உயிரே 13
குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டிருந்தவன் நாசியை எதுவோ தொந்தரவு செய்தது. முதலில் அதைச் சரியாகக் கவனிக்காதவன், மூக்கைச் சுருக்கி அந்த வாசத்தை நுகர்ந்து விட்டுச் சமையலறைக்கு ஓடினான். பாத்திரத்தில் இருந்த காய்கறிகள் அனைத்தும் கருகி, வீட்டையே புகைமண்டலமாக மாற்றிக் கொண்டிருக்க, அதைச் சிறிதும் அறியாது பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள் சிலம்பழகி.
வேகமாகச் சென்று அடுப்பை நிறுத்தியவன், “ஏய், பக்கத்துல தான நின்னுட்டு இருக்க. கருகுற வாசனை வரல, என்னடி யோசிச்சிட்டு இருக்க?” என்று அவள் தலையில் தட்டிய பின்னர் தான் சுற்றி நடப்பது புரிந்தது.
“அச்சச்சோ!”
“பைத்தியக்காரி! நான் வரலன்னா சட்டியோட சேர்ந்து நம்ம ரெண்டு பேரும் சாம்பலாகி இருப்போம். உடம்பு முடியலன்னா சொல்லி இருக்கலாம்ல. நானே செஞ்சிருப்பேன்.”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஏதோ யோசனைல கவனிக்காம விட்டுட்டேன்.”
“இப்படிக் கருகிப் போறது கூடத் தெரியாத அளவுக்கு என்ன யோசிச்சிட்டு இருக்க?”
“ஒன்னும் இல்ல.”
“என்னன்னு சொன்னால் தான தெரியும். நீ இந்த மாதிரிப் பண்ணிட்டு இருந்தா, எப்படி வேலைக்குப் போவேன்? சரியான கிறுக்கிய என் தலையில கட்டி வச்சுட்டாங்க.”
“இப்ப எதுக்குத் தேவை இல்லாமல் பேசுற?”
“பண்றதெல்லாம் பண்ணிட்டுக் கோபம் வேற வருதா…”
“கவனிக்கலன்னு சொல்லிட்டேன், அதுக்கு அப்புறமும் எதுக்குத் திட்டுற.”
“ஏய்… இவ்ளோ பக்கத்துல இருந்துட்டுக் கவனிக்கலன்னு சொல்ற. அங்க இருக்க எனக்கே ஸ்மெல் வருதுடி.”
“இப்ப என்னதான் சாமி உனக்கு வேணும்.”
“உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி லூசு மாதிரி யோசிச்சிட்டு இருக்கன்னு கேட்கிறேன்.”
“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?”
சிலம்புவின் பேச்சு சிடுசிடுப்பைக் கொடுக்க, “பொறுமையா பேசிட்டு இருக்கேன், என் கோபத்தைக் கிளறாத. எப்பப் பாரு வாய் துடுக்கா பேசிட்டு இருக்க, மண்டையில இருக்க களிமண்ணு உருகி ஊத்திடுச்சா…” எனத் தலையில் தட்டினான்.
அவன் கையைத் தட்டி விட்டவள், “ஆமா, தெரிஞ்சிருச்சுல கிளம்பு.” என்றதும் கையை வளைத்துப் பிடித்து அவள் முதுகுக்குப் பின்னால் வைத்து,
“ரெண்டு நாளா சிரிச்சுப் பேசவும், பயம் விட்டுப் போச்சா? ரொம்ப நக்கலா பதில் சொல்ற. நான் இருக்கவும் பார்த்து ஆஃப் பண்ணிட்டேன். யாரும் இல்லாம இருந்தா செத்திருப்படி.” என்றான்.
“செத்தா செத்துட்டுப் போறேன், நீயாவது நிம்மதியா இருப்ப.”
“சிலம்பு…”
அவன் அழைத்த அதிகாரத் தோரணைக்குச் சிறிதும் பயம் கொள்ளாது, “கைய விடு, வலிக்குது.” என்றாள்.
