அத்தியாயம் 8
இவர்கள் அனைவரும் திருமணத்திற்கு முன் தினம் ஊருக்கு சென்றுவிட்டார்கள். மாப்பிள்ளை வீட்டிற்கு முதல் நாள் இரவு ராமநாதன் மீனாவுடன் சென்றார்கள்.
வாசலில் வெளிர் நீல நிற சட்டையும் வேஷ்டியும் அணிந்து உயரமாக ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அனைவரையும் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்றான்.
“என்ன முத்து? நல்லா இருக்கியா?” என்று கேட்டுக்கொண்டே முன் சென்றார் ராமநாதன்.
“நல்லா இருக்கேன் அய்யா” என்றான் அந்த சிறுவன்.
முகம் இறுக்கமாக இருந்தது. நல்ல கருப்பு… ஆனால் கலையான முகம். இது தான் சுந்தரத்தோட மகன் என்று போகும்போது இவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“சின்ன பிள்ளையில பார்த்தது. நல்லா வளர்ந்துட்ட, நாங்க ரெண்டுபேரும் உனக்கு அத்தை டா. என்ன படிக்கிற?“ என்று வளவளத்துக்கொண்டே உள்ளே சென்றார் தெய்வா.
“ஒன்பதாவது அத்தை“ என்றான்.
பிறகு, “நீங்க பேசிட்டு இருங்க .. இப்ப வந்துடறேன்” என்று சென்றுவிட்டான்.
“பாவம் புள்ள மறுகுது… என்னத்த சொல்ல” என்று உச்சு கொட்டினார் மீனா.
விசாகா தன் சித்தி அருகில் அமர்ந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
அவன் தான் இங்கேயும் அங்கேயும் சென்று வேலைகளை கவனித்துக்கொண்டான்.
விசாகாவிற்கு பாவமாக இருந்தது. ‘அவங்க அம்மா இப்பதானே இறந்தாங்க. ஆனாலும் எதையும் காமிச்சுக்காம இருக்காங்க’ என்று.
பெரிதாக கூட்டம் இல்லை. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைத்திருந்தார்கள். திருமண வீடு போலவும் இல்லை. துக்கம் நடந்த வீடு அதன் கனத்தை பறை சாற்றியது. அங்கே பெரிய நிழல்படமாக இருந்தார் சுந்தரத்தின் மனைவி சாந்த மீனா. விசாகா மெதுவாக அந்த புகைப்படத்திற்கு முன்பு சென்றாள், அந்த சிறுவனும் வந்தான்.
“ரொம்ப அழகா இருக்காங்க” என்றாள் விசாகா.
“ஆமாம் எங்க அம்மா அழகு” என்றான் பெருமையாக.
பின் விசாகா அவனை பார்த்து சிரிக்கவும் அவனும் லேசாக சிரித்தான்.
“நீங்க ரொம்ப டால்” என்றாள்.
அவன் கேள்வியாக பார்க்கவும், “எங்க கதிர் அண்ணா நையன்த், வீரா அண்ணா இலெவன்த். நீங்க வீரா அண்ணா அளவு டால், அதான் சொன்னேன்”
“உனக்கு ரெண்டு அண்ணாவா?”
“நாலு அண்ணா, ஒரு தம்பி”
அவன் இத்தனை பேரா என்று கேள்வியாக பார்க்கவும், “ஆறு பேரு தான், ஆனா மூணு அப்பா அம்மா இருக்காங்க ..” என்று கலகலவென சிரித்தாள்.
இப்பொழுது அவனும் சிரித்தான்.
“ஐ அம் விசாகா, போர்த் ஸ்டாண்டர்ட்” என்று விசாகா அவள் கையை நீட்டினாள்.
“ஐ அம் முத்து கருப்பன்” என்று அவன் பதிலுக்கு கை கொடுத்தான்.
அதற்கு பிறகு, விசாகா வால் போல முத்து கருப்பன் பின்னே சுற்றினாள். விசாகவுடன் பேசிக்கொண்டே இருப்பது, கனமாக இருந்த அவனது மனதை மிகவும் லேசாக்கியது.
