மனைவி இறந்த ஒரு சில வருடத்திற்குள்ளாகவே அவரும் இறைவனடி சேரந்திருந்தார்.
தந்தையின் மறைவிற்குப் பிறகு பூர்ணிமாவின் தந்தை வீட்டு சொந்தங்கள் யாரும் அவளை ஏற்றுக் கொள்ள முன்வராததால், வேறு வழியின்றி செல்வி தங்கையின் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரது குடும்பத்தாரும் இதற்கு தடையாக நின்றனர்.
ஆனால் அவள் மூலமாக வரும் வருவாயைக் கணக்கிட்டு ஒன்றும் சொல்லமுடியாமல் அமைதியாகினர். ஆம், பூர்ணிமாவின் தந்தை விட்டுச் சென்றிருந்த சொத்திலிருந்து கணிசமான வருமானம் வந்து கொண்டிருந்ததால், செல்விக்கும் அவளை வளரப்பதற்கு, எந்த சிரமமும் இல்லை.
செல்வியின் கூடப்பிறந்தவர் அவரது தங்கை மட்டுமே. அண்ணன் தம்பி என்று எந்த உடன்பிறப்பும் இல்லை. செல்வியின் கணவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். ஆதலால் வருமானத்திற்கு எந்த குறைவும் இல்லை.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த செல்வியின் கணவர் வேலையில் இருக்கும் போதே…. சென்னை வண்ணாரப் பேட்டையில் நிலம் வாங்கி கீழே மேலே என வீடுகட்டி, மேலிருந்த வீட்டினை வாடகைக்கு விட்டிருந்தார்.
மாதவிக்கு திருமணம் முடிந்து, மகன் கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் போது, செல்வியின் கணவர் இறைவனடி சேர்ந்திருந்தார். மேல் வீட்டின் வாடகையும், கணவரின் பென்ஷனுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. பூர்ணிமா அப்பொழுது பள்ளிப் பருவத்தில் இருந்தாள். மகன் படித்து முடித்து வேலையில் அமர்ந்ததும் அவனுக்கும் பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்திருந்தார்.
மகனது திருமணத்திற்குப் பிறகு மருமகளுடான உறவு…. அவருக்கு ஒன்றும் உவப்பானதாக இல்லை. இரண்டு பேருக்கும் ஏதாவது கருத்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கும். இதில் பெரும்பாலும் பூர்ணிமாவை வைத்து தான் சண்டையும் எழும்.
மகனும் மருமகளுக்குதான் சப்போர்ட்…. என்பதால் செல்வியால் பெரிதாக எதிர்ப்பு காட்ட முடியாது. இதனால் வீணான சச்சரவுகள் எழுவதை தவிர்க்க எண்ணி, ஒரு அளவுக்கு மேல் எதையும் கண்டுக்காமல் அமைதியாகிடுவார்.
இந்த நிலையில்தான் மாதவி பூர்ணிமாவை தன்னுடன் அழைத்து வந்திருந்தாள். சரியாகப் பூர்ணிமா பனிரெண்டாம் வகுப்பு முடித்ததும், கல்லூரிக்கு சேர்ப்பது போல தன்னுடன் சிதம்பரம் பக்கத்தில் இருக்கும் முட்லூருக்கு அழைத்து வந்திருந்தாள். அதுதான் அவளது ஊர்.
மாதவிக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் பிள்ளைச் செல்வம் இல்லை. அவளது கணவர் குமாரும் அவளும் எத்தனைக் கோவில் சென்றும்… விரதங்கள் இருந்தும்… மருத்துவம் பார்த்தும் பலனில்லை. காலத்தின் மாற்றத்தினால் தங்களையே தேற்றிக்கொண்டு தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் ஆதரவாக பற்றிக்கொண்டு வாழப்பழகினர்.
இச்சமயத்தில் பூர்ணிமாவின் வருகை இந்த தம்பதிக்கு அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. இருவரும் அவளையே தாங்கள் பெறாத மகளாக நினைத்து, ஆனந்தம் அடைந்தனர்.
மாதவி தங்கையை, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை யுனிவர்சிட்டியில் சேர்த்து படிக்க வைத்தாள். படித்து முடித்து… அங்கேயே ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். மாதவியின் தம்பி பாண்டியின் மச்சினன் செந்திலுக்கு பூர்ணிமாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முழுக்க முழுக்க எண்ணம். பூர்ணிமாவை விட அவள் சொத்துக்களே அவனுக்கு பிரதானமாக இருந்தது.