காலை கண் முழித்த பின்னர் கூட, சகஜமாக உரையாடியவள் இப்போது காட்டும் கோபத்தில் யோசனைக்கு ஆளாகியவன் கைகளை விட்டான். எப்போதும் கடுகடுவென்று இருக்கும் அவன் முகம் போல், தன் முகத்தை வைத்துக் கொண்டவள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“தள்ளு, நான் பார்த்துக்கிறேன்.” என்றிட,
“உன் வேலையப் போய் பாரு.” எனச் சிடுசிடுத்துக் கொண்டே கவனம் இல்லாமல் கருகிப்போன பாத்திரத்தில் கை வைத்து விட்டாள்.
மின்சாரத்தில் கை வைத்தது போல் துடிதுடித்துக் கையை உதறும் மனைவியைக் கண்டு பதறியவன், “என்னடி பண்ணிட்டு இருக்க. கைய இங்க காட்டு.” என அவள் கைகளைப் பற்றிக் கொள்ள முயல, அதற்கும் ஒத்துழைக்காமல் பிடிவாதம் பிடித்தாள்.
மைவிழியனின் பொறுமை காற்றில் பறந்தது. தடுக்கும் அவளையும் மீறி, அழுத்தமாகக் கைப்பிடித்துத் தன்னோடு இழுத்துக் கொண்டவன், முறைப்பு மாறாது சிவந்து போன கைகளைக் கவனித்தான். கைப்பிடிக்கும் வரை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவள் தன்னை அவனிடம் ஒப்படைத்து விட்டுத் தலை குனிந்து கொள்ள, எரிச்சலைத் தணிப்பதற்காக ஊதி விட்டு மருந்து போட்டு விட்டான்.
“வலிக்குது.”
“வலிக்கத்தான் செய்யும். நீ பண்ண கிறுக்குத்தனத்துக்கு அனுபவி.”
“இப்படிப் பேசுறதுக்கு மருந்து போடாமலே இருந்திருக்கலாம்.”
“என்ன பண்ண, எனக்கு அவ்ளோ பெரிய மனசு இல்லையே.”
“ஆமாமா, ரோட்ல விட்டுட்டுப் போற அளவுக்குச் சின்ன மனசுதான்.”
“ஓய்!”
“என்ன?”
“என் மேல என்ன கோபம்?”
“நான் யாரு, உன் மேல கோபப்பட.”
ஆள்காட்டி விரலை அவள் தாடையில் வைத்துத் தன்னைப் பார்க்குமாறு தலை உயர்த்தியவன், “என்ன பண்ணேன்? நீ இவ்ளோ கோபப்படுற அளவுக்கு.” தன்மையாகக் கேட்டான்.
அவன் விரலைத் தட்டி விட்டவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். மனம் தளராமல் மீண்டும் முகத்தில் கை வைக்க, “இப்ப எதுக்குக் கொஞ்சிட்டு இருக்க?” கேட்டாள்.
“கொஞ்சுறனா… இது எப்போ?”
“அதான…”
“எதுக்குடி, வாய்க்குள்ள முனங்கிட்டு இருக்க.”
“அந்த உரிமை கூட எனக்கு இல்லையா?” என வெடுக்கென்று பேசியவள்,
“எதுக்குத் தேவை இல்லாம பேசிட்டு இருக்க. போய் உன் வேலையப் பாரு. அதான உனக்கு முக்கியம்.” என வார்த்தையை இழுத்தாள்.
காலையிலேயே புலம்பவிடும் மனைவியை அதற்கு மேல் சமாதானம் செய்ய முடியாமல் வேலைக்குக் கிளம்பியவன், “டோரை லாக் பண்ணிக்க. நான் வரவரைக்கும் எங்கயும் போகாத. முக்கியமா ஸ்டவ் ஆன் பண்ணா கவனத்தை அது மேல வை. மதியம் போன் பண்றேன்.” என்ற அறிவுரையோடு தன் காலணிகளை மாட்டிக் கொண்டவன்,
“வரட்டா…” எனத் தலையசைத்தான்.