அழகான நட்பு பூத்தது இருவருக்கிடையில்.
——————-
முருகம்மை ஆச்சி வேறு ஒரு திருமண வீட்டிற்கு செல்ல வேண்டி இருந்ததால், சற்று தாமதமாக வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் விசாகா, அப்பத்தா என்று அழைத்துக்கொண்டு துள்ளிக் குதித்து ஓடிச் சென்று அவரை கட்டி கொண்டாள்.
வெள்ளை நிற பிளவுஸ் அணிந்து, பின் கொசுவம் வைத்து அடர் நீல நிற புடவை கட்டி , நெற்றி நிறைய திருநீர் பூசி, தெய்வீகமாக இருந்த முருகம்மை ஆச்சியை பார்த்ததும் பிடித்தது முத்து கருப்பனுக்கு.
“முருகு..” என்று அவரும் பேத்தியின் கன்னத்தை வழித்து முத்தம் கொஞ்சினார்.
‘வாங்க’ என்று முத்து கருப்பன் அழைத்தான்.
“உங்களுக்கு இவங்க ஆயா..” என்றாள் விசாகா.
“உனக்கு எப்படி தெரியும்?” என்றான் முத்து கருப்பன்.
“எங்க அப்பதாவோட சின்னய்யா பேரன் ராமு அய்யா. உங்க அய்யாவும் ராமு அய்யாவும் கசின் பிரதர்ஸ். அதனால உங்க அய்யாவும் எங்க அப்பத்தாவுக்கு தம்பி முறை. அப்ப உங்க அப்பாக்கு அப்பத்தா அத்தை. உங்க அப்பாக்கு பெரியம்மா சித்தி ன்னா உங்களுக்கு அப்பத்தா ஆகும். அத்தை மாமின்னா ஆயா முறை வரும்” என்றாள் விளக்கமாக.
கேட்டுக்கொண்டிருந்த முத்து கருப்பனுக்கு தலையே சுத்தியது. “இத்துனூண்டு இருந்துட்டு எப்படி இவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்க?” என்றான் பாராட்டுதலாக.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, முருகம்மை ஆச்சி உள்ளே சென்று விட்டார். அனைவரும் உற்சாகமின்றி அமர்ந்திருந்தார்கள்.
“நாளைக்கு திருப்பூட்டு தட்டு எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா?” என்றார் முருகம்மை மீனாவிடமும், சுந்தரத்தின் அம்மா மங்கையிடமும்.
“ஆச்சு அண்ணமுண்டி ..” என்றார் மீனா.
“கொண்டாங்க பாப்போம்”
இருவரும் திரு திருவென முழித்தனர். உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையவில்லை.
“என்ன தம்பி, நீ கூப்பிட்டன்னு தானே வந்தேன்.. இது தான் மரியாதையா?” என்றார் கோபமாக சுந்தரத்தின் அப்பா முத்தையாவிடம்.
“என்ன ஆச்சி… ஏதோ மனசு சரியில்லாம எல்லோரும் அப்படி அப்படியே உட்கார்ந்துட்டோம்.
“மங்கை, சீக்கிரம் போய் எடுத்துட்டு வந்து ஆச்சி கிட்ட காட்டு”, என்றார் முத்தையா படபடப்பாக.
தட்டில், மெல்லிய கோடு போட்ட பட்டுபுடவையும், மெல்லிசான தாலி சங்கிலியும் இருந்தது.
பார்த்ததும் முத்தையாவிற்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது, அவர் மனைவி பார்த்துக்கொள்வாள் என்று இதுவரை எதுவும் கண்டுகொள்ளவில்லை.
“என்ன இது?” என்றார் முருகம்மை சீற்றமாக.
அங்கேயே தான் விசாவும் முத்துவும் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
“இல்ல அண்ணமுண்டி, அவங்க வீட்ல வசதி இல்ல. நாம தான் எல்லாம் செய்யனும்” என்று இழுத்தார் மங்கை.