பூர்ணிமாவின் படிப்பு முடியும் வரை மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவன், அவளது படிப்பு முடிந்ததும் நேரிடையாகவே அவளைத் தனக்கு திருமணம் செய்து தரச் சொல்லி பல வகைகளில் நெருக்க ஆரம்பித்திருந்தான்.
செந்தில் படித்திருந்தும், நல்ல வேலையில் இருந்தும், அவனது குணத்தை எண்ணியே பூர்ணிமாவைக் கட்டி வைக்க பயந்தனர். பொறுப்பில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, நவநாகரிக வாழ்க்கை என்ற போர்வையில் பார், பப் என உல்லாசமாக திரிவது என்று வருவாய்க்கு மீறிய செலவாளி. மொத்தத்தில் சுகபோகவாசி….. யாக இருந்தான்.
உயர்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்கிற அலட்டலே அவனது நடத்தையில் நிரம்பிவழியும். அப்படியொன்றும் அவர்களது குடும்பம் வசதியானது எல்லாம் இல்லை. அவனது தாத்தா காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பம். அவனது அப்பா காலத்தில் சரிவடைந்திருந்தது.
அவனது அப்பாக்கு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் கடன்பட்டவர். இருந்தவற்றை எல்லாம் விற்று கடனை அடைத்துவிட்டு, சின்னதாக ஒரு கடையை மட்டும் வைத்துகொண்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் அவரது மனைவிக்கு மிகுந்த வருத்தம். கணவரின் கூடப்பிறந்தவர்கள் எல்லாம் நல்ல வளமாக இருக்கும் பொழுது கணவர் மட்டும் சின்னதாக கடையை வைத்து, வருவாய்க்கும் செலவுக்குமே இழுபறியாக வாழ்க்கையை ஓட்டுவது எண்ணி வருந்துவார்.
செந்திலின் தந்தைக்கு அதற்கு மேல் அகல கால் வைத்து, மறுபடியும் ஏதும் தொழில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமோ எண்ணமோ இல்லாத காரணத்தால் அவர் வேறு எந்த தொழில் செய்யவும் முனையவில்லை.
அதில் செந்திலின் அன்னை கணவரின் மீதான ஆதங்கத்தில் ஏதாவது கணவரை குத்தம் சொல்லிக் கொண்டேயிருப்பார். மகனாவது வளர்ந்து விட்டதைப் பிடித்துவிடுவான், செல்வந்தனாகிவிடுவான் என மகனை நம்பியிருந்தார். அதுவும் நிராசையானது.
மகனின் ஊதாரித்தனமான செலவும், உல்லாச வாழ்க்கையும் அவனது தந்தையை கலங்கச் செய்தது. அவர் அவனுக்கு புத்தி சொல்ல வரும் போது எல்லாம், அவனின் தாய் அவனுக்கு ஆதரவாகப் பேசி கணவனை பேசவிடாது செய்திடுவார்.
செந்திலின் தாய் அவரது கணவனின் மீதான கடுப்பிலே, தான் என்ன செய்கிறோம்? என மறந்து மகனது தவறான பாதைக்கு வழிவகுத்து தந்திருந்தார்.
அவன் கல்லூரி படிக்கும் காலத்திலேயே பார்ட் டைமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். முதலில் சில மாதங்கள் தனது வருவாயை வீட்டிற்கு கொடுத்தவன், போக போக அது அவன் செலவிற்கே பத்தாமல் போனதால்.. வீட்டிற்கு தருவதை நிறுத்திவிட்டான்.
அவனது தவறான பழக்கவழக்கங்களையும், நண்பர்கள் வட்டாரத்தையும் பார்த்து அவனது தந்தை அவனைக் கண்டிக்கும் சமயங்களில் எல்லாம் அவனது அன்னையே அவனுக்கு ஆதரவாக கணவரிடம், ‘’நீங்களா….. அவனுக்கு பணம் தரீங்க…….?’’ அவன் சம்பாதிச்சு, அவன் செலவு செய்கிறான். ‘’இந்த வயதில் அனுபவிக்காமல் பிறகு எந்த வயதில் அனுபவிப்பான்’’ என மகன் எதிரிலேயே அவரை தாழ்த்தி பேசியது… எல்லாம், மறைமுகமாக அவனது செயலை ஊக்குவிப்பது போலானது.
