சரித்திர கால காதல் எப்படி இருந்திருக்கும் என்பதான ஒரு கற்பனையே இந்த சிவகங்காவதி.சரித்தித்தோடு சேர்ந்த நம் இலக்கியமும் நம் கதைக்கு அழகூட்டும் விதமாக ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் அகத்தினை விவரங்களைக் கொண்ட ஐந்குறுநூறு பாடல்களை அதன் இரு வரி விளக்கத்தோடு பகிர்கிறேன்.
தாய்க்கு உரைத்த பத்து அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண் ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள் பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே (உதுக்காண் = அதோ பார்; பாசடும்பு = பசிய அடப்பங்கொடி; பரிய = வருந்துமாறு; ஊர்பு இழிவு = ஏறியிறங்கி; உண்கண் = மையுண்ட கண்; கொண்கன் = கணவன்) என்ற பாடலில் தலைவியின் பிரிவு நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர் வந்து விட்டது என்று தோழி செவிலியிடம் கூறும் ஆறுதல் செய்தி இடம் பெற்றுள்ளது.
கி.பி 1630 ஆண்டு பாண்டிய தேச பகுதிகளின் ஒன்றான மதுரை, நாயக்கர்களின் ஆட்சியில் சிறந்து விளங்கியது.
நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் ஆட்சிகாலத்தில் அரசு பிரதிநிதிகளாய் இருந்தவர்கள்.
விஜயநகர பேரரசு வலுவிழந்து ஆட்சி முடியும் நேரம் தங்களுக்கான பகுதிகளில் பலப்படுத்தி நாயக்கர்கள் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டர்.
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர்.
இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.
அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின.
அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் .
எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார்.
இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்
நாயக்கர்கள் அரச பொறுப்பில் இருந்தாலும் பெரும்பாலும் அவர்களுக்கு கீழான நகரங்கள் பாளிகார் என்றழைக்கப்பட்ட பாளையக்காரர்களின் கண்காணிப்பிலேயே இருந்தது.
பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)”பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது.
பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.
இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும்.அதன் தலைவர்களே பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர்.
மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும்.
பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.
தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது.
பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.
பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன.
படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர்.
தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது.
இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.
முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு.
பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட மதுரையின் பாளையகாரர்களில் ஒருவர் சேதிராயன். அனைத்துப் பாளயங்களிலும் சற்றே பிரசித்தி பெற்றவராய் திகழ்ந்தார்.
வளமையிலும் படைகளின் வீரத்திலும் மிகச் சிறந்து விளங்கியதே அதன் காரணம். நாயக்க அரசர்களுக்கே முக்கியமானவரில் ஒருவராய் திகழ்ந்தார்.
இவையனைத்தையும் கடந்த அவரின் மற்றுமொரு அரிய பொக்கிஷம் அவரின் ஒரே மகள்.
சேதிராயன் – கங்காம்மாவின் ஒரே வாரிசு சிவகங்காவதி. பெயரைப் போன்றே மிகவும் வீத்தியாசமானவள்.சின்னஞ்சிறு வயது முதலே அத்தனை கலைகளையும் கற்பதில் ஆர்வம் மிகுந்தவளாய் இருந்தாள்.
ஆய கலைகள் அறுபத்தி நான்கில் அநேகத்தையும் கற்றுத் தேர்ந்தாள்.அறிவிற்கும் வீரத்திற்கும் மேலான அவளின் அழகு மற்ற அத்துனை பாளையத்திலும் பிரசித்தி பெற்றிருந்தது.
பதினாறு வயது பருவ மடந்தையவளை தன்னவளாக்கும் முயற்சியில் பல பாளயத்துகாரர்களும் முயன்று தோல்வியை தழுவியிருந்தனர்.
நாயக்கர்களின் அரச இளவரசர்கள் கூட அவளை ஆசை நாயகியாக்கி கொள்ள முனைந்திருந்தனர்.