அதுவரை அவனைப் போல் சிடுசிடுத்துக் கொண்டிருந்தவள், வேலைக்குக் கிளம்பிச் செல்பவனை மனம் நோக வைக்க விரும்பாது, “பார்த்துப் போயிட்டு வா…” எனக் கையசைத்தாள்.
அவளின் முகமாற்றத்தைக் கண்டு நிம்மதி அடைந்தவன் கண்ணசைத்து விட்டு வெளியேறினான். கதவைச் சாற்றிக் கொண்டாள் பெருமூச்சோடு. இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து வீட்டைத் தாண்டிச் சென்றவன் நினைவில் சிலம்பழகி. சரியாகத் தெரியவில்லை என்றாலும், காலையிலிருந்து அவள் காட்டிய கோபத்திற்குப் பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அது என்ன என்றுதான் விளங்கவில்லை.
சாலை சமிக்ஞை அவனை நிற்க வைத்தது. பச்சை நிறத்திற்குக் காத்துக் கொண்டிருந்தவன் பக்கத்தில் வந்து நின்றது இருசக்கர வாகனம். சமிக்ஞையில் கண்ணாக இருந்தவன் செவியில் பக்கத்தில் இருப்பவர் பேசுவது விழுந்தது. யாரிடமோ, இன்று வேலைக்குச் சென்றாக வேண்டும், நாளை விடுப்பு எடுக்கிறேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அவரைத் திரும்பிப் பார்ப்பதற்குள் பச்சை நிறம் பளிச்சென்று எரிய, வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
“ரெண்டு நாளா கூடவே இருந்துட்டியா, அதான் டக்குன்னு அனுப்ப மனசு வரல.”
அவன் நெற்றிப் பொட்டில் சிலம்பழகியின் குரலோடு இந்த வார்த்தைகள் உதயமானதும், சட்டென்று சாலை உரச வண்டியை நிறுத்தினான். போட்டிக்கு ஓடுவது போல் அவனுக்கு முன் பின் பல வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று இவன் நிறுத்த, இவனுக்குப் பின்னால் வந்தவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள நிறுத்தினார். அதை அறியாதவன் மனைவியின் சிந்தனையில் இருக்க, பின்னால் நிறுத்தியவர் நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டுச் சென்றார்.
நியாயமாகக் கோபம் வர வேண்டியவனுக்குச் சிரிப்புதான் வந்தது. மற்றவர்களும் திட்டிவிட்டுச் செல்வதற்கு முன், வண்டியை ஓரம் சென்று நிறுத்தியவன் பொறுமையாகக் காலையில் நடந்ததை யோசிக்க ஆரம்பித்தான். இரவு அவளை அணைத்துக் கொண்டு சுகமாகத் தூங்கியவன் அலாரத்தின் உதவியால் கண் விழித்தான்.
இரவெல்லாம் வலது கையை அவளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தவனுக்கு வலி பின்னி எடுத்தது. அதன் தாக்கத்தால் முகத்தைச் சுழித்தவன் அவளைத் தள்ளிவிட்டுக் கைக்கு ஓய்வு கொடுக்க எண்ணித் திரும்ப, தூக்கம் கலையாத விழிகளில் அவனை விழுங்கும் அளவிற்குப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிலம்பு. உண்டான கை வலி மாயமாக மறைந்து விட்டது. அவளை நகர்த்தாமல் தன் உடலை நகர்த்தி அவள் பக்கம் சரிந்தான்.
“தூங்கலையா?”
“இப்போதான் எழுந்தேன்.”
“எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க.”
“பார்க்கக் கூடாதா?”
“கூடாது.”
“உன் பேச்சைக் கேப்பன்னு எப்படி நம்புற?”
“காலைலயே வெறுப்பேத்துறியா…”
“நைட் ரொம்ப நல்லாத் தூங்கினேன்.”