அதுவே அவனது ஊதாரித்தனத்தை மேலும் தூண்டிவிட்டதைப் போலானது. அதற்கு மேல் செந்திலின் தந்தை ஏதாவது மகனை கண்டித்தால், அவனது அன்னை, ஆரம்ப காலத்தில் அவர் தொழிலில் நட்டமடைந்ததிலிருந்து ஆரம்பித்து, இப்போது வரை பேசியே அவரை வார்த்தைகளால் வதைக்க ஆரம்பித்துவிடுவார். அதற்குப் பயந்தே செந்திலின் தந்தை அதிகம் எதுவும் கேட்காமல் ஒதுங்கிவிடுவார்.
இப்படியே அவனை ஆரம்பத்தில் இருந்தே அவனது தவறான செயலைக் கண்டிக்காமல் விட்டு, இன்று அவனது வாழ்க்கை முறையே மாறியிருந்தது.
அவனது அக்கா தேவகியின் திருமணத்திற்குப் பிறகு பூர்ணிமாவின் சொத்து விவரங்களைப் பற்றி அறிந்தவனின் சிந்தனை எல்லாம் அதனை எப்படியாவது அடைந்திடவே எண்ணியது.
அதற்காக பூர்ணிமாவைப் பிடிக்கவில்லை என்று எல்லாம் இல்லை. பெண்ணும் நன்றாக இருந்து, அதனுடன் சொத்தும் சீதனமாக வந்தால் அவனுக்கு கசக்குமா…. என்ன?
அவனைப் பொருத்தவரை கேட்பாரற்று, அனுபவிக்க தெரியாத மனிதர்களிடம் இருக்கும் சொத்தை….., திருமணம் என்ற பெயரில் பூர்ணிமாவைக் கல்யாணம் செய்து அனுபவிக்க எண்ணினான்.
அவனது தொந்தரவு தாளாமல்தான், மாதவி பூர்ணிமாவுக்கு சீக்கிரம் திருமணத்தை முடித்துவிட எண்ணிதான், இந்த சம்பந்தத்தை பார்த்து ஏற்பாடு செய்தது. மாதவி தனது அம்மா செல்வியைக் கூட நிச்சயத்திற்கு அழைக்கவில்லை.
எங்கே அவரை அழைத்தால், அப்புறம் பாண்டியனுக்கும் தேவகிக்கும் தெரியவந்து, செந்திலுக்கும் தெரியவந்து விடுமோ என எண்ணி யாரையும் அழைக்காமல் வீட்டோடவே சிம்பிளாக நிச்சயத்தை செய்ய எண்ணியிருந்தாள்.
மாதவி தன் தாய் செல்விக்கு மட்டும் இன்று நடக்கவிருக்கும் நிச்சயத்தைப் பற்றி போனில் சொல்லியிருந்தாள். பூர்ணிமா போனில் செல்வியிடம் அவர் அவளது நிச்சயத்திற்கு வராததை எண்ணி வருந்தியதிற்கு, செல்விதான் அவளை சமாதானப்படுத்தியிருந்தார்.
பூர்ணிமா கண்ணாடியில் தன்னையே வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
கையில் காப்பியுடன் வந்த மாதவி பூர்ணிமா அப்படியே நிற்பதைப் பார்த்தவள், ‘’இன்னும் சேலைக் கூட கட்டாம நின்னுட்டிருக்கியான்னு’’ ஒரு அதட்டல் போடவும் பூர்ணிமாக்கு தூக்கி வாரிப் போட்டது.
மாதவி, ‘’அச்சோ. இவ வேற சின்னதா ஒரு சத்தம் போடக் கூடாது, உடனே பயந்திடுவா’’ என தலையில் தட்டிக் கொண்டவள், இந்தா காப்பிய முதல்ல குடி. சூடு ஆறிப்போறதுக்கு முன்ன, என பூர்ணிமாவின் கையில் காப்பியைத் திணித்தாள்.
நீ ஏன் க்கா……. அலையற? ‘’நான் வந்து எடுத்துக்க மாட்டேனா……?’’