ஆனால் யாருக்கும் அஞ்சா பெண்ணவள் அத்துனை ஆண்மகனையும் வாள் யுத்தத்திற்கு அழைத்து அதில் வெற்றி பெறுபவனை திருமணம் புரிவதாய் கூறினாள்.
முதலில் பெண்ணென குறை மதிப்பிட்டவர்கள் யுத்தத்திற்கு தயாராக அவளின் வாள் வீச்சின் முன் தலை தாழ்ந்து செல்லும் நிலையே ஏற்பட்டது.
ஏராளமான நிறைகளிருந்தாலும் சிவகங்காவதியின் வீரத்தால் தோல்வியுற்றவர்கள் சற்று மனக்கசப்போடு அவர்களை பழிதீர்க்கும் காலத்திற்காக காத்திருந்தனர்.
இப்படியான புகழ்ச்சிகளை தலை மீது கீரீடமாய் சூடியிருப்பவள் தன் தோழியோடு அந்தபுரத்தில் கண்கட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
“கங்கா எங்கே இருக்கிறாய்?எனக்குத் தலையெல்லாம் சுற்றுகிறது.சற்றே இரக்கம் காட்ட கூடாதா?”
“எத்தனை முறை உனக்கு விளக்கி விட்டேன்.என் பெயர் சிவகங்காவதி. அப்படி மட்டுமே என்னை அழைக்க வேண்டும். ஏதோ நீதான் பெயரை வைத்ததை போல் உன் விருப்பத்திற்கு அழைக்காதே”, என்றவள் அங்கிருந்த அரச நாற்காலியில் அமர்ந்தாள்.
“சரி சரி இளவரசியாரே தெரியாமல் அழைத்துவிட்டேன். அதற்கு ஏன் இத்தனை கோபம்.நான் தங்களின் ப்ரியத்திற்குரிய தமக்கையல்லவா?”
“அடி போடி என்னை நன்றாக ஏய்க்க கற்றுக் கொண்டிருக்கிறாய் திருடி. எனக்கும் உன்னை விட்டால் நட்பென்று யார் இருக்கிறார். ஆனால் ஏனோ என் பெயரை சுருக்கினால் மட்டும் கோபம் எல்லை மீறி விடுகிறது.”
“ம்ம் உன்னவரின் நிலை மிகவும் கவலைகிடம் தான் போலும்.ஒரு பெயருக்கே இப்படியா!!”, என்று கூறி அவளிடம் அகப்படாமல் ஓட ஆரம்பித்திருந்த மணிமேகலை அவளின் ஒரே தோழி.
சிவகங்காவதியை விட மூன்று வயது பெரியவள்.படைத் தளபதியாரின் மகள்.ஏனோ சிறு வயது முதலே அவளைத் தவிர யாருடனும் பழக விருப்பமற்று போய்விட்டது சிவகங்காவதிக்கு.
அவள் கூறியது போல் அவள் பெயரை யாராக இருப்பினும் முழுவதுமாகவே அழைக்க வேண்டும்.அது அவளின் பெற்றோர் என்றாலும் சரி.
அவளது தாய் அவ்வப்போது குறைப்பட்டு கொள்வார், ”என்ன கண்ணம்மா பெற்றவர்கள் கூட ஆசையாய் எங்களுக்கு பிடித்தது மாதிரி அழைக்க கூடாதா?”
“ம்ம் உங்களுக்கு பிடித்துதானே இந்த பெயரை எனக்கு நாமகரணம் செய்தீர்கள். அப்படியிருக்க இப்போது எதற்காக மாற்ற வேண்டும்.
இதோ பாருங்கள் தாயே என் பெயரின் முதற்பாதி என் அப்பன் ஈசனுடையது மறுபாதி அவரின் விருப்பமான கங்கையை குறிக்கிறது.
அப்படியிருக்க முதல்பாதி விடுபட்டால் நான் வருந்துவேன் மறுபாதி விடுபட்டால் என் ஈசன் வருந்துவான்.