அவ்வளவு தான், அமர்ந்திருந்த முருகம்மை எழுந்துவிட்டார். புடவை முந்தானையை உதறி மீண்டும் சொருகினார்.
“எங்க தம்பி உங்க அப்பா”, என்றார் முத்துவிடம்.
“ரூம்ல இருக்காங்க ஆயா “
“போய் கூட்டிட்டு வா”
அவனும் சென்று தன் அப்பாவை அழைத்து வந்தான். மிகவும் ஓய்ந்த தோற்றத்தில் இருந்தார் சுந்தரம்.
“என்ன சுந்தரம்? உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானே?” என்றார் இப்பொழுது அவரிடம்.
“என்ன அண்ணமுண்டி நீங்க, நான் படாத பாடு பட்டு அவனை சம்மதிக்க வச்சிருக்கேன். ஏதாச்சும் பேசி கெடுத்து விட்றாதீங்க?” என்றார் மங்கை இப்பொழுது.
“சரி கட்டி முடிக்க இது என்ன ஒரு நாள் கூத்தா?”
“அவன் தனியா நின்னுடுவான் தான்.. இந்த பிள்ளையை பார்க்கணுமில்லயா?” என்றார் பேரனை கை காட்டி.
சுந்தரம் அமைதியாக இருந்தார்.
“இங்க பாரு சுந்தரம், கேக்க கஷ்டமா தான் இருக்கும். ஆனால் நிதர்சனத்தை ஏத்துக்கனும். இந்த கல்யாணம் வேணாம்னு நினைத்திருந்தா திடமா மறுத்திருக்கனும். அம்மாக்காக சரின்னு சொல்லிட்டு இப்படி விட்டேற்றியா இருந்தா உன்னை நம்பி வர பொண்ணுக்கு என்ன பதில் சொல்றது?
வர பொண்ணு உயிரும் உணர்வும் உள்ள மனுசி. உடனே சந்தோசமா வாழ முடியாது. ஆனா வர பொண்ணுக்கு மரியாதையும் நம்பிக்கையும் கொடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு. விளங்குதா?” என்றார்.
சுய பட்சாதாபம், ஊர் என்ன சொல்லும்? மகன் எப்படி ஏற்றுகொள்வான்? இப்படியான சிந்தனைகளிலே உழன்றுகொண்டிருந்தவர், முருகம்மையின் கேள்வியில் தான் சற்று வெளியே வந்து யோசிக்கத் தொடங்கினார்..
பாடம் சொல்லி கொடுக்கும் பேராசிரியர் அல்லவா? சரியாக யோசிக்கத் தொடங்கினார்.
“சரி அத்தை, நீங்க சொல்றதும் சரி தான்“ என்றார் சற்று தெளிந்த குரலில்.
“என்னத்த சொல்ல, மகராசி போய்ட்டா..” என்று சாந்த மீனாவின் புகைப்படத்தை பார்த்து மூக்கை சிந்தினார் மங்கை.
முருகம்மை திரும்பி பார்த்த பார்வையில் கப்சிப்.
“என்ன மங்கை, பொண்ணுக்கு கழுத்தீரு வாங்கலையோ? இது தான் முகர்த்த புடவையோ?” என்றார் மங்கையிடம்.
“புதுசு வாங்கற நிலைமையிலா வீடு இருக்கு. அதான் இருக்கறத எடுத்து வச்சேன்” என்றார் மெல்லிய குரலில்.
மகனும் கணவனும் கண்டனமாக பார்க்கவும் தன் தவறு புரிந்தது மங்கைக்கு.
விடிந்தால் கல்யாணம். என்ன செய்வது என்று அனைவரும் யோசித்தார்கள்.
இப்பொழுது தான் உண்மையில் அனைவரும் திருமணத்தை பற்றியே யோசித்தார்கள்.
“ உன் மாமியா கழுத்தீரு இருக்கும் இல்ல” என்றார் இப்பொழுது முருகம்மை.
“அது நாளைக்கு இவன் பொண்டாட்டிக்கு” என்று பேரனை கை காட்டினார்.