நல்லா….. வந்த, இன்னும் சேலையே கட்டல? முதல்ல குடிச்சிட்டு, சேலையைக் கட்டு, அவங்க போன் பண்ணாங்க, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க என்று சென்று விட்டாள்.
மாதவி அவளது சொந்த பந்தங்களைக் கூட அழைக்கவில்லை. அக்கம் பக்கத்தினரை மட்டும் அழைத்திருந்தாள். அவர்களும் காலையிலேயே வந்திருந்து…. அவளுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
வெளியே வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டு கணவர் குமாரை அழைத்து கொண்டு, மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்கவென வெளி வாசலுக்கு விரைந்தாள்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து பதினைந்து பேருக்கு மேல் வந்திருந்தனர். முதலில் மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, மாப்பிள்ளை, அவனது தங்கை தங்கைக் குடும்பம் என வந்தவர்களை இன்முகமாகவே வரவேற்று உள்ளே அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தனர்.
பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தட்டு வரிசைகளை அழகாக அடுக்கி வைத்தனர்.
வந்தவர்களை உட்காரவைத்து, அவரவர்களுக்கு தக்கவாறு கேட்டு குடிப்பதற்கு கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள் மாதவி.
குமார், மாதவி ஏற்கனவே லேட்டு, ஐயர் குறிச்சு குடுத்த நேரத்துக்குள்ள நிச்சயம் பண்ணனும், முதல்ல அதுக்கான வேலையைப் பாரும்மா…. என்றார்.
இதோ முடிஞ்சதுங்க…… என அவர் அரக்க பரக்க எல்லாம் செய்து கொண்டிருந்தார்.
அதற்குள் மாப்பிள்ளையின் அப்பா தொண்டையைச் செறுமி, கொஞ்சம் அதுக்கு முன்னாடி நாம சிலதுப் பத்தி வெளிப்படையா பேசிட்டா நல்லாயிருக்கும்னு நினைக்கறேங்க, என பீடிகையுடன் பேச துவங்கினார்.
மாதவியும் குமாரும் அவரை ஒரு சேர திரும்பிப் பார்த்தனர். அதுதான் பெண் பார்த்த அன்றே எல்லாம் தெளிவாக பேசியிருந்தோமே இன்னும் என்ன…………? என இருந்தது அவர்களது பார்வை.
அது பொண்ணு பார்க்க வந்தப்பவே நீங்க எல்லாம் தெளிவா சொல்லிட்டீங்க, அதுல எங்களுக்கு சந்தோஷம் தான், இருந்தாலும் சிலதை தெளிவு பண்ணிக்கனும்னு நினைக்கறேன்.
,……………….
வெளிப்படையாவே உடைச்சு பேசிடறேன்…………., சுத்தி வளைச்சு பேச விரும்பலை, கல்யாணத்துக்கு முன்னமே பொண்ணு பேர்ல இருக்கற சொத்தை எங்க பையனுக்கு எழுது வச்சிடுங்க….
ஆங்……… என பார்த்தாள் மாதவி.
குமாரும் அதிர்ச்சியில் வாய் பிளந்து பார்த்திருந்தார்.
மாதவிக்கு கோவம் வந்தது. யார் வீட்டு சொத்தை யாருக்கு எழுதி வைப்பது என்று ஆத்திரமானது. இன்னும் நிச்சயம் கூட ஆகவில்லை அதற்குள் சொத்துக்கு அடி போடுகிறார்களே என்று இருந்தது.
‘’பூர்ணிமாவுக்கு இருக்கும் தாய் தந்தை வழி பிணைப்பு அந்த சொத்துதான். அதை எப்படி, அவர்களுக்கு எழுதி கொடுக்க முடியும். என்னதான் கணவனாக இருந்தாலும், பிற்காலத்தில் அவளுக்கு என்று வேண்டும் அல்லவா………?’’
அவளுக்கென இருப்பதை எதை நம்பி, என்ன தைரியத்தில் இவர்களிடம் தூக்கி கொடுக்க முடியும். அவளது சொத்தை இவர்களுக்கு கொடுத்துவிட்டு, பிற்காலத்தில் ஏதாவது ஒன்றென்றால் இவர்கள் பின்னாடி நிற்க வேண்டுமா………..? என ஆத்திரம் வந்தது.