அதற்காகத்தான் அப்படி அழைக்காதீர்கள் என்கிறேன். அதுமட்டுமல்லாது “சிவகங்காவதி”, எனும்போதே எத்துணை கம்பீரமாய் இருக்கிறது.
அதை எதற்காக தவிர்ப்பானேன்”,என்று விளக்கம் அளித்து நகர்வாள்.
கூறியவை அனைத்தும் உண்மைதான் எனினும் இவையனைத்தையும் தாண்டிய முக்கிய காரணம் ஈசனின் மீதான தீரா காதலே.
அழகு அறிவு தைரியமனைத்தையும் தாண்டி சிவனே அவளுடைய அனைத்துமாய் இருந்தார் என்றே கூற வேண்டும்.
ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் சிவனன்றி வேறில்லை அவளுக்கு.காலையில் ஒரு மணி நேரப் பொழுது சிவனுக்கும் அவளுக்குமானது.
பாடல்களாலும் இறை துதியாலும் பூஜித்து மகிழ்வாள்.
பல நாட்கள் ஒன்றுமே தோன்றாமல் ஈசனின் விக்ரகத்தை கண் நிறைத்து பார்த்தவாறு அமைதியாய் அமர்ந்திருப்பாள்.
அப்படியான நாட்களில் நிச்சயம் அவள் மன தேடலுக்கான எதோ ஒரு விடையை ஈசனிடமிருந்து பெற்றுக் கொள்வாள்.
நன்மை தீமை என எதுவாயிருப்பினும் அன்றைய நாளின் தொடக்கத்திலேயே அவள் மனம் அறிந்துவிட்டிருக்கும்.
பல நேரங்களில் அவளின் தந்தைக்கே அவள் பக்தியின் மீது ஒருவித மெய்சிலிர்ப்பு ஏற்படும்.அவள் மனதிற்கு சரியென படவில்லை எனில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மாட்டார்.
அது மட்டுமே அவள் திருமணத்தை இத்தனை நாளும் அவள் போக்கில் விட்டு வைத்திருக்க இருக்கும் ஒரே காரணம்.
இவ்வாறு மணிமேகலையோடு அவள் உரையாற்றிக் கொண்டிருக்க அவ்விடம் தன் மனைவி கங்காம்மாவோடு வந்தார் சேதிராயன்.
“வாருங்கள் தந்தையே!தாயே!ஆசீர்வாதம் செய்யுங்கள்”
“நன்மை உண்டாகட்டும் மகளே!”.
“என்ன தந்தையே துணைவியாரோடு எனை சந்திக்க வந்தீருக்கிறீர்கள்?”
“ம்ம் இப்பொழுதெல்லாம் உன் குறும்பு எல்லை மீறுகிறது மகளே.பார்த்து ரசிக்க நாங்கள் தயாராக இருந்தாலும் மற்வர்களை பொறுத்தமட்டில் நாங்கள் பொறுப்பற்ற பெற்றோராகவே தெரிகிறோம்.”
“அடடா என் பெற்றோரை இப்படி கூறும் தைரியம் வாய்த்தவர் யார் இந்த மண்ணில்!காட்டுங்கள் என்னிடம் இப்போதே இதற்கு நியாயம் கேட்கிறேன்.”
“விளையாட்டு போதும் சிவகங்காவதி தந்தை மிகுந்த மன வருத்தத்தோடு இருக்கிறார்.கொஞ்சமேனும் அவர் சொல்வதை பொறுமையாய் கேளம்மா”
“சரி சரி என்னவாயிற்று இப்போது எதற்காக இத்தனை சோர்வு இருவருக்கும்?”
“எல்லாம் உன் திருமணம் பற்றியது தான் மகளே.. எங்களுக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறதல்லவா!
இப்போது கூட ஒரு நல்ல வரன் தஞ்சை பகுதியிலிருந்து வந்திருக்கிறது.எனக்கும் உன் தாய்க்கும் கூட மிகுந்த திருப்தி.