“அப்படியா?”
“ம்ம்.” என்றவள் இமை சிமிட்டாத பார்வையை இடம் மாற்றி, “உன்னால தான்.” என்றாள்.
விழியன் புரியாது விழிக்க, “ஒரு வயசு வரைக்கும், தாத்தா கூட தான் படுத்திருந்தேன். எப்போ கண்ணு முழிச்சாலும் அவர் கூட இருப்பார். அப்புறம் என்னைத் தனியா விட்டுட்டார். அவரோட அந்த அன்பான அணைப்பு இல்லாம சரியா தூங்குறதே இல்ல. ரொம்ப வருஷம் கழிச்சு நைட்டு தான் அப்படித் தூங்கினேன்.” என்றவள் மீதான பார்வையை அகற்ற மனம் வரவில்லை.
“வீட்ல இருக்க எல்லாரும் என் மேல பாசமா இருக்கும்போது நீ மட்டும் விலகி இருக்குறது கஷ்டமா இருக்கும். ஏண்டா இவனுக்கு மட்டும், என்னைப் பிடிக்கலைன்னு பல நாள் யோசிச்சிருக்கேன். உன் அன்பைச் சம்பாதிக்கணும்னு தான் இவ்ளோ தூரம் வந்தேன். அது கிடைக்காமல் போயிடுமோன்னு பயம் வந்துடுச்சு. நல்லவேளையா, ஜுரம் வந்து அந்த பயத்தைப் போக்கிடுச்சு.”
“உன்னைப் பிடிக்காதுன்னு யார் சொன்னது?”
இப்படியான வார்த்தைகளை அவனிடமிருந்து சிறிதும் எதிர்பார்க்காதவள் அதிர்வுக்கும், மகிழ்விக்கும் இடையில் தன்னைச் சிறைப்படுத்திக் கொண்டு, எதை வெளிக்காட்டுவது என்ற குழப்பத்தில் அப்படியே உறைந்து போனாள். கட்டியவளின் திகைப்பில் பட்டும் படாமலும் சிரித்தவன் தன்னோடு அவளை இழுத்து, “பிடிக்கும்…” என்றிட, “விழியா…” என்றதற்குப் பின்பு எந்த வார்த்தையும் வரவில்லை அவள் வாயில் இருந்து.
லேசாக அவள் நெற்றி முட்டி, “கொஞ்சம் இல்ல, ரொம்ப…” என்றதும் அவன் மார்போடு முகம் புதைத்தவளிடமிருந்து விசும்பல் சத்தம் மட்டும்தான் கேட்டது. புன்னகை ததும்பத் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தவன்,
“போதும் போதும், ரொம்ப சீன் போடாத.” எனத் தானாகவே விலக வைத்து முறைக்க வைத்தான்.
அழுகைக்கு நடுவில் முறைக்கும் அவள் அழகில் சத்தமிட்டுச் சிரித்தவன், “உடனே டிராமா கம்பெனிய ஓபன் பண்ணிடுவ. காலையில உன் மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு சும்மா வாய்க்கு வந்ததைச் சொன்னேன். அதான் சாக்குன்னு ஒரு கன்னிப் பையனைக் கட்டிப்பிடிக்கிற.” என்றவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்! குட்டிச் சாத்தானே, தள்ளிப் போ…”
“நீ மனுசனே இல்ல.”
“உன்னக் கல்யாணம் பண்ணா எப்படி மனுஷனா இருப்பேன்?”
“தேள் நாக்குடா உனக்கு. நான் சந்தோஷமாவே இருக்கக் கூடாது.”
“அது வேணா உண்மைதான்.”
“உன்னக் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை நானே அழிச்சிக்கிட்டேன்.”
“என்னமா பண்றது, தாத்தா ரூபத்துல விதி விளையாடிடுச்சு.”
“இருடா, உன்னைத் தாத்தா கிட்டயே சொல்றேன்.”
“யார்கிட்ட வேணா சொல்லிக்கோ, இப்பத் தள்ளு.”