அதுக்கு இப்ப என்ன அவசரம். உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஏழு தலை முறைக்கு சொத்து இருக்கு. இதை கொண்டு போனா அசிங்கப்படறது உன் புருஷன்தான். விளங்குதா?”
“வீட்டு லாக்கரில் தான் இருக்கு ஆச்சி” என்று முத்தையா எழுந்து அறைக்குள் சென்றார், மங்கையும் அவர் பின்னே சென்று இருவருமாக கழுத்தீருவை கொண்டு வந்தார்கள்.
அந்த காலத்தில் பதினாறு பவுனுக்கு செய்திருந்தார்கள். விரைவாக பங்காளிகளை அழைத்துவரும்படி கூறி, புது கயிற்றில் அதை கோர்த்தனர்.
மங்கை கெட்டவர் என்பது இல்லை. ஏழை வீட்டு பெண் என்ற அலட்சியம்.
அடுத்து புடவை என்று யோசித்தார் முருகம்மை.
வள்ளியும் தெய்வாவும் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இங்கன வந்தீங்க?சடங்கு செஞ்சுக்கவா?” என்றார் மருமகள்களிடம்.
“போச்சு.. போச்சு.. நாம சிக்கிட்டோம்” என்று கிசுகிசுத்தார் தெய்வா. இவர்கள் பக்கம் தான் விசாவும் முத்துவும் இருந்தார்கள்.
விசா ‘க்ளுக்’ என்று சிரித்தாள்.
“சடங்கு செஞ்சுக்கு வந்தவளுக்கு இங்கன இருக்கறத பார்க்க முடியலையா?” என்றார்.
“ஒரு அரை மணி நேரம் குடுங்க… இப்ப போய் புடவை எடுத்துட்டு வந்திடறோம்” என்று இருவரும் எழுந்து கொண்டார்கள்.
“ஏற்கனவே எடுத்திருக்க புடவை நிறத்துலயே பார்த்து எடுங்க. ரவிக்கை அதுக்கு தானே இருக்கும்” என்றார்.
இருவரும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பறந்து விட்டார்கள். இந்த நேரத்தில கடை இருக்குமா என்றார் முத்தையா. நேரம் பத்து ஆகிவிட்டது.
“அதெல்லாம், வாங்கிட்டு வந்திடுவாங்க” என்றார் பெருமையாக.
“பின்ன முருகம்மை மருமகள்கள்னா சும்மாவா?” என்றாள் விசாகா.
சூழல் சற்று இலகுவாகியது.
“உங்க அப்பத்தா சூப்பர்” என்றான் முத்து விசாவிடம்.
“இங்கன பாரு மங்கை, நீயும்தான் சுந்தரம் இங்கன உட்காருங்க. பொண்ண கட்றதுக்கு முன்ன ஆயிரம் யோசிக்கலாம். ஆனா கல்யாணம் செஞ்சுட்டு ஒரு முறை கூட இது அவசியம்மான்னு யோசிக்க கூடாது, அது பாவம். அந்த பொண்ணுக்கு செய்ற அநியாயம்.
மனசு முழுக்க உனக்கு வருத்தம் இருக்கு.புரியுது எனக்கு.. ஆனா அதுல தேங்கி இனி நிக்க முடியாது. உன் புள்ளய பார்த்து கத்துக்க. அவனை விட யாருக்கு துக்கம் அதிகம் செல்லு?” என்றார்.
“சாந்தா போய் ரெண்டு மாசம் தான் அத்தை ஆகுது. எல்லோரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? சொன்னா அம்மா புரிஞ்சிக்கல. நானும் உன் பொண்டாட்டி கிட்ட போய்டுவேன்னு மிரட்டி என்ன ஒத்துக்க வச்சிட்டாங்க” என்றார் ஆதங்கமாக.
முருகம்மை திரும்பி மங்கையை பார்த்த பார்வையில் அவர் பஸ்பம் ஆகாமல் இருந்ததே பெரிசு.