இருந்தும் வழக்கமான உன் பலபரீட்சையை நடத்தி தான் இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் சொல்வாய் அல்லவா அந்த வருத்தம் தான்.”
“…..”
“ஏன் அமைதி காக்கிறாய் சிவகங்காவதி..தந்தை கூறுவது உன் காதில் விழவில்லையா. அவர் குரலில் இத்தனை தொய்வை என்றேனும் கண்டதுண்டா..எதாவது கூறு மகளே!”
“தாயே தங்களின் பேச்சு தந்த தாக்கத்தினாலே தான் நான் அமைதி காக்கிறேன். தாங்கள் கூறும் அத்தனையும் என் அறிவிற்கு எட்டுகிறது.ஆனால் மனம் தான் அதை எளிதாய் ஏற்க முடியாமல் தயங்குகிறது!”
“ஏன் மகளே இந்த திருமண விடயத்தில் அப்படி என்ன உன் மனதை போட்டு குழப்புகிறது. இந்த வரன் வேண்டாமென்றாலும் பரவாயில்லை. உனக்கு பிடித்தமாய் வேறு யாரையாவது பார்க்கலாம்”
“தந்தையே இப்படி ஒரு தந்தையை பெற நான் எத்தனை காலத்தவம் செய்தேனோ அறியேன்.ஆனால் பிரச்சனை அதுவல்ல.
உங்களின் இந்த கவலை தோய்ந்த முகத்தை காண திடமில்லாமல் உங்களிடம் மறைத்த ஒரு விடயத்தை கூறுகிறேன்.
என் திருமணம் என்ற ஒன்று அத்தனை எளிதாக நடக்க போகிற ஒரு விஷயம் இல்லை.இது என் ஈசன் இப்பிறவியில் எனக்களித்த சங்கல்பம்.அதை நம்மால் மாற்ற முடியாதல்லவா?!”
“என்னம்மா என்னென்னவோ கூறுகிறாய்!என்னவாயிற்று சற்று தெளிவாய் கூறு.”
“என் திருமண பேச்சை ஆரம்பித்த முதல் நாளே என் ஈசன் இந்த அறிகுறியை காட்டிவிட்டான் தாயே.
முதலில் சற்றே நடுக்க முற்றது உண்மை ஆனால் பரம்பொருளை மீறி செய்ய நம்மிடம் ஏதும் உண்டோ!
அன்று காலையில் பூஜையில் ஈடுபட்டிருந்த போது ஏதேதோ எண்ணங்கள் காட்சிகள் மனக்கண்ணில் போர்களமும் உங்கள் கண்ணீரும் என மாறி மாறி ஏதேதோ காட்சிகள் ஆனால் இறுதியில் முகம் கொள்ளா பூரிப்போடு திருமதி பட்டம் சுமந்து என் கணவர் என்ற ஒருவரோடு நான்.
அந்த முகமோ வேறு எதுவுமோ தெளிவாய் நினைவில்லை எனக்கு.
அந்த நொடி சட்டென கண்விழித்தேன் அகமும் முகமும் விதிர்த்து போயிருந்தது எனக்கு.
அதன் பின் உங்களிடம் இதை கூற வேண்டும் என்று வந்தவள் தான் என்னையே அறியாமல் வாள் யுத்தத்தில் வெல்பவரையே திருமணம் புரிவேன் என்று கூறினேன்.
அன்று முழுவதுமே என் ஈசனின் திருவிளையாடலை எண்ணி எண்ணி பூரித்துப் போனேன்.
அதே போன்று இன்று வரை ஒருவர் கூட என்னை வாள் வீச்சில் வெற்றி கொள்ளவில்லை.
இதிலிருந்தே புரியவில்லையா எனக்கானவரை நான் அடையும் காலம் இன்னும் வரவில்லை எனவே தாங்கள் இருவரும் எதை நினைத்தும் கவலை கொள்ளாதீர்கள்.