“முடியாது.”
“வேலைக்கு மணி ஆகுதுடி. ஏற்கெனவே உன்னால ரெண்டு நாள் லீவ் போட்டுட்டேன்.”
“வேலைக்குப் போறியா?”
“பின்ன என்ன, பிச்சை எடுக்கவா போறேன்.”
“எதுக்குடா போற?”
“பைத்தியக்காரி! வேலைக்குப் போனா தான் சோறு தின்ன முடியும்.”
“வாய் இருந்தாலே தின்னலாம்.”
“வாவ்! காத்தவராயன் பேத்திக்கு இவ்ளோ அறிவா?”
“ப்ச் விளையாடாதடா. இன்னைக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைல இருந்து போ…”
“செத்துப்போன என் மாமாவா கம்பெனி நடத்துறாரு.”
“ப்ளீஸ்டா.”
“என்னடி?”
“ரெண்டு நாளா கூடவே இருந்துட்டியா, அதான் டக்குன்னு அனுப்ப மனசு வரல.”
விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தவன் தீவிரமாக அவளை ஏறிட, “அதும் இல்லாம ரெண்டு நாளா ரொம்பப் பாசமா வேற இருந்துட்ட. இப்ப வேலைக்குப் போயிட்டு வந்தா எரிஞ்சு விழுவ. நானும் போட்டிக்குச் சண்டை போடுவேன். அப்புறம் தனித்தனியா இருப்போம்.” எனப் பேசிக்கொண்டே முகத்தைத் தொங்கப் போட்டாள்.
இந்தச் சிலம்பழகியை மிகவும் பிடித்திருந்தது அவள் கணவனுக்கு. இதுதான் அவனின் எதிர்பார்ப்போ என்னவோ… வெகு நேரமாக அவளையே உரசிக்கொண்டு படுத்திருந்தான். கிளம்புகிறேன் என்றவன் எதுவும் பேசாமல் படுத்திருப்பதால் உள்ளம் கூத்தாடியவள், “அப்ப ரெண்டு பேரும் இன்னைக்கு ஷாப்பிங் போலாமா?” என்று கேட்டு அவன் நினைவைக் கலைத்தாள்.
“உன் தாத்தாக்கு போன் போட்டு, வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லு. உன்னை மாதிரிப் பைத்தியத்து கூட எல்லாம் நான் ஷாப்பிங் வரமாட்டேன்.” என்றவன் வேலைக்குக் கிளம்பத் தயாராகி விட்டான். அந்தக் கடுப்பில் நடந்தது தான் கருகிப் போன சம்பவம்.
காலை நடந்த உரையாடலை முழுவதுமாக நினைத்தவன், சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து வெட்கத்தோடு சிரித்தான். இந்த மைவிழியன் அவனுக்கே புதிதாகத் தெரிந்தான். கண்ணாடியில் தன் முகம் பார்த்துச் சிரித்தவன் வண்டியைத் திருப்பினான் வீட்டிற்கு. தன்னைக் கண்டால் அவளின் பாவனைகள் என்னவாக இருக்கும் என்ற தேடுதலில், வேகமாக இல்லம் திரும்பியவன் அழைப்பு மணியை அடித்துவிட்டுப் பரபரக்கக் காத்திருந்தான்.
யார் என்ற கடுப்பில் கதவைத் திறந்தவள், “என்னத்த மறந்து வச்சிட்டுப் போன..” என முகத்தை அஷ்ட கோணலாக வைக்க, அடிவயிறு எரிந்தது விழியனுக்கு.
இவளுக்காகத் திரும்பி வந்ததை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டவன், “ஆஹான்… கருகிப்போன சட்டிய.” என அவளைச் சுவரோடு சுவராகத் தள்ளிவிட்டவன் உள்ளே சென்று கதவைச் சாற்றிக் கொண்டான்.