“முடிஞ்சதை பேசி இனி ஆகப்போறது ஒன்னும் இல்லை. ஊர் ஆயிரம் பேசும், அதை விடு. இனி, சாந்த மீனா உனக்கு தெய்வமா இருந்து வழி காட்டுவா. அவளை மறக்க சொல்லலை. அவளை தெய்வமா கும்பிடுங்க” என்றார்.
முத்து கருப்பனுக்கு கண்கள் கலங்கியது. எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
அப்பா என்று சென்று அப்பாவை அணைத்துக்கொண்டான். “பார்த்துக்கலாம் அப்பா. நாம சேர்ந்து சமாளிப்போம்” என்றான்.
வாழ்க்கை பாடம் வயதிற்கு மீறிய முதிர்ச்சியை அவனுக்கு கொடுத்திருந்தது. தந்தையை தாங்கும் பக்குவத்தையும் கொடுத்திருந்தது. மகனின் ஆறுதல், சுந்தரத்திற்கு புது தெம்பை கொடுத்தது.
“மங்கை, கடைசியா ஒன்னு சொல்றேன். நாளைக்கு திருபூட்டின அப்புறம், உனக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கோ, நாளைக்கு உன் பேரன் பொண்டாட்டிக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்குமோ, அதே உரிமை, கட்டிக்க போற பொண்ணுக்கும் இருக்கு. இது நீ எடுத்த முடிவு, இதை நீ சரியா செஞ்சா தான், உன் மகன் வாழ்வு செழிக்கும். அப்புறம் உன் இஷ்டம்” என்று முடித்துக்கொண்டார்.
இவர்கள் பேசி முடிக்கும்பொழுதே, வள்ளி தெய்வா தங்கள் கணவன்மார்களுடன் வந்து விட்டார்கள். அறக்கு நிறத்தில், தங்க ஜரிகைகளால் உடல் முழுதும் வேலைப்பாடு செய்த அழகான புடவை எடுத்து வந்திருந்தார்கள்.
“சூப்பரா இருக்கு சித்தி” என்றாள் விசாகா.
புடவையுடன், நல்ல அழகான பூமாலைகளையும் மாப்பிள்ளைக்கு டர்பன் எல்லாம் வாங்கி வந்துவிட்டார்கள்.
மகன்களையும் மருமகள்களையும் மெச்சுதலாக பார்த்து பாராட்டினார் முருகம்மை.
அடுத்த நாள், காலையில் அந்த முருகப்பெருமானின் அருளால், மிகவும் சிறப்பாக நடந்தது சுந்தரம் அன்னம் திருமணம்.
மாநிறத்தில், ஒல்லியாக இருந்த அன்னம் அமைதியாக இருந்தார். அவரிடம் ஒரு நிதானம் இருந்தது, அமைதி இருந்தது. கிடைத்ததை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தது.
சாந்த மீனாவின் அழகுடன் ஒப்பிட்டு அங்கு பலரும் பேசினார்கள். சாந்த மீனா பக்கத்தில நிக்க முடியாது இந்த அன்னம் என்று சத்தமாக ரகசியம் பேசினார்கள்.
விசாகா சென்று அப்பத்தாவிடம் முறையிட்டாள்.
“விடு முருகு. எல்லாம் ஒரு நாளில் சரி ஆகாது. இனி அந்த பிள்ளை சமத்து தான். நாம ஒரு அளவுக்கு மேல சொல்ல முடியாது முருகு” என்றார் வாஞ்சையாக.
முருகம்மை ஆச்சியையும் அழைத்துக்கொண்டு இவர்கள் அன்று இரவு புறப்பட தயராகினார்கள். செல்வதற்கு முன், விசாகா அன்னத்திடம் சென்று, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாமி”, என்று அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
கேட்ட அன்னத்தின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழுந்தது. பல நாள் தாகத்தால் வறண்டிருக்கும் தொண்டைக்கு கிடைத்த ஒரு துளி தண்ணீர் அமிர்தமாகும். அப்படி இருந்தது விசாகாவின் இந்த செயல் அன்னத்திற்கு.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.