நடப்பது நடந்தே தீரும் அதை அந்த ஈசனை அன்றி யாரும் மாற்றப் போவதில்லை.”
“சிவகங்காவதி!!!பேச நா எழவில்லை எனக்கு.உன் சிவ பக்தியை நினைத்து மனம் குளிர்ந்து போவதா இல்லை நீ கூறிய செய்தி கேட்டு மனதை தேற்றி கொள்வதா சத்தியமாய் தெரியவில்லை.
ஆனால் உன் கணிப்பு என்றும் சரியில்லாமல் போனதில்லை. அதை வைத்து பார்த்தால் என்ன நடக்கப் போகிறதோ என மனம் பதைபதைக்கிறது மகளே!!
“தந்தையே அத்தனை மோசமான எதையும் என் ஈசன் எனக்கு அளித்துவிட மாட்டார் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் தாயே நீங்கள் இப்படி கண்ணீர் வடித்தால் தந்தையை தேற்றுவார் யார்?”, எனஇருவருக்கும் மாறி மாறி தன் ஆறுதலை வழங்கினாள் சிவங்காவதி.
அதே நேரம் இந்துஸ்தானத்தின் அனைத்து பகுதியிலும் முகலாய பேரரசின் ஆட்சி செழித்து வளர்ந்திருந்தது.
தில்லியின் அருகில் பலமிகுந்த சிற்றரசின் மன்னனாய் சிறந்து விளங்கினான் இஷான் நஸீம் 28 அகவே நிரம்பிய இளைஞன்.
பெயருக்கேற்றவாறே மிகவும் புத்திசாலியாகவும் அருமையான ஒருங்கிணைப்பாளனாகவும் திகழ்ந்தான்.
இத்துனை பலம் பொருந்தியவன் முகலாய அரச பரம்பரைக்கு முக்கியமானவனாக இருந்தான்.
முகலாயர்களின் ஆட்சி தேசம் முழுவதுமே பரந்து விரிந்திருந்த தருணம்.
தென் இந்தியா உட்பட அனைத்து அரசர்களையும் தோற்கடித்து ஆட்சியை பிடித்தவர்களுக்கு தென் தமிழகத்தில் காலூன்றுவது அத்தனை எளிதாய் இருக்கவில்லை.
அதுவே அவர்களின் கோபத்தையும் அதிகரித்திருந்தது.பாளையகாரர்களை மீறி ஒன்றும் செய்ய இயலாத நிலையை கண்டு கொதித்துக் கொண்டிருந்தனர்.
இந்த முறை தான் படையெடுத்து செல்வதாய் அரசரிடம் அனுமதி வேண்டினான் இஷான்.
“நஸீம் உன் மீது அதிகமாகவே நம்பிக்கை இருக்கிறது.இருந்தும் பாளையக்காரர்களை அத்தனை எளிதாய் எண்ண முடியவில்லை அதற்காகவே தயங்குகிறேன்.”
“உசூர்..இதை என் தன்மான பிரச்சனையாகவே கருதுகிறேன்.இந்த ஒரு முறை என்னை நம்பி படையை ஒப்படையுங்கள் நிச்சயம் நல்ல செய்தியோடு வருகிறேன்.”
“ம்ம் இதுவரை நம்மால் அவர்களின் பொன் பொருளின் மீது கூட கை வைக்க முடியவில்லை. இருந்தும் உனக்குள் இருக்கும் இந்த வேட்கை நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.
சென்று வா. உனக்கு தேவையான படைகளை தயார் செய்து கொள். வேறேதும் உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள்.”
“நன்றி உசூர்.இம்முறை நிச்சயம் நமக்கு சாதகமாகவே அமையும்.விடை பெறுகிறேன்.” என்றவனுக்குள் தன் பயணத்தை பற்றிய சிந்தனைகள் அந்த நொடியிலேயே மனதினுள் வலம் வர ஆரம்பித்திருந்தன.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.