அறைக் கதவைச் சாற்றும் வரை, அவன் திரும்பி வந்ததற்கான நோக்கத்தை அறியாதவள் மனம் நிறைந்து, “ஏண்டா, உன் ஆபீஸ்ல கருகிப் போன சட்டியவா சேல் பண்ணிட்டு இருக்க.” எனக் கதவைத் தட்டி வம்பு இழுக்க,
“மரியாதையா போயிடு.” என்று எச்சரித்தான்.
“அப்போ அதானா… அடக் கருமம் புடிச்சவனே, இந்தக் கருகுன சட்டிய விக்கவா நம்ம ஊர்ல இருந்து இங்க வந்து குப்பை கொட்டிக்கிட்டு இருக்க. இதுல ஐடில வேலை பார்க்குறன்னு பந்தா வேற. த்தூ… கரிச்சட்டி விக்கிறவனுக்கு ஐடி கார்டு ஒன்னு தான் குறை.” என்றதும் கதவைத் திறந்தவன் அவளைத் தரதரவென்று உள்ளே இழுத்துச் சென்று கும்மாங்குத்து குத்தினான்.
***
பல ரகளையோடு மதியத்தைக் கடந்தவர்கள் சாப்பிட உணவகம் வந்திருக்கிறார்கள். அன்று சண்டை போட்டுச் சென்ற அதே உணவகம் தான். அதைப் பார்த்ததும் வேண்டாம் என்று மறுத்தவளை உள்ளே இழுத்துச் சென்றவன்,
“என்ன வேணும்?” கேட்க, “அதோ அந்தப் பையன்…” ஒருவனைக் கை காட்டினாள்.
“செருப்பு பிஞ்சிடும். உனக்கு மாமா வேலை பார்க்கவா நான் பெங்களூர் வந்தேன்.”
“மாமன் மகளுக்காக இது கூடப் பண்ண மாட்டியா?”
“பாவம், அவனாது நல்லா இருக்கட்டுமே.”
“அப்போ நீ கஷ்டப்படுறியா?”
“ஆத்தா மாரியாத்தா… நான் சந்தோசமா இருக்கன்னு உங்கிட்ட யாருமா சொன்னது? நீ எப்போ இந்த ஊர்ல கால் வச்சியோ அப்பவே கொஞ்சம் நஞ்சம் மிச்சம் இருந்த சந்தோஷமும் ஓடிருச்சு.”
“போடா…”
“நீ எப்ப தாயி என்னை விட்டுப் போவ?”
“அதெல்லாம் முடியாது.”
“காலைக் கையை உடைச்சிடுவேன். இதுதான் சாக்குன்னு கூடவே ஒட்டிக்கலாம்னு பார்க்காத. சொன்னது சொன்னதுதான். ஒழுங்கா இங்க இருந்து ஓடுற வழியப் பாரு.”
“நிஜமாவா சொல்ற…” என அவள் முகம் வாட, அதைக் கவனித்தவனுக்குப் பேரானந்தம்.
“நம்ம குலசாமி மேல சத்தியமா.”
“இப்ப நம்ம ரெண்டு பேரும் நல்லாத்தான பேசிக்கிறோம்.”
“அதுக்கு?”
“என்னைப் பிடிக்கும்னுலாம் சொன்னியே.”
“அட, கிறுக்குப் பயபுள்ள!” என அவள் தலையைத் தட்டியவன், “அதான் காலைலயே விளையாட்டுக்குன்னு சொல்லிட்டனே. ஏதோ போனால் போகுதுன்னு உன்கிட்டப் பேசிட்டு இருக்கேன். அவ்ளோதான், உன் மேல இருக்க கரிசனம். மத்தபடி இந்த விழியனுக்கு இந்த உலகத்துலயே பிடிக்காத ஒரே பொண்ணு நீ தான்…”
“அப்பாடா…”
“என்னடி?”
“நான் கூடக் கடைசி நிமிஷத்துல என் காலைப் பிடிச்சு, என்னை விட்டுப் போகாதன்னு சொல்லுவியோன்னு பயந்துட்டேன். உன்னை மாதிரி ஒரு ராட்சசன் கூடக் காலம் முழுக்க வாழ முடியாது. அதுவும் இல்லாம என்னை மாதிரி ஒரு அழகிக்கு நீ ரொம்பக் குறைச்சல். அதோ! அவனை மாதிரியோ, இல்ல அவனை விட செம சூப்பரான பிகராவோ கல்யாணம் பண்ணாதான் கரெக்டா இருக்கும். கடவுள் என் வாழ்க்கையை மொத்தமா முடிச்சுட்டான்னு நினைச்சேன். இப்பதான் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு.”
கேலி செய்யும் போது கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தவன், எண்ணெயில் போட்ட கடுகாக வெடிப்பதைக் கண்டு உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவள் அவன் கைப்பிடித்து,
“என் லைஃபைக் காப்பாத்துனதுக்காக ரொம்ப நன்றி. அப்படியே கடவுள்கிட்ட வேண்டிக்க, எனக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி, ஆசை ஆசையா அவனை மாதிரியே நாலு குழந்தைகளைப் பெத்து, ரொம்ப சந்தோஷமா வாழனும்னு.” என்றவளிடமிருந்து தன் கைகளை உதறிக் கொண்டான்.
“நானும், அவனும் ஜோடி போட்டு ஊர் ஊரா சுத்தணும். அப்பப்ப ரகசியமா ரொமான்ஸ் பண்ணிக்கணும். அவன் முகத்தைப் பார்த்தாலே அப்படியே பனித்துளியா நான் உருகிடனும். வாய் ஓயாம ஐ லவ் யூ புருஷான்னு சொல்லிக்கிட்டே இருக்கணும்.”
அவள் சொல்லச் சொல்ல வயிறு இன்னும் எரிய ஆரம்பித்தது மைவிழியனுக்கு. அதை அப்பட்டமாக முகத்தில் காட்ட, “ஆமா, நான் போனதுக்கப்புறம் நீ என்ன பண்ணப் போற.” என நக்கலாகக் கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் இன்னும் முறைத்துக் கொண்டே இருக்க, “உன்னை மாதிரி ஒருத்தனை நம்பி எந்தப் பெண்ணும் வரமாட்டா. கடைசி வரைக்கும் இப்படியே மூஞ்சத் தூக்கி வச்சுக்கிட்டு, கரிச்சட்டிய வித்துட்டு இரு.” என்றவள் முகத்தில் தண்ணீரை ஊற்றினான்.
அவன் செயலைச் சிறிதும் எதிர்பார்க்காதவள் நனைந்த முகத்தைக் கண்டு திகைக்க, “என்னை இப்படி ஆக்குனது நீதான்டி. இல்லனா எல்லாரும் மாதிரி நானும் சந்தோஷமா வாழ்ந்திருப்பேன். அடுத்தவன் வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம, அடுத்த வாழ்க்கைக்கு ஆசைப்படுற பாரு ச்சீ…” என்றதும் பக்கத்தில் இருந்த தண்ணீரை இப்போது அவன் முகத்தில் வீசி அடித்தாள்.
அந்நேரம் அங்கு வந்த ஊழியர் இருவரையும் கண்டு திருதிருவென்று முழிக்க, “பிரியாணி சாப்பிடுறியா?” என எதுவும் நடக்காதது போல் கேட்டான். அவளும் தன்னைக் கவனிக்கும் ஊழியரைக் கண்டு முகத்தைச் சகஜமாக வைத்துக்கொண்டு, “உனக்கு எது ஓகேவோ, அதுவே எனக்கும் ஓகே.” என்று கசட்டு மேனிக்குப் பல்லைக் காட்டினாள்.
வந்து நின்றவர் தான், யார் இவர்கள் என்ற பெரும் சந்தேகத்தோடு வந்த வழியே சென்று விட்டார். அவர் செல்லும் வரை நல்ல தம்பதிகளாகப் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தவர்கள் முறைக்கத் துவங்கினார்கள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.