எப்படி இவர்களால் இப்படி கூசாமல் கேட்க முடிகிறது என கேவலமாகப் பார்த்தாள் மாதவி. பூர்ணியுடையது என்றாலும் அவள் மட்டுமே அனுபவிக்கப் போவது இல்லையே, பிற்காலத்தில் அவளுடன் சேர்ந்து அவளது கணவனும் குழந்தையும் தானே அனுபவிக்கப் போகிறார்கள்.
மாதவி திரும்பி கணவனைப் பார்த்தாள், அவளது பார்வையைப் புரிந்த குமார் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசினார்……
குமார், ‘’பொண்ணையே உங்களை நம்பி கொடுக்கறோம் சொத்து எம்மாத்திரங்க.’’ அவளே உங்க வீட்டுக்கு வரும் போது சொத்தும் அவளோட சேர்ந்து அவளுக்குதானே வரப் போகுது.
நீங்க சொல்றது வாஸ்தவம்தாங்க, எப்படியிருந்தாலும் ‘’கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகப்போறாங்க. அப்புறம் இந்த சொத்துல மட்டும் என்ன பிரிவு. நாளைக்கு இதைக் காரணமா வச்சி அவங்களுக்குள்ள எந்ந பிரிவும், பிரச்சனையும் வந்துரக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான், முன்னாடியே மாப்பிள்ளை பேருல கிரயம் பண்ணீட்டீங்கன்னா, எந்த மனஸ்தாபமும் வரதுக்கு வாய்ப்பில்லை பாருங்க.’’
குமாரும் விடாமல் பொண்ணையே தரும்போது சொத்து பெருசா……… என்று பேசிப்பார்த்தார். மாப்பிள்ளையின் தந்தையும் விடாக்கண்டனாக உங்க பொண்ணுக்காகத் தான் கேட்கிறோம் எங்களுக்கு அதுல பெருசா விருப்பமில்லன்ற மாதிரி பேசினார்.
அது பொண்ணு பேர்ல தான இருக்கு. அவள் பேர்ல இருந்தா என்ன? மாப்பிள்ளைப் பேர்ல இருந்தா என்ன? என்றார் குமார்.
‘’அது எப்படிங்க? நாளைக்கே நாங்கதான் உன்னை இத்தனை நாள் பார்த்துகிட்டோம், வளர்த்தோம்னு வந்து நின்னு எழுதி வாங்கிட்டீங்கன்னா…..? உங்க பொண்ணும் குடுத்துடுச்சுன்னா……… என்ன பண்றது?’’ இப்பவே நாம தெளிவாயிருந்துக்கறது நல்லதில்லைங்களா…….. என்றார் மாப்பிள்ளையின் அப்பா.
‘’அப்படி வாங்கறவங்களா இருந்தா……. இவ்வளவு நாள் ஏங்க வெயிட் பண்ணனும், இந்நேரம் எழுதி வாங்கியிருக்க மாட்டோமா?’’ அதை அவள் கல்யாணத்துக்கு அப்புறம் தான் எழுதி வாங்கனுமா என்றார் குமார்.
இல்லங்க, எதுக்கு நமக்குள்ள தேவையில்லாத வீணான பேச்சு. கல்யாணத்துக்கு முன்னமே மாப்பிள்ளை பேர்ல சொத்தை எழுதி வச்சீங்கன்னா மேற்கொண்டு பேசுவோம். இல்லேனா, இதோட முடிச்சிக்கு வோம் என்று, கொஞ்சமும் கருணையின்றி பேசினார்.
என்னங்க பேசறீங்க? ‘’பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே எல்லாம் தெளிவா பேசிதான சம்மதிச்சு முடிவு பண்ணீங்க? இப்ப ஏன் இப்படி மாத்தி பேசறீங்க?’’
ஆமாங்க அப்ப இருந்த சூழ்நிலை அப்படி, அதனால பேசியிருந்தோம். இப்ப எங்க வீட்ல எல்லாம் கலந்து பேசினதுக்கப்புறம் எங்களோட முடிவு மாறிடுச்சிங்க என்றார் கூலாக.
‘’எவ்வளவு சாதாரணாமா சொல்றீங்க…., இப்படி இக்கட்டுல வந்து கடைசி நேரத்துல சொன்னா….. எப்படிங்க…..?’’ அது எங்களை எப்படி கஷ்டப்படுத்தும்னு தெரியாதா…..? என்றார் குமார